ஈழப்போராட்டம்: எழுச்சியும் வீழ்ச்சியும் - ஷோபா சக்தி
ஈழப்போராட்டம்: எழுச்சியும் வீழ்ச்சியும்
“ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்” பிரதியை முன் வைத்து ஒரு வரைவு
ஷோபா சக்தி
படுகொலைகளைக் கொண்டாடுவதை நிறுத்துங்கள்பெயர்களைக் கொண்டாடுவதை நிறுத்துங்கள்ஆவிகளைக் கொண்டாடுவதை நிறுத்துங்கள்தேதிகளைக் கொண்டாடுவதை நிறுத்துங்கள்வரலாற்றைக்கொண்டாடுவதைநிறுத்துங்கள் - அஹமத் அஸெகாக்’2005 மே தீராநதி இதழ் நேர்காணலில் சி. புஷ்பராஜா ‘ஈழப் போராட்டம் தோல்வியடைந்து விட்டது’ எனச் சொல்லிச் சென்றிருந்த கருத்துக்கள் தமிழ்ச் சூழலில் மிகுந்த சர்ச்சைகளைக் கிளப்பின. இந்தக் கூற்று தமிழ்த் தேசியவாதிகளையும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களையும் நிச்சயமாகவே சினமுறச்செய்திருக்கும். தமக்கென்று ஒரு ஆட்சிக் கட்டமைப்பை விடுதலைப்புலிகள் பெற்றிருப்பதோடு பலமான தரைப்படை, கடற்படை, வான்படை, தற்கொலைப் படை போதாதற்குச் சங்கிலியன் படை, எல்லாளன் படை, குளக்கோட்டன் படை, பண்டாரவன்னியன் படையென பல பத்துப்படைகளோடு புலிகள் வலுவான நிலையிலும் இராணுவச் சம நிலையிலும் இருக்கும்போது புஸ்பராஜா கூறிய கருத்து அரசியல் முதிர்ச்சியற்ற கருத்து அல்லது அதுவொரு விசமத்தனமான கருத்து மட்டுமே எனத் தமிழ்த் தேசியர்களும் புலிகளின் ஆதரவாளர்களும் நினைத்திருக்கலாம். ஆனால் ஒரு போராட்டத்தின் வெற்றி தோல்வியை போராடுபவர்களின் படைபலத்தை வைத்து அளவிடுவதைவிடப் போராட்டத்தின் தார்மீகப்பலத்தை வைத்து அளவிடுவதே சரியானதாக இருக்கும். ஒரு விடுதலைப் போராட்டத்துக்கு அரசியல் சாணக்கியத்தனங்களை விட அரசியல் அறங்களே முக்கியமானவைகளாக இருக்கும். ஒரு போராட்டம் சர்வதேச அரசுகளிடம் எவ்வளவுதான் ஆதரவு பெற்றிருந்தாலும் தனது சொந்த மக்களிடம் அது ஆதரவைப் பெறத் தவறினால் போராட்டத்தின் வீழ்ச்சி தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கும்.
ஈழப்போராட்டம் ஆயுதப் போராட்டமாய் முகிழ்த்து விடுதலைப் போராளிகள் அமைப்புமயப் படுத்தப்பட்ட ஆரம்ப காலங்களில் (1976-1984 காலப்பகுதியை இவ்வாறான காலம் எனக் கொள்ளலாம்) அனைத்து விடுதலை இயக்கங்களும் சோசலிஸத் தமிழீழமே எமது இலட்சியம் என முழங்கின. 14-05-1976ல் வட்டுக்கோட்டை மாநாட்டில் தமிழீழ அரசுப் பிரகடனம் செய்த தமிழர் விடுதலைக் கூட்டணி கூட ‘சோசலிஸத் தமிழீழ அரசு’ என்றுதான் தீர்மானம் நிறைவேற்றியது. விடுதலை இயக்கங்களின் கொள்கைப்பரப்புரைகளிலும் அறிக்கைகளிலும் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்துக்கோ அமிர்தலிங்கத்துக்கோ இடமில்லை. இப்போது போல இராசராசசோழனுக்கும் எல்லாளனுக்கும் அப்போது அந்த அறிக்கையில் இடமிருக்கவில்லை. லெனினும் மாவோவும் தங்குதடையில்லாமல் இயக்கங்களின் அறிக்கைகளிலும், கொள்கை விளக்க நூல்களிலும் சுவரொட்டிகளிலும் நடமாடினார்கள். இந்தச் சித்தாந்த தத்துவார்த்தப் பிரச்சனைகளில் அதிகம் மண்டையை உடைத்துக் கொள்ளாத விடுதலைப்புலிகள் கூட இந்த அலையில் அள்ளுண்டு ‘
சோசலிஸத் தமிழீழம் நோக்கி’ 'சோசலிஸ தத்துவமும் கொரில்லா யுத்தமும்' என இரு சிறு நூல்களை வெளியிட்டார்கள்.
அன்றைய காலகட்டத்தில் ஒரு தொகை மாணவர்களையும் இளைஞர்களையும் விடுதலை இயக்கங்களை நோக்கி ஈர்ப்பதில் இந்த சோசலிஸ முழக்கங்கள் பெரும்பங்காற்றின. அறுபதுகளிலிருந்து இடதுசாரிக்கட்சிகளுக்குப் பின்னால் உறுதியாக அணிதிரண்டு நின்ற தலித் மக்களை விடுதலை இயக்கங்களை நோக்கி இழுத்ததிலும் இயக்கங்கள் பேசிய தீவிர இடதுசாரிக் கருத்துக்கள் பெரும் பங்கு வகித்தன. குறிப்பாகத் தன்னை உறுதியான இடதுசாரி இயக்கமாக அடையாளப்படுத்திக் கொண்ட EPRLF இயக்கத்தில் தான் அதிகளவிலான தலித் இளைஞர்கள் இணைந்து கொண்டார்கள். பள்ளன் பறையன் கட்சியென அதுவரை கொம்யூனிஸ்ட் கட்சியை அழைத்து வந்த யாழ்ப்பாணத்துச் சாதி வெறியர்கள் அப்போதிலிருந்து EPRLF இயக்கத்தைப் பள்ளன் பறையன் இயக்கமென அழைக்கத் தொடங்கினார்கள். இயக்கங்கள் அப்போது முழங்கிய சோசலிஸ முழக்கத்துக்கு 10.04.1985-ல் அவர்களால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை சாட்சியமாகிறது.
இந்த அறிக்கை அப்போது LTTE, TELO, EPRLF, EROS ஆகிய நான்கு இயக்கங்களும் சேர்ந்து அமைத்திருந்த ஈழத் தேசிய விடுதலை முன்னணியால் (ENLF) வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையின் கீழே தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறி சபாரத்தினம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலதிபர் பத்மநாபா, ஈழப் புரட்சி அமைப்பின் புரட்சிகர நிறைவேற்றுக் குழுவைச் சேர்ந்த வே. பாலகுமார் மற்றும் சங்கர் ஆகிய அய்வரும் கூட்டாகக் கையெழுத்திட்டிருந்தனர். அந்த அறிக்கையின் நான்காவது, அய்ந்தாவது தீர்மானங்கள் இவ்வாறு வரையப்பட்டிருந்தன.
(4) தேசிய சுதந்திரப் போராட்டத்தோடு சோசலிஸப் புரட்சியையும் முன்னெடுத்து சுதந்திரத்தாய்நாட்டில் சோசலிஸ சமுதாயத்தைக் கட்டியெழுப்புதல்.(5) உலக ஏகாதிபத்திய நவகாலனித்துவப் பிடியிலிருந்து எமது தேசத்தைப் பூரணமாக விடுவித்து அணிசேராக் கொள்கையைக் கடைப்பிடித்தல்.நாம் இந்தப்புரட்சிகரத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருபது வருடங்கள் கழித்துப் பார்க்கிறோம்!இப்போதெல்லாம் விடுதலைப்புலிகள் தமது அரசியல் எதிரிகளைத்திட்டவே இந்த சோசலிஸம், கொம்யூனிஸம் எனும் பதங்களை உபயோகிக்கிறார்கள். 2004 லண்டன் மாவீரர் நிகழ்வு உரையில் புலிகளின் தத்துவ ஆசிரியர் அன்ரன் பாலசிங்கம் ஜே.வி.பி.யினரை கொம்யூனிஸப்பூதங்கள் என்றார். அவர் புலிகளுடைய இன்னொரு அரசியல் எதிரிகளைப்பற்றி இப்படி எழுதினார். தமிழீழ மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட மார்க்சிய அமைப்பான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை பேணி வளர்த்து முக்கியத்துவம் அளிப்பதென டில்லி ஆட்சியாளர் முடிவெடுத்தனர்”²
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பொருளாதாரக்கொள்கை திறந்த பொருளாதாரக்கொள்கையே என வன்னி ஊடகவியலாளர் மாநாட்டில் புலிகளின் தலைவர் அறிவித்தார்.
