Wednesday, May 31, 2006

தேனீத் தோழர்களுக்கு - ஷோபாசக்தி

தேனீ இணையத்தளத்தில் எனக்கு மடல் எழுதிய தோழர் மரியசீலனுக்கும் மற்றும் 'தேனீ"த் தோழர்களுக்கும்... வணக்கங்கள்!

னது "அல்லைப்பிட்டியின் கதை" கட்டுரைக்கு எதிர்வினையாகவே மரியசீலனின் மடல் எழுதப்பட்டிந்தது. அவர் அம்மடலை சத்தியக்கடதாசி வலைப்பதிவில் பின்னூட்டமாகவும் போட்டிருந்தார். அல்லைப்பிட்டியின் கதையில் நான் குறிப்பிட்டிருந்த பிரதான புள்ளிகளைக் கீழே சுருக்கமாகத் தொகுத்துக்கொள்ளலாம்:

*1990 அல்லைப்பிட்டிப் படுகொலைகளை இராணுவத்தினருடன் EPDP- PLOTE உறுப்பினர்களும் சேர்ந்தே செய்திருந்தார்கள்.

*2006 மே அல்லைப்பிட்டிப் படுகொலைகளை கடற்படையினருடன் EPDPயினரும் சேர்ந்தே செய்ததாக சர்வதேச மன்னிப்புச் சபை கூறுகிறது. அல்லைப்பிட்டிப் பொதுமக்களும் இதை உறுதிப்படுத்துகிறார்கள்.

* மேற்கு நாடுகள் தமது சொந்த ஏகாதிபத்திய நலன்ளைக் கருதியே ஒரு நாட்டின் மேல், ஒரு இயக்கத்தின் மேல் தடைவிதிக்கிறார்கள் அல்லது ஆதரிக்கிறார்கள்.

*விடுதலைப் புலிகளை விடச் சிறிலங்கா அரசு இயந்திரம் பன்மடங்கு பயங்கரமானது.

*புலிகள் மக்கள் திரளைப் புரட்சிகர அரசியல் வழிகளில் நெறிப்படுத்தாமல் வலதுசாரிக் குறுந்தேசியவாத வேலைத்திட்டத்தையே தமது அரசியலாகக்கொண்டிருந்தார்கள். தேனீ இணையத்தளக் கட்டுரைகளும் TBC வானொலியின் அரசியல் ஆய்வாளர்களும் கூறுவது போலப் புலிகளின் தார்மீக வீழ்ச்சி புலிகளின் தனிமனிதப் பலவீனங்களிலிருந்து தொடங்கவில்லை. மாறாகப் புலிகளின் பிற்போக்குவாத வேலைத்திட்டத்திலிருந்தே நேரிடுகிறது.

*TBC அரசியல் ஆய்வாளர்களும் - குறிப்பாக ஜெயதேவன், விவேகானந்தன்- ஏகாதிபத்திய ஆதரவுகொண்ட, முதலாளிய சனநாயகத்தில் நம்பிக்கைகொண்ட பிற்போக்காளர்களே.

* ஒடுக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்கள் அரசு, புலிகள், ஜெயதேவன் போன்ற பிற்போக்கு ஏகாதிபத்திய அடிபணிவுச் சக்திகளை முற்றாக நிராகரித்துவிட்டுத் தமது அரசியல் நலன்களையும் அரசியற் போராட்டங்ளையும் தமது சொந்தக் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்தப் புள்ளிகளில் ஒரு புள்ளியையாவது நிராகரித்தோ, எதிர்த்தோ ஒரு வரியைத் தன்னும் மரியசீலன் தனது கட்டுரையில் எழுதினாரில்லை. அவர் என் கட்டுரையைப் பற்றிப் பேசவேயில்லை. என்னைக் கலாய்ப்பதற்கும் எனக்குப் புலி முத்திரை குத்தவும் எனது கடந்த பத்தாண்டு காலத் தொடர்சியான எழுத்துக்களிலிருந்து ஒரு சொல்லைத்தன்னும் மரியசீலனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதைச் செய்வதற்காக அவர் இருபதாண்டுகளுக்கு முந்திய எனது புலிகள் இயக்க காலத்தைத் தேடிச் சென்றிருக்கிறார்.


நான் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த செய்தி ஒன்றும் இரகசியமானது அல்ல. இதை நானே பல பத்திரிகை நேர்காணல்களிலும் கூட்டங்களிலும் சொல்லியிருக்கிறேன். நான் அமைப்பில் சேர்ந்த காலம், வெளியே வந்த காலம், இலங்கையை விட்டு வெளியேறிய காலம் எல்லாவற்றையும் நான் பகிரங்கமாகச் சொல்லியிருக்கிறேன். நான் மாத்யமம் இதழுக்கு வழங்கிய நேர்காணலைத் தோழர்கள் சத்தியக் கடதாசி வலைப்பதிவிலேயே பார்வையிடலாம். நான் 1986 நடுப்பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியே வந்தேன்.1988 யூன் மாதம் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறிக் கொழும்புக்குப் போனேன். அதற்குப் பின் சில மாதங்கள் கொழும்பு வாழ்வும் 'மார' சிறைவாழ்வும்.(இதை நான் ஆனந்தவிகடன் -26.01.2003 -நேர்காணலிலேயே தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன்.) சிறையிலிருந்து வெளியே வந்த இரண்டு கிழமைகளிலேயே இலங்கையை விட்டு வெளியேறிவிட்டேன்.

மரியசீலன் "அம்பலப்படுத்துவது" போல 1990 ஒக்ரோபர் மாதம் புலிகளால் முசுலீம் மக்கள் துரத்தப்பட்டபோது இரு முசுலீம் குடும்பங்களை 'ஊத்தை' ஞானம் துப்பாக்கியால் மிரட்ட நான் கால்களால் உதைத்தபோதும், பின் நானும் ஞானமும் பாடசாலையை உடைத்தபோதும் நான் தாய்லாந்தில் UNHCR பராமரிப்பில் அகதியாக வாழ்ந்துகொண்டிருந்தேன். நானாவது பரவாயில்லை... 'ஊத்தை' ஞானம் இறந்து அப்போது நான்கு வருடங்களாகியிருந்தன.

மரியசீலன் சொல்வது போல தோழர் ஞானம், 'ஊத்தை' ஞானம் என்ற அடைமொழியோடு அறியப்பட்டவரல்ல. அவர் 'அம்மான்' அல்லது 'கொன்னை ஞானம்' என்றே அறியப்பட்டார். என் இயக்க வாழ்வின் கடைசி வருடத்தில் நான் அவரின் அணியிலேயே இருந்தேன். ஞானத்தின் இயற் பெயர் காண்டீபன். அவர் 1986 நடுப்பகுதியில் இறந்துபோனார். ஞானம் எப்படி இறந்து போனார்? என்று நான் சொன்னால் தேனீத் தோழர்கள் நம்புவார்களோ தெரியாது. ஆனால் ஞானம் எப்படி இறந்து போனார் என்று 'முறிந்த பனை' சொன்னால் நம்புவார்கள் தானே? கீழே வருவது 'முறிந்த பனை'ப் புத்தகத்திலிருந்து ஒரு பந்தி:

"1986 மே நிகழ்வுகளின் பின் மூத்த உறுப்பினர்கள் பலர் இயக்கத்தை விட்டு விலகினர்.(இங்கே மே நிகழ்வுகள் என்று TELOஅழித்தொழிப்பையும் அனுராதபுரப் படுகொலைகளையுமே முறிந்த பனை குறிப்பிடுகிறது.பக்:89)தீவுப்பகுதிக்கு பொறுப்பாயிருந்த காண்டீபனும் அவர்களுள் ஒருவர். இயக்கத்தை விட்டு விலகிய பின்னர் அவர் தனது பழைய இயக்க உறுப்பினர்களை சந்திக்க விரும்பாது அரியாலையிற் தமது வீட்டில் எதிலும் ஈடுபடாது இருந்தார். விடுதலைப் புலிகள் அவரைத் தமது இயக்கத்தில் மீண்டும் சேர இசையவைப்பதற்காக அவருடன் பேச விரும்பினர். காண்டீபன் ஆற்றல் மிக்க இராணுவ வீரன். கடற்கண்ணி வெடிகளைப் பயன்படுத்துவதில் முன்னோடியாக விளங்கினார். அநேக மூத்த உறுப்பினர்கள் இயக்கத்தை விட்டு விலகியதாற் கீழ்மட்ட உறுப்பினர்கள் மனந்தளர்ந்திருந்ததாகக் கூறப்பட்டது. பலாத்காரமாகக் கூட்டத்துக்கு அழைத்துச் செல்வதற்காக காண்டீபன் இருதடவை சுற்றிவளைக்கப்பட்டார். ஆனாற் காண்டீபன் வீட்டுக்குள் ஓடிச்சென்று சயனைட்டை விழுங்கிவிட்டார். விடுதலைப் புலிகள் இயக்கம் அவரது மரணத்தை உறுதிப்படுத்துவதைத் தாமதப்படுத்தியதுடன் அதிகாலையிலேயே அவரது இறுதிச் சடங்குகளைச் செய்யுமாறு அவரது குடும்பத்தை நிர்ப்பந்தித்தது." (பக்கம் 103)

மரியசீலனின் கட்டுரையிலுள்ள இந்தத் தகவற் திரிப்புக்களை நான் இங்கே நிறுவுவதன் நோக்கம் நான் இரத்தக்கறை படியாதவன் என்றோ உத்தமசீலன் என்றோ நிறுவுவதற்காக அல்ல. நான் இயக்கத்திலிருந்து வெளியே வந்த 1986 நடுப்பகுதி வரை நான் நேரடியாகச் சம்மந்தப்பட்டேனோ இல்லையோ இயக்கம் செய்த அனைத்து மக்கள் விரோத நடவடிக்கைகளிலும் எனக்கும் தார்மீகப் பொறுப்பிருக்கிறது. அந்த இரத்தப்பழி என்னையும் சூழ்ந்திருக்கிறது. இதை நான் ஒருபோதும் மறுக்கப் போவதில்லை. இவ்வாறாக இறந்த காலங்களை அகழ்ந்தெடுத்தால் ஆயுதந் தாங்கிய எந்த இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் தான் இத்தகைய தார்மீகப் பொறுப்புகளிலிருந்து தப்பிக்க முடியும்? உங்களில் எவனொருவன் தவறிழைக்காதவனோ அவன் முதற் கல்லை எறியட்டும் என்பது விவிலியத்தின் புகழ்பெற்ற வாசகம்.

மரியசீலன் ஒட்டி நின்று என் நிகழ்காலத்தின் மீது கல்லெறிகிறார். என் முகத்தின் மீது புலிஉளவாளி, நயவஞ்சகன் எனச் சொற்களை உமிழ்ந்து செல்கிறார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்களை அவர் தருவதில்லை. "கேள்விப்பட்டேன்," "சொல்கிறார்கள்", "அறிகிறார்கள்" என்று பொத்தாம் பொதுவாக எழுதிச் செல்வது கருத்தியல் அறமாகாது.

அவர், நானும் கி.பி.அரவிந்தனுமாகச் சேர்ந்து இலக்கியச்சந்திப்பை அழிக்க முயன்றோம் என்கிறார். இதுவொரு படு மொக்குத்தனமான குற்றச்சாட்டு. எனக்கும் கி.பி.அரவிந்தனுக்கும் எதுவித தொடர்புகளும் இன்றுவரை கிடையாது. விதிவிலக்காக மூன்று வருடங்களுக்கு முன்பாக முதலும் கடைசியுமாக கி.பி.அரவிந்தன் என்னைத் தொலைபேசியில் அழைத்திருந்தார். அவர் தொகுத்துக் கொண்டிருந்த 'பாரிஸ் கதைகள்' சிறுகதைத் தொகுப்பிற்கு என்னுடைய சிறுகதையொன்று வேண்டுமெனக் கேட்டார். கி. பி.அரவிந்தனின் அரசியற் கருத்துநிலையோடு எனக்கு உடன்பாடு இல்லாததால் நான் கொடுக்க மறுத்துவிட்டேன். இலக்கியச்சந்திப்பின் பெருந் தூண்களாயிருந்த மறைந்த தோழர்கள் கலைச்செல்வனும் சி.புஸ்பராஜாவும் கூடத் தமது சிறுகதைகளை அத் தொகுப்பிற்கு கொடுத்திருந்தனர். பரிஸ் சிறுகதை எழுத்தாளர்களில் நான் மட்டும் தான் அத்தொகுப்பில் எழுதியிருக்கவில்லை. எந்த ஆதாரங்களின் அடிப்படையில் மரியசீலன் கி.பி.அரவிந்தனுக்கும் எனக்கும் முடிச்சுப் போடுகிறார்? பின், மரியசீலனின் ஆதாரங்களில்லாத அவதூறுக் கட்டுரையில் எந்த நியாயத்தைக்கண்டு அதை வெளியிட்டீர்கள்? என்றுதான் தேனீத் தோழர்களைக் கேட்கிறேன்.

மரியசீலன் என்றொருவரை நான் அறியேன். இது அவருடைய புனைபெயராகக் கூட இருக்கலாம். அதிலொன்றும் தவறில்லை. ஷோபாசக்தி கூடப் புனைபெயர் தானே!ஆனால் மரியசீலன் தனது கட்டுரை நெடுகவும் 'உங்களை நான் அறிவேன்', 'இப்போது நான் யாரென உங்களுக்குத் தெரிந்திருக்கும்' என மொழி விளையாட்டு விளையாடுகிறார். பிரதியை வாசகர்கள் நம்பச் செய்வதற்காகக் கையாளப்படும் எளிய கதை உத்திகளில் இந்த விளையாட்டு உத்தியும் ஒன்று. இந்த Fiction உத்திகளெல்லாம் நம்மிடம் செல்லுபடியாகாது தோழரே!

