Wednesday, June 28, 2006

காதல் - பெரியார் பேசுகிறார்...


கால்

அன்பு,ஆசை, நட்பு என்பவற்றின் பொருளைத் தவிர வேறு ஒரு பொருளைக் கொண்டதென்ற சொல்லும் படியான காதல் என்னும் ஒரு தனித்தன்மை ஆண் பெண் சம்மந்தத்தில் இல்லை என்பதை விவரிக்கவே இவ்வியாசகம் எழுதப்படுவதாகும். ஏனெனில் உலகத்தில் காதல் என்பதாக ஒரு வார்த்தையைச் சொல்லி அதனுள் ஏதோ பிரமாதமான தன்மை ஒன்று தனிமையாக இருப்பதாகக் கற்பித்து மக்களுக்குள் புகுத்தி, அனாவசியமாய் ஆண் - பெண் கூட்டு வாழ்க்கையின் பயனை மங்கச் செய்து காதலுக்காகவென்று இன்பமில்லாமல் திருப்தியில்லாமல் தொல்லைப்படுத்தப்பட்டு வரப்படுகின்றதை ஒழிக்க வேண்டுமென்பதற்காகவேயாகும்.

ஆனால் காதல் என்றால் என்ன? அதற்குள்ள சக்தி என்ன? அது எப்படி உண்டாகின்றது? அது எது வரையில் இருக்கின்றது? அது எந்த எந்த சமயதில் உண்டாவது? அது எவ்வெப்போது மறைந்து விடுகிறது? அப்படி மறைந்து போய் விடுவதற்குக் காரணம் என்ன? என்பவை போன்ற விஷயங்களைக் கவனித்து ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் காதல் என்பதின் சத்தற்ற தன்மையும் பொருளற்ற தன்மையும் உண்மையற்ற தன்மையும் நித்தியமற்ற தன்மையும் அதைப் பிரமாதப்படுத்துவதின் அசட்டுத் தனமும் ஆகியவைகள் எளிதில் விளங்கிவிடும்.

ஆனால் அந்தப்படி யோசிப்பதற்கு முன்னே இந்தக் காதல் என்ற வார்த்தையானது இப்போது எந்த அர்த்தத்தில் பிரயோகிக்கப்படுகின்றது? உலக வழுக்கில் அது எப்படிப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது? இவற்றிற்கு என்ன ஆதாரம்? என்பவைகளைத் தெரிந்து ஒரு முடிவு கட்டிக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இன்றைய தினம் காதலைப் பற்றிப் பேசுகிறவர்கள் "காதல் என்பது அன்பு அல்ல, ஆசை அல்ல, காமம் அல்ல, அன்பு -நேசம் -ஆசை -காமம் என்பவை வேறு, காதல் வேறு, நட்பு வேறு என்றும் அது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் தங்களுக்குள் நேரே விவரித்துச் சொல்ல முடியாத ஒரு தனிக் காரியத்திற்காக ஏற்படுத்துவதாகும். அக் காதலுக்கு இணையானது உலகத்தில் வேறு ஒன்றுமே இல்லை என்றும்,

அது ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடமும், ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடமும் மாத்திரந்தான் இருக்க முடியும். அந்தப்படி ஒருவரிடம் ஒருவருக்குமாக இருவருக்கும் ஒரு காலத்தில் காதல் ஏற்பட்டு விட்டால் பிறகு எந்தக் காரணம் கொண்டும் எந்தக் காலத்திலும் அந்தக் காதல் மாறவே மாறாது என்றும் பிறகு வேறு ஒருவரிடமும் அந்தக் காதல் ஏற்படாது அந்தப்படி மீறி அந்தப் பெண்ணுக்கோ ஆணுக்கோ வேறு ஒருவரிடம் ஏற்பட்டு விட்டால் அது காதலாயிருக்க முடியாது. அதை விபச்சாரம் என்று தான் சொல்ல வேண்டுமேயொழிய அது ஒருக்காலும் காதலாகாது என்றும், ஒரு இடத்தில் உண்மைக் காதல் ஏற்பட்டு விட்டால் பிறகு யாரிடமும் காமமோ விரகமோ மோகமோ என்றெல்லாம் ஏற்படாது என்றும் சொல்லப்படுகின்றது.

மேலும் இந்தக் காதல் காரணத்தினாலேயே ஒரு புருஷன் ஒரே மனைவியுடனும் ஒரு மனைவி ஒரே புருஷனுடனும் மாத்திரம் இருக்க வேண்டியது என்றும் கற்பித்து அந்தப்படி கட்டாயப்படுத்தியும் வரப்படுகின்றது.

ஆனால் இந்தப்படி சொல்லுகின்றவர்களை எல்லாம் உலக அனுபோகமும் மக்களின் அனுபவ ஞானமும் இல்லாதவர்கள் என்றோ அல்லது இயற்கையையும் உண்மையையும் அறியாதவர்கள் என்றோ அல்லது உண்மையை அறிந்தும் வேறு ஏதோ ஒரு காரியத்திற்காக வேண்டி வேண்டுமென்றே மறைக்கின்றவர்கள் என்றே தான் கருத வேண்டி இருக்கின்றது.

அன்றியும் இந்த மாதிரி விஷயங்களைப் பற்றி நாம் சொல்லும் மற்றொரு விஷயமென்னவென்றால் ஒரு ஆணின் அல்லது ஒரு பெண்ணின் அன்பு, ஆசை, காதல், காமம், நட்பு, நேசம், மோகம், விரகம் முதலாகியவைகளைப் பற்றி மற்றொரு பெண்ணோ ஆணோ மற்ற மூன்றாவதர்கள் யாராவதோ பேசுவதற்கோ, நிர்ணயிப்பதற்கோ, நிர்ப்பந்திப்பதற்கோ சிறிது கூட உரிமையே கிடையாது என்றும் சொல்கின்றோம்.

இன்னும் திறந்து வெளிப்படையாய்த் தைரியமாய் மனித இயற்கையையும் சுதந்திரத்தையும் சுபாவத்தையும் அனுபவத்தையும் கொண்டு பேசுவதானால் இவை எல்லாம் ஒரு மனிதன் தனக்கு இஷ்டமான ஒரு ஓட்டலில் சாப்பிடுவது போலவும் தனக்குப் பிடித்த பலகாரக் கடையில் பலகாரம் வாங்வது போலவும் அவனுடைய தனி இஷ்டத்தையும் மனோபாவத்தையும் திருப்தியையும் மாத்திரமே சேர்ந்ததென்றும் இவற்றுள் மற்றவர்கள் பிரவேசிப்பது அதிகப்பிரசங்கித் தனமும் அனாவசியமாய் ஆதிக்கம் செலுத்துவதுமாகுமென்றும் தான் சொல்ல வேண்டும்.


இவ்வளவு பெருமையையும் அணியையும் அலங்காரத்தையும் கொடுத்துப் பேசப்பட்ட காதல் என்பதை முன் குறிப்பிட்டபடி அது என்ன? அது எப்படி உண்டாகிறது? என்பதை யோசித்துப் பார்த்தால் யாவருக்கும் சரி என்று விளங்கிவிடும். காதல் என்கின்ற வார்த்தை தமிழா? வடமொழியா? என்பது ஒரு புறமிருந்தாலும் தமிழ் மொழியாகவே வைத்துக்கொண்டாலும் அதற்கு ஆண் பெண் கூட்டுத் துறையில் அன்பு, ஆசை, ஆவல், நட்பு, நேசம், விரகம் என்பவைகளைத் தவிர வேறு பொருள்கள் எங்கும் எதிலும் காணப்படவில்லை. அதன் வேறுவிதமான பிரயோகமும் நமக்குத் தென்படவில்லை.

அன்றியும் அகராதியில் பார்த்தாலும் மேற்கண்ட பொருளைத் தவிர வடமொழி மூலத்தை அனுசரித்துக் காதல் என்பதற்கு கொலை, கொல்லல், வெட்டுதல், முறித்தல் என்கின்ற பொருள்கள் தான் கூறப்பட்டிருக்கின்றன. மற்றப்படித் தனித் தமிழ் மொழியில் பார்த்தாலும் ஆண்பெண் சேர்க்கைக்கூட்டு முதலியவை சம்மந்தமான விஷயங்களும் அன்பு, ஆசை, நட்பு, நேசம் என்பவைகளைத் தவிர வேறு தமிழ் மொழியும் நமக்குக் காணப்படவில்லை. இவைகளுடன் காதல் என்பதைச் சேர்த்துக் கொண்டாலும் இக்கருத்துக்களையே தான் மாற்றி மாற்றி ஒன்றுக்கு மற்றொன்றாகக் கூறப்படுகிறதே தவிர காதலுக்கென்று வேறு பொருளில்லை.

ஆதலால் இவைகளன்றி காதல் என்பதற்கு வேறு தனி அர்த்தம் சொல்லுகின்றவர்கள் அதை எதிலிருந்து எந்தப் பிரயோகத்திலிருந்து கண்டு பிடித்தார்களென்பதும் நமக்கு விளங்கவில்லை.

நிற்க, இப்படிப்பட்ட காதலானது ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ எப்படி உண்டாகின்றது? அல்லது மூன்றாவது மனிதனுடைய பிரவேசத்தைக் கொண்டு உண்டாகின்றதா? ஒரு சமயம் தானாகவே உண்டாவதாயிருந்தால் எந்த சந்தர்ப்பத்தில் எந்த ஆதாரத்தின் மீது என்பவைகளைக் கவனித்தால், பெண் ஆணையோ ஆண் பெண்ணையோ தானே நேரில் பார்ப்பதாலும் அல்லது தான் மூன்றாவது மனிதர்களால் கேள்விப்படுவதாலும் உருவத்தையோ, நடவடிக்கையையோ, யோக்கியதையையோ வேறு வழியில் பார்க்க கேட்க நேரிடுவதாலுமே தான் உண்டாகக் கூடுமே தவிர இவைகள் அல்லாமல் வேறு வழியாக என்று சுலபத்தில் சொல்லிவிட முடியாது.

இந்தப் படியும் கூட ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடத்தில் காதல் ஏற்பட்டு அந்தப் பெண்ணுக்கு அந்த ஆணிடத்தில் காதல் ஏற்படாமல் போனாலும் போகலாம். இந்தப்படியே ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடம் காதல் ஏற்பட்டு அந்த ஆணுக்கு அந்தப் பெண்ணிடம் காதல் ஏற்படாமல் போனாலும் போகலாம். எப்படியும் ஒரு மனிதன் ஒரு வஸ்துவைப் பார்த்த மாத்திரத்தில் கேட்ட மாத்திரத்தில் தெரிந்த மாத்திரத்தில் அந்த வஸ்து தனக்கு வேண்டும் என்பதாக ஆசைப்படுகின்றானோ, ஆவல் கொள்கிறானோ அதுபோல் தான் இந்தக் காதல் என்பதும் ஏற்படுவதாயிருக்கின்றதே தவிர வேற எந்த வழியிலாவது ஏற்படுகின்றதா என்பது நமக்குப் புலப்படவில்லை.

எப்படிப்பட்ட காதலும் ஒரு சுய லட்சியத்தை அதாவது தனது இஷ்டத்தைத் திருப்தியைக் கோரித்தான் ஏற்படுகின்றதே தவிர வேறில்லை என்பதும், காதலர்கள் என்பவர்களின் மனோபாவத்தைக் கவனித்தால் விளங்காமல் போகாது.

