Tuesday, July 29, 2008

நெடுங்குருதி: உரையாடல் தொடர்கிறது!

-சுகன்

27. 07. 2008ல் பிரான்சில், 1983 யூலைப் படுகொலைகளை நினைவு கூர்ந்த "நெடுங்குருதி" நிகழ்வு மதியம் 12 மணிக்கு ஆரம்பமாகியது. ராகவனின் நெறிப்படுத்தலில் நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமாகவும், அரசியற் பிரக்ஞையுடனும், பொறுப்புணர்வோடும் நடைபெற்றது.

வெலிகடையிலும் யூலை வன்செயல்களில் தொடரும் யுத்தத்திலும் மரணித்தவர்களுக்கான அஞ்சலியுடன் தொடங்கிய நிகழ்வில் ராகவன் இந்த நிகழ்வின் முக்கியத்துவம், இரட்டை அதிகார சக்திகளான அரசு- புலிகள் இடையில் சிக்குண்டு அல்லல்படும் தமிழ் மக்களின் கையறுநிலை, ஈழப் போராட்டம் கடந்து வந்த பாதை இவை குறித்துக் கச்சிதமாகத் தனது ஆரம்ப உரையை நிகழ்த்தினார் என்பதைவிட ஈழப்போராட்டத்தில் வாழும் சாட்சியமாயிருக்கும் ஒரு போராளி என்ற நிலையில் வார்த்தைப் பாசாங்கற்று உணர்வும் பேச்சும் ஒன்றித்துப் பேசி, ஈழப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரும் வெலிகடைப் படுகொலைகளை எதிர்கொண்டு தப்பியவர்களில் ஒருவருமான அழகிரி அந்தோனிப்பிள்ளையைப் பேச அழைத்தார். தோழர் அழகிரி போன்றவர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பும் சிந்தனைப்பாங்கும் இயக்கமும் ராகவனின் அவரைப்பற்றிய தொடக்க அறிமுகமாகயிருந்தன.

தோழர் சபாலிங்கத்தின் படுகொலையைத் தொடர்ந்து நடத்தப்பட்ட கண்டனக் கூட்டத்தில் அழகிரி நிகழ்த்திய உரைக்குப் பின்னாக இந்நிகழ்விலேயே அவரது உரை பெரும் கனதியாகவும் கேட்டோர் உரையில் ஒன்றிக்கும் வண்ணமுமாக அமைந்தது.

இலங்கையின் பல பாகங்களிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியற் கைதிகளை வெலிகடையை நோக்கிக் கட்டம் கட்டமாக அனுப்பி அவர்களைக் கூண்டோடு கொன்றழிக்கத் திட்டமிட்ட இலங்கை அரசின் பயங்கரவாதத்தைத் தோலுரித்த அழகிரி சிறைப் படுகொலைகளை விவரித்தபோது கேட்டோர் கனத்த மவுனத்தை வழங்கி அவரது உணர்வுகளைக் பகிர்ந்துகொண்டனர்.

அடுத்ததாக உரையாற்றிய நாவலாசிரியரும், பெண்நிலையாளருமான ராஜேஸ் பாலா ஈழத்தில் யுத்தத்தால் சொல்லொணாத் துன்பங்களை அனுபவிக்கும் தமிழ் - முஸ்லிம் மக்களைத் தான் சந்தித்து வந்த கதைகளையும் யுத்தத்தின் வடுக்களையும் விவரித்துப் பேசினார். புகலிடத்திலிருக்கும் யுத்த விசுவாசிகளைக் கடுமையாகக் கண்டித்தப் பேசிய அவர் இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காகப் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் தமது மொத்த சக்தியையும் செலவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தனது பிரசன்னத்தால் புகலிட அரசியல் சூழலிற்குள் முஸ்லிம் அரசியல் குறித்து ஆழமான பிரக்ஞையை ஏற்படுத்திய எம். எஸ். எம் பஷீர் இனங்களுக்கிடையேயான அய்க்கியத்தில் கிழக்கிலங்கையின் பாத்திரம் குறித்தும் முஸ்லிம் மக்களின் சமகால அரசியல் குறித்தம் உரை நிகழ்தினார். தேசத்தில் ஓடும் நெடுங்குருதி தொடர்கதையாகமல் அதற்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தி அவர் தனது உரையை முடித்தார்.

