-ஷோபாசக்தி
பிரான்ஸில் நடந்து முடிந்த தலித் மாநாட்டில், எழுபத்தெட்டுப் பேர்கள் கலந்துகொண்டார்கள் என்கிறது 'தூ' இணையத்தளம். எனக்கென்னவோ அதற்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டிருப்பார்கள் என்றே மதிப்பிடத் தோன்றுகிறது. இந்தியா, கனடா, ஜெர்மனி, இங்கிலாந்து, சுவிஸ் போன்ற வெளிநாடுகளிலிருந்து மட்டும் நாற்பது பேர்கள் வரையில் கலந்துகொண்டார்கள். இருநாள் நிகழ்வுகளில் தோழர்கள் வருவதும் போவதுமாக இருந்ததாலும் மாநாட்டு மண்டபத்திற்கு வெளியேயும் மாறி மாறித் தோழர்கள் குழுமி நின்று பேசிக்கொண்டிருந்ததாலும் 'தூ' இணையத்தால் தொகையைத் துல்லியமாகக் கணக்கிட முடியாமல் போயிருக்கலாம். வந்தவர்கள் 78 பேர்கள்தான் என்று வைத்துக்கொண்டாலும் பாரிஸில் நான்கு நாட்களாகத் தொடர்ந்து நிகழ்ந்த தொடருந்துப் பணியாளர்களின் வேலைநிறுத்தத்தால் எற்பட்ட நெருக்கடி, 'தலித் மாநாட்டில் கலந்துகொள்பவர்கள் புலியெதிர்ப்பாளர்களாக அடையாளம் காணப்படுவீர்கள்' என்ற மிரட்டல்கள், ஆதிக்கசாதி எழுத்தாளர்களின் உள்குத்து வேலைகள் எல்லாவற்றையும் மீறி இவ்வளவு தொகைத் தோழர்கள் மாநாட்டில் கலந்துகொண்டது நிரம்பவே உற்சாகத்தையளிக்கிறது.
மாநாட்டில் கலந்து கொள்வதாயிருந்த சில பேராளர்கள் வந்திராத போதிலும் மாநாடு தொய்வின்றியும் எந்தவிதக் ‘கரைச்சலின்றியும்’ நடந்து முடிந்தது. இரண்டாம் நாள் அமர்வில் காலையிலிருந்து மதியம்வரை அனைவருக்கும் கருத்துரைக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. அநேகமாக மாநாட்டில் கலந்துகொண்ட குழந்தைகளைத் தவிர மற்றெல்லோருமே கருத்துரைக்க விரும்பியதால் மாநாட்டு ஏற்பாட்டாளர்களால் ஓரிரு நிமிடங்களையே கருத்துரையாளர்களிற்கு வழங்கமுடிந்தது.
மாநாடு நடத்துவதற்கு 'கார்ஜ் லே கோனேஸ்' நகரசபையின் இலவச மண்டபமே முதலில் ஒழுங்கு செய்யப்பட்டு விளம்பரங்களில் அறிவிக்கப்பட்டபோதிலும், கடைசி நேரத்தில் அந்த மண்டபத்தைப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டதால் தனியார் மண்டபம் ஒன்றில் மாநாடு நடந்தது. மண்டப வாடகை, சில பேராளர்களிற்கான பயணக்கட்டணம், மாநாட்டில் உணவு வழங்கல் மற்றும் சில்லறைச் செலவுகள் சேர்த்து மூவாயிரம் ஈரோக்கள் வரை செலவானதாகவும் அச்செலவை மாநாட்டு அரங்கில் சேகரிக்கப்பட்ட தொகையையும் பாரிஸில் சில தோழர்களிடம் சேகரிக்கப்பட்ட பணத்தையும் மற்றும் தலித் சமூக மேப்பாட்டு முன்னணித் தோழர்களது கைக்காசாலும் ஈடுசெய்ததாக மாநாட்டு அமைப்பாளர்களில் ஒருவரான தேவதாசன் என்னிடம் தெரிவித்தார். முழுமையான மாநாட்டு வரவு செலவுக் கணக்கு அடுத்த 'வடு' இதழிலும் தொடர்ந்து 'தூ', 'சத்தியக்கடதாசி' போன்ற இணையத்தளங்களிலும் வெளியிடப்படும்.
***
மாநாடு நடைபெறுவதற்குச் சில வாரங்களிற்கு முன்பிருந்தே சபேசன், சாத்திரி போன்றவர்கள் இணையத்தில் தங்களது எதிர்ப் பிரச்சாரங்களை அவிழ்த்துவிட்டார்கள். அவர்கள் இந்த மாநாடு ஸ்ரீலங்கா அரசின் நிதியுதவியோடும் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டிலும் நடக்கவிருக்கிறது என்றெல்லாம் ஓயாமல் எழுதினார்கள். அவர்களின் துப்பறியும் ஜெர்னலிஸத்தில் மயங்கிய சில பெயரிலிப் பின்னூட்ட மன்னர்களும் "தலித் மாநாட்டை அம்பலப்படுத்திய சபேசனுக்கும் சாத்திரிக்கும் நன்றி" என்றார்கள்.
ஆனால் தலித் மாநாடு இலங்கை அரசிடமிருந்து நிதியுதவி பெற்றது என எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இவர்கள் எழுதினார்கள் என்று கேட்டால் சபேசனும் சாத்திரியும் எழுதியதுதான் ஆதாரம் என்கிறார்கள். அவதூறுகளைக் கணனியின் முன்னாலிருந்து உருவாக்குவது அறமற்ற யாவருக்கும் எளிதான செயல். தலித் மாநாடு இலங்கை அரசினதும் டக்ளஸ் தேவானாந்தாவினதும் ஏற்பாட்டிலேயே நடைபெற்றது என்பதற்கான ஆதாரங்களை சபேசனாலும் சாத்திரியாலும் வெளியிட முடியுமா என்று எழுத்து அறத்தின் பெயரால் கேட்கிறேன். அப்படி அவர்களால் ஆதாரங்களை வெளியிட முடியாத பட்சத்தில் அவர்கள் அவ்வாறு எழுதியது வெறும் ஊகம் அல்லது அவதூறு என்பதைத் தவிர வேறென்ன?
சபேசனுக்கும் சாத்திரிக்கும் நேர்மையிருந்தால் அவர்கள் தட்டிக்கழிக்க முயற்சிக்காமல் இந்தக் கேள்வியை எதிர்கொண்டு பதிலளிக்க வேண்டும். அவர்கள் தலித் மாநாடு, இலங்கை அரசிடமிருந்து நிதி பெற்றதை ஆதாரபூர்வமாக நிரூபித்தால் தலித் மாநாட்டிற்கும் 'தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினருக்கும்' எதிராகச் சத்தியக்கடதாசி முற்றுமுழுதான எதிர்நிலையை எடுக்கும் என்று உறுதி கூறுகிறேன். இப்போது பந்து சபேசனினதும் சாத்திரியினதும் கால்களிலிருக்கிறது. அவர்களின் நேர்மை அவர்கள் சொல்லப்போகும் பதிலில் தங்கியிருக்கிறது.
***
தலித் மாநாட்டில் கருத்துரைத்தவர்களின் கருத்துகளைத் தொகுத்து http://www.thesamnet.net/ வெளியிட்டிருந்தது. மாநாட்டில் பேசப்பட்ட கருத்துகளிலிருந்து சில துண்டுகளை மட்டும் தொகுக்கும்போது சில விடுபடல்கள் தவிர்க்க முடியாததே. பேச்சுக்களைச் சுருக்கும்போது சற்றுப் பிசகினாலும் ஒருவர் பேசியதற்கு தலைகீழான அர்த்தங்கள் தொனிப்பதற்கும் சாத்தியங்களுள்ளன. மறுபுறம் உரைகளை மாநாடு நடந்த மறுநாளே முழுமையாக வெளியிடுவது 'தேசம்' போன்ற ஓரிருவரின் உழைப்பில் மட்டுமே தங்கியிருக்கும் சிறியதொரு இணையத்தளத்தின் சக்திக்கு அப்பாற்பட்டதே. மாநாட்டில் பேசியவர்களின் உரைகள் தவறாகத் தேசத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தால் அதைத் தேசம் வேண்டுமென்றே செய்வதாக நம்ப நான் தயாரில்லை. இது பத்திரிகை, இணைய நடைமுறைச் சிக்கல்களால் உருவாவது என்பதுதான் எனது கருத்து.
தேசத்தில் தனது கருத்துக்கள் என வெளியிடப்பட்டவற்றில் தனக்கு உடன்பாடில்லை என மனோ எழுதிய பின்னூட்டத்தைத் தேசம் பிரசுரித்திருக்கிறது. அதில் தான் மாநாட்டில் பேசியது எதுவென்பதையும் மனோ விபரமாகவே எழுதியிருக்கிறார், தீர்ந்தது சிக்கல்! ரயாகரனும் தேசத்தில் வெளிவந்த பதிவோடு தனக்கு உடன்பாடில்லை எனத் தேசத்திற்கு எழுதியிருந்தார். தவறிருந்தால் திருத்திக்கொள்ளச் சம்மதம் என்றார் 'தேசம்' ஆசிரியர் ஜெயபாலன், முடிந்தது பிரச்சனை. ரயாகரனும் தான் மாநாட்டில் பேசிய கருத்துகளைத் தனது இணையத்திலேயே வெளியிட்டிருக்கிறார்.
ஆனால் தமிழச்சியின் பிரச்சினை சற்று வித்தியாசமானது. "காறித்துப்பாமல் என்ன செய்வார்கள். வெளிநாட்டுக்கும் வந்து கோவில், தேங்காய் உடைப்பது என்று காட்டு மிராண்டித்தனமாக நடந்து கொள்கிறார்கள். என்னைப் பற்றி விடுதலைப் புலிகள் தரக்குறைவாக மோசமாக எழுதுகிறார்கள்" எனத் தமிழச்சி பேசினார் எனத் 'தேசம்' பதிவு செய்திருந்தது. ஆனால் தனது உரையைத் 'தேசம்' இருட்டிப்புச் செய்துவிட்டதால் தேசத்தைக் கண்டிப்பதாகத் தனது வலைப்பதிவில் தமிழச்சி அறிவித்திருக்கிறார். தமிழச்சியின் உரையை மட்டுமல்ல வேறெவரது உரையையும் முழுயாகப் பதிவிடுவது உடனடிச் சாத்தியமல்ல என்பதைத் தமிழச்சியும் புரிந்துகொள்வார் என்றே நம்புகிறேன். 'இருட்டடிப்பு' என்பதெல்லாம் பாரதூரமான வார்த்தைப் பிரயோகம், ஒரு ஊடகத்தின் நேர்மையையை ஆட்டங்காண வைக்கும் சொல்லாடல்.
தமிழச்சி சொன்னவற்றை முழுமையாகத் 'தேசம்' வெளியிடவில்லை. ஆனால் அவர் சொல்லாத எதையும் 'தேசம்' வெளியிடவில்லை என்றே தமிழச்சி பேசும்போது அரங்கில் அமர்ந்திருந்தவன் என்ற முறையில் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். தமிழச்சி ‘இயக்கம்’ என்று குறிப்பிட்டு மாநாட்டில் பேசியதை நான் உட்படப் பலரும் அவர் விடுதலைப் புலிகளைக் குறித்துப் பேசியதாகவே விளங்கிக்கொண்டோம். தேசத்திலும் அவ்வாறே வெளியாகியுள்ளது. தான் பேசிய கருத்துகளைத் தேசம் 'திரித்து' வெளியிட்டிருக்கிறது எனத் தமிழச்சி கருதினால் மாநாட்டில் என்ன பேசினார் என்பதைத் தமிழச்சி தனது வலைப்பதிவில் வெளியிட்டால் தீர்ந்தது சிக்கல். தேசமும் ஒரு தேவையில்லாத இருட்டடிப்புப் பழியிலிருந்து தப்பிக்கும். தமிழச்சியின் வலைப்பதிவில் வந்து ‘அப்போதே சொன்னோம் கேட்டியா?’ எனப் பாடம் நடத்தும் பின்னூட்ட மன்னர்களின் வாயையும் எளிதாகவே அடக்கிவிட முடியும்.
***
தலித் மாநாட்டிற்கு வீ. ஆனந்தசங்கரி, EPRLF ( ப.நா) செயலாளர் சிறீதரன் போன்றவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்கள். வாழ்த்துகளை வரவேற்போம்.
ஆனால் ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணி அரசியலே யாழ் ஆதிக்கசாதியினரின் அரசியல் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடவில்லை. இரண்டு வருடங்களிற்கு முன்பு நடந்த 'ஸ்ருட்காட்' இலக்கியச் சந்திப்பில் ‘யாழ்ப்பாணத்தில் சாதிப் பிரச்சினையே கிடையாது’ என ஆனந்தசங்கரி சொன்னது இப்போதும் எனது காதில் கேட்டுக்கொண்டேயிருக்கிறது. தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கத்தின் எழுச்சிக் காலத்தில் ஒப்புக்குத் தாங்களும் சமபந்திப் போசனங்களை ஏற்பாடு செய்த தமிழரசுக் கட்சியின் சுத்துமாத்து அரசியலின் இன்றைய தொடர்ச்சிதான் சங்கரியாரின் தலித் மாநாட்டிற்கான வாழ்த்து.
சாதியப் பிரச்சினையில் கூட்டணி, LTTE, PLOTE, TELO போன்ற அமைப்புகளுடன் நாம் EPRLFவை ஒப்பிட்டுப் பேசக்கூடாது. ஒப்பீட்டளவில் EPRLF தலித் மக்களிடம் தமது வேர்களைப் பதித்திருந்தார்கள். ஆனால் கே. டானியல் சொன்னது போல இவர்கள் எசமானையும் அடிமைகளையும் இனப்பிரச்சினை சுலோகத்தின் கீழ் ஒன்றிணைத்து இறுதியில் தமிழருக்கென மட்டுமே ஒரு தமிழ்ச் சோசலிஸ ஈழத்தை உருவாக்கி விடலாமென்றே முடிவு கட்டினர்கள்.