நான் அல்லைப்பிட்டியைச் சேர்நதவன் என்பதையோ ஞானம் தீவுப்பகுதிப் பகுதிப் பொறுப்பாளர் என்பதையோ கண்டுபிடிக்கப் பெரிய அறிவு தேவையில்லை. மற்றப்படிக்கு மரியசீலன், எனது கட்டுரையிலிருந்தே வயல்வெளி முசுலீம் குடும்பங்கள், தலித் பாடசாலை, மணற்திட்டிகள் என்று தகவல்களைப் பொறுக்கிக்கொண்டு அவற்றை வைத்தே தனது பிரதியை நம்பகமானதாகக் கட்டமைக்கத் தலையாலே தண்ணி குடித்திருக்கிறார். மரியசீலன் ஞானத்துக்கு வழங்கியிருக்கும் 'ஊத்தை' என்ற அடைமொழி எனது கொரில்லா நாவலில் இயக்கப் பொறுப்பாளராக வரும் ஊத்தை சாந்த என்ற பாத்திரத்தின் பெயரிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கிணற்றுக்குள் நாய்களை வெட்டும் 'சீன்' திருமாவளவன் எழுதிச் சரிநிகரில் வெளியான 'கல்வெட்டு' எனும் சிறுகதையிலிருந்து அப்படியே மரியசீலனால் உருவப்பட்டிருக்கிறது.

நான் 'அல்லைப்பிட்டியின் கதை' கட்டுரையில் தேனீ -TBC-ஜெயதேவன் குறித்து வைத்த விமர்சனங்களே தேனீத் தோழர்களையும் மரியசீலனையும் நிதானமிழக்கச் செய்து என் மீதான அவதூறுகளிலும், அரசியற் குறுக்குவழிகளிலும் இறங்கச் செய்தன என்றே நான் கருதுகிறேன். வார்த்தைக்கு வார்த்தை, வியாழனுக்கு வியாழன் கருத்துச் சுதந்திரமென்றும் காத்திரமான விவாதம் என்றும் வாய்ச்சொல் பேசுபவர்கள் எப்போதுதான் விமர்சனங்களை அவதூறுகளால் எதிர்கொள்வதை விடுத்துக் கருத்துக்களால் எதிர்கொள்வார்கள்? என்று கேட்கிறேன்.

என்ன தோழர்களே? புலிகளின் அரசியற் வேலைதிட்டதிலிருந்து அல்லாமல் அவர்களின் தனிமனிதப் பலவீனங்களை ஆராயும் கட்டுரைகள் தேனியில் வெளியாகவில்லை என்றா சொல்லப்போகிறீர்கள்? ஒருவரின் கல்வித்தரத்தையோ, மொழி அறியாமையையோ, குடிப்பழக்கத்தையோ இழித்துரைப்பது மேட்டுக்குடிப் பார்வையின்றி வேறென்ன? TBC பணிப்பாளர் ராம்ராஜ் ENDLFன் அய்ரோப்பிய அமைப்பாளர் இல்லையா? ENDLFக்கு இந்திய உளவுத்துறையும் இலங்கை இனவாத அரசும் சோறு போட்டு வளர்க்கவில்லை என்கிறீர்களா? ஜெயதேவன் சாதி காப்பாற்றும் இந்துமதத்தைத் தூக்கிப்பிடிக்கும் ஒரு கோயிலின் முதலாளி என்பது பொய்யா? அந்தச் சிவநெறிச் செல்வர் மேற்கத்தைய வலதுசாரி அரசுகளின் ஆதரவாளரில்லையா? என்னுடைய கேள்விகளுக்கு உங்களிடம் பதிலில்லை. உங்களிடம் எஞ்சியிருப்பதெல்லாம் அவதூறுகள் மட்டுமே.

இலட்சியம் மட்டும் உன்னதமாயிருந்தால் போதாது. அதை அடையும் வழிகளும் உன்னதமாய் இருக்க வேண்டும். மிகச் சிறுபான்மையினரான மாற்றுக் கருத்தாளர்களான நாங்கள் உதிரிகளாகச் சிதறியிருக்கிறோம். எங்களிடம் உண்மையிலேயே ஓர் அரசியல் வேலைத்திட்டம் கிடையாது. எங்களிடையே புரட்சிகர அரசியற் தலைமையும் இல்லை. தனிமனிதக் கோபதாபங்களும் அவதூறுகளும் இவற்றை ஏற்படுத்தாது. இந்த இடத்தில் பொருத்தம் கருதி யாழ் மத்திய கல்லூரியியின் அதிபர் க.இராசதுரையின் படுகொலையைக் கண்டித்து நான் எழுதி NON குழுவினரால் வெளியிடப்பட்ட நீங்களும் தேனீயில் மறுபிரசுரஞ் செய்திருந்த மரண வீட்டின் குறிப்புகள் என்ற சிறுபிரசுரத்தின் இறுதி வரிகளைக் கீழே தருகிறேன்:

புலிகளின் பாஸிசக் கருத்தியல்களையும் கொலைக் கலாசாரத்தையும் எதிர்கொள்வதற்கான முதல் வழி நமக்குள்ளே திறந்த உரையாடல்களை நிகழ்த்துவதுதான். புலிகளுக்கு மாற்றாக நாம் இன்னொரு பிற்போக்குத் தமிழ்த் தேசிய தலைமையின் பின்னே அணிதிரள முடியாது. புலிகளை எதிர்கொள்வதற்காக மேற்கத்தைய முதலாளிய அரசியல் அறங்களுக்குள்ளும் நாம் வீழ்ந்துவிடக்கூடாது. சிறிலங்காப் பேரினவாத அரசு விடுதலைப் புலிகள் என்ற இருபெரும் கொடிய அடக்குமுறையாளர்களுக்கு முன்னால் நாம் உண்மையில் கையறு நிலையில் நின்றுகொண்டிருக்கிறோம். இனமுரண், பிரதேச முரண், சாதிய முரண், பால்முரண்பாடு, பண்பாடு போன்ற அனைத்துப் பிரச்சனைப்பாட்டுக்குரிய தளங்களிலும் வெளிகளிலும் நாம் மனம் திறந்து உரையாடுவோம். எம் எதிர்க் குரல்களும் அறம் சார்ந்த உரையாடல்களும் தீயைப்போல பரவிச் செல்லட்டும். உரையாடல் கருத்துக்களை உருவாக்கும். கருத்துக்கள் செயலை நோக்கி நகர்த்தும்.

31.05.2006

Friday, May 19, 2006

காலச்சுவடும்.. திருமாவும்..

ஒரு இடத்தில் அநியாயம் அனுமதிக்கப்படும்போது, எல்லா இடங்களிலுமுள்ள நியாயங்களை அது பாதிக்கிறது.
*****
சக மனிதர்மேல் ஒரு மதிப்பும் மரியாதையும் வேண்டாம்


காலச்சுவடு மே 2006 இதழில் 'விருது வாங்கலியோ' விசமத்தனப் பகுதி குறித்தது இக் கண்டனம்

லவே 'இலக்கிய மனேஜர்' 'இலக்கியக் கொமிசார்' ஆகிய பெருமைகளைச் சுமந்திருக்கும் காசு கண்ணனின் காலச்சுவட்டுக் கொம்பனி, எழுத்துகளின் மீதும் எழுத்தாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கை நடத்தைகளின் மீதும் தனது கண்காணிப்பையும் அதிகாரத்தையும் தெடர்ந்து உறுதி செய்யு முகமாக எழுத்தாளர்களுக்குக் கேலிப்பட்டங்களையும் ஏளனங்களையும் நையாண்டிகளையும் ஒரு சேரக் குத்திச் சமகாலத் தமிழ் எழுத்தியக்கம் மீது தனது வன்முறையைத் தொடர்கிறது. இது ஒன்றும் காலச்சுவட்டிற்குப் புதிதில்லை. தனக்கு ஒவ்வாத தனது ஒரே குடைக் கீழ் வராத எழுத்தாளர்களிற்கு அவர்கள் சார்ந்த நிறுவனங்களிலிருந்து வேலையை விட்டுத் தூக்குவதற்கு நிர்ப்பந்தித்தல்- ஞானபாரதியையும் சங்கர ராமசுப்ரமணியனையும் தூக்கினார்கள், தளவாய் சுந்தரத்தையும் பீர் முகமதுவையும் தூக்க முயன்றார்கள்- போன்ற நாலாந்தரக் காடைத்தனத்திலிருந்து இப்போது விருதுப் பட்டியல் வரை வந்து நிற்கிறது.

எழுத்துகளினதும் எழுத்தாளர்களினதும் தன்மதிப்பு, சுயமரியாதை, சமூக மதிப்பு இவை குறித்து எவ்விதக் கரிசனையும் பொறுப்புணர்வுமின்றிய சிறுபிள்ளைத்தனமான சின்னத்தனமான சிந்தனையிது. வெளிப்பார்வைக்குப் போகிற போக்கில் வாசித்து விட்டுச் சிரித்துவிட்டுப் போய்விடக் கூடிய பக்கங்களாக இது தோன்றலாம்.. ஆனால் உள்ளார்ந்திருப்பது மோசமான அதிகாரத்தைக் கட்டவிழ்த்துவிடுகிற, சக எழுத்தாளர்களை; இவர்களை இப்படிப் பாருங்கள் என்ற சாதி மனோபாவத்திற்கொப்பான குரூர சிந்தனையிது. ஒரு நீண்ட நாள் கண்காணிப்பிலிருந்து இது பிறந்தது.


அம்பைக்குப் பூலான் தேவி விருதும்
சல்மாவிற்கு ராணி மங்கம்மா விருதும் கொடுத்து விட்டு;
லீனா மணிமேகலைக்குப் 'பயாஸ்கோப்' விருதும்
சாரு நிவேதிதாவிற்குக் 'குத்துப்பாட்டு மைனர்' விருதும்
லக்ஷ்மி மணிவண்ணனுக்கு 'வொட்காவிலிருந்து மாம்பட்டை வரை' விருதும் கவிஞர் விக்கிரமாதித்யனுக்கு 'முதல் குடிமகன்' விருதும் கொடுப்பதற்கு இவர்கள் யார்?
யார் கொடுத்த அதிகாரம் இது? எவருடைய முப்பாட்டன்மார் கொடுத்த அடிமை ஓலை இது?

லீனா மணிமேகலை அவர்களின் மாத்தம்மாவிலிருந்து பலிபீடம் வரையான ஏழு ஆவணப்படங்களும் பயாஸ்கோப்புகளா என்ன? லீனா மணிமேகலை இவர்களுக்கு வேறு எதைக் காட்ட வேண்டுமென்று கேட்கிறார்கள்? யாருக்கு என்ன சொல்ல வருகிறார்கள்? 'சிலேட்' என்னும் இலக்கிய சிற்றிதழை ஒரு பனை ஏறியின் குடும்பத்திலிருந்து வேறு யார் இங்கு நடத்த முடியும்? நடத்த வந்தார்கள்? இன்று தாழ்த்தப் பட்டோரைச் சாதி சொல்லி இழிவு படுத்த முடியாத நிலையில்; இது நவீன முறையா?

'விருது வாங்கலியோ' என்ற தலைப்பிட்டு எல்லோருமே இங்கு விருதுகளிற்காக ஏங்கி நிற்பதாகவும் அலைந்து கொண்டிருப்பதாகவுமான ஓர் தோற்றப்பாட்டைக் காலச்சுவட்டின் கடைசிப்பக்கம் காட்ட வருகிறது.சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் எவருமே இங்கு விருதுகளிற்காக அலைபவர்களில்லை. எழுத்துகளின் மீதும் வாசகர்கள் மீதும் எழுத்தாளர்கள் மீதும் சகமனிதர்கள் மீதும் மரியாதையுள்ளவர்கள்தான். தமது படைப்பின் பேரால் ஓர் பெருமை தம்மைத் தேடி வரும் போது அதை கவுரவப்படுத்துபவர்கள்தான்.


சிறுபத்திரிகையாளர்களின் சமூகப் பொறுப்புணர்வும் விமர்சனப்பாங்கும் மாற்றுச் சிந்தனை மரபும் கா.சு விற்குமுன் குறிப்பிடும்படியாகத்தான் இருந்தது. அதை மலினப்படுத்திச் சீரழித்து நீர்த்துப் போக வைத்ததில் இடைநிலைப் பத்திரிகை என்ற ஏமாற்றுத்தனத்தோடு "நீ அரிசி கொண்டு வா நான் உமி கொண்டு வாறன் ஊதி ஊதித் தின்னலாம்" என்று தனக்கு ஆதாயப்படுத்துவதை மட்டுமே கா.சு செய்து வருகிறது.

கா.சுவின் இந்த இடை நிலை வியாபாரத் தன்மையும், இலக்கியத்தின் பேரால் நடாத்தப்பட்ட நடாத்தப்பட்டுவரும் மெகா திருவிழாக்கள் களியாட்டங்கள் போன்ற இத்தன்மையும் ம.க.இ.க போன்ற சமூக விமர்சன இயக்கங்கள் முழுச் சிறுபத்திரிகை இயக்கத்தையும் இவர்களையே வைத்து நோக்குவதும், மதிப்பிடுவதும் பெருந்துயரம்.

இடதுசாரி கம்யுனிஸ்ட் பின்னணியிலிருந்து புதிய சிந்தனைகளையும்,தலித்திய பின்நவீனத்துவ சிந்தனைகளையும், புதிய மதிப்பீடுகளையும் தாங்கிவந்த வண்ணமிருக்கும் சிறுபத்திரிகைகள் வேறு.

வலதுசாரி மேற்சாதி மேட்டிமை இலக்கிய மதிப்பீடுகளுடன் வரும் தமிழ்நாடு பிராமணர் சங்கக் காலச்சுவடு வேறு.


கள்ளச்சாராயப்பட்டியும் வொட்கா.. மாம்பட்டை, குடிமகன் நையாண்டியும் இங்கு இவர்களைத் தவிர வேறு எவருக்கு வரும்?

கா.சு இப்படியான கண்காணிப்பு அதிகார நடவடிக்கைகளை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

'என் படுக்கையறையில் யாரோ ஒழிந்திருக்கிறார்கள்..' என்றார் ஓர் கவிஞர். (எழுத்தாளர்களின் படுக்கையறைகளில்) ஒழிந்திருப்பவர் அனேகமாக கா.சு கண்ணன்தான் என்பதை கா.சுவின் கடைசிப்பக்க விருதுப்பட்டியல் ஆள்காட்டிச் செல்கிறது.