‘நாட்டைப் புனரமைக்க நிதி தருகிறோம் பேச்சுவார்த்தை மேசைக்குச் செல்லுங்கள்’ என்ற மேலை நாடுகளின் அழுத்தத்துக்குப் பணிந்து தான் புலிகள் பேச்சுவார்த்தைகளுக்குச் சம்மதித்தார்கள் எனக்கடந்த மாவீரர் நாள் உரையின் போது அன்ரன் பாலசிங்கம் ஒப்புக்கொண்டார். உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் சிறிலங்காவுக்கு வழங்கும் ஒவ்வொரு ரூபாய்க் கடனுக்கும் ஒவ்வொரு உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டிருக்கின்றன. ஊழியர்களின் பணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வேலை நிறுத்தப் போராட்டம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் வருகிறது. மரண தண்டனைச்சட்டம் மீண்டும் சிறிலங்காவில் அமுலுக்கு வந்திருக்கிறது. அமெரிக்க இராணுவம் சிறிலங்காப் படைகளோடு கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுகிறது. சுனாமி பேரழிவைத் தொடர்ந்து பதின்மூன்று நாடுகளின் இராணுவங்கள் சிறிலங்காவில் கால்களைப் பதித்தன. காரைதீவார் கடை வைக்காத இடத்தில் கூட N.G.O க்கள் கடை விரித்துள்ளார்கள். பல்தேசிய நிறுவனங்களுக்கும் அந்நிய மூலதனத்துக்கும் நாடு திறந்துவிடப்பட்டிருக்கிறது. ஆக ஒட்டு மொத்த நாடும் மறுகாலனியமயப்பட்டிருக்கும் நிலையில் நிலவும் இந்த சமூக அமைக்குள்ளும் நிலவும் உற்பத்தி முறைமைகளுக்குள்ளும் நிலவும் ஏகாதிபத்திய அடிபணிவுக் கொள்கைகளுக்குள்ளும் பேச்சுவார்த்தையின் மூலம் வடக்கு கிழக்கில் தமக்கான அதிகாரங்களைப் பெற்றுக்கொள்வதற்கே புலிகள் முயன்றுகொண்டிருக்கிறார்கள்.
2003 ஆகஸ்ட் இறுதிப்பகுதியில் பாரிஸ் நகரில் கூடிய விடுதலைப்புலிகளின் அரசியலமைப்பு நிபுணர்கள் குழு ‘இடைக்காலத்தன்னாட்சி அதிகார சபை’க்கான ஓர் வரைவை வரைந்தது. இந்நிபுணர்கள் குழுவில் பேராசிரியர் சொர்ணராஜா, முன்னாள் சட்டவாளர் நாயகம் சிவா பசுபதி, உருத்திரகுமாரன், பேராசிரியர் மனுவல்பிள்ளை போல் டொமினிக், பேராசிரியர் ராமசாமி, சட்ட நிபுணர் விஸ்வேந்திரன், கலாநிதிமகேஸ்வரன் ஆகியோர் அடங்குவர்.3 இவர்கள் வரைந்த வரைவு ஒற்றை ஆட்சியை ஏற்றுக்கொள்கிறது. இந்த வரைவின் அடிப்படையிலேயே அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்கு புலிகள் முயல்கிறார்கள். இந்த வரைவின் அடிப்படை சிறிலங்கா அரசிடமிருந்து மட்டுப்படுத்தப்பட்ட அதிகார அலகுகளை விடுதலைப் புலிகள் பெற்றுக்கொள்வதேயாகும். இந்த வரைவுக்கும் அந்த நான்காவது அய்ந்தாவது தீர்மானங்களுக்கும் எதுவித சம்மந்தமுமில்லை.
அந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருபது வருடங்கள் கழித்து ஈழத்துப்பண்பாட்டுப் புலத்தைப் பார்க்கிறோம். ஈழத் தமிழ்ச்சமூகத்தின் பிரதான உள் முரணான சாதியத்தை ஒழிப்பதற்கு எமது ஏகபிரதிநிதிகளிடம் எதுவித வேலைத்திட்டமும் கிடையாது. கிடையாது என்பதை விட புலிகள் உள்ளார்த்தமாக சாதியமைப்பைத் தாங்கிப் பிடிக்கும் வகையில் தான் செயற்படுகிறார்கள். யாழ்ப்பாணப் பொது நூலகத்தை ஒரு தலித் மேயர் திறந்து வைக்கக் கூடாது என்று நூலகத்திறப்பு விழாவையே தடுத்து நிறுத்திய ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாக விடுதலைப் புலிகள் எப்படிச் செயற்பட்டார்கள் என்பதை
‘ஒரு வரலாற்றுக் குற்றம்’ என்ற எமது சிறு பிரசுரத்தில் ஏற்கனவே சுட்டிக் காட்டியிருந்தோம். சாதியமைப்புக்கும் இந்து மதத்துக்கும் உள்ள தொடர்பு வரலாற்று பூர்வமானது. பண்பாட்டுப் புலத்தில் இந்து மதத்தை அழிக்காமல் சாதியை அழிக்க முடியாது. ஆனால் மாறாகப் புலிகள் இந்து மதத்தைத் தூக்கி நிறுத்தும் முயற்சியால் தான் இறங்கியிருக்கிறார்கள். அய்ரோப்பிய நகரங்களில் அவர்கள் இந்துக்கோவில்களை நிறுவி நடத்தி வருகிறார்கள். சமஸ்கிருதம், பூணூல், தேர் என்று சநாதனம் புலிகளின் புண்ணியத்தில் அய்ரோப்பாவிலும் கொடிகட்டிப்பறக்கிறது. உலகிலேயே போராட்டத்திற்கு என்று பொது மக்களிடம் பணம் சேர்த்து அந்தப்பணத்தில் கோயில் கட்டிக்கும்பிடும் ஒரே விடுதலை இயக்கம் விடுதலைப் புலிகளின் இயக்கம் தான்.
இன்னொரு புறத்தில் விடுதலைப்புலிகளின் கொலை பண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் புதுவை இரத்தின துரை அம்மனின் மீது துதிப் பாடல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். சாதியமைப்புக் குறித்தும் தலித் மக்களின் உரிமைகள் குறித்தும் கேள்விகள் எழும் போதெல்லாம் ‘முதலில் போராட்டம் முடியட்டும் எமது அக முரண்களைப் பின்பும் தீர்த்துக்கொள்ளலாம்’ என்கின்றனர் விடுதலைப் புலிகள் ஆதரவு அறிவுஜீவிகள். அதன் அர்த்தம் அதுவரை சாதியமைப்பு இப்படியே இருக்கட்டும் என்பதைத் தவிர வேறென்ன? இதற்கும் அந்த நான்காவது அய்ந்தாவது தீர்மானங்களுக்கும் எதுவித சம்பந்தமுமில்லை.
அந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருபது வருடங்கள் கழித்து வடக்குக்கிழக்கில் வாழ்ந்த - வாழும் இன்னொரு தேசிய இனமான முஸ்லிம்களைப் பார்க்கிறோம். சோசலிஸ தமிழீழத்தை முழங்கிய புலிகள் எப்படியாக இனப்படுகொலைகளை நிகழ்த்தினார்கள் என்பதை அறிவிக்கிறார் புஸ்பராஜா:
1990 ஜூலை 12ம் நாள் குருக்கள் மடத்தில் 68 முஸ்லிம்கள் புலிகளால் கொல்லப்பட்டனர்.
1990 ஓகஸ்ட் 3ம் நாள் காத்தான்குடிப் பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 103 முஸ்லிம்கள் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1990 ஓகஸ்ட் 10ம் நாள் ஏறாவூரில் 130 முஸ்லிம்கள் புலிகளால் சுட்டும் வெட்டியும் கொல்லப்பட்டனர்.
1992 ஏப்ரல் 29ம் நாள் அழிஞ்சிப் பொத்தானை கிராமத்தில் 69 முஸ்லிம்கள் புலிகளால் கொல்லப்பட்டனர்.