உண்மையில் புலிகளோ கூட்டணியோ ஈபிஆர்எல்எவ்வோ இன்று சாதியொழிப்புப் போரைக் கையிலெடுத்தால் எதற்காகப் புதிதாகத் தலித் இயக்கம் தொடங்க வேண்டும். மேற்சொன்ன அணிகள் தமது அரசியல் நலன்களிற்காக ஈழத்தின் பெரும்பான்மையினரும் அனைத்துத் தளங்களிலும் செல்வாக்குப் பெற்றிருப்பவர்களுமான ஆதிக்க சாதியினரைப் பகைத்துக்கொள்ள விரும்பமாட்டார்கள். இவர்களில் எவருக்காவது உண்மையில் சாதியொழிப்பில் அக்கறையிருந்தாற் கூட இவர்களின் பிற்போக்குவாதத் தமிழ்த் தேசியவாத வேலைத்திட்டம் சாதியொழிப்பைச் செயலாக்க இவர்களை அனுமதிக்காது. எனவேதான் 'சிறுபான்மைத் தமிழர் மகாசபை' போன்றதொரு தனித்துவமான தலித் விடுதலை இயக்கத்தின் தேவையொன்று இப்போது உணரப்படுகிறது.
அந்தத் தனித்துவமான 'தலித் இயக்கம்' புலிகளின் பாஸிச அரசியல் ஆதரவுப் போக்கிற்குள் சிக்காமலிருப்பது எவ்வளவு முக்கியமோ அதைப்போலவே இனவாத அரசின் கொடுமைகளை நியாயப்படுத்திக்கொண்டே இந்திய அரசையும் இலங்கை அரசையும் மாறிமாறி நக்கிக்கொண்டிருக்கும் 'தனிப்' புலியெதிர்ப்புப் போக்கிற்குள் சிக்காமலிருப்பதும் முக்கியமானது. இந்த நிலைப்பாட்டைத் தலித் அரசிலாளர்கள் பகிரங்கமாகத் திரும்பத் திரும்ப அறிவித்துக்கொண்டேயிருப்பதும் அவசியமானது. மரம் பழுக்க வெளவால் வரும்! நாம் தான் எச்சரிக்கையுடனிருக்க வேண்டும்.
***
'மாநாட்டை நடத்தியவர்கள் புலிகளின் எதிர்ப்பாளர்கள்' என்று சிலர் இணையத்தளங்களில் ஓயாமல் கூக்குரலிடுகிறார்கள். போததற்குச் சிலர் வெளியான மாநாட்டு உரைகளிலிருந்து அசைக்க முடியாத எடுத்துக்காட்டுகளைக் காட்டித் தலித் அரசியலாளர்கள் புலிகளின் எதிர்ப்பாளர்கள் என்றும் நிறுவியிருக்கிறார்கள். இதற்கு எதற்கு இவர்கள் இவ்வளவு சிரமப்பட வேண்டும் என்பதுதான் எனக்கு உண்ணாண விளங்கவில்லை. நாங்கள்தான் பல வருடங்களாகவே "நாங்கள் அரசியலில் புலிகளின் சற்றேனும் விட்டுக்கொடுக்காத எதிரிகள்" என்று தமிழில் மட்டுமல்லாது பிரஞ்சு, ஆங்கிலம், சிங்களம், மலையாளம் எனப் பல பாஷைகளிலும் எழுதிவருகிறோமே! ஒளிவுமறைவில்லாமல் சொல்லி வருகிறோமே! சபேசனும் சாத்திரியும் லக்கிலுக்கும் எங்களைப் புலிகளின் எதிர்ப்பாளர்கள் என்று சொல்லத் தேவையில்லை. நாங்களே பிரகடனப்படுத்துகிறோம்! ஆம் நாங்கள் புலிகளின் பாஸிச அரசியலை சமரசத்துக்கிடமில்லாமல் எதிர்ப்பவர்கள்தான். இடதுசாரிகளையும் இஸ்லாமியர்களையும் சமூகவிரோதிகள் எனப் பட்டங்கட்டித் தலித் இளைஞர்களையும் அப்பாவிச் சிங்களச் சகோதரர்களையும் மாற்றுக் கருத்தாளர்களையும் பாலியல் தொழிலாளர்களையும் ஆயிரக்கணக்கில் கொன்று குவித்த விடுதலைப் புலிகளின் கால்களை நீங்கள் வேண்டுமானால் நக்கிக் கிடவுங்கள். ஆனால் எங்களையும் நக்கச் சொல்ல உங்களுக்கு எந்த உரிமையுமில்லை.
புலிகளின் பாஸிச அரசியலுக்கு எதிராக நாங்கள் நியாயமான எதிர்ப்புக் குரல்களை எழுப்பும்போது அதை நேர்வழியில் எதிர்கொள்ளத் திராணியில்லாமல் புலிகளை எதிர்ப்பவர்களெல்லாம் அரசின் கைக்கூலிகள் என்றொரு சுலபமான பொய்யால் இந்தப் புலிவாலுகள் தங்கள் அரசியலை ஒப்பேற்றிக்கொண்டிருக்கிறார்களே தவிர இவர்களிடம் சொந்தமாக அரசியல் சரக்குமில்லை, தூ! ஒருதுளி நேர்மையுமில்லை.
தலித் மாநாட்டில் புலி எதிர்ப்பு அரசியல் பேசப்பட்டது என்கிறீர்களே, அன்று மாநாட்டில் சிறிலங்கா அரசின் இனப் படுகொலைகளையோ தமிழ்மக்கள் மீதான அடக்குமுறைகளையோ நியாயப்படுத்தி எவராவது பேசினோமா? புலிகளை எதிர்ப்பவர்களெல்லாம் அரசின் கைக்கூலிகள், ஒட்டுக்குழுக்கள் என்பதெல்லாம் எந்த அரசியல் தருக்கத்துக்குள் அடங்குகிறது என்று புரியவேயில்லை. பெரியார், சார்த்தர், தெரிதா, அம்பேத்கர், மனிதவுரிமை என்றெல்லாம் நுண் அரசியல் பேசிக்கொண்டிருக்கும் அறிவாளர்கள் கூட அப்பாவி மக்களைப் புலிகள் கொல்வதைப் பார்த்துக்கொண்டு, அட அச்சத்தில் மவுனமாயிருந்தாலும் பரவாயில்லை, மாறாகக் கொலைகாரர்களை ஆதரிக்கிறீர்களே... நீங்கள்தான் ஈழத் தமிழ் மக்களின் முதல் எதிரிகள். புலிகளால் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களின் இரத்தப்பழி உங்கள் கைகளிலும் கறையாயிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
***
புலி எதிர்ப்பு அரசியலைச் செய்யத் தலித் அரசியலை லேபிளாக உபயோகிக்கிறார்கள் என்றும் தேசிய இனப்பிரச்சினை அரசியலில், சாதிய அரசியலை கிளப்புவது, தேசியப் போராட்டத்தைப் பலவீனப்படுத்தும் நோக்கில்தான் என்றும் வெள்ளாளத்தனமான குற்றச்சாட்டுகளும் தலித் அரசியலாளர்கள் மீது வைக்கப்படுகின்றன.
இவையொன்றும் புதிய குற்றச்சாட்டுகள் கிடையாது. அறுபது வருடங்களிற்கு முன்பு சிறுபான்மைத் தமிழர் மகாசபையும், நாற்பது ஆண்டுகளிற்கு முன்பு தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கமும் சாதி ஒழிப்புப் போராட்டங்களை முன்னெடுத்தபோதும் இதே வெறுக்கத்தக்க குற்றச்சாட்டைத் தமிழ்த் தேசியவாதிகள் சாதியொழிப்புப் போராளிகளிற்கு எதிராகக் கிளப்பினார்கள். ஜீ.ஜீ. பொன்னம்பலமும், தளபதி அமிர்தலிங்கமும், அடங்காத்தமிழர் சுந்தரலிங்கமும் தமிழ்த் தேசியம், தமிழர் ஒற்றுமையென முழக்கமிட்டவாறே சாதியத்தைப் பாதுகாத்தார்கள் என்பதை வரலாறு குறித்துத்தான் வைத்திருக்கிறது.
தாழ்த்தப்பட்டவர்களுக்கு வாக்குரிமை வழங்கக்கூடாது என்றார் ஜீ.ஜீ.பொன்னம்பலம். சங்கானைப் போராட்டத்தின்போது ‘சங்கானை ஷங்காயாக மாறிவிட்டது’ எனப் பாராளுமன்றத்தில் கூக்குரலிட்டார் அமிர்தலிங்கம். மாவட்டபுரம் ஆலயப் பிரவேசப் போராட்டத்தின்போது தாழ்த்தப்பட்டவர்களை கோயிலினுள் விடமாட்டேனென்று கையில் துப்பாக்கியோடு ஆலய வாசலை மறித்து நின்றார் சுந்தரலிங்கம்.
நாங்கள் சாதிய அரசியலை முன்னிறுத்துவது கிடையாது. நாங்கள் சாதிகளை முற்றுமுழுதாக ஒழிக்கவேண்டுமென்று சாதியொழிப்பு அரசியலைத்தான் முன்னிறுத்தி வருகின்றோம். சாதியொழிப்புக் குரல்கள்தான் புதிதாகத் தமிழர்களிடையே பிளவுகளை ஏற்படுத்த வேண்டுமென்றில்லை. ஏனெனில் தமிழர்கள் ஏற்கனவே பல நூற்றாண்டுகளாகச் சாதியால் திட்டவட்டமாகப் பிளவுண்டுதான் கிடக்கிறார்கள். எனவே சாதியொழிப்புத்தான் தேசிய இன அய்க்கியத்திற்கு முன்நிபந்தனையாக அமையும். எனவே சாதியொழிப்புக் குரல்கள் தேசியப் போரட்டத்திற்கு எதிரானது என்ற குற்றச்சாட்டு ஆதிக்கசாதிச் சாதிப்பற்றை மறைப்பதற்கான தந்திரங்களே தவிர வேறல்ல.
ஈழத்தில் சாதி ஒழிக்கப்பட்டுவிட்டது என்ற ஆதிக்கசாதியினரின் பொய்களுக்குப் பின்னாலிருப்பது ஈழத்தில் சாதியத்திற்கு எதிரான போராட்டம் நசுக்கப்பட்டுவிட்டது என்ற உண்மைதான். ஈழத்தில் தொடரும் சாதியக் கசடுகளை பல்வேறு அரசியல் சக்திகளும் எழுத்தாளர்களும் சமூக அக்கறையாளர்களும் ஒட்டுமொத்த தலித் சமூகமும் சாடிக்கொண்டுதானிருக்கிறது. விடுதலைப் புலிகள் அமைப்பிலுள்ள சிவா சின்னப்பொடி போன்றவர்கள்கூட ஈழத்திலும் புகலிடத்திலும் தொடரும் சாதிய ஒடுக்குமுறைகள் குறித்துத் தீவிரமாகப் பேசிவருகிறார்கள். சாதியிருக்கிறதாம், ஆனால் அதை எதிர்த்துப் பேசக்கூடாதாம், சாதியொழிப்பு அரசியலை முன்நிறுத்தக்கூடாதாம் என்றால் இந்தப் பேச்சில் ஏதாவது யோக்கியமிருக்கிறதா?
தலித் அரசியல் இந்தியாவிலிருந்து இறக்குமதியானது அது ஈழத்திற்குப் பொருந்தாது என்கிறார்கள். அந்நிய நாட்டிலிருந்து வந்ததாலேயே ஒரு கோட்பாடு நிராகரிப்பிற்கு உரியதாகிவிடுமா? இவர்கள் இப்போது கோரும் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை இவர்கள் என்ன வல்வெட்டித்துறையிலா கண்டுபிடித்தார்கள்?
ஈழத்தமிழர்களின் சனத்தொகையில் முப்பது விழுக்காடுகளுக்கும் அதிகமான தலித்களிடமிருந்து நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து இந்த 2007வரை அறுபது வருடங்களில் முன்று பாராளுமன்ற உறுப்பினர்கள்தானே வரமுடிந்தது. ஆனால் விகிதாசாரப்படி இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட தலித் எம்பிக்கள் அல்லவா பாராளுமன்றிற்குச் சென்றிருக்க வேண்டும். எத்தனை தலித்கள் துணைவேந்தர்களாகவும் நீதிபதிகளாகவும் கல்லூரி அதிபராகவுமிருக்கிறார்கள்? இருந்த ஒருவரையும் புலிகள் சுட்டுக்கொன்றுவிட்டார்களே! இன்றுவரை யாழ்ப்பாணத்தில் நூற்றைம்பதிற்கும் மேற்பட்ட கோயில்கள் தலித்களுக்குத் திறக்கப்படவில்லையென புதிய ஜனநாயகக் கட்சியின் ‘புதியபூமி’ பத்திரிகை ஆதாரத்துடன் கட்டுரை வெளியிடுகிறது. நான் இதைச் சுட்டிக்காட்டினால் “நூற்றைம்பது கோயில்கள் யாழ்ப்பாணத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு திறக்கப்டாமலிருப்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் யாழ் மக்களில் பெரும்பாலானோர் இராணுவத்தின் அனுமதியில்லாமல் ஆலயங்களிற்குள் போகமுடியாமலிருக்கிறார்கள்” என்று ‘தீராநதி’ இதழில் எனக்கு மறுத்தான் விடுகிறார் தோழர் யதீந்திரா. தமிழனைத் தமிழனே சாதியத்தின் பேரால் ஒடுக்குகிறான் என்று நான் சொன்னால் சிங்களவனும்தானே ஒடுக்குகிறான் என்று பேசுவது அறமாகுமா? அதையும் பேசுங்கள்! இதையும் பேசுங்கள்! என்கிறேன் நான்.அதைவிடுத்து தேசிய இனப்பிரச்சினையை முன்னிறுத்திச் சாதிய ஒடுக்கமுறையை கண்டுகொள்ளாமலிருப்பது என்ன நியாயம்!
