Wednesday, April 05, 2006

ஷோபா சக்தி - 'தம்பி' திரை விமர்சனம்




திரைப்பட நடிகர்களின் கட் அவுட்டுக்களுக்குப் பாலபிஷேகம் செய்வது, அபிமான நடிகைகளுக்காகக் கோயில் கட்டுவது, அபிமான நடிகர்களுக்காக விரலை வெட்டுவது, அரைவேக்காட்டுத்தனமான மிகை உணர்ச்சித் திரைப்படங்களுக்கும் மலிவுத்தனமாக பாலியல் கிளர்ச்சிகளை உருவாக்கும் விடலைத்தனமான 'காதல்' படங்களுக்கும் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கும் திரைப்பட ஆய்வாளர்களும் பாராட்டுக் கட்டுரைகள் எழுதுவது, உலக இலக்கியத்தைச் சவால் செய்வதாய்ச் சொல்லிக் கொள்ளும் இலக்கிய எழுத்தாளன் பேய் பிசாசு நம்பிக்கைகளையும் சாதி பெருமிதங்களையும் தூக்கி நிறுத்தும், துப்பட்டாக்களைக் கண்காணிக்கும் சமூக விரோதத் திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவது, திரைப்படப் புகழ் நட்கத்திரங்களைத் தேர்ந்த சமூக சிந்தனையாளர்களாக உருவகித்து ஊடகங்கள் நேர்காணல் செய்வது, உணர்ச்சிப் பாவலர்கள் ஆணிய வக்கிரத்துடன் ஆபாசமாகத் திரைப்படப் பாடல்கள் புனைவது, சினிமா கவர்ச்சி என்ற ஒற்றை ஆயுதத்தின் துணையுடன் மட்டுமே திரைப்படத் துறையினர் அரசியல் பண்பாட்டு தளங்களின் போக்குகளைத் தீர்மானிக்கக் கூடிய சக்திகளில் ஒன்றாக மாறிவிடுவது போன்ற அட்டூழியங்கள் தமிழ்நாட்டில் மட்டுமே நிகழ முடியும் என அடிக்கடி எமது தமிழகத் தோழர்கள் வருத்தப்பட்டுக் கொள்வதுண்டு. தோழர்களுக்கு சற்றே ஆறுதல் அளிக்கக் கூடிய ஒரு செய்தி என்னிடம் உண்டு. தமிழ்நாட்டில் மட்டுமல்ல புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களிடையேயும் இந்த அட்டூழியங்களில் சிலவாவது நிகழ்ந்துகொண்டு தானிருக்கின்றன.

பெப்ரவரி மாதத்தின் நடுப்பகுதியில் பாரிஸ் நகரத்தில் ஈழத் தமிழர்கள் நடமாடும் கடை வீதிகளில் எல்லாம் இயக்குனர் சீமானின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட 'தம்பி' திரைப்படத்துக்கான விளம்பரச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. நடிகர் மாதவனின் விதம் விதமான தோற்ற நிலைகளின் கீழே 'அச்சந் தவிர், ரெளத்திரம் பழகு' என்ற புதிய ஆத்திசூடியின் வரிகள் அச்சிடப்பட்டிருந்தன. அச் சுவரொட்டிகளில் இப்படியாகவும் ஒரு வரி இருந்தது "முக்கிய குறிப்பு - இத் திரைப்படம் ஈழத் தமிழர்களின் பிரச்சனையைப் பற்றியது" . அதே நேரத்தில் அய்ரோப்பியத் தமிழ்த் தொலைக்காட்சிகளில் தம்பி திரைப்பட முன்னோட்டம் அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை காண்பிக்கப்பட்டது. முன்னோட்டத்தில் முத்தாய்ப்பாய் சே குவேரா, மாவோ இருவரதும் புகழ்பெற்ற இரண்டு கூற்றுக்கள் திரையில் எழுத்துக்களாய் மின்னின. தம்பி திரைப்படம் வெளியானதும் புலம்பெயர் வாரப் பத்திரிகைகள் தம்பி படத்தைக் கொண்டாடின. மின் இலத்திரனியல் ஊடகங்களில் தம்பி திரைப்படமும் இயக்குனர் சீமானும் சே குவேரா பனியனும் முக்கிய பேசு பொருட்களாயின. மார்க்ஸின் மாணவன் பெரியாரின் பேரன் தம்பியின் தம்பி என்று என்று கிறுக்குத்தனமாகச் சீமான் பெரிய சாமானாக வர்ணிக்கப்பட்டார்.

இந்த அமளிதுமளிக்குள் சீமான் அவுஸ்ரேலியாவிலிருந்து ஒலிபரப்பாகும் இன்பத் தமிழ் வானொலிக்கு 20.10.2005 அன்று வழங்கியிழுந்த நேர்காணலை இணையத்தளம் ஊடாகச் சற்றே தாமதமாகக் கேட்க நேர்ந்தது. அந் நேர்காணலில் சீமான் இவ்வாறு கூறினார்: "சிங்கள அரசு முழுப் பலத்துடன்தமிழ் மக்களை அழித்தொழிக்கும் போது அதை ஒரு அரசின் இறையாண்மையாக உலகம் பார்க்கிறது, ஆனால் நாங்கள் கையில் ஆயுதத்தை எடுக்கும் போது அதை வன்முறையாகத் தீவிரவாதமாக உலகம் சொல்கிறது. அப்படிச் சொல்லக் கூடாது என்பதையே உள்ளர்த்தமாகக் கொண்டு தம்பி திரைப்படத்தை எடுத்து வருகிறேன்" இவை எல்லாற்றினதும் உச்சமாகத் தம்பி வெளியானதும் சீமான் ஆனந்த விகடன் இதழுக்கு வழங்கிய நேர்காணலில் "தம்பியின் வெற்றியைப் பெரியாருக்கும் பிரபாகரனுக்கும் அர்ப்பணிக்கிறேன்" என்றார். இனி வருவது தம்பி திரைப்படத்தின் கதை:

