Wednesday, May 31, 2006

தேனீத் தோழர்களுக்கு - ஷோபாசக்தி

தேனீ இணையத்தளத்தில் எனக்கு மடல் எழுதிய தோழர் மரியசீலனுக்கும் மற்றும் 'தேனீ"த் தோழர்களுக்கும்... வணக்கங்கள்!

னது "அல்லைப்பிட்டியின் கதை" கட்டுரைக்கு எதிர்வினையாகவே மரியசீலனின் மடல் எழுதப்பட்டிந்தது. அவர் அம்மடலை சத்தியக்கடதாசி வலைப்பதிவில் பின்னூட்டமாகவும் போட்டிருந்தார். அல்லைப்பிட்டியின் கதையில் நான் குறிப்பிட்டிருந்த பிரதான புள்ளிகளைக் கீழே சுருக்கமாகத் தொகுத்துக்கொள்ளலாம்:

*1990 அல்லைப்பிட்டிப் படுகொலைகளை இராணுவத்தினருடன் EPDP- PLOTE உறுப்பினர்களும் சேர்ந்தே செய்திருந்தார்கள்.

*2006 மே அல்லைப்பிட்டிப் படுகொலைகளை கடற்படையினருடன் EPDPயினரும் சேர்ந்தே செய்ததாக சர்வதேச மன்னிப்புச் சபை கூறுகிறது. அல்லைப்பிட்டிப் பொதுமக்களும் இதை உறுதிப்படுத்துகிறார்கள்.

* மேற்கு நாடுகள் தமது சொந்த ஏகாதிபத்திய நலன்ளைக் கருதியே ஒரு நாட்டின் மேல், ஒரு இயக்கத்தின் மேல் தடைவிதிக்கிறார்கள் அல்லது ஆதரிக்கிறார்கள்.

*விடுதலைப் புலிகளை விடச் சிறிலங்கா அரசு இயந்திரம் பன்மடங்கு பயங்கரமானது.

*புலிகள் மக்கள் திரளைப் புரட்சிகர அரசியல் வழிகளில் நெறிப்படுத்தாமல் வலதுசாரிக் குறுந்தேசியவாத வேலைத்திட்டத்தையே தமது அரசியலாகக்கொண்டிருந்தார்கள். தேனீ இணையத்தளக் கட்டுரைகளும் TBC வானொலியின் அரசியல் ஆய்வாளர்களும் கூறுவது போலப் புலிகளின் தார்மீக வீழ்ச்சி புலிகளின் தனிமனிதப் பலவீனங்களிலிருந்து தொடங்கவில்லை. மாறாகப் புலிகளின் பிற்போக்குவாத வேலைத்திட்டத்திலிருந்தே நேரிடுகிறது.

*TBC அரசியல் ஆய்வாளர்களும் - குறிப்பாக ஜெயதேவன், விவேகானந்தன்- ஏகாதிபத்திய ஆதரவுகொண்ட, முதலாளிய சனநாயகத்தில் நம்பிக்கைகொண்ட பிற்போக்காளர்களே.

* ஒடுக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்கள் அரசு, புலிகள், ஜெயதேவன் போன்ற பிற்போக்கு ஏகாதிபத்திய அடிபணிவுச் சக்திகளை முற்றாக நிராகரித்துவிட்டுத் தமது அரசியல் நலன்களையும் அரசியற் போராட்டங்ளையும் தமது சொந்தக் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்தப் புள்ளிகளில் ஒரு புள்ளியையாவது நிராகரித்தோ, எதிர்த்தோ ஒரு வரியைத் தன்னும் மரியசீலன் தனது கட்டுரையில் எழுதினாரில்லை. அவர் என் கட்டுரையைப் பற்றிப் பேசவேயில்லை. என்னைக் கலாய்ப்பதற்கும் எனக்குப் புலி முத்திரை குத்தவும் எனது கடந்த பத்தாண்டு காலத் தொடர்சியான எழுத்துக்களிலிருந்து ஒரு சொல்லைத்தன்னும் மரியசீலனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதைச் செய்வதற்காக அவர் இருபதாண்டுகளுக்கு முந்திய எனது புலிகள் இயக்க காலத்தைத் தேடிச் சென்றிருக்கிறார்.