அதாவது அழகைக் கொண்டோ, பருவத்தைக் கொண்டோ, அறிவைக் கொண்டோ, ஆஸ்தியைக் கொண்டோ, கல்வியைக் கொண்டோ, சங்கீதத்தைக் கொண்டோ, சாயலைக் கொண்டோ, பெற்றோர் பெருமையைக் கொண்டோ, தனது போக போக்கியத்திற்குப் பயன்படுவதைக் கொண்டோ அல்லது மற்றும் ஏதோ ஒரு திருப்தியை அல்லது தனக்குத் தேவையான ஒரு காரியத்தையோ குணத்தையோ கொண்டோதான் யாரும் எந்தப் பெண்ணிடமும் ஆணிடமும் காதல் கொள்ள முடியும். அப்படிப்பட்ட அந்தக் காரியங்களெல்லாம் ஒருவன் காதல் கொள்ளும் போது இவன் அறிந்தது உண்மையாகவும் இருக்கலாம் அல்லது அங்கு இருப்பதாக அவன் நினைத்துக் காதல் கொண்டு இருந்தாலும் இருக்கலாம். அல்லது வேஷ மாத்திரத்தில் காட்டப்பட்ட ஒன்றினால் இருந்தாலும் இருக்கலாம்.

உதாரணமாக ஒரு நந்தவனத்தில் ஒரு பெண் உல்லாசமாய் உலாத்துவதை ஒரு ஆண் பார்க்கின்றான். பார்த்தவுடன் அந்தப் பெண்ணும் பார்க்கின்றாள். இரண்டு பேருக்கும் இயற்கையாய் ஆசை உண்டாகிவிட்டது. பிறகு யார் என்று இவர்களில் ஒருவர் கேட்கிறார்கள். பெண் தன்னை ஒரு அரசன் குமாரத்தி என்று சொல்லுகின்றாள். இவனை யார் என்று அவள் கேட்கிறாள். உடனே ஆண் காதல் கொண்டு விடுகிறான். இவன் தான் ஒரு சேவகனுடைய மகன் என்று சொல்லுகிறான். உடனே அவளுக்கு அசிங்கப்பட்டு வெறுப்பேற்பட்டுப் போய்விட்டது. இது சாதாரணமாய் நிகழும் நிகழ்ச்சி. இங்கு ஏற்பட்ட காதல் எதை உத்தேசித்தது?

நிற்க, அவன் தன்னைச் சேவகன் மகன் என்று சொல்லாமல் தானும் ஒரு பக்கத்துத் தேசத்து ராஜகுமாரன் என்று சொல்லிவிட்டால் அவளுக்கு அதிக காதல் ஏற்பட்டு "மறுஜென்மத்தாலும்" இவனை விட்டுப் பிரியக்கூடாது என்று கருதி விடுகிறாள். நான்கு நாள் பொறுத்த பின்புதான் காதல் கொண்டவன் அரச குமாரன் அல்ல என்றும் சேவகன் மகன் என்றும் அறிந்தாள் என்று வைத்துக்கொள்வோம்.இந்த நிலையில் அந்தக் காதல் அப்படியே இருக்குமா?அல்லது இருந்தாக வேண்டுமா? என்பதை யோசித்துப் பார்த்தால் காதல் ஏற்படும் தன்மையும் மறுக்கும் தன்மையும் விளங்கும்.

இந்தப்படிக்கே ஒரு பெண்ணை நோயல்லாதவள் என்று கருதி ஒருவன் காதல் கொண்டபின் நோயுடையவள் என்று தெரிந்தது அல்லது மற்றவனுடைய மனைவி என்று தெரிந்தது அல்லது ஒரு தாசி என்று தெரிந்தது அல்லது தன்னை மோசம் செய்து தன்னிடம் உள்ள பொருளை அபகரிக்க வந்தவள் என்று தெரிந்தது. இது போலவே இன்னமும் தான் முதலில் நினைத்ததற்கு அல்லது தனது நன்மைக்கும் திருப்திக்கும் இஷ்டத்திற்கும் விரோதமாயோ தான் எதிர்பார்க்காத கெட்ட காரியத்திற்கு அனுகூலமாகவோ ஏற்பட்டுவிட்டால் அந்தக் காதல் பயன்படுமா? அதை எவ்வளவு தான் கட்டிப்போட்டாலும் அது இருக்க முடியுமா? என்பவைகளை யோசித்தால் உண்மைக்காதலின் நிலையற்ற தன்மை விளங்காமல் போகாது.

நிற்க, உண்மைக் காதல் என்பது ஒருவரை ஒருவர் பார்த்தவுடன் உண்டாகுமா? அல்லது கொஞ்ச நாளாவது பழகியவுடன் உண்டாகுமா? பார்த்ததும் ஏற்பட்ட காதல் உயர்வானதா? அல்லது சிறிது நாள் பழகிய பின் ஏற்படும் காதல் உயர்வானதா? சரீரத்தைக் கூடச் சரியாய் தெரிந்து கொள்ளாமல் தூர இருந்து பார்ப்பதாலயே ஏற்படும் காதல் நல்லதா? அல்லது சரீரத்தின் நிலை முதலியவைகள் தெரிந்து திருப்தி அடைந்த காதல் நல்லதா? என்பவைகளைக் கவனிக்கும் போது சரீர மாறுபாடாலும் பொருத்தமின்மையாலும் ஏன் எப்படிப்பட்ட உண்மைக் காதலும் மாற முடியாது? என்பதற்கு என்ன விடை பகர முடியும்? அல்லது உண்மையாகவே ஒருத்தன் ஒருத்தியுடன் காதல் கொண்டு விட்டால் ஒருத்தி தப்பாய் அதாவது வேறு ஒருவனிடம் காதல் கொண்டுவிட்டதாய்க் கருத நேர்ந்தால் அது பொய்யாகவோ மெய்யாகவோ இருந்தாலும் தன் மனதுக்குச் சந்தேகப்படும்படி விட்டால் அப்போது கூடக் காதல் மாறாமல் இருந்தால் தான் உண்மைக் காதலா? அல்லது தன் மனம் சந்தேகப்பட்டால் அதிருப்தி அடைந்தால் நீங்கி விடக்கூடிய காதல் குற்றமான காதலா?என்பதற்கு என்ன மறுமொழி பகர முடியும்?

காதல் கொள்ளும் போது காதலர்கள் நிலமை, மனப்பான்மை, பக்குவம், லஷியம் ஆகியவைகள் ஒரு மாதிரியாக இருக்கலாம். பிறகு கொஞ்சக் காலம் கழிந்த பின் இயற்கையாகவே பக்குவம், நிலைமை, லஷியம் மாறலாம். இந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில் காதலுக்காக ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துக் கொண்டு சதா அதிருப்தியிலும் துன்பத்திலும் அழுந்த வேண்டியதுதானா? என்று பார்த்தால் அப்போதும் காதலுக்கு வலுவில்லாததையும் அது பயன்படாததையும் காணலாம்.

ஒரு ஜதைக் காதலர்களில் அவ்விருவரும் ஞானிகளாய் துறவிகளாய் விட்டார்களானால் இந்தச் சந்தர்ப்பத்தில் ஒருவரை ஒருவர் பிரிவதும் வெறுப்பதும் காதலுக்கு விரோதமாகுமா? விரோதமானால் அப்படிப்பட்ட காதல் பயன்னடுமா? விரோதமில்லையானால் ஓருவர் ஞானியாகி துறவியாகிவிட்டால் மற்றவரை விட்டுப் பிரிந்து கொள்ளுவது காதலுக் விரோதமாகுமா? என்பதும் கவனித்தால் காதலின் யோக்கியதை விளங்காமல் போகாது. பொதுவாக மனித ஜீவன் ஒன்றைப் பார்த்து நினைத்து ஆசைப்படுவதும், ஒன்றினிடம் பலதினிடம் அன்பு வைப்பதும் நேசம் காட்டுவதும் இயற்கையேயாகும்.

அது போலவே மனிதனுக்குத் தானாகவே எதிலும் விரக்தி வருவதும் வெறுப்புக் கொள்வதும் பிரிவதும் இயற்கையேயாகும். பலவீனமாய் இருக்கும் போது ஏமாந்து விடுவதும், உறுதி ஏற்பட்ட பின்பு தவறுதலைத் திருத்திக் கொள்ள முயற்சிப்பதும், அனுபவ ஞானமில்லாத போது கட்டுப்பட்டு விடுவதும், அனுபவம் ஏற்பட்ட பிறகு விடுதலை செய்து கொள்ளுவதும் இயற்கையேயல்லவா?

உதாரணமாக ஒரு வாலிபன் ஏமாந்து ஓரு தாசியிடம் காதல் கொண்டு சொத்துக்களையெல்லாம் கொடுத்து விடுவதைப் பார்க்கின்றோம். அந்த வாலிபனுக்கு அந்தத் தாசியிடம் ஏற்பட்டது காதல் என்பதா? அல்லது காமம் என்பதா? அதே தாசி சில சமயத்தில் தனக்குத் தாசித் தொழில் பிடிக்காமல் இந்த வாலிபனிடமே நிரந்தரமாயிருந்து காலத்தைக் கழிக்கலாம் என்று கருதி விடுவதைப் பார்க்கின்றோம். ஆகவே இந்தத் தாசி கொண்டது காதலா? அல்லது வாழ்க்கைக்கு ஒரு செளகரியமான வழியா? இதை வாலிபன் அறியாமல் நேசத்தை வளர்த்துக் கொண்டே வந்தால் இது ஒத்த காதல் ஆகிவிடுமா? இப்படியெல்லாம் பார்த்தால் காதல் என்பது ஆசை, காமம், நேசம், மோகம், நட்பு என்பவைகளை விடச் சிறிது கூடச் சிறந்தது அல்லவென்பது விளங்கிவிடும்.

அதற்கு ஏதேதோ கற்பனைகளைக் கற்பித்து ஆண் பெண்களுக்குள் புகுத்திவிட்டதால் ஆண் பெண்களும் தங்கள் உண்மையான காதலர்கள் என்று காட்டிக்கொள்ள வேண்மென்று கருதி எப்படிப் பக்திவான் என்றால் இப்படி இப்படி எல்லாமிருப்பான் என்று சொல்லப்பட்டதால் அநேகர் தங்களைப் பக்திவான்கள் என்று பிறர் சொல்ல வேண்டுமென்று கருதிப் பூச்சுப் போடுவதும் பட்டை நாமம் போடுவதும் சதா கோவிலுக்குப் போவதும் பாட்டுக்கள் பாடி அழுவதும் வாயில் சிவ சிவ என்று சொல்லிக்கொண்டிருப்பதுமான காரியங்களைச் செய்து பக்திமான்களாகக் காட்டிக் கொள்ளுகின்றார்களோ அதுபோலும், எப்படிக் குழந்தைகள் துங்குவது போல் வேஷம் போட்டுக் கண்களை மூடிக்கொண்டிருந்தால் பெரியவர்கள் குழந்தைகளின் தூக்கத்தைப் பரிசோதிப்பதற்காக 'தூங்கினால் கால் ஆடுமே' என்று சொன்னால் அந்தக் குழந்தை தன்னைத் தூங்குவதாக நினைக்க வேண்டுமென்று கருதிக் காலைச் சிறிது ஆட்டுமோ அதுபோலும், எப்படிப் பெண்கள் இப்படி இப்படி இருப்பது தான் கற்பு என்றால் பெண்கள் அது போலவெல்லாம் நடப்பது போல் நடப்பதாய் காட்டித் தங்களைக் கற்புள்ளவர்கள் என்று காட்டிக் கொள்ளுகின்றார்களோ அதுபோலும், உண்மையான காதலர்களானால் இப்படியல்லவா இருப்பார்கள் என்று சொல்லி விட்டால் அல்லது அதற்கு இலக்கணம் கற்பித்துவிட்டால் அது போலவே நடந்து காதலர்கள் என்பவர்களும் தங்கள் காதலைக் காட்டிக் கொள்ளுகிறார்கள். இதற்காகவே அவர்கள் இல்லாத வேஷத்தையெல்லாம் போடுகிறார்கள். அதை விவரிப்பது என்றால் மிகவும் பெருகிவிடும்....

