Sunday, August 20, 2006

உரையாடல் தொடர்கிறது

வடமராட்சி
18.07.2006
அன்புடன் தோழருக்கு
நீங்கள் அனுப்பிய அநிச்ச 2005 மார்ச் 2006 இதழ்கள் கிடைத்தன. இதழ்கள் காத்திரமாக வந்துள்ளன அ.மார்க்சின் 'பார்ப்பனர்கள் அரங்கேற்றும் ஆரியக்கூத்து' கட்டுரை மிக விரிவாகவும் ஆழமாகவும் எழுதப்பட்டுள்ளது. வரலாறுகள் உண்மையானதாய் எழுதப்படல் வேண்டும்.

மகாகவியிடம் மாத்திரமல்ல, ஈழத்தவர்கள் பலரிடம் சாதியம் மறையாமலே இருக்கின்றது. ஒவ்வொரு சாதியும் தனக்கு கீழ் உள்ள சாதியை மிதிப்பதிலேயே கருத்தாக இருக்கின்றது. ஒரு முற்போக்குக்காரருடன் கதைத்துக் கொண்டிருந்த பொழுது ஊரின் மறுபகுதியில் வசிப்பவர்களைச் சுட்டி 'நாங்கள் அங்கு கை நனைப்பது இல்லை' என்றார். இருபகுதியும் ஒரே சாதிதான். சில காலங்களுக்கு முன் இந்த நண்பர் வீட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சில நண்பர்கள் சாப்பிட வராமல் தவிர்த்துக் கொண்டார்கள். இத்தனை அழிவுகள் உயிர் இழப்புகளுக்குப் பின்கூடச் சாதியத்தைப் பிடித்துக் கொண்டிருப்பது வேதனையாக இருக்கின்றது.
ரகுநாதனின் நேர்காணல் பற்றி; மாவிட்டபுரப் போராட்டம் 1968ல் நடந்தது, யாழ் பல்கலைக்கழகம் 1974 பிற்பகுதியில் திறக்கப்பட்டது."அக் காலையில் இவ்விரு பேராசிரியர்களும் யாழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார்கள். மாணவர் மத்தியில் இக் கருத்துகளை வலியுறுத்தி சாதி ஒழிப்புப் போராட்டத்தில் அவர்களையும் ஈடுபடச் செய்தார்கள்" என அவர் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. அக்காலகட்டத்தில் சு.வே.சீனிவாசகம், சூடாமணி போன்றவர்களுடன் நான் ஒவ்வொரு நாளும் போய் வந்தவன். ஒருநாள் கூட இவ்விரு பேராசிரியர்களையும் மாவிட்டபுர வீதிகளில் கண்டதில்லை. சிவத்தம்பியின் ஊரில் இருக்கும் பிள்ளையார் கோவில் இன்றுவரை சிறுபான்மையினரை கோவில் உள்ளே விடவில்லை. 'கந்தன் கருணை' ஆடிய இளைய பத்மநாதனின் குடும்பக் கோயிலான முருகையன் கோவிலிலும் உள்ளே விடுவதில்லை இவைதான் யதார்த்தம்.
தன் சமகால எழுத்தாளரான மு.தளையசிங்கம் பற்றி ஒன்றும் தெரியாது என்று கூறும் தான் ஒரு சமூகபொறுப்பு உள்ள எழுத்தாளர் என்று கூறுவது கேலியாக இருக்கிறது. தீவகப்பகுதியில் சாதி எதிர்ப்பு போராட்டத்தில் எவ்வளவு மூர்க்கத்தனமாக மு.த ஈடுபட்டார் என்பதை குடாநாடு அறியும். சாதிமான்மாரின் தாக்குதலே அவரின் மரணத்தை விரைவு படுத்தியது என்பது ஈழத்து இலக்கிய உலகத்துக்கும் தெரியும்.
ஊரைச் சொன்னாலும் பேரை சொல்ல கூடாது என்பர்.ஆனால் இங்கு இரண்டையும் கூறக் கூடாது. அதனால் S.ராமகிருஷ்ணன் என பெயரை மாற்றுகிறேன்.
அன்புடன்
S.ராமகிருஷ்ணன்
10.08.2006
------------------------------------------------------------------------------------------------Paris
15.08.2006
தோழர் S. ராமகிருஷ்ணனுக்கு,
பிரெஞ்சுப் பிரதமர் டோமினிக் து வில்பன் இற்கு நான் கைகொடுத்த அன்று இது நிகழ்ந்தது - 28-07-2006 மாலை
லாச் சப்பலில் ஒரு புடைவைக் கடையின் முன்னே பொலிசார், அவசர மருத்துவ உதவிப்பிரிவு, எல்லோரும் வந்து ஓர் இளைஞனைப் பிணத்தை ஏற்றுவது போல் ஏற்றிக்கொண்டு போகின்றனர்.