நான் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த செய்தி ஒன்றும் இரகசியமானது அல்ல. இதை நானே பல பத்திரிகை நேர்காணல்களிலும் கூட்டங்களிலும் சொல்லியிருக்கிறேன். நான் அமைப்பில் சேர்ந்த காலம், வெளியே வந்த காலம், இலங்கையை விட்டு வெளியேறிய காலம் எல்லாவற்றையும் நான் பகிரங்கமாகச் சொல்லியிருக்கிறேன். நான் மாத்யமம் இதழுக்கு வழங்கிய நேர்காணலைத் தோழர்கள் சத்தியக் கடதாசி வலைப்பதிவிலேயே பார்வையிடலாம். நான் 1986 நடுப்பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியே வந்தேன்.1988 யூன் மாதம் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறிக் கொழும்புக்குப் போனேன். அதற்குப் பின் சில மாதங்கள் கொழும்பு வாழ்வும் 'மார' சிறைவாழ்வும்.(இதை நான் ஆனந்தவிகடன் -26.01.2003 -நேர்காணலிலேயே தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன்.) சிறையிலிருந்து வெளியே வந்த இரண்டு கிழமைகளிலேயே இலங்கையை விட்டு வெளியேறிவிட்டேன்.

மரியசீலன் "அம்பலப்படுத்துவது" போல 1990 ஒக்ரோபர் மாதம் புலிகளால் முசுலீம் மக்கள் துரத்தப்பட்டபோது இரு முசுலீம் குடும்பங்களை 'ஊத்தை' ஞானம் துப்பாக்கியால் மிரட்ட நான் கால்களால் உதைத்தபோதும், பின் நானும் ஞானமும் பாடசாலையை உடைத்தபோதும் நான் தாய்லாந்தில் UNHCR பராமரிப்பில் அகதியாக வாழ்ந்துகொண்டிருந்தேன். நானாவது பரவாயில்லை... 'ஊத்தை' ஞானம் இறந்து அப்போது நான்கு வருடங்களாகியிருந்தன.

மரியசீலன் சொல்வது போல தோழர் ஞானம், 'ஊத்தை' ஞானம் என்ற அடைமொழியோடு அறியப்பட்டவரல்ல. அவர் 'அம்மான்' அல்லது 'கொன்னை ஞானம்' என்றே அறியப்பட்டார். என் இயக்க வாழ்வின் கடைசி வருடத்தில் நான் அவரின் அணியிலேயே இருந்தேன். ஞானத்தின் இயற் பெயர் காண்டீபன். அவர் 1986 நடுப்பகுதியில் இறந்துபோனார். ஞானம் எப்படி இறந்து போனார்? என்று நான் சொன்னால் தேனீத் தோழர்கள் நம்புவார்களோ தெரியாது. ஆனால் ஞானம் எப்படி இறந்து போனார் என்று 'முறிந்த பனை' சொன்னால் நம்புவார்கள் தானே? கீழே வருவது 'முறிந்த பனை'ப் புத்தகத்திலிருந்து ஒரு பந்தி:

"1986 மே நிகழ்வுகளின் பின் மூத்த உறுப்பினர்கள் பலர் இயக்கத்தை விட்டு விலகினர்.(இங்கே மே நிகழ்வுகள் என்று TELOஅழித்தொழிப்பையும் அனுராதபுரப் படுகொலைகளையுமே முறிந்த பனை குறிப்பிடுகிறது.பக்:89)தீவுப்பகுதிக்கு பொறுப்பாயிருந்த காண்டீபனும் அவர்களுள் ஒருவர். இயக்கத்தை விட்டு விலகிய பின்னர் அவர் தனது பழைய இயக்க உறுப்பினர்களை சந்திக்க விரும்பாது அரியாலையிற் தமது வீட்டில் எதிலும் ஈடுபடாது இருந்தார். விடுதலைப் புலிகள் அவரைத் தமது இயக்கத்தில் மீண்டும் சேர இசையவைப்பதற்காக அவருடன் பேச விரும்பினர். காண்டீபன் ஆற்றல் மிக்க இராணுவ வீரன். கடற்கண்ணி வெடிகளைப் பயன்படுத்துவதில் முன்னோடியாக விளங்கினார். அநேக மூத்த உறுப்பினர்கள் இயக்கத்தை விட்டு விலகியதாற் கீழ்மட்ட உறுப்பினர்கள் மனந்தளர்ந்திருந்ததாகக் கூறப்பட்டது. பலாத்காரமாகக் கூட்டத்துக்கு அழைத்துச் செல்வதற்காக காண்டீபன் இருதடவை சுற்றிவளைக்கப்பட்டார். ஆனாற் காண்டீபன் வீட்டுக்குள் ஓடிச்சென்று சயனைட்டை விழுங்கிவிட்டார். விடுதலைப் புலிகள் இயக்கம் அவரது மரணத்தை உறுதிப்படுத்துவதைத் தாமதப்படுத்தியதுடன் அதிகாலையிலேயே அவரது இறுதிச் சடங்குகளைச் செய்யுமாறு அவரது குடும்பத்தை நிர்ப்பந்தித்தது." (பக்கம் 103)

மரியசீலனின் கட்டுரையிலுள்ள இந்தத் தகவற் திரிப்புக்களை நான் இங்கே நிறுவுவதன் நோக்கம் நான் இரத்தக்கறை படியாதவன் என்றோ உத்தமசீலன் என்றோ நிறுவுவதற்காக அல்ல. நான் இயக்கத்திலிருந்து வெளியே வந்த 1986 நடுப்பகுதி வரை நான் நேரடியாகச் சம்மந்தப்பட்டேனோ இல்லையோ இயக்கம் செய்த அனைத்து மக்கள் விரோத நடவடிக்கைகளிலும் எனக்கும் தார்மீகப் பொறுப்பிருக்கிறது. அந்த இரத்தப்பழி என்னையும் சூழ்ந்திருக்கிறது. இதை நான் ஒருபோதும் மறுக்கப் போவதில்லை. இவ்வாறாக இறந்த காலங்களை அகழ்ந்தெடுத்தால் ஆயுதந் தாங்கிய எந்த இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் தான் இத்தகைய தார்மீகப் பொறுப்புகளிலிருந்து தப்பிக்க முடியும்? உங்களில் எவனொருவன் தவறிழைக்காதவனோ அவன் முதற் கல்லை எறியட்டும் என்பது விவிலியத்தின் புகழ்பெற்ற வாசகம்.

மரியசீலன் ஒட்டி நின்று என் நிகழ்காலத்தின் மீது கல்லெறிகிறார். என் முகத்தின் மீது புலிஉளவாளி, நயவஞ்சகன் எனச் சொற்களை உமிழ்ந்து செல்கிறார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்களை அவர் தருவதில்லை. "கேள்விப்பட்டேன்," "சொல்கிறார்கள்", "அறிகிறார்கள்" என்று பொத்தாம் பொதுவாக எழுதிச் செல்வது கருத்தியல் அறமாகாது.