பின்குறிப்பாக:

அண்மையில் கனடாவில் நடந்த நிகழ்வொன்றில் தோழர் கண்ணன்.எம், காலச்சுவடு இதழின் தினமலர், RSS தொடர்பு குறித்தும் கா.சுவின் பார்ப்பனச் சாய்வு குறித்தும் பேசியதை டிசே தமிழன் தனது பதிவில் குறிப்பிட அதற்கு கவிஞர் திருமாவளவன் இவ்வாறு பின்னூட்டமிட்டிருந்தார்:

"//இந்திய அரசியல் போலவே இலக்கிய அரசியலும். இதில் யாரை யார் நம்புவது. வந்திருந்த புதியவரும் கூட இந்த (பதிப்பக) இலக்கிய அரசியலுக்குள் உள்ளவர்தான். (அடையாளம் என்ற பதிப்பகம் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்டார். தகவல் தவறாகவும் இருக்கலாம்.) அதுவல்ல பிரச்சனை. புகலிட இலக்கியம் நீத்துப்போய் விட்டது உண்மைதான். இதற்காண காரணம் தமிழக இலக்கிய மேலாண்மைதான். பின் நவினத்துவம் தலித்தியம் என்கிற சொலாடல் கவர்ச்சியும் அ. மார்க்ஸ், சாருநிவேதா போன்றவர்களின் வெளிநாட்டு வருகைகளும், எமது இந்திய மோகமும் இயல்பாகவே அடித்து சென்றுவிட்டது. நாங்கள் இப்பொழுதும் இதையேதான் செய்துகொண்டிருக்கிறேம். முடிவாக தேவகாந்தன் சொன்னதே சரி. எமக்கென்றொரு பதிப்பகம், விமர்சன உலகம், வாசகர் வட்டம் இல்லாத வரை ஈழத்து இலக்கியம் தனித்து தளிர்த்து வளர முடியாது.//"

இது என்ன அயோக்கியத்தனம்? ஒட்டுமொத்தத் தமிழகப் பதிப்பாளர்களையும் "பதிப்பக இலக்கிய அரசியல்" என திருமாவளவன் சேறடிப்பதை என்னவென்பது? தாம் வரித்துக்கொணட அரசியல் நிலைப்பாடுகளில் உறுதியாக நின்று காவற்துறையினரின் அடக்கு முறைகளுக்கெல்லாம் அஞ்சாமல் இலாபத்திற்காக இல்லாமல் சமூக நீதிக்காகப் புத்தகங்களை வெளியிடும் பதிப்பாளர்களை திருமா அறிய மாட்டாரா? விடியல் சிவா, அலைகள் சிவம், சிலிக்குயில் பொதியவெற்பன், தோழமை பதிப்பகம், அடையாளம் சாதிக், கீழைக்காற்று, கருப்புப் பிரதிகள், யாதுமாகி லெனா குமார் எனப் பல பதிப்பாளர்களை இவ்வகையில் என்னால் குறிப்பிட முடியும். இவர்கள் அனைவருமே இலாப நோக்கம் கருதாமல் அரசியல் நிர்பந்தங்களுக்குப் பணியாமல் ஈழத்தவர்களின் புத்தகங்களையும் வெளியிட்டிருக்கிறார்கள். புதியதோர் உலகம், ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம், டானியலின் ஒட்டுமொத்த நாவல்கள், டானியல் கடிதங்கள், தோழர் இரயாகரனின் புத்தகங்கள், பண்டிதர் வி.சி.கந்தையாவின் மட்டகளப்புத் தமிழகம்,பெண்கள் சந்திப்பு மலர்கள், சனதருமபோதினி, கறுப்பு....என இப்பட்டியல் நீளும். இப் பதிப்பாளர்களையும் கண்டதையும் விற்றுக் காசாக்கும் காலச்சுவடுக் கும்பலையும் நாம் ஒரே தட்டில் வைத்து எடைபோட முடியுமா?முடிந்தால் காலச்சுவடு குறித்து கண்ணன்.M வைத்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்க வேண்டும்.முடியாவிட்டால் மூடிக்கொண்டிருக்க வேண்டும். அதை விடுத்து கண்ணண்.எம்மின் விமர்சனத்துக்கு உள்நோக்கம் கற்பிப்பது அயோக்கியத்தனமானது.

திருமா கூறுமாதிரி "வந்திருந்த புதியவர்" கண்ணன்.M, தமிழ் சிற்றிலக்கிய உலகிற்கு புதியவரல்ல.அந்தத் தோழர் French Institute of Pondicherry யில் பணியாற்றுபவர்.கடந்த சில வருடங்களாக விடியல் சிவா வெளியிட்ட முக்கிய அரசியல் புத்தகங்களிற்க்கு வழிகாட்டியாகச் செயற்பட்டவர் (சே குவேரா வாழ்வும் மரணமும் உட்பட) பின் ஏன் திருமா கண்ணனை "அடையாளத்"துடன் முடிச்சுப்போடுகிறார்? இதற்கு திருமாவின் அடுத்தடுத்த வரிகளில் பதில் தொக்கி நிற்கிறது.

பாரிஸிற்கு அ.மார்க்சும், சாருநிவேதிதாவும் வந்தது குறித்து கோயிற் கருவறைக்குள் தீண்டத்தகாதவர்கள் நுழைந்ததை கட்டுவன் வெள்ளாளன் எதிர்கொண்டது போல் பெரும் பயத்துடனும் பதற்றத்துடனும் திருமா எதிர்கொள்கிறார். இந்தப் பதற்றம் கவிஞருக்கு தேவையில்லாதவொன்று. புகலிட இலக்கியம் குறித்து இவ்வளவு பலவீனமான முட்டாள்தனமான ஒரு மதிப்பீட்டை வைத்திருப்பதற்கு க.திருமாவுக்கு பூரண உரிமையுண்டு. ஒரு முப்பதாண்டு கால புகலிட நாடோடி அகதி இலக்கியத்தில் அ.மார்க்சுக்கும் சாருவுக்கும் அவர்கள் ஆற்றிய தலா அரை அரை மணிநேர உரைகளிற்காக இட ஒதுக்கீடு செய்வது SUPER! இங்கு பிரமிளுக்கான இடத்தைப் பறித்து சுந்தரராமசாமி பாரிஸில் தமிழ்க் கவிதைப் பிரதிநிதியாக வந்தது குறித்தோ அல்லது தனது வியாபாரத்திற்காக காசு கண்ணன் வரும் போதோ தமிழ் நாட்டில் தனது கவிதைக்காக விருது பெற்று அந்த விழாவில் கனடாவிலிருந்தே செய்மதி மூலம் ஏற்புரையாற்றிய திருமாவுக்கு 'தமிழக இலக்கிய அரசியல்' குறித்து எந்தப் பிரச்சனையும் எழவில்லை. பிரசன்னா ராமசாமி, அம்பை, மங்கை, இந்திரா பார்த்த சாரதி,வெங்கட் சாமிநாதன் ஜெயமோகன் புலம் பெயர் தேசங்களுக்கு NGO, அக்கடமிக், மானிய, குறுக்கு வழிகளில் வரும் போது திருமாவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் நமது சொந்த உழைப்பில் சொந்தக் கடனில் நாம் நமது தோழர்களை அழைத்தவுடன் திருமாவுடைய புலம் பெயர் இலக்கியம் நீர்த்துப் போய்விட்டதா? அவ்வளவு பலவீனமாகவா புலம் பெயர் இலக்கியம் இருந்தது? மேலும் சுருக்கமாகக் கூறுவான்வேண்டி செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருப்பதும் மேலும் மேலும் வானத்தால் போம் பிசாசை ஏணி வைத்திறக்கி விருந்தோம்புவதும் நமது இலக்கிய விழுமியங்களிலொன்றாம். கவி திருமா நீங்கள் எப்போதாவது மற்றவர்களின் பேச்சை ரசித்ததுண்டா?

அ.மார்க்ஸின் சாருவின் புகலிட வருகைகள் எவ்வாறு புகலிட இலக்கியத்தை நீர்த்துப் போக வைத்தது என்பதைத் தயவு செய்து திருமா விளக்குவாரா? அ.மார்க்ஸ், சாரு, சிவகாமி, பாமா, பிரேம் -ரமேஷ், இந்திரன், தலித் தோழமை மையம் ரஜனி, அம்பேத்கர் பேரவை நிக்கொலஸ், கடைசியாகக் கண்ணன்.M வருகை எப்படிப் புகலிட இலக்கியத்தைச் செழுமைப்படுத்தியது என்பதை விளக்க நான் தயார். நாம் தோழர் அ.மார்கஸின் சிந்தனைப் பள்ளியில் உருவாகியவர்கள் என்பதை அறிக்கையிட நானோ, ஷோபாசக்தியோ, தேவதாஸோ, அசுராவோ மற்றைய எக்ஸில் நண்பர்களோ என்றுமே தயங்கியதில்லை.

திருமா காயும் "இறக்குமதி" பின்நவீனத்துவ, தலித்திய, விளிம்புநிலைச் சிந்தனைகள் புகலிட இலக்கியப் பரப்பில் புனைவு, விமர்சனம், செயற்பாடுகள், பிரதிகளை அணுகும் முறைகள், வாசிப்புத் தன்னிலைகள், இவற்றிற்குப் புதிய சாத்தியப்பாடுகளைத் திறந்து வைத்தன. மேற்சாதி, அதிகார, ஆண்மையவாத, தேசியவாத, மனோபாவங்களைக் கேள்விகளிற்குள்ளாக்கின.விளிம்புநிலைப் பிரதிகளையும் மறுத்தோடிக் குரல்களையும் முன்னிறுத்தின. இந்தச் செல்நெறிகளைத் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருபவர்களென்ற வகையில் அ.மார்க்சும் சாருவும் ஒட்டுமொத்தத் தமிழ் இலக்கியப் பரப்பிற்கும் முக்கியமானவர்கள் என்பதை எவராவது மறுத்துரைக்க முடியுமா? திருமா மறுக்கிறார் என்றால் அந்த மறுப்பின் பின்னால் உள்ளது எவ்வகையான மனோபாவம்? மேற்சாதி உளவியல்? சொல்லுங்கள் திருமா!

//இனி நமக்கென்றொரு பதிப்பகம்...// கிழித்தீர்கள்! ஏற்கனவே வாழ்நாள் சாதனையாளர் பத்மநாபனும் அப்பால்தமிழ் அரவிந்தனும் பதிப்பகங்கள் தொடங்கிப் பாஸிசப் பிரதிகளைப் பதிப்பித்துக் கிழித்துத்கொண்டிருக்கிறார்கள். எஸ்.பொவின் மித்ர பதிப்பகம் இன்னோரு பக்கத்தால் போட்டுத் தாக்கிக்கொண்டிருக்கிறது.இன்னும் தாய்மண், ஈழமுரசு, நிகரி எனப் பல ஈழத்துப் பதிப்பகங்கள் இருக்கின்றன. இப் பதிப்பகங்கள் விளிம்புநிலைக் குரல்களையும், "துரோக" எழுத்துக்களையும் வெளியிடத் தயாரா?

மறுபுறத்திற் சனநாயக வழிநின்று புத்தகங்களை வெளியிடும் விளிம்புநிலைக் குரல்களுக்கு முன்னுரிமையை வழங்கும் மல்லிகை, புதியபூமி, குமரன், மூன்றாவது மனிதன், காலம் போன்ற பதிப்பகங்கள் இருக்கின்றன.போதாததற்கு ஒன்றுக்கு இரண்டாக இரண்டு எக்ஸில் பதிப்பகங்கள் வேறு இருக்கின்றன.

எனவே புதிதாகப் பதிப்பகம் அமைப்பதை விடுத்து நாம் புதிது எழுத முயன்றாலே புகலிட இலக்கியம் இன்னொரு அடி நோக்கி நகரும்.அல்லாவிடின் ஆடத் தெரியாதவன் மேடை சரியில்லை எனச் சொன்ன கதையாக நாசமாய்ப் போகும்.

இறுதியாக ஒன்று: புரட்சியாளர்கள் மட்டுமல்ல, இலக்கியவாதிகளும் குறுகிய தேசியவாதச் சிந்தனைகளைத் தாண்டி சர்வதேசவாதிகளாக நிற்க வேண்டும். இளங்கோவடிகளும், சித்தர்களும், டால்ஸ்டாயும், பிரைடோ காலாவும், சதத் ஹசன் மண்டோவும், மார்க்ஸிம் கோர்க்கியும், ஆனா ப்ளன்டியானாவும், சீனுவா ஆச்சபேயும், ஜோன் ஜெனேயும் நமது பேராசான்கள்.இதை விடுத்து ஈழம் VS இந்தியா என்று கச்சை கட்டுவதிற் பொருளில்லை. நமது கைலாசபதியைத் தமது தத்துவ ஆசிரியராக வரித்துக்கொண்டு இந்தியாவில் கோ.கேசவன், அருணன், அ.மார்க்ஸ் என ஒரு புதிய விமர்சனப் பரம்பரையே உருவாகவில்லையா! கே.டானியலைத் தந்தை டானியலென்றும், தலித் இலக்கியத்தின் முன்னோடி எனவும் தமிழகத் தோழர்கள் கொண்டாடுகிறார்கள். நமது பிரேமிளை "மேஜர் பொயட்" என அவர்கள் மகிமைப்படுத்தினார்கள். எஸ்.பொவையும் மு.தளயசிங்கத்தையும் அவர்கள் பின் தொடர்ந்தார்கள். இதே வேளை அங்கே இலக்கிய மேலாண்மையும் இல்லாமலில்லை. இந்தியாவில் இலக்கிய மேலாண்மை என்பது பார்ப்பன வெள்ளாள மேலாண்மை என்றே பொருள்படும்.அவர்கள் ஈழத்து இலக்கியங்களை மட்டுமல்லாது தமிழகத்து தலித், பிற்படுத்தப்பட்ட சாதியினரின் எழுத்துகளையும் இருட்டடிப்புச் செய்தார்கள்.சற்றுக் காலங்களிற்கு முன்வரை கல்வியும் ஊடகங்களும் அவர்களின் பூரண கட்டுப்பாட்டிலேயே இருந்ததால் இது சாத்தியமாகியது.