அன்பே உருவான பெற்றோரும் பாசமுள்ள ஒரேயொரு தங்கையும் உள்ள தமிழ் சினிமாவின் மாதிரிக் குடும்பமொன்றில் பிறந்தவன் தம்பி என்ற வேலுத் தொண்டைமான். இவனுக்கு முன்னதாகப் "படையப்பா", "பரமசிவன்", "திருப்பாச்சி" போன்றவர்களும் இத்தகைய மாதிரிக் குடும்பத்தில் பிறந்தவர்களே. கல்லூரியில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவனான தம்பி மாதம் எட்டாயிரம் ரூபாய் சம்பளத்துடன் உத்தியோகம் பார்க்கத் தொடங்குகிறான். வேலைக்குப் போய்க் கொண்டிருக்கையில் தெருச்சண்டியன் பாண்டியனின் தம்பி செய்யும் கொலையொன்றைத் தற்செயலாகச் சீமானின் தம்பி பார்த்துவிடுகிறான். தம்பி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்ததால் பாண்டியனின் தம்பி உள்ளே தள்ளப்படுகிறான். இதனால் வெகுண்டெழுந்த தெருச்சண்டியன் பாண்டியன், தம்பியின் மாதிரிக் குடும்பத்தைக் கொன்றொழித்து விடுகிறான். இப்போது தம்பி சினந்தெழுந்து பாண்டியனைப் பழிவாங்க பாண்டியனின் வீட்டுக்குச் செல்லும் போது அங்கே பாண்டியனின் மாதிரிக் குடும்பத்தைக் காண்கிறான். அந்தக் குடும்பம் தான் பாண்டியனைக் கொலை செய்வதால் பாதிக்கப்படக் கூடாது என எண்ணும் தம்பி பாண்டியனைச் சந்தித்து "நிறுத்திக் கொள்வோம்" என்கிறான். பாண்டியனோ தம்பியை அடித்து முள்ளுக் கம்பியில் காயப் போட்டுவிடுகிறான். காயங்கள் ஆறியதும் தம்பி வன்முறையை ஒழிக்கப் புறப்படுகிறான். வில்லன் குழுவினரை துரத்தித் துரத்தி மரண அடி அடிக்கிறான் தம்பி. தம்பி கொலை செய்வதில்லை ஆனால் கொலைக்கும் கோமாவுக்கும் உள்ள மயிரிழையில் தம்பியிடம் அடி வாங்கியவர்களின் உயிர் ஊசலாடுகிறது. இந்த மயிர் இழையில் தான் படமே நிற்கிறது.வன்முறைக்கு எதிராக ஒரு வரையறுக்கப்பட்ட வன்முறையைத் தம்பி கையில் எடுக்கிறான். "உதைக்கணும் உதைக்கணும் உதைப்பேன்" என்று முழிகளைப் புரட்டியவாறு ஒரு சைக்கோ மாதிரித் தம்பி அலையத் தம்பியின் சைக்கோவையும் தெருச் சண்டித்தனத்தையும் மாவீரம் என அர்த்தப்படுத்திக் கொள்ளும் அர்ச்சனா தம்பியை விரட்டி விரட்டிக் காதல் செய்கிறாள். தம்பிக்கு உலகைத் திருத்தும் வேலையிருப்பதால் அவன் அர்ச்சனாவின் திடீர்க் காதலை நிராகரிக்கிறான். என்றாலும், அர்ச்சனா விடாப்பிடியாக கனவில் தம்பியோடு இரண்டு காதற் பாடல்களை ஊரைச் சுற்றி மரத்தைச் சுற்றி பாடிவிடுகிறாள்.

இடையில் தம்பிக்கு மதியுரைஞராக வந்து வாய்க்கிறார் மணிவண்ணன். பேருந்தில் பயணம் செய்யும் பெண்களை இடிக்கும் வாலிப வயோதிக அன்பர்களை அடக்கிய தம்பியின் தீரச் செயல்களுக்குப் புரட்சிகர தத்துவார்த்தரீதியான விளக்கங்களை மதியுரைஞர் வழங்குகிறார். "நான் ஏன் தெருச்சண்டியன் ஆனேன்?" என்று பல்கலைக் கழகப் பரிசளிப்பு விழா மேடையில் தம்பி உருக்கமாக உரை நிகழ்த்துகிறான். அப்போது மேடையில் இருக்கும் செட் ப்ரொப்பர்டிகள் பின் வருமாறு :

மூன்று நாற்காலிகள், ஒரு மேசை, எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்சினி, ஒரு மைக் ஸ்ராண்ட், பாவலர் அறிவுமதி, ஒரு மின்விசிறி.

மீண்டும் தோன்றும் மதியுரைஞர் தம்பியிடம் கார்ல் மார்க்ஸ், சே குவேரா, பிரபாகரன் எல்லோரும் கல்யாணம் செய்ததால் தம்பியும் அர்ச்சனாவை காதலிக்கலாம் என்று ஆலோசனை கூறுகிறார். உடனே தம்பி அர்ச்சனாவின் காதலை ஏற்றுக்கொள்ள அர்ச்சனா தம்பியின் காலில் தடாலென விழுந்து கும்பிடுகிறாள். கடைசி நேரக் கலவரத்தில் பாண்டியனின் மாதிரிக் குடும்பத்தைச் சீமானின் தம்பி ஆபத்திலிருந்து காப்பாற்றுவதோடு பாண்டியனுக்கு அறிவுரையும் சொல்கிறான். மனம் திருந்திய பாண்டியன் சீமானின் தம்பியைத் தனது குலசாமியாக ஏற்றுக்கொள்கிறான் இது தெரியாத பாண்டியனின் தம்பி சீமானின் தம்பியை வெட்டி விடுகிறான். தம்பி குற்றுயிராக ஆஸ்பத்திரிப் படுக்கையில் கிடக்க தம்பியின் காதலியும் நண்பர்களும் சோகத்துடன் நிற்கிறார்கள். இவர்களை விடப் படு சோகத்துடன் வில்லனும் வெட்டியவனும் கண்களைக் கசக்கிக்கொண்டு நிற்கிறார்கள்.அப்போது அங்கே தோன்றும் மதியுரைஞர் தம்பியின் காதுகளுக்குள் "தம்பி எழுந்திரு! இன்னமும் பஸ்ஸில் இடித்தபடியே தான் பயணம் செய்கிறார்கள் எழுந்திரு ! நமக்கு இன்னமும் வேலையிருக்கிறது" என்று கூறத் "தம்பி பொழைச்சிட்டான் "...............

மேலேயுள்ளது தம்பி திரைப்படத்தின் கதைச் சுருக்கம் என்று நினைத்துவிடாதீர்கள். தம்பி திரைப்படத்தின் முழுக்கதையும் இதைவிடச் சுருங்கியது, நான் தான் வாசிப்புச் சுவாரசியத்துக்காகக் கதையைச் சற்றே மினுக்கி எழுதியுள்ளேன்.தறுதலை தம்பிக்கும் தாதா பாண்டியனுக்கும் இடையில் நடக்கும் நாய்ச் சண்டையில் தமிழீழ மக்களின் போராட்டம் எங்கே வருகிறது ?காதலை ஏற்றுக்கொண்டவுடன் தம்பியின் கால்களில் காதலி விழுந்து தொழும் அசிங்கமான திரைப்படத்தில் ஈரோட்டுச் சிங்கத்துக்கு என்ன வேலை ?இந்த வெங்காயச் சினிமாவை வீரமணி, கொளத்தூர்மணிக்குக் கூட அர்ப்பணிக்க முடியாதே ? இதை எந்தத் துணிச்சலில் சீமான் பெரியாருக்கு அர்ப்பணிக்கிறார் ?