அவர், நானும் கி.பி.அரவிந்தனுமாகச் சேர்ந்து இலக்கியச்சந்திப்பை அழிக்க முயன்றோம் என்கிறார். இதுவொரு படு மொக்குத்தனமான குற்றச்சாட்டு. எனக்கும் கி.பி.அரவிந்தனுக்கும் எதுவித தொடர்புகளும் இன்றுவரை கிடையாது. விதிவிலக்காக மூன்று வருடங்களுக்கு முன்பாக முதலும் கடைசியுமாக கி.பி.அரவிந்தன் என்னைத் தொலைபேசியில் அழைத்திருந்தார். அவர் தொகுத்துக் கொண்டிருந்த 'பாரிஸ் கதைகள்' சிறுகதைத் தொகுப்பிற்கு என்னுடைய சிறுகதையொன்று வேண்டுமெனக் கேட்டார். கி. பி.அரவிந்தனின் அரசியற் கருத்துநிலையோடு எனக்கு உடன்பாடு இல்லாததால் நான் கொடுக்க மறுத்துவிட்டேன். இலக்கியச்சந்திப்பின் பெருந் தூண்களாயிருந்த மறைந்த தோழர்கள் கலைச்செல்வனும் சி.புஸ்பராஜாவும் கூடத் தமது சிறுகதைகளை அத் தொகுப்பிற்கு கொடுத்திருந்தனர். பரிஸ் சிறுகதை எழுத்தாளர்களில் நான் மட்டும் தான் அத்தொகுப்பில் எழுதியிருக்கவில்லை. எந்த ஆதாரங்களின் அடிப்படையில் மரியசீலன் கி.பி.அரவிந்தனுக்கும் எனக்கும் முடிச்சுப் போடுகிறார்? பின், மரியசீலனின் ஆதாரங்களில்லாத அவதூறுக் கட்டுரையில் எந்த நியாயத்தைக்கண்டு அதை வெளியிட்டீர்கள்? என்றுதான் தேனீத் தோழர்களைக் கேட்கிறேன்.

மரியசீலன் என்றொருவரை நான் அறியேன். இது அவருடைய புனைபெயராகக் கூட இருக்கலாம். அதிலொன்றும் தவறில்லை. ஷோபாசக்தி கூடப் புனைபெயர் தானே!ஆனால் மரியசீலன் தனது கட்டுரை நெடுகவும் 'உங்களை நான் அறிவேன்', 'இப்போது நான் யாரென உங்களுக்குத் தெரிந்திருக்கும்' என மொழி விளையாட்டு விளையாடுகிறார். பிரதியை வாசகர்கள் நம்பச் செய்வதற்காகக் கையாளப்படும் எளிய கதை உத்திகளில் இந்த விளையாட்டு உத்தியும் ஒன்று. இந்த Fiction உத்திகளெல்லாம் நம்மிடம் செல்லுபடியாகாது தோழரே!

நான் அல்லைப்பிட்டியைச் சேர்நதவன் என்பதையோ ஞானம் தீவுப்பகுதிப் பகுதிப் பொறுப்பாளர் என்பதையோ கண்டுபிடிக்கப் பெரிய அறிவு தேவையில்லை. மற்றப்படிக்கு மரியசீலன், எனது கட்டுரையிலிருந்தே வயல்வெளி முசுலீம் குடும்பங்கள், தலித் பாடசாலை, மணற்திட்டிகள் என்று தகவல்களைப் பொறுக்கிக்கொண்டு அவற்றை வைத்தே தனது பிரதியை நம்பகமானதாகக் கட்டமைக்கத் தலையாலே தண்ணி குடித்திருக்கிறார். மரியசீலன் ஞானத்துக்கு வழங்கியிருக்கும் 'ஊத்தை' என்ற அடைமொழி எனது கொரில்லா நாவலில் இயக்கப் பொறுப்பாளராக வரும் ஊத்தை சாந்த என்ற பாத்திரத்தின் பெயரிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கிணற்றுக்குள் நாய்களை வெட்டும் 'சீன்' திருமாவளவன் எழுதிச் சரிநிகரில் வெளியான 'கல்வெட்டு' எனும் சிறுகதையிலிருந்து அப்படியே மரியசீலனால் உருவப்பட்டிருக்கிறது.