இம் மேலாண்மைப் போக்கின் பிரதிநிதிகள் அ.மார்க்சும், சாருவும், எம்.கண்ணனுமா? அல்லது சுந்தர ராமசாமியும், அசோகமித்திரனும், சுஜாதாவும், மாலனும், வெங்கட் சாமிநாதனும் காலச்சுவடுமா? என்று தோழர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இத்தகைய இலக்கிய நாட்டாமைகள் ஈழத்திலும் இல்லாமலில்லை. அவர்கள் டானியலின் எழுத்துக்களையும் டொமினிக் ஜீவாவின் எழுத்துக்களையும் இழிசனர் வழக்கு எனப் பழித்துரைத்தார்கள். இன்று மாற்றுக் குரல்களையும் எதிர் எழுத்தாளர்களையும் "ஈழமுரசிலும்", "ஒரு பேப்பரிலும்" துரோகிகள், உளவாளிகள் என்று கட்டங் கட்டுகிறார்கள். மாற்றுக் கருத்தாளர்களிடையேயும் இலக்கியச் சந்திப்புக்களிலும் கூட இந்த இலக்கிய நாட்டாமைகளும் இருட்டடிப்புக்களும் தொடருகின்றன என்பது வருத்தப்படவேண்டிய ஓர் உண்மை. இதைச் சுட்டிக்காட்டி நாட்டாமை என்றொரு தொகுப்புப் பிரசுரத்தை நாம் பெர்லின் இலக்கியச் சந்திப்பில் விநியோகித்திருந்தோம்.

இலக்கிய மேலாண்மைகள் ஈழத்திலுமுண்டு இந்தியாவிலுமுண்டு புகலிடத்திலுமுண்டு.இந்த இலக்கிய மேலாண்மைகளின் இலக்கிய முகமூடிகளைக் கழற்றிப் பார்த்தால் உள்ளே சாதியமும் ஆண்மையவாதமும் குறுந்தேசிய வெறியும் பாஸிசமும் பல்லிளிக்கும்.அதேபோல் சமூக நீதிக்காகக் குரலெழுப்பும் முற்போக்கு இலக்கியவாதிகள் ஈழத்திலுமுண்டு இந்தியாவிலுமுண்டு. எங்கிருந்தாலும் அனைத்து மேலாண்மைகளையும் எதிர்ப்பதும், எந்த மூலையில், எந்த நாட்டில் முற்போக்கு சக்திகளிருந்தாலும் அவர்களைத் தேடித்தேடி இணைவதும் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதும் அவர்களுக்கு ஆதரவளிப்பதுவுமே நமது தலையாய கடமையாக இருக்கவேண்டும். இது திருமாவளவன் என்ற யாழ்ப்பாண மேட்டுக்குடி வெள்ளாள மூளைவீங்கிக்கு வேண்டுமானால் உறைக்காமலிருக்கலாம், நமது தோழர்களுக்குமா உறைக்காமல் போய்விடும்?

சுகன்

Tuesday, May 09, 2006

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் !!!!

"சாத்தானுக்கு இரண்டு நாக்கு (சிக்மன்) பிராயிட்டுக்கு ஆயிரம் நாக்கு உருத்திரமூர்த்தி சேரனுக்கு பல்லாயிரம் நாக்கு"

என்ற தலைப்பில் தேனி இணையத் தளத்தில் க.மகாதேவன் எழுதிய கட்டுரையை தொடர்ந்து;
"அவதூறுகளுக்குப் பதில் எழுதுவதில் பயனில்லை என்பதுதான் எனது நிலைப்பாடாக இருந்தது.."எனும் 'கோபுரம்' உருத்திரமூர்த்தி சேரன் அவர்கள் க.மகாதேவன் கட்டுரைக்கு
"மாடு முட்டி கோபுரங்கள் சாய்வதில்லை" என்ற தலைப்பில் ஒரு நீண்ட கட்டுரையை எழுதித் தள்ளியிருக்கிறார்..


"மாடு முட்டி கோபுரங்கள் சாய்வதில்லை" இனி பள்ளத்திலிருந்து சுகன்.


கோபுர தரிசனம் கோடி புண்ணியம் !!!!ஆ..... ஹா.....ஆ........ ஆஹா....



'கோபுரம்'..

தம்மைக் கோபுரங்களாகவும் சிகரங்களாகவும் மலைகளாகவும் ஆகாயத்தில் தம்மைத் தாமே நிறுத்துவது சேரன் (சோழ பாண்டிய) பரம்பரைக்குப் புதிதல்ல. அவர் அப்பா உருத்திரமூர்த்தி தம்மைத் தாமே 'மகாகவி' என்று சொல்லிக் கொண்டேயிருந்தார்.
மற்றோரை மாடுகளாகவும் எருமைகளாகவும் பன்றிகளாகவும் பள்ளத்தில் இருக்கின்ற பஞ்சைப் பராரிகளாகவும் இழித்துரைப்பது, குறைந்தபட்ச மனித நாகரீகம் கூட இல்லாதவனுடைய சொல்லாட்சி அன்றி வேறென்ன ?(என்னத்தைப் படிச்சு எங்கேயிருந்தாலென்ன சட்டியில் இருக்கிறது தான் அகப்பையில் வரும்)

புதிதாகத் தம்மைப் புனிதமானவர்களாக நிறுத்துவதற்கு இன்று கோபுரம் இன்றியமையாததாகி விட்டது. அது எந்தக் கோபுரம் என்று தெரியவில்லை அனேகமாக அளவெட்டி குப்பிளாவளைப் பிள்ளையார் கோவில் கோபுரமாக இருக்கலாம்.

யாரும் எதை நோக்கியும் எவர் நோக்கியும் கேள்வி எழுப்பக் கூடாது. கேள்வி எழுப்பினால் உடனே கோபுரம் ஆட்டங்கண்டு விடுகிறது. எவர் எவர் எல்லாம் மற்றையோரை மெளனமாக்குவது என்று விவஸ்தையேயில்லாமற் போய்விட்டது. பாண்டிச்சேரியில் நடைபெற்ற கூட்டமொன்றில் ஓர் அன்பர் "நீங்கள் இவ்வளவு பேசுகிறீர்களே ! நீங்கள் ஏன் களத்தில் நின்று போராடக்கூடாது ? " என்று கேட்டிருக்கிறார். அதற்குக் 'கோபுரம்' உருத்திரமூர்த்தி சேரன் "பிரபாகரனும் தான் களத்திற்குக் செல்லவில்லை" என்று பதில் சொல்லியிருக்கிறது. கேள்வி கேட்டவர் வாயடைத்து மெளனமாகிப் போனார்.
அவ் அன்பருக்குத் தெரியாது 'நமது பரம்பரை போர்புரியட்டும்' என்பதன் மனோபாவம்.

கோபுரத்தின் முகமும் முன்தோற்றமும் என்னவென்று சாமானியர்களுக்கு எங்கே தெரியப் போகிறது. அவை எப்போதும் தம்மிலும் கீழாகத்தான் மற்றவற்றை நோக்குகிறது. கொபுரங்கள் தம்மை நோக்கி கை தொழுவதைத்தான் வேண்டுகின்றன. கை நீட்டுவதையல்ல.

பாசிசத்தின் மூலம் இதுதான். அடிபணிவதை விருப்பத்துடன் ஏற்றுக்கொள்ளல். மற்றவர்கள் தாம் சொல்வதைக் கேட்க வேண்டும் என விருப்பப்படல்.

பள்ளத்திலிருந்து
சுகன்
09.05.2006
தோடுப்புகள் நன்றி தேனி இணையத்தளம்.

Monday, May 01, 2006

திரு. முடுலிங்க - ஷோபா சக்தி




சென்ற புதன் கிழமை Le Monde பத்திரிகை இணைப்பாக ஆப்பிரிக்க இலக்கியச்சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த இலக்கியச்சிறப்பிதழின் நடுப்பக்கத்தில் வெளியாகியிருந்த ‘Monsier Mudulinka’ என்ற சிறுகதையை நைஜீரிய எழுத்தாளர் மம்முடு ஸாதி எழுதியிருந்தார் ஹெளஸ மொழியில் எழுதப்பட்ட இந்தக் கதையை ஹீரன் வில்பன் பிரஞ்சில் மொழி பெயர்த்திருக்கிறார். இந்தக் கதையின் தலைப்புப்பாத்திரமாக வருபவர் ஒரு இலங்கையர் என்பதைக் கதையின் போக்கில் நான் அறிந்து கொண்டதும் மிதமிஞ்சிய ஆர்வத்துடன் கதை யைப் படித்து முடித்தேன். படித்து முடித்தவுடனேயே அந்தக் கதையைத் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினேன். கதை எளிய பிரஞ்சு மொழியில் இருந்ததால் தமிழில் மொழிபெயர்ப்பதில் பெரிய சிக்கல்கள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் ஒரேயரு பிரச்சனை இருக்கிறது. கதையின் ஒரு இடத்தில் Cocoville என்றொரு ஊர் குறிப்பிடப்படுகிறது. (கொக்கோ வில்லி என்று வாசிக்கக் கூடாது. பிரஞ்சு மொழி இலக்கணப்படி இதைக் கொக்கோ வில் என்றுதான் படிக்க வேண்டும்.) கதையின் போக்கில் அந்தஊர் இலங்கையில் உள்ளதாக ஊகிக்க முடிகிறது. ஆனால் நான் ஒருநாள் முழுவதும் இலங்கை வரை படத்தை விரித்து வைத்துத் தேடிப் பார்த்தும் கொக்கோ வில் என்ற ஊரை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே தமிழ் மொழிபெயர்ப்பிலும் அந்த ஊரை நான் கொக்கோ வில் என்றே எழுத வேண்டியதாகிவிட்டது. எனினும் இந்தச் சிக்கல் கதையின் மொழிபெயர்ப்பை எதுவிதத்திலும் பாதிக்கப் போவதில்லை. நாற்பத்தொரு வயதாகும் மம்முடு ஸாதி இது வரை மூன்று சிறுகதைத் தொகுப்புக்களை வெளியிட்டிருக்கிறார். மம்முடு ஸாதி லாகோஸில் உள்ள அய்க்கிய நாடுகள் சபையின் கிராமப்புற வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் ஒரு சிற்றூழி யராகப் பணி செய்து வருகிறார்.

இனி மம்முடு ஸாதியின் கதை:

கொடிக் கம்பம் என் நெற்றியின் முன்னாக நிற்க லாகோஸின் அனல் காற்றில் யு.என். ஓவின் கொடி என் தலை மீது சரிந்தாடியது. இந்தக்காலை நேரத்திலேயே மனுக்களுடனும் கோரிக்கைகளுடனும் நிறைய மக்கள் கூடியிருந்தார்கள். அவர்கள் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் அங்கே வந்திருந்தார்கள். தொலைதூர வட மாவட்டமான சொக்கட்டோவில் இருந்து ஒரு விவசாயிகள் குழு வந்திருந்தது. அவர்கள் மதிற்சுவரின் ஓரத்திலே களைப்புடன் குந்தியிருந்தார்கள். நான் அவர்களிடம் சென்று அவர்கள் கொண்டு வந்த மனுக்களைச் சேகரித்துக் கொண்டிருந்தேன். அப்போது பிரதான வாசலால் கறுப்பு நிற மெர்ஸிடஸ் பென்ஸ் கார் உள்ளே நுழைந்தது. ஊருக்குள் பிரஸிடண்ட் அன்ஸாரி பின் இருக்கையில் அமர்ந்திருந்து என்னைப் பார்த்துத் தலையசைத்தார். நான் எனது வலது கையைத்தூக்கி பிரஸிடண்டுக்கு ஒன்றுக்கு இரண்டு தடவைகள் சலாம் செய்தேன். கடவுளுக்கு ஒரு விளக்கு ஏற்றினால் சாத்தானுக்கு இரண்டு விளக்குகள் ஏற்றி வைக்க வேண்டும் என்பார்கள்.

நான் இந்த அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்து மூன்று வருடங்கள் முடியப்போகின்றன. இந்த மூன்று வருடங்களில் ஒரு நாளாவது பிரஸிடண்ட் அன்ஸாரி என்னை மம்முடு என்று பெயர் சொல்லி அழைத்தது கிடையாது. அறிவிலி, கழுதை, முட்டாள் என்ற பெயர்களில் தான் என்னை அவர் கூப்பிடுவார். அதியசமாக அவர் மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களில் ‘ஏய் சின்னவனே’ என்று அவர் என்னைக் கூப்பிடுவார். என் வேலைக்கு ‘அலுவலக உதவியாளன்’ என்று தான் பெயர். ஆனால் பரிசாரகன், தேனீர் தயாரிப்பவன், வாகனச்சாரதி என்று எல்லாவித வேலைகளையும் நான் செய்ய வேண்டியிருந்தது.

இந்த அலுவலகத்தில் திட்டமிடல் அதிகாரிகளாக இருக்கும் இரண்டு வெள்ளையர்கள் மட்டும் தான் தங்கள் தனிப்பட்ட வேலைகளை என் தலையில் சுமத்துவது கிடையாது. இதன் மறுபுறத்தில் ஒரு நன்மையும் இருந்தது. அந்த இரண்டு வெள்ளையர்களின் அறையைத்தவிர அலுவலகத்தின் மற்றைய அலுவலர்களுடன் எனக்கு விரைவிலேயே நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. இந்த அலுவலகத்து மேசைகளின் ஒவ்வொரு இழுப்பறைகளும் லஞ்சப் பணத்தால் நிரம்பிக் கிடந்தன விரைவிலேயே என சட்டைப்பையிலும் அய்ம்பது, நூறு நைறாக்கள் சாதாரணமாகப் புழங்கத் தொடங்கின. ஆகாயத்திலிருந்து ஈச்சம்பழம் விழுந்தால் நீயும் வாயைத் திற என்பது எங்கள் பக்கத்துப்பழமொழி. இந்த அலுவலகத்தின் தலைமை அலுவலகம் தலை நகர் அபுஜாவில் இருக்கிறது. எனக்கு உத்தியோக உயர்வு தந்து என்னை அங்கு அனுப்பி வைப்பதாகப் பிரஸிடண்ட் அன்ஸாரி எனக்கு வாக்குக் கொடுத்திருக்கிறார்.

அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றுவதில் என் தரப்பிலிருந்து ஒரு சிக்கல் இருந்தது. அபுஜா தலைமை அலுவலகத்தில் பணிபுரிபவர்களில் முக்கால்வாசிப் பேர் வெள்ளையர்கள் தான். அங்கே நான் வேலை செய்வதற்கு எனது ஆங்கில அறிவு போதாமல் இருக்கிறது. என்று பிரஸிடண்ட் அன்ஸாரி அபிப்பிராயப்பட்டார். இவ்வளவுக்கும் எனது கிராமத்திலேயே அதிக ஆங்கில அறிவு உடையவன் நான் தான். அங்கே எனக்கு ‘இங்கிலிஷ் மம்முடு’ என்று ஒரு பட்டப்பெயரே வழக்கிலிருக்கிறது. ஆனால் இந்த அலுவலகத்திலிருக்கும் வெள்ளையர்கள் இருவரும் பேசும் ஆங்கிலம் தான் எனக்குப் பிடிபடாமலேயே இருக்கிறது. அவர்களில் ஒருவர் ஐரிஸ்காரர், மற்றவர் அவுஸ் ரேலியர். அவர்கள் இருவரும் பேசும் ஆங்கிலம் அவர்கள் நாவிலிருந்து புறப்படும் அதே வினாடியிலேயே மறுபடியும் ஓக்ரா குழம்பில் நனைத்து எடுத்த வ்வூவ்வூ களி மாதி அவர்களின் தொண்டைக்குள் வந்த வேகத்திலேயே வழுக்கிப் போனது. நான் பேசும் ஆங்கிலத்தை புரிந்து கொள்ளாதது போல அந்த வெள்ளையர்கள் இருவரும் எப்போதும் தமது உதடுகளை மடித்துத்தோள்களைக் குலுக்கினர்கள். நான் ஒரு வெறியோடு ஆங்கிலத்தைப் படிக்கத்தொடங்கினேன். காலை வேளைகளில் ஆங்கிலச் செய்தித் தாள்களை ஆர்வத்தோடு படித்தேன். மாலை வேலைகளில் என் பூட்டிய அறைக்குள் உள்ளிருந்து விடாமல் ஆங்கில இலக்கணப் பயிற்சி நூல்களைக் கற்று வரலானேன். சோம்பலால் வளர்வது பேனும் நகமும் தவிர வேறில்லை.

மதிலோரத்தில் குந்தியிருந்த சொக்கட்டோ விவசாயிகள் குழு என்னிடம் தங்களது மனுவைத் தருவதற்கு முதலில் மறுத்தார்கள். அவர்கள் அந்த மனுவை உள்ளேயிருக்கும் வெள்ளையர்களிடம் தான் கொடுப்பார்களாம். ‘அந்த வெள்ளையர்கள் வெளியே வரவும் மாட்டார்கள். முன் அனுமதி பெற்றிராமல் நீங்கள் அலுவலகத்துக்கு உள்ளே போகவும் முடியாது’ என்று நான் விவசாயிகளுக்கு விளக்கமாகச் சொன்னேன். அவர்கள் என்னை நம்ப மறுத்தார்கள். அந்த விவசாயிகள் அலுவலகத்தின் முன்னே தொடங்கிக் கிடக்கும் யு.என்.ஓ. கொடியைக் கூட இன்னமும் பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தின் கொடியென்றே நம்பிக் கொண்டிருப்பவர்கள் ‘அந்த வெள்ளையர்களை விட உங்கள் மனு மீது முடிவு எடுக்கும் அதிகாரம் படைத்தவர் பிரஸிடண்ட் அன்ஸாரி, நீங்கள் என்னிடம் மனுவைக் கொடுத்தால் அதை நான் அவரின் பார்வைக்கு எடுத்துச் செல்வேன்’ என்று நான் விவசாயிகளிடம் சொன்னேன். நானும் அவர்களைப்போல (f)புலானி இனக் குழுவைச் சேர்ந்தவன் என்று அறிந்த பின்பு தான் அந்த விவசாயிகள் என்னை நம்பினார்கள். அவர்களின் விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி கோரி அவர்கள் அந்த மனுவைத் தயாரித்திருக்கிறார்களாம். அந்த விவசாயிகள் குழுவின் தலைவர் என் கையில் மனுவைக் கொடுத்து விட்டு என் சட்டைப்பைக்குள் நூறு நைறா தாளன்றைத் திணித்து விட்டார்.

சென்ற மாதம் வரை எவரும் அலுவலகத்துள் வரலாம் போகலாம் என்று விதிகள் இருந்தன. ஆனால் இப்போது ஊழியர்களைத் தவிர வேறு யாருக்கும் அலுவலகக் கட்டடத்தின் உள்ளே நுழைய அனுமதி கிடையாது. மனு கோரிக்கை எதுவானாலும் முற்றத்தில் வைத்தே முடித்து அனுப்பிவிடச் சொல்லி பிரஸிடண்ட் அன்ஸாரிக்கு காவல் துறை ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார். சென்ற மாதம் இந்த முற்றத்தில் இதே கொடிமரத்தின் கீழே இரண்டு இளைஞர்களைப் பொலிஸார் சுட்டு வீழ்த்தியிருந்தனர்.

சென்ற மாதத்தின் கடைசி நாளில் இளைஞர்களும் பெண்களுமாய் ஒரு கூட்டம் அதிரடியாய் எங்கள் அலுவலகத்தின் முற்றத்தில் நுழைந்தது. அவர்கள் கைகளில் கொடிகளும் அட்டைகளும் வைத்திருந்தார்கள் அவர்கள் உரத்த குரலில் கோஷங்களை எழுப்பினார்கள். அதற்கு முன் தினம் தான் ஒல்லாந்து, பிரஞ்சு எண்ணை நிறுவனங்களுக்கு எதிராகப் போராடிய ஒன்பது நைஜீரியர்களுக்கு நைஜீரிய அரசு தூக்குத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் கொடிக்கம் பத்தில் ஏறி யு.என்.ஓ. கொடியை அறுத்து தீ வைத்துக்கொளுத்தினார்கள். அவர்கள் கற்களால் அலுவலகத்தின் கண்ணாடி ஜன்னல்களைச் சிதறடித்தார்கள். நாங்கள் அலுவலகத் தின் கதவுகளை மூடிவிட்டு உள்ளேயே இருந் தோம். பிரஸிடன்ட் அன்ஸாரி தன் கொழுத்த உடம்பைத் தூக்கிக் கொண்டு அங்குமிங்கும் பதற்றத்தோடு ஓடித்திரிந்தார். உதவித்தலைவர் வில்லியம்பிரான்ஸிஸ் இபோ இனக்குழுவைச் சேர்ந்தவர். அவர் இபோ வழக்கப்படி எந்த விசயத்தைப் பேசினாலும் இழுத்து இழுத்து ரப்பராய் விரித்து உவமான உவமேயங்கள் முது மொழிகள் பொன்மொழிகள் எல்லாம் பொதித்துத்தான் எந்தவொரு வாக்கியத்தையும் முடிப்பார். இப்போது அவர் அலுவலக ஊழியர்களிடம் ‘பொலிஸார் வந்து ஆர்ப்பாட்டக் காரர்களைச்சுடப் போகிறார்கள்’ என்பதை வளைத்து வளைத்துச் சொல்லிக் கொண்டிருக்கும் போது வெளியே துப்பாக்கிகள் வெடிக்கும்சத்தங்கள் கேட்டன. வில்லியம் பிரான்ஸிஸ் ‘புதிதாய்ப்பிறந்த கன்றுகள் புலிகளுக்கு அஞ்ச மாட்டா’ என்று கூறிக் கண்களை மூடிக் கொண்டார்.

எங்கள் அலுவலகத்துக்குப் புதிய திட்டமிடல் அதிகாரி ஒருவர் வெளிநாட்டில் இருந்து வரப்போவதாகச் செய்திகள் அடிப்பட்டன. ஏற்கனவே அலுவலகத்தில் இருக்கும் இரண்டு வெள்ளையர்களும் அவர்களது மாயஜால ஆங்கிலத்தால் என்னைத் தொல்லைப்படுத்திக் கொண்டிருந்தார்கள். வரப் போகும் புதிய திட்டமிடல் அதிகாரி பேசப் போகும் ஆங்கிலமாவது எனக்குப்புரிய வேண்டும் என்று நான் இறைவனை இடைவிடாமல் தொழுதேன். இறைவன் ஒவ்வொரு நோய்க்கும் ஒரு பச்சிலையை அளித்திருக்கிறான்.

புதிதாக வந்திருந்த திட்டமிடல் அதிகாரி ஆங்கிலத்தைப் பத்து விதமாகப் பேசினார். அவர் பிரஸிடண்ட் அன்ஸாரியோடு ஒருவித ஆங்கிலம் பேசினார். ஐரிஸ்காரரோடு இன்னொரு விதமான ஆங்கிலத்தில் பேசினார். அவுஸ்ரேலியாக்காரரோடு மற்றொரு விதமான ஆங்கிலம் பேசினார். எங்கள் அலுவலகத்தில் தோடம்பழங்கள் விற்க வரும் கூடைக்காரி மைமூனுடன் வினைச் சொற்களே இல்லாமல் வெறும் பெயர்ச் சொற்களை உபயோகித்தே நூதனமான ஒரு ஆங்கிலத்தில் உரையாடினார். என்னோடு பேசுவதற்கு அவர் விசேடமான ஒரு ஆங்கிலத்தை வைத்திருந்தார். தனது வாயை அகலத்திறந்து சுட்ட சூயா இறைச்சித் துண்டங்களை கடித்துத் தின்பது போல அவர் தன் பற்களுக்கிடையே ஆங்கிலத்தைக் கடித்துச் சிறு சிறு துண்டுகளாக என்னிடம் அனுப்பினர். என் வாழ்க்கையில் முதற் தடவையாக நான் நைஜீரியர் அல்லாத ஒருவர் பேசும் ஆங்கிலத்தை முழுவதுமாக விளங்கிக்கொண்டேன். அல்லா கொடுக்கும் போது நீ யார் பிள்ளையென்று கேட்பதில்லை.

‘ஒரு தங்கத் திறவுகோல் எல்லாப்பூட்டுகளையும் திறக்கும் என்பார்கள். புதிய திட்டமிடல் அதிகாரி சொக்கத்தங்கமாய் இருந்தார் அவரின் பெயர் திரு. முடுலிங்க. அவரை நான் முதலில் ஒரு படேல் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் திரு. முடுலிங்க சிலோன் நாட்டுக்காரர். திரு. முடுலிங்க எல்லாவற்றிலும் மிகத் துல்லியமாக இருந்தார். குறித்த நேரத்துக்கு அலுவலகத்துக்கு வந்து குறித்த நேரத்தில் அலுவலகத்தை விட்டுப்புறப்படுவார். அவர் எப்போதும் மிகத்தூய்மையான அழகிய உடைகளையே அணிவார். அவரின் சுத்தமாகச் சவரம் செய்யப்பட்ட முகத்தில் எப்போதும் ஒரு புன்னகை தொற்றியிருக்கும் அவருக்கு அறுபது வயது இருக்கலாம். ஆண்டுகள் அழகுக்கு மரியாதை செலுத்துவதில்லை என்ற (f)புலானிப் பழமொழி திரு. முடுலிங்கவை பொறுத்தவரையில் செல்லுபடியாகாது. அவர் எப்போதுமே தன் கையோடு எடுத்து வரும் சிறிய கணிப்பொறியைப் போல தனது தலையுள் ஆயிரம் கணிப்பொறிகளை வைத்திருந்தார். பிரஸிடண்ட் அன்ஸாரிக்கு கொடுக்கும் அதேயளவு மரியாதையைத் தான் திரு. முடுலிங்க எனக்கும் கொடுத்தார். அதேயளவு மரியாதையைத்தான் அவர் தோடம்பழக் கூடைக்காரி மைமூனிடமும் காட்டினார். அவரின் கண்களில் அறிவும் கனிவும் சுடராய் எழுந்தன. நான் அவரின் அதீத கவனத்தைப் பெறுவதற்கு பெரு முயற்சிகள் எதுவும் செய்யவேண்டியிருக்கவில்லை. நைஜீரிய நாட்டு அரசியல் நிலைமைகள் விரைவிலேயே என்னை திரு. முடுலிங்கவின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரிய ஊழியக்காரனாக மாற்றி விட்டிருந்தன.

அந்த ஒன்பது தூக்குத்தண்டனைகளுக்கும் எதிராக நைஜீரியா முழுவதும் கலவரங்கள் நடைபெற்றன. பயாஃப்ரா பிரிவினைப் போராட்டத்தக்குப் பிறகு நைஜீரியா கண்டிருக்கும் மிகப் பெரிய கலவரம் இதுதான் என்று ‘Nigeria Times’ எழுதியது. நைஜீரியாவின் தெற்குப்பகுதிகளில் எண்ணை வயல்களை அண்டிய பிரதேசங்களில் தொடங்கிய இந்தக் கலவரம் பின் நகரங்களுக்குப் பரவி இப்போது நைஜீரியாவின் கிராமங்களுக்கும் பரவத்தொடங்கியது. ‘எட்டு மனிதர்கள் உள்ள கிராமத்திலும் ஒரு தேசபக்தன் இருப்பான்’ என்பதே கலவரக் காரர்களின் பிரதான கோஷமாக இருந்தது. கலவரக்காரர்கள் வெளிநாட்டு நிறுவனங்களையும் அலுவலகங்களையும் குறிவைத்துத்தாக்கினார்கள். எங்கள் அலுவலகத்தில் இருக்கும் வெளிநாட்டவர்களையும் கலவரக்காரர்கள் தாக்கக்கூடும் எனப் பிரஸிடண்ட் அன்ஸாரி அபிப்பிராயப்பட்டார். இரண்டு வெள்ளையர்களின் வீடுகளுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. திரு. முடுலிங்க தங்கியிருந்த வீடு எங்கள் அலுவலகத்திலிருந்து பத்துக் கிலோமீற்றர்கள் தொலைவிலிருந்தது. லாகோஸின் புறநகர்ப் பகுதியில் ஓபஸான்ஸோ வீதியில் அவரின் வீடு இருந்தது.