"தமிழ்த் திரைப்படங்களை குறித்துப் பேசுவது சிரங்கைச் சொறிந்து கொடுப்பதைப் போன்றது" எனப் பேராசிரியர் சிவசேகரம் ஒருமுறை எழுதியதாக நினைவு. பேராசிரியர் விரக்தியின் விளிம்பில் நின்று இதை எழுதியிருந்தாலும் கூட தமிழ்த் திரைப்பட வரலாற்றில் நேர்மறைப் பண்புகளும் இல்லாமல் இல்லை. திராவிட இயக்கத்தினரின் திரைப்படங்களும் 'பாதை தெரியுது பார்', 'ஏழாவது மனிதன்', 'கண் சிவந்தால் மண் சிவக்கும்' போன்று மாற்றுத் திரைப்படங்களைக் கண்டடைவதற்கான எத்தனங்களுக்குள்ளால் உருவாக்கப்பட்ட திரைப்படங்களும் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முக்கியமானவை.இது தவிர வணிக நோக்கில் தயாரிக்கப்படும் சனரஞ்சக மனோரதியத் திரைப்படங்களுக்கும் பரந்துபட்ட தமிழ்ப் பார்வையாளர்கள் திரளுக்குமிடையே உள்ள உறவுடன் ரசிக உளவியலும் குறித்த ஒரு உரையாடலை 'நிறப்பிரிகை' சில வருடங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தது. எனினும் அவை குறித்த சிந்தனை வளர்ச்சியும் ஆய்வு முயற்சிகளும், தமிழில் தொடராமலேயே போய்விட்டன. பாடல்கள், நடனங்கள், சண்டைக் காட்சிகள், மிகை உணர்சிகள், போன்ற கேளிக்கைக்கான நேர்மறைக் கூறுகளுடன் நடிகைகளைப் பாலியல் பிரதிமைகளாகக் கட்டமைப்பது, ஆதிக்க சாதிச் சாய்வு,மூடநம்பிக்கைகள், ஆண் மையவாதச் சிந்தனை முறைமை போன்ற எதிர்மறைக் கூறுகளும் சேர்ந்ததாகவே தமிழ்ச் சினிமாவின் பரப்பு இயங்கி வருகிறது. இந்தப் போக்கு தமிழ்ச் சினிமாவில் மட்டுமல்லாமல் உலகச் சினிமாவிலும் தொழிற்படும் ஒரு போக்குத்தான். ஆனால் தமிழ்த் திரைப்படத் துறையில் மாபெரும் வணிக வெற்றிகளை சாதித்த இயக்குனர்கள் தமது திரைப்படங்களுக்கு வெளியே புரட்சிகரமான வாய்ச் சொற்களை உதிர்ப்பதில்லை. 'கரகாட்டக்காரன்' திரைப்படத்தின் வெற்றியைக் கத்தாருக்கு அர்ப்பணிக்கிறேன் என்று கங்கை அமரன் சொன்னதில்லை. 'கப்டன் பிரபாகரன்' படத்தின் வெற்றியை ஈழப்போராளிகளுக்கு அர்ப்பணிக்கிறேன் என்று செல்வமணி சொன்னதில்லை. 'வைஜந்தி அய்.பி.எஸ்' திரைப்படத்தை ரோசா லக்ஸம்பேர்க்கிற்கு அர்ப்பணிப்பதாக அத் திரைப்படத்தின் இயக்குனர் சொன்னதில்லை, ஆனால் மேற்சொன்ன படங்களையே கருத்துத் தளத்தில் ஒத்ததாக உள்ள தம்பி திரைப்படத்தின் வெற்றியைப் பெரியாருக்கும், பிரபாகரனுக்கும், அர்ப்பணிக்கிறேன் என்று கூறும் சீமானின் வாய்த் துடுக்குக்குப் பின்னால் இருப்பது எது ?


தம்பி திரைப்படத்துக்கு புறத்தே இயக்குனர் சீமான் கட்டமைத்த கட்டமைக்கும் போலிப் புரட்சிகரப் படிமங்களின் பின்னே/ அவர் உதிர்த்தும் கைப்புள்ள, வெடிமுத்து வீர வசனங்களின் பின்னே இயங்கும் சின்னத்தனமான அரசியலின் வியாபார இலக்கு எது ? அந்த வியாபாரத்தின் அரசியல் என்ன ? இந்தக் கேள்விகளைப் பரிசீலிப்பதற்கு முன்னதாக தம்பி படத்தின் திரைக்கதை வசனத்தைப் பற்றியும் அவற்றுள் பொதிந்திருக்கும் ஆபத்தான சாதிய ஆண்மையவாத அராஐகக் கூறுகளைப் பற்றியும் பார்த்து விடுவோம்.

தம்பி திரைப்படம் பழிக்குப் பழி என்ற வழமையான தமிழ்த் திரைப்பட பாணியிலிருந்து வேறுபட்டது அதனாலேயே அது முக்கியமானது என்று திராவிடப் பாசறையிலிருந்து வரும் 'உண்மை' இதழும் எழுதுகிறது தமிழ்த் தேசியவாதப் பாசறையிலிருந்து வரும் 'தென் செய்தி' இதழும் எழுதுகிறது. என்ன இழவு இது ?
எம்.ஜி.ஆர் நடித்த 136 படங்களில் 130 படங்களில் இந்த கதை தானே நடந்தது ! எழுந்தமானமான எடுத்துக்காட்டாய் கஜேந்திரா பிலிம்ஸின் 'நாளை நமதே" திரைப்படத்தை எடுத்துக்கொள்வோம் அன்பே உருவான தாய், அறிவே உருவான தந்தை, சங்கர், விஜே, கண்ணன் என மூன்று குழந்தைகள்! தென்றல் நடைபயின்ற குடும்பத்தில் தீடீரெனப் புகுந்தான் கொள்ளைக்காரன் ரஞ்சித். தென்றல்கள் ஒவ்வொன்றும திசைக்கு ஒன்றாகப் பிரிந்தன. முடிவு என்ன? எம்.ஜி.ஆர் பெரியவனாக வளரவில்லையா? தன் குடும்பத்தையே நாசமாக்கிய நம்பியாரைக் கண்டு பிடிக்கவில்லையா? நம்பியாரைத் தண்டவாளத்தில் ஓடவிட்டுத் துரத்தித் துரத்தி நீதி மொழிகள் பேசவில்லையா நம்பியாரைப் பழிவாங்க எல்லா வாய்ப்புகள் இருந்தும் இறுதியில் எம்.ஜி.ஆர் நம்பியாரின் உயிரைக் காப்பாற்றி சட்டத்தின் கையில் ஒப்புவிக்கவில்லையா? அப்போது நாகேஷ் போலீசாரை ஜீப்பில் அழைத்துக்கொண்டு வரவில்லையா? எல்லாமே நடந்தன. ஒன்று மட்டும் தான் நடக்கவில்லை. இத் திரைப்படத்தின் வெற்றியை அண்ணாத்துரைக்கு அர்ப்பணிப்பதாக எம்.ஜி.ஆர் சொல்லவில்லை......!