ஆகவே ஆசையைவிட, அன்பைவிட, நட்பைவிட காதல் என்பதாக வேறு ஒன்று இல்லை என்றும் அவ்வன்பு, ஆசை, நட்பு ஆகியவைகள் கூட மக்களுக்கு அ.றிணைப் பொருள்கள் இடத்திலும் மற்ற உயர்திணைப் பொருள்களிடத்திலும் ஏற்படுவதுபோல் தானே ஒழிய வேறில்லையென்றும் அதுவும் ஒருவருக்கொருவர் அறிந்து கொள்வதிலிருந்து, நடவடிக்கையிலிருந்து, யோக்கியதையில் இருந்து, மனப்பான்மையில் இருந்து, தேவையில் இருந்து, ஆசையில் இருந்து உண்டாவதென்றும் அவ்வறிவும் நடவடிக்கையும் யோக்கியதையும் மனப்பான்மையும் தேவையும் ஆசையும் மாறக் கூடியதென்றும் அப்படி மாறும் போது அன்பும் நட்பும் மாற வேண்டியது தான் என்றும், மாறக் கூடியது தான் என்றும் நாம் கருதுகின்றோம்.

ஆகவே, இதிலிருந்து நாம் பொருளாகக் கொண்ட காதல் கூடாதென்றோ அப்படிப்பட்டதில்லை என்றோ சொல்ல வரவில்லை. ஆனால் அன்பும் ஆசையும் நட்பும் மற்றும் எதுவானாலும் மன இன்பத்திற்கும் திருப்திக்குமேயொழிய மனதிற்குத் திருப்தியும் இன்பமும் இல்லாமல் அன்பும் ஆசையும் நட்பும் இருப்பதாய் காட்டுவதற்காக அல்ல என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவே இதை எழுதுகின்றோம். இதுவும் ஏன் எழுதவேண்டியதாயிற்று என்றால் மற்றவர்கள் திருப்தியிலும் சந்தோஷத்திலும் நுழைந்து கொண்டு தொட்டதிற்கெல்லாம் 'இது காதலல்ல', 'அது காதலுக்கு விரோதம்', 'அது காம இச்சை', 'இது மிருக இச்சை', 'இது விபச்சாரம்' என்பது போன்ற அதிகப் பிரசங்கித்தனமான வார்த்தைகளை ஒரு விதப் பொறுப்புமில்லாதவர்கள் எல்லாம் கூறுவதால் அப்படிப் பட்டவர்கள் கூற்றையும் கூறும் காதலையும் சற்றுப் பார்த்துவிடலாம் என்றே இதைப் பற்றி எழுதலானோம்.

(18.01.1931'குடிஅரசு' இதழில் பெரியார் எழுதிய தலையங்கம்.)

Wednesday, June 21, 2006

வெள்ளாள ஜனநாயகம் - சுகன்

தூ! நீங்கள் மனிசரே இல்லையா?
தூ! உங்களுக்கு வெட்கமேயில்லையா?
தூ! உங்களுக்குச் சுரணையேயில்லையா?

மூகத்தளத்திலும் இணையத்தளத்திலும் பத்திரிகை - ஊடக வெளிகளிலும் இந்தநாள் வரை கேவலப்படுத்தப்படும் சமூகமாக பஞ்சமர், இழிசனர், தாழ்த்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர் என நானாவித பழிப்புக்கும் விளிப்புக்கும் சிரிப்புக்கும் உள்ளாகின்றது எமது தலித் சமூகம்.

குறிப்பாக யாழ் இந்து உயர் வேளாள அரசியற் தொடர்ச்சி அங்கு இங்கு என இல்லாமல் எங்கும் நீக்கமற நிறைந்து வல்லாட்சி அதிகாரம் பண்ணிக்கொண்டிருக்கிறது. இதிற் கருத்துச் சுதந்திரம் மாற்றுக் கருத்து என்ற பசப்புரைகள் வேறு!

சாதி -மத பேதமற்ற சமூகத்திற்காக போராடப் போவதாகவும் உலகத்தை உய்விக்கப் போவதாகவும் உத்தாரம் கொண்டு வருகின்ற பிரகடனங்கள் எல்லாம் கடைசியில் 'எளிய சாதியள்' என்று கேவலப்படுத்தி வெளியேற்றுவதைத் தவிர தலித் சமூகத்திற்கு வேறெதையும் தந்ததில்லை. ஒரு புறத்தில் சமூகத்தளத்தில் தேசிய நாளிதழ்களான தினக்குரல், வீரகேசரி, உதயன்களில் பச்சை பச்சையாகவே சாதித் திமிரோடு பிரகடனப்படுத்துகிற மேற்சாதித் தமிழ் விளம்பரங்கள். இன்னொரு புறத்தில் அரசியற் தளங்களில் தினக்குரல் யாழ் விசேட பதிப்பில்(16.02.2003) யாழ் நகர பிதா செல்லன் கந்தையனை பச்சையாகவே சாதி சொல்லி கீறப்பட்ட கேலிச்சித்திரம்.

இப்போது தேனி இணையத்தளத்தில் தேசியம் பற்றித் தேசியத் தலைவர் திகில் பேட்டி என்ற தலைப்பில் சாதி சொல்லி இதைவிடக் கேவலப்படுத்த முடியாது என்றவாறு ஒரு சாதிய வக்கிரமான கற்பனைப் பேட்டி வெளியாகியுள்ளது.

பேட்டி காண்பதாகப் போனவர், பேட்டி காண்பதாகப் போன பாத்திரம் தனது சாதி வெறியைக் கக்கியதைத் தவிர வேறெதையும் தந்துவிடவில்லை. பேட்டி காணப் போன புலிக்குறவனை உருவாக்கிய தேனீ நிருபர் யாழ் இந்து வேளாள சாதித் திமிர் பிடித்த படித்த குரங்கென்று தெரிகிறது. அவரது 'கற்பனைப்' பேட்டியில் குழந்தையன் என்ற தலித் பாதையில் புலிக்குறவனைக் குறுக்கிடுகிறார். புலிக்குறவன் அவரைப் பார்க்கிறார்."எளிய சாதியளைப் பார்த்தால் தீட்டு, தொட்டால் தீட்டு" என்ற இந்து உயர் வெள்ளாளச் சாதித்திமிர் உடனே அவனுக்கு வந்துவிடுகிறது.

"மூதேவியின் முகத்தில முழிக்கக் கூடாது",

"அம்பட்டன் குறுக்க வந்திட்டான் இனிப் போற விசயம் அவ்வளவு தான்" என்றவாறு ஒரு சமூகத்தைக் கேவலப்படுத்திவிட்டு 'அவர்' பேட்டி காணச் செல்கிறார். குழந்தையன் அவன் என்றும் புலிக்குறவன் அவர் என்றும் கேவலம் - அவமரியாதை தலித்திற்கும் மரியாதை வெள்ளாளனிற்கும் பிரக்ஞாபூர்வமாகத் தேனீயால் தரப்படுகிறது.

தொடர்ந்து "புலிக்குறவனின் தந்தையின் காலத்திலிருந்து குழந்தையன் அவர்களுக்குத் தலை மயிர் வெட்டி வந்தவன், ஆனால் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக அவனது பிள்ளைகள் இருவர் புலிகளில் சேர்ந்ததைத் தொடர்ந்து குழந்தையன் தனது பரம்பரைத் தொழிலைக் கைவிட்டு விட்டான்...." இப்படியாகப் போகிறது கதை. இதைப் படிக்கும் தலித் வாசகர்களுக்கு பேட்டிக் கட்டுரையின் நோக்கம் என்னவென்று புலப்படும். (சுப.தமிழ்ச்செல்வன் என்ன சாதியென்று இந்தச் சாதியச் சமூகம் இதுவரையில் கண்டு பிடிக்காமலா விட்டது?)

1. அம்பட்டனும் கரையானும் இப்போது அரசியல் அதிகாரம் செலுத்தி வாறாங்கள்.

2.அவங்கள் படிக்காதவங்கள்.

3.எப்போதுமே படித்த வெள்ளாளர்களுக்குத் தான் எதையும் சரியாகச் செய்ய முடியும் அரசியல் அதிகாரம் மீண்டும் படித்த வெள்ளாளர்களுக்குத் தான் கிடைக்க வேண்டும்.

என்றவாறு முடிவுரை கூறி முடிக்காத குறையாக மீண்டும் இரண்டாம் பாகத்திலும் தொடரும் என அச்சுறுத்திவிட்டுப் போகிறது தேனீ இணையத்தளம்.

இப்படியான கீழ்த்தரமான கேவலமான மனச் சிதைவுகளையும் வக்கிரங்களையும் சாதி வெறியர்களையும் கொண்டது தானா ஜனநாயகத்துக்கும் மனித உரிமைகளுக்குமான இணையத்தளம்?அரசியல் அதிகாரம் கிடைத்தால் தலித்துக்களின் நிலை எப்படி அமையுமென இக் கற்பனைக் கட்டுரைப் பேட்டி மறைமுகமாக எங்களை எச்சரித்துவிட்டுப் போயிருக்கிறது.

மாற்றுத் தளங்களில் தொழிற்படும் தலித் தோழர்களே எச்சரிக்கை! இதையொட்டிய உங்கள் கண்டனங்களை உங்களுக்குச் சாத்தியமான அனைத்து வழிகளிலும் -மெளனமாக மனம் புழுங்காமல்- தேனீக்குத் தெரிவியுங்கள். தலித் சமூகத்தின் மீதான இத்தகைய அவமதிப்புகளிற்காகவும் இழித்துரைப்புகளிற்காகவும் தேனீ இணையத் தளம் பகிரங்க மன்னிப்பைக் கோரவும் குறித்த சாதி வெறிக் கட்டுரையை மீளப் பெறவும் தேனீயை நிர்ப்பந்தியுங்கள்!

20.06.2006

Thursday, June 15, 2006

பொத்தக விமர்சனம் - சுகன்



வண்ணான் குளத்தைத் துறந்து...