அந்த வீதியில் இருந்த பதினோராவது குறுக்குத் தெருவில் தான் நான் தங்கியிருந்த அறையும் இருந்தது. திரு. முடுலிங்க அலுவலகத்துக்கு வரும் போதும் போகும் போதும் அவருக்குத் துணையாக அவரோடு வந்து போகுமாறு பிரஸிடண்ட் அன்ஸாரி எனக்குக் கட்டளையிட்டார். என் பணி வரலாற்றிலேயே பிரஸிடண்ட் அன்ஸாரி போட்ட ஒரு உத்தரவை முதற்தடவையாக நான் முழு மகிழ்ச்சி யோடு ஏற்றுக் கொண்டேன். இந்தப்புதிய ஏற்பாட்டால் எனக்கு உடனடியாக இரண்டு நன்மைகள் கிட்டின. முதலாவதாக நான் திரு. முடுலிங்கவின் பரிவை விரைவிலேயே பெற்றுக் கொண்டேன். இரண்டாவதாக நான் அலுவலக நேரம் முடிந்த பின்பும் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கவில்லை. சரியாக மணி அய்ந்தானதும் திரு முடுலிங்க அலுவலகத் திலிருந்து புறப்படுவார். நானும் அவருடனேயே புறப்பட்டு விடுவேன்.

திரு. முடுலிங்க தனது ஜீப் வண்டியைத் தானே ஓட்டினார். நைஜீரியச் சாரதிகளின் மிதமிஞ்சிய வேகமும் அவர்களது வீதிச் சாகஸங்களும் தனக்கு ஒத்துவரவில்லை என்று அவர் சொல்லுவார். ஜீப் ஓடத் தொடங்கியதும் திரு. முடுலிங்க ஜீப்பினுள் ஒரு சோம்பலான சங்கீதத்தை ஒலிக்க விடுவார். அந்தச்சங்கீதம் இந்திய இசை வகையைச் சேர்ந்ததாம். அந்தச் சங்கீதம் ‘நன்நன்நன்நா’ என்று மிக மெதுவாகவே செல்லும். திரு. முடுலிங்க ஸ்ரேறிங்கில் தாளம் போட்டவாறு அந்தச் சங்கீதத்தைக் காட்டிலும் மெதுவாகவே ஜீப் வண்டியைச் செலுத்துவார்.

திரு. முடுலிங்கவின் வீட்டில் சமையல்காரனாக தோட்டக்காரனாக காவலாளியாக மூன்று நைஜீரியர்கள் வேலை செய்து வந்தார்கள். அந்த மாளிகை போன்ற வீட்டிலே திரு. முடுலிங்க தனியாகவே தங்கியிருந்தார். திரு. முடுலிங்கவின் வீட்டுக்குப் போனால் அங்கிருந்து நான் உடனே கிளம்பிவிடுவதில்லை எவ்வளவு நேரத்தை அங்கு கழிக்கலாமோ அவ்வளவு நேரத்தை நான் அங்கு கழித்தேன். திரு. முடுலிங்கவோடு பேசக்கிடைக்கும் சின்னதொரு தருணத்தைக் கூட நான் நழுவ விட்டேனில்லை. அவருடன் பேசிப்பேசியே என் ஆங்கிலப் பேச்சுத் திறனை வளர்த்துவிடுவது என்ற முடிவோடு நான் செயற்பட்டேன். திரு. முடுலிங்க எனது ஆங்கில உச்சரிப்பில் சலிக்காமல் புன்னகையோடும் அக்கறையோடும் திருத்தங்களைச் சொல்வார். எனக்கு ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்வதில் இருந்த வெறியையும் வேகத்தையும் பார்த்து உண்மையிலேயே திரு. முடுலிங்க மிரண்டு போனார். அவர் புன்னகையுடன் ‘அதிக அவசரம் கிழங்குக்குக் கேடு’ என்றார்.

இந்தக்கிழங்குப் பழமொழி கென்யா நாட்டில் மிகப்பிரபலமான பழமொழி. திரு. முடுலிங்க கென்யா, சூடான், ஸியாரோலியோன், சோமாலியா, எத்தியோப்பியா, தான்சானியா, ஸாயிர் என்று ஆபிரிக்காவை ஒரு சுற்றுச் சுற்றி விட்டுத்தான் நைஜீரியாவுக்கு வந்திருந்தார். அவருக்கு ஆபிரிக்காவின் ஒவ்வொரு கலாசாரத்தைப் பற்றியும் தெரிந்திருந்தது. அவருக்கு ஆபிரிக்காவின் ஒவ்வொரு குடிவகை, உணவு வகை பற்றியும் தெரிந்திருந்தது. அவருக்கு ஆபிரிக்காவின் ஒவ்வொரு இனக்குழுவைப் பற்றியும் தெரிந்திருந்தது. அவருக்கு ஒவ்வொரு ஆபிரிக்க பழங்குடிகளினதும் பாடல்களைப் பற்றித் தெரிந்தது. முக்கியமாக அவருக்கு ஒவ்வொரு ஆபிரிக்கர்களுடனும் விதம்விதமாகமான உச்சரிப்புக்களில் எப்படி ஆங்கிலம் பேசுவது என்பதைப் பற்றித் தெரிந்திருந்தது.

எந்த ஊசியும் இருபுறமும் கூராயிராது என்பார்கள். ஆனால் திரு. முடுலிங்க எட்டுப் பக்கமும் கூர்மையாய் இருந்தார். அவர் நைஜீரியாவுக்கு வந்த சில நாட்களிலேயே நைஜீரியாவின் பல பழக்க வழக்கங்களைத்தெரிந்து கொண்டிருக்கிறார். ஒருநாள் அவர் தன் கையாலேயே நைஜீரியர்களின் சிற்றுண்டி வகையான ஹோஸையைத் தயாரித்தார். நான் என் பாட்டியின் கைகளில் கூட அவ்வளவு சுவையான ஒரு ஹோஸையைச் சாப்பிட்டிருக்கவில்லை. அவர் எங்கேயும் எப்போதும் தன் கண்களையும் காதுகளையும் திறந்து வைத்திருந்தார். திரு. முடுலிங்கவுடனான எனது தீவிரவாத ஆங்கிலப்பயிற்சியில் ஒரு இடைவெளி விழுந்தது. நான் எனது நிக்ஹாஹ்வுக்காக நைஜீரியாவின் வடக்கு எல்லையில் இருக்கும் எனது ஊருக்கு ஒரு மாத விடுமுறையில் சென்றேன்.

பெண் எடுத்தல் பக்கத்திலும் களவாடுதல் தூரத்திலும் இருக்க வேண்டும் என்பார்கள். ஆனால் என் தாயர் என் மனைவி ஆமினாவை தூரத்தில் இருந்துதான் தேர்ந்தெடுத்தார். ஆமீனா கடுனா மாவட்டத்தைச் சேர்ந்தவள். அந்தப் பகுதியில் மந்தை வளர்ப்புத்தான் பிரதான தொழில் ஆனாலும் ஆமினா எழுத வாசிக்கக்கற்றிருந்தாள். ஆமினாவுக்கு பதினேழு வயது. அவள் உயரமாக ஆனால் மிகவும் மெலிந்து நோஞ்சானாக இருந்தாள். அவள் எவ்வளவு தான் ஓடி ஓடி வீட்டு வேலைகளைச் செய்தாலும் எனது பாட்டி ஆமினாவைக் குற்றம் சொல்லிக்கொண்டேயிருந்தார். நான் பாட்டியை திட்டி அடக்க முயன்ற போதெல்லாம் அவர் ‘குருட்டுப்பூனை செத்த எலியைத் தான் பிடிக்கும்’ என்று என்னைக் கிண்டல் செய்தார். ஆமினாவிடம் ஒரு விரும்பத்தகாத பழக்கமும் இருந்தது. அவள் எதற்கெடுத்தாலும் அளவுக்கு அதிகமாக வெட்கப்பட்டாள். சின்ன சின்ன விசயங்களுக்கு எல்லாம் ஆமினா பயந்தாள். நான் அவளைத்தொடும் போது கூட அவளின் கண்கள் வெளிறிப்போய்க் கெஞ்சின. நான் அவளை அணைத்த போதெல்லாம் அவளின் தேகம் அச்சத்தால் நடுங்கியது. நான் அவளைப் பார்க்கும்போதெல்லாம் ஆமினா தன் முக் காட்டை நூறு தடவைகள் சரி செய்தாள். என்னோடு பேசக்கூட அவள் தயங்கினாள். அவளின் நாவு வார்த்தைகளைக் குழறியது. ஆனால் எனக்கு நம்பிக்கையிருந்தது. நான் ஆமினாவை லாகோஸீக்கு அழைத்துச் சென்றவுடனேயே அவளை நான் மெல்ல மெல்ல மாற்றுவேன். இந்தச் சின்ன மலைப் பூவின் இதழ்கள் காயப்படாமலேயே நான் அதை மலரவைப்பேன்.

நான் ஆமினாவுடன் லாகோஸீக்குத் திரும்பி வந்தபோது நகரம் இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்தது. கலவரக்காரர்களைப் பொலிஸாரும் இராணுவத்தினருமாக அடக்கியிருந்தனர். நான் லாகோஸீக்கு வந்து சேர்ந்த அடுத்த சனிக்கிழமையே திரு முடுலிங்க புதுமணத் தம்பதிகளான எங்களுக்குத் தன்வீட்டில் இரவு விருந்தொன்றை ஏற்பாடு செய்தார். அந்த விருந்துக்கு எங்கள் அலுவலகத்தில் பணிபுரிந்த அந்த இரண்டு வெள்ளையர்களும் கூட அழைக்கப்பட்டிருந்தனர்.

மூன்று வெளிநாட்டவர்களைக் கண்டது தான் தாமதம் ஆமினாவின் உடல் வெட வெடவென நடுங்கத் தொடங்கி விட்டது. எங்கள் எல்லோருடனும் மேசையில் அமர்ந்து உணவருந்தும் போது அவள் அளவுக்கு அதிகமான வெட்கத்தால் அலைக்கழிக்கப் படுவதை நான் கவனித்தேன். திரு. முடுலிங்க மிகுந்த கனிவோடு ஆமினாவை உபசரித்தார். அவர் ஆமினாவை இயல்பாக இருக்கச் செய்வதற்கு தனக்குத் தெரிந்த வித்தைகள் அனைத்தையும் கையாண்டு பார்த்தார். ஆமினாவின் இயல்பே வெட்கப்படுவதும் பயப்படுவதும் தான் என்பதை திரு. முடுலிங்க அறிய மாட்டார். (f)புலானி இனப்பெண்கள் மற்றைய நைஜீரியப் பெண்களைப் போல கறுப்பிகள் இல்லை. ஆமீனா ஓரளவு நிறமானவள். உரித்த யாம் கிழங்கு போல இருப்பாள். அவள் அணிந்திருந்த விருந்துக்கான ஆடையும் (f)புலானி இனப்பெண்களுக்கே உரித்தானவை. அவளின் இரு கன்னங்களிலும் இனக்குழு அடையாளங்கள் கீறப்பட்டிருந்தன. இவை குறித்தெல்லாம் திரு. முடுலிங்கவுக்கு ஆயிரம் கேள்விகளும் விசாரணைகளும் இருந்தன. அவர் இவை குறித்து ஆமினாவிடம் கேட்ட கேள்விகளை ஆமினா மிகுந்த அச்சத்துடன் எதிர்கொண்டாள்.

அவள் ஒரு கடுமையான பள்ளி ஆசிரியருக்கு முன் நிற்கும் படுமொக்கான பள்ளிச் சிறுமி போல திணறித் திணறி திரு. முடுலிங்கவுக்கு பதில் சொன்னாள். ஆமினா சொன்ன எல்லாப் பதில்களுமே திரு. முடுலிங்கவுக்குப் பெருத்த ஆச்சரியங்களை ஏற்படுத்தின. மலையடிவாரத்தில் சிறு வயதில் தான் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட சம்பவங்களை ஆமினா சொன்ன போது திரு. முடுலிங்க பரவச நிலையின் உச்சியில் இருந்தார். சின்னச் சின்ன விசயங்களுக்கெல்லாம் பயப்படுவது ஆமினாவின் சிறப்பென்றால் சின்னச் சின்ன விசயங்களுக் கெல்லாம் பரவசப்படுவது திரு. முடுலிங்கவின் சிறப்பாய் இருந்தது. ஆமினா ஹெளஸ மொழியில் பேசியதை நான் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து திரு. முடுலிங்கவுக்கும் அந்த வெள்ளையர்க்கும் கூறினேன். இப்போது கூட இந்த வெள்ளையர்களுக்கு என் ஆங்கிலம் புரியவில்லை. எனவே நான் ஆங்கிலத்தில் திரு. முடுலிங்கவுக்கு கூறியதை அவர் மறுபடியும் இன்னொரு ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்து அந்த வெள்ளையர்களுக்குக் கூறினார்.