ஜனநாயகத்திற்கான கிழக்கிலங்கை முன்னணியின் அமைப்பாளர் எம்.ஆர். ஸ்டாலின் அடுத்ததாக உரை நிகழ்த்தினார். இலங்கை முஸ்லிம் மக்கள் மற்றும் தமிழ்த் தேசியம் குறித்த ஆய்வுகளில் ஆழமான அவதானங்களை கொண்டவர் என்ற முறையிலும் கிழக்கிலங்கை அரசியலில் நேரடிக் களச் செயற்பாட்டாளர் என்ற முறையிலும் அவரது உரை அரங்கில் பெருத்த ஆர்வத்துடன் எதிர்கொள்ளப்பட்டது.

மட்டுமல்லாமல் நாடு முழவதும் சமாதானத்திற்கான தேவை, பாஸிச சக்திகளை ஒடுக்குவதன் முக்கியம், கிழக்கிலங்கையில் இயங்கும் அரசியல் மற்றும் மக்கள் அமைப்புகளின் அய்க்கியம், இனங்களுக்கிடையிலான உடனடி அய்க்கியத்தின் தேவைப்பாடு இவைகளை விபரித்த ஸ்டாலின் தமிழ்த் தேசிய அரசிலில் மேட்டுக்குடிகளின் இயங்குதளத்தின் தொடர்ச்சி, தமிழ்த் தேசிய அரசியலில் இராமநாதன், அருணாசலம் வகையறாக்ளின் பாத்திரம் தலித்துகள், முஸ்லிம்களுக்கு எதிரான தமிழ்த் தேசியத்தின் நிலைப்பாடு இவை குறித்தும் விரிவாகப் பேசினார்.

"வெலிகடைப் படுகொலைகளை நினைவு கூரும் நாம் வெருகல் படுகொலைகளையும் பேசியே ஆகவேண்டும்" எனவும் வலியுறுத்தினார். இனி இலங்கை அரசியலில் வேற்றுமையில் ஒற்றுமை என்ற நிலைப்பாடே புதிய ஜனநாயத்திற்கான பாதையாக அமையுமென்றார் ஸ்டாலின்.

அடுத்ததாக SLDFஅமைப்பின் இயக்குனர்களில் முக்கியமானவரும், தனது வாசிப்பு, செயற்பாடுகள் இவற்றால் தமிழ்ச் சூழலில் பெண்ணிய அரசியற் கோட்பாடுகளில் சிந்தனைத் தூண்டல்களையும் விவாதங்களையும் நீண்டகாலமாக நிகழ்துபவரும் வெலிகடைப் படுகொலைகளிலிருந்து தப்பியவர்களில் ஒருவருமான நிர்மலா ராஜசிங்கம் உரை நிகழ்த்தினார்.

சிறையில் தனது பட்டனுபவங்கள், அங்கு தொழிற்பட்ட சிங்கள மேலாதிக்க இனவாத அணுகுமுறைகள், கைதிகள் - காவலர்களுக்கு இடையேயான உறவுகள், ஒரு சிங்கள பாலியல் தொழிலாழி தன்மீது பொழிந்த கருணை, ஆதரவு, என்பவற்றைத் தொட்டு அவர் பேசியபோது நிர்மலாவின் உடல்மொழியும் அரங்க ஆளுமையும் கேட்போரைக் கட்டிப்போட்டிருந்தது.

மகிந்த ராஜபக்ஷவின் அரசையும் விடுதலைப் புலிகளையும் கடுமையாகச் சாடிப் பேசிய அவர் தேசியவாத அரசியலை தமிழர்களும் சிங்களவர்களும் விட்டுத் தள்ளுவதே உருப்படுவதற்கான வழி என்றார்.

மதிய உணவு இடைவேளையைத் தொடர்ந்து சுவிஸிலிருந்து கலந்துகொண்ட திலக் தனது உரையை கட்டுரை வடிவத்தில் வாசித்தார். சகோதரப் படுகொலைகளில் தொடங்கிய போராட்டத்தின் அபத்தம் குறித்தும் சனநாயக அரசியலுக்கான வெளிகளை நோக்கி நாம் நகர வேண்டியதின் அவசியத்தையும் மையப்படுத்தி அவரின் கட்டுரை அமைந்திருந்தது.

அடுத்தாக "21ம் நூற்றாண்டில் தேசிய இனப் போராட்ங்கள்" என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்திய பேராசிரியர் அ.மார்க்ஸ், ஈழப் போரட்டத்தின் தொடக்க காலங்களில் ஈழப்போராட்டத்தை ஆதரித்து நின்றதற்காகத் தான் கம்யூனிஸ்ட கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டது, அக்காலத்தில் தமிழகச் சூழலில் ஏற்பட்டிருந்த ஈழ ஆதரவுப் போக்கு ஆகியவற்றைக் குறிப்பிட்டுத் தனது உரையைத் தொடக்கினார். ஈழப் பிரச்சினையில் இன்று ஏற்பட்டிருக்கும் நெருக்கடி, சிக்கல் ஆகியவற்றிற்கான காரணங்களை உலகளாவிய பின்னணியிலிருந்து ஆராய வேண்டும் என்றார்.