1992 ஜூலை 15ம் நாள் கிரான்குளத்தில் மறிக்கப்பட்ட பஸ்ஸிலிருந்து இறக்கப்பட்ட 22 முஸ்லிம்கள் புலிகளால் கொல்லப் பட்டனர். (பக். 477)
வடபகுதியில் பத்து நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்த தமிழ் பேசும் முஸ்லிம்கள் அனைவரும் 1990 ஒக்டோபர் 30ஆம் திகதி இரண்டு மணிநேர அவகாசத்துள் விடுதலைப் புலிகளால் கட்டிய துணியுடன் வடபகுதியை விட்டுத்துரத்தப்பட்டனர். அவர்களின் அசையும் அசையாச்சொத்துக்கள் யாவும் விடுதலைப் புலிகளால் கொள்ளையிடப்பட்டன. விரட்டப்பட்ட முஸ்லிம்களை மீளக் குடியமர்த்துவதற்கோ அவர்களிடம் கொள்ளையிடப்பட்ட சொத்துக்களை மீளக் கையளிப்பதற்கோ இதுவரை விடுதலைப்புலிகள் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. கிழக்கில் தமிழ்ப் போராளிகளால் காலத்துக்குக் காலம் முஸ்லீம்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகளைத் தொடர்ந்து முஸ்லிம் இளைஞர்களும் எதிர் வன்முறைகளில் இறங்கினர். இப்போது அங்கே தமிழ் - முஸ்லிம் உறவு சீர்கெட்டுக் கிடக்கிறது. விடுதலைப் புலிகளின் தலைமையையோ அல்லது இன்னொரு தமிழ்த்தலைமையையோ தங்களின் தலைமையாக ஏற்றுக் கொள்ள எந்தவொரு இஸ்லாமியரும் இன்று தயாரில்லை. முஸ்லிம் மக்களின் இறைமையை அங்கீகரிக்கப் புலிகளும் தயாரில்லை.
வர்க்க ஒடுக்குமுறையற்ற சாதியமற்ற இனவாதமற்ற சோஸலிசத் தமிழீழத்தை நோக்கித் தொடங்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட ஈழப்போராட்டம், அந்த இலட்சியங்களின் அடிப்படையில் ஒடுக்கப்பட்ட மக்கள் திரளிடையே பெரும் ஆதரவைப் பெற்றிருந்த ஈழப்போராட்டம் இன்று குறுந்தேசிய வெறியும் ஏகாதிபத்திய அடிபணிவும் சகோதரப் படு கொலையும் - பாஸிஸமுமாகப் பரிமாணம் பெற்றிருக்கிறது. இதைத்தான் ஈழப் போராட்டத்தின் தோல்வி என்கிறோம்
. இந்தத் தோல்வி ஒரு நாளில் நம்மை வந்தடைந்த தில்லை. ஈழப் போராட்டத்தின் ஒவ்வொரு அத்தியாயங்களிலும் இந்தத் தோல்விக்கான காரணங்கள் விரவிக்கிடக்கின்றன.
அந்த அத்தியாயங்களை கட்டவிழ்ப்பதன் மூலமாகவும் அதன் மூலமாக இதுவரை எழுதப்பட்ட ஈழப் போராட்டத்தின் வரலாற்றைச் சிதைக்கப் பெருமளவு முயல்வதாலும் சி.புஸ்பராஜாவின் ‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்’ மிக முக்கியமானதொரு அரசியல் நூலாக - அதன் உள் முரண்களோடு சேர்த்துப் பார்த்தால் கூட - தன்னை நிறுத்திக் கொள்கிறது.
II சி. புஷ்பராஜா தமிழ் இளைஞர் பேரவையின் முதலாவது தலைவர். தமிழீழ விடுதலை இயக்கத்தின் (T.L.O) முன்னோடிகளில் ஒருவர். நீண்ட காலமாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் இயங்கியவர். முன்னணியின் பிரான்ஸ் கிளையின் பிரதிநிதியாகச் செயற்பட்டவர். ஈழவிடுதலைப் போராட்டத்தில் அவரின் அனுபவங்களும் போராட்டம் குறித்த அவரின் எண்ணங்களும் விமர்சனங்களும் எழுபத்தேழு அத்தியாயங்களாக 632 பக்கங்களில் விரிந்து செல்கின்றன. அவரின் கடுமையான உழைப்பு இதைச் சாத்தியப்படுத்தியுள்ளது.
(வெளியீடு: அடையாளம்,) 1944ம் ஆண்டில் அகில இலங்கைத் தமிழ் கொங்கிரஸ் கட்சி நிறுவப் பட்டதில் தொடங்கி இன்றைய காலகட்டம் வரைக்குமான ஈழத்து அரசியலின் ஒரு பகுதியைத் தெட்டத்தெளிவான உரை நடையில் புஸ்பராஜா விவரிக்கிறார்.
1948ல் சுதந்திர இலங்கையின் டி.எஸ். சேனநாயக்கா அரசு இந்தியா - பாகிஸ்தான் பிராசா உரிமைச் சட்டமென்று ஒரு கொடூரமான சட்டத்தை இயற்றி மலையகத்தமிழர்களின் குடியுரிமையைப் பறித்து அவர்களை நாடற்றவர்கள் ஆக்கியது. இந்தச்சட்டத்தை தமிழ் கொங்கிரஸ் கட்சியின் தலைவர் G.G. பொன்னம்பலம் ஆதரித்ததைத் தொடர்ந்து தமிழ் கொங்கிரஸ் கட்சி பிளவுற்றது. அச்சட்டத்தை எதிர்த்து கொங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய எஸ்.ஜே.வி. செல்வநாயகம், கு. வன்னியசிங்கம், நாகநாதன் போன்றவர்களால் 1949 டிசம்பர் 18ல் தமிழ் அரசுக்கட்சி தோற்றுவிக்கப்பட்டது. தமிழ் அரசுக்கட்சியின் தோற்றத்தோடு இலங்கையின் நவீன அரசியலில் தமிழ்த் தேசியம் என்ற கருத்தாக்கம் உருவாக்கப்படுகிறது.
1956 ஜூன் 5ம் திகதி இலங்கையின் சிங்களப்பேரினவாத அரசு இயற்றிய தனிச்சிங்களமே இலங்கையின் ஆட்சி மொழி என்ற சட்டத்தை எதிர்த்து தமிழரசுக்கட்சி பெரும் சத்தியாக்கிரகப் போராட்டங்களை நடத்தியது. தொடர்ந்து தமிழரசுக் கட்சி திருகோணமலையில் நடத்திய மாநாட்டில் தமிழ் மொழிக்கும் சிங்கள மொழிக்கும் சம உரிமையையும் சமஸ்டி அரசியல் அமைப்பையும் கோருதல் எனத்தமிழரசுக் கட்சி நிறைவேற்றிய தீர்மானங்களும் தமிழ்ப் பிரதேசங்களில் தமிழரசுக் கட்சியினர் பரவலாக நடத்திய சட்டமீறல் போராட்டங்களும் எல்லாவற்றுக்கும் மேலாக 1958ல் பொலிஸாரும் சிங்கள இனவாதிகளும் தமிழர்கள் மேல் மேற்கொண்ட தாக்குதல்களும் கொலைகளும் தமிழ்த்தேசியத்தின் அடுத்த கட்ட நகர்வுக்குக் காரணங்களாயின. இந்தக் கட்டத்தில் தான், ‘தேசாபிமானம் என்பது அயோக்கியர்களின் பிழைப்புக்கான வழி’ என்ற ஈ. வெ.ரா. பெரியாரின் புகழ் பெற்ற கூற்றைத் தமிழரசுக்கட்சியினர் தெட்டத்தெளிவுற நிரூபணம் செய்யத் தொடங்கினார்கள்.