விருந்து முடிந்து புறப்படும்போது ஆமினா மட்டுமல்லாமல் நானும் ‘திடுக்கிடும்’ படியான காரியம் ஒன்றை அந்த ஐரிஸ் வெள்ளைக்காரர் செய்ய முனைந்தார். விடைபெறும் போது கை குலுக்குவதற்காக அந்த வெள்ளைக்காரர் ஆமினாவை நோக்கித் தனது கையை நீட்டினார். அப்போது ஆமினா ஒரு மான் போல இரண்டடிகள் பின்னே துள்ளிப் பாய்ந்தாள். நத்தை தன் தலையை ஓட்டுக்குள் இழுத்துக் கொள்வதைப் போல அவள் தனது தலை, கைகள், கால்கள் முதலிய உறுப்புக்களை தன் உடலுக்குள் அனிச்சையாக இழுத்துக் கொண்டாள். ஐரிஸ்காரரும் உடனடியாகவே சமாளித்துக் கொண்டு ஒரு தந்திரம் செய்தார். தன் நீட்டிய கையின் விரல்களை படபட வென அடித்து விடைபெறுவது போல சைகை செய்தார். அவர் தனது கையை நீட்டிய போது தான் ஓரிரு துளி சிறுநீரை ஆடையிலேயே கழித்து விட்டதாக ஆமினா பின்பு என்னிடம் தயங்கித் தயங்கிச்சொன்னாள். திரு. முடுலிங்க எங்களை தனது ஜீப் வண்டியிலேயே எங்களது வீட்டு வாசல் வரை கொண்டு வந்து விட்டார். அவருக்கு நானும் ஆமினாவும் பல தடவைகள் நன்றி தெரிவித்தோம். அப்போது திரு. முடுலிங்க எங்களுக்கு திருமணப் பரிசொன்றை அளித்தார். அந்தப் பரிசு அடுத்த நாள் மாலை நேரக் காட்சிக்கான இரண்டு பல்கனி நுழைவுச் சீட்டுக்களாக இருந்தது. பின்பு திரு. முடுலிங்க அந்த நுழைவுச் சீட்டுக்களைக் குறித்து எனக்கு ஒரு சிறியதொரு விளக்கம் அளித்தார்.

அப்போது லாகோஸில் ஓடிக்கொண்டிருந்த ஒரு அமெரிக்கத் திரைப்படத்துக்கான நுழைவுச் சீட்டுக்கள் அவை. அந்தத்திரைப்படத்தின் கதை போத்துக்கேயர்கள் ஆபிரிக்காவுக்குள் நுழைந்து ஆபிரிக்கர்களை அடிமைகளாகப் பிடித்துச் சென்றதைக் குறித்துப் பேசுகிறதாம். எனக்குத் திரைப்படம் பார்ப்பதில் எப்போதுமே ஆர்வம் இருந்ததில்லை. மாணவனாய் இருந்த காலத்தில் ஒன்றிரண்டு ஹிந்தி சினிமாக்கள் பார்த்ததோடு சரி. அதன் பின்பு நான் சினிமாவே பார்த்ததில்லை. திரு. முடுலிங்கவின் கூர்மையான கண்கள் என் முகத்தின் உற்சாகமற்ற தன்மையை உடனடியாகவே கண்டுபிடித்து விட்டன. திரு. முடுலிங்க புன்னகையுடன் இப்படிச் சொன்னார். “மம்முடு நீ அடிக்கடி ஆங்கிலப் படங்களைப் பார்ப்பது உன் ஆங்கில உச்சரிப்பை நேர் செய்து கொள்ள உதவும்.” அப்போது என் மூளைக்குள் பளீரென்று ஒரு வெளிச்சம் அடித்தது. திரு. முடுலிங்க சொல்வது முற்றிலும் உண்மை. ஹிந்திப்படம் பார்த்துப் பார்த்தே ஹிந்தி மொழியைச் சரளமாகப் பேசும் பல நைஜீரியர்களை நானறிவேன். அவர்கள் படேல்களின் கடைகளில் ஹிந்தியிலேயே பேரம் பேசிப்பொருட்களை வாங்குவதையும் நான் கண்டிருக்கிறேன். நான் ஊருக்குப் போய் வந்த இந்த ஒரு மாத காலத்துள் நானே எனது ஆங்கில மொழி விருத்தியைப்பற்றிக் கொஞ்சம் அசட்டையாக இருந்த போதும் திரு. முடுலிங்க அதை ஒருபோதும் மறந்தாரில்லை. திரு. முடுலிங்க புறப்படும் போது என்னைப் பார்த்துக் கண் சிமிட்டி “மம்முடு திருமணமான புதுச் சோடிகள் படம் பார்க்கப் போவது சிலோன் நாட்டுச் சம்பிரதாயம் என்று உன் மனைவியிடம் கூறு” என்றார்.

ஞாயிற்றுக்கிழமை மாலையில் நானும் ஆமினாவும் திரைப்படத்துக்குக் கிளம்பினோம். நாங்கள் திரைப்படத்துக்கு போகப்போகிறோம் என்ற செய்தியை அறிந்தவுடன் ஆமினா அதற்கும் பயப்பட்டாள். அவள் இதுவரை திரையரங்கில் படம் பார்த்ததே இல்லையாம். அவள் லாகோஸின் பெரும் சன நெருக்கடி மிகுந்த வீதிகளை ஓரக் கண்களால் மிரளமிரளப் பார்த்தவாறு குனிந்த தலை நிமிராமல் என் பின்னே நடந்து வந்தாள். அய்ந்து நிமிடங்கள் நடப்பதற்கு இடையில் அவள் அய்ம்பது தடவைகள் தன் முக்காட்டைச் சரி செய்தாள்.

‘ரெக்ஸ்’ திரையரங்கம் நகரத்தின் மிக முக்கிய பகுதியான விக்ரோறியாச் சதுக்கத்தில் இருந்தது. இந்தப் பகுதியை ‘வைற் லாகோஸ்’ என்று சொல்வார்கள். வெள்ளையர்களின் குடியிருப் புப்பகுதிகள் இங்கேயே அமைந்திருந்தன. அங்கிருந்த சிறப்பு அங்காடிகளும் கடைகளும் வெள்ளையர்களுக்கு என்றே சிறப்பாக அமைக்கப்பட்டவை. நைஜீரியா சுதந்திரமடைந்த பின்பு இங்கிலாந்துக்குப் போகாமல் இங்கேயே தங்கிவிட்ட வெள்ளையர்களின் மையமாக விக்ரோறியாச் சதுக்கம் இருந்தது. நான் ஆமினாவிடம் ‘லண்டன் மாநகரம் கிட்டத்தட்ட இப்படித்தான் இருக்கும்’ என்றேன். ஆமினா குனிந்த தலையை நிமிர்ந்தாமலேயே ‘ம்’ கொட்டினாள்.

திரையரங்கம் முற்று முழுதாக ஆங்கிலேயேப் பாணியிலேயே அமைந்திருந்தது. திரையரங்கத்தில் அனைத்து அறிவித்தல்களும் ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டிருந்தன. காட்சி அரங்கத்துக்குள் நுழையும் கதவுக்கு அருகாக சுத்தமான வெள்ளை ஆடையும் தலையில் வெள்ளைத்தொப்பியும் அணிந்திருந்த ஒரு இளம் சீனாக்காரி ஒரு பெரிய இயந்திரத்தில் சோள மணிகளைப் பொரித்துக் கொண்டிருந்தாள். நாங்கள் கிராமங்களில் சோளப்பொத்தியை நெருப்பில் சுட்டுத் தான் சாப்பிடுவோம். சைனாக்காரியின் பொரிக்கும் இயந்திரத்தின் அடிப்பகுதியில் வெள்ளை முத்துக்கள் போல சோளப் பொரிகள் சொரிந்து கொண்டிருந்ததை ஆமினா ஆர்வத்தோடு பார்த்தாள். நான் சைனாக்காரியிடம் ஒரு சரை சோளப்பொரியும் ஒரு கொக்கோ கோலா போத்தலும் தருமாறு ஆங்கிலத்தில் கேட்டு பத்து நைறா தாளென்றை நீட்டினேன். நான் பேசிய அந்த ஒற்றை வரி ஆங்கிலத்தைக்கூட அந்தச் சீனாக்காரி சிரமப்பட்டே புரிந்து கொண்டாள். அவள் பதிலுக்குப் பேசிய ஆங்கிலம் எனக்கு சரிவரப்புரியவில்லை. சீனாக்காரி சிரித்த படியே என்னிடம் ‘நீ என்ன மொழி பேசுவாய் ஹெளஸவா? இபோவா? யரூபாவா?’ என்று கேட்டாள். அந்தச்சிறிய சீனப் பெண் நான்கைந்து மொழிகள் பேசக் கூடியவளாய் இருப்பாளாக்கும். முதல் பட்டத்திற்கு படிப்பது தான் கடினம் அடுத்த பட்டம் தானாகவே வரும் என்பார்கள். சோளப்பொரியையும் கொக்கோ கோலாப்போத்தலையும் சீனாக்காரியிடம்’ இருந்து வாங்கி நான் ஆமினாவிடம் கொடுக்கும் போது காட்சி அரங்கினுள்ளேயிருந்து சத்தம் வருவதைக் கேட்டு பதற்ற முற்றேன். எனது பதற்றத்தைக் கவனித்த சீனாக்காரி உள்ளே விளம்பரப்படங்கள் தான் காண்பிக்கப்படுகின்றன என்றும் பிரதான படம் தொடங்க இன்னும் பத்து நிமிடங்கள் இருக்கின்றன என்றும் ஹெளஸ மொழியில் சொன்னாள்.

நானும் ஆமினாவும் காட்சியரங்கினுள் நுழைந்த போது உள்ளே விளக்குகள் முற்றாக அணைக்கப்படிருக்கவில்லை. அரங்கு அரையிருளில் இருந்தது. நானும் ஆமினாவும் பல்கனி வகுப்பில் நடுக்கொள்ள அமர்ந்தோம். திரையில் விளம்பரப் படங்கள் ஓடிக் கொண்டிருந்தாலும் அவற்றை யாரும் கவனிப் பதாய்த் தெரியவில்லை. அது ஒரு மிகச்சிறிய அரங்கு. அரங்கின் பல்கனியில் ஏற்கனவே முப்பது பேர்கள் வரை ஆண்களும் பெண்களுமாகப் பார்வையாளர்கள் இருந்தார்கள். பார்வையாளர்களில் பாதிப்பேர்கள் வெள்ளைக்காரர்கள். அவர்கள் சோடி சோடியாக அமர்ந்திருந்தார்கள். நான்கைந்து இந்தியர்கள், மிகுதி பேர் கறுப்பர்கள் அந்தக் கறுப்பர்களின் உடையலங்காரங்களே அவர்களை மேசைக்கார கறுப்பர்கள் என்று காட்டின. சிலர் தங்களுக்குள் கிசு கிசுப்பான குரல்களில் பேசிக்கொண்டிருந்தார்கள். சிலர் அந்த அரை வெளிச்சத்தில் பத்திரிகை படித்துக் கொண்டிருந்தார்கள். நான் விளம்பரப் படங்களைக் கவனிக்கலானேன் எல்லா விளம்பரங்களும் ஆங்கில மொழியிலேயே தயாரிக்கப்பட்டிருந்தன.

ஒன்று: திரையில் ஒரு வெள்ளைக்காரி நிர்வாணமாக அருவியில் குளிக்கிறாள். அப்போது ஒருவன் அங்கே வருகிறான். இருவரும் முத்தமிடுகிறார்கள். நான் இது சவர்க்காரத்துக்கான விளம்பரம் என்றுதான் நினைத்திருந்தேன். அவர்கள் இருவரும் ஒரு காரில் ஏறிப் போகும் போது தான் அது ‘ரெனோல்ட்’காருக்கான விளம்பரம் என்று தெரிந்து கொண்டேன். நான் ஆமினாவை ஓரக்கண்ணால் கவனித்தேன். சோளப் பொரியும் கொக்கோகோலப் போத்தலும் அவள் மடியில் கிடந்தன. அவள் மார்புக்கு குறுக்காகத் தனது கைகளைக் கட்டியவாறே குறுகிப்போய் உட்கார்ந்திருந்தாள்.

இரண்டு: திரையில் இப்போது ஒரு கறுப்பு இளம்பெண் நிர்வாணமாக கண்களை மூடிக் கிடக்கிறாள். ஒரு வெள்ளையன் அவளின் கரிய தேகத்தில் கால்களில் இருந்து முத்தமிட ஆரம்பிக்கிறான். அவன் படிப்படியா அவளின் முகம் வரை முத்தமிட்டுக்கொண்டே முன்னேறுவதை அங்கங்கே வெட்டி வெட்டிக் காட்டினார்கள். நான் இது நிச்சயமாகவே வாசச் சவர்க்காரத்துக் கான விளம்பரமாகத் தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். விளம்பரத்தின் முடிவில்தான் அது கறுப்புக் கோப்பிக்கான விளம்பரம் என்று எழுத்துக்கள் மூலம் தெரியவந்தது. இவ்வளவுக்கும் விளம்பரத்தில் ஒரு துளி கோப்பித்தூளைக்கூடக் கண்ணிற் காட்டினார்களில்லை.

மூன்று: இப்போது திரையில் நீண்ட தலைமுடி வைத்திருந்த ஒரு வெள்ளைக்காரன் குதிரையில் வந்து குதித்தான். வழியால் வந்த ஒரு இளம்பெண் ஓடிப்போய் அவனின் மார்பிலும் கழுத்திலும் முத்தமிட்டாள். பின் அவனின் கன்னத்தில் முத்தமிடும் போது அங்கே ஒரு சிறுவன் வருகிறான். உடனே இளம்பெண் ஓடிப்போய் அந்தச் சிறுவனை முத்தமிடுகிறாள். குதிரையில் வந்தவன் குதிரையின் அடிவயிற்றைத் தடவடிக் கொண்டே அந்தச்சிறுவனை முறைக்கிறான். நான் இது குதிரைக் கான விளம்பரமா? அல்லது அந்தச் சிறுவனுக்கான விளம்பரமா? என்று என் மூளையைக் கசக்கிக் கொண்டிருந்த போது “தவறாமல் எப்போதும் கிலெட்டின் பிளேடுகளையே உபயோகியுங்கள்” என்று திரையில் எழுத்துக்கள் மின்னின. எழுத்துக்களின் பின்னணியில் அந்தப் பெண்ணின் இராட்சத உதடுகள் அசைந்தன. அப்போது திரையில் ‘முத்தங்களை இழந்து விடாதீர்கள்’ என்று எழுத்துக்கள் வந்தன.