இன்னும் சில ஆதிக்கசாதி அறிவுஜீவிகள் ஒரு ஆறுதல் திட்டத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குக்கு முன்மொழிகிறார்கள். அதாவது தமிழீழம் பிடிக்கும் வரை அமைதிகாத்தால் அவர்கள் பிற்பாடு சாதியத்ததை ஒழிக்க வழி செய்வார்களாம். ஏதோ ஈழத்துச் சமூக அசைவியக்கமே இப்போது நின்று போயிருப்பது போலவும் தமிழீழம் கிடைத்த பின்புதான் அது மறுபடியும் அசையும் என்பது போலவுமிருக்கின்றன இவர்களின் சாட்டுகள். தமிழீழம் கிடைக்கும் வரை யாரும் கலியாணம் கட்டாமல் இருக்கிறீர்களா? பிள்ளை பெறாமல்தான் விட்டீர்களா? பள்ளிக்குப் படிக்கப் போகவில்லையா? பல்கலைக் கழகங்களில் பட்டம் பெறவிலையா? கோயில் திருவிழாக்கள் செய்யவில்லையா? தலைவரின் அய்ம்பதாவது பிறந்தநாளுக்கு அய்ம்பது கிலோ கேக் வெட்டவில்லையா? அய்ம்பத்தியரண்டாவது பிறந்தநாளுக்கு அய்ம்பத்தியிரண்டு பானைகளில் பொங்கவில்லையா? இவையெல்லாம் கோலாகலமாய் நடக்குமாம். ஆனால் தலித்துகள் மட்டும் சாதியிழிவைச் சுமந்துகொண்டு தமிழீழம் கிடைக்கும் வரைக்கும் காத்திருக்கவேண்டுமாம்.
தமிழ்த் தேசியத்தின் ஆயுதப் போராட்டத்திற்கு முப்பதுவருட வரலாறுதான். ஆனால் ஈழத்தில் சாதியொழிப்பு ஆயுதப் போராட்டத்திற்கு அறுபதுவருட வரலாறிருக்கிறது.
***
புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் சாதிரீதியான குடிமைச் சேவகத்தை ஒழித்திருப்பதாயும் சாதியைச் சொல்லி இழிவு செய்தால் தண்டனைகளை வழங்குவதாகவும் கேள்விப்படுகிறேன். புலிகள் இந்தச் சீர்திருத்தங்களை செம்மையாக நடைமுறைப்படுத்துவது உண்மையானால் இந்த விடயத்தில் நான் முழுமனதோடு புலிகளை ஆதரிக்கிறேன். ஆனால் சாதியொழிப்பு என்பது வெறும் சீர்திருத்தங்களால் சாத்தியப்படுவதில்லை. அது இன்றைய தலித் அரசியலின் புரிதலின்படி இடஒதுக்கீடுகள், தனிவாக்காளர் தொகுதிகள் போன்ற பல்வேறு உரிமைகளை வெற்றிகொள்வதின் மூலம் நகர்ந்து சாதியத்தைக் காப்பாற்றும் இந்து மதத்தை வேரோடு கில்லியெறிவதின் முலம்தான் சாத்தியப்படும்.
சாதியத்தின் வேரையே கில்லிப்போடும் இந்த வேலைத்திட்டத்தை விடுதலைப்புலிகளோ அல்லது ஈபிஆர்எல்எவ்வோ அல்லது வேறெந்த அமைப்போ ஏற்றுக்கொண்டால் நடைமுறைப்படுத்தினால் நாங்கள் எதற்காகத் தனியாத் தலித் அரசியலைப் பேசவேண்டும்? வெறும் சீர்திருத்தங்களைக் காட்டித் தலித் மக்களை ஏமாற்றுவதைத் தலித் அரசியல் அனுமதிக்காது. ஈழத்தில் இருபதாம் நூற்றாண்டு சாதியச் சீர்திருத்தங்களின் காலமாயிருந்தது. ஆனால் இந்த நூற்றாண்டு சாதியொழிப்பு நூற்றாண்டாயிருக்கட்டும்.
இந்துமத ஒழிப்பு, தலித்துகளிற்கான சிறப்பு இடஒதுக்கீடுகள், தனி வாக்காளர் தொகுதிகள் ஆகிய இலக்குகளை நோக்கி நகராமல் சாதியை ஒழிக்கமுடியுமா சொல்லுங்கள்? இந்த வேலைத் திட்டத்திற்குப் புலிகள் சம்மதிக்கிறார்களா என்று கேட்டுச் சொல்லுங்கள்! இந்தச் சாதியொழிப்பு வேலைத்திட்டத்திற்கு சம்மதிக்காத எவரையும் எதிர்த்துக் குரலெழுப்ப நாங்கள் தயங்கமாட்டோம். இந்தப் பின்னணியில்தான், தலித் அரசியலாளர்கள் புலிகளையும் கூட்டணியையும் இடதுசாரிகளையும் விமர்சிப்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
புலிகள் சரியானதொன்றைச் செய்யும்போது ஆதரிக்க எனக்கு உரிமையிருக்கிறது. அதேபோன்று புலிகள் தவறொன்றைச் செய்யும்போது தட்டிக்கேட்கவும் எனக்கு உரிமையிருக்கிறது.
***
ஈழத்திலும் புகலிடத்திலும் திருமணத்தைத் தவிர வேறெதிலும் சாதியில்லை என்று கொஞ்சங்கூடக் குற்றவுணர்வில்லாமல் சிலர் எழுதுகிறார்கள். இப்படிச் சொல்வது 'ஒருவரின் உடலில் உயிரைத் தவிர மற்றவையனைத்தும் சீராயிருக்கின்றன, ஆகவே ஆள் சுகமாயிருக்கிறார்' என்று கூறும் முட்டாள்தனத்திற்கு ஒப்பானதல்லவா? திருமணத்தில் கலக்க மறுப்பது தீண்டாமையின்றி வேறென்ன? அகமணமுறையென்பதுதானே சாதியின் அடித்தளமே. அதில் ஒரு பொத்தலைக்கூட விழுத்தாமல் ஈழத்தில் சாதியில்லை எனச் சொல்வதற்கு உங்களிற்கு உறுத்தவில்லையா?
வெள்ளாள அன்பர்களே தயவு செய்து ஈழத்தில் சாதியொழிந்துவிட்டது என்று சொல்லாதீர்கள். ஈழத்தில் தலித்துகள் சாதியத்தால் ஒடுக்கப்படவில்லை என்று ‘சேர்டிபிகற்’ கொடுக்க நீங்கள் யார்? வாழ்க்கை முழுவதும் சாதியத்திற்கெதிராகப் போராடி இன்றும் ஈழத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் சாதியொழிப்புப் போராளிகளான தங்கவடிவேல் மாஸ்டரும், தெணியானும், டொமினிக் ஜீவாவும், சி.கா. செந்திவேலும் ஈழத்தில் சாதியொழிந்துவிட்டது எனச் சொல்லட்டும் நாங்கள் வாயையும் அதையும் பொத்திக்கொண்டு சும்மாயிருக்கிறோம். உங்களுக்கு எப்பனாவது நேர்மையிருந்தால் நான் மேலே குறிப்பிட்ட பெரியோர்களின் இன்றைய எழுத்துகளைப் படித்துவிட்டு, அவர்களின் உரைகளைக் கேட்டுவிட்டு அதன் பின்பு ஈழத்தில் சாதியில்லை என நெஞ்சிலே கையை வைத்துச் சொல்லுங்கள்!
***
கடந்த பத்து வருடங்களாகவே புகலிடச் சூழலில் சிறுபத்திரிகைகளிலும் இலக்கியச் சந்திப்புகளிலும் கருத்தரங்குகளிலும் தலித் அரசியல் விவாதிக்கப்பட்டு வந்தாலும் நடந்து முடிந்த தலித் மாநாடோடு தலித் அரசியல் இன்னொரு பரிணாமத்தை எட்டியிருப்பதை அவதானிக்க முடிகிறது. ஈழத்தில் சாதிய விடுதலையைச் சாதிக்க ஒரு தனித்துவமான தலித் அமைப்பு தேவையென்று முற்போக்கு சக்திகளை ஏற்றுக்கொள்ள வைப்பதில் இந்த மாநாடு பெரும் பங்காற்றியுள்ளது.
இதற்கு வெளியே ஊடகங்களில் சாதிய ஒடுக்குமுறைகள் குறித்த உரையாடலையும் இம் மாநாடு தூண்டிவிட்டுள்ளது. தலித் என்ற சொல் தேவையா? பஞ்சமர் என்று ஏன் அழைக்கக் கூடாது? ஈழத்தில் பிறப்புச் சான்றிதழ்களில் சாதி குறிப்பிடப்படுவதில்லையே? என்ற தொடக்க நிலைக் கேள்விகளை மட்டுமல்லாது தமிழ்த் தேசியமும் தலித்தியமும்/ புலிகளும் சாதியமும்/ இடதுசாரிகளும் தலித்தியமும்/ தலித் அரசியலை இலங்கை அரசுக்கு ஆதரவான தமிழ் இயக்கங்கள் தமது அரசியல் இலாபங்களிற்காக ஆதரிக்கிறார்களா? போன்ற முக்கியமான உரையாடல்களையும் இம்மாநாடு தொடக்கி வைத்துள்ளது. 'செயல் என்பதே சிறந்த சொல்' என்பார்கள். ஆனால் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை முப்பத்தேழிற்கும் மேற்பட்ட ஆயுத இயக்கங்களில் செயலோ செயற்பட்டு இப்போது மொக்கயீனப்பட்டு நிற்கிறோம். எனவே அடுத்த செயலைத் தொடக்க முன்பு எங்களுக்குள்ளே வெளி வெளியான உரையாடல்களும் அதன் வழியே தெளிவான கோட்பாட்டு உருவாக்கங்களும் தேவை. அடுத்த தலித் மாநாட்டை லண்டனில் நடத்தப்போவதாக லண்டன் தோழர்கள் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். அங்கேயும் விவாதிப்போம், உரையாடுவோம். வெற்றுப் பேச்சாளர்கள் என்று சில 'செயல் வீரர்கள்' எங்களை நக்கல் செய்யக் கூடும். பாவம் அவர்கள் அறியாமல் செய்கிறார்கள். தோழர்களே! ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தில் களப்போராளிக்கு இருக்கும் தேவை, முக்கியத்துவம், கடமை ஆகியவை சிந்தனையாளர்களிற்கும் எழுத்தாளர்களிற்கும் கருத்துப் போராளிகளிற்கும் இருக்கின்றன என்பதை மறவாதீர்கள்!
Monday, October 29, 2007
Wednesday, October 24, 2007
தமிழ்த் தேசியமும் தலித்தியமும்
- ராகவன்
“நீங்கள் உங்களை ஒரு தேசம் எனக் கருதுவது வெறும் பிரமை. பல்வேறு சாதிப் பிரிவினைகள் கொண்டவர்கள் தங்களை ஒரு தேசம் என்று அழைக்க என்ன அருகதை இருக்கிறது? நிலவி வரும் சமூக ஒழுங்கை மாற்றாதவரை நீங்கள் எவ்வித முன்னேற்றமும் அடையப்போவதில்லை. சாதியக் கட்டமைப்பிலிருந்து நீங்கள் எதனை உருவாக்கினாலும் அது இறுதியில் உடைந்துதான் போகும்”
-அம்பேத்கர்
இந்தக் கட்டுரையின் நோக்கம் இன்று இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் இன – தேசியவாதச் சிந்தனை முறைமையைக் கேள்விக்குள்ளாக்குவதும் தலித் பிரக்ஞைக்கும் தேசியவாதக் கருத்தியலுக்குமுள்ள தீர்க்கப்பட முடியாத முரண்பாடுகளை அடையாளம் காண்பதுமாகும்.
தமிழ்த் தேசியவாதக் கருத்தியல் யாழ்ப்பாணத்திலேயே அரும்பி வேர்விட்டு விருட்சமாகியதால் யாழ்ப்பாணச் சாதிய அமைப்பு முறையையும் ஒடுக்கும் சாதியினரின் ஆதிக்கத்தையும் அதன் அரசியல் அதிகார வேட்கையையும் பற்றி மட்டுமே இந்தக் கட்டுரை ஆராய்கிறது.
தமிழத் தேசியவாதம் குறுகிய நோக்கம் கொண்டது. அது தமிழர் என்று தான் வரையறுக்கும் மனிதர் அல்லது மனித குழுவினர் அல்லாதவரை அந்நியராக, விரோதியாகக் கருதுகின்றது. தேசியவாதத்திற்கு உலகளாவிய பார்வை கிடையாது. அது தன்னைத் தான் கற்பனை பண்ணும் பிரதேசத்திற்குள் குறுக்கிக் கொள்கிறது. பிறப்பையும் பாரம்பரியத்தையும் மொழியையும் கலாச்சாரத்தையும் தனது அடையாளத்திற்கான கருப்பொருட்களாகக் காண்கின்றது.
தமிழ்த் தேசியவாதம் சாதிய அடிப்படையிலான சமூக - கலாச்சாரக் கூறுகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. ஏனெனில் அதன் அடிப்படை பிறப்பு, இரத்த உறவு, பாரம்பரிய நிலம் போன்ற சாதியக் கருத்து நிலைகளே. பிறப்பு உனது முற்பிறப்பில் செய்த நன்மை தீமைகளால் நிச்சயிக்கப்படுகிறது என்ற சனாதன சைவக் கோட்பாட்டால் நியாயமாக்கப்படுகிறது. இதுவே சாதியின் அடிப்படை என வேதம் சொல்கிறது. இரத்தம் தூய்மையானது, அது மற்ற சாதிகளுடன் கலந்தால் அழுக்காக போய்விடும் - இங்கு இரத்தம் என்பது விந்தும் சேர்ந்தது - என்கிறது. சாதியவாதத்தின் இதே அடிப்படையைத் தமிழத் தேசியவாதமும் கொண்டிருக்கிறது. தாழ்த்தப்பட்டவனுக்கு நிலம் சொந்தமில்லை. எனவே பாரம்பரிய நிலம் என்பது ஆதிக்கசாதியினரின் நிலங்களேயாகும்.
‘தலித்’ என்ற பதத்திற்கு நசுக்கப்பட்ட மக்கள் அல்லது நொருக்கப்பட்ட மக்கள் என்பது பொருளாகும். மக்களைப் பிறப்பின் அடிப்படையில் சாதிகளாக அடையாளப்படுத்தும் ஆதிக்கசாதிச் சனாதனிகளால் தங்கள்மீது திணிக்கப்பட்ட பஞ்சமர், அவர்ணர், இழிசனர், தீண்டத்தகாதோர், அரிசனர் போன்ற சொல்லாடல்களைத் தலித்தியம் உறுதியாக நிராகரிக்கிறது. இந்தச் சாதியச் சொல்லாடல்கள் தங்களை இழிவுசெய்ய ஆதிக்கசாதியினரால் உருவாக்கப்பட்டவையெனத் தலித்தியம் கருதுகிறது.