தமிழரசுக் கட்சி எவ்வளவுக்கு தீவிரத் தமிழ்த் தேசியம் பேசியதோ அதே தீவிரத்துடன் அது வலதுசாரித்தனத்தில் உழன்றது. தமிழரசுக்கட்சியின் தலைமை யாழ் மையவாதத் தலைமையாகவும் யாழ் ஆதிக்க சாதியினரின் தலைமையாகவுமே இருந்தது. உழைக்கும் மக்களின் உரிமைகள் குறித்தோ சாதிய ஒடுக்குமுறைகள் குறித்தோ அது எப்போதும் அக்கறை கொள்ளவில்லை. 1968ல் தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கமும் சீனச்சார்புக் கொம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து நடத்திய சாதியழிப்புப் போராட்டத்தின் போது களத்தில் நின்ற தலித் மக்கள் சங்கானை, நிச்சாமம் பகுதிகளில் சாதி வெறியர்களால் கொல்லப்பட்டனர். இக்கொலைகளைக் குறித்து பாராளுமன்றத்தில் சிங்கள இடதுசாரிகள் கேள்வி எழுப்பிய போது ‘அப்படி எதுவுமே நடக்கவில்லை’ என தமிழரசுக் கட்சியின் தளபதி அ. அமிர்தலிங்கம் பாராளுமன்றத்தில் பொய்யுரைத்தார். அதே வேளை கம்பஹா பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சிங்களவரான எஸ்.டி. பண்டாரநாயக்கா சங்கானையிலும் மற்றப் பகுதிகளிலும் பாதிக்கப்பட்ட தலித் மக்களை நேரில் வந்து பார்த்து ஆறுதல் கூறியதும் நிகழ்ந்த சாதியப்படுகொலைகளையும் ஒடுக்கு முறைகளையும் பாராளுமன்றத்தில் எடுத்துக் கூறி தமிழரசுக் கட்சியை அம்பலப்படுத்தியதும் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்.4
தமிழ்ப்பிரதேசங்களில் எப்போதெல்லாம் தொழிற்சங்கப் போராட்டங்கள் வெடிக்கின்றதோ அப்போதெல்லாம் தொழில் முதலாளிகளுக்கு ஆதரவாகவே தமிழரசுக் கட்சியினர் செயற்பட்டனர். அந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்த முக்கிய தொழிலாளர் போராட்டமான மில்க்வைற் தொழிற்சாலைப்போராட்டத்தில் தொழிற்சாலையின் நிர்வாகத்துக்கு ஆதரவாகவே தமிழரசுக் கட்சியினர் செயற்பட்டனர். மில்க்வைற் முதலாளியின் சார்பாக தமிழரசுக் கட்சி பிரமுகர் எம். ஆலாலசுந்தரமே நீதிமன்றத்தில் வழக்கை நடத்தினர்.5
இந்தக்காலகட்டத்தில் தான் தமிழரசுக் கட்சி சாதிய மனோபாவத்துடனும் முதலாளிய வர்க்க நலனோடும் யாழ் மையவாதத்திலும் வலதுசாரித்தனத்திலும் உழன்ற கால கட்டத்தில் தான் 1969ல் புஸ்பராஜா தமிழரசுக்கட்சியில் இணைந்து கொள்கிறார்.
புஸ்பராஜா அந்த வலதுசாரித் தமிழ்த்தேசியப் பாசறையில் உருவானவர். தமிழரசுக்கட்சி வகைத்தேசியத்தை விட்டுக் கருத்து ரீதியாக அவர் முன்னேயோ பின்னேயோ ஓரடி கூடச் செல்லாதவர். அவருடைய ஒரு தொகை மதிப்பீடுகள் வலது சாரித் தமிழ்த்தேசிய அளவுகோல்களாலேயே கட்டப்பட்டவை என்பதற்கு நூலின் பல பக்கங்களில் சான்றுகள் உண்டு. இலங்கை அரசியலில் கடந்த எழுபது வருடங்களாக நிகழ்ந்த அரசியல் போக்குகளை நூலில் அத்தியாயம் அத்தியாயமாக விபரித்துச்செல்பவர் ஈழத் தமிழ்ச் சாதியச் சமூகத்தில் பெரும் புரட்சிகர நிகழ்வுகளை நிகழ்த்திக் காட்டிய தலித் மக்களின் அமைப்பான
சிறுபான்மை தமிழர் மகாசபை குறித்தோ
தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் குறித்தோ ஓரிரு வரிகளுக்கு மேல் நூலில் பேசவில்லை. அந்த வரிகளும் வெறும் தகவல் குறிப்புக்களாகவே அமைந்துள்ளன. இவ்வளவுக்கும் அந்த இரு அமைப்புகளும் எங்கோ ஒரு அடையாளம் தெரியாத மூலையில் இயங்கியவை அல்ல. அப்போது மிக வேகமாக வளர்ந்து வந்த தமிழ்த்தேசிய சக்தியான தமிழரசுக் கட்சியோடு நேருக்கு நேராகப் பொருதியவை அவை. 1972ல் புதிய அரசியல் யாப்பு விவாதத்தின் போது தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக பாராளுமன்றத்தில் இருந்த எம்.சி. சுப்பிரமணியம்
‘தாழ்த்தப்பட்ட மக்கள் தமிழ்த்தேசிய இன வரையறைக்குள் அடங்கமாட்டார்கள்’ என்றார். தாழ்த்தப்பட்ட மக்களை தனித் தேசிய இனமாக வரையறுக்க வேண்டும் என எம்.சி. சுப்பிரமணியம் வலியுறுத்தினார். இந்தக் கருத்தைப் பிரச்சாரம் செய்வதற்காகவே அவர் உதயம் என்ற பத்திரிகையை தொடங்கினார்.6 தமிழ்த்தேசியம் என்ற கதையாடலுக்கு எதிராகத் தலித்தேசியம் என்ற குரல் இன்றைக்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்னேயே எழுந்துள்ளது நம்முடைய கவனத்துக்கு மட்டுமல்ல புஸ்பராஜாவின் கவனத்துக்கும் உரியது.
புஸ்பராஜாவின் வலதுசாரித் தமிழ்த் தேசியப்பார்வைக்கு நூலில் இன்னொரு உதாரணத்தையும் சுட்டலாம்.
‘அமிர்த லிங்கத்தையும் கொன்றனர்’ (பக்: 482 - 492) என்ற அத்தியாயம் முழுவதும் அமிர்தலிங்கத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அமிர்தலிங்கத்தின் சாதிய முதலாளிய பாராளுமன்ற அரசியலின் மீது புஸ்பராஜாவுக்கு எதுவித விமர்சனங்களும் இல்லை. மாறாக அந்தப்பக்கங்களில் அமிர்தலிங்கத்தை ஒரு கர்மவீரனாகவே அவர் சித்தரிக்கிறார். தமிழீழ விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்ட அமிர்தலிங்கத்தின் அரசியற்படுகொலை நிச்சயமாகவே கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. அதே போல் புலிகளால் கொல்லப்பட்ட யாழ் நகர பிதா அல்பிரட் துரையப்பாவின் கொலையிலிருந்து விடுதலை இயக்கங்களால் செய்யப்பட்ட அனைத்து அரசியற்படுகொலைகளும் கண்டனத்துக்கு உரியவையே. துரையப்பாவின் கொலையை தமிழர் விடுதலைக் கூட்டணியினர் மகிழ்ந்து கொண்டிய வரலாறு ஒன்றும் இரகசியமானது அல்ல. புஸ்பராஜா அல்பிரட் துரையப்பாவின் கொலையைப்பற்றி எழுதும் போது அந்த அரசியல் படுகொலை குறித்துக்கண்டனங்கள் எதுவும் அவருக்கு இருப்பதில்லை. மாறாக
‘துரையப்பா கொலை செய்யப்பட்ட பின்பு நான் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பது போல் தெரிந்தது’ என்கிறார் புஸ்பராஜா. (பக். 159)
யாழ் நகர மேயராக இருந்த அல்பிரட் துரையப்பா யாழ் நகர மக்களிடையே குறிப்பாக விளிம்பு நிலை மக்களிடையே பெரும் செல்வாக்கோடு திகழ்ந்தவர். தன் மீது ஏழைப்பாங்காளன் என்ற படிமத்தை ஏற்படுத்திக் கொண்டதுடன் நின்று விடாது தன் மேயர் பதவியின் மூலம் குறிப்பாக நகரசுத்தித் தொழிலாளர்களுக்கு சில நலத்திட்டங்களை நிறைவேற்றியவர் துரையப்பா. அவர் யாழ் நகரின் நிரந்தர மேயராக இருந்தார். அறுபதுகளில் வீசிய தமிழரசு அலைக்கு மத்தியிலும் பாராளுமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக நின்று தமிழரசுக் கட்சியை இரு தடவைகள் தோற்கடித்தவர் துரையப்பா. துரையப்பாவைக் கொன்றவர்களில் இருவரான கலாபதியும் கிருபாகரனும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டபோது கைது செய்யப்பட்டவர்களின் விடுதலைக்காக தமிழரசுக் கட்சியின் முக்கிய தலைவர்கள் பாடுபட்டனர். கலாபதியும் கிருபாகரனும் விடுதலையானவுடன் அவர்கள் தமிழரசுக் கட்சியின் தலைவர்களான அ. அமிர்தலிங்கம், மு. சிவசிதம்பரம் ஆகியோருடன் ஆலோசனை செய்யும் புகைப்படம் ஒன்றும் இந்நூலின் 597ஆம் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இத்தமிழரசுக் கட்சி தலைவர்கள் இருவரும் அடுத்த பத்து வருடங்களில் புலிகளால் சுடப்பட்டனர் என்பது பின் குறிப்பு.
