Friday, March 31, 2006

தமிழ் - ஷோபா சக்தி


நன்றி - அநிச்ச

நவம்பர் 2005

வேசியின் விரிந்த கூந்தல் அவளின் முதுகின் கீழாகப் பரவிப் போய் அவளின் குண்டியைத் தொட்டது. வேசி அந்தக் கரிய கூந்தல் விரிப்பில் கால்களை விரித்து மல்லாந்து கிடந்தாள். அவளின் கண்கள் புருவங்களுக்குள் சொருகிக் கிடந்தன. அவள் நெற்றியில் இலந்தைப் பழங்களை ஒட்டி வைத்தது போல இடப்புறத்தில் ஒன்றுமாக வலப்புறத்தில் ஒன்றுமாக இரண்டு துளைகள் இருந்தன.பின்னிரவில் பெய்த மழையில் அந்தச் சவம் செம்மையாய் நனைந்திருந்தது. சவத்தின் அசாதாரணமான நீண்ட கைகளையும் வயிற்றையும் பாதங்களையும் மழை தீரக் குளிப்பாட்டியிருந்தது. சடலம் உடுத்திருந்த சேலையின் ஓரத்தைக் கிழித்துத் தான் சடலத்தின் வாயைக் கட்டியிருக்கிறார்கள். சடலத்தின் மூஞ்சியைச் சுற்றி ஈக்கள் பறக்க ஈக்களைச் சுற்றி பற்களை விளக்கிக் கொண்டே கிராம மக்கள் நின்றிருந்தனர்.

சவம் கிராமத்தின் சந்தைக் கட்டடத்தின் முன்பாகக் கிடந்தது. கிராம மக்கள் சடலத்தையே சுற்றிச் சுற்றி வந்தனர்.
அவர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட ஒரு பிணத்தை தம் வாழ்நாளில் பார்த்ததே இல்லை. அவர்கள் பெருத்த ஆச்சரியத்துடனும் இரக்கத்துடனும் சத்தம் போட்டுக்கொண்டிருந்தார்கள்.
சவத்தின் மார்பில் ஒரு பெரிய வெள்ளை அட்டை கட்டப்பட்டிருந்தது. அந்த அட்டை மழையில் ஊறிப் பொருமி அட்டையின் ஓரங்கள் சுருண்டு கிடந்தன. அட்டையில் சிவப்பு நிறப் பெயின்ட் ஊறிக் கிடந்தது. மழை அழித்து விட்ட அட்டையிலிருந்த எழுத்துக்களை கிராம மக்கள் படிக்க முயன்றனர். அவர்களில் எவராலும் அதை வாசிக்க முடியவில்லை. மழை அழித்திருந்த அந்த எழுத்துக்களை நிச்சயமாக என்னால் வாசிக்க முடியும்.

சமூக விரோதிகளுக்கு எச்சரிக்கை!
பெயர் : இந்துமதி
விபச்சாரத்துக்காக மரண தண்டனை.

நேற்றைய முன்னிரவில் -
கடும் மழை பெய்வதற்கு முன்பாக - இந்தக் கடதாசி அட்டையில் சிவப்பு வண்ணத்தினால் நான் தான் இந்த எழுத்துக்களை எழுதியிருந்தேன். முன்னிரவில் அவர்கள் மூன்று பேர் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார்கள். அப்போது ஐயா நிறைய வெறியில் தாழ்வாரத்தில் குப்புறக் கிடந்தார். எங்கள் கிராமத்தைச் சுற்றியுள்ள ஏழெட்டுக் கிராமங்களுக்கும் என் ஐயா தான் ‘ஆர்ட்டிஸ்ட் மணியம்’. ஐயா கடைகளுக்கு பெயர்ப் பலகை எழுதுவார், கோயில்களுக்கு தீந்தை பூசுவார். சைக்கிள்களுக்கு பெயின்ட் அடிப்பார். வந்தவர்கள் தங்களுக்கு கொஞ்சம் பெயின்ட் வேண்டுமென்று கேட்டனர். அவர்களிடம் அப்போது துப்பாக்கிகளை நான் காணவில்லை. இடுப்புக்குள் ஒளித்து வைத்திருப்பார்கள். நான் ஐயாவை ஆன மட்டும் உலுக்கி, எழுப்பி விட முயற்சித்தேன். நான் எழுப்பி விட எழுப்பி விட ஐயா வட்டமடித்து வட்டமடித்து முற்றத்து மணலில் சுருண்டு விழுந்தார்.

அது சுவரொட்டிகள் காலம். யாழ்ப்பாண நகரம் முழுவதும் சென்ற கிழமை ஒரே மாதிரியான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அந்தச் சுவரொட்டியில் எழுதப்பட்டிருந்த தமிழ் எழுத்துக்கள் ஐயாவை மாதிரி ஒரு தொழில் முறை ஓவியனால் அல்லது குறைந்த பட்சம் ஐயாவோடு சில வேளைகளில் உதவிக்குப் போய் வரும் என் போன்ற ஒருவனால் தான் எழுதப்பட்டிருக்க வேண்டும். எழுத்துக்கள் வட்டுறுப்பாய் ஒன்றின் மீது ஒன்றாக நகரத்தையே கவர்ந்திழுத்தன.
‘ஆற்றல் மிகு கரங்களில் ஆயுதம் ஏந்துவோம் மாற்றுவழி நாமறியோம்’
என்று எழுதப்பட்டிருந்த அந்தச் சுலோகம் எனக்கு மனப்பாடம். ‘கசிப்பு வடிக்க வேண்டாம்’ என்று சுவரொட்டி,
‘கருத்தடை செய்ய வேண்டாம்’ என்று சுவரொட்டி
‘ஹர்த்தால், கடையடைப்பு’ என்று சுவரொட்டியாக நாங்கள் சுவரொட்டிகளுக்கு கீழே வாழ்ந்து வந்தோம்.

ஐயா எழுந்திருப்பதாக இல்லை. இயக்கக் காரர்களுக்கு உதவும் ஒரு வாய்ப்பை தவறவிட நான் தயாராகவில்லை. ஒரு நாளும் இல்லாத புதுமையாக பெயின்டையும் பிரஷையும் தொடும் போதே என் உள்ளம் கிளர்ந்தெழுந்தது. இந்த வண்ணத்தால் எழுதப்படவிருக்கும் சுலோகம் எதுவாய் இருக்குமெனக் கேட்டு மனம் அடித்துக் கொண்டது. நேற்றுக் காலையில் எங்கள் பாடசாலையின் மதிற் சுவர்களில் - அப்போது நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன் - புதிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அந்தச் சுவரொட்டிகளில்
‘ஈரானில் மாணவர்கள் புரட்சி - இங்குஏன் தோழா இன்னும் புத்தகப் பூச்சி’
என்ற சுலோகம் எழுதப்பட்டிருந்தது. நாள் முழுவதும் அந்தச் சுலோகத்தைப் பற்றியே பாடசாலை முழுவதும் பேசிக் கொண்டிருந்தது.நான் சிவப்பு பெயின்டை அவர்களிடம் கொடுத்துவிட்டு "இது போதுமா அண்ணே ?"
என்று கேட்டேன்.
"போதும் ஒரு போர்ட் தான் எழுத வேணும்" அவர்கள் திரும்ப முயற்சிக்கும் போது அவர்கள் முதுகுக்குப் பின்னால் நான் தயங்கித் தயங்கிக் கேட்டேன் "என்னவும் எழுத வேணுமெண்டால் நான் எழுதித் தாறன்......." அவர்கள் நின்றார்கள். அவர்கள் இருளுக்குள் தலைகளை ஆடாமல் அசையாமல் வைத்திருந்தார்கள்.கடைசியில் தலைவாசலுக்குள் மெழுகு திரியை கொழுத்தி வைத்துக் கொண்டு அவர்கள் சொல்லும் சுலோகத்தை எழுதத்தயாரானேன். ஈரானில் புரட்சி இங்கு புத்தகப்பூச்சி போல இன்னொரு சுலோகம் சொல் வார்கள் என்று தான் நினைத் திருந்தேன். ஆனால் சொன்ன சுலோகம் நான் அதுவரை கேட்டிராத ஒன்றாகவிருந்தது. சமூகவிரோதி - இந்துமதி - மரணதண்டனை என்று ஒரு எழுவாய் பயனிலை இல்லாமல் சுலோகத்தை துண்டு துண்டாகச் சொன்னர்கள்.