“1972ம் வருட தலித் பாந்தர்களின் (Dalit Panthers) அறிக்கை பின்வருமாறு கூறுகிறது:
“தாழ்த்தப்பட்டவன், நவீன புத்த மதத்தவன், தொழிலாளி, கூலி விவசாயி, பெண், அரசியலிலும் பொருளாதாரத்திலும் சுரண்டப்பட்டவர்கள் போன்றவர்கள் தலித்கள். தலித்கள் கடவுளை நம்புவதில்லை. மறுபிறவியையும் நம்புவதில்லை. ஏற்றத் தாழ்வுகளைக் போதிக்கும் புனித நூல்ளைத் தலித்கள் நிராகரிக்கிறார்கள். அவர்கள் விதியை நம்புவதில்லை. ஏனெனில் இந்த கருத்தாக்கங்கள் தான் அவர்களை அடிமையாக்கின.”
தலித்தியம் தமிழத் தேசியத்தின் அடிப்படைக் கருத்தியலை கேள்விக்குள்ளாக்குகிறது. ‘சாதி அடிப்படை பிறப்பாலானது’ என்ற சனாதன சைவ வேளாள ஆதிக்கசாதிக் கருத்தியலை மறுதலிப்பதன் மூலம் அது பிறப்பால் தமிழன் என்ற தேசிய அடித்தளத்தையே தகர்க்கிறது. தமிழ்மொழி சாதியக் கூறுகளை கொண்டிருப்பதை அம்பலப்படுத்தித் தமிழ் பேசுபவன், தமிழன் என்ற தேசிய அடையாளத்தையே நிர்மூலமாக்குகிறது. நிலம் மறுக்கபட்ட மனிதனின் பாரம்பரியப் பிரதேசம் எங்கே இருக்கின்றதெனக் கேள்வியெழுப்பித் தாய் நிலக் கோட்பாட்டை கேள்விக்குள்ளாக்குகிறது. கோயிலுக்குள் அனுமதிக்கப்படாத மக்களை, அடிமையிலும் இழிவாக நடத்தப்படும் மக்களைத் தமிழ் கலாச்சார ஒற்றை அடையாளத்திற்குள் திணிக்கப்பதைத் தலித்தியம் எதிர்க்கின்றது. மாறாக தலித்தியம் தன்னை ஒடுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், அரசியல் - பொருளாதாரச் சுரண்டல்களிற்க்கு ஆட்பட்டவர்கள் போன்ற விளிம்புநிலை மக்களுடன் தன்னை அடையாளப்படுத்துகிறது. எனவே அதற்குகொரு உலகளாவிய தத்துவப் பார்வை இருக்கிறது.
அடையாளம் என்பது நித்தியமானது என்பதைத் தலித்தியம் மறுதலிக்கிறது. நிலப்பிரபுத்துவத்தின் அழிவோடு சாதி ஏற்றத்தாழ்வுகள் மறைந்துவிடும் என்ற படிமுறை வளர்ச்சி அடிப்படையிலான மரபு மார்க்ஸியவாதத்தையும் தலித்தியம் நிராகரிக்கின்றது.
தமிழத் தேசியவாதம் தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்ட வரலாறுகளை இருட்டடிப்பு செய்து தேசிய விடுதலைப் போராட்டத்தின் வரலாறே இலங்கையின் வடக்குக் கிழக்கு வரலாறு எனத் திரிக்கிறது. ‘சிறுபான்மைத் தமிழர் மகாசபை’, ‘தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கம்' போன்றவை இயங்கியதையும் தலித்கள் தமிழீழப் போராட்டம் தொடங்குவதற்கு முன்னதாகவே ஆலயப் பிரவேசப் போராட்டம், உணவகங்களில் சமவுரிமைப் போராட்டம், பாடசாலைகளில் அனுமதிக்கான போராட்டம் போன்ற பல போராட்டங்களில் ஈடுபட்டனர் என்பதையும் அவர்கள் யாழ்ப்பாண ஆதிக்கசாதி வெறியர்களின் வன்முறைகளிற்கும் கொலைகளிற்கும் ஆளானார்கள் என்பதையும் தமிழத் தேசியம் மறைக்கின்றது.
1958 - 1977- 1983 இன வன்முறைகளைத் தனது ஒடுக்கப்பட்ட வரலாற்றின் அத்தியாயங்களாகக் காட்டும் தமிழ் தேசியவாதம் 1944ல் ஒரு தலித் மூதாட்டியின் உடலை வில்லூன்றிச் சுடலையில் தகனம் செய்ய முயன்ற முதலி சின்னத்தம்பி என்ற ஒரு தலித்தை வெள்ளாளர்கள் சுட்டுக் கொன்றதையும் சங்கானைப் போராட்டத்தில் சின்னர் காத்திகேசுவைக் கொன்றதையும் இன்னும் பலபத்துச் சாதியப் படுகொலைகளையும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மேல் நூற்றாண்டுகளாக நிகழ்த்தப்பட்ட வன்முறைகளையும் குறித்துக் கள்ள மௌனம் சாதிக்கிறன்றது. 1960களில் ஆலயப் பிரவேசம் மேற்கொண்ட தாழ்த்தப்பட்ட மக்களின் மேல் நிகழ்ந்தப்பட்ட சாதிவெறி வன்முறைகள் பற்றியும் அது வாய் திறக்க மறுக்கிறது.
சாதிய ஒடுக்குமுறை குறித்துப் பேசினால் தமிழத் தேசியத்தின் அரசியல் வீச்சு அற்றுப்போய்விடுமென்பதே எதார்த்தம். தமிழ் தேசியவாதக் கருத்தியல் சாதிய கூறுகளிலேயே கட்டப்பட்டிருக்கிறது. சாதியத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் அதன் தேசிய இருப்புக்கு ஆபத்தாக வந்துவிடும் என்பதில் தமிழ்த் தேசியவாதம் கவனமாகவே இருக்கின்றது என்பதை அதன் நடவடிக்கைகளும் சாதியக் குணாம்சமும் நமக்குக் காட்டுகின்றன.
சாதி சமயமற்ற ‘சோசலிசத் தமிழீழம்' வெறும் காகித்ததில்தான். தாயகத்தை மீட்ட பின்பு ஈழத்தில் சாதியற்ற சமத்துவம் நிலவும் என்பதைத் தலித்தியம் அப்பட்டமான ஏமாற்று வித்தையாகவே கருதுகின்றது.
தமிழ்த் தேசியவாதம் இன அடிப்படையிலானது. அது மொழி, கலாச்சாரம் என்ற இரு முதன்மைக் கருதுகோள்களிற்குள் தன்னை வரையறுக்குகிறது. தமிழ் தேசியவாத கருத்தியல் தமிழினம் தனக்கென்று தனித்த இயல்புகளை கொண்டிருப்பதாலும் அவர்கள் மொழி, கலாச்சாரத்தால் ஒன்றுபட்டிருப்பதாலும் தமிழினம் என்பது கல் தோன்றி மண் தோன்றா காலத்திலிருந்து மாறாமல் நிரந்தரமாக இருக்கிறதென்றும் இந்த மாறாத இயல்பே அவர்களை அய்க்கியப்படுத்தி அவர்களுக்கான ஒரு கூட்டான உள்ளுணர்வை கொடுப்பதாகவும் தங்களை ஒருங்கிணைக்கும் உள்ளுணர்வே தங்களது இருப்பைத் தேசமாக உணர வைக்கிறது என்கிறது தமிழ் தேசியம். இந்தக் கருத்தியலை நிலை நாட்டுவதற்கு கதைகள், புராணங்கள் இலக்கியங்களைத் தமிழ் தேசியவாதம் ஆதாரமாக காட்டுகிறது. தமிழரின் அரசுகள் முன்னர் தனியாக இருந்ததாகவும் அபகரிக்கப்பட்ட தேசத்தின் இறைமையை மீளவும் நிலை நாட்டுவதே தமிழரின் கடமை என்று அது முழங்குகிறது.
“மாறாத் துயிலில் ஆழ்ந்த அழகியின் (Sleeping beauty) இளமையின் மாறாத்தன்மை போன்று உருவகிக்கப்படும் நித்தியமான கலாச்சாரம் ஆய்வுக்கு உள்ளாக்கப்படும் போது அடிபட்டுப் போகின்றது” என்பார் ஸ்டுவட் கால் (Stuard Hall) .
தமிழ்த் தேசியவாதக் கருத்தியல் இந்த அடிப்படையிலேயே தன்னை உருவகம் செய்கின்றது. தமிழின் இளமை, தொன்மை, தமிழ் கலாச்சாரத்தின் நித்தியம் ஆகிய சாராம்சவாதங்களையே தமிழ்த் தேசியவாதம் முன் வைக்கிறது. ஆனால் தேசியக் கருத்தியலானது நவீனகால உருவாக்கமென்பதையே ஆய்வுகள் நமக்குக் கூறுகின்றன. தேசியவாதக் கருத்தியல் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின், வர்க்கத்தின் அபிலாசைகளை அடைவதற்கான அரசியல் வடிவமே. இந்த அரசியல் அதிகாரத்தை அடைவதற்கான கருத்தியல் பரிமாணத்தைத் தமிழ் தேசியவாதம் மொழி, கலாச்சாரம் ஆகிய கருத்துருக்கள் மூலமாக வடிவமைக்கிறது. “சமுக ஏற்றத் தாழ்வுகளையும் சுரண்டலையும் மறைத்து அனைவரும் ஒன்று என்ற மாயையைத் தேசம் கொடுப்பதால் தேசியம் ஒரு கற்பிதம்” என்பார் அண்டர்சன்.
பண்டைய தமிழ் இலக்கியங்களிலோ புராணங்களிலோ ‘தமிழன்’ என்ற சொல்லாடல் இருப்பதை யாராவது கண்டு பிடித்தால் தமிழ்த் தேசியம் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தது என்பதை நாம் ஒத்து கொள்ளத்தான் வேண்டும். ‘தமிழன்’, ‘தமிழச்சி’ அல்லது ‘தமிழர்’ என்ற சொல்லாடலகள் சங்க இலக்கியங்களிலோ பக்தி இலக்கியங்களிலோ தேவார திருவாசகங்களிலோ கிடையவே கிடையாது. ‘தமிழ்' என்ற சொல்லாடல் மொழியைக் குறிக்கச் சில இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் ‘தமிழர் 'என்ற இன அடையாளப்படுத்தல் சங்க இலக்கியங்களிலோ காலனித்துவத்துக்கு முன்வந்த பனுவல்களிலோ இல்லை. ஆனால் சாதி பற்றி பல்வேறு இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. புறனானூறில் அந்தணர், குறவர், வேந்தர், குடிகள் போண்ற சொற்கள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. இது மேலதிக ஆய்வுக்கு எடுக்கப்பட வேண்டியது.
‘தமிழர்' என்ற அடையாளப்படுத்தல் நவீனகால உருவாக்கம் என்பதே தெளிவு. தமிழ் இன அடையாளப்படுத்தலுக்கு முன் சாதியரீதியான அடையாளப்படுத்தல் இருந்தது என்பதும் இங்கு தெளிவாகின்றது. எனவே தமிழ்த் தேசியவாத கருத்தியலின் தொன்மைவாதம் ஆய்வுக்குள்ளாக்கப்படும் போது ஆட்டம் காண்கிறது.
வெள்ளையர்களின் காலனியாதிக்கக் காலத்திற்கு முன்னரே சாதி அமைப்பு இருந்தது என்பதற்கு ஆதாரங்களைத் திரட்டத் தேவையில்லை. எனவே இந்த கட்டுரையானது தமிழத் தேசியம் குறித்துப் பின்வரும் நான்கு அடிப்படை விடயங்களைப் பரிசீலிக்கின்றது.
(1) காலனிய காலகட்டத்தில் ஆதிக்க சாதியினர் -குறிப்பாக வேளாளர்கள்- எவ்வாறு தமது அரசியல் - சமூக- பொருளாதார நிலைமைகளை வலுப்படுத்தினார்கள்?
(2) சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து 1983 வரையான தமிழத் தலைமைகளின் கோரிக்கைகளும் அவற்றின் சாதிய பரிமாணமும்.
(3) 1983ற்குப் பின்னான ஆயுத அமைப்புகளின் தோற்றமும் சாதிய பரிமாணமும்
(4) 1986ற்குப் பின்னான விடுதலைப் புலிகளின் சர்வாதிகார அரசியலும் சாதியமும்.
காலனித்துவ காலகட்டம்:
போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், காலகட்டத்தில் வரி விதிப்பதற்காகவும் அரசியல் காரணங்களுக்காகவும் ஏற்கனவேயிருந்த சாதியடிப்படையில் சனத்தொகையைப் பகுத்தனர். தாழ்த்தப்பட்ட மக்களை அடிமைகள் என்று டச்சுகாரர்கள் வகுத்தனர். இக்காலகட்டத்திலேயே தாழ்த்தப்பட்டவர்கள் நிலமற்றவர்களாக ஆக்கப்பட்டனர். ஆதிக்க சாதியினரின் அதிகாரம் மேலும் வலுவாக்கப்பட்டது.
காலனித்துவ காலத்திலும் அதன் பின்னும் யாழ்ப்பாண மத்தியதர வர்க்கம் ‘உயர்’ சாதி அடிப்படையிலேயே தனது ஆதிக்கத்தை தக்கவைத்து கொண்டது. காலனித்துவத்திற்குப் பின்னான அரசியல் அதிகாரப் பகிர்வு போட்டியில் ஏற்கனவே தான் காலனித்துவ காலத்தில் அனுபவித்து வந்த சலுகைகளும் அதிகாரமும் பறிபோய்விடுமென்ற பயமே தமிழ்த் தேசியவாதக் கருத்தியலின் அடிப்படை.
“காலனித்துவ காலகட்டத்தில் புதிய சமூக அமைப்புக்கான கருத்தியல் தளமான கல்விமுறை அதன் ஆரம்பத்திலேயே ஏற்கனவே ஆதிக்கத்தில் இருந்த சமுகக் குழுக்களால் குத்தகைக்கு எடுக்கப்பட்டது… இந்தச் சக்திகளுக்குத் தாங்கள் பரம்பரையாக ஆதிக்கத்திலிருக்கிறோம் என்ற பார்வையை மாற்ற வேண்டிய எவ்வித தேவையும் இருக்கவில்லை” என்கிறார் அம்பேத்கர். காலங் காலமாக ஆதிக்கத்திலிருந்த யாழ்ப்பாணத்து ஆதிக்க சாதியினர் ஆங்கிலக் கல்வியைப் பெற்றுத் தமது ஆதிக்கத்தைச் சமூக, பொருளாதார ரீதியில் மேலும் வலுவாக்கிக் கொண்டனர்.