கடை முதலாளி தனது மகளுடன் இந்தியாவிற்கு 'எஸ்கேப்' ஆகிவிட்டார்.
நியாயம் கேட்டும், இந்திய ரெலிபோன் நம்பர் கேட்டும், எதிர்த்தும் இளைஞனால் முடியாது போகவே, விசத்தை எடுத்து அவர்களுக்கு முன்னால் குடித்து மயங்கி இப்போது ஆஸ்பத்திரியில் இருக்கிறார் இளைஞர்.

இச்சம்பவத்திற்குப் பின்னர்தான் அக்கடை வெள்ளாளர்களின் கடை என்று எனக்குத் தெரிந்தது.
சுவிஸிலிருந்து ஒரு வானொலி நேயர் சொன்னார். "சாதி பாராமல் ஒரு வெள்ளாளன் 'ஒரு புரொப்போசல் மரேஜ்' செய்தால் நான் ஒரு லட்சம் பிராங் நன்கொடையாகவே தருவேன்."

நன்றியோடும்
நெகிழ்ச்சியோடும்
சுகன்.

Saturday, August 05, 2006

நூல் அறிமுகம் - தியோ




.......சுணைக்கிது

சிறுகதைகள்
நிரூபா



குஞ்சிஐயா, குஞ்சியம்மா, ஜீவி, ஜீவன், நிர்மலா, விசயா, கேதீஸ், நிரூபா, சோதி, குமரன், ஜெகதீஸ்வரன், பிரபாகரன், ஜீவனா, நந்தினி, மதியழகன், கலா அக்கா, மலர் அக்கா, நித்தியண்ண, விலாசய்யா, ராசமணி, ஆச்சி, அப்பு, கணபதி.. என்று ஒரு அயல் அட்டமே, ஒரு சிறு கிராமமே நிரூபாவின் புனைவுலகில் நமக்கு அறிமுகமாகி மெல்ல மெல்ல அவர்கள் நம்மோடும் நெருக்கமாகி விடுகிறார்கள். அவர்களது மன எழுச்சிகள்,பிரிவுகள், சந்திப்புக்கள், வெறுமைகள், துரோகங்கள், எழுத்தெழுத்தாகத் திரும்பத் திரும்ப நிரூபாவால் எழுதப்பட்டுள்ளன. இது ஒரு சிறுகதைத் தொகுப்பாக இருக்கும் அதே வேளையில் புனைவுக் களத்தைப் பொறுத்த வரையில் வரிசை மாறிக் கட்டப்பட்ட அத்தியாயங்களைக் கொண்ட நாவலாகவும் தன்னை இயல்பாகவே நிறுத்திக் கொள்கிறது.

நிரூபாவின் கதைகளில் புகலிடப் பெண் எழுத்தாளர்களின் பேரடையாளங்களான சல்லிசான கோஷங்களோ, நீதிமொழிகளோ, வசைகளோ தேங்கி நிற்பதில்லை.அவை இஸங்களுக்குள் சிக்கிக் கொள்ளாமல் வாழ்க்கையை அதன் அழகுகளுடனும் அபத்தங்களுடனும் 'குழந்தைத்தனமான' பரிசுத்தத்துடன் சித்திரித்துக் காட்டுபவை.

இந்த வகை எழுத்துக்கள் ஒரு அன்பான கடிதம் போல நமக்கு உடனேயே நெருக்கமாகி மனக் கசிவை ஏற்படுத்தி விடுகின்றன. இது ஒரு கதை சொல்லியின் பலமென்றால் இதுவே நிரூபாவின் பலவீனமும் ஆகி விடுகிறது. பல தருணங்களில் நிரூபாவின் கதைகள் வெறும் உருக்கமான வாக்குமூலங்களாகவே நின்று விடுகின்றன. அவை வாசகர்களிடம் இரக்கத்தை அல்லது தீர்ப்பைக் கோரி நிற்கும் பிரதிகளாகவே எஞ்சிவிடுகின்றன. நிரூபாவின் பிரக்ஞாபூர்வமான கட்டுப்பாட்டிலிருந்து பிரதி நழுவி விடும் தருணங்களிலெல்லாம் பிரதி தானாகவே கோள்மூட்டித்தனமான எழுத்துக்களையும் எழுதிச்செல்கிறது.