'தென்செய்தி' இதழில் சுப.வீரபாண்டியன் தம்பி திரைப்படத்தைக் குறித்து எழுதும் போது தம்பியின் வீட்டில் பெரியார், கார்ல் மார்க்ஸ், பாரதிதாசன் படங்கள் தொங்குவதாக மகிழ்ந்து போகிறார். இவையெல்லாம் தம்பியின் உள் வீட்டில் மாட்டியிருந்த படங்கள். ஆனால் தம்பியின் வீட்டின் முகப்பில் மாட்டப்பட்டிருந்த ஒரு புகைப்படம் -அண்மைக் காட்சிக்குள் ஒன்றுக்கு இரண்டு தடவைகள் வரும் ஒரு புகைப்படம்- எப்படித்தான் பேராசிரின் கண்களுக்குப் படாமல் போனதோ தெரியவில்லை. அம் முகப்பு படத்தில் இருப்பவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். மார்க்ஸின் மாணவர்கள், பெரியாரின் பேரர்கள், ஒரு போதும் முத்துராமலிங்கத்தின் படத்தைத் தூக்கிப்பிடிப்பதில்லை. தலித் மக்களின் தலைமைப் போராளி இம்மனுவேல் சேகரனின் படுகொலைக்கு நேரடிக் காரணியாக இருந்தவர் முத்துராமலிங்கம். முத்துராமலிங்கத்தை கைது செய்யுமாறு அப்போது பெரியார் குரல் கொடுத்தார். பின் அவர் கைது செய்யப்பட்டார். முத்துராமலிங்கத்துக்கு அடிப்படைவாத இந்துத்துவ முகமும் உண்டு. இந்து மகா சபைத் தலைவராகவும் முத்துராமலிங்கம் இருந்தார். "ஒரு வேளை இன்று முத்துராமலிங்கர் உயிருடன் இருந்திருந்தால் அவரே இன்றைய தமிழக இந்துத்துவ சக்திகளின் தலைவராக இருந்திருப்பாரோ என்று ஊகிக்கவும் இடமுண்டு" என்பார் அ.மார்க்ஸ் (அதிகாரத்தை நோக்கி உண்மைகளைப் பேசுவோம் பக்.107) இன்று தென்மாவட்டங்களில் சாதி ஒடுக்குமுறையாளர்களாக விளங்கும் முக்குலோத்தரின் சாதிப் பெருமிதப் படிமமாக வரலாற்று நாயகனாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நிறுத்தப்பட்டிருக்கிறார். ஆக முத்துராமலிங்கத்தின் படத்தைத் தம்பியின் வீட்டில் சீமான் மாட்டிவிட்டதற்க்குப் பின்னால் இருப்பது சுய சாதி அபிமானத்தைத் தவிர வேறென்ன? இந்த இடத்தில் இயக்குனர் சீமான் திரைப்படத் துறையினுள் நுழைந்த விதத்தையும் நாம் கவனிக்க வேண்டும்.

என் ஞாபகம் சரியாக இருந்தால் சீமான் பாரதிராஜாவின் 'பசும்பொன்' திரைப்படத்ததுக்குக் கதை உரையாடல் எழுதித்தான் திரைப்படத் துறையில் அறிமுகமாகிறார். தமிழ்க் சினிமாவின் மொழியை மாற்றிப் போட்ட வகையிலும் 'கிழக்கே போகும் ரயில்', 'கருத்தம்மா', போன்ற சில படங்களில் சமூகப் பிரச்சனைகளைச் சற்றே ஆழமாகப் பேசியவர் என்ற வகையிலும் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் பாரதிராஜாவின் வகிபாகம் முதன்மையானதாக இருக்கிறது. இதற்கு அப்பால் சுயசாதிப் பெருமிதங்களைப் பேசும் படங்களை எடுத்ததோடு மட்டுமில்லாமல் சாதிச் சங்கத்தின் நிகழ்வுகளிலும் கலந்து கொள்பவர் பாரதிராஜா.சீமான் கதை உரையாடல் எழுதிய பசும்பொன் திரைப்படமும் சுயசாதிப் பெருமைகளைப் பேசிய ஒரு வன்கொடுமைத் திரைப்படம் தான். இத் திரைப்படத்தின் நாயகப் பாத்திரமான துரைராசுத் தேவர் பாத்திரத்தை ஏற்று நடித்தவர் சிவாஜி கணேசன் என்பதும் இங்கே கவனிக்கத் தக்கது. அத் திரைப்படத்தில் தான் "தென்காசிச் சிங்கமே தேவர் அய்யா எங்கள் தேவர் குலத் தங்கமே தேவர் அய்யா" என்ற பாடல் வருகிறது. இந்தப் பாடலை எழுதியவர் வைரமுத்து என்பது கூடுதற் தகவல்.

"நமது மொழி சாதி காப்பாற்றும்" மொழி என்பார் பெரியார். நமது மொழியின் அடுக்குகளில் சாதி நுட்பமாகப் படிந்துள்ளது. சீமானின் தம்பி திரைப்படத்தில் பாத்திரங்கள் பிற பாத்திரங்களைத் திட்டும் போது 'சண்டாளா' எனத் திட்டுகிறார்கள். படம் நெடுகவும் இந்த சண்டாளா எனற சொற்ப் பிரயோகம் வருகிறது. சண்டாளர் என்பது புராணகள், இதிகாசங்கள் தோன்றிய காலங்களில் இருந்தே தலித்துக்களை இழித்துரைப்பதற்காக ஆதிக்கச் சாதியினர் பயன்படுத்தும் சொல். மதுரை மீனாட்சி கோயில் ஆலயப் பிரவேசப் போராட்டம் நடந்த போது அடையாளமாகப் பறையர், பள்ளர், நாடார் சாதிகளிலிருந்து இரண்டிரண்டு பேர்களென ஆறு பேர்கள் ஆலயத்துக்குள் நுழைந்தனர். 'ஆறு சண்டாளர்கள்' என இவர்களைப் பற்றி 'பகிரதி' என்ற பார்ப்பனப் பெண் வசைப்பாடல் இயற்றிய கொடுமையைத் தமிழவேள் 'இம்மானுவேல் தேவேந்திரர் வரலாறு' என்ற நூலில் குறிப்பிடுகிறார். இவற்றுக்கு மேலாக சண்டாளர் என்பது இந்தியாவின் அட்டவணைச் சாதிகளுள் உள்ள ஒரு தீண்டப்படாத சாதியின் பெயர் என்பதும் அறிய வருகிறது. இச் சாதியின் பெயரை வசைச் சொல்லாகச் சீமான் தம்பி திரைப்படத்தில் உபயோகித்திருப்பதை திரைப்படத் தணிக்கைக் குழுவினர் எப்படி அனுமதித்தனர் ? தணிக்கைக் குழு அனுமதித்திருப்பினும் உண்மையும் தென்செய்தியும் சுபவீயும் கோவி.லெனினும் எப்படி இதைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர் ? சீமான் சார்ந்திருக்கும் தமிழ் பாதுகாப்பு இயக்கம் குஷ்புவிடம் இருந்து மட்டும் தான் தமிழைக் காப்பாற்றுமா ? சாதியிடமிருந்து தமிழைக் காப்பாற்றாதா ?

பெரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தத் திரைப்படத்திலும் "கதாநாயகி", கதைக்கு சம்மந்தமில்லாமல் வந்துபோன அறிவுமதி ஆண்டாள் பிரியதர்சினி போலவே அவளும் வந்து போகிறாள். சற்றுக் காலத்துக்கு முன்பு அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவிகள் ஜீன்ஸ், பனியன் போன்ற உடைகளை அணியக் கூடாது என்ற ஒரு கலாச்சார அடிப்படைவாத விதி கொண்டுவரப்பட்டதே, அதை மாணவிகள் கடைப்பிடிக்கிறார்களோ இல்லையோ சீமான் செம்மையாகக் கடைப்பிடிக்கிறார். படம் முழுவதும் கல்லூரி மாணவியான நாயகி சேலையிலேயே வருகிறாள். சீமானைப் போல மாதவனைப் போல அவளால் சே குவேரா படம் பொறித்த பனியன் அணிய முடியாது. விரும்பினால் சே குவேரா படத்தைச் சேலையில் பிரிண்ட் போட்டுக்கொள்ள வேண்டியது தான். புரட்சியாளனைக் காதலிக்கும் குற்றத்துக்காக அவள் புரட்சியாளனிடமிருந்து லூசு, இம்சை, பேய் போன்ற வசைகளைப் பெறுகிறாள். கடைசியில் சீமானின் தம்பி காதலை ஏற்றுக் கொண்டதும் அவனின் கால்களில் விழுகிறாள்.முற்று முழுதாக ஆணாதிக்கச் சிந்தனை வழியிலேயே சீமான் நாயகியின் பாத்திரத்தைக் கட்டமைத்திருக்கிறார். வெட்கத்தை விட்டு ஒன்றைச் சொல்ல வேண்டியிருக்கிறது: கே.பாலச்சந்தர் போன்ற பார்ப்பனப் பிற்போக்குவாதிகள் "அவள் ஒரு தொடர் கதை", "அவர்கள்", "மனதில் உறுதி வேண்டும்", "அச்சமில்லை அச்சமில்லை"," அக்னி சாட்சி",ஆகிய திரைப்படங்களில் அரைகுறையாகவேனும் சித்தரித்துக் காட்டிய பெண் ஆளுமைகளைக் கூட நமது பெரியாரின் பேரர்களாலும் தம்பியின் தம்பிகளாலும் உருவாக்க முடியாமல் உள்ளது.அவர்கள் தமிழ்க் கலாச்சாரம் என்ற பெயரில் காலில் விழும் கலாச்சாரத்துக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள்.

மாவோவின் மேற்க்கோளோடு தொடங்கி சே குவேரா வின் மேற்க்கோளோடு முடியும் இத் திரைப்படம் முழுவதும் சீமானின் தம்பி கிட்டத் தட்ட ஒரு போலிஸ் உளவாளி போலவே இயங்குகிறான். போலிசார் கைதிகளை நீதிமன்றத்துக்கு அழைத்துச் சொல்லும் போது போலிஸ் வாகனத்துக்கு முன்னால் தம்பி பாதுகாப்பு அளித்துச் செல்கிறான். போலிசாரும் தம்பி சண்டித்தனம் செய்யும் போது கடைசிவரைக்கும் கண்டும் காணாமலேயே இருந்துவிடுகிறார்கள். வரலாற்றிலேயே இல்லாத புரட்சியாய் பொலிஸ் அதிகாரி (ராஜ்கபூர்)புரட்சியாளனை இரகசியமாகச் சந்தித்துப் சிலபல அய்டியாக்களும் கொடுக்கிறான். "புரட்சியாளன்" தம்பியும் போலிசும் கை கோர்த்துச் செயற்படுகிறார்கள். இவ்வாறாகப் போலிஸாருடன் கரங்களைக் கோர்ப்பவர்களை சனங்கள் புரட்சியாளன் என்று அழைப்பதில்லை, மாறாகப் "போலிஸ் உளவாளி" என்றுதான் காறியுமிழ்வார்கள். இந்தப் படத்துக்காக வீரப்பன் வேட்டை நிகழ்ந்த பகுதிகளிலும் நக்ஸல்பாரிப் புரட்சியாளர்கள் கொடூரமாகப் போலிசாரால் கொன்றொழிக்கப்பட்ட தருமபுரிக் கிராமங்களிலும் வாழும் இரத்த சாட்சியங்களான மக்கள் சீமானைச் செருப்பாலே அடித்தால் அது புரட்சி!


சமூகத்தின் உண்மையான வன்முறையாளர்கள் சீமான் ஆனந்த விகடன் நேர்காணலில் கோபப்படுவது போல சாலையில் குப்பை எறியும் இளைஞர்களோ சாலை விதியை மீறும் எளிய மனிதர்களோ அல்ல. அல்லது சீமான் தம்பி திரைப்படத்தில் சித்தரிப்பது போன்ற பேருந்தில் உரசியபடியே பயணம் செய்யும் பாலியல் வறுமையில் உழல்பவர்களோ தெருச்சண்டியர்களோ அடியாட்களாக இயங்கும் விளிம்பு நிலை மனிதர்களோ அல்ல. அவர்கள் இந்த நிலப்பிரபுத்துவ முதலாளியக் கேடுகெட்ட சமூக அமைப்பின் விளைவுகள். சமூகத்தின் மிகப் பெரும் வன்முறை நிறுவனங்களாக அரசும் நீதிமன்றமும் காவல்துறையும் இராணுவமும், சிறைச்சாலைகளுமே விளங்குகின்றன.அவையே இந்த சமத்துவமற்ற சமூக ஒழுங்குகளையும் சுரண்டலையும் தாங்கிப் பிடித்து நிற்கின்றன. இவற்றின் வன்முறை குறித்துத் தம்பி திரைப்படம் பேசுவதில்லை. மாறாகத் தம்பி ஒரு இளைஞனுக்கு "நீயும் நானும் அடித்தால் குற்றம் போலிஸ் அடித்தால் சட்டம்" எனவே நீ படித்து போலிஸ்காரனாகு! கலக்டராகு! சமூகத்தைத் திருத்து" என்கிறான்.
'தாகம்' பெப்ரவரி 2006 இதழில் சீமான் தனக்குள் இலட்சியங்களை விதைத்தவர்களான மாவோவும் லெனினும் சே குவேராவும் தம்பி திரைப்படம் முழுவதும் விரவியிருப்பதாகக் கூறுகிறார். மாவோவும் லெனினும் அரசு இயந்திரத்தை நொறுக்குவது குறித்தும் அரசின் காவல் நாய்களான அதிகாரிகளையும் ஆயுதப்படையினரையும் செயலிழக்கச் செய்வது குறித்தும்தான் பேசுவார்கள். அவர்கள் புரட்சியாளர்களாக மாறச் சொன்னார்களே ஒழிய பொலிஸ்காரர்களாக மாறச் சொல்லவில்லை. " நீதி என்பது அரசின் வன்முறை- வன்முறை என்பது மக்களின் நீதி" என்பதே சர்வதேசிய அனார்கிஸ்டுகளிள் முதல் முழக்கமாய்த் திகழ்கிறது. அரசுக் கட்டுமானம், நீதியின் வன்முறை, வெகுசனங்களின் கலகம் போன்ற நுண் அரசியற் சிந்தனைகள் சே குவேராவின் பனியனைப் போட்டுக்கொண்டு கோடம்பாக்கத்துத் தெருக்களில் சுற்றித் திரிவதாலோ அல்லது பிரபாகரனின் படத்தைச் சட்டைப்பையில் வைத்துக்கொண்டு அலைவதினாலோ சித்தித்துவிடப் போவதில்லை.இயக்குனர் சீமான் குத்துமதிப்பாய் மார்க்ஸிஸம் மாவோயிஸம் என அரைகுறையாய்ப் அனர்த்துவதை நிறுத்திக்கொண்டு, குறைந்தபட்சம் அவர் அவரின் இன்னொரு தோழரான தியாகு எழுதிய 'மார்க்சியம் ஆனா ஆவன்னா' என்ற நூலையாவது படிக்க வேண்டும். 'சொல்வது தெளிந்து சொல்லவேண்டும்.'