நான் அட்டையில் அழகழகாக எழுத்துக்களைச் சாய்த்துநிறுத்தினேன். நான் எழுதிக் கொண்டிருந்த போது என் அம்மா அவர்கள் மூவருக்கும் தேநீர் கொண்டு வந்து கொடுத்தார். நான் எழுதி முடித்து விட்டு சற்று தூரத்தே நின்று எழுத்துக்களை மெழுகுதிரி வெளிச்சத்தில் பார்த்தேன். திருப்தியாய் இருந்தது. நான் அவர்களிடம் "அண்ணே கறுப்புப் பெயின்டில் எழுத்துக்களை சுத்தி போடர் கட்டவா ?" என்று கேட்டு விட்டு "அது ஒளிப்பாய் இருக்கும்" என்றேன்.

இது நடந்து நான்கு அல்லது ஐந்து நாட்கள் இருக்கலாம். காலையில் நான் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்தேன். பாடசாலை நகரத்தின் தெற்குப் பகுதியில் இருந்தது. நகரத்தின் தெருக்களால் சனங்கள் ஒரு நாற்சந்தியை நோக்கி ஓடிக் கொண்டிருந்தார்கள். என்ன ஏதென்று விசாரித்த போது நாற்சந்தியில் ஒரு வேசி வேப்ப மரத்தில் கட்டப் பட்டிருக்கிறாள் என்றும் அவள் கழுத்தில் ஒரு அட்டை எழுதி தொங்கவிடப் பட்டிருக்கிறது என்றும் அறிந்தேன். என் சைக்கிள் நாற் சந்தியைப் பார்த்துத் திரும்பியது. வேசியின் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் எழுத்துக்களைப் படித்துவிடுவதற்கான ஆர்வம் என் கால்களை இயக்கியது. அது நகரத்தில் ஆமிக்காரர்கள் திரிந்த காலம். அவர்கள் எந்தத் தருணத்திலும் நாற்சந்திக்கு வரலாம். கழுத்தில் கட்டப்பட்டிருக் கும் எழுத்துக்களைப் படித்து விட்டு உடனே ஓடிப்போய் விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அந்த விபச்சாரி சவமாய் இல்லை. அவள் உயிருடன் வேப்ப மரத்தோடு கட்டப்பட்டிருந்தாள். சனங்கள் வேப்ப மரத்தை சுற்றிச் சுற்றி வந்தார்கள். விபச்சாரியின் கைகள் அவளின் தலைக்கு மேலே உயர்த்தப்பட்டு ஒரு புள்ளடி போல வேப்ப மரத்தில் கட்டப்பட்டிருந்தது.

அவளுக்கு மிஞ்சி மிஞ்சிப் போனால் பதினேழு அல்லது பதினெட்டு வயது தான் இருக்கும். அவள் மெலிந்த உடலும் சிவந்த நிறமுமாய் நின்றாள். இடையில் ஒரு சாரமும் மேலுக்கு ஆண்களின் சட்டையும் உடுத்திருந்தாள். அவளின் தலைமுடி அலங்கோலமாகக் கத்தரிக்கப்பட்டிருந்தது. அவளின் கழுத்தில் தொங்கிய எழுத்துக்கள் ஊதா நிறத்தில் ஆடின. அந்தத் தமிழ் எழுத்துக்கள் பாய்கள் இழைக்கப் பயன்படுத்தும் ஓலைச் சாயத்தால் கோணல் மாணலாக எழுதப்பட்டிருந்தன.

விபச்சாரம் செய்ததற்காக 12 மணித்தியாலத் தண்டனை வழங்கப் பட்டுள்ளது.அந்த இளம் விபச்சாரியின் கால்களுக்குக் கீழே ஒரு அழுக்கு மூட்டை போல ஒரு வாடலான கிழவி குந்தியிருந்து சனங்களை கண் வெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். விபச்சாரி கால் மாற்றிக் கால் மாற்றி ஒற்றைக் காலிலேயே நின்றாள். அவள் இடையிடையே கிழவியைப் பார்த்து
"எண கால் உளையுதண, கால் உளையுதண"
என்று சொல்லிக் கொண்டிருந்தாள். அப்போதெல்லாம் அந்தக் கிழவி விபச்சாரியின் மூஞ்சியை நிமிர்ந்து பார்த்து
"மூளி அலங்காரி... மூளி அலங்காரி"
என்று சொன்னாள் பின் திரும்பவும் சனங்களை கண் வெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

நான் வகுப்பில் இருந்த போது புங்குடுதீவுக் கடற்கரையில் ஒரு தாய் வேசியையும் மூன்று மகள் வேசிகளையும் இயக்கம் சுட்டுச் சவங்களை வரிசையாகக் கடற்கரையில் வளர்த்தி வைத்திருக்கிறது என்ற செய்தியை கேள்விப்பட்டேன். செய்தியைக் கொண்டு வந்தவன் இறைமொழி என்ற புங்குடுதீவுப் பொடியன். இறைமொழி அதிகாலையிலேயே அந்த நான்கு பிரேதங்களையும் பார்த்து விட்டுத்தான் பஸ் பிடித்து பாடசாலைக்கு வந்திருந் தான். நான் இறைமொழியிடம் "அந்தச் சவங்களின் கழுத்துக்களில் என்ன எழுத்துக்கள் கட்டப்பட்டிருக்கின்றன?" என்று கேட்டேன்.
"இல்லை பிரேதங்களின் கழுத்தில போர்ட் ஒண்டும் கட்டியிருக்கேல்ல" என்று இறைமொழி சொன்னான். என்னால் அதை நம்ப முடியவில்லை. குழப்பமாய் இருந்தது. ‘போர்ட்’ இல்லாமல் எழுத்துக்கள் இல்லாமல் சுட்டிருக்கிறார்கள் என்றால் அந்த நான்கு பெண்களையும் இராணுவம்தான் சுட்டிருக்க வேண்டும் என்று நான் சந்தேகப்படலானேன்.இடைவேளையின் போது இறைமொழி என்னை இரகசியமாக மலசல கூடத்துக்குள் அழைத்துச் சென்றான். தன் காற்சட்டைப் பையிலிருந்து ஒரு துண்டுப் பிரசுரத்தை எடுத்து "வாசிச்சுப் போட்டு திரும்பத் தரவேணும், கல்வி மேல சத்தியம்" என்று சொல்லிக் கொண்டே என்னிடம் துண்டுப் பிரசுரத்தை நீட்டினான். அழகான கையெழுத்துக்களில் எழுதப்பட்டிருந்த அந்தத் துண்டுப் பிரசுரம் ரோனியோ இயந்திரத்தில் பிரதி எடுக்கப்பட்டிருந்தது. சவங்களைச் சுற்றி துண்டு பிரசுரங்கள் கிடந்தனவாம்.

தாயின் பெயர்: கிருஷ்ணாம்பாள். மகள்களின் பெயர்கள்: சுபத்திரா தேவி, ஜெயதேவி, ஜெபதேவி.தாயும் பிள்ளைகளும் நயினாதீவு கடற் படையினருடன் விபச்சாரம் செய்து வந்ததால் மரணதண்டனை!