தொகுப்பின் தலைப்புக் கதையான "சுணைக்கிது" மிகவும் முக்கியமான கதை. ஒரு சிறுமி பாலியல் வதை செய்யப்படும் வலியை முதலைக் கண்ணீரோடு வாசக மனதைச் சுரண்டிவிடும் நோக்கமற்று வெறும் வாசிப்பு அதிர்ச்சிக்காக அல்லாமல் வலியை வலியாக அதன் சாத்தியமான எல்லாப் பரிமாணங்களுடனும் நிரூபாவால் கலையாக நிகழ்த்திக் காட்ட முடிகிறது. அதே வேளையில் தனது மையப் பாத்திரப் படைப்புக்களுக்காக நிரூபா ஆடும் வழக்கை பிரதியில் எதிர் மறையாகக் கட்டப்பட்டிருக்கும் பாத்திரங்களுக்காக நிரூபா ஆடுவதில்லை. கிட்டத்தட்ட பூலன் தேவியின் நீதி முறைமை தான் ஒட்டுமொத்தப் பிரதியிலும் காணக்கிடைக்கிறது. இந்தப் படைப்புக் கோணம் ஏராளமான வில்லன்களைக் கதைகளில் உருவாக்கிவிட (வில்லன்கள் கிடைக்காவிட்டால் நிரூபா பிரதியில் உடனடியாகவே பாம்புகளையும் மயிர்க்கொட்டிகளையும் ஊர விட்டு விடுகிறார்) நல்லவர்கள் கெட்டவர்கள் என்ற எதிர்வுகளே கதைகளை வளர்த்துச் செல்கின்றன. இந்தத் தட்டையான கதை சொல்லும் முறையிலிருந்து தமிழ் நவீன கதைப் பரப்பு நகர்ந்து வெகு நாட்களாகின்றன.

ஒரு ஊரில் ஒரு கொடுமைக்கார அரசன் இருந்தானாம். அங்கு ஒரு கூலி இருந்தானாம். இளவரசிக்கு கூலி மேற் காதலாம் என்ற வகைமாதிரியில் கணபதி என்ற 'தோட்டக்காட்டு'க் கூலி பற்றி 'ஒரு பழம் தப்பிச்சிண்ணு...'என்றொரு கதை.
'ஒருக்கா என்னட்டச் சொல்லிப்போட்டுப் போயிருக்கலாம்தானே'.எனத் தொடங்கி 'கணபதியெண்டா எனக்கு நல்ல விருப்பம்'. எனக் கதை முடிகிறது. தோட்டக்காட்டார்கள், கள்ளத் தோணிகள், வடக்கத்தியார்கள் எனப் பழித்துரைக்கப்படும் மனிதர்களில் ஒருவன் கணபதி. இளவரசிக்கு கணபதி என்றால் விருப்பம். அவள் கணபதியில் பச்சாதாபத்தைக் கதையில் பொழிகிறாள். ஆனால் கணபதிக்கு இளவரசியில் நல்ல விருப்பமா? என்ற கேள்விக்குள் நிரூபா நுழைவதில்லை. ஒரு அரசியற் குரலை ஒலிக்க விடுவதற்கான சந்தர்ப்பத்தை நிரூபா லாவகமாகத் தவிர்த்துக் குழந்தைத் தனமான வெற்று மனிதாபிமானத்தினுள் ஒழித்து விடுகிறார். 'பிரச்சாரம் கலையாகாது ஆனால் நல்ல கலை பிரச்சாரமாகும்' என்பார்கள்.
'கோணக் கோண மலையேறி
கோப்பிப் பழம் பறிக்கையிலே
ஒரு பழம் தப்பிச்சிண்ணு
உதைச்சானய்யா சின்னத்துரை'
சின்னத் துரையை இளவரசி என மாற்றிப் பாடக் கணபதிக்கு ஒரு நொடி போதும். மற்றவர்களின் குரலை நிரூபா எக் காரணம் கொண்டும் பிரதிக்குள் அனுமதிப்பதேயில்லை. இதைக் நிரூபாவின் குறையாகச் சொல்ல முடியாது. இத்தகைய ஒற்றைப் பார்வை எதார்த்தவாத எழுத்தின் குறைபாடு. எதார்த்தவாத எழுத்து முறைமை பிரதிக்குள் பல்வேறு குரல்களை ஒலிக்க விடுவதற்கு பெரும் தடையாக இருப்பதால் தான் இச் சவாலை எதிர் கொள்ளும் படைப்பாளி இடையறாது அ-வரிசை எழுத்து, மாயா எதார்த்தவாத எழுத்து, பின் நவீனத்துவ எழுத்து என வேறு வேறு இலக்கியச் செல் நெறிகளைத் தேடிச் சென்று கொண்டேயிருக்கிறார்.