லெனினையும் பெரியாரையும் பாரதிதாசனையும் புகைப்படங்களாகத் தமிழ்த் திரையில் முதலில் காட்டியவர் சீமான் என்ற சிந்தனையாளன் தான் என்று சிறுபிள்ளைத்தனமாக சுப.வீரபாண்டியன் மகிழ்ந்து போவதில் எந்த அர்த்தமும் இல்லை. எம்.ஜி.ஆர் கூடத்தான் உலகம் சுற்றும் வாலிபனில் லெனின் சிலையை காண்பிக்கிறார்.பாரதிதாசனைப் பற்றியும் பெரியாரைப் பற்றியும் புத்தரைப் பற்றியும் அண்ணாவைப் பற்றியும் திரைப்படங்களில் எம்.ஜி.ஆர் பேசாததையா சீமான் பேசிவிட்டார் ? எம்.ஜி.ஆர் இயக்கி நடித்த நாடோடி மன்னன் திரைப்படத்தில் நாடோடி ஆட்சியில் அமர்ந்தவுடன் கொண்டு வரும் சட்டத் திருத்தங்களில் அரைவாசி கார்ல் மார்க்சும் ஏங்கெல்சும் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்டவை என்பார்கள். வணிக இலக்குகளுடன் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்குள் இவ்வகையான போலிப் புரட்சிகரப் படிமங்களும் உணர்ச்சி முழக்கங்களும் எழுப்பப்படுவதற்க்கான நோக்கம் வியாபாரக் காரணங்களைத் தவிர வேறில்லை.
தம்பி திரைப்படத்தைப் போலவே 1981 ல் போலிப் புரட்சிகர முழுக்கங்களுடன் ஏ.வி.எம் தயாரிப்பில் 'சிவப்பு மல்லி' என்றொரு திரைப்படம் விஐய்காந்த்,சந்திரசேகர் நடிப்பில் வெளிவந்தது. அத் திரைப்படத்தின் போலி முழக்கங்களுக்குப் பின்னால் இருந்த வணிக உத்திகளை அறந்தை நாராயணன் 'தமிழ் சினிமாவின் கதை' என்ற நூலில் விமர்சிக்கிறார். இந்த விமர்சனம் 'நாடோடி மன்னனுக்கும்' பொருந்தும், 'உலகம் சுற்றும் வாலிபனுக்கும்' பொருந்தும், 'அன்பே சிவத்துக்கும்' பொருந்தும், நம் சீமானின் தம்பிக்கும் பொருந்தும். கீழே வருவது அறந்தை நாரயணின் 'சிவப்பு மல்லி' குறித்த விமர்சனம்:

1980 ல் ஏ.வி.எம் கூட்டத்திலிருந்து மெய்யப்பச் செட்டியாரின் மைந்தர்கள் 'முரட்டுக்காளை' என்றொரு பிரமாண்டமான பொழுதுபோக்குப் படத்தை வெளியிட்டனர். அது நடந்து கொணடிருந்த போது ஆந்திராவில் ஒரு தெலுங்குப் படம் வசூலை அள்ளிக் குவித்துக் கொண்டிருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேச்சு அடிபட்டது. அந்தப் படம் 'எர்ரமல்லி'. ஆந்திர மாநிலக் கம்யுனிஸ்டுகள் உருவாக்கிய படம். சகோதரர்கள் அந்தப் படத்தைப் பார்த்தனர் சிக்கனமான செலவில் தயாரிக்கக் கூடிய 'ப்ருவ்ட் சப்ஐக்ட்' என்பதை உணர்ந்தனர். தேசமெங்கும் முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடியால் அமைதியின்மையும் வாழ்க்கை நெருக்கடியும்... அதனை எதிர்த்து விவசாயிகள் தொழிலாளிகள் இளைஞர்கள் மாணவர்கள் மத்தியதர வர்க்கத்தினர் அனைவரும் போராடிக் கொண்டிருக்கும் புறச் சூழ்நிலை. இதன் எதிரொலியாக அமிதாப்பச்சன் நடிக்கும் இந்தி மசாலாப் படங்களிலும் -ஏன் ரஜினிகாந்த் நடித்த தமிழ் 'காளி' படத்தி லும் - போராட்டக்கார இளைஞன் கம்யுனிஸ்டாகவும் கையில் செங்கொடி பிடிப்பவனாகவும் படங்களில் வரத் தொடங்கியிருந்தான். எர்ரமல்லி ப்ரூவ்ட் சப்ஜெக்டை ஏ.வி.எம் சகோதரர்கள் வாங்கினர். தமிழுக்கு தகுந்த மாதிரி திரைக்கதை எழுத வைத்து 'சிவப்பு மல்லி' என்ற படத்தை 1981 ல் வெளியிட்டனர். தமிழ்ப் படத்துக்கு வசனம் எழுதி இயக்கியவர் இராம.நாராயணன் . நிலப்பிரபுத்துவத்தையும் முதாலாளித்துவத்தையும் எதிர்த்து எழுந்த இரு கோபம் கொணட இளைஞர்களின் கதை. கடிகாரத்தைப் பின்னுக்குத் தள்ளிச் சுரண்டும் முதலாளி அவனுக்கு நல்லவளான ஒரு மனைவி கோமாளிகளான மூன்றுநிலப்பிரபுகள். நிலப்பிரபுவுக்கு ஒரு மகள்.... என்று தமிழில் (மாற்றப்பட்ட) திரைக்கதை. வண்ணத்தில் நூற்றுக்கணக்கான கம்யுனிஸ்ட் கட்சிக் கொடிகள், ஊர்வலத்தில் லெனின் படம் கூடவே பெரியார், அண்ணாத்துரை படங்கள். கம்யுனிஸ்ட் கட்சிக் கொடிகளையும், சில வசனங்களையும் நீக்கி விட்டால் 'சிவப்பு மல்லி' - ஒரு எம்.ஜி.ஆர் பாணிப்படம்; அபாரமான வசூல். (தமிழ் சினிமாவின் கதை பக்:714)

தம்பி திரைப்படத்திலும் இரு மேற்கோள்களையும் ஒரு வசனத்தையும் நீக்கி விட்டால் சீமானின் தம்பி அசலான விஜயக்காந் பாணிப்படம். இராம.நாராயணனுக்கு 'முரட்டுக்காளையை' தயாரித்த ஏ.வி.எம் நிறுவனமென்றால் சீமானுக்கு 'ஜீன்ஸ்' படத்தைத் தயாரித்த முரளி மனோகர். ஏ.வி.எம்மும் இராம.நாராயணனும் சேர்ந்து தமிழ்த் தொழிலாளர்கள் விவசாயிகள் மாணவர்கள் தலையில் மிளகாய் அரைத்தார்கள் என்றால்; முரளி மனோகரும் சீமானும் தமிழகத் தமிழர்களுடன் சேர்த்து ஈழத் தமிழர்களின் தலையிலும் மிளகாய் அரைக்கிறார்கள்....