ஏற்கனவே உரிமைகள் மறுக்கப்பட்டிருந்த தாழ்த்தப்பட்ட மக்களின் ஜீவாதார உரிமைகள் காலனித்துவ ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளால் மேலும் நசுக்கப்பட்டன. பிரித்தானிய காலனித்துவம் ஆதிக்க சாதியினருடன் சமரசம் செய்துகொண்டு அவர்களுக்கு மேலும் அதிகாரங்களை வழங்கியது பிரித்தானிய காலனித்துவம் மையப்படுத்தப்பட்ட நிர்வாக வசதிக்காக அரசியல் அமைப்பு முறையை அமுல்படுத்தியதும் இந்த நிர்வாக அலகுகளை இயக்குவதற்காக ‘கிளாக்கர்களை’ உள்ளுரிலிருந்து தேர்ந்தெடுத்ததும் வரலாறு. இன்று தேசியவாதத்தின் பீஷ்மரான கா.சிவத்தம்பி தனது முன்னைய ஆய்வொன்றில் “காலனித்துவம் ஏற்கனவே சாதியால் வரையறுக்கப்பட்டிருந்த சமுக ஒழுங்கைக் குலைக்க முயலவில்லை. மாறாக ஆதிக்க சாதியினரை முதன்மைப்படுத்துவதன் மூலம் தனது இருப்பை தக்கவைத்து கொண்டது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஆதிக்க சாதியாயிருந்த வெள்ளாளரை ஆங்கிலக் கல்வி கற்க வைத்துத் தனது கிளாக்கர் படையை நிறுவியது…யாழ்ப்பாணத்தில் கல்விக்கூடங்களின் தொகையும் அதனால் உருவாக்கப்பட்ட அரச அலுவலர்களது தொகையும் அதன் சனத்தொகை வீதாசாரத்துடன் ஒப்பிடும்போது அதீதமானது” என்கிறார்.
காலனித்துவப் பொருளாதார அமைப்பானது உற்பத்தியை மையமாகக் கொண்டிருந்தது. இந்தக் காலகட்டத்தில் ‘உயர்’ சாதியினர் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ள ஊக்குவிக்கப்பட்டுப் பெருவாரியாக அரச அலுவலகப் பதவிகளில் அமர்த்தப்பட்டனர். காலனிய அரசு நிறவாத அரசாக இருந்ததால் சாதிரீதியான பிரிவினைகளை மாற்றக்கூடிய அரசியல் தார்மீகப் பலம் அதற்கு இருக்கவில்லை. கிறிஸ்தவ மதம் யாழ்ப்பாணத்தில் சாதிப்பிரிவினைகளை உள்வாங்கி கொண்டது இதற்கு நல்ல உதாரணம். ஒருசில பாதிரிமாரும் நிறுவனங்களும் கல்விக் கூடங்களைத் தாழ்த்தப்பட்ட மாணவர்களிற்குத் திறந்து விட்ட போதும் சாதிய முரண்பாடுகளில் ஆதிக்க சாதியினரின் விருப்புகளிற்கு காலனித்துவ அரசு விட்டுக்கொடுத்தே வந்தது. சமுக மாற்றத்தைக் காலனிய அரசு விரும்பவில்லை. அது தனது இருப்புக்கு ஆபத்தாகலாம் எனக் காலனித்துவ அரசு கருதியிருக்க இடமுண்டு.
யாழ்ப்பாணத்து ஆதிக்க சாதியினரின் இருப்பிற்கு சைவ சித்தாந்தக் கருத்தியல் நியாயம் கற்பித்தது. வர்ணாசிரம தர்மத்தின்படி சூத்திரர்களாக வரையறுக்கப்படும் சாதி வெள்ளாளர்கள் யாழ்ப்பாணத்து சமூக அமைப்பில் ஆதிக்கம் செலுத்தியதோடு அதற்கான சித்தாந்தத்தையும் வகுத்தனர். அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் திரளை குடிமை, அடிமை, சிறைக்குட்டிகள் என்ற வகைகளிற்குள் அடக்கினர். நிலங்கள், கோயில்கள் அனைத்தும் பெருமளவில் வெள்ளாளர்களின் சொத்தாகவே இருந்தன. புறநடையாகக் கரையார்கள் மட்டும் வெள்ளாளருக்குப் போட்டி சாதியாக இருந்து வந்தனர். இது பற்றிய ஆய்வு தனியாக மேற்கொள்ளப்பட வேண்டியது.
சாதிய இறுக்கம் காலனித்துவ காலத்தில் நெகிழ்ந்து வருவதையும் கிறிஸ்தவ மதமாற்றங்கள் சாதிய கட்டுமானத்தைச் சற்றுச் சலனப்படுத்துவதையும் கண்ட வெள்ளாளச் சமூகம் தனது சாதிய நலனை ஆறுமுக நாவலரிடம் அடையாளம் கண்டது. ஆறுமுக நாவலரின சைவ சித்தாந்தம் சாதிய வேறுபாட்டை நியாயப்படுத்தியது. இந்தியாவில் இந்து சமயத்திற்குள் சீர்சிருத்தம் செய்யப் புறப்பட்டுச் சாதியை ஒழிக்க முயன்ற வள்ளலார் போன்ற ஆன்மீகவாதிகளை நாவலர் எதிர்த்து வள்ளலாரின் பாட்டு ‘மருட் பா’ என வாதிட்டார். சாதியத்தை இறுக்கமாக பேணுவதற்கான வழிமுறைகளை நாவலர் சைவசித்தாந்தத்தின் மூலம் வழி மொழிந்தார். சைவ சித்தாந்தம் கூறுகிறது:
“எவர்கள் இடத்திலே போசனம் பண்ணல் ஆகாது?
தாழ்ந்த சாதியர் இடத்திலும் கள்ளுக் குடிப்பவர் இடத்திலும் மாமிசம் புசிப்பவர் இடத்திலும் போசனம் பண்ணல் ஆகாது.”
நாவலர் கிறிஸ்தவ மதமாற்றத்தை எதிர்த்தது அந்த மதம் சம்பந்தமான வெறுப்பாலல்ல. அது சாதியக் கட்டுமானத்தைக் குலைத்துவிடும் என்ற பயத்தால்தான். தனது பாடசாலையில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அனுமதி மறுத்த நாவலர் ஏதாவது ஒரு பாடசாலையில் தாழ்த்தப்பட்ட மாணவன் ஒருவன் அனுமதிக்கபட்டால் அதற்கு எதிராகவும் கொக்கரித்தார். “பறை பஞ்சமர், பெண்கள் அடிப்பதற்காகவே பிறந்தார்கள்” என்றார் நாவலர். இந்த சைவ சித்தாந்தக் கருத்தியலின் அடிப்படைதான் இன்றைய தமிழத் தேசியவாதததின் தோற்றமும் வளர்ச்சியும்.
சாதி அமைப்புமுறை ஆதிக்க சாதிகளால் தொடர்ந்தும் இறுக்கமாகப் பேணப்பட்டு வரும் அதேவேளையில் தங்களது நலன்களைத் தொடர்ந்து பேணிக்காக்கவே யாழ்ப்பாண மேலாதிக்க சமூகம் தேசியவாதத்தை அரசியல் கருத்தியலாக விதைத்தது.
காலனித்துவ அரசுகள் படிப்படியாக சரிந்து வரும் காலத்தில் பிரித்தானிய காலனித்துவ அரசு காலனித்துவத்திற்கு எதிராக பெரும் போராட்டம் நிகழ்த்தாமலே சுதந்திரம் பெற்ற இலங்கையை ஒரு ‘மாதிரி’ நாடாக, ஒரு ‘சக்சஸ் ஸ்டோரி’யாகப் பார்த்தது. தாங்கள் வெளியேறுவதற்கு முன்பாகச் சில திட்டங்களையும் பரிந்துரைத்து சுதேசிகளுக்கு ஆட்சிக் ‘கலை’யைக் கற்றுக்கொடுத்தது.
இந்தக் காலகட்டம் காலனித்துவ அரசு பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வந்த காலம். டொனமூர் கொமிஷன் சுதேசிகளின் அதிகாரத்தைப் பற்றிப் பேசிய காலம். ‘தமிழர்’ தமக்குப் போதிய அதிகாரம் வேண்டுமென்ற காலம். தமிழத் தேசியவாதிகளின் கருத்தின்படி தமிழர் தம்மை ஒரு தனித்துவமான இனமென்று கூறி அதிகாரப் பகிர்வு கேட்ட காலம். ஆனால் காலனித்துவத்துக்கு முற்பட்ட காலத்திலிருந்தே அடக்கப்பட்டு வந்த இழிநிலைக்குத் தள்ளப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் நலன்களைப் பற்றித் தமிழ்த் தலைமை மூச்சும் காட்டவில்லை.
1944ல் “நூற்றாண்டு காலமாக யாழ்ப்பாணச் சமூகம் மிசனரிகளாலும் அரச நடவடிக்கைகளாலும் பயன்பெற்றுக் கல்வியில் முதன்மையாக நிற்கின்றது’ என்று அறிக்கையிட்டது சோல்பரிக் கொமிஷன். ஆனால் அந்தக் கல்வியை பெறத் தடுக்கப்பட்டவர்களாகவே தாழ்த்தப்பட்ட மக்கள் இருந்தார்கள். சோல்பரிக் கொமிஷனிடம் ‘இருக்கும் கல்விக் கூடங்கள் போதாது இன்னும் கல்விக்கூடங்கள் வேண்டும்' என்று கேட்ட யாழ்ப்பாணத் தலைமை மறுபுறத்தில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கல்விகற்ற படித்த பாடசாலைகளை எரித்துச் சாம்பராக்கியது.
இந்த காலத்திலே தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள்மீது சுமத்தப்பட்ட தமிழ்த் தேசியப் பெருங்கதையாடலை நிராகரித்தனர். ‘ஒடுக்கப்படும் தமிழ் ஊழியர் சங்கமம்' 1927ல் உருவாக்கப்பட்டது. சங்கம் தாழ்த்தப்பட்ட மாணவர்களிற்கு பாடசாலை அனுமதியும் சமபந்தியும் கோரிப் போராட்டங்களை நிகழ்தியது. 1931 இல் சர்வசன வாக்குரிமைக்கு டொனமூர் கொமிசன் சிபார்சு செய்தபோது பொன். இராமநாதன் நடேசன் போன்ற தமிழ்த் தலைவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் அரசியல் உரிமையொன்று கிடைப்பதைப் பொறுக்க முடியாமல் சர்வசன வாக்குரிமையை எதிர்த்தனர். அவர்களின் எதிர்ப்பு அவர்களின் ஆதிக்கசாதி நலனிலிருந்தே முகிழ்த்தது. ஆனால் இன்றைய தமிழ்த் தேசியவாதிகளோ ‘பெரும்பான்மைச் சிங்களவரகள் ஆட்சிக்கு வந்துவிடுவார்கள் என்ற தூரப்பார்வை இத் தலைவர்களுக்கு இருந்ததனால் அவர்கள் அதனை எதிர்த்தார்கள்’ என வியாக்கியானம் கொடுக்கிறார்கள்.
நிலப்பிரபுகளுக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கவேண்டும், கல்வியற்றவர்களுக்கும் பெண்களுக்கும் அந்த உரிமை இல்லை என்று வாதாடினார் இராமநாதன். ஆனால் சிங்கள நிலப்பிரபுக்கள் எண்ணிக்கையில் தமிழ் நிலப்பிரபுக்களை விட அதிகம். எனவே சர்வசன வாக்குரிமை இல்லாவிடினும் சிங்களப் பெரும்பான்மையே அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கும். தவிரவும் இராமநாதன் சிங்கள மேல்தட்டு வர்க்கத்துடன் சுமூகமான உறவை வைத்திருந்ததுதான் வரலாறு. எனவே இங்கே இராமநாதனின் ‘தூரப்பார்வை’ என்ற வாதமே அடிபட்டுப்போகிறது.
தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களைத் தமிழ்த் தேசிய இனமாக அடையாளம் காண மறுத்தனர். யாழ்ப்பாணத்து ‘உயர்’சாதிக்காரரின் அரசியல் அதிகாரப் போட்டிகளின் விளைவே தமிழ் தேசியவாதக் கருத்தியலின் உள்ளுறை என்பதை அவர்கள் புரிந்து வைத்திருந்தனர். அதிகாரப் பகிர்வு கேட்கும் அதே வர்க்கம் தாழ்த்தப்பட்டவர்களிற்கு அரசால் வழங்கப்பட்ட சிறிய சலுகைகளை கூட மூர்க்கமாக எதிர்த்து வந்ததைத் தாழ்த்தப்பட்ட மக்கள் நன்கறிவார்கள். தங்களுக்கு இவர்கள் கொடுத்த அடையாளம் சாதி அடையாளமே தவிர தமிழ் அடையாளமல்ல என்பது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தெரியும். 1943ல் வட இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபை உருவாக்கப்பட்டதும் இதன் பின்னணியில்தான். அடுத்த வருடமே மகாசபை அகில இலங்கைச் சிறுபான்மை தமிழர் மகாசபையானது.
1944ல் சோல்பரி கொமிசனின் முன்னால் தனியான ஓர் அறிக்கையை மகாசபை சமர்ப்பித்தது. சிறுபான்மைத் தமிழர்களின் அடிப்படைப் பிரச்சனைகள் வேறானவை, அவர்கள் தமிழ்த் தேசியம் என்ற ஒற்றை அடையாளத்திற்குள் அடங்கமாட்டார்கள் என மகாசபை வலியுறுத்தியது. தங்களது உரிமைகளைச் சாசனரீதியாக உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் எனவும் மகாசபை வலியுறுத்தியது. அய்ம்பதிற்கு அய்ம்பது கேட்ட ஜீ.ஜீ.பொன்னம்பலத்திடம் “தீண்டாமை ஒழிக்கப்படவேண்டும், பாடசாலை அனுமதி தரப்படவேண்டும் போன்ற கோரிக்கைகள் தமிழ்க் காங்கிரஸ் சமர்பிக்கும் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டால் தனி அறிக்கையொன்றைத் தாங்கள் சோல்பரிக் கொமிஷனிடம் சமர்ப்பிக்கவிருப்பதைக் கைவிடுவதாக” மகாசபை தெரிவித்தது. ஆனால் ஆதிக்க சாதியினரின் பிரதிநிதியான பொன்னம்பலம் தாழ்த்தப்பட்ட மக்களின் நியாயமான கோரிக்கைகளைப் புறக்கணித்ததால் மகாசபை தனியாகவே கொமிஷனிடம் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது.