இத்தகைய பலவீனங்களை விட்டு வட்டால் நிரூபாவின் எழுத்துக்களின் இலக்கு முக்கியமானது. தமிழ்ப் புனைகதையுலகு விட்ட குறை தொட்ட குறையாகத் தட்டிச் சென்ற குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, தமிழ்ப் பண்பாடு எனக் கட்டமைக்கப்பட்டிருக்கும் ஆதிக்க சாதி ஆண் முதன்மைவாத இந்துப் பண்பாட்டுக்கும் குழந்தைகளின் அக உலகிற்கும் இடையலான முரணகள் ஆகியவற்றைக் கலையூடாக விசாரணை செய்வதிலேயே நிரூபாவின் படைப்புச் சிரத்தை குவிக்கப்பட்டுள்ளது. ஒரு அகதியாக ஒரு பெண்ணாக ஒரு கறுப்பியாக நிரூபாவின் தன்னிலை அவர் எடுத்துக் கொண்ட புனை களத்தில் அவரை இடையறாது இயங்க வைக்கிறது.அந்தத் தன்னிலைகள் நிரூபாவிற்கென சிறப்பான மொழி நடை ஒன்றையும் வகுத்துக் கொடுத்திருக்கின்றன.

பெண் உடலின் பருவ மாற்றங்கள், சிறுமிகளின் பாலியல் மதிப்பீடுகள், பெண்களின் மனோவுலகு போன்ற தனித்துவமான கூறுகளை வெகு நறுக்காக எழுதிச் செல்லும் நிரூபா பெண்களின் அகவுலகை ஒரு பெண்ணால் மட்டுமே துல்லியமாக இலக்கியத்தில் சித்திரிக்க முடியும் என மீண்டும் ஒருமுறை இத் தொகுப்பின் வழியே எண்பித்துக் காட்டியிருக்கிறார். பெண் மொழியின் பல்வேறு சாத்தியங்களுடன் நிரூபாவிற்கு வட்டார வழக்கும் துல்லியமாகக் கை வருகிறது. இலங்கை வானொலி நாடகங்களின் 'அப்புக்குட்டி' ராஜகோபால், 'முகத்தார்' ஜேசுரட்ணம் பாணியிலான செயற்கைத் தமிழ் வடிவம் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கென புகலிட இலக்கியப் பிரதிகளில் புழங்கி வரும் சூழலில் பதின்ம வயதுகளில் புலம் பெயர்ந்து வந்த நிரூபாவின் மொழியாளுமை ஆச்சரியப்படுத்துகிறது.

சில படைப்பாளிகளுக்கு இன்றைய புகலிட எழுத்தாளர்களுக்கு அதுவும் ஆண்களுக்கு கிடைக்கிற “புத்திஜீவிகள் அங்கீகாரம்” “மகுடம்” பெண்களுக்கு கிடைப்பதில்லை என எவரும் வருந்த வேண்டியதில்லை. அங்கீகாரங்கள் மகுடங்கள் யாரால் யாருக்கு எப்போழுது கொடுக்கப்படுகிறது என நாம் பரிசீலிப்பது முக்கியமானது. யார் அங்கீகரித்தால் என்ன? அங்கீகரிக்காவிட்டால் என்ன? குஞ்சிஐயா, குஞ்சியம்மா, ஜீவி, ஜீவன், நிர்மலா, விசயா, கேதீஸ், நிரூபா, சோதி, குமரன், ஜெகதீஸ்வரன், பிரபாகரன், ஜீவனா, நந்தினி, மதியழகன், கலா அக்கா, மலர் அக்கா, நித்தியண்ண, விலாசய்யா, ராசமணி, ஆச்சி, அப்பு, கணபதி.. எல்லோருமே நிரூபாவுடன் இருப்பார்கள். நிரூபாவும் அவர்களுடன் இருப்பார்.

04.08.2006