இன்று புலம் பெயர்ந்த தேசங்களில் ஏறக்குறைய பத்து இலட்சம் ஈழத்தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்களே தமிழ்த் திரைப்படங்களின் வருவாயில் கணிசமான பகுதியைத் தீர்மானிப்பவர்களாக விளங்குகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஈழத்தமிழர்களின் சினிமாக் கிறுக்கு மற்ற எந்த தேசிய இனத்தவர்களின் சினிமாக் கிறுக்கை விடவும் சற்றும் குறைந்ததல்ல. 'காதலுக்கு மரியாதை' 'ஆட்டோ கிராப்' போன்ற கிறுக்குத்தனமான திரைப்படங்களை புகலிடங்களில் பெரும் வெற்றியோடு ஓட வைத்தவர்கள் இவர்கள். பாரிஸ் நகரத்தில் இதுவரை திரையிடப்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் அதிக காட்சிகள் ஓடிய திரைப்படம் 'கப்டன் பிரபாகரன்'. அந்தப் பெயருக்காகவே அத் திரைப்படம் ஓட்டமாக ஓடியது. இதே வணிக உத்தியோடு இப்போது சீமானின் தம்பி திரைப்படமும் புகலிட தேசங்களில் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியது.

தமிழீழ விடுதலைப் போராளிகளின் தலைமைகள் மீதும் அவர்களின் குறுந் தேசியவாதப் பண்புகளின் மீதும் நமக்கு ஆயிரம் விமர்சனங்கள் இருக்கின்றன என்பதற்காகச் சிங்களப் பேரினவாத அரசுகளின் இன அழிப்புக் கொடுமைகளையும் ஈழப் போராட்டத்தின் தோற்றுவாய்க்கான நியாயமான காரணிகளையும் போராட்டத்தில் ஏராளமான மக்களும் அடிமட்டப் போராளிகளும் செய்த வீரஞ் செறிந்த தியாகங்களையும் நாம் மறந்து விடப் போவதில்லை. ஈழப் போராட்டத்துக்கு தமிழகத் தோழர்கள் செய்த பங்களிப்புகளும் அளப்பெரியன. அத் தோழர்கள் ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்காக தீயில் எரிந்தார்கள். மாணவர்களும் இளைஞர்களுமாகத் திரண்டு ஈழ அகதிகளுக்குப் பெரும் உதவிகளைச் செய்தார்கள். பல தோழர்கள் ஈழப் போராட்டத்தின் நியாயங்களைப் பரப்புரை செய்வதையே தமது வாழ்நாள்ப் பணியாகக் கொண்டார்கள். பயிற்சி முகாம்களில் ஆயுதப் பயிற்சி பெற்று ஈழத்தில் களப் போராளிகளாகவும் சில தமிழகத் தோழர்கள் இறங்கியிருக்கிறார்கள். ஈழப் போராட்டத்துக்கு பல்வேறு வழிகளில் உதவிகளைப் புரிந்ததால் எண்ணுகணக்கற்ற தோழர்கள் சிறைக் கொட்டடிகளில் ஆண்டு கணக்காக அடைக்கப்பட்டார்கள். வாக்கு, மனம், காயம் எனச் சகலத்தையும் தமிழ்ப் போராட்டத்துக்கு ஒப்படைத்த சில தோழர்கள் சகோதரப் படுகொலைகளைத் தொடர்ந்து விரக்தியடைந்து தோழர் பாவரசுவைப் போல மனநோயாளிகளாக மாறிக் காணாமலேயே போய்விட்டார்கள். ஆக இவை எல்லாம் சேர்ந்தது தான் ஈழப்போராட்டத்தின் வரலாறு.
இன்று ஈழ விடுதலைப் போரட்டம் குறுந் தேசிய வெறியாலும் கலாச்சார அடிப்படைவாதத்தாலும் ஏகாதிபத்திய அடிபணிவாலும் பாஸிஸத்தாலும் திசை தவறிப் போயிருக்கலாம் . ஆனால் ஈழப் போராட்டத்தின் தோற்றுவாய்க் காரணங்களாய் அமைந்த இன ஒடுக்குமுறைக் காரணிகள் அப்படியே தான் இருக்கின்றன. அரசியல், இராணுவ முட்டுச் சந்துகளில் அகப்பட்டிருக்கும் ஈ ழவிடுதலைப் போராட்டத்தைச் சனநாயகப் படுத்துவதும் பாஸிஸத்தைத் தோற்கடிப்பதுவுமே ஈழப் போராட்டத்தை அடுத்த படியை நோக்கி நகர்த்தும் வழியாக இருக்கும். இத்திசை நோக்கி நகர்வதே சமூகப் போராளிகளின் அக்கறையாக இருக்கும். ஆனால் தமிழீழ விடுதலையின் ஆதரவாளராகச் சொல்லப்படும் திரைப்பட வியாபாரி சீமானுக்கு இவையெல்லாம் ஒரு பொருட்டேயில்லை. அவர் பிரபாகரன் எனற தனிமனிதனையே ஈழப்போராட்டமாக உருவகித்து பத்திரிகைகளிலும் வானொலிகளிலும் பேட்டிகளை வழங்கிக் கொண்டிருக்கிறார். புறநானூற்றின் நிகழ்காலம பிரபாகரன் என்று அவர் தனிமனிதத் துதியைப் பாடிக் கொண்டிருக்கிறார். விடுதலைப் புலிகள் ஆதரவு, தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம், பெரியார், அம்பேத்கர் என்று சொற்க் குவியல்களை உதிர்ப்பதின் மூலம் அவர் ஊடகங்களில் - குறிப்பாகப் புலம்பெயர் ஊடகங்களில் - தன்னை எப்போதும் தக்க வைத்துக் கொள்கிறார். இதனூடாக அவர் தனது வணிக வலையைக் கவனமாகப் பின்னுகிறார்.

சீமானின் வணிகப் புத்தி மிகவும் வெளிப்படையானது. தம்பி திரைப்படத்தில் நடிப்பதற்கு மாதவனைத் தவிர எந்த நடிகர்களும் தயாராக இருக்கவில்லை என்று அவர் வியாபார மதிப்புள்ள உச்ச நட்சத்திரங்களைக் குறித்துப் புலம்புகிறார். 'பாதை தெரியுது பார்' இயக்குனர் நிமாய்கோசும் 'ஏழாவது மனிதன்' இயக்குனர் ஹரிகரனும் 'கண் சிவந்தால் மண் சிவக்கும்' இயக்குனர் சிறீதர் ராஜனும் உச்ச நட்சத்திரங்களின் தேதிகளுக்காகச் சீமானைப் போல புலம்பவில்லை. அவர்கள் புது முகங்களையும் வணிக மதிப்பற்ற நடிகர்களையும் வைத்தே காலத்தால் அழியாத திரைப்படங்களை உருவாக்கிக் காட்டினார்கள். ஆனால் சீமானோ சே குவேரா பனியனை அணிந்து நடிக்க மாதவனைத் தவிர எந்தத் தமிழ் நடிகனுக்கும் துணிவில்லை எனறு பழித்துப் பேசிய அதே நாவால்தான் தனது அடுத்த படத்தில் விஜய் அல்லது விக்ரம் நடித்தால் சிறப்பாக இருக்கும் என ஆனந்த விகடன் ஊடாக உச்ச நட்சத்திரங்களிடம் மனுக் கொடுக்கிறார்.