தமிழ்த்தேசியமும் அது உருவாக்கும் பண்டைய வரலாற்றுப் பெருமிதம், தலைமை வழிபாடு, வீரம் போன்ற கதையாடல்களும் பிரித்துப் பார்க்க முடியாதவை. இந்த மயக்கங்களும் இந்த நூலில் இடையிடையே உண்டு. குறிப்பாக
‘விடுதலைப் புலிகளும் அவர்களின் தலைவரும்’ என்ற அத்தியாயம் ஒரு கெட்ட உதாரணம் (பக். 560 - 572). ‘தமிழ் மக்களின் விடுதலையைத் தன்னால் மட்டுமே பெற்றுத்தர முடியும், அதற்கான தியாகமும் பலமும் தன்னிடமே உள்ளது எனப் பிரபாகரன் உண்மையாகவே நம்புகிறார்’ போன்ற தரச்சான்றிதழ்களும் ‘ஒருவரின் முகத்தைப் பார்த்தே அவரதுமனதில் உள்ளதை அறிந்து கொள்ளும் திறமையே பிரபாகரனின் வெற்றியின்
இரகசியமாகும்’ என்பன போன்ற அறிவுக்குப் பொருந்தாத குறிப்புகளும் அந்த அத்தியாயத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
வலதுசாரித்தேசியம், இடதுசாரித் தேசியம் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். தேசியம் குறித்த புதிய கேள்விகளும் புதிய கருத்துருவாக்கங்களும் இப்போது அரசியல் அறிவுப்புலங்களில் எழுந்து வருகின்றன. மரபு மார்க்ஸியத்தின் தேசியம், சுயநிர்ணய உரிமை போன்ற கருத்துருவாக்கங்களுக்கும் வரையறைகளுக்கும் அப்பால் பண்பாட்டுத் தேசியம் குறித்த குரல்கள் ஒலிக்கத் தெடங்கியுள்ளன. (எ.டு. முசுலிம் தேசியம், தலித் தேசியம்) இன்னொரு புறத்தில் மூலதனத்தின் எல்லைகள் தாண்டிய பாய்ச்சலுக்கும் உலகமயமாக்குதலுக்கும் முன்பாகத் தேசியம் தனது அரசியல் பொருளியல் அர்த்தங்களை இழக்கத் தொடங்கியுள்ளது.
சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் முதலாளியம் ஏகாதிபத்தியமாய் உருக்கொண்டதற்குப் பின்னாக, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னாக உலகில் ஒரு தேசிய முதலாளிய அரசு கூடத்தோன்றியதில்லை. பின்னைய காலப்பகுதி ஒரு சில தரகு முதலாளிய அரசுகளையும் ஒரு சில உருக்குலைந்த தொழிலாளர் வர்க்க அரசுகளையும் மாத்திரமே தோற்றுவித்தது. இன்றைய உலகமயமாக்குதல் சூழலில் தேசங்கள் மூலதனத்துக்கும் பல்தேசியக் கூட்டுத்தாபனங்களுக்கும் முன்பாக இறைமைகளை இழந்துகொண்டிருக்கும் பலவீனமான கண்ணிகளாக மாறியுள்ளன. இந்தப் புறநிலைகள் பிரச்சனைப்பாடுகள் புஸ்பராஜாவின் அரசியல் பார்வையில் குறுக்கிடுவதில்லை. அவரின் பார்வைக் கோணம் - அவர் EPRLF ல் இருந்த காலத்தில் கூட தமிழரசுக் கட்சியின் நீட்சியாகவே இருக்கிறது. அவரது அரசியல் இயங்கு முறைமை 1976ல் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் முழங்கப்பட்ட
‘தமிழீழ அரசு’ என்ற முழக்கத்தின் தொடர்ச்சியாகவே இருக்கிறது. நவீனத்துக்குப்பிந்திய நுண் அரசியல் சிந்தனைகள் அவரைக்கிட்டவும் நெருங்குவதில்லை. ஆனால்
இத்தகைய தட்டைப்பார்வைகள் பலவீனங்களைக் கடந்தும் இந்த நூலுக்கு இன்னொரு பரிமாணம் இருக்கிறது. அப்பரிமாணம் இன்றைய காலத்துக்கும் இனிவரும் காலத்துக்கும் மிகமிக முக்கியமானது. III“மௌனம் என்பது சாவுக்குச்சமம். எதுவும் பேசா விட்டாலும் சாகப்போகிறீர்கள்; பேசினாலும் சாகத்தான் போகிறீர்கள் எனவே பேசிவிட்டுச் செத்துப் போங்கள்”அல்ஜீரிய எழுத்தாளர் தஹார் ஜாவுத்7.இன்றைக்கு ஈழத்தில் வாழ்ந்தாலென்ன புகலிடத்தில் வாழ்ந்தாலென்ன ஈழத் தமிழர்களுக்கு தமிழ் மொழி இரண்டாவது மொழிதான். அவர்களின் தாய்மொழி மௌனம் தான். பேசியதற்கும் எழுதியதற்குமாகவே கொல்லப்பட்டவர்களின் கொலைப்பட்டியல் மிக நீளமானது.
புலிகளாலும் அவர்களது அடிப்பொடி அறிவுஜீவிகளாலும் இதுவரை ஈழப்போராட்டத்துக்கு எழுதப்பட்ட ஒற்றை வரலாற்றை இந்நூல் மூலம் புஷ்பராஜா பெருமளவுக்குக் கலைத்துப் போட்டிருக்கிறார். புலிகள் எழுதும் வரலாறு ஈழப் போராட்டத்தின் வரலாறாக இருப்பதில்லை. அது புலிகளின் வரலாறாகவே இருக்கும். இன்னும் நுணுகிக்கவனித்தால் அது பிரபாகரன் என்ற தனிமனிதனின் வரலாறாகவே இருக்கும். மிஞ்சி மிஞ்சிப்போனால் கிட்டு, பொட்டு என்று சில இடைச் செருகல்கள் இருக்கும். ஈழப் போராட்டத்தில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்ட மற்றைய இயக்கத்தோழர்களையும் அமைப்புக்களையும் தனிநபர்களையும் பற்றி இதுவரை எழுதப்படாத வரலாற்றைத் தன் நூல் முழுவதும் புஸ்பராஜா எழுதிச் செல்கிறார். புலிகளின் வரலாற்றில் துரோகிகளாய்ப் புதைக்கப்பட்ட தோழர்கள் உயிர்த்து உறுதியும் அர்ப்பணிப்பும் மிக்க போராளிகளாய் இந்த நூலின் பக்கங்களில் அணிவகுத்து நடக்கிறார்கள்.
பொது மக்கள் மீதும் மற்றைய இயக்கங்கள் மீதும் மாற்றுக் கருத்தாளர்கள் மீதும் மிதவாதக் கட்சித்தலைவர்கள் மீதும் புலிகள் நிகழ்த்திய கொலைச்செயல்களை அத்தியாயம் அத்தியாயமாகத் துல்லியமாகப் பெருமளவு ஆதாரச் சான்றுகளுடன் புஸ்பராஜா எழுதிச் செல்கிறார்.