_________________________________________

______________தொலைவில்

________________________________ கவிதைகள்

________________________________வாசுதேன்

_____வெளியீடு:காலச்சுவடு-நாகர்கோவில்-ந்தியா



சிறிது குற்றவுணர்ச்சியோடு அன்றேல் குற்றவுணர்ச்சி கொள்வதான பாவனையோடும் மாய்மாலத்தோடும் புகலிடத்தின் இலக்கிய வெளியில் அலைந்துழலும் வெள்ளாள வெள்ளைப் பிரதிகளிற்கு நம்மிடையே பஞ்சமில்லை.
'புகலிடத்தின் புலவர் பெருமக்களிடம் விஞ்சி நிற்பது கவிமனமா? சாதிமனமா?' என ஓர் வழக்காடு மன்றமோ பட்டிமன்றமோ ஏற்பின் வழக்குரைஞர்களும் நீதிமான்களும் வெள்ளாளர்களாயிருக்குமிடத்து நியாயத் தீர்ப்பிற்குமிடமில்லை.

நீங்கள் புலம் பெயர்ந்து வந்து இருபது, முப்பது வருடமானாலென்ன முப்பது, நாற்பது வருடமானாலெனன உங்கள் நினைவடுக்கில் வண்ணான் குளம், பறையனாலங்குளம், கரும்பனை,

சீவற்தொழில், கள்ளு, கோயிற்தேர், பள்ளிக்கூடம், கொள்ளிக்குடம், முதலாவது இரண்டாவது மூன்றாவது துளைகள், கொத்துவதற்குக் குடிமகன் இவற்றை அடுக்கி இடுக்கி விரித்து விருத்தி செய்து கவனமாகப் பெயர்த்து வந்து உங்கள் கவிதைப் பக்கத்தில் விரவிட வேண்டும். மண்மணமும் 'CHANEL 5' சென்ற் மணமும் உங்கள் கவிதைக்கு வந்து விடும். ஒரு புலம்பெயர்ந்தோர் கவிதையைப் படைத்திடலாம்.

'மன்னவனும் நீயோ! வளநாடும் உன்னதோ?'

'பேயரசுசெய்தாற் பிணந்தின்னுஞ் சாத்திரங்கள்'

போன்ற கவி அறச்சீற்றமெல்லாம் கவனமாகத் தவிர்க்கப்பட்டுத் தொற்று நீக்கப்பட்டு இனியவை இருபது கவிதைகளைத் தொகுத்தீர்களெனில் இரத்தமும் சதையும் சொட்டச் சொட்ட அச்சு அசலான புலம் பெயர்ந்தோர் இலக்கியம் இதோ சுடச் சுடத் தயார்.

போர் என்றால் என்ன? சமாதானம் என்றால் என்ன? இலக்கியம் என்றால் என்ன? - கலிங்கத்துப்பரணி செயங்கொண்டார் மன்னிக்க, டால்ஸ்டாயும் மன்னிக்க!- 'போர் இலக்கியம்' என்றால் என்ன? புலம் பெயர்வு என்றால் என்ன? புகலிடம் என்றால் என்ன? இப்படியான என்ன என்ன என்னவைகள் எதுவும் குறித்து நீங்கள் கேள்வியெழுப்பக் கூடாது! ஆமெனில், போர் இலக்கியத்தின் தொடர்ச்சியாக நீங்கள் ஏந்தப்படுவீர்கள்... 'இம்போட்டன்' நீங்கள் வண்ணான் குளத்தையும் கொள்ளிக்குடத்தையும் கட்டையில் போகும் வரை மறக்கக் கூடாது. இந்தப் பாட்டையிலே இறுதியாக வந்து சேர்ந்திருக்கிறது - தொலைவில்- வாசுதேவன் கவிதைகள்- கா.சு வெளியீடு.

நீங்கள் வண்ணானாக இருந்தால் உங்களுக்கு 'வண்ணான் குளம்' என்று பேசவும் எழுதவும் முடியுமா? வருமா? என்று கவிஞோரைப் பார்த்துக் கேட்கக்கூடாது. வண்ணானாக இருந்தாற் கேட்க வேண்டும் போல தோன்றுந்தான், ஆனால் எல்லோரும் தமிழர், இங்கு எல்லோரும் அகதிகள், கறுப்பர் என்று உங்கள் வாய் அடைக்கப்பட்டிருக்கும்.


ஒரு குளம் வண்ணானுக்கு மட்டுமானதா? எல்லோருக்குமானது தானே என்றோ, வண்ணானிற்கு மட்டுமானதாக ஒதுக்கிவைத்திருப்பதைப் பற்றியோ, சமூகத்தின் கூட்டுச் சாதி மனம் தன்னை மேல் நிறுத்திக் கொள்வதைப் பற்றியோ, ஏன் தலைமுறையாக அத் தொழிலைச் செய்ய வேண்டுமென்றோ நீங்கள் கேட்டிருக்கமாட்டீர்கள்! கோப்பை கழுவ, கக்கூசு கழுவ இங்கு விதிக்கப்பட்டோமே என விதிவிதிர்த்துப் போவீர்கள். அவற்றை இலக்கியமாக்கி எழுதவும் செய்வீர்கள்.

என் குலமென்ன? கோத்திரமென்ன? ஊர்ப் பெருமையென்ன? இப்படியாக வந்து விழுந்ததே என்று ஊர் அடையாளம் பேசுவீர்கள். ஊரைக் கவனமாகக் குறித்தும் கொள்வீர்கள். நீட்சே (பக்: 69) ஹெர்மன் ஹெஸ்ஸ (பக்:62) டியுபூசி (பக்:36) ஹெமிங்வே (பக்: 32) இவர்களிற்கு மேலும் பிரெஞ்சு இலக்கியப் பரிச்சயமும் தத்துவப் பரிச்சயமும் தர்க்கமும் இருக்கும் உங்களுக்கு. ஆனால் வண்ணான் குளதையும் (பக் :59) கொள்ளிக் குடத்தையும் (பக் :23 ) உங்கள் சாதிய நினைவடுக்கிலிருந்து அகற்றக்கூடாது. இலக்கிய வெளியில் வாசிப்பிற்காக வரும் தலித்துக்களை மிரட்டுவதற்க்கும் விரட்டுவதற்கும் இரண்டு சொற்கள் போதும்... வேண்டாம் ஒரு சொல்லே போதும்.அது வண்ணான் குளம்.

15.06.2006

Monday, June 12, 2006

TBCக்குப் பல்லிளிக்கும் புலியெதிர்ப்பு

TBCக்குப் பல்லிளிக்கும் புலியெதிர்ப்பு

ஷோபாசக்தி

இன்று ஒருசில ஈழத்தமிழர்களின், இணையக் கருத்தாடல்களிலும் கட்டுரைகளிலும் அரசியற் சேறடிப்புக்களிலும் படுபோக்கிலித்தனமான இரு முறைமைகள் தொழிற்படுகின்றன. முதலாவதாக அவர்களை ஒரு கறுப்பு வெள்ளைக் கருத்துநிலை அலைக்கழிக்கிறது. விடுதலைப் புலிகள் மேல் ஒருவர் விமர்சனங்களை வைத்தவுடனேயே அவர் எந்தவித ஆதாரங்களுமற்றுத் தேசத்துரோகி, அரச உளவாளி எனத் தீர்ப்பிடப்படுகிறார். அவர் குறித்த அவதூறுகள் nitharsanam.comமிலும் eddappar.comமிலும் வெளியிடப்படுகின்றன. அதேபோல விடுதலைப் புலிகளை எதிர்கொள்வதற்காக எந்தப் பேயுடனும் கூட்டுச் சேர்வதிற்குத் தயாராயிருக்கும் EPDP, PLOTE, ENDLF அவர்களின் வானொலி TBC, கோயில் மூனாக்களின் 'தமிழ் ஜனநாயகக் காங்கிரஸ்' போன்றவற்றின் மீது ஒருவர் விமர்சனம் வைத்தால் உடனே அவர் புலி, பழப்புலி, அதிகாரவிரும்பி என்று அவதூறு செய்யப்படுகிறார். இந்த ஆதாரங்களற்ற ஈனத்தனமான அவதூறுகளைச் சூட்டோடு சூடாகத் thenee.comமிலும் neruppu.com மிலும் வெளியிடுகிறார்கள். புலிகள் x புலியெதிர்ப்பாளர்கள் என்ற இருமை எதிர்வுகளுக்கு, அதன் வழியே கட்டமைக்கப்பட்டிருக்கும் கறுப்பு வெள்ளை அரசியலுக்கு, அப்பாலும் வெவ்வேறு அரசியற் போக்குகளும் நிலவுவதற்கான சாத்தியங்களை இருசாராரருமே ஒப்ப மறுக்கிறார்கள். அரசியற் பன்மைத்துவத்தையும் மற்றமைகளையும் நிராகரிக்கும் இந்தக் கறுப்பு வெள்ளை அரசியலியிலிருந்து தான் சனநாயக மறுப்பும் பாஸிசமும் முகிழ்க்கின்றன.

இதை விளக்கினால், நாளை ஈழத்துத் தலித் மக்களிடம் தலித் அரசியல்-அதன் சரியான அர்த்தத்தில்- வேர்விடத் தொடங்கும் போது தலித் அரசியலாளர்கள் இந்தக் கறுப்பு வெள்ளை அரசியலின் எந்தவொரு பக்கத்திலும் நிற்க மாட்டார்கள். அவர்கள் புலிகள் - புலியெதிர்ப்பாளர்கள் என்ற இரு தரப்பையும் நிராகரித்து விட்டுத் தமது சமூக விடுதலைக்கான தமது அரசியலைத் தனித்துவமான மூன்றாவது தரப்பாகவே கட்டியெழுப்புவார்கள். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வெள்ளை ஆட்சியாளர்கள் பக்கமோ இந்தியக் காங்கிரஸ் பக்கமோ சாய்ந்துவிடாமல் தலித் மக்களின் அரசியலைத் தனித்துவமாக உயர்த்திப் பிடித்த அண்ணல் அம்பேத்கரின் அரசியற் செல்நெறியே எங்களுக்கும் வரலாற்று முன்னுதாரணமாகத் திகழும். ஏனெனில் தேசிய விடுதலையைக் காட்டிலும் சாதிய விடுதலையே தலித் மக்களுக்கு முதன்மையானதாகவிருக்கிறது. இதைப் போலவே வர்க்க ஒடுக்குமுறைக்கு எதிரானவர்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள், மற்றும் சமூகநீதிப் போராளிகள் தமது தனித்துவமான விடுதலை அரசிலைப் பேசுவார்களேயன்றி இந்தக் கறுப்பு வெள்ளைச் சுழலுக்குள் அமிழ்ந்து 'கன்னை' பிரித்து நிற்கமாட்டார்கள்.

இரண்டு போக்கிலித்தனமான முறைமைகள் என்றேன். இரண்டாவதாக, முன்பெல்லாம் சிறுபத்திரிகைச் சூழலில் மார்க்ஸியத்தையும், சமூகநீதிப் போராட்டங்களையும், இடதுசாரிக் கருத்துநிலையையும் எதிர்த்தவர்கள் தனிமனித சுதந்திரம், திறமை, கலை, உள்ளொளி, தரிசனம் என்று மென்று முழுங்கி நசுக்கி நசுக்கி முதலாளிய அமைப்பு முறைமையையும் சமூக ஏற்றத்தாழ்வுகளையும் நியாயப்படுத்திக் கொண்டிருந்தார்கள். -இந்தப் போக்கிற்கு Top உதாரணம் சுந்தர ராமசாமி- ஆனால் இப்போதோ கொஞ்சம் கூட வெட்கமேயில்லாமல் இந்தக் கொழுப்புப் பிடித்த எழுத்தாளர்கள் 'தாங்கள் சமூகநீதியின் எதிரிகள்தான், ஏகாதிபத்தியங்களின் ஆதரவாளர்கள்தான்' என்று இணையங்களில் மார்பை நிமிர்த்திச் சொல்கிறாக்கள்.