அம்ஸ்ரர்டாமில் கஞ்சா விற்கும் கோப்பிக் கடைகளின் முகப்பில் பொப் மார்லியின் உருவத்தை வணிக இலச்சினையாகப் பொறித்திருப்பார்கள். ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் பனியன்களில் சே குவேராவின் உருவத்தை அச்சிட்டுச் சந்தைப்படுத்துவார்கள். அதே போல் இயக்குனர்

சீமானுக்குத் தனது திரைப்படத்தைச் சந்தைப்படுத்த பிரபாகரன் ஒரு வியாபார இலச்சினை.

ஈழப் பிரச்சினை அவருக்கு ஒரு 'ப்ரூவ்ட் சப்ஜெக்ட்'.
இலங்கையில் நடைபெறும் யுத்தத்தால் ஆதாயம் அடைபவர்கள் பலர். ஆயுத வியாபாரிகள், அரசுத் தலைவர்கள், இராணுவ அதிகாரிகள் ஒரு புறம் யுத்தத்தின் பெயரால் நிதியைச் சுருட்டிக் கொண்டிருக்கிறார்கள். மறுபுறத்தில் தமிழ்த் தேசியத்தை முழக்கமிடும் பத்திரிகைகள், பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், அறிவு ஜீவிகள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் திட்டமிடலாளர்கள், தமிழ்த் தேசியத்தின் வெளிநாட்டு முகவர்கள், கோயில் முதலாளிகள் போன்றவர்களும் ஈழப் போரட்டத்தின் பெயரால் பெரும் பொருளியல் ஆதாயங்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இப்போது இயக்குனர் சீமானும் தன் பங்குக்கு வாய் நனைக்க வந்துள்ளார். ஆற்றிலே போற வெள்ளம் அண்ணே குடி!தம்பி குடி!!

ஷோபாசக்தி
25.03.2006

10 comments:

Boston Bala said...

படத்தைப் பார்த்தவுடன் 'இதற்கும் வேறு தமிழ்ப்படங்களுக்கும் என்ன வித்தியாசம்?' என்று பட்டது. விரிவான அலசல்

ஜெ. ராம்கி said...

Excellent write up.

வரவனையான் said...

நல்ல கட்டுரை ஷோப சக்தி, சில விடயங்களில் உடன்பாடில்லை என்றாலும் மிக நல்ல பதிவு. "பாஞ்சாலஞ்குறிச்சி' படம் குறித்தும் பேசியிருக்கலாம்.

-/பெயரிலி. said...

நல்ல அலசல்.
வலைப்பதிவுக்கு வந்திருப்பது அதைவிட நல்லது.

கொழுவி said...

தங்கர் பச்சான் கூப்பிட்டாரே என்பதற்காக நெடுமாறன் "சொல்ல மறந்த கதை"யில் ஒரு திருமணக்காட்சியில் வந்து சிரித்துவிட்டு வந்தாமாதிரி, தம்பியில் அறிவுமதி மேடையி "போஸ்' கொடுத்துவிட்டு வந்தமாதிரி, சுபவீயோ, உண்மையோ, தென்செய்தியோ இவர்கள் என்ன படமெடுத்துக் கிழித்தாலும் புகழ்ந்து பாடவேண்டிய நிலைக்குள்தான் இருக்கிறார்கள்.
தங்கர் பச்சானுக்கோ சீமானுக்கோ, படமோடுவதைத் தாண்டியும் ஈழத்தவரிடமிருந்து நல்ல ஆதாயங்கள் இருக்கின்றன.
தம்பி வெளிவரமுன்பு சீமான் ஈழத்தவர்க்குக் கொடுத்த செவ்வியில் சொல்கிறார்,
"கோழை தான் ஆயுதம் தூக்குவான்"

ஈழநாதன்(Eelanathan) said...

நண்பர் ஷோபாசக்திக்கு உங்களின் தொகுப்பாகிய இருள்வெளி,சனதரும போதினி இரண்டைப் பற்றியும் எக்ஸில் பற்றியும் உங்களுடன் சில விடயங்கள் பேசவேண்டும் எனக்கு மின்னஞ்சலிட முடியுமா?
eelanathan@yahoo.com

Anonymous said...

மதிப்புக்குரிய ஷோபா சக்தி!
நுட்பமான; நுணுக்கமான; ஆழமான ஓர் அலசலாய்வு!!!!!;இது வெகுஜனப் பத்திரிகைகளில் வரவேண்டியது. இது ஆனந்த விகடனில் அடுத்த வாரம் , சீமானின் நேர்காணலின் பின் வந்திருந்தால்; பொருத்தமாகவிருக்கும்.தென்னிந்திய திரைத்துறை ;ஈழப்பிரச்சனையை தங்கள் கல்லாப்பெட்டி நிரப்பல் தந்திரமாக, ஏனைய பல தொழிற்றுறையினர் போல் ஆக்கி வெகுநாளாகிவிட்டது.இதை பல ஈழத்தவர் புரியவில்லை.
தொடரவும்
யோகன்
பாரிஸ்

மிதக்கும்வெளி said...

ப்ரியத்துக்குரியஷோபா!
நானும் தம்பி படம் பார்க்க வேண்டிய துர்ப்பாக்கியநிலைக்கு ஆளானேன்.போப் புரட்சிக்காரன் ஆகமுடியாதபோது போலிஸ் இன்பார்மர் எப்படி புரட்சிக்காரன் ஆகமுடியும் என்று தெரியவில்லை.அதிலும் மாதவன் செய்யும் அங்கசேஷ்டைகள் பயங்கர காமெடி.

மிதக்கும்வெளி said...

ப்ரியத்துக்குரியஷோபா!
நானும் தம்பி படம் பார்க்க வேண்டிய துர்ப்பாக்கியநிலைக்கு ஆளானேன்.போப் புரட்சிக்காரன் ஆகமுடியாதபோது போலிஸ் இன்பார்மர் எப்படி புரட்சிக்காரன் ஆகமுடியும் என்று தெரியவில்லை.அதிலும் மாதவன் செய்யும் அங்கசேஷ்டைகள் பயங்கர காமெடி.

மிதக்கும்வெளி said...

ப்ரியத்துக்குரியஷோபா!
நானும் தம்பி படம் பார்க்க வேண்டிய துர்ப்பாக்கியநிலைக்கு ஆளானேன்.போப் புரட்சிக்காரன் ஆகமுடியாதபோது போலிஸ் இன்பார்மர் எப்படி புரட்சிக்காரன் ஆகமுடியும் என்று தெரியவில்லை.அதிலும் மாதவன் செய்யும் அங்கசேஷ்டைகள் பயங்கர காமெடி.