கொழும்பில் தங்கியிருந்த போது தான் நான் முதன் முதலாக ஒரு வேசியிடம் போனேன். அப்போது எனக்கு பத்தொன்பது வயது. எங்களை ஏஜென்சி கொழும்பின் புறநகர் ஒன்றில் தங்க வைத்திருந்தான். அந்த விடுதி காலி வீதியில் இருந்தது. அந்த விடுதி முழுவதும் வெளிநாட்டுக்குப் போகக் காத்துக் கொண்டிருக்கும் தமிழர்களாலும் ஏஜெண்டுகள், சப் - ஏஜெண்டுகளாலும் நிரம்பி வழிந்தது. கொழும்பு பஸ் வண்டிகளிலும் வீதி களிலும் கடைகளிலும் சிங்களப் பொட்டைகள் என்னை நெருக்கித் தள்ளினார்கள். அவர்களின் பொட்டிடாத மூஞ்சியும் சாயம் பூசிய வாய்களும் என்னைக் கிளர்த்தின. சிங்கள மொழியின் தொனியில் ஒரு இறுக்கம் தெரியவில்லை. மொழி உருகி ஓடுவதாக தோன்றியது.

விடுதியிலிருந்து காலி விதியைக் குறுக்காகக் கடந்தால் அந்தப் பக்கத்தில் சில கட்டடங்கள். அவற்றின் ஊடே நடந்தால் ரயில் தண்டவாளம் கடற்கரையை ஒட்டிச் செல்வதைப் பார்க்கலாம். ரயில் தண்டவாளம் செல்லும் பகுதியிலோ கடற்கரையிலோ மதிய வேளைகளில் ஆள் நடமாட்டமே இருக்காது. ஆனால் ஒவ்வொரு நாளும் மதிய நேரம் ஒரு பெண்ணும் ஒரு மனிதனும் எங்கிருந்தோ தண்டவாளத்தில் நடந்து அந்தபகுதிக்கு வருகிறார்கள். அந்தப்பெண் தண்டவாளத்தில் நின்றிருப்பாள். அந்த மனிதன் சற்றுத் தள்ளிப் போய் கடற்கரையில் கடலைப் பார்த்தவாறு குந்திக்கொண்டிருப்பான். தொடர்ச்சியாக மூன்று நாட்களின் மதியப் பொழுதில் நான் அவர்களை அங்கே பார்த்தேன். அந்தப் பெண் தலையைத் திருப்பி என்னைப் பார்க்கும் போது நான் திரும்பவும் காலி வீதியை நோக்கி நடக்க ஆரம்பித்து விடுவேன். மூன்றாவது நாளில் அந்தப் பெண் என்னை நோக்கி இரண்டொரு அடிகள் எடுத்து வைத்ததாகத் தோன்றியது. நான் திரும்பியும் பாராமல் வீதியை நோக்கி வேகமாக நடந்து வந்து விட்டேன்.

நான் மிகவும் கவனமாக திட்டமிடலானேன். நாளை மதியம் நான் தண்டவாளத்தால் நேராக நடந்து செல்ல வேண்டும். எனக்குச் சரிவர சிங்களம் பேசத்தெரியாது என்பதை முடிந்தவரை காண்பித்துக்கொள்ளக்கூடாது. எனக்குத் தெரிந்த சில சிங்களச் சொற்களை வைத்து மனதுக்குள் ஒரு ஒத்திகை பார்த்துக்கொண்டேன். முப்பது ரூபாய்கள் மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். அதுவும் மூன்று பத்து ரூபாய் தாள்களாக இருக்க வேண்டும். முதலில் அவளிடம் இரண்டு பத்து ரூபாய் தாள்களைக் காட்ட வேண்டும். அதற்கு அவள் சம்மதிக்கா விட்டால் அடுத்த பத்து ரூபாயையும் நீட்ட வேண்டும். முப்பது ரூபாய்க்குள் அவள் சம்மதிக்காவிட்டால் திரும்பி வந்து விட வேண்டும்.அடுத்த நாள் மதியம் நான் மிகக்கவனமாகத் தங்கும் விடுதியிலிருக்கும் எவரும் அறியாதவாறு விடுதியை விட்டு வெளியே வந்தேன்.

காலி வீதியில் ஏறியதும் ஒரு தேநீர்க் கடையில் இரண்டு சிகரெட்டுகள் வாங்கி ஒன்றைப் பற்றவைத்துக்கொண்டே விடுதியிலிருந்து எவரும் என்னைக் கவனிக்கிறார்களா என்ற பார்த்தேன். சிகரட் புகைத்து முடியும் வரை அங்கேயே நின்றேன். யாரும் என்னை கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு வீதியை ஓடிக்கடந்து கடற்கரையை நோக்கி நடந்தேன்.அவள் தண்டவாளத்தில் நின்றிருந்தாள். அவள் சிவப்பு நிறத்தில் கவுன் போட்டிருந்தாள். நான் தண்டவாளத்தில் ஏறி அவளை நோக்கி நடந்தேன். நடக்கும் போது என் சட்டையின் கைப்பகுதியை நன்றாக மேலே சுருட்டி விட்டேன். அடுத்த சிகரட்டை எடுத்துப் புகைத்துக் கொண்டே தண்டவாளத்தில் நடந்தேன். நடக்கும் போது முகத்தில் கடுகடுவென்ற ஒரு பாவத்தை வர வழைத்துக்கொண்டேன். கால்களில் ஒரு சண்டித்தன நடையைக் கொண்டு வந்தேன். அவள் என்னை நோக்கி கைகளை அசைத்த மாதிரி தெரிந்தது.ஒரு கருவாட்டுக்கு கவுனும் பவுடரும் போட்டு விட்டால் எப்படியிருக்குமோ அந்த விபச்சாரி அப்படியிருந்தாள். அவள் தன் கண்களை விரித்து என்னை உற்றுப்பார்த்தாள். அவள் கண்கள் வெளிறிக்கிடந்தன. அவள் தனது தலையை இடதுபுறம் சரித்து இடது கண்ணைச் சுருக்கி சிங்களத்தில் ஏதோ சொன்னாள்.
அவளின் வாயும் பற்களும் கறுப்பாய் இருந்தன. அவளிலிருந்து ஏதோ ஒரு நாற்றம் கசிந்தது. அது புகையிலையின் நாற்றமாய் இருக்கலாம். அவள் தலையால் சைகை செய்து விட்டு என் முன்னே தண்டவாளத்தில் நடக்கத் தொடங்கினாள். நான் அவளோடு வந்த மனிதனைத் திரும்பிப்பார்த்தேன். அவன் தூரத்தில் கடற்கரையில் குந்தியிருந்து மணலில் ஏதோ எழுதிக்கொண்டிருந்தான்.

நான் விபச்சாரியின் பின்னால் நடக்கலானேன்.விபச்சாரி இப்போது தண்டவாளத்திலிருந்து சரிவில் பள்ளத்தை நோக்கி இறங்கினாள். தண்டவாளத்தின் கீழே நான்கு அடிகள் விட்டமுள்ள ஒரு சீமெந்துக் குழாய் தெரிந்தது. அந்தக் குழாய் மழை நீர் பள்ளத்திலிருந்து தண்டவாளத்தின் கீழாகக் கடலுக்குள் கடத்தப்படுவதற்காக அங்கே அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த விபச்சாரி குழாயின் முகத்துக்குள் போய் குனிந்து நின்று என்னையும் குழாயினுள் வருமாறு கூப்பிட்டாள். குழாய் ஒரு பொந்து மாதிரி ஒரு வகையான பாசி படந்து கிடந்தது. என் கணுக்கால்கள் வரை அழுக்கு நீர் தேங்கி நின்றது. விபச்சாரி தன் உடலை குழாயோடு குழாயாக வளைத்து ஒரு குழாய் போல சுருண்டு நின்றாள்.மீண்டும் நான் தண்டவாளத்தில் ஏறிய போது என் எதிரே விபச்சாரியோடு வரும் அந்த மனிதன் நிற்பதைப் பார்த்தேன். அவன் தண்டவாளத்தின் சிலிப்பர் கட்டையை தன் காலால் தேய்த்துக் கொண்டிருந்தான். நான் உடனே மீண்டும் சரிவில் இறங்கி பள்ளத்தினூடாக காலி வீதியை நோக்கி நடந்தேன்.