மேற்குறித்த இரு முறைமைகளுக்கும் மிகச் சிறப்பான ஒரு எடுத்துக்காட்டாகத் தோழர் அசுரா தேனீ இணையத்தளத்தில் TBCக்கு முகம் சுழிக்கும் புலி எதிர்ப்பு என்ற கட்டுரையை எழுதியுள்ளார்.அசுராவின் கட்டுரை அலம்பல் தன்மையுடையது. இத்தன்மையை நமது வலைப்பதிவாளர்களுடைய மொழியில் ஜல்லியடிப்பது என்பார்கள். அதிகாரம், யாழ் மையவாதம், ஏகாதிபத்தியம், இருபது ஈரோ எனப் போகிறபோக்கில் சொற்களை விரயஞ் செய்து எப்படியாகத் தருக்க வறுமையுடன் அக் கட்டுரை அசுராவால் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் கீழே பரிசீலிக்கலாம்:

TBC வானொலியின் தேவையையும் சேவையையும் வலியுறுத்துவதற்காகவே தான் இக் கட்டுரையை எழுதியதாக அசுரா சொல்கிறார்.

புகலிடத்தில், TBC வானொலி பெருமளவில் அரசியல், ஆயுத அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட போதும் அச்சுறுத்தல்களுக்குப் பணியாமல் எட்டு வருடங்களாகத் தொடர்ந்து தனது ஒலிபரப்பை நடத்தி வருகிறது. இந்த வகையில் விடுதலைப் புலிகளின் பாஸிச நடவடிக்கைகளை உடனுக்குடன் TBC வானொலி பரந்துபட்ட நேயர்களின் கவனத்திற்கு இடைவிடாமல் எடுத்துச் செல்கிறது. புலிகளின் ஊடகங்கள் எப்படியான இழிந்த ஊடக அரசியல் நடத்துகிறார்களோ அதே 'லெவலு'க்குத் தாங்களும் கீழிறங்கி ஊடக அரசியல் நடத்துவதில் TBC வானொலியாளர்கள் வலு சுழியர்கள். புலிகளுக்கும் புலி ரசிகர்களுக்கும் வெகுசன ஊடகப் பரப்பில் TBC இடைவிடாத தலையிடியாகவே இருந்து வருகிறது. TBCயைப் புலிகள் தமது வழமையான பாணியிலேயே எதிர்கொண்டு கடந்த 08.06.2006 இரவு ஈனத்தனமாக TBC வானொலி நிலையத்தைத் தாக்கினார்கள். நமக்கு TBCவானொலியின் வலதுசாரி அரசியலில் கடுமையான விமர்சனங்கள் உள்ளன. ஓர் ஊடகம் சொல்லும் கருத்துக்களில் நமக்கு உடன்பாடு இல்லாமலிருக்கலாம். ஆனால் அக்கருத்துக்களைச் சொல்வதற்கு அந்த ஊடகத்திற்கிருக்கும் உரிமைக்காக நாம் பகிரங்கமாகக் குரல் கொடுக்க எப்போதும் தயாராகவேயுள்ளோம். இன்றிருக்கும் கருத்துரிமை மறுப்புச் சூழலில் TBCபோல, தேனீ இணையத்தளம் போல இன்னும் பல ஊடகங்கள் தோன்றவேண்டும் என்கிறோம். அதேவேளையில் அந்த ஊடகங்களின் அரசியலை விமர்சிக்க எங்களுக்கும் உரிமை உண்டென்கிறோம். அவ்வாறு விமர்சிப்பவர்களை எதிரிகளாய்க் கட்டமைப்பதைத்தான், அவதூறுகளால் எதிர்கொள்வதைத்தான் கறுப்பு வெள்ளை அரசியலென்கிறோம்.

TBC என்ற ஊடகத்தின் இருப்பை அசுரா வலியுறுத்துவது நியாயமானது. ஆனால் அசுரா எப்படியாவது தவண்டையடித்து TBCயை விமர்சனங்களிலிருந்து காப்பாற்ற முயல்வது கொடுமையானது. TBC வானொலியின் அரசியல் ஆய்வாளர்களில் நிறையப்பேர் ஏகாதிபத்தியக் கருத்துநிலை விசுவாசிகள் என்ற விமர்சனத்திலிருந்து TBCயைக் 'கிளியர்' பண்ணிவிடுவதற்காக ஏகாதிபத்தியக் கருத்துநிலையின் பாதுகாவலானாகவே அசுரா மாறிவிடுகிறார்.

//ஏகாதிபத்தியம் சமூகநீதி மக்கள் சக்தி எல்லாமே வெற்று அரசியல் வார்த்தைகளே// என்றெழுதுகிறார் அசுரா. இன்று ஈராக்கில் வெற்று ஏகாதிபத்தியம் போட்டுக்கொண்டிருப்பது வெறும் சத்த வெடிகளையா? என்று அசுராவைக் கேட்கிறேன். ஏகாதிபத்தியங்களின் நலனுக்காக ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் எண்ணுக்கணக்கற்ற மக்கள் கொல்லப்படுவது அசுராவுக்கு எண்ணை யுத்தமாகத் தெரிகிறதா? அல்லது வெற்று யுத்தமாகத் தெரிகிறதா?

சமூகநீதியும் அசுராவுக்கு வெறும் அரசியல் வார்த்தைதானாம். நமது சாதியப் படிநிலைச் சமூகத்தில் நிலவும் சமூக ஏற்றத்தாழ்வுகளை ஓரளவாவது சரிசெய்வதற்காக ஒடுக்கப்பட்ட மக்கள் போராடிப்பெற்ற உரிமைகளையே இந்தியச் சூழலில் சமூகநீதி என்பார்கள். ஈழத்தில் தேனீர்க் கடைகளில் சமவுரிமைக்காக நடத்தப்பட்ட போராட்டங்களையும், ஆலயத்துள் பிரவேசிக்கும் உரிமைக்காக நடத்தப்பட்ட போராட்டங்களையும் சமூகநீதிப் போராட்டத்திற்கான முன் எத்தனங்களெனக் கொண்டால், தலித் மக்களின் பெருந் தலைவர் எம்.சி.சுப்பிரமணியம் 1972 ல் எழுப்பிய 'தலித்துக்களைத் தனித் தேசிய இனமாக வரையறுக்க வேண்டும்' என்ற கோரிக்கையை உறுதியான சமூகநீதிக் கோரிக்கையெனக் கொள்ளலாம். இடஒதுக்கீடு, தனிவாக்காளர், தொகுதிகள் போன்றவற்றைச் சாதித்த சமூகநீதியும் சமூகநீதியை முழுமைப்படுத்துவதற்காக போராடிக்கொண்டிருப்பவர்களும் அசுராவுக்கு வெற்று வார்த்தைகளா? காலம் முழுவதும் சமூகநீதிக்காகப் போராடிக்கொண்டிருந்த யோவேல்போலும், எம்.சி. சுப்பிரமணியமும், எஸ்.ரி.என். நாகரத்தினமும் அம்பேத்கரும், பெரியாரும் வெற்று அரசியல்வாதிகளா?

மக்கள் சக்தியும் வெறும் அரசியல் வார்த்தைதான் என்கிறார் அசுரா. மக்கள்சக்தி வெற்றுசக்தியா அல்லது மகாசக்தியா என்பதை அசுராவுக்கு நான் சொல்லத் தேவையில்லை. அதை ருஷ்யாவில் ஜார் மன்னனும், சீனாவில் சியாங்கே ஷேய்க்கும், செஞ்சேனையிடம் ஹிட்லரும், வியட்நாமில் பிரஞ்சு ஏகாதிபத்தியமும் அமெரிக்க ஏகாதிபத்தியமும், கியூபாவில் பாட்டிஸ்ராவும் வாங்கிய அடிகள் சொல்லும். இப்போது ஈராக்கில் அமெரிக்கப் படைகள் வாங்கிக்கொண்டிருக்கும் அடிகள் சொல்லும்.

//ஏகாதிபத்தியம் சமூகநீதி மக்கள் சக்தி என்று பேசுபவர்களின் ஆழ்மனதில் உறைந்திருப்பது அதிகாரம் சார்ந்த விருப்பே// என்கிறார் அசுரா. இதில் ஆழ்மனம், மேல்மனம் என்று ஒழித்து மறைக்க என்னயிருக்கிறது? இதுவரை உழைப்புச் சுரண்டலாளர்களும் கொலனிக் கொள்ளைக்காரர்களும் ஆதிக்க சாதியினரும் ஆண்டது போதும்! இனி, அரசியலதிகாரத்தைத் தலித்துக்களும் உழைக்கும் வர்க்கத்தினரும் ஒடுக்கப்பட்ட மக்களும் கைப்பற்ற வேண்டும்! என்று பகிரங்கமாகத் தானே இடதுசாரிகளும் நக்ஸல்பாரிகளும் தலித் அரசியலாளர்களும் குரல் எழுப்பி வருகிறார்கள்! இதிலென்ன தவறைக் கண்டார் அசுரா? இக் குரல்களை காலங்காலமாக நொறுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மனிதர்களின் உரிமைக் குரலாகப் பார்க்காமல், வெறும் அதிகார விருப்பிலிருந்து எழும் குரல்கள் எனக் கொச்சைப்படுத்துவது அயோக்கியத்தனம் அல்லது முட்டாள்த்தனம். மறுக்கிறாரா அசுரா?

//எமக்கு யாழ்ப்பாணியத்தை விடச் சிங்களப் பிரதேசங்களும் அய்ரோப்பிய நாடுகளும் புனித தேசங்கள் தான்// என்கிறார் அசுரா. இதுவொரு நல்ல கொள்கை. பல நுர்ற்றாண்டுகளுக்கு முன்னமே நமது கணியன் பூங்குன்றனாரும் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்றார். நமக்கு அய்ரோப்பியர்கள் கேளிர் தான். ஆனால் நாம் அய்ரோப்பியர்களுக்கு கேளிரா? என்பதுதான் பிரச்சினையே. மூன்றாம் உலக நாடுகளில் வெள்ளையர்கள் கொலனி பிடித்துக் கொள்ளையடிக்கும் வரை கொள்ளையடித்து, ஒட்ட உறிஞ்சிவிட்டு வெளியேறியபோது உருவாக்கி வைத்துவிட்டு வந்த தேசிய இனச் சிக்கல்களாலும், இனக்குழு மோதல்களாலும், இவர்கள் தங்கள் ஆயுத வணிகத்திற்காக மூன்றாம் உலக நாடுகளில் War Lordடுகளை உருவாக்கிவிட்டதாலும் போர்களால் நாடிழந்து வீடிழந்து ஏதிலிகளாகத் தஞ்சம்கோரி ஓடிவரும் மூன்றாம் உலக மக்களை அய்ரோப்பிய அரசுகள் எப்படி வரவேற்கிறார்கள்? இவர்கள் தமது எல்லைகளில் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று வரவேற்ப்பு வளைவுகளையா வைத்திருக்கிறார்கள்? அங்கே கொழுத்த வேட்டை நாய்களையல்லவா வைத்திருக்கிறார்கள்!