நான்கு: திரையில் கடும் மழையின் நடுவே ஒருவன் சட்டையில்லாமல் வெற்றுடம்புடன் நிற்கிறான். அவன் உடல் குளிரில் வெடவெடக்கிறது. ஒரு இளம் பெண் அவனை நெருங்கி முத்தமிடத் தொடங்குகிறாள். அவள் முத்தமிட முத்தமிட அவன் மெல்ல மெல்ல ஒரு நெருப்புச்சிலையாக மாறிக்கொண்டிருக்கிறான். அவள் விடாமல் நெருப்புச் சொரூபத்தையும் முத்தமிட நெருப்புச்சொரூபம் கடும் மழையோடு கலந்து உருகித் தீக்குழம்பாய் ஓட ஆரம்பிக்கிறது. அது ‘ஜக் டானியல்’ விஸ்க்கிக்கான விளம்பரம். நான் ஆமினாவைக் கவனித்தேன். அவள் தலையைக் குனிந்து கொண்டிருந்தாள். நான் அவளின் விரல்களைப் பற்றினேன். அவளின் விரல்கள் தீக்கங்குகளாய் சுட்டுக் கொண்டிருந்தன.

அய்ந்து: ஒருத்தி தன் உதடுகளின் கீழே கையை விரித்து ஊதிப் பறக்கும் முத்தம் கொடுக்க அவளின் உதடுகள் அவளின் முகத்திலிருந்து கழன்று தோடம்பழச் சுளைகளாக மாறிக் காற்றில் பறந்து நைஜீரியாவில் இருந்து கண்டம் விட்டுக் கண்டம் பாய்ந்து இரட்டைக் கோபுரங்களின் அருகே இறங்கி அங்கே கோட் சூட் போட்டு அலுவலகத்தில் இருக்கும் ஒரு ஆடவனின் உதடுகளில் போய் ஒட்டிக்கொள்கின்றன. உடனே அவனது உதடுகள் இரத்தச் சிவப்பு நிறமாகின்றன. நான் அது லிப்ஸ்டிக்குக்கான விளம்பரம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அது நோக்கியா கைத் தொலைபேசிக்கான விளம்பரம். விளம்பரம் முடியும் போது அந்த ஆடவன் செல்லமாகத் தன் நாவால் திரை முழுவதையும் வருடினான். நான் அப்போது ஆமினாவை முத்தமிடத்தொடங்கினேன். ஆமீனா பதறிப்போனாள். நான் விடாமல் ஆமினாவின் முகத்தைக்கைகளால் ஆடாமல் அசையாமல் பிடித்து வைத்து அவளது கண்கள் மூக்கு நெற்றி கன்னங்கள் உதடுகள் என்று என் உதடுகளால் உறிஞ்சினேன்.

திரையங்குக்குள் இருந்தவர்கள் ஒருவர் இருவராகச் சாடை மாடையாக ஓரக்கண்களால் எங்களை கவனிக்கத் தொடங்கினார்கள். நான் நிறுத்தாமல் ஆவேசத்தோடு ஆமினாவைப் பெரும் சத்தத்துடன் முத்தமிட்டேன். என் ஒவ்வொரு முத்தமும் ஒரு ஊசிப்பட்டாசு போல பெரும் சத்தத்துடன் வெடித்தது. இப்போது பல்கனி வகுப்பில் இருந்த எல்லோருமே எங்களைக் கவனிக்கத் தொடங்கினார்கள். நான் உன்மத்தம் தலைக்கேறியவன் போல ஆமினாவை முத்தமிட்டுக்கொண்டேயிருந்தேன். ஆமினா சேவலிடம் அகப்பட்ட பெட்டைக்கோழி மாதிரித்தனது கைகளைப்படபடவென அடித்துக் கொண்டாள். நான் ஆமினாவை விடாமல் முத்தமிட்டுக் கொண்டே திரையரங்கைக் கவனித்தேன். அங்கிருந்த முப்பது சோடிக்கண்களும் அரையிருட்டில் எங்களையே கவனித்துக் கொண்டிருந்தன. அப்போது எனது இடதுகையால் ஆமினாவை அணைத்து முத்தமிட்டவாறே வலது கையால் ஆமினாவின் மடியிலிருந்த கொக்கோ கோலாப் போத்தலை எடுத்து எனதும் ஆமினாவினதும் தலைகளுக்கு மேலாக கொக்கோ கோலாவை உயர்த்திப் பிடித்தவாறே நான் அடித்தொண்டையால் “Enjoy Coca Cola” என்று கூவினேன்.

மறுநாள் காலையில் அலுவலகத்தில் என்னைப் பார்த்தபோது திரு. முடுலிங்க முதற்கேள்வியாக ‘நேற்று மாலை திரைப்படம் எப்படியிருந்தது?’ என்று கேட்டார் நான் திரைப்படத்தைப் பற்றிப் பேசாமல் திரைப்படம் ஆரம்பிப்பதற்கு முதல் நடந்த விளம்பரக்கூத்துக்களைப் பற்றியும் நான் ஆமினாவை முத்தமிட்டதையும் கொக்கோ கோலாப் போத்தலைத் தூக்கிக்காட்டியதையும் ஒன்று விடாமல் திரு. முடுலிங்கவுக்குச் சொன்னேன். அந்தக் கதையைக் கேட்டதும் திரு. முடுங்லிங்க விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கி விட்டார். விடாமல் வெடித்துச் சிரித்ததில் அவர் கண்களில் கண்ணீரே வந்து விட்டது.

பிற்பகல் இரண்டு மணியளவில் திரு. முடுலிங்க என்னைத் தனது அறைக்கு அழைத்தார். என்னை நாற்காலியில் உட்காரச் சொன்னார். பின் திரு. முடுலிங்க நானும் ஆமினாவும் திரைப்படம் பார்க்கப் போனதைப் பற்றித் தான் ஒரு சிறுகதை எழுதியிருப்பதாக என்னிடம் சொன்னார். நான் மிகுந்த ஆச்சரியத்துடன் ‘மாஸ்ர நீங்கள் கதைகளும் எழுதுவீர்களா?’ என்று திரு. முடுலிங்கவிடம் கேட்டேன். அவர் தனது கணிப்பொறியில் தாளம் போட்டவாறே புன்னகைத்தார். அவர் இதுவரை அறுபத்தொரு சிறுகதைகளை எழுதியிருக்கிறாராம்.

பிரஸிடண்ட் அன்ஸாரியைப் பற்றி அவர் கதை எழுதியிருக்கிறாராம். அந்த ஐரிஸ் வெள்ளையரைப் பற்றியும் ஒரு கதை எழுதியிருக்கிறாராம். அவர் வீட்டுத் தோட்டக்காரன் கமறா குறித்து ஒரு கதை எழுதியிருக்கிறாராம். எங்கள் அலுவலகத்துக்கு அவ்வப்போது தோடம் பழம் விற்க வந்து போகும் கூடைக்காரி மைமூன் பற்றிக் கூட திரு. முடுலிங்க ஒரு கதை எழுதியிருக்கிறாராம். இப்போது என்னைப் பற்றியும் அவர் ஒரு கதை எழுதியிருக்கிறார். அவர் அந்தக் கதையை சிலோன் மொழியில் எழுதியிருந்தார். என்னை அவர் தன் எதிரே உட்கார வைத்து என்னைப் பற்றி எழுதிய கதையை எனக்கு வரிக்கு வரி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்லி முடித்தார்.

நானும் ஆமினாவும் அவர் வீட்டுக்கு விருந்துக்குப் போனது, அவர் எங்களுக்கு சினிமா நுழைவுச் சீட்டுக்களைப் பரிசளித்தது, ஆமினா லாகோஸ் வீதிகளில் மிரண்டது, சோளப்பொரி விற்ற சீனாக்காரியின் ஆங்கிலம் புரியாமல் நான் முழித்தது, திரையில் காண்பிக்கப்பட்ட விளம்பரப் படங்கள், ரெனோல்ட் கார், கறுப்புக் கோப்பித் தூள், கிலெட்டின் ப்ளேட், ஜக் டானியல் விஸ்கி, நோக்கியா கைத் தொலைபேசி என நான் சொன்னதைச் சொன்னபடியே எழுதியிருந்த திரு. முடுலிங்க கதையின் முடிவில் மாத்திரம்ஒரு நுட்பமான மாற்றத்தைச் செய்திருந்தார். திரு. முடுலிங்கவின் கதைப்படி நான் ஆமினாவை முத்தமிடவில்லை. ஆனால் திரு. முடுலிங்க கதைக்கு ‘முத்தம்’ என்று தலைப்பிட்டிருந்தார். அங்கேதான் அவரின் படைப்புச் சூட்சுமம் ஒளிந்திருக்கிறது. திரு. முடுலிங்க என்னையும் ஆமினாவையும் குறித்து எழுதிய கதையின் முடிவு பின்வருமாறு:

“மம்முடு திரையில் ஓடும் விளம்பரங்களையே பார்த்தவாறு இருந்தான். அந்த விளம்பரப் படங்களில் வசனங்களே இல்லாமல் இருந்தது அவனுக்குச் சற்று ஏமாற்றமாய் இருந்தது. அவன் சற்று சலிப்போடு ஆமினாவைப் பார்த்த போது அவளின் கண்கள் திரையைப் பார்ப்பதும் தரையைப் பார்ப்பதுமாய் சாகசங்கள் செய்தன. மம்முடு ஆமினாவின் கையைத் தொட்டபோது அவளின் கை விரல்கள் தீக் கங்குகளாய்த் தகித்தன. விளம்பரப் படங்கள் முடிந்த போது அரங்கு முழுவதும் இருளானது. அந்த இருளுக்குள் ஆமினா ஒரு காரியம் செய்தாள். அவளது சவூதிப் பூசணிக்காய் போன்ற பிருஷ்டங்களைச் சற்றேஅசைத்து வைத்துத் தலையை சரியாகத் தொண்ணூறு பாகையில் சடாரென வெட்டித் திருப்பி கனிந்த நாகதாளிப் பழங்களைச் சரிபாதியாகப் பிளந்து வைத்திருந்தது போல இருந்த தனது அதரங்களால் காய்ந்த கடலட்டை போலக் கிடந்த மம்முடுவின் தடித்த கீழ் உதட்டை மெதுவாகக் கௌவினாள். அந்த முத்தம் கல்யாணம் ஆன இந்த ஒரு மாதமாய் மம்முடு ஏங்கிக் கிடந்த முத்தம். அவளாக வலிய வந்து கொடுக்கும் முதல் முத்தம். ஆனால் மம்முடு இப்போது அவளோடு சரசமாடும் நிலையில் இல்லை.

அவன் திரையில் ஓடத் தொடங்கியிருந்த படத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனின் காதுகள் வேட்டை நாயின் காதுகளைப் போல கவனமாக விறைத்து நின்றன. திரையில் வெள்ளையர்களின் கப்பல் ஆபிரிக்க கரையை நோக்கி வருகிறது. வெள்ளையர்கள் தங்களுக்குள் உரையாடுகிறார்கள். அவர்களின் உரையாடலில் ஒரு சொல் கூட மம்முடுவுக்குப் புரியவில்லை. இப்போது ஆமினா தனது ஈரமான உதடுகளால் மம்முடுவின் கன்னத்தை வருடிக் கொண்டிருந்தாள். மம்முடுவோ திரையில் பேசப்படும் வசனங்களையே உற்றுக் கேட்டுக்கொண்டிருந்தான். மார்க்கோனி முதன் முதலாகக் கண்டுபிடித்த வானொலி போல மம்முடுவால் ஒரு நேரத்தில் ஒரு அலைவரிசையில் மட்டும் தான் இயக்க முடியும். இப்போது ஆமினா மம்முடுவின் கை விரல்களை நோகாமல் முத்தமிட்டிக்கொண்டிருந்தாள். படம் தொடங்கி அப்போது நான்கு நிமிடங்கள் ஆகிவிட்டன. ஆகக் குறைந்தது நூறு சொற்களாவது திரையில் பேசப்பட்டிருக்கும். மம்முடுவால் ஒரு சொல்லையாவது புரிந்துகொள்ள முடியவில்லை. மம்முடு சோர்வடைந்து விட்டான். தன்னைப் போன்று ஆப்பிரிக்க கிராமப்புறத்திலிருந்து வந்தவனுக்கு வெள்ளையர்கள் பேசும் ஆங்கிலம் ஒரு போதும் விளங்கப் போவதில்லை என்று அவன் தன்னைத் தானே சபித்துக்கொண்டான். பின் மெதுவாக ‘ஆதாமின் காலத்திலிருந்தே கழுதை சாம்பல் நிறமாய்த் தான் இருக்கிறது. எனத் தன் வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டான். சரியாகப் படம் தொடங்கிய அய்ந்தாவது நிமிடத்தில் மம்முடு தன் இருக்கையில் இருந்து எழுந்து திரையரங்கை விட்டு வெளியே வந்தான். அந்த நிமிடத்தில் தான் மம்முடு ஒரு மகா தவறைச் செய்தான். அந்த அமெரிக்கத் திரைப்படத்தில் முதல் அய்ந்து நிமிடங்கள் வரை கதாபாத்திரங்கள் போர்த்துகேயே மொழியில் மட்டும் தான் உரையாடுவார்கள்.

”என் கதைக்கு திரு. முடுலிங்க எழுதிய முடிவுதான் சரியாக இருக்கும் என்று எனக்குப்பட்டது. ஏனெனில் திரு. முடுலிங்க எனது கதையை இப்படி ஆரம்பித்திருந்தார். “மம்முடு பேசும் ஆங்கிலம் கொக்கோ வில் கல்லொழுங்கையால் மாட்டுவண்டி ஓடுவது போலிருக்கும்.”

ஷோபா சக்தி

நன்றி அநிச்ச