நான் திரும்பி வந்த போது விடுதி அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. என் ஏஜென்ஸி ஒரு பெருத்த தடியன். அவன் விடுதியின் அலுவலக அறைக்குள் போட்டு ஒரு பொடியனை அடித்து நொருக்கிக் கொண்டிருந்தான். அந்தப் பொடியனுக்கு இருபது வயது இருக்கும். அவன் கனடாவுக்குப் போவதற்காக ஏஜென்சியிடம் நிற்கிறான். அவன் அந்த விடுதியில் லண்டனுக்குப் போவதற்காகக் காத்துக்கொண்டிருந்த அருள்மொழி என்ற பெண்ணுக்கு காதல் கடிதம் எழுதிக் கொடுத்திருக்கிறான். பிரச்சனை இப்போது ஏஜென்ஸியிடம் விசாரணைக்கு வந்திருக்கிறது.நான் ஜன்னலில் கை ஊன்றி அலுவலக அறையினுள் பார்த்தேன். ஏஜென்ஸியின் கை பொடியனின் தலைமுடியைப் பற்றியிருந்தது.
"எளிய வடுவா! தாய் தேப்பன் காணிய பூமிய வித்து உங்களை வெளிநாட்டுக்கு அனுப்புவமெண்டால் உங்களுக்கு வேற எண்ணங்கள், முதலில் போய் உழைச்சு குடும்பத்தைக் முன்னேற் றுங்கோ! பிறகு உதுகளைப் பாக்கலாம். வெளி நாட்டில பொட்டையளுக்கு குறைவில்லை".
ஏஜென்ஸி இப்படி அறிவுரை சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு முறை ஏஜென்ஸியின் கைகளுக்குள்ளால் புகுந்து போய் அந்தப் பொடியனின் முகத்தில் அருள் மொழி காறித் துப்பினாள்.ஏஜென்ஸி அறிவுரை சொல்லும் வேகத்தில் பொடியனுக்கு அடிக்க மறந்த போதெல்லாம் அலுவலக அறையில் கண்ணீர் சிலும்ப நின்றிருந்த அருள்மொழி துள்ளிக் குதித்தாள். அவள் ஏஜென்ஸியைப் பார்த்து
"ஐயோ அண்ணா, அடியுங்கோண்ணா இந்த நாயை, கொல்லுங்கோ இவனை,என்னை இவ்வளவு ஆக்களுக்கு முன்னுக்கு மானங்கெடுத்திப் போட்டான்"
என்று அலறினாள்.

நான் விடுதிக்குப் பின் புறம் போய் குளிக்கத் தொடங்கினேன். அது வரை எனது மூளையின் ஏதோ ஒரு மடிப்பில் சின்னதாய் இருந்த ஒரு புள்ளி இப்போது என் மூளைக்குள் அலை அலையாய்ப் பரவத் தொடங்கியது. எனக்கு அந்த சிங்கள விபச்சாரி நோய் ஏதாவது கொடுத்திருப்பாளா? கையிலிருந்த வாளியைத் தூக்கி நெற்றியில் அடித்துக் கொண்டேன்.

நான் லாவோஸ் நாட்டுக்குச் சென்றிருந்த போது எனக்குப் பால் வினை நோய் வந்தது. லாவோஸின் தலைநகரம் நொங்காய் ஆற்றின் மடியில் கிடக்கிறது. தலைநகரத்துக்கு வியன்டைன் என்று பெயர். அது கிளி நொச்சியைவிடச் சிறிய நகரம். நகரம் காடு பற்றிப் போயிருந்தது. நகரத்தில் சதுரப்பட ஒரேயரு வீதியுண்டு. அந்த வீதியில் சிறுவர்கள் பிச்சை யெடுத்துக்கொண்டு திரிந்தார்கள். நகரத்தின் சதுக்கத்தில் பியர்ச் சாலைகள் உண்டு.பியர்ச் சாலையில் லிட்டர் கணக்கில் பெரிய பெரிய பாத்திரங்களில் பியர் தருகிறார்கள். ஒரு பியர்ச் சாலையின் பின்புறத்தில் தான் அந்த வேசியைச் சந்தித்தேன். அவள் இலக்கணச் சுத்தமாக ஆங்கிலம் பேசி னாள். வியண்டைன் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருக்கிறாளாம். சிறிய விழிகளுடனும், மின்னும் கன்னங்களுடனும் சாரம் மாதிரியான செயற்கைப் பட்டு உடையுடன் அவள் ஒரு பொம்மை மாதிரி இருந்தாள். வெறும் பத்து டொலர்களுக்கும் ஒரு குவளை பியருக்கும் அவள் ஒரு இரவு முழுவதும் என்னுடன் தங்கச் சம்மதித்தாள்.

மறுநாள் காலையில் என் மேலுதட்டில் ஒரு கொப்புளம் காணப் பட்டது. மதியம் என் ஆண்குறியின் தலைப்பில் சில கொப்புளங்கள் தோன்றின. மாலையில் ஆண்குறியின் துவாரத்திலிருந்து நூல் போல சீழ் கொட்டத் தொடங்கியது. என் பிடரியிலும் முகத்திலும் மார்பிலும் வயிற்றிலும் பாதங்களிலும் தொடைகளிலும் ஊசி வலி கிளம்பி அலைந்து அது என் ஆண் குறியில் திரண்டது. நான் ஆண்குறியின் துவாரத்தை விரலால் அமுக்கிய போதெல்லாம் செம்மஞ்சள் நிறத்தில் சீழ் குமிழியிட்டு வந்தது. என் இருதயத்திலிருந்து அந்த வேசியின் மீது கொலை வெறி கிளம்பிற்று.

நான் அன்றிரவே பாங்கொக் திரும்பினேன். நொங்காய் ஆற்றைக் கடந்தால் ஓரிரவுப் பயணத் தொலைவில் பாங்கொக் நகரம் இருந்தது. பாங்கொக் நகரின் மிகப்பெரிய வீதியான சீலோம் வீதியின் ஒரு முனையில் மாரியம்மன் கோயில் இருக்கிறது. மறு முனையில் லும்பினிப் பூங்கா விரிந்து கிடக்கிறது. இவை இரண்டுக்கும் நடுவாக வேசிகளின் பள்ளத்தாக்கு பற்பொங் இருக்கிறது.பற்பொங் நிர்வாண நடன விடுதிகளாலும் விபச்சார விடுதிகளாலும் கட்டப்பட்டிருந்தது. நடன விடுதிகளில் ‘கோ - கோ’ என்ற ஒரு வகையான நிர்வாண நாட்டியங்கள் நடந்து கொண்டிருக்கும். ஒரே மேடையில் முப்பது நாற்பது நிர்வாணிகள் நடனமாடுவது ஒரு நிர்வாண ஒப்பேரா போலிருக்கும். விபச்சார விடுதிகளில் இருக்கும் வேசிகள் நிதானம் தவறாதவர்களாய் இருந்தார்கள். ஒரு கோப்பை பியரை மணிக்கணக்காக வைத்து வைத்து குடித்தார்கள். அவர்களின் மூஞ்சிகள் ரப்பரால் செய்யப்பட்டவை போல எல்லாப் பக்ககங்களும் வளைந்தன. பூச்சுக்களாலும் சாயங்களாலும் மையாலும் அவர்களின் இருதயங்கள் செய்யப்பட்டிருந்தன. நாங்கள் விபச்சாரம் செய்கிறோம் என்று அவர்கள் சொல்வதில்லை. "நாங்கள் வேலை செய்கிறோம்" என்றே அந்த வேசிகள் சொல்லிக்கொண்டார்கள். சூது பற்பொங்கின் தர்மம். சூதும் வேசமும் காமமும் அந்த வேசிகளை வனைந்திருந்தன. தாய்லாந்தின் குருவிகள் மலைகளில் உள்ளன.