அய்ரோப்பாவில் அகதிகளை வரவேற்பதற்கான சட்டமான ஜெனிவா 25 July 1952 அகதிச் சட்டம் நிறைவேற்றப்படும் போது அய்ரோப்பாவின் சமூக பொருளியல் நிலைமைகள் வேறு மாதிரியிருந்தன. அது அய்ரோப்பிய முதலாளியத்தின் செழுமைக் காலமாயிருந்தது. அய்ரோப்பிய மூலதனத்துக்குப் பெருமளவிலான கூலிகள் தேவைப்பட்ட காலமது. தவிரவும் நடந்து முடிந்திருந்த இரண்டாம் உலகப்போரின் வடுவும், அப்போதைய சோவியத் யூனியனிலிருந்தும் கிழக்கு அய்ரோப்பிய நாடுகளிலிருந்தும் வெளியேறிய முதலாளியச் சிந்தனையாளர்களிற்கும் கலைஞர்களிற்கும் புகலிடம் கொடுத்து அவர்கள் மூலம் கொம்யூனிஸ எதிர்ப்பைப் பரப்புரை செய்வதும் ஜெனிவா அகதிச் சட்டத்தின் மற்றைய காரணங்கள்.

இந்த மூன்று காராணிகளும் இன்றைய அய்ரோப்பிய சமூக, பொருளியல் சூழல்களில் பெருமளவு அர்த்தமற்றுப் போய்விட்டன. 1980களில் தொழிற்துறையில் நிகழந்த தகவல் தொழில் நுட்பப் புரட்சியுடன் உலக முதலாளியம் தனது வரலாற்று நெருக்கடியான அபரித உற்பத்தி நெருக்கடிக்குள் மறுபடியும் ஒருமுறை சிக்கிக்கொண்டது. பல்கிப் பெருகிய உற்பத்தி சக்திகளால் முதலாளிய சந்தையில் கடும் போட்டிகள் உருவானதால் மலிவு விலையில் உற்பத்திப் பொருட்களை வழங்கும் நிறுவனங்களே சந்தைப்போட்டியில் வெற்றியடையும் நிலையுருவாகியது. இந்தச் சிக்கலிலிருந்து தப்பிப்பதற்காக மலிவான கூலித்தொழிலாளர்கள் நிறைந்திருக்கும், தொழிற் சங்கங்கள் வலுவற்றிருக்கும் மூன்றாம் உலக நாடுகளை நோக்கி உலக முதலாளியம் மூலதனங்களையும் தொழிற்சாலைகளையும் நகர்த்தியது. Nike இந்தோனேசியாவிலும் Coke இந்தியாவிலும் கொடிகட்டிப் பறக்க மேற்கு நாடுகளில் தொழிலாளர்களுக்கு வேலை பறந்தது. இன்று பிரான்ஸில் வேலையில்லாதோரின் தொகை 12 விழுக்காடாயிருக்க, அய்ரோப்பிய யூனியனில் வேலையில்லாத இளைஞர்கள் தொகையின் சராசரி 15 விழுக்காடாயிருக்க அய்ரோப்பிய அரசுகள் தமது கதவுகளை அகதிகளுக்கு இறுக மூடிக்கொண்டன. இப்போது அய்ரோப்பிய முதலாளியத்திற்கு மூன்றாம் உலக நாடுகளிலிலிருந்து மூன்றாம் உலக மக்களின் வரிப்பணத்தில் கல்வி கற்று முடித்த விஞஞானிகளும் மருத்துவர்களும் கணனி நிபுணர்களும் தான் தேவையேயொழிய அகதிகள் என்ற சிறப்புப் பெயரில் அழைக்கப்படும் கூலித்தொழிலாளர்கள் தேவையில்லை. இன்று அசுராவின் புனித பூமியான பிரான்ஸில் மட்டும் 300 000 நிராகரிக்கப்பட்ட அகதிகள் Sans Papiers என்ற பரிதாபத்துக்குரிய அடையாளத்தோடு வதிவிட உரிமை, மருத்துவ உதவி, வேலை செய்வதற்கான உரிமை, சமூகநல உதவிகள் எதுவுமற்றுத் திருடர்கள் போல வாழ்ந்து துன்பத்தில் உழன்று கொண்டிருக்கிறார்கள். அரசியல் அகதிகளைப் புதிதாக ஏற்றுக்கொள்ள அய்ரோப்பிய அரசுகள் மறுப்பதற்கு இன்னொரு புனிதக் காரணமும் உள்ளது. அய்ரோப்பாவுக்கு அகதிகளாக வருபவர்களில் பெரும்பாலானோர் முசுலீம்களே. இவர்கள் ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், சூடான், நைஜீரியா, செனகல், மாலி, அல்ஜீரியா, துனிசியா, மெராக்கோ, துருக்கி, பாகிஸ்தான், வங்காளதேசம், மற்றும் கிழக்கு அய்ரோப்பிய நாடுகளிலிருந்து வருகிறார்கள். ஏற்கனவே கூலித்தொழிலாளர்களாக வட ஆபிரிக்காவிலிருந்தும் துருக்கியிலிருந்தும் அழைத்து வரப்பட்டு இரண்டு மூன்று தலைமுறைகளாக அய்ரோப்பியாவிலேயே தங்கிவிட்ட முசுலீம்களோடு புதிதாக வரும் அகதி முசுலீம் சமூகமும் சேரும்போது அய்ரோப்பாவின் இரண்டாவது பெரிய மதமாக இஸ்லாம் மாறிவிட்டது. பிரான்ஸ் போன்ற நாடுகளில் இஸ்லாமியர்கள் குறிப்பிடத்தக்க அரசியல் சக்திகளாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். பொறுக்குமா சிலுவைப் போராளிகளின் வாரிசுகளுக்கு? அவர்கள் மூடிய கதவுகளில் முசுலீம்களின் பேரால் ஒரு பெரிய பூட்டையும் தொங்கவிட்டார்கள். செவ்விந்தியப் பழங்குடிகளைப் பூண்டோடு கொன்றொழித்து ஆசியாவையும் ஆபிரிக்காவையும் கொள்ளையிட்டுக் கட்டியமைக்கப்பட்ட கலைக்கோயில்களும், கலாசாரமும், பண்பாடும், நாகரிகமும், முதலாளிய அரச நெறிகளும், வெள்ளை நீதி நெறிகளும் கொண்ட பூமி அசுராவுக்கு புனித பூமியாக இருக்கலாம். ஆனால் இது எங்களுக்குப் பாவத்தின் விளைநிலம்.

//முசோலினியையும் ஹிட்லரையும் ஸ்டாலினையும் இல்லாமற் செய்த புனிதபூமியிது// என்மிறார் அசுரா. முஸோலினியையும் ஹிட்லரையும் இன்றைய நியோ நாஸிகளையும் லூ பென்னையும் கொலைகாரன் ரொனி ப்ளேரையும் யுத்த வெறியன் புஷ்ஷையும் அபு கிரைப் கொடுஞ்சிறையில் ஈராக்கியப் பெண்களை பாலியல் வதை செய்த சுண்ணி தடித்தவர்களையும் இதே புனிதபூமிதானே உருவாக்கிற்று? என அசுராவை நாம் திருப்பிக் கேட்கலாம். ஹிட்லர் கத்தியின்றி இரத்தமின்றி ஜெர்மனிய தேசியத்தை முழங்கியபடியே பெரும் மக்கள் ஆதரவுடன் தானே பதவிக்கு வந்தான்? என்றும் நாம் அசுராவைக் கேட்கலாம்.

பாஸிஸ்ட் முஸோலினியையும் நாஸி ஹிட்லரையும் ஸ்டாலினையும் ஒரே வரிசையில் வைத்துச் சேறடித்து ஆத்திரமூட்டுகிறார் அசுரா. தோழர் ஜோசப் ஸ்டாலின் மீது த்ரொஸ்கிஸ்டுகளை விடக் கடும் விமர்சனங்கள் வைத்தவர்கள் வேறு யாருமில்லை. ஆனால் அவர்கள் ஸ்டாலினின் 'தனிநாட்டில் சோஸலிசம்', ஸ்டாலின் Third Internatinolலைக் கலைத்தது, மொஸ்கோ சதிவழக்குகள், கலை இலக்கியத்தில் 'ஸ்தானோவியம்' போன்ற ஸ்டாலினின் தத்துவக் கோட்பாடு நிலைகளின் மீதும், நடைமுறைத் தவறுகளின் மீதும் தான் விமர்சனம் வைத்தார்களேயொழிய த்ரொஸ்கியவாதிகள் ஒருபோதும் ஸ்டாலினை பாஸிஸ்டுகளோடும் நாஸிகளோடும் ஒப்பிட்டுப் பேசியதில்லை. த்ரொஸ்கி ஒரு முறை "இப்படியான தவறுகளைச் செய்வாரென்று முன்னமேயே ஸ்டாலினுக்குத் தெரிந்திருந்தால் அவர் ஆட்சிப் பொறுப்பையே ஏற்றிருக்கமாட்டார்" என்றார். த்ரொஸ்கியவாதிகள் ஸ்டாலினை பாஸிஸ்டுகளுடனும் நாஸிகளுடனும் ஒப்பிட்டுப் பேசாததால் அசுராவும் ஒப்பிட்டுப் பேசக்கூடாது என்றில்லை. அவர் பேசலாம். ஆனால் அவர் தன் ஒப்பீட்டைச் சான்றுகள் மூலமும் கருத்துக்கள் மூலமும் நிறுவ வேண்டும். இதற்கு அவர் ஸ்டாலினிசத்தின் தீவிர எதிர்பாளர்களும், மார்க்ஸிய அறிஞர்களுமான லியோன் த்ரொஸ்கி, ஜேம்ஸ். பி. கனன், ஜெரி ஹீலி, நிக் பீம், டேவிட் நோர்த், கீர்த்தி பாலசூரியா, அழகலிங்கம் ஆகியவர்களை விட அதிகமாகப் படிக்கவேண்டியிருக்கும். அதை விடுத்து போகிறபோக்கில் ஒற்றை வரியில் ஒரு மவுஸ் சொடுக்கில் ஹிட்லரும் ஸ்டாலினும் ஒனறுதான் என அசுரா நெளிப்புக் காட்டுவது அரசியல் விவாதமாகாது! நேர்மையாகாது! அறமாகாது!! அசுராவாவது பரவாயில்லை... பன்னாடை ஜெயதேவன் ஒருமுறை TBC வானொலியில் நமது மாபெரும் ஆசான் லெனினையே அராஜகவாதி என்றார். போல்ஷிவிஸம் என்றால் என்ன? சோவியத் என்றால் என்ன? பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் என்றால் என்ன? என்று ஒன்றுந் தெரியாத பயல்களையெல்லாம் அரசியல் ஆய்வாளர்களென மேடையேற்றினால் அவர்கள் இப்படித்தான் நாக்கு வளைப்பார்கள்.