1. பொதுமக்கள் மீதான தாக்குதல், 2. சகோதர இயக்கங்களை அழித்தல் 3. இலங்கையில் முசுலிம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் 4. அமிர்தலிங்கத்தையும் கொன்றனர். 5. கொன்று வீசப்பட்ட போராளிகள் ஆகிய அய்ந்து அத்தியாயங்களும் புலிகளின் பாஸிஸ நடவடிக்கைகளை ஆதாரங்களுடன் தோலுரித்துக் காட்டும் அத்தியாயங்கள். புலிகள் தமது சொந்த இயக்கத்துள் தமது சொந்தத் தோழர்களையே கொன்றொழித்த கதைகளையும் புஸ்பராஜா எழுதத்தவறவில்லை. மைக்கலின் கொலையைப்பற்றி எழுதுகிறார். (ப. 565) பற்குணத்தின் கொலை யைப்பற்றி எழுதுகிறார் (ப. 567) மாத்தையாவுக்குத் தனி அத்தியாயமே இருக்கிறது (பக். 493 - 495)
தமிழ் ஈழப் போராட்டத்தில் ஆயுதம் தரித்துக் களத்தில் நின்ற முசுலிம் தோழர்களின் பங்கு புலிகள் எழுதும் வரலாற்றில் இருட்டிக்கப்பட்டே வருகிறது. இதை எழுதும் போது யாழ் கோட்டையிலிருந்து வெளியேற முற்பட்ட சிறிலங்கா இராணுவத்தினரைத் தடுத்து நிறுத்தி மோதிய இரு வெவ்வேறு சண்டைகளில் உயிர்களைத் துறந்த கிழங்கன் என்ற உஸ்மானும் அப்போதைய கோட்டைப்பகுதிப் புலிகளின் பொறுப்பாளர்
(f)பாருக்கும் என் ஞாபகத்தில் வருகிறார்கள். முசுலீம்கள் மீது புலிகள் நிகழ்த்திய படுகொலைகளையும் துரோகிகள் பட்டம் சுமத்தி முசுலீம்களை புலிகள் வடபகுதியில் இருந்து விரட்டியதையும் பக்கங்கள் 473 - 483ல் ஒவ்வொரு தமிழரும் நினைத்து நினைத்து வெட்கப்படத்தக்கதாய் புஸ்பராஜா விபரிக்கிறார். புலிகளைக்கேட்டால் அவர்கள்
‘இது இன்னுமொரு துன்பியல் சம்பவம்’ என்று வர்ணிக்கக்கூடும். ஆனால் பதினைந்து வருடங்களுக்கு முன்பு துரத்தப்பட்ட அந்த முசுலிம் மக்கள் இன்று வரை நாட்டின் மேற்குப்பகுதிகளிலும் தென் பகுதிகளிலும் வேண்டாத அகதிகளாய்த் துன்பத்தில் உழன்று கொண்டிருக்கிறார்கள்.
இந்நூலின் இன்னுஞ் சில பக்கங்கள் விடுதலைப் புலிகளின் கபட அரசியலையும் துரோக அரசியலையும் ஆராய்ந்து சொல்கின்றன. 1987ல் இலங்கை, இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தானதன் பின்பாக 1987 ஓகஸ்ட் 4ம் நாள் சுதுமலைப் பொதுக்கூட்டத்தில் பொதுமக்களின் முன் முதன் முறையாக உரையாற்றிய விடுதலைப்புலிகளின் தலைவர் ‘தங்கள் மீது பலவந்தமாக ஒப்பந்தத்தை இந்திய அரசு திணித்திருப்பதாகவும் இன்று முதல் ஈழத்தமிழர்களைப் பாதுகாக்கும் பொறுப்பை இந்திய அரசிடம் கையளிக்கிறோம்’ என்றும் கூறினார். இலங்கை இந்திய ஒப்பந்தம் நிகழ்வதற்கு முன்பாகவே இந்தியப்பிரதமர் ராஜிவ் காந்தியும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் செய்து கொண்ட இன்னொரு திரைமறைவு ஒப்பந்தத்தைக் குறித்து புஸ்பராஜா ‘லண்டன் ஒப்சேவர்’ பத்திரிகையை ஆதாரம் காட்டி எழுதுகிறார்:
“இலங்கை - இந்திய ஒப்பந்தம் ஏற்பட்ட பின் - வடக்கு கிழக்கில் அமையவிருக்கும் இடைக்கால நிர்வாக சபையில் பெரும்பான்மை இடங்களைப் புலிகளுக்குத் தருவதற்கும் புலிகளின் செலவினங்களுக்கு மாதா மாதம் அய்ந்து மில்லியன் இந்திய ரூபாய்கள் கொடுப்பதற்கும் இந்தியப் பிரதமர் ஒப்புக் கொண்டார். புலிகளும் இந்தியப் பிரதமரும் செய்து கொண்ட இந்த உடன்பாடு மிகவும் இரகசியமான ஒரு விடயமாகும். ஆரம்ப மாதத்துக்கான அய்ந்து மில்லியன் ரூபாய்களும் புலிகளுக்குக் கொடுக்கப்பட்டது.” (ப. 423) 1989 ஏப்ரல் 30ம் நாள் ‘லண்டன் ஒப்சேவர்’ பத்திரிகையில் வெளியான இச்செய்தியை புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் வரிக்குவரி ஒப்புக்கொள்கிறார். ‘லண்டன் ஒப்சேவரில் வெளியாகும் வரை இலங்கை - இந்திய மக்கள் அறியாமலேயே இருந்த இந்த இரகசிய உடன்படிக்கையை இந்தியப் பிரதமர் Gentlemen Agreement எனக்குறிப்பிட்டார் என்கிறார் பாலசிங்கம்.8
புலிகளின் திரைமறைவு உடன்படிக்கைகள் எதுவும் மக்கள் முன்வைக்கப்படுவதில்லை. அவர்கள் செய்யும் கொலைகளுக்கு காரணங்களையும் புலிகள் மக்கள் முன்வைப்பதில்லை என்பது ஒருபுறமிருக்க அவர்கள் தாங்கள் செய்யும் அநேக கொலைகளை ஒப்புக் கொள்வது கூட இல்லை.
புலிகள் எடுக்கும் அரசியல் முடிவுகளில் திரைமறைவுப் பேச்சுவார்த்தைகளில் அடிக்கும் குத்துக்கரணங்களில் செய்யும் துரோகங்களில் மக்களுக்கு எந்தப்பங்கும் இருப்பதில்லை. கொள்கைகளும் முடிவுகளும் மேலிருந்து கீழாகத்திணிக்கப்படுகின்றன. ஆனால் யுத்தத்தின் சுமையையும் தோல்வியின் அவமானத்தையும் மக்கள் தான் சுமக்கிறார்கள். யுத்தத்துக்கான செலவை மக்கள் தான் செலுத்துகிறார்கள். புலிகளின் அரசியல் தவறுகளுக்கு மக்கள் வட்டி செலுத்துகிறார்கள்.
எந்த வரலாற்று நிகழ்வையும் தங்கள் நலன்களுக்கு ஏற்ற வகையில் புலிகள் திரிக்க வல்லவர்கள். ராஜினி திரணக மவையும் விமலேஸ்வரனையும் கோவிந்தனையும் தாங்கள் கொலை செய்யவில்லை என மீண்டும் மீண்டும் அவர்கள் மறுத்துக்கொண்டிருக்கிறார்கள். புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கன் 08-11-1995 அன்று ‘அவுட்லுக்’ இதழுக்கு அளித்த நேர்காணலை புஸ்பராஜா நூலின் 519ஆம் பக்கத்தில் சுட்டிக் காட்டுகிறார்:
“அவுட்லுக்: நீங்கள் ஏன் ராஜீவ் காந்தியைக் கொன்றீர்கள்?
பாலசிங்கம்: மறுபடியும் மறுபடியும் கேட்கப்படும் இந்தக் கேள்விக்கு என்னிடம் ஒரே பதில்தான் இருக்கிறது. ராஜீவ் காந்தியை நாங்க கொல்லவில்லை”
பாலசிங்கம் இப்படிக் கூறிய ஏழு வருடங்களுக்குப் பின்பு கிளிநொச்சி ஊடகவியலாளர் மாநாட்டில் மறுபடியும் இந்தக் கேள்வி எழுப்பப்பட்ட போது பாலசிங்கம் மௌனித்திருக்க பிரபாகரன் இரண்டே இரண்டு இலக்கிய நயம் மிக்க வார்த்தைகளில் பிரச்சனையை முடித்து வைத்தார். ராஜீவ் காந்தி கேசுக்கே இதுதான் நிலைமை. இப்படியிருக்க குப்பனையும் கோவிந்ததனையும் கொன்றதையா புலிகள் ஒப்புக் கொள்ளப் போகிறார்கள்?