பாங்கொக்கில் இருந்து இருநூற்றுச் சொச்சக் கிலோமீற்றர்கள் தொலைவில் நன்தாபுரி மலைத் தொடர் ஆரம்பிக்கிறது. மலை முழுவதையுமே உல்லாசப் பிராயணிகள் மொய்த்துக் கிடந்தனர். அந்த மலைக் கிராமங்களில் குடும்பம் குடும்பமாய் விபச்சாரம் செய்து வந்தார்கள். நான் சாம்ப்போய்ன் குடும்பத்தின் கடைசிப் பெண்ணைத் தேர்ந்தெடுத்தேன்.அந்த விபச்சாரி நான்கடி உயரம் தான் இருந்தாள். கொழுத்த உடல்வாகு. வட்டமான மூஞ்சியும் புருவங்களில்லாத கண்களும் ஒளிரும் கூந்தலும் மாசு மருவற்ற மஞ்சள் தோலுமாய் பளபளவென்று ஒரு மாம்பழம் போலிருந்தாள். நான் சாம்போய்ன் குடும்பத்தில் பத்து நாட்கள் தங்கியிருந்தேன். மாம்பழம் ஒரு நிமிடம் கூட என்னை விட்டு அகன்றாள் இல்லை. என் நீண்ட தலை முடியை வாரி விடுவதிலும் என் காலணிகளின் நூலை முடிச்சுப் போடுவதிலும் அவளுக்குத் தீராத ஆனந்தம். நன்தாபுரி மலைத்தொடரின் ஒவ்வொரு இரகசிய மடிப்புகளுள்ளும் மாம்பழம் என்னை அழைத்துச் சென்றாள். நானும் மாம்பழமும் பகல் முழுவதும் ஆட்களில்லாத மலைச் சரிவுகளில் கிடந்தோம். மாம்பழம் ஒரு குரங்கு மாதிரி மரங்களில் தாவித் தாவி ஏறிச் செல்வாள். தன்னுடைய இடுப்பு முழுவதும் பழங்களால் நிறைத்துக் கொண்டு இறங்குவாள். மாம்பழம் ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து தடவைகள் குளித்தாள். அவள் பகலிலோ இரவிலோ தூங்கி நான் பார்த்ததில்லை.
இரவில் நானும் மாம்பழத்தின் தகப்பனும் முற்றத்திலிருந்து ‘பறவை’ மது அருந்துவோம். அந்தக் கிழவன் துளசி இலைகளை மென்றபடியே மதுவைக் குடித்துக் கொண்டிருப்பான். ஒரு நாள் விடிகாலையில் நான் வயிற்று வலியால் துடித்தபடி படுக்கையில் கிடந்தபோது சாம்ப்போய்ன் குடும்பமே என்னைச் சுற்றிக் கவலையுடன் நின்றிருந்தது. மாம்பழத்தின் தாய் மலையிலிருந்து விதம் விதமான இலைகளை எடுத்து வந்து விழுதாய் அரைத்து என் அடி வயிற்றில் பூசினாள். மாம்பழம் கண்ணீர் விட்டு அழுதாள். அவளின் கண்ணீர் பொட்டுக்கள் என் நெற்றியில் சிந்தி உடைந்தன.

எனக்குத் தாய்லாந்து மொழியில் இருபது சொற்கள் தெரியும். மாம்பழத்துக்கு பத்து ஆங்கிலச் சொற்கள் தெரியும். இந்த முப்பது சொற்களால் நாள் முழுவதும் நானும் அவளும் பேசிக் கொண்டிருப்போம். இன்னொரு அதிகாலையில் என்னைத்தான் காதலிப்பதாக மாம்பழம் சொன்னாள்.மாம்பழத்துக்கு சிறிலங்கா எங்கே இருக்கிறது, சுவிஸ் எங்கே இருக்கிறது, அமெரிக்கா எங்கே இருக்கிறது என்று ஒரு மண்ணும் விளங்கியதாகத் தெரிய வில்லை. தன்னை என்னோடு சிறிலங்காவுக்கு கூட்டிப் போகச்சொன்னாள். சென்ற வருடம் அவளின் சிநேகிதி ஒருத்தியை ஒரு சுவிஸ்காரன் சுவிற்சலாந்துக்குக் கூட்டிப் போனானாம். ஐயாயிரம் பாத் ‘ரேட்’ பேசி பத்து நாட்கள் தங்க வந்ததை ஒரு கலியாணத்தில் கொண்டு வந்து முடிக்க மாம்பழம் திட்ட மிடுகிறாள். "இதோ பாங்கொக்குக்கு போய்விட்டு இரண்டே நாளில் திரும்பி வருகிறேன்" என்று மாம்பழத்திடமும் சாம்ப்போய்ன் குடும்பத்திடமும் கூறி விட்டு நொன்தாபுரி மலையிலிருந்து கிளம்பிய நான் அங்கிருந்து சிங்கப்பூருக்கு வந்தேன்.

சிங்கப்பூரில் சிரங்கூன் பள்ளிவாசலுக்கு முன்னாக வலது புறத்தில் கிளைக்கும் ஒரு குறுக்குப் பாதை டஸ்கா ரோட்டில் சென்று முடிகிறது. அந்த குறுக்குப் பாதையின் இரண்டு பக்கங்களிலும் சின்னஞ் சிறிய வீடுகள். அந்த வீடுகளின் முன் வாசற்கதவுகள் அகலத் திறந்து கிடந்தன. வீடுகளின் உள்ளே வீட்டுக்கு நான்கு பேர் ஐந்து பேரென விபச்சாரிகள். நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் எல்லோரும் ஒன்று புத்தகம் படித்துக் கொண்டிருந்தார்கள் அல்லது வர்ண நூற்க்கண்டுகளை மடியில் வைத்து பின்னல் வேலை செய்து கொண்டிருந்தார்கள். திறந்த கதவுகளின் முன்னே மக்கள் கூடி மணிக்கணக்காக அந்த வேசிகளைப் பார்த்துக்கொண்டே நின்றிருந்தார்கள்.
அங்கே நான் அந்த மலேசிய விபச்சாரியைச் சந்தித்தேன். அவள் ஓங்கு தாங்கான உடலமைப்புக் கொண்டவள். அவளின் குரலில் ஆண்மை பிசிறியது. அவளின் கரிய சருமத்திலிருந்து நான் மதுவின் வாசனையை முகர்ந்தேன். அவளின் உடலின் மொழி கண்டிப்பாக ஒரு விபச்சாரிக்கு உரியதல்ல. அவள் ஒரு குத்துச்சண்டை வீராங்கனை மாதிரி அசைந்தாள். மயில் கழுத்து நிறத்தில் சேலை உடுத்திருந்தாள். தன்னுடைய பெயர் கவிதா என்றவள் என்னுடைய பெயரையும் நாட்டையும் விசாரித்தாள். "பெயர்: ஜே.ஆர்.ஜெயவர்தனா. சிறிலங்காச் சிங்களவன்" என்று கூறிவிட்டு வாயை மூடிக்கொண்டேன். பின்மெதுவாக "உனக்கு இருபது வெள்ளிகள் மிகவும் அதிகமானது" என்று சொன்னேன். அந்த வேசி என்னைப் பார்த்து புண்ணான தனது உதடுகளை சுழித்துக் கொண்டே "ஐந்து வெள்ளிக்கும் பத்து வெள்ளிக்கும் தேக்கா மார்க் கெட்டில் உன் சிங்களத்திகள் நிற்பார்கள் அவர்களிடம் போய்க் கொள்" என்றாள்.
நான் தேக்கா மார்க்கெட் என்ற பெயரை மனதுக்குள் குறித்துக் கொண்டேன்.