தமிழ்த் தலைமையானது சாதி வெறியர்களுடன் கூட்டு சேர்ந்து மகாசபை அங்கத்தவர்களை மிரட்டியது. சோல்பரிக் கொமிஷன் அங்கத்தவர்களை இரகசியமாக தலித் மக்களின் குடியிருப்புகளிற்கு அழைத்துச் சென்று தாழ்த்தப்பட்ட மக்கள் எவ்வாறு இழிவாக நடத்தப்படுகிறார்கள் என்று மகாசபை உறுப்பினர்கள் காண்பித்தார்கள். ஆனாலும் தமிழ் அரசியல் தலைமைகளின் சாதி அரசியலால் தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கைகள் கிணற்றில் போட்ட கற்களாயின.
சுதந்திரம் பெற்ற காலகட்டத்திலிருந்து 1983 வரையான தமிழ்த் தலைமைகளின் கோரிக்கைகளும் அவற்றின் சாதியப் பரிமாணமும்:
பொருள் உற்பத்திமுறைமை, அதற்கான அரசியல் சமூகக் கட்டுமானம், அதனை வழி நடத்துவதற்கான நிர்வாக இயந்திரம் என்ற அடிப்படையிலேயே இலங்கையில் காலனித்துவ அரசு தனது சுவடுகளை விட்டு சென்றது. காலனியாதிக்க காலத்திலேயே அரச நிர்வாக சேவைகளில் தமது கால்களை ஆழ ஊன்றியிருந்த யாழ் மத்தியதர ஆதிக்கசாதி வர்க்கத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்புகளே இச்சூழலில் இருந்தன. தொழில் வளர்ச்சியற்ற இச்சூழலில் மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்புகளுக்கான போட்டி இனரீதியான சிந்தனைக்குத் தீனி போட்டது.
கல்வி மறுக்கப்பட்டு அரசு நிர்வாகப் பதவிகள் மறுக்கப்பட்டு வந்த தாழ்த்தப்பட்ட மக்கள் இந்த போட்டியின் பங்குதாரரில்லையென்பதுதான் உள்ளங்கை நெல்லிகனி உண்மை. தனிச் சிங்கள மொழிச் சட்டம் 1956ல் நிறைவேற்றப்பட முன்பு ஆங்கிலக் கல்வியே சமூகப்படிகளில் ஏறுவதற்கான கருவியாக இருந்தது. ‘ஆங்கிலக் கல்வி வேண்டாம், தாய்மொழிக் கல்வி வேண்டும்’ என யாழ்ப்பாண அரசியல் தலைமை அதுவரையும் போராடவில்லை. தனிச் சிங்களச் சட்டம் அமுலுக்கு வந்து பின்னர் தமிழ் வடக்குக் கிழக்கில் நிர்வாக மொழியாக பயன்படுத்தப்படும் என மாற்றம் கொண்டுவரப்பட்டது. பின்னர் தாய்மொழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் தொடர்ந்தும் தாழ்த்தப்பட்ட மக்களிற்கான கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்டே வந்தன. அவர்களுக்கு மேற்படிப்பு என்பதும் பல்கலைக்கழகம் செல்வதென்பதும் கனவாகவேயிருந்தன. ஆசிரியர்களிலிருந்து அதிகாரிகள் வரை திட்டமிட்ட வகையில் தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி கற்கத் தடையாக இருந்தனர்.
தமிழர் தமது சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை ஆரம்பித்ததற்கான அடிப்படை காரணம் 1970களில் தரப்படுத்தலை அரசு நடைமுறைப்படுத்தியதே எனத் தமிழ்த் தேசியவாதக் கருத்தியல் முன்வைக்கிறது. கல்வியில் சிறந்த அறிவார்ந்த தமது இனம் தரப்படுத்தலை கண்டு சினந்து போராட்டத்தில் குதித்தது, தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி இதுவெனத் தமிழ்த் தேசியவாதிகள் இன்றும் கூறுகிறார்கள்.
ஆனாலும் காலங்காலமாக ஆரம்பக் கல்வி கூட மறுக்கப்பட்டு வந்த தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டங்களும் வரலாறுகளும் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றது. இலவசக்கல்வி முறை இலங்கையில் இருந்தபோதும் 0.01 வீத சனத்தொகையே மேற்படிப்புக்கு செல்லக்கூடியதாக இருந்தது என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பல்கலைகழகம் செல்லும் போட்டியிலும் அரச அதிகாரிகளாகும் போட்டியிலும் யாழ்ப்பாண மத்தியதரவர்க்கம் முக்கியமான பாத்திரத்தை வகுத்தது. ‘கோழி மேய்த்தாலும் கோர்ணமெந்தில் மேய்க்கவேண்டும்’ என்ற தேவவாக்கு யாழ்ப்பாண ஆதிக்கசாதி அமைப்பின் தாரக மந்திரமாயிருந்தது. தனது பங்குகள் குறைந்து போக அது ஆத்திரம் அடைந்தது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இதுவொரு பிரச்சனையாகவே இருக்கவில்லை. இதனை ஆதிக்க சாதியினரின் பிரச்சனையாகவே அவர்கள் பார்த்தார்கள். ஏனெனில் இதே சமகாலத்தில்தான் அவர்கள் கோவில் பிரவேசம், தேனீர்கடை பிரவேசம் போன்ற பல்வேறு சமூக விடுதலை போராட்டங்களில் ஈடுபட்டு ஆதிக்க சாதியினரால் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டனர்.
அப்போதைய இலங்கை அரசு இந்தப் பிணக்கை ஓரளவு தீர்க்க முன்வந்தபோது தமிழப் பழமைவாதத் தலைமை எரிச்சலடைந்தது. சாதி முறைமைகள், கோவில் பிரவேசம் ஆகிய உள்வீட்டு பிரச்சனையில் அரசு தலையிட வேண்டிய அவசியமில்லையென அது வாதித்தது.
சாதியப் பிரச்சினையை எதிர்கொள்ளத் தமிழத் தலைமைகள் பயந்ததன் அடிப்படைக் காரணம் அவர்களது ஆதரவுத்தளம் மத்தியதர வர்க்கச் சாதிமான்களில் தங்கியிருந்ததாலேயேயாகும்.
சாதி எதிர்ப்புப் போராட்டங்களைத் தமிழ்த் தேசியத் தலைமை கொச்சைப்படுத்தியது அல்லது அது உள்வீட்டு பிரச்சனை என்றது. சண்முகதாசன் போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் சாதிக்கெதிரான போராட்டங்களில் தாழ்த்தப்பட்ட மக்களை இணைத்து போராடியபோது தமிழத் தலைமை ‘சங்கானை ஷங்காயாக மாறுகிற’தென்று இனவாத அரசென்று தங்களால் சொல்லப்பட்ட இலங்கை அரசுக்கு முறையிட்டது.
இதே காலகட்டத்தில்தான் தமிழ்த் தேசியவாதிகளின் பத்திரிகையான ‘சுதந்திரன்’ கோவில் பிரவேசம் பற்றிப் பேசக் கம்யூனிஸ்டுகளுக்கு என்ன தகுதி இருக்கிறது, ஏனெனில் அவர்கள் நாத்திகர்கள் எனப் பக்கம் பக்கமாக எழுதியது.
தமிழரசுக் கட்சி சமபந்தி போசனம் போன்ற நிகழ்வுகளை நிகழ்த்தி சமரசப் போக்கை கொண்டுவர முயன்றபோதும் தாழ்த்தப்பட்ட மக்கள் இதனை வெறும் நாடகமாகவே கருதினார்கள். தமிழ் மக்கள் எல்லாம் ஒன்று என தென்னிலங்கை அரசுக்கு காட்டி தங்களது இனவாத அரசியலை நடத்துவதற்கான தந்திரோபாயத்தில் தாங்கள் பங்குதாரர் இல்லை என தாழ்த்தப்பட்ட மக்கள் அடித்து கூறினார்கள். ‘சமபந்தி போசனம் செய்ய வருபவர்களே சம்பந்தம் பண்ணச் சம்மதமா’ என குரலெழுப்பிச் சாதிய தேசியவாதத்தை அம்மணமாக்கினார்கள
தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சனைகள் ஆதிக்கசாதி யினரின் பிரச்சனைகளாக இருக்கவில்லை என்பது மட்டுமல்ல, அவர்களது பிரச்சனை ஆதிக்கக்கசாதியினரின் நேரடி ஒடுக்குமுறைக்கெதிரான தொடர்ந்த போராட்டமாகவே இருந்தது. 'புத்த மதம் ஆதிக்க மதம்' என்றது ஆதிக்கசாதி. தாழ்த்தப்பட்ட மக்கள் புத்த சமயத்திற்கு மாறுவது தமது சமூக விடுதலைக்கான ஒரு படிக்கல் என்றே கருதினார்கள்.
1970களில் தமிழத் தேசியச் சக்திகள் ஆயுத வன்முறையை ஆரம்பித்தபோதும் 1983வரை அது யாழ்ப்பாணத்துளளேயே முடங்கிப் போயிருந்தது. சிறு குழுக்கள் திடீரென்று ஒரு பொலிஸ்காரனையோ துரோகியென்று முத்திரை குத்தப்பட்டவரையோ கொல்வது அல்லது ஒரு வங்கியை கொள்ளையடிப்பது என்ற மட்டிலேயே அவர்களது நடவடிக்கைகள் 1983 வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. தாழ்த்தப்பட்ட மக்கள் இந்த அலைக்குள் அகப்படவில்லை. ஏனெனில் தமக்கு கல்வியை மறுக்கும் அதே ஆதிக்கசாதியினர்தான் உயர்கல்வி கற்க 'தரப்படுத்தல்' தடையாக இருக்கின்றதென்று கொதித்தெழுந்து போராட்டத்தில் குதித்தது தலித்களிற்கு வேடிக்கையாக இருந்தது. 1971ல் கொண்டுவரப்பட்ட தரப்படுத்தல் 1972ல் மாவட்டரீதியான கோட்டாவாக மாற்றப்பட்டுப் பின்தங்கிய மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. இதனால் மட்டக்களப்பு, மன்னார், மலையகம், வன்னி போன்ற தமிழ்ப் பிரதேசங்களிலிருந்து முதன்முறையாக மாணவர்களிற்குப் பல்கலைகழகம் போகும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்த விடயத்தை யாழ் மையவாதத் தமிழ்த் தேசியவாதிகள் முற்றாக மறைத்துவிடுகிறார்கள். தமிழ்த் தேசியவாதத்தின் உருவாக்கமே யாழ்ப்பாணத்து ஆதிக்க சாதியினரின் அபிலாசைகளை பிரதிபலிப்பதாக இருந்தது.
1976ல் வட்டுகோட்டைத் தீர்ர்மானத்தை தமிழர் விடுதலைக் கூட்டணி நிறைவேற்றிய போது தமிழீழம் சாதி சமயமற்ற சமதர்ம குடியரசென்றும் தமிழீழத்தில் தீண்டாமை சட்டரீதியாக ஒழிக்கப்படும் என்றும் கூறியது. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களால் அடிப்படை உரிமைகள் சட்டரீதியாகக் காகிதங்களில் ஓரளவிற்கு உத்தரவாதப்படுத்தினாலும் கூட அந்தக் குறைந்த பட்ச உரிமைகளைக் கூட நடைமுறைப்படுத்த அல்லது தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டத்திற்கு ஆதரவளிக்கக் கூட்டணி குறிப்பிடத் தகுந்த எந்தப் பங்களிப்பையும் இன்றுவரை கொடுத்ததில்லை. அரசியல் சாசனத்தில் தலித்களிற்குச் சில உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டிருந்தும் அதனை நடைமுறைப்படுத்த யாழ்ப்பாண ஆதிக்க சாதியினர் பெரும் தடையாயிருந்தனர். தேசியவாதத் தலைமை இந்தச் சாதிய மேலாதிக்கதால் கட்டப்பட்டதால் நிலவிவரும் சாதிய அமைப்புமுறையை எதிர்ப்பதற்கான வீரியம் அதனிடமிருக்கவில்லை. மாறாகத் தாழ்த்தப்பட்ட மக்களைத் தேசியவாதத்திற்குள் உள்வாங்குவதற்கு அது முயற்சித்தது.
1981ம் ஆண்டில் யாழ்ப்பாண நூலகம் பொலிஸாரால் தீக்கிரையாக்கப்பட்ட போது கிளர்ந்தெழுந்த யாழ்ப்பாண ‘உயர் 'சாதிச் சமூகம் அதேகாலகட்டத்தில் எழுதுமட்டுவாளில் சாதிவெறியர்கள் தாழ்த்தப்பட்ட சிறார்களைத் தாக்கி அவர்களது புத்தகங்களைப் பறித்து தீக்கிரையாக்கும் போது ஏன் பார்த்துக்கொண்டிருந்தது? எனக் கேள்வியெழுப்பினார் கே.டானியல்.
தாழ்த்தப்பட்டவர்களுக்கு படிப்பு எதற்கு அது எங்களது ஏகபோகம் என்ற ஆதிக்கசாதிச் சிந்தனை முறையே இதற்குக் காரணம். இந்த ஆதிக்கசாதிச் சிந்தனை முறையை அரசியல், சமூக தளமாகக் கொண்ட தேசியவாதக் கருத்தியல் தாழ்த்தப்பட்ட மக்களின் அபிலாசைக்கு முரணாகவே அப்போதும் இப்போதும் செயல்படுகிறது
1960களின் கோவில் நுழைவுப் போராட்டத்தை ஆய்வு செய்து “மாவிட்டபுரக் கோவில் பிரவேசப் போராட்டமானது வெள்ளாள ஆதிக்கத்தை வைதீகத் ( Ritual) தளத்தில் எதிர்கொண்டது. இந்தப் போராட்டங்கள் வன்முறை கொண்டு ஒடுக்கபட்டன. சாதி எதிர்ப்புப் போராட்டங்களைத் தணிப்பதற்காகத் தமிழ்த் தலைமை ஒரு ‘தற்காப்புத் தேசிய வாதமாக’ ( Defensive Nationalism) தமிழ்த் தேசியவாதத்தை முன்வைத்தது. இந்த உத்தியின் மூலம் இன உணர்வுகளிற்குள் தாழ்த்தப்பட்ட மக்களை உள்ளீர்க்க தமிழ்த் தலைமை முயன்றது” என்கிறார் பாகன்பேகர் (1990).