மற்றைய இயக்கங்கள் சிறிலங்கா அரசோடு சேர்ந்து துரோகமிழைத்தன எனக்கூறும் புலிகளின் வரலாறு என்ன? ஈழத்தின் ஆயுதப் போராட்ட வரலாற்றில் முதன் முதலாக சிறிலங்கா பேரினவாத அரசுடன் கூட்டுச் சேர்ந்து செயற்பட்டவர்கள் விடுதலைப்புலிகளே. புலிகளின் வார்த்தைகளில் சொன்னால் இந்தத் ‘தந்திரோபாயச்’ செயலில் 1989 ஏப்ரல் 26ம் நாள் புலிகள் இறங்கினர். அவர்கள் சிறிலங்கா அரசோடு கொண்டிருந்த உறவுகளையும் செய்து கொண்ட இரகசிய உடன் படிக்கைகளையும் நூலின் ‘பிரேமதாஸாவும் புலிகளும்’ என்ற அத்தியாயம் எழுதிச் செல்கிறது. (பக். 467 - 472)
இலங்கை அரசுத் தலைவர் பிரேமதாஸவுக்கும் புலிகளுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகளின் பின்னாக இலங்கை அரசு விடுதலைப்புலிகளுக்கு பெருமளவு ஆயுதத் தளவாடங்களை வழங்கியது. முல்லைத்தீவு மாவட்ட மணலாறு பிரதேச எல்லையில் உள்ள சிங்கள இராணுவ முகாம் ஒன்றின் வழியாக இலங்கை இராணுவத்தளபதி ஆட்டிகல இந்த ஆயுதத் தளபாடங்களைப் புலிகளுக்கு வழங்கினார்.9 1990 ஜூனில் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையிலான உறவுகள் முறிந்ததைத் தொடர்ந்து புலிகளால் ஏற்கனவே தடை செய்யப்பட்டிருந்த சில இயக்கங்கள் முதற்தடவையாக சிறிலங்கா அரசின் பக்கம் சாய்ந்தன. வடகிழக்குப் பகுதிகள் புலிகளின் ஆளுகைக்குள் வந்து விட்டதால் மற்றைய இயக்கங்கள் கொழும்பில் மையமிட்டனர். ஆக வரலாற்றில் தந்திரோபாயத்துக்கும் துரோகத்துக்கும் உள்ள இடைவெளி வெறும் ஒரு வருடம் தான். புஸ்பராஜா தமிழீழ விடுதலைப்புலிகளின் இத்தகைய அரசியல் குறித்து இவ்வாறு எழுதுகிறார்:
“விடுதலைப் புலிகள் பற்றியும் அவர்களின் தலைவர் பிரபாகரன் பற்றியும் இன்று உலகம் விசாலமாகப் பேசிக்கொள்ளும் அளவுக்கு அந்த இயக்கம் எல்லாவிதமான காய்களையும் தனது வசதிக்கேற்ப நகர்த்திக்கொண்டிருக்கிறது. அந்த இயக்கத்தின் பாறை போன்ற கட்டமைப்பும் மன்னிப்புக்கே இடமில்லாத அதன் கொள்கையும் ஈன இரக்கமற்ற அதன் நடவடிக்கைகளும் தாங்களும் தங்களுடன் சேர்ந்தவர்களுமே தியாகிகள் என்கிற அதன் போக்கும் வரலாற்றில் ஓர் அதிசயம் மிக்க பக்கம் தான். என்றாலும் அது தான் அந்த இயக்கத்தின் இருப்புக்கான காரணமும் கூட. அனைத்து ஈழப்போராளிகள் இயக்கங்களையும் அழித்து விட்டு ஈழ விடுதலைக்காக இன்று போராடும் ஒரே இயக்கம் நாங்கள்தான் என மக்களிடம் ஆதரவு கோரும் விடுதலைப்புலிகளின் தந்திரமே ஒரு மாயையை ஏற்படுத்தும் நடவடிக்கை தான். அவர்கள் யாருடனும் பேசுவர். ராஜீவ் காந்தியுடன் பேசுவர், ரணில் விக்கிரமசிங்க வுடன் பேசுவர், சந்திரிகாவுடன் பேசுவர், பிரேமதாஸாவுடன் பேசுவர், இந்தியப் புலனாய்வுத் துறை அதிகாரிகளுடன் பேசுவர், இந்திய இராணுவத்துடன் கை கொடுப்பர். இலங்கை இராணுவத்துடன் உறவாடுவர். ஆனால் மற்றைய இயக்கங்கள் இப்படி ஏதாவது ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டால் துரோகிகள் என்பர். தங்களைத்தவிர வேறு யாரும் இருக்கக் கூடாது என்னும் போக்கும் மற்றவர்கள் எல்லோரையும் சந்தேகிக்கும் சுய பயமுள்ள மனோநிலைமையுமே இதற்குக் காரணம். பயத்தின் அடிப்படையில் இருந்தே அராஜகம் பிறக்கிறது. (ப. 520)
IVஅந்த நான்காவது அய்ந்தாவது தீர்மானங்களை மொழிந்த மற்றைய இயக்கங்களின் மக்கள் விரோத நடவடிக்கைகளையும் இயக்க உள் படுகொலைகளையும் கூட புஸ்பராஜா எழுதத் தவறவில்லை. TELO, PLOT, TELA ஆகிய இயக்கங்கள் செய்த உள்படுகொலைகளையும் சகோதரப்படுகொலைகளையும் PLOT, TELO ஆகிய இயக்கத்தினர் தமிழகத்தில் நடத்தி வந்த வதை முகாம்களையும் அவர் பக்கங்கள் 494 - 504ல் எழுதியிருக்கிறார். தனது சொந்த இயக்கமான EPRLF இயக்கத்தையும் கடுமையாக விமர்சிக்க அவர் தவறுவதில்லை. EPRLF இயக்கத்தின் மாகாண சபை ஆட்சிக் காலத்தில் அவர்கள் நிகழ்த்திய கொலைகளையும் அட்டூழியங்களையும் அவர்களின் வதைமுகாமையும் “எனது தாய்மண்ணில்” என்ற அத்தியாயத்தில் அவர் விபரிக்கிறார். (பக்: 439 - 462)
சிறிலங்கா பேரினவாத அரசுகள் காலம் காலமாகத் தமிழ் மக்களுக்கு இழைத்து வரும் அரசியல் அநீதிகளையும் மனித உரிமை மீறல்களையும் பல்வேறு ஆதாரச்சான்றுகளுடன் புஸ்பராஜா தொகுத்திருக்கிறார். தமிழ் மக்களின் அரசியல் இறைமைகள் பேரினவாத அரசுகளால் பறிக்கப்பட்ட தருணங்கள், அரசால் நிகழ்த்தப்பட்ட ஏராளமான மக்கள் படுகொலைகள், நாஸி வதைமுகாம்களை ஒத்த சிறிலங்காவின் சிறைகள் நூலில் அத்தியாயம் அத்தியாயமாக விரிகின்றன. ‘1983 ஜூலைக் கலவரம்’ என்ற அத்தியாயத்தில் சிறிலங்கா அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின அழிப்பையும் வெலிகடச்சிறையில் சிறை அதிகாரிகளும் சிங்களக் கைதிகளுமாகச் சேர்ந்து நடத்திய படுகொலைகளையும் துல்லியமாகச் சித்தரிக்கிறார். (பக். 345 - 351)
இன்று சிறிலங்காவில் சிங்கள இனவாதம் அதன் உச்சக் கட்டத்தில் இருக்கிறது. சிஹல உருமய, பூமி புத்ர போன்ற பச்சை இனவாதக் கட்சிகள் வெகு வேகமாகச் செல்வாக்குப் பெற்று வருகின்றன. ஆளும் பொதுஜன முன்னணி அரசு மொத்த நாட்டையும் கூட்டி அள்ளி ஏகாதிபத்தியங்களுக்கு அடவு வைத்துள்ளது. அரசு சாத்தியமான வழிகளில் எல்லாம் தமிழ் மக்களின் முசுலிம் மக்களின் மலையக மக்களின் அரசியல் உரிமைகளை மறுத்து வருவதோடு நில்லாது உழைக்கும் சிங்கள மக்களின் வாழ்வாதார உரிமைகளையும் பறித்து வருகிறது. பொது நிறுவனங்களை அந்நிய பல்தேசிய நிறுவனங்களுக்கு விற்றுத் தள்ளுவதில் அரசு ஒரு வேகச் சாதனையைப் படைத்திருக்கிறது. இந்தச் சாதனையை முறியடித்து புதிய சாதனையைப் படைப்பதற்கான தருணத்தை எதிர்நோக்கி ரணில் விக்கிரமசிங்க காத்திருக்கிறார்.