மாலை நேரத்தில் தேக்கா மார்க்கெட் பெண்களால் நிறைந்திருந்தது. நான் மார்க்கெட்டுக்குள் நுழைம் போதே அந்த விபச்சாரியை கண்டுபிடித்து விட்டேன். அவள் மார்க்கெட்டின் பிரதான நுழைவாயிலின் அருகே நின்றிருந்தாள்.

கறுப்பென்றும் சொல்ல முடியாத சிவப்பென்றும் சொல்ல முடியாத ஒரு சிங்களக் கலர். சுருள் சுருளான முடியைத் தூக்கிக் கட்டி யிருந்தாள். வயது இருபத்தைந்துக்குள் இருக்கலாம். குதியுயர்ந்த செருப்புக் களும் ஜீன்ஸம் டீ - சேர்ட்டும் அணிந்திருந்தாள் அவளின் மார்பில் இப்படி எழுதியிருந்தது. 'I LOVE SINGAPORE'
வேசி பொட்டு வைத்திராத தன் நெற்றியை நெரித்து என்னைப் பார்த்து இளித்தாள். நான் கொழும்பில் இருந்த காலத்தில் ஓரளவு சிங்களம் பேசப் பழகியிருந்தேன். அவளை நெருங்கி "லங்காத?" என்று கேட்டுக் கதையை ஆரம்பித்தேன். அவள் பத்து வெள்ளி கேட்டாள். அவள் பணிப் பெண்ணாய் வேலை செய்யும் வீட்டுக்கு ஏழு மணிக்கு முன்பாக போய்விட வேண்டும் என்பதால் தூர இடத்துக்கு வரமுடியாது என்றாள். விபச்சாரி கடகடவென வேகமாய் பேசிக்கொண்டேயிருந்தாள். அவள் பேசியதில் அரைவாசிச் சிங்களம் எனக்கு விளங்கவில்லை. நான் தங்கியிருக்கும் அறை மிகவும் அருகில் இருப்பதாகச் சொன்னேன். "நீ நன்றாக நடந்து கொண்டாயானால் பேசியதற்கு மேலே ஐந்து வெள்ளி தருவேன்" என்றேன்.
நான் ஆரம்பத்தில் இருந்து கவனித்துக்கொன்டேயிருக்கிறேன். அந்த வேசியின் கண்கள் முழுவதும் சந்தேகம் பிடித்திருந்தது. நான் அறைக்கதவை மூடியவுடன் அவள் வெள்ளியைக் கேட்டு கையை நீட்டினாள். நான் பத்து வெள்ளித் தாளன்றை அவளிடம் கொடுத்தேன். "ஐந்து வெள்ளி கூடத் தருவதாக சொன்னீர்கள்" என்று தன் நாவை வெளியே நீட்டி மாய்மாலச் சிரிப்பு சிரித்தாள். "நீ போகும்போது அதைத் தருவேன்" என்று கூறிவிட்டு என் சப்பாத்துக்களை கழற்றிக்கொண்டே "உம்ப கம கோயித?" என்று கேட்டேன். அந்தச் சிங்கள வார்த்தைகளுக்கு "உன் ஊர் எது?" என்று கேட்பதாக அர்த்தம். வேசி வாயை ஒரு மீன் மாதிரித் திறந்ததை நான் நிச்சயம் கண்டேன். அவளின் நுனி நாக்கு அவளின் மேலண்ணத்தைத் தொட்டதைக் கண்டேன். அவளின் உதடுகள் மீண்டும் முட்டிக்கொண்டதையும் கண்டேன். தொடர்ந்து வேசியின் தொண்டையிலிருந்து ஒலியெழுந்ததையும் நான் கேட்டேன். எனினும் அந்த ஒலிச் சமிக்ஞைகளை என் செவிகளால் உணர முடியவில்லை. சில சுவைகளை நாவு நிராகரிப்பது போலவே சில ஒலிகளை காதும் நிராகரிக்கும். மறுபடியும் "உம்ப கம கோயித?" என்று கேட்டேன். அவள் மறுபடியும் வாயை மீன் போலத் திறந்து நுனி நாக்கால் மேலண்ணத்தை வருடி "யாப்பணய" என்றாள். யாப்பணய என்ற சிங்களச் சொல்லுக்குத் தமிழில் யாழ்ப்பாணம் என்று அர்த்தம். நான் விடுத்து விடுத்து சிங்களத்தில் கதைகளைக் கேட்டேன்.

அவள் தன்னுடைய பெயர் நயீமா என்று சொன்னாள். தன்னுடைய சிறிய வயதில் அவள் யாப்பணயில் இருந்தாளாம். பின் நீர் கொழும்புக்கு அவள் குடும்பம் போய் விட்டதாம். அவள் என்னுடன் சிங்களத்தில் தான் பேசிக் கொண்டிருந்தாள். தான் சிங்கப்பூருக்கு பணிப் பெண்ணாக வந்து ஆறு மாதங்களாகின்றன என்றாள். பின் அந்த ஐந்து வெள்ளியை மறுபடியும் எனக்குஞாபக மூட்டினாள். யாப்பணயவில் தான் படித்த முஸ்லீம் பெண்கள் பாடசாலையும் பொம்மை வெளியும் அங்கிருக்கும் சிறிய வீடுகளும் தன் கண்களுக்குள் நிற்பதாகச் சொன்னாள். பின் மறுபடியும் அந்த ஐந்து வெள்ளியை ஞாபகப்படுத்தினாள்.நான் அவளிடம் ‘எப்போது யாப்பணயவிலிருந்து நீர்கொழும்புக்குப் போனாய்? என்று கேட்டேன். அவள் சடாரென என்ன தெரியாதது மாதிரிக் கேட்கிறீர்கள்? என்றாள்.அவளின் கண்கள் ஆடாமல் அசையாமல் நின்றன.