சாதிய ஒடுக்குமுறைகளை ‘ஒற்றுமை’யின் பேரால் தமிழத் தேசியவாதம் மறைக்க பார்க்கிறது. தனது பல்லைக் குத்தி மாற்றானுக்கு மணக்கவிடக்கூடாது என்று வியாக்கியானம் வேறு.
1983ல் தமிழ்த் தேசிய இயக்கங்கள் ஆயுதம் தூக்கும் வரையில் தாழ்த்தப்பட்ட மக்களிற்குச் சாதிய விடுதலைப் போராட்டத்தை நடத்தக்கூடிய மட்டுப்படுத்தப்பட்ட சனநாயகச் சூழலிருந்தது. ஆயுத வன்முறை தமிழ்த் தேசியத்தின் வடிவமாக்கப்பட்ட பின்பு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு போராட்டங்களை நடத்துவதற்காக மட்டுப்படுத்தப்பட்டிருந்த சனநாயகமும் தமிழ்த் தேசியவாதத்தால் முற்றாகவே துடைத்தெறிப்பட்டது என்பதுதான் வரலாறும் நிதர்சனமும்.
1983க்குப் பின்பு ஆயுத அமைப்புகளின் தோற்றமும் சாதியப் பரிமாணமும்:
1983 யூலை வன்முறைகள் தமிழ்த் தேசியவாத அரசியலுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தன. ஆயுதப் போராட்த்திற்கான அடித்தளம் வலுவாக்கப்பட்டது. விடுதலைப் புலிகள், ரெலோ, புளொட் ஆகிய அமைப்புகள் தமிழ்த் தேசியவாதத் தலைமைகளின் தொடர்ச்சியாகவேயிருந்தன. சாதிய ஒடுக்குமுறைக்கும் தீண்டாமைக்கும் எதிரான எவ்விதச் சிந்தனைப் போக்கையும் இவை கொண்டிருக்கவில்லை. மாறாகச் சாதியச் சிந்தனைகளின் அடிப்படையிலேயே இவர்களது தமிழ்த் தேசியம் கட்டப்பட்டது. 1984ல் புத்தூரில் தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் கொழுத்தப்பட்டு அவர்கள் தங்கள் சொந்த ஊரிலேயே அகதிகளாக்கபட்டபோது இந்த ஆயுதத் தலைமைகள் இந்த நேரத்தில் ஒற்றுமை குலைந்துவிடக் கூடாதெனச் சாட்டுச்சொல்லி இப்பிரச்சனையைக் கையாள தயங்கினர். ‘உயர்’சாதியை பகைத்தால் ஒற்றுமை குலைந்துவிடும் என்பது அவர்களது வாதம். இதே போல் கல்லுவத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டத்தை ரெலோ வன்முறை கொண்டு அடக்கியது. EPRLE, NLFT போன்ற அமைப்புகள் தேசியவாதக் கருத்தியலைக் கொண்டிருப்பினும் சாதிய ஒடுக்குமுறைக்கெதிராகச் சமகாலத்திலேயே போராட்டம் நிகழ்த்தப்பட வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தது முக்கிமானதுதான். ஆனாலும் இராமநாதன் பொன்னம்பலம் காலத்திலிருந்து வந்த தமிழர் ‘ஒற்றுமை’ குலைந்துவிடக்கூடாது என்ற ஆதிக்கசாதிச் சிந்தனை முறைமை தமிழ் தேசிய விடுதலை இயக்கங்களிடமும் நீடித்தது, நீடிக்கின்றது.
EPRLF தாழ்த்தப்பட்ட மக்களைப் பெருமளவில் தன்னுடன் இணைத்து கொண்டது. தமிழ்த் தேசியவாதக் கருத்தியல் ஆதிக்கம் செலுத்திய சூழலில் தங்களின் அடிப்படை உரிமைகளை இவ்வியக்கங்கள் மூலம் வென்றெடுக்கலாம் எனக் கருதித் தாழ்த்தப்பட்ட மக்கள் இயங்கங்களில் இணைந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. அது மட்டுமல்லாமல் தமக்குக் காலங்காலமாக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான ஒரு தற்காப்பு நடவடிக்கையாகவும் தாழ்த்தப்பட்டவர்கள் அமைப்புகளில் இணைந்திருக்க வாய்ப்புகள் உண்டு. தமது சாதிய மேலாதிக்கத்திற்கு இது ஆபத்து என கருதிய யாழ்ப்பாண உயர்சாதி வர்க்கம் தாழ்த்தப்பட்ட மக்கள் அமைப்புகளில் சேருவதையும் ஆதிக்கம் செலுத்துவதையும் எதிர்த்தார்கள். ‘முந்தி இயக்கம் நல்லாயிருந்தது. இப்போது கண்டதுகளும் சேர்ந்து அதை பழுதாக்கியெல்லோ போட்டுதுகள்’ எனப் புறணி பேசினர். ஈ பி ஆர் எல் எப் அமைப்பை ஈழத்துப் பள்ளர் என அடைமொழியிட்டு அழைத்தனர். சாதிய அமைப்பு முறைக்கு எதிரான போராட்டம் தேசியவாதக் கருத்தியலுடன் பொருந்தாது என்பதற்கு ஈ பி ஆர் எல் எப் அமைப்பின் தோல்வி சரியான உதாரணம்.
சாதிய எதிர்ப்பானது சமூக ஏற்றத் தாழ்வுக்கெதிரான போராட்டம். அது சைவ சித்தாந்தக் கருத்தியலை நிராகரிக்கிறது. தமிழ்த் தேசியவாதம் யாழ்ப்பாண சாதிய மேலாதிக்கத்தை பேணிக்காப்பதற்கான போராட்டம். எனவே ஈ பி ஆர் எல் எப் அமைப்பின் தோல்விக்கான ஒரு முக்கிய காரணம் தேசியவாதத்திற்கும் தலித்தியத்திற்கான அடிப்படையான தீர்க்கப்படாத முரண்பாடுகளை அடையாளம் கண்டுகொள்ள அது தவறியதேயாகும். தமிழ்த் தேசியம் சாதிய அடிப்படையிலான கருத்தியலென்பதால் அது சாதியத்திற்கெதிரான கருத்துக்களை முன்வைப்பது அதன் அரசியல் இருப்புக்கு ஆப்பு வைக்கும் வேலையே.
ஆயுத அமைப்புகள் தலையெடுத்த பின்பு தாழ்த்தப்பட்ட மக்களின் அபிலாசைகளை பிரதிபலித்த தாழ்த்தப்பட்ட மக்களிற்கு சாதிய விடுதலைக்கான அமைப்புகளை நடத்தும் உரிமைகள் மறுக்கப்பட்டன. தமிழத் தேசியத்தின் பேரால் தமிழர் ஒற்றுமையின் பேரால் அவர்களுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச சனநாயக உரிமைகளும் பறிக்க பட்டன. தலித்தியத்தை பேசுபவர்கள் துரோகிகளாக்கப்பட்டனர். 1986ல் விடுதலை புலிகள் மற்றைய அமைப்புகளை அழித்துத் தமது தனி ஆதிக்கத்தை கொண்டுவந்த பின்பு ஒரு தலித் இயக்கத்திற்கான அனைத்து கதவுகளும் பலாத்காரமாக வடக்கில் மூடப்பட்டன.
1986ற்குப் பின்பு விடுதலைப் புலிகளின் சர்வாதிகார அரசியலும் சாதியமும்:
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் மிகவும் பிற்போக்கானதும் பழமை வாதமானதும் மாற்று அரசியல் அமைப்புக்களை கருத்துக்களை சகிக்க முடியாததுமாகவே தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. விடுதலை புலிகளின் தோற்றமும் அரசியல் பரிமாணமும் அதன் அமைப்பு முறையும் யாழ்ப்பாண ஆதிக்கசாதிக் கருத்தியலினதும் அதன் சர்வாதிகாரச் சாதி கட்டமைப்பினதும் வெளிப்பாடே.
ஆரம்ப காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்கள் பெரும்பாலும் யாழ் மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவர்களாகவேயிருந்தனர். தமது கல்வியில் அல்லது தமது சமூகத்தின் ( இங்கு நான் சமூகமெனக் குறிப்பிடுவது ஆதிக்க சாதியினரை) கல்வியில் இலங்கை அரசு பாரபட்சம் காட்டியது என்பதே அவர்களது அடிப்படையான பிரச்சனையாக இருந்தது. இராசராச சோழனின் ஆட்சியைக் கனவு கண்டது, சோழரின் இலச்சினையைத் தனது சின்னமாக்கித் தமிழீழத் தேசத்திற்கான கற்பிதத்தை உருவாக்கியது, சைவநெறிப் புனிதங்களையும் ஒழுக்கங்களையும் பேணிப் பாதுகாத்தது, காதல் - பாலுறவு போன்ற விசயங்களில் பச்சைப் பழமைவாதம் போன்ற பல்வேறு பிற்போக்குவாதக் கூறுகளால்தான் அந்த இயக்கம் கட்டியெழுப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் வெள்ளாளர், கரையார் ஆகிய இரு சாதிப்பிரிவினரே ஆதிக்கம் செலுத்தினர். சாதிய படிக்கட்டுமானத்தில் கரையார் வெள்ளாளருக்கு அடுத்தபடியாகக் கீழேயிருந்தபோதும் அவர்கள் வெள்ளாளரின் ‘குடிமை’களாக இருக்கவில்லை. அதனை விட முக்கியமானது சமயக் கருத்தியல் தளத்தில் ( Ideological base of saiva religious ritual ) அவர்கள் தீண்டதகாதவர்களாக வகுக்கப்படவில்லை. வெள்ளாளர் போன்று கரையாரும் கோவில்களுக்கு சொந்தகாரராக இருந்தனர். சன்னதி போன்ற கோவில்களில் தலித்களின் ஆலய பிரவேசத்தை தீவிரமாக எதிர்த்து நின்றவர்கள் கரையார்கள். மாவிட்டபுரம் கோயில் பிரவேச போராட்டத்தில் வெள்ளாளருடன் கூட்டு சேர்ந்து தாழ்த்தப்பட்டவர்களுக்கெதிரான வன்முறையில் கரையார்களும் ஈடுபட்டார்கள். கரையாருக்கும் வெள்ளாளருக்குமிடையே ஆதிக்க போட்டி தொடர்ந்து இருந்து வந்தது. ஆனாலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிரான வன்முறையில் இவர்கள் இருவரும் கூட்டு சேர்ந்தனர்.
சைவ ஆகம முறைப்படி கரையார் தீட்டுபட்டவர்களாக கருதப்படவில்லை என்றேன். இதன் அடிப்படையே இவர்களின் தமிழத் தேசியவாதக் கூட்டு. 'வல்வெட்டித்துறை' ஞானமூர்த்தி என்பவர் தமிழ்க் கொங்கிரஸ் - தமிழரசுக்கட்சி இணைப்புக்கு முன்னின்றவர் என்பதும் வல்வெட்டித்துறைப் பிரதேசம் கரையார் சமூகத்தின் முக்கிய தளம் என்பதும் அது தமிழத் தேசியவாதத்தின் ஒரு முக்கியமான பிறப்பிடம் என்பதும் அறியப்பட்ட உண்மைகள்.
புலிகள் தமது அமைப்பில் ‘ஒழுக்கமானவர்களை’ சேர்ப்பதில் ஆர்வம் காட்டினர். 1983ற்குப் பின்னர் ஈ பி ஆர் எல் எப் போன்ற அமைப்புகளில் பல்வேறு சமூக அமைப்பை சேர்ந்தவர்கள் இணையும்போது விடுதலைப்புலிகளோ தங்கள் தெரிவுகளை மிகவும் கவனமாகவே செய்தனர். ‘கண்டவர்களையும்' இயக்கத்தில் சேர்க்கக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருந்தனர். இதன் விளைவு உயர் சாதிகளைச் சேர்ந்த மத்தியதர வர்க்க இளைஞர்கள் புலிகள் அமைப்பில் ஆதிக்கம் செலுத்தினர்.
கரையார சமூகத்தைச் சேர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வெள்ளாள சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணம் முடித்ததானது முக்கியமான குறியீடாக ( Symbolic significance) அமைந்தது. தலித் பெண்ணொருவரைப் பிரபாகரன் மணந்திருந்தால் வெள்ளாளரோ கரையாரோ தமது அரசியல் ஆதரவைப் புலிகளுக்கு கொடுத்திருப்பார்களா என்பது சந்தேகமே. மன்னர்கள் முன்னைய காலத்தில் மற்றைய மன்னர்களின் எதிர்ப்பைக் குறைப்பதற்காக அம்மன்னர்களின் குமாரிகளை திருமணம் செய்வது ஒரு தந்திரோபாயமாக இருந்தது. தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் இதனை திட்டமிட்டுச் செய்யாவிடினும் இந் நடவடிக்கை இரு சாதிகளுக்கிடையே ஒரு குறைந்தபட்ச இணக்கப்பாட்டைக் கொண்டுவந்தது எனலாம்.
விடுதலை புலிகள் தாங்கள் சாதியத்திற்கு எதிரானவர்கள் எனக் காட்டி கொண்டாலும் அவர்களது அமைப்பு முறையும் அரசியல் புலமும் நடைமுறையும் சாதியத்தின் தூண்களால் கட்டப்பட்டதென்றே கூறலாம். சாதியம் எவ்வாறு தன்னை ஒரு கூம்பு வடிவாக உருவமைத்திருக்கிறதோ அதேபோல் தான் விடுதலை புலிகளின் அமைப்பு முறையும் கட்டப்பட்டிருக்கிறது. சமூக நடைமுறையில் சாதியக் கருத்தாக்கம் எவ்வாறு தனது கருத்துருக்களை மனிதரிடம் பதிக்கிறது என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விடயம். யாழ்ப்பாணா சாதிய அபைப்பை ஒரு கூம்பு வடிவமான அதிகார கட்டமைப்பாக பார்க்கலாம். வெள்ளாள சமூகம் கூம்பின் உச்சியில் இருந்து கொண்டு அடியிலுள்ள சாதிகளை அடிமை குடிமைகளாக பிரித்துத் தனக்கு சேவகம் செய்யும் சாதிகளாக வைத்திருக்கிறது. இந்த அமைப்பு முறை ஜனநாயகம் அற்றது. தாழ்த்தப்பட்ட மக்கள் தமது உரிமைகள் கேட்டு போராடும் போது அடக்குமுறையை ஏவி விடுகிறது. இது வெறும் அமைப்புமுறை மட்டுமல்ல இதற்குப் பின்னல் உள்ள கருத்தியலும் அது ஆதிக்க சமூகத்தினதும் அடக்கப்பட்ட சமூகத்தினதும் சிந்தனை முறையில் பாதிப்பு செலுத்துகின்றதென்பதும் கவனிக்கபட வேண்டிய விடயங்கள். சொல்வதை செய்ய வேண்டும், மாற்று கருத்து இருக்க கூடாது, அதிகாரத்திற்குக் கட்டுபட வேண்டும் போன்ற பல்வேறு கருத்துருக்கள் இந்த சிந்தனை முறைக்குள் ஒளிந்திருக்கின்றன. இந்த அமைப்பு முறையைப் புலிகளின் அமைப்பு முறையுடன் ஒப்பீடு செய்து பார்த்தால் இரண்டுக்கும் அடிப்படையில் வித்தியாசங்களைக் கண்டுபிடித்தல் அரிது.