அசுரா, முஸோலினி ஹிட்லர் வீழ்ச்சியுடன் ஸ்டாலினையும் சேர்த்து ஸ்டாலினும் வீழ்ந்தார் எனக் குதூகலிக்கிறார். முஸோலினி தப்பியோடும் போது அவனைப் பிடித்து வீதியோர மரத்தில் தலைகீழாகப் பன்றியைப் போல கட்டித் தொங்கவிட்டுச் சனங்கள் அவனை அடித்தே கொன்றார்கள். சோவியத் யூனியனின் செஞ்சேனை நாஸிப் படையைத் தோற்கடித்து பெர்லினைக் கைப்பற்றியபோது தோல்வியின் விளிம்பில் நின்று தற்கொலை செய்தவன் ஹிட்லர். ஆனால் ஸ்டாலினோ தன் அரசியல் வாழ்வில் வீழ்ச்சியையே அறியாதவர். அவரின் காலத்தில் தான் சோவியத் யூனியன் தோல்வியே காணாத வல்லரசாக எழுந்து நின்றது. இறக்கும் வரை சோவியத் யூனியனின் அசைக்க முடியாத தலைவனாக, இரும்பு மனிதனாகத் திகழ்ந்தவர் தோழர் ஸ்டாலின்.

எனவே இங்கே ஸ்டாலினின் வீழ்ச்சியென்று அசுரா குறிப்பிடுவது சோவியத் யூனியனின் வீழ்ச்சியையே என்றுதான் -அசுரா வேறொரு விளக்கத்தைத் தராதவரை- நாம் பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது. நமக்கும் ஸ்டாலினிசத்தின் மீது பல கேள்விகள் உள்ளனதான். ஆனால் அதற்காக சோவியத் யூனியனின் வீழ்ச்சியையோ கிழக்கு அய்ரோப்பியச் சோஸலிச நாடுகளின் வீழ்ச்சியையோ நம்மால் அசுராவைப் போல கொண்டாடி மகிழ்ந்துவிட முடிவதில்லை.மிகவும் பின்தங்கிய நாடுகளில் தோன்றிய அந்தச் சோஸலிச அரசுகள் சமூக ஏற்றத்தாழ்வுகளைப் பெருமளவில் இல்லாதொழித்தன. மதத்தை வைத்து அரசியல் நடத்தியவர்கள், அரசியலை வைத்துப் பிழைப்பு நடத்தியவர்கள், ஏழை விவசாயிகளைச் கசக்கிப் பிழிந்து தங்கள் காதற் கிழத்திகள் மூத்திரம் பெய்யத் தங்கத்தாலேயே மூத்திரக் குடுவைகள் செய்து கொடுத்த பிரபுக்கள் அடக்கி வைக்கப்பட்டனர். அப்போதுதான் வளரிளம் நிலையில் இருந்தாற் கூட அந்தச் சோஸலிச அரசுகள் மக்களின் அடிப்படைத் தேவைகளையும் கல்வியையும் நாட்டின் அடிப்படை உள் கட்டுமானங்களையும் சாதித்துக் காட்டின. அதுவரை தேவாலயங்களுக்குள்ளும் அடுப்படிகளுக்குள்ளும் ஒடுங்கிக் கிடந்த பெண்கள் அரசியலிலும் அறிவியியலிலும் விளையாட்டுத் துறையிலும் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தினார்கள். புட்னிக் என்றாலும் சரி ஒலிம்பிக் என்றாலும் சரி இந்த மக்கள் சாதனைகள் மேல் சாதனைகளை நிகழ்த்திக் காட்டினார்கள். ஸ்டாலினுக்குப் பின்பான சோவியத் யூனியனைக் கடுமையாக விமர்சித்த மாவோயிஸ்டுகள் கூட சோவியத் யூனியனைச் சமூக ஏகாதிபத்தியம் என்றுதான் கணிப்பிட்டார்கள். அந்தக் காலகட்டத்தில் நமது பெரியார் ஈ.வெ.ரா கூட தனக்கேயுரிய பாணியில் "இந்தியாவை வெள்ளைக்காரன் தான் ஆள வேண்டும், அதுவும் ரஷ்யாக்காரன் தான் ஆள வேண்டும்" என ஒரு தடாலடி அடித்ததைத் தோழர்கள் அறிந்திருப்பீர்கள். கொம்யூனிஸ்ட் கட்சிகளின் திரிபுவாதத்தாலும், கட்சிக்குள்ளேயே ஓர் அதிகார ஒட்டுண்ணி வர்க்கம் வளர்ந்திருந்ததாலும், உலக முதலாளியத்தின் இடைவிடாத நெருக்கடிகளாலும் சி.அய்.ஏ போன்ற ஏகாதிபத்திய உளவு நிறுவனங்களின் எண்ணற்ற அரசியற் சதிகளாலும் இன்று முன்னைய சோஸலிச நாடுகளிலிருந்து சோஸலிசம், கொம்யூனிஸம், சோவியத் போன்ற சொற்கள் மறைந்து விட அங்கெல்லாம் வேறொரு புதிய சொல் பெருஞ்செல்வாக்குப் பெற்றிருக்கிறது. அந்தச் சொல் மாபியா. அந்த நாடுகளின் தற்போதைய பிரதான ஏற்றுமதிப் பண்டம் பெண்கள். என் சீரழிந்த பூமி சிறிலங்காவிலிருந்து அசுராவின் புனித பூமியான பிரான்ஸ் வரை அந்தப் பெண்கள் பாலியல் பண்டங்களாகப் படுக்கைப் பிண்டங்களாக வதைபடுகிறார்கள். இதிற் கொண்டாட என்ன புண்ணாக்கிருக்கிறது என்று அரசியல் ஆய்வாளர் அசுரா தான் சொல்லவேண்டும்.

அசுராவின் இவ்வளவு அலம்பல்களும் பினாத்தல்களும் வளங்கெட்ட கதைகளும் ஏதற்காக? 'மங்கொள்ளக்கார' ஏகாதபத்தியத்தை நியாயப்படுத்துவதற்காக! அதன் மூலம் TBCவானொலியாளர்கள் ஏகாதிபத்திய ஆதரவுக் கருத்துநிலை கொண்ட மேற்கத்திய முதலாளிய அறத்தை விசுவாசிக்கும் முதிர் முட்டாள்கள் என்ற நமது எதிர்மறை விமர்சனத்தை நேர்மறையாக்குவதற்காக. மறுபடியும் சொல்கிறேன். ஏகாதிபத்திய நாடுகள் ஈழப் பிரச்சினையை மட்டுமல்ல எந்தப் பிரச்சினையையுமே தார்மீகங்களாலும் மனித உரிமைகள் நோக்கோடும் அணுகுவதில்லை. அவர்கள் தமது சொந்த நலங்களினாலும் இலாப நோக்கோடுமே பிரச்சினைகளை அணுகுகின்றனர்.

TBC அரசியல் ஆய்வாளர்களாலும் விடுதலைப் புலிகளாலும் சனநாயக நாடுகள் என்றும் சமாதான அனுசரணையாளர்கள் என்றும் கூறப்படும் மேற்கு நாடுகள் உண்மையில், சரியான அர்த்தத்தில் சனநாயக நாடுகள் தானா? சமாதானத்தின் அனுசரணையாளர்கள் தானா? இன்றுவரை இந்தப் பகற் கொள்ளைக்காரர்களிற்கு மூன்றாம் மண்டல நாடுகளில் நேரடி மற்றும் மறைமுகக் கொலனிகள் உள்ளன. அசுராவின் புனிதபூமி கடல் கடந்த பிரஞ்சு மாகாணங்கள் என்ற பெயரில் குவாத்தலூப்பையும் மார்ட்டினிக்கையும் ரியூனியனையும் தயிட்டியையும் பசுபிக் தீவுகளையும் கொலனிகளாக வைத்திருந்து அந்த நாடுகளின் வளங்களைத் திருடுகிறது. அங்கு அணுகுண்டுச் சோதனை வெடிப்புகளைச் சுதேசிகளின் எதிர்ப்புகளை மீறியும் நிகழ்த்துகிறது. இதுவரை உலக வரலாற்றில் எப்போதாவது இந்தப் போலி சனநாயக நாடுகள் ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கத்தில் நின்றிருக்கிறார்களா? மாறாக இவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்களாகவும் நம்பிக்கை நட்சத்திரங்களாகவும் திகழ்ந்த சிலியின் அலன்டேயையும் கொங்கோவின் லுமும்பாவையும் பொலிவியாவில் சே குவெராவையும் சதிகளைச் செய்து கொன்றொழித்தார்கள். இலங்கையிலும் ஈராக்கிலும் பர்மாவிலும் லைபீரியாவிலும் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்று முட்டிக்கொண்டு முட்டைக் கண்ணீர் வடிக்கும் இந்த மேற்கு நாடுகளில் மனித உரிமைகளின் நிலை என்ன? மேற்கில் பிரித்தானியா, ஜெர்மன், இத்தாலி, சுவீடன், ஸ்பெயின் உள்ளிட்டுப் பதினான்கு நாடுகளில் CIAயின் இரகசியச் சிறைகள் உள்ளன என்றும் அங்கே இஸ்லாமியத் தீவிரவாதிகள் எனச் சொல்லி சிறைப் பிடிக்கப்பட்ட முசுலீம்கள் வதைக்கப்படுகிறார்கள் என்றும் Amnesty Internationalலை ஆதாரங் காட்டி Le Monde பத்திரிகை (07.06.2006) வரைபடங்களுடன் தெளிவாக அம்பலப்படுத்தியிருக்கிறது. இதுவா புனிதமான பூமி? என நாம் கேட்டால் அசுரா சாராம்சமான கேள்விகளைத் தவிர்த்து விட்டு //மேற்கு நாடுகளை விமர்சிப்பவர்கள் ஏன் மேற்கு நாடுகளில் வசிக்க வேண்டும்? அவர்களின் அல்லைப்பிட்டியில் போய்க் குந்த வேண்டியதுதானே// என்று சிறுபிள்ளைத் தனமாகப் பேசுகிறார். அசுரா மேற்கு நாடொன்றில் வசிப்பதால் மேற்கு நாடுகள் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் நடத்தும் படுகொலைகளையோ மேற்கு நாடுகளின் இஸ்லாம் விரோதப் போக்கையோ, வெள்ளைத் திமிரையோ அசுரா கண்டும் காணாமலுமே இருந்து விடுவாரா? என்று கேட்கிறேன்.