அம்ஸ்ரர்டாமில் என் கால்களுக்குக் கீழே ஆறுகள் பின்னிச் சென்றன. அங்கே தான் ஐரோப்பா வின் மிகப்பெரும் வேசிகளின் பூமி இருக்கிறது. அம்ஸ்ரர்டாம் பிரதான ரயில் நிலையத்திலிருந்து இரண்டு நிமிட நடை தூரத்தில் ஆறுகளின் நடுவே அந்தப் பிரதேசம் இருந்தது. தெருவின் ஒரங்களில் கண்ணாடிக் கூடுகளுக்குள் அரை நிர்வாணமாக விபச்சாரிகள் நின்றிருந்தார்கள். தெருக்களில் மக்கள் பியர் அருந்தியவாறே அந்த விபச்சாரிகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஒரு சிலர் ஒடிப்போய் கண்ணாடி கூண்டில் முத்தமிட்டார்கள். கண்ணாடிக் கூண்டுகளை வரிசையாகப் பார்த்தவாறே நான் நடக்கலானேன். வரிசையின் இறுதிக் கண்ணாடிக் கூண்டுக்குள் ஒரு இளம் பெண் ஏறக்குறைய முழு நிர்வாணமாய் உட்கார்ந்திருந்தாள்.
நான் கண்ணாடியுடன் போய் ஒட்டி நின்றேன்.
அந்தப் பெண்ணுடன் இருந்த மற்றைய இரு விபச்சாரிகளும் என்னை உள்ளே அழைத்தனர். நான் உள்ளே போனவுடன் கண்ணாடியின் மீது திரை போடப்பட்டது. ஒரு விபச் சாரி உட்கார்ந்திருந்த அந்தப் பெண்ணைச் சுட்டிக் காட்டி "அவளா வேண்டும்?" என்று கேட்டாள். நான் யோசித்துக் கொண்டு நிற்பதைத் பார்த்த மற்ற விபச்சாரி "அவள் அருமையான பெண், நேரத்தை வீணாக்காதே, ஒரு முறை இவளிடம் வருபவர்கள் மறுபடியும் இவள் தான் வேண்டுமென விரும்புகிறார்கள். இவளால் எங்கள் இருவரின் தொழிலும் கெட்டுப்போய்க் கிடக்கிறது" என்று சொல்லிவிட்டு பெருங்குரலெடுத்துச் சிரித்தாள். அந்த இளம் பெண் எழுந்து சுவரைக் தடவிக் கெண்டே என்னை நோக்கி வந்தாள். அவருக்குப் பார்வை கிடையாது.

அந்தக் குருட்டு விபச்சாரி கிழக்கு ஐரோப்பாவில் இருந்து அம்ஸ்ரர்டாமுக்கு வந்திருக்கிறாள்.ஒரு உக்ரேனிய வேசியை நான் போர்த்துக்கல்லில் சந்தித்தேன். அவளின் பெயர் வால்யா. கீவ் நகரத் திலிருந்து வந்தவள்.

பழைய லிஸ்பொனின் பக்ஷியா சதுக்கத்தில் அவள் நின்றிருந்தாள். அந்த வசந்த காலத்திலும் குளிரங்கியும் தொப்பியும் கையுறைகளும் பனிக் காலணிகளும் அணிந்திருந்தாள். அவள் எப்போதும் பதற்றத்துடனேயே பேசினாள். எனது அறையில் கூட விபச்சாரி குளிர் அங்கியையும் கையுறைகளையும் கழற்றவில்லை. இரவு முழுவதும் நாங்கள் போர்டோ மது அருந்தினோம். போதை ஏற ஏற அவளில் பதற்றம் அதிகரித்துக்கொண்டே போனது. குளிர் அங்கிக்கு மேலாக போர்வையைப் போர்த்துக் கொண்டாள். அவளுக்கு உக்ரேய்னில் ஒரு சிறிய வீடு கட்ட நான்காயிரம் ஈரோக்கள் தேவையாம். அதைச் சம்பாதித்தவுடன் உக்ரேய்னுக்கு திரும்பி போய் விடுவாளம். உக்ரேய்னில் அவளுக்கு ஆறு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறதாம். அவளது குடும்பத்தினருக்கு போர்த்துக்கல்லில் உணவு விடுதி ஒன்றில் தான் வேலை செய்வதாக சொல்லி வைத்திருக்கிறாளாம். எனக்கு அவளின் இடை விடாத பேச்சில் சலிப்பு ஏற்பட்டது. "போதும் நிறுத்து" என்றேன். "நீ என் பேச்சைக் கேட்கக் தயார் இல்லை யென்றால் வெளியே போய் விடு" என்று கதவைத் திறந்து விட்டு கைகளைப் பொத்திக் கதவில் குத்தினாள். நான் அசையாமல் நின்றிருந்தேன். அவள் என் சட்டையைப் பிடித்திழுத்து என்னை வெளியே தள்ளினாள். அவளின் வெறிக்கூச்சல் அதிகாலையைக் கிழித்துப் பறந்தது. நான் அவளை வெளியே தள்ள முயன்றேன். அவள் என் கன்னத்கில் ஒங்கி அறைந்தாள். நான் அவள் மூஞ்சியில் காறி உமிழ்ந்தேன்.
பொலிஸ்காரர்கள் வந்து அவளைச் சோதனையிட்ட போது அவளிடம் போர்த்துக்கல்லில் தங்குவதற்கான அனுமதி பத்திரம் இல்லாதது தெரியவந்தது. அவளின் கைப்பையை பொலிசார் சோதனையிட்ட போது உள்ளே ஆணுறைகளும், மாத்திரைகளும் சிகரெட்டுக்களும் இருந்தன. கைப்பையின் இன்னொரு அறையில் ஒரு கூரிய கத்தியும். மின் அதிர்வை உற்பத்தி செய்யும் கருவியும் ஒரு கத்திரிக்கோலும் கண்டுபிடிக்கப்பட்டன.

ஒரு கையில் சவுக்கும் மறு கையில் கைவிலங்கும் வைத்திரும் ஒரு கிழட்டு விபச்சாரி ஸ்ரார்ஸ்பேர்க் சென்டெனி வீதியில் நின்றிருப்பாள் அந்த வீதி விபச்சாரம் செய்வதற்கு பிரஞ்சு அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள வீதி. அந்த வீதியில் நிற்பவர்களில் அநேகமானோர் வெள்ளை வேசிகள், அறுபது எழுபது ஈரோவென அறாவிலை சொல்லுவார்கள். என் தரவளியை எல்லாம் அவர்கள் ஒரு நாய் மாதிரித் தான் பார்ப்பார்கள். ஊண் வழியும் வெள்ளைத் தோல்களைப் போர்த்திய அந்த வேசிகள் விபச்சாரம் செய்வதற்கு லைசன்ஸ் வைத்திருந்தார்கள்.லைசன்ஸ் இல்லாத விபச்சாரிகள் ரீபப்ளிக் சதுக்கத்தில் நிற்பார்கள். நான் அங்கே பால்க்கோப்பி நிறத்தில் ஒரு ஆபிரிக்க வேசியைச் சந்திதேன். அவள் டோகோ நாட்டைச் சேர்ந்தவள். ஏமா என்று பெயர் சொன்னதாக ஞாபகம். அவள் முப்பது ஈரோக்கள் கேட்டாள். அவளின் அறை மிகச் சுத்தமாக இருந்தது. கட்டிலில் சுத்தமான துணிகள் விரிக்கப்பட்டிருந்தன. என்னைப் பார்த்து "ஒரு நிமிடம் பொறுத்துக் கொள்" என்ற வேசி தரையில் மண்டியிட்டாள். அவளின் கைகளில் ஒரு சிறிய மண்பாத்திரத்தில் நீர் இருந்தது. அவள் தனது இரு கைகளாலும் அந்த நீர் நிறைந்த மண்பாத்திரத்தைத் தனது பெண்குறியின் கீழ் வைத்துக்கொண்டே கண்களை மூடி அடித் தொண்டையிலிருந்து மந்திரம் ஓதும் தொனியில் முணுமுணுத்தாள், அதன் பின் அவள் அந்த நீரை தன் பெண்குறியின் மீது தெளித்து விட்டாள். "அது எதற்கு?" என்று கேட்டேன். வேசி தன் மூதாதையர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டாளாம். " தயவு செய்து நீயும் மண்டி போட்டு உட்கார்ந்து கொள்" என்று சொன்னாள். பின்பு மண் பாத்திரத்திலிருந்த மிகுதி நீரை என் ஆண்குறி மீது தெளித்துக்கொண்டே அடித்தொண்டைக்குள் முணுமுணுக்க ஆரம்பித்தாள். அப்போது அவளின் கண்கள் ஒரு துர்தேவதையின் கண்களைப் போல மேலும் கீழும் உருளலாயின.அந்த வேசி எந்த நேரத்தில் எனக்கு மந்திரம் போட்டாளோ தெரியவில்லை. விபச்சாரிகளின் நாற்றம் துரத்திக் கொண்டேயிருக்கிறது.