2003 ஜூன் 9 - 10 திகதிகளில் ஜப்பானில் நடைபெற்ற இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டில் இலங்கைக்கு 4.5 பில்லியன் டொலர்களை கடனாக வழங்குவதற்கு உறுதி தெரிவித்த சர்வதேச மாநாட்டுப் பிரதிநிதிகள் சிறிலங்கா அரசும் விடுதலைப் புலிகளும் விரைவில் பேச்சுவார்த்தை மூலம் ஓர் அரசியல் தீர்வை எட்ட வேண்டும் என்று வலியுறுத்தினர். டோக்கியா மாநாட்டுப் பிரகடனத்தின் பதினெட்டாவது நிரல் இதனை விளக்கியது. இம்மாநாட்டுக்கு அமெரிக்கா, அய்ரோப்பிய யூனியன், ஜப்பான், நோர்வே ஆகிய நான்கு நாடுகளும் இணைத்தலைமை வகிக்க 51 நாடுகளையும் 22 சர்வதேச நிறுவனங்களையும் சேர்ந்த பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டார்கள். 2005 டிசம்பர் 19ம் நாள் ப்ரஸ்லெஸ்ஸில் கூடிய இணைத் தலைமை நாடுகள் மீண்டும் இத்தீர்மானத்தை வலியுறுத்தின.
வரலாற்றின் இருண்ட பக்கங்களில் மூன்றாம் உலக நாடுகளின் இனப்பிரச்சினைகளையும் உள்நாட்டுப்போர் களையும் முடித்துவைப்பதாகக்கூறி மேற்கு நாடுகளும் அவற்றின் பொது நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களும் ஆற்றிய பணிகள் வெகுபிரசித்தமானவை. அவர்களின் சமாதான முயற்சிகளுக்கும் தீர்வுகளுக்கும் கொங்கோ, சிலி, நிக்கிரகுவா, பாலஸ்தீனம், திமோர், பொஸ்னியா, ருவண்டா, சோமாலியா, லைபீரியா ஆகியவை அவலமான இரத்த சாட்சியங்கள். இந்த வரிசையில் இன்று ஏகாதிபத்தியங்களின் நேரடிக் கண்காணிப்புக்குள் ஈழத் தமிழ் மக்களின் தலைவிதியும் வந்து சேர்ந்துள்ளது. ஏகாதிபத்தியங்களின் பலங்களையும் உலக மயமாக்குதல் பொருளாதாரத்தையும் பூமியின் கேந்திரப் பிரதேசங்களில் தமது இராணுவ இருப்பை உறுதி செய்தலையும் சோதனை செய்து பார்க்கும் இன்னொரு களமாக இலங்கை மாற்றப்பட்டுள்ளது.
யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினருக்கு வந்தது தான் வாழ்வு. நோர்வே வெள்ளைக்காரர்களில் பலர் சமாதானத்தின் பெயரால் இலங்கையின் இதமான தட்ப வெப்ப சூழலில் தங்களின் நிரந்தர விடுமுறைகளைக் கழித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தச் ‘சமாதான’ காலத்தில் தான் நானூறுக்கும் மேற்பட்டவர்கள் புலிகளின் பிஸ்டல் குழுவினரால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். புலிகளிடமிருந்து பிரிந்து சென்ற கருணா அணியின் பெரும்பகுதி இந்தச் சமாதான காலத்தில் தான் புலிகளால் அழிக்கப்பட்டது. இன்னொரு புறத்தில் கருணா அணியினரும் அரசபடைகளும் துணைப்படைகளும் யுத்த நிறுத்த மீறல்களில் ஈடுபடுகிறார்கள். நடந்து முடிந்த சனாதிபதி தேர்தலின் பின்பாக விடுதலைப்புலிகளின் பாதாளப்படைகளான சீறும் மக்கள் படை, எல்லாளன் படை, வன்னியன் படை போன்ற இன்னோரன்ன படைகளும் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளன. நடைபெறும் யுத்த நிறுத்த மீறல்களைக் குறித்து யுத்த நிறுத்தக்கண்காணிப்பு குழுவினர் எதுவித நடவடிக்கைகளும் எடுத்தாகத்தெரியவில்லை. இந்த அரசியல் சூதாடிகளின் இரும்புப்பிடிக்குள் ஈழத் தமிழ் முசுலிம் மக்களின் வாழ்வும் எதிர்காலமும் முடங்கிக் கிடக்கின்றன.
மறுபுறத்தில் ஈழமக்கள் சனநாயகக் கட்சி (EPDP), அரசுக்கு தனது ஆதரவை வழங்கி வருகிறது. அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தா இலங்கை அரசின் ஊழல் அமைச்சரவையில் அங்கம் வகிக்கிறார். PLOT, EPRLF, TELO ஆகிய மூன்று இயக்கங்களும் பாராளுமன்ற அரசியலுக்கு நகர்ந்துவிட்டன. EROS இயக்கத்தை விடுதலைப்புலிகள் இயக்கம் தனக்குள் செரித்துக் கொண்டது. ரெலோவின் தலைமையும் ஈ.பி.ஆர்.எல்.எப்பின் சுரேஸ் பிரேமச்சந்திரன் பிரிவும் விடுதலைப்புலிகளைத் தமிழர்களின் ஏகபிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
விடுதலைப்புலிகள் தங்களைத் தமிழர்களுடையது மட்டு மல்லாமல் முசுலீம்களின் ஏக பிரதிநிதிகளாகவும் அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏகபிரதிநிதித்துவம் என்பதன் அர்த்தம் புலிகள் தங்களிடம் அடிபணியாத எந்த மாற்று அரசியலாளர்களையும் மாற்றுக்கருத்தாளர்களையும் மாற்று அரசியல் முன்னெடுப்புகளையும் ஈழப்புலத்தில் செயற்பட அனுமதிக்க மாட்டார்கள் என்பதைத் தவிர வேறென்ன? இன்றைய ஈழ அரசியற் களத்தில் சனநாயகத்தையும் மாற்றுக் கருத்துக்களையும் வித்தியாசங்களையும் அங்கீகரித்து ஒரு அரசியல் போக்கு உருவாவது மிக அவசியம். சிங்களப் பேரினவாதம், ஏகாதிபத்தியத் தலையீடுகளை மட்டுமல்லாமல் தமிழ்க் குறுந் தேசிய வெறியையும் தமிழ் முசுலிம் மக்கள் எதிர்கொண்டேயாக வேண்டும். ஆனால் மாற்றுக் குரல்களும் சனநாயகம் குறித்த கேள்விகளும் எழும் போதெல்லாம் அந்தக் குரல்களுக்கும் கேள்விகளுக்கும் பதிலைப் புலிகள் உடனடியாகவே வழங்கி விடுகிறார்கள். அவர்கள் அதைத் தமது பிஸ்டல் குழுவினரிடம் கொடுத்து அனுப்பி வைக்கிறார்கள். இதைத் தான் சனநாயகத்தின் தோல்வி என்கிறோம். மற்றவைகளின் இருப்பை வேரறுக்கும் புலிகளின் பண்பைத்தான் பாஸிஸம் என்கிறோம். அரசியல் புலத்திலும் சமூகப் புலத்திலும் எழும் மாற்றுப் போர்க்குரல்களையும் மாற்று அரசியல் முன்னெடுப்புக்களையும் புலிகள் வன்முறையின் மூலம் வரலாற்றிலிருந்து துடைத்தெறிகிறார்கள். பாஸிஸத்தினால் ஈழப் போராட்டத்தின் வரலாற்றைப் புலிகள் தோல்வி வரலாறாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
இப்போது மீண்டும் ஒரு முறை அந்த மறக்கப்பட்ட நான்காவது அய்ந்தாவது தீர்மானங்களைப் படித்துப் பாருங்கள்!
சான்றுக் குறிப்புகள்1. (f)பனான், டேவிட்மாசி, தமிழில்: எஸ். பாலச்சந்திரன், விடியல். பதிப்பகம்
2. போரும் சமாதானமும், அன்ரன் பாலசிங்கம், Fairmax.
3.மேலது.
4. சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும், வெகுஜனன் _ இராவணா, புதியபூமி.
5. வடபுலத்து பொதுவுடைமை இயக்கமும் தோழர் கார்த்திகேசனும், சி.கா. செந்தில்வேல், புதியபூமி.
6. வரலாற்றில் வாழ்தல், எஸ். பொ. மித்ர.
7. (f)பனான், டேவிட் மாசி, தமிழில் எஸ். பாலச்சந்திரன், விடியல். பதிப்பகம்
8. போரும் சமாதானமும், அன்ரன் பாலசிங்கம், Fairmax.9. சுதந்திர வேட்கை, அடேல், Fairmax.