ஈழத்தை விடுங்கள் புகலிட தேசங்களிற் கூட ஈழத் தமிழர்களுக்கு மேற்கத்தைய அரசுகளும் காவற் துறையும் நீதி செய்ய மாட்டார்கள் என்கிறேன். இதற்கு HUMAN RIGHTS WATCHசின் இறுதி யுத்தத்திற்கு நிதியுதவி செய்தல் என்ற அறிக்கையிலிருந்து ஓர் ஆதாரத்தைத் தர முடியும். பிரித்தானியாவில் ஈழத்தமிழர்கள் மீது புலிகள் மேற்கொள்ளும் அச்சுறுத்தல்களைக் குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினர் முன்னாள் இலண்டன் நகரக் காவற்துறை ஆய்வாளர் Philip Perryயிடம் கேட்டபோது அவர் சொன்னார்:"சில வருடங்களுக்கு முன்னர் இங்கு என்ன நடக்கிறது என்பது தொடர்பாக வேண்டுமென்றே கவனிக்காமல் இருப்பது என்னும் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டது. அக்கட்டத்தில் இங்கிலாந்து அரசாங்கமானது சமாதான ஒப்பந்தத்திற்கு ஆதரவு வழங்கியது. அக்கட்டத்தில் அவர்கள் புலிகள் இயக்கத்தை நெருக்கடிக்குள்ளாக்க விரும்பவில்லை. ஆகவே அக்கால கட்டத்தில் சகல தகவல்களும் கிடைக்கப் பெற்றாலும் பயங்கரவாத விடயங்கள் தொடர்பாகக் கையாளும் விசேட பிரிவானது இங்கு என்ன நடக்கின்றது என்பதை மறுதலித்தே வந்திருக்கின்றது. (தமிழ் மொழிபெயர்ப்பு பக்கம்:50)

ஆக மேற்கு அரசுகளும் காவற்துறையும் தங்கள் ஏகாதிபத்திய அரசியல் வியூகங்களின் அடிப்படையில் செயற்படுவார்களே தவிர நீதியின் அடிப்படையில் செயற்படுவதில்லை. அவர்கள் தங்களின் நலன்களின் அடிப்படையில் புலிகளின் மீதோ சிறிலங்கா அரசின் மீதோ அழுத்தங்களைப் போடுவார்கள், ஆதரிப்பார்கள், அல்லது Philip Perry சொன்னது போலக் கண்டும் காணாமலும் இருப்பார்கள். ஆகவே நாம் TBC அரசியல் ஆய்வாளர்கள் சொல்வது போல ஏகாதிபத்தியங்களின் கால் பிடித்தோ அல்லது அய்ரோப்பிய எம்.பிக்களின் வால் பிடித்தோ நீதியுடன் கூடிய சமாதானத்தைப் பெற்றுவிட முடியாது. மாறாக நாம் TBC சொல்வதிற்குத் தலைகீழாக நடக்க வேண்டும். மேற்கில் இன்னமும் எஞ்சியிருக்கும் இடதுசாரிகளுடனும் அரச எதிர்ப்பாளர்களுடனும் நிறவெறி எதிர்ப்பாளர்களுடனும் கலகக்காரர்களுடகும் தான் நாம் அரசியற் தோழமைகளை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஈழத் தமிழர்கள் என்ற இனச் சாரம்சத்துள் பல்வேறு வகையான மக்கள் குழுக்களையும் பொத்தாம் பொதுவாக அடக்கிவிடக் கூடாது. ஒவ்வொரு மக்கள் குழுக்களுக்கும் தனித்துவமான அரசியற் பிரச்சனைகள் அவர்களின் சாதிய, பால், வர்க்கத் தன்னிலைகள் சார்ந்து உள்ளன என்பதையும், 1921ல் தோன்றிய பொ. அருணாசலத்தின் தமிழ் காங்கிரஸிலிருந்து முந்தநாள் முளைத்த ஜெயதேவனின் ஜனநாயக காங்கிரஸ் வரைக்கும் தோன்றிய அனைத்துத் தமிழ் தேசியவாதப் போக்குகளும் யாழ் மையவாதத்தையே, சைவ வேளாள அரசியலையே தூக்கிப்பிடித்தன என்பதையும், புலிகள் பாஸிஸ்டுகள் என்பதையும் அசுராவைப் போலவே நாமும் சொல்லி வருகிறோம். ஆனால் நாம் இந்தக் கருத்துக்களைத் தொடர்சியாகச் சொல்லி வருவது இவற்றுக்கான மாற்று அரசியலை முன்மொழியவேயன்றி அசுராவைப் போல எதை எதிர்ப்பதாக வாயடிக்கிறாரோ மறுகணத்தில் அதுக்கே பல்லிளித்து ஆதரவுக் கட்டுரை எழுதவதிற்காக அல்ல. TBCபணிப்பாளரும், சிவலிங்கமும், ஜெயதேவனும், ஜெமினியும், விவேகானந்தனும் தமிழ்த் தேசியம் பேசாமல் என்ன தலித் தேசியமா பேசிக் கொண்டிருக்கிறார்கள்? "குடிகாரர்கள்", "ஆங்கிலம் தெரியாதவர்கள்", "எட்டாம் வகுப்புப் படித்தவர்கள் " என்ற மேட்டுக்குடிப் பரிகசிப்புக்கள் அவர்களின் சொல்லாடல்களில் நிரம்பி வழிவதை அசுரா கேட்டதில்லையா? கோயில் முதலாளிகள் அங்கே உட்கார்ந்திருந்து சைவக் குட்டிக் கதைகள் சொல்வதை அசுரா விளிம்பு நிலை அரசியலென்றா நினைத்துக்கொண்டிருக்கிறார்? இரண்டு இந்துக் கோயில் முதலாளிகளையும் நடு வீட்டிற்குள் வைத்துக்கொண்டு யாழ்மையவாதம் தலித்தியம் என்று பேசத் தூ! உங்களுக்கு வெட்கமாயில்லையா?

இறுதியாக ஒன்று...ஒரு வாதத்திற்காக, எதிர்காலத்தில் புலிகள் வன்முறைகளைக் கைவிட்டு சனநாயக அரசியலுக்கு வருகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்போது TBCக்குப் புலிகளை எதிர்பதற்கு ஒன்றுமேயிருக்காது. ஏனெனில் அவர்களும் ஏகாதிபத்திய ஆதரவு இவர்களும் ஏகாதிபத்திய ஆதரவு, அவர்களும் தமிழ்த் தேசியம் இவர்களும் தமிழ்த் தேசியம், அவர்களும் வலதுசாரிகள் இவர்களும் வலதுசாரிகள், அவர்களும் கோயில் இவர்களும் கோயில். ஆனால் நாங்கள் அப்போதும் புலிகளை எதிர்ப்போம். ஏனெனில் நாங்கள் புலிகளின் குட்டி முதலாளித்துவ - யாழ் மையவாத- தேசியவாத வேலைத்திட்டத்தை எதிர்க்கிறோம். "இந்தியச் சூழலைப் பொறுத்தவரை ஒரு வகையான நக்ஸல்பாரி மனநிலை அறிவுஜீவிகளுக்குத் தேவை" என்பார் அ.மார்க்ஸ் (புதியபார்வை யூன் 1 -15.) ஈழத்துச் சூழலைப் பொறுத்தவரை எல்லோருக்குமே நக்ஸல்பாரி மனநிலை வேண்டுமென்கிறேன் நான். எந்தவிதச் சமரசமோ முகத் தாட்சண்யமோயின்றி எல்லாவற்றின் மீதும் நாங்கள் கேள்விகளை எழுப்புவோம். அனைத்து வலதுசாரி அரசியலாளர்களையும் ஈவிரக்கமின்றி விமர்சிப்போம்.

ஒடுக்கப்பட்ட மக்கள், நொறுக்கப்பட்ட மக்கள் தமது உரிமைகளுக்கான போராட்டத்தைத் தமது சொந்தக் கைகளிலேயே எடுப்பதும், தமிழ் - முசுலீம் - சிங்கள உழைக்கும் மக்களின் அய்க்கியத்தைக் கட்டி எழுப்புவதும் இப்போதைக்குக் கனவாக இருக்கலாம். ஆனால் அது அசுரா சொல்வது போல அதிகாரம் சார்ந்த கனவாயிருக்காது. பிரேமுடைய வார்த்தைகளிற் சொன்னால் அது அறஞ் சார்ந்த கனவு

Tuesday, June 06, 2006

நெஞ்சு துடிக்குது ஜெமினி! ஜெமினி! - ஷோபாசக்தி

நான் அறிந்தவாறு தேனீ இணையத்தளத்தின் நெறியாளரும், எல்லோரும் அறிந்தவாறு TBC வானொலியின் ஜெர்மனி ஏஜென்டுகளில் ஒருவருமான ஜெமினிக்கு வணக்கங்கள்.

நீங்கள்,அவதூறுகளால் நிரப்பி எனக்கு மரியசீலன் எழுதிய பகிரங்கக் கடிதத்தை 28.05.2006ல் உங்கள் தளத்தில் பிரசுரித்திருந்தீர்கள். நானும் உடனடியாகவே மரியசீலனின் கடிதத்தில் உள்ள பச்சைப் பொய்களையும் அவதூறுகளையும் சொல்லுக்குச்சொல் வரிக்குவரியாகச் சான்றுகளுடன் தெளிவுபடுத்தி ஒரு கட்டுரையை எழுதி உங்களுக்கு 31.05.2006ல் அனுப்பியிருந்தேன். நீங்களும் என் பதிலைத் தேனீயில் பிரசுரிக்கப் போவதாக 01.06.2006ல் தேனீயில் அறிவித்திருந்தீர்கள். தேனீ எனக்கு வழங்கப் போகும் கருத்துச் சுதந்திரத்தை எண்ணி நான் அகமகிழ்ந்திருக்கையில் இன்று " ஷோபாசக்தியின் பதில் பிரசுரிக்கப்படமாட்டாது" என உங்கள் தளத்தில் அறிவித்திருக்கிறீர்கள்.என்ன தோழரே? தீவானைத் தீவானே இப்படிச் சுத்தலாமா?

எனது பதிலை பிரசுரிக்க மறுத்ததற்காக நீங்கள் சொல்லும் சப்பைக் காரணம் உங்களுக்கே யோக்கியமாகப்படுகிறதா? வேறு இணையத்தளங்களில் எனது பதில் பிரசுரிக்கப்பட்டதால் தேனீ பிரசுரிக்காது என்கிறீர்கள். நீங்கள் இதுவரையில் வேறு இணையத்தளங்களில் பிரசுரமான கட்டுரைகளைத் தேனீயில் பிரசுரித்ததே இல்லையா? அவ்வாறான பலபத்து மறுபிரசுரக் கட்டுரைகள் தேனீத் தளத்தில் வாசிக்கக் கிடைக்கின்றனவே! உங்கள் தளத்தில் வெளியான ஆதாரங்களற்ற அவதூறுகளுக்கான பதிலை, உங்களுக்கெனத் தலைப்பிட்டு எழுதப்பட்ட பதிலை, உங்களுக்கு உடனடியாகவே அனுப்பப்பட்ட பதிலை, முக்கியமாகத் தேனீயில் என் மீதான அவதூறுகளை மட்டுமே வாசித்திருந்த தேனீயின் குறிப்பான வாசகர்களுக்கு என் தரப்பைத் தெளிவுறுத்தும் பதிலைத் தேனித் தளத்திலேயே வெளியிடுவது தானே தார்மீகம்? அத் தார்மீகப் பொறுப்பு ஏன் உங்களிடமில்லை? sathiyak.blogspot.com மிலும் tamilcircle.netலும் பிரசுரிக்கப்பட்டிருந்த என் பதிலுக்குத் தேனியில் Linkகாவது கொடுக்கும் ஆகக் குறைந்தபட்ச ஊடக அறங்கூட உங்களிடம் கிடையாதா? நீங்கள் பசப்பித் திரியும் கருத்துச் சுதந்திரத்தின் யோக்கியதை இவ்வளவுதானா என்று கேட்கிறேன்? பதில் சொல்லுங்கள் தோழரே!