ஆயிரம் பெண்கள் கூடி நிற்கும் போது அவர்களிடைய ஒரேயரு வேசி இருந்தால் கூட நான் அவளைக் கண்டு பிடித்து விடுகிறேன். என் வாழ்நாளில் நான் சந்தித்த ஒவ்வொரு வேசியின் மூஞ்சியும் என் இருதயத்தில் அழியாமல் இருக்கிறது. அவர்களை மறுபடியும் மறுபடியும் ஞாபகப் படுத்திக்கொண்டே சீவிக்கிறேன். வேசிகளைக் குறித்த ஒவ்வொரு தனித்தனிப் படிமங்களையும் சிதறாமல் என் ஞாபகத்தில் சேமித்து வைத்திருக்க என்னால் முடிகிறது. வேசிகளின் ஆன்மா, உடல், வார்த்தை, தந்திரம், உறுதி, பயம், இரத்தம், அழுக்கு, கண்ணீர் என எல்லாமே என்னில் காமத்தைக் கிளர்த்துகின்றன. எனக்குத் தெரியும், என் காமம் என் பாதங்களில் தான் முகிழ்க்கிறது.

நான் இறுதியாச் சந்தித்த வேசி கானா நாட்டுக்காரி நான் அவளைப் பரிஸ் மெத்ரோ நிலையம் ஒன்றில் சந்தித்தேன். அவளுக்கு நாற்பது வயதிருக்கலாம். ஆறடிக்கு மேலே உயர்ந்த கறுப்பி. அவளின் தடித்த உடுதடுகளில் எச்சில் வடித்து கொண்டேயிருந்தது. அவள் பேசிய போதெல்லாம் எச்சில் துமித்தது. அவளுக்கு பிரஞ்சுமொழி பேசத் தெரிந்திருக்கவில்லை. கொச்சையாக ஆங்கிலம் பேசினாள். என்னைச் "சகோதரனே" என்று தான் அழைத்தாள். முழு இரவுக்கு தனக்கு நூற்றியிருபது ஈரோக்களும் தான் தங்கியிருக்கும் ஹொட்டாலுக்கு முப்பது ஈரோவும் கொடுத்துவிட வேண்டும் என்றாள். அவள் தங்கியிருக்கும் ஹொட்டல் ஐந்து நிமிட நடை தூரத்தில் இருக்கிறது என்றாள். நானும் அந்த வேசியும் மெத்ரோ நிலையத்திலிருந்து வெளியே வந்து வீதியில் நடக்கலானோம்.அந்தப் பகுதி வெளிநாட்டவர்கள் வாழும் பகுதி. கறுப்பர்களும் அராபியர்களும் ஈழத் தமிழர்களும் அந்தப் பகுதியில் அதிகம். நான் வேசியை முன்னே நடக்கச் சொல்லிவிட்டு சற்று இடைவெளி விட்டு அவளைப் பின்தொடர்ந்தேன். அந்த நள்ளிரவிலும் ஈழத்தமிழர்களின் கடைகளும் உணவு விடுதிகளும் திறந்திருந்தன். கடைத்தெருவில் எனக்குத் தெரிந்த இரண்டு தமிழர்களை கண்டேன். "என்ன இந்த நேரத்தில் இந்தப் பக்கம்?" என்று என்னைப் பார்த்துக் கேட்டார்கள். " ‘ஹஸீஸ்’ வாங்க வந்தேன்" என்றேன். இந்தப் பதில் அவர்களை மிரள வைக்கும் என்று எனக்குத் தெரியும்.

அந்தப் பகுதியின் இருண்ட மூலைகளில் கஞ்சா, ஹஸீஸ் வியாபாரமும் நடக்கும்.அந்த ஹொட்டல் வேசிகளுக்காகவே கட்டப்பட்டிருந்தது. ஹொட்டலின் மாடிப்படிகளில் கறுப்பு வேசிகள் உட்கார்ந்திருந்து பேசிக் கொண்டிருந்தார்கள். வேசியின் அறையில் மூச்சு விட இடமில்லை. அறை முழுவதும் சட்டி பானை பெட்டிகளளென்று குவித்து கிடந்தது. மாட்டுத் தொழுவத்தில் வீசும் நாற்றம் அறையின் சுவர்களில் இருந்தது. பாதி சாப்பிட்ட உணவும் பாத்திரங்கள் தரையில் கிடந்தன. கட்டிலின் விரிப்பில் இரத்தக் கறை படித்திருந்தது.நான் அதிகாலையிலேயே விழித்து விட்டேன் வேசி வாயில் எச்சில் ஒழுகத் தூங்கி கொண்டிருந் தாள் நான் கட்டிலில் இருந்து இறங்கி என் ஆடைகளை அணிந்து கொண்டேன். தரையில் கிடந்த உணவுப் பாத்திரங் களுக்குள்ளால் தட்டுத் தடுமாறி கண்களைத் தேய்த்துக் கொண்டே நடந்து குளியலறைக்குள் போனேன். குழாயைத் திறந்து விட்டு பச்சைத் தண்ணீரை என் முகத்தில் அடித்துக் கொண்டேன். கண்கள் சிவந்து போயிருப்பது குளியலறைக் கண்ணாடியில் தெரிந்தது. என் கண்களையே கண்ணாடியில் பார்த்துக் கொண்டு நின்றேன். அப்போது என் தலையின் பின்புறத்தில் சில எழுத்துக்கள் நெளிவதைக் கண்டேன். திரும்பிப் பார்த்த போது குளியலறையின் சுவரில் ஒரு வாக்கியம் பிரஞ்சு மொழியில் தப்பும் தவறுமாக எழுதி ஒட்டப்பட்டிருந்தது. NE JETEZ PAD MANIX DA LA COMADE நான் அந்த வாக்கியத்தைப் படித்து விட்டுத் திரும்பும் போது குளியலறைக் கதவின் உட்புறத்தில் அதே வாக்கியம் தவறே இல்லாத வாக்கிய அமைப்பில் தமிழ் எழுத்துக்களால் எழுதப்பட்டு அங்கே ஒட்டப்பட்டிருந்த தைக் கண்டேன்.
தயவு செய்து ஆணுறைகளை மலக்குழியினுள் எறிய வேண்டாம்.
நான் அந்த எழுத்துக்களையே பார்த்தவாறு நின்றிருந்தேன். அந்தக் கணத்தில் நான் அடைந்த பெரும் அச்சத்தைப் போலவே இன்னொரு அச்சத்தை என் வாழ்க்கையில் நான் முன்பும் அடைந்ததில்லை. பின்பும் அடைந்ததில்லை. அந்தத் தமிழ் எழுத்துக்கள் முத்து முத்தாக மையால் வெள்ளைத் தாளில் எழுதப்பட்டிருந்தன. எழுதிய கை மிக நேரான கோடுகளைக் கீறிப் பழகிய கையாக இருக்க வேண்டும். என் ஐயாவைப் போன்ற ஒரு தொழில் முறை ஒவியனால் அந்த எழுத்துக்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும். பெரும் சோர்வுடன் நான் நின்றிருந்த போது குளியலறையின் மாடத்தில் வேசியின் சிவப்பு உதட்டுச்சாயம் கிடப்பதைக் கண்டேன். நான் பதற்றத்துடன் வேசியின் சிவப்பு உதட்டுச் சாயத்தால் அந்தத் தமிழ் எழுத்துக்களை அழிக்கத் தொடங்கினேன்.