விடுதலை புலிகளின் அரசியற் பலமானது யாழ்ப்பாண மத்தியதர வர்க்கத்தின் கையிலேயே இருக்கிறது. 1983ற்குப் பின்னர் ஏராளமான யாழ்ப்பாணத் தமிழர்கள் குறிப்பாக ‘உயர்’ சாதித் தமிழரகள் ஐரோப்பாவிற்கும் கனடாவிற்கும் குடிபெயர்ந்து தம்மை நிலை நிறுத்திக்கொண்டனர். தாழ்த்தப்பட்ட மக்களும் வறியவர்களும் அநேகமாக நாட்டிற்குள்ளேயே இடம் பெயர்ந்தவர்களாகவோ இந்திய அகதி முகாம்களில் வாழ்ந்து துன்பம் அனுபவிப்பவர்களாகவோ இருக்கிறார்கள். அவர்களது சிறார்கள் வறுமை காரணமாக ஒரு புறமும் வலுக்கட்டாயமாக மறுபுறம் புலிகளின் இராணுவத்தில் இணைக்கப்படுகிறார்கள். இந்த வெளிநாட்டு ‘உயர்'சாதிச் சமூகமே புலிகளின் அரசியல், பொருளாதார அடித்தளமாகச் செயற்படுகிறது.
வெளிநாட்டு தமிழ்ச் சமூகத்தின் அரசியல் பார்வையும் விடுதலை புலிகளின் அரசியல் பார்வையும் ஒன்றுக்கொன்று முண்டு கொடுப்பதாகவும் இணைந்து செயல்படுவதாகவும் இருக்கின்றன
வெளி நாட்டில் வாழும் இந்த ஆதிக்கசாதித் தமிழரகள்; ஊர் சங்கங்கள், கோவில்கள், சடங்குகள், தமிழ் பாடசாலைகள் மூலமாகத் தமது சாதி அமைப்பையும் சைவ சித்தாந்த கருத்தியலையும் பேணிக் காப்பற்றி வருகிறார்கள். சாதிச் சங்கங்களை மறைமுகமாக ஊர் சங்கங்கள் என்ற பேரில் அமைப்பதும் ஆதிக்க சாதியினரின் கடவுளரை வைத்து வெளி நாடுகளில் கோவில் கட்டி இலங்கையில் கூட இல்லாத புதிய ஆகம விதிகளும் அனுட்டானமும் கடைப்பிடிப்பதும் தங்கள் குழந்தைகளுக்கு சாதிய, சமயக் கலாச்சாரங்களைத் தமிழ் என்ற பெயரில் ஓதுவதும் தொடர்கிறது. ஊர் அடையாளமென்பது சாதிய அடையாளத்தின் வெளிப்பாடே. ஊர் பெருமை என்பது சாதிய பெருமையின் வெளிப்பாடே. இந்த ஊர் சங்கங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் அனுமதிக்க படுவதுமில்லை. அவர்கள் சேருவதுமில்லை.
இந்த சங்கங்களையும் கோவில்களையும் தமிழ் பள்ளிக்கூடங்களையும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களும் பினாமிகளுமே பெருமளவு கட்டுப்படுத்துகிறார்கள். நல்லூர் கந்தனுக்கு, காயத்திரிக்கு, பிள்ளையாருக்கு கோவில் கட்டும் இவர்கள் வைரவருக்கு, அய்யனாருக்கு, முனிக்கு ஏன் கோவில் கட்டவில்லை என்பதைச் சொல்லி தெரிய த் தேவையில்லை.
ஒரு புறம் இறுக்கமான சாதி அனுட்டானங்களை மேற்கொள்ளும் இவர்கள் தங்களை சாதியடிப்படையில் இறுக்கமாக அடையாளப்படுத்தி வருபவர்கள். மறுபுறம் தேசியவாதக் கருத்தியலுக்கு ஆதரவாகச் செயற்படுகிறார்கள். இது ஒன்றும் முரண்பாடல்ல. இவர்களது தேசியவாதம் சாதிய அடிப்படையில் அமைந்ததென்றே இது அச்சொட்டாக நிறுவுகின்றது.
மறுபுறம் சாதிய கட்டுமானத்தின் அரசியல் வெளிப்பாடாக வந்த தமிழ் தேசியவாதக் கருத்தியல் சாதி இருப்பது போலி என மறுக்கிறது. சாதிய அமைப்பு முறைமையை அழித்தொழிப்பதற்கான தலித்திய சிந்தனை முறைமையையும் போராட்டத்தையும் தமிழ்த் தேசியவாதம் எவ்வாறு கொச்சைபடுத்தி முற்றாக மறைக்கப் பார்க்கிறது என்பதற்கு விடுதலைப்புலிகளின் ஆசியுடன் அதன் அதிகாரபூர்வ வெளியீடாக வந்த அடேல் பாலசிங்கத்தின் ‘சுதந்திர வேட்கை’ எனும் புத்தகம் வசமான உதாரணம். சாதிய பிரச்சனைகளைப் பற்றி மேலோட்டமாக இரண்டு பக்கங்களில் அதில் ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது.
அடேல் சொல்கிறார்:
“குறித்த இந்த சமுக மக்கள் யாழ்ப்பாண சமூக அமைப்பில் கள்ளிறக்கும் சாதி. பரிதாபம் என்னவென்றால் ஆற்றலும் கடின உழைப்பும் தற்பெருமையும் கொண்ட இந்த மக்கள் யாழ்ப்பாண சமுக கட்டமைப்பில் அடிமட்டத்தில் நிறுத்தப்பட்டருந்தனர். பிறப்பினால் ஒரு மனிதனை ஒரு சாதிக்குள் தள்ளி விடும் சமுக அமைப்பு காட்டு மிராண்டிதனமானது. ... யாழ்ப்பாணத்து சமுக அமைப்பை நான் கணிப்பிட்ட அளவில் அங்கு உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி என வகுத்திருப்பது ஒரு போலியான அடிப்படையிலேயெ என்பேன்.... தம்மை உயர் சாதி என அழைத்துக்கொள்ளும் வெள்ளாள ஆண்கள் தம் அருகிலுள்ள கள்ளிறக்கும் வீடுகளுக்கு மறைவாக செல்வதை நான் கண்டுபிடித்த போது அது வேடிக்கையாகவே இருந்தது . நான் எனக்குள்ளே சிரித்துக்கொண்டேன். பிளாவில் கள் அருந்தியபடியே தாழ்த்தப்பட்ட பெண்களின் கரங்களால் மீன் பொரியலையும் இறால் பொரியலையும் சுவைத்து மகிழ்வதில் பல மணி நேரம் செலவிடுகிறார்கள். நல்ல தண்ணி போட்டதும் உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி என்ற சமுகப் படி முறை காணாமல் போகிறது என்பதை அறிந்த போது அது மனதுக்கு ஆறுதலாக இருந்தது”.
பழங்குடி மக்களை நிறவாத அடிப்படையில் அழித்து தமது ஆதிக்கத்தை உருவாக்கிய அவுஸ்திரேலிய மண்ணில் இருந்து வந்த அவருக்கு கொஞ்சமாவது சமுகப் பிரக்ஞை இருந்திருந்தால் நூற்றாண்டுகளாக நிலவி வரும் சாதி அமைப்பு முறை போலியானதென்றும் கள்ளுக்கொட்டிலில் காணாமல் போகிறதென்றும் அடேல் கதையாடியிருக்க மாட்ட்டார். வெள்ளையர்களும் கருப்பர்களும் மதுச்சாலையில் ஒன்றாகக் குடித்தால் நிறவாதம் போலியானதாக போய்விடும் என்று கூட நாளை இந்த அம்மையார் எழுதக்கூடும். இவர் ஈழத்தில் இருந்த தசாப்தங்களில் தான் அண்ணாசாமி என்ற தலித் ஈவினையில் கண்டதுண்டமாக வெட்டப்பட்டார். அண்ணாசாமியுடன் ஒன்றாக குடித்த ‘உயர்’சாதி நபர்கள் இக்கொலையில் சம்பந்தம் என்பதும் உண்மை.
மறு புறம் தமிழ்த் தேசியவாதிகளின் தலித்தியம் குறித்த Official position இதுதான் என்பதும் தெளிவு.
தொகுப்பாக:
மேற்குறிக்கப்பட்ட தரவுகளின்படி தமிழ்த் தேசியவாதம் ஆதிக்க சாதிகளின் அரசியல் கருத்தியலின் வெளிப்பாடு. அது சாதிய சிந்தனை முறையில் ஊறிப்போய்க் கிடக்கிறது.
அகிம்சை போராட்டத்திலிருந்து ஆயுதப்போராட்டம் வரை சாதிய கூறுகளின் அடித்தளத்திலேயே தமிழ்த் தேசியவாதம் கட்டப்பட்டிருக்கின்றது.
யாழ்ப்பாணத்திலிருந்து ஐரோப்பா, அமெரிக்காவரை சாதியமைப்பின் கரங்கள் நீண்டுகொண்டே போகின்றன. வெளிநாடுகளிலும் தனது சாதிய இருப்பை யாழ்ப்பாணத்து ஆதிக்கசாதி சமய - கலாச்சார - கல்வி அமைப்புகளை நிறுவித் தொடர்ந்தும் பாதுகாத்து வருகிறது. அதுவே தமிழ்த் தேசியவாதத்தின் கருத்தியல் வெளிப்பாடாக அலையாய்ப் பரவுகிறது.
தமிழ்த் தேசியவாதக் கருத்தியல் தலித்தியக் கருத்தியலுடன் அடிப்படியில் முரண்படுகிறது. தமிழ்த் தேசியவாதக் கருத்தியல் சாதியத்தை தனது கருத்தியல் அமைப்பியல் பரிமாணங்களாகக் கொண்டிருக்கிறது. தலித்தியம் சாதிய கட்டுமானத்தையும் அதன் கருத்தியல் தளத்தையும் அம்பலப்படுத்தும் போது தேசியவாதம் ஈடாடிப்போகிறது. சாதி இல்லை என்று மறுக்கிறது.
இதன் பின்னணியில் பல்வேறு வரலாறுகள் போராட்டங்கள் மறைக்கப்படுகின்றன அல்லது திரிக்கபடுகின்றன. தலித்திய சிந்தனை, அதன் வரலாறு, போராட்டங்கள் அனைத்தும் ஒற்றை பரிமாண வரலாற்றியலால் மறைக்கப்படுகின்றது.
தலித்தியம் ஒருபுறம் தேசியவாதக் கருத்தியலுக்கெதிராகப் போராட வேண்டியிருக்கிறது. மறு புறம் ‘உயர்’ சாதி ஆதிக்கத்திற்கும் சைவசித்தாந்த கருத்தியலுக்கும் எதிராகப் போராட வேண்டியிருக்கிறது. தமிழத் தேசியவாதம், ‘உயர்’ சாதி ஆதிக்கம், சைவ சித்தந்தம் அனைத்தும் பின்னி பிணைந்திருப்பினும் இவற்றை வெவ்வேறு தளங்களில் தலித்தியம் சந்திக்க வேண்டியிருப்பதே கள யதார்த்தம்.
தமிழ்த் தேசியவாதக் கருத்தியலின் வீச்சு இன்று தலித் இருப்புக்கான அற்ப சொற்ப சனநாயகத்தையும் மறுத்துத் தலித்திய போராட்டங்களை வடக்கில் அடக்கி ஒடுக்கி முடிவுக்கு கொண்டு வந்த இச்சூழலில் புலம் பெயர்ந்த நாடுகளில் தலித்தியம் தனது தடத்தைப் பதித்திருக்கிறது. தலித்தியமானது தன்னை ஒடுக்கப்பட்ட சாதி, வர்க்கம், பால்நிலை ஆகியவற்றுடன் அடையாளம் காண்பதால் குறுந் தமிழ்த் தேசியப் பார்வையை நிராகரிக்கிறது. தலித்தியத்திற்கு ஒரு விசாலமான பார்வை இருக்கிறது. Dalit panthers அமெரிக்காவில் கருப்பின மக்களின் சமூக விடுதலைப் போராட்டத்துடன் தங்களை அடையாளப்படுத்திய பாரம்பரியத்தை கொண்டவர்கள். இலங்கையிலும் புலம்பெயர்ந்த தேசங்களிலும் சாதியால் நிறத்தால் பால்நிலையால் அரசியல் பொருளாதார அமைப்பால் ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மாந்தர்களை ஒன்றிணைக்கும் விடியலிற்கான விடுதலைக் கோட்பாடு தலித்தியம்.
(இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினரால் பிரான்ஸில் நடத்தப்பட்ட முதலாவது தலித் மாநாட்டில் (20.10.2007)வாசிக்கப்பட்ட கட்டுரை.)
பயன்பெறு பிரதிகள்:
1.Caste of the Tiger /Ravikumar/ http://www.himalmag.com/
2. Anderson / Immagined Communities
3. E Leach /Aspects of Caste / 1960
4. Gail Omvolt/ Dalit Vision
5. Murugkar /Dalit Panther Movement in Maharashtra/ 1990
6. அடேல் பாலசிங்கம்/ சுதந்திர வேட்கை/ Fir Max
7. S L Sharma et al / nation and national identity in South Aisa

Subscribe to:
Posts (Atom)