அவர் தொடர்ந்து பேசுகையில் "போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்", "போரும் சமாதானமும்", "சமாதானத்ததுக்கான போர்" என்றெல்லாம் முழங்கி ஜே.ஆர்.ஜெயவர்தன, பிரேமதாசா, சந்திரிகா பண்டாரநாயக்க, போன்றோர் மேற்கொண்ட அணுகல் முறைக்கும் இன்றைய ராஜபக்ஷவின் அணுகல் முறைக்குமுள்ள வேறுபாட்டையும் மாறுதல்களையும் உலகச் சூழலிலிருந்து காண வேண்டும் என்றார்.

'செப்டம்பர் 11', 'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' ஆகியவற்றுக்குப் பிந்திய காலம் இது. இன்றைய இலங்கை அரசு ஈழப்பிரச்சினையை ஒரு இனப் பிரச்சினையாகப் பாரக்கவில்லை. மாறாக இதையொரு 'பிரிவினைவாத' மற்றும் 'பயங்கரவாதப்' பிரச்சினையாகப் பார்க்கிறது. பயங்கரவாதம் என்கிற சொல்லாடல் மூலம் அரசு எடுக்க விரும்பும் போர்கள் யாவும் அரசியல் நீக்கம் செய்யப்படுகின்றன. இந்தத் தர்க்கத்தின் அடுத்த கட்டம் அரசியல் தீர்வு இனிச் சாத்தியமல்லை, போரும் வெற்றியும் மட்டுமே இறுதி நோக்கம் என்பதாக இன்றைய அணுகல் முறை உள்ளது. இதற்கு உலக ஆதரவும் உள்ளது.

அடுத்த நிலையில் இன்று வடக்குக் கிழக்கு பிரிவினை என்பது முழுமையாக்கப்பட்டு விட்டது. வடக்கு - கிழக்கு பிரிவினை இன்று அரச மட்டத்தில் மட்டுமின்றி மக்களளவிலும் உறுதியாகிவிட்டது. சோவியத்திற்குப் பிந்திய உலகில் பலதரப்பட்ட இதுகாறும் அடையாளம் மறுக்கப்பட்ட பலரும் தங்கள் அடையாளத்தை உறுதி செய்யும் நிலை ஏற்பட்டுவிட்டது. இதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாத எந்த இயக்கமும் இனி முன்னேற வாய்ப்பில்லை. தேசியம் அல்லது வர்க்கப் புரட்சி என்கிற பெருங்கதையாடல்களை முன்வைத்து தனித்துவமான அடையாளங்களை நிராகரிக்கும் எந்த இயக்கமும் இனி முன்னேற முடியாது. இந்த வகையில் நமது போராட்ட இயக்கங்கள் நேபாள மாவோயிஸ்டுகளிடமிருந்து பாடம் கற்க வேண்டியிருக்கிறது என்று கூறிய அ.மார்க்ஸ் நேபாள மாவோயிஸ்டுகளின் போராட்ட நெறிகள் குறித்தும் அவற்றின் வெற்றிகள் குறித்தும் விவரித்தார்.

தனது பேச்சின் இறுதியில் அ.மார்க்ஸ் "தமிழ் பேசும் மக்கள் என்கிற பெயரில் இதுகாறும் விளிக்கப்பட்ட மக்கள் திரளினர் இன்று முஸ்லிம்கள், தலித்துகள் கிழக்கு மக்கள் என்றெல்லாம் தனித்தனியாக தம் தனித்துவத்தை வலியுறுத்துவதைக் காண மறுப்பதும் இவற்றுக்கு முகங் கொடுக்க மறுப்பதும் நீதியாகாது. சமூகம் சமாதானத்தையும் அமைதியையும் நோக்கித் திரும்ப வழி வகுக்காது" எனச் சொல்லித் தனது உரையை நிறைவு செய்தார்.

தொடர்ந்து 'தலித் சமூக மேம்பாட்டு முன்னணியை'ச் சேர்ந்த தேவதாசனின் தலைமையில் "தமிழ்த் தேசியம்: எழுச்சியும் வீழ்ச்சியும்" என்ற தலைப்பில் நீண்டதொரு கலந்துரையாடல் நிகழ்ந்தது. மாலை 06 மணிக்கு அன்றைய நெடுங்குருதி நிகழ்வு முற்றுப்பெற்றது.