நான் 'அல்லைப்பிட்டியின் கதை' கட்டுரையில் தேனீ -TBC-ஜெயதேவன் குறித்து வைத்த விமர்சனங்களே தேனீத் தோழர்களையும் மரியசீலனையும் நிதானமிழக்கச் செய்து என் மீதான அவதூறுகளிலும், அரசியற் குறுக்குவழிகளிலும் இறங்கச் செய்தன என்றே நான் கருதுகிறேன். வார்த்தைக்கு வார்த்தை, வியாழனுக்கு வியாழன் கருத்துச் சுதந்திரமென்றும் காத்திரமான விவாதம் என்றும் வாய்ச்சொல் பேசுபவர்கள் எப்போதுதான் விமர்சனங்களை அவதூறுகளால் எதிர்கொள்வதை விடுத்துக் கருத்துக்களால் எதிர்கொள்வார்கள்? என்று கேட்கிறேன்.

என்ன தோழர்களே? புலிகளின் அரசியற் வேலைதிட்டதிலிருந்து அல்லாமல் அவர்களின் தனிமனிதப் பலவீனங்களை ஆராயும் கட்டுரைகள் தேனியில் வெளியாகவில்லை என்றா சொல்லப்போகிறீர்கள்? ஒருவரின் கல்வித்தரத்தையோ, மொழி அறியாமையையோ, குடிப்பழக்கத்தையோ இழித்துரைப்பது மேட்டுக்குடிப் பார்வையின்றி வேறென்ன? TBC பணிப்பாளர் ராம்ராஜ் ENDLFன் அய்ரோப்பிய அமைப்பாளர் இல்லையா? ENDLFக்கு இந்திய உளவுத்துறையும் இலங்கை இனவாத அரசும் சோறு போட்டு வளர்க்கவில்லை என்கிறீர்களா? ஜெயதேவன் சாதி காப்பாற்றும் இந்துமதத்தைத் தூக்கிப்பிடிக்கும் ஒரு கோயிலின் முதலாளி என்பது பொய்யா? அந்தச் சிவநெறிச் செல்வர் மேற்கத்தைய வலதுசாரி அரசுகளின் ஆதரவாளரில்லையா? என்னுடைய கேள்விகளுக்கு உங்களிடம் பதிலில்லை. உங்களிடம் எஞ்சியிருப்பதெல்லாம் அவதூறுகள் மட்டுமே.

இலட்சியம் மட்டும் உன்னதமாயிருந்தால் போதாது. அதை அடையும் வழிகளும் உன்னதமாய் இருக்க வேண்டும். மிகச் சிறுபான்மையினரான மாற்றுக் கருத்தாளர்களான நாங்கள் உதிரிகளாகச் சிதறியிருக்கிறோம். எங்களிடம் உண்மையிலேயே ஓர் அரசியல் வேலைத்திட்டம் கிடையாது. எங்களிடையே புரட்சிகர அரசியற் தலைமையும் இல்லை. தனிமனிதக் கோபதாபங்களும் அவதூறுகளும் இவற்றை ஏற்படுத்தாது. இந்த இடத்தில் பொருத்தம் கருதி யாழ் மத்திய கல்லூரியியின் அதிபர் க.இராசதுரையின் படுகொலையைக் கண்டித்து நான் எழுதி NON குழுவினரால் வெளியிடப்பட்ட நீங்களும் தேனீயில் மறுபிரசுரஞ் செய்திருந்த மரண வீட்டின் குறிப்புகள் என்ற சிறுபிரசுரத்தின் இறுதி வரிகளைக் கீழே தருகிறேன்:

புலிகளின் பாஸிசக் கருத்தியல்களையும் கொலைக் கலாசாரத்தையும் எதிர்கொள்வதற்கான முதல் வழி நமக்குள்ளே திறந்த உரையாடல்களை நிகழ்த்துவதுதான். புலிகளுக்கு மாற்றாக நாம் இன்னொரு பிற்போக்குத் தமிழ்த் தேசிய தலைமையின் பின்னே அணிதிரள முடியாது. புலிகளை எதிர்கொள்வதற்காக மேற்கத்தைய முதலாளிய அரசியல் அறங்களுக்குள்ளும் நாம் வீழ்ந்துவிடக்கூடாது. சிறிலங்காப் பேரினவாத அரசு விடுதலைப் புலிகள் என்ற இருபெரும் கொடிய அடக்குமுறையாளர்களுக்கு முன்னால் நாம் உண்மையில் கையறு நிலையில் நின்றுகொண்டிருக்கிறோம். இனமுரண், பிரதேச முரண், சாதிய முரண், பால்முரண்பாடு, பண்பாடு போன்ற அனைத்துப் பிரச்சனைப்பாட்டுக்குரிய தளங்களிலும் வெளிகளிலும் நாம் மனம் திறந்து உரையாடுவோம். எம் எதிர்க் குரல்களும் அறம் சார்ந்த உரையாடல்களும் தீயைப்போல பரவிச் செல்லட்டும். உரையாடல் கருத்துக்களை உருவாக்கும். கருத்துக்கள் செயலை நோக்கி நகர்த்தும்.

31.05.2006

8 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

I agree with your words that all the Ironys (racial, sex, culture, regional) can be resolved when there is a free exchange of opinions. The problem we face now in our world is that nobody likes opposite/alternative thoughts.

Shoba Sakthi you are writings are good.

ROSAVASANTH said...

ஷோபாசக்தி, நலமா? இன்றுதான் இங்கு நான் பின்னூட்டமிடுகிறேன். வழக்கம் போல மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

Anonymous said...

சரியாத்தான் சொல்லியிருக்கிறியள் சோபாசக்தி. புலியளை எதிர்த்தால் அது மாற்று!! அதுக்கு பிசாசோடையும் கூட்டுச்சேர தயாராய் இருந்தால் அந்தத் தகுதியைப் பெறலாம். புலியளையும் எதிர்த்து அரசையும் எதிர்த்து நீங்கள் நிண்டால் அதுக்கு "மாற்று" சேர்ட்டிபிக்கேற் தேனீ ரிபிசி குழாத்தட்டையிருந்து எடுக்கேலாது. இப்பிடி கட்டுரைதான் கிடைக்கும். அதுசரி பொத்தாம் பொதுவா எதையும் சொல்லேலாது எண்டுற சோபாசக்தி புலியிலை இருக்கயிக்கை புலி செய்த எல்லா அநியாயங்களுக்கும் தானும் -இயக்கத்திலை இருந்த எண்டளவில- பொறுப்பு எண்டு எழுதிறது சரியா இருக்குமா? இப்பிடியான பொறுப்பேற்றல் எல்லாம் கேட்டுக் கேட்டுச் சலிப்பாப் போய்ச்சு. உண்மையிலை இதுக்குப் பின்னாலை ஒரு தப்பிச்சல்தான் இருக்கு. தான்தான் சம்பந்தப்பட்ட தவறுகளை வெளிப்படையாச் சொல்லுற மனசு வேணும். அதுதான் நம்பிக்கையளை வளர்க்கும். இல்லாட்டி இப்பிடி இப்பிடி எல்லாம் அப்பப்ப கதையள் வரும். மறுப்புகள் எழுதிற அவசரமும் முந்தியடிக்கும்.

Anonymous said...

Though I agree with many thenee Articles I didn't agree with Mariaseelans Article. I am in contact with Thenee Editorial and I will convey my protest for Mariaseelan's article to Thenee editorial. I am delighted that U made a rejoinder.
However, though Jeyadevan is running a hindu temble in London dalits are allowed to pray there as a standard feature in all the diaspora Tamil Temples. So there is nothing wrong with that.

-A former Member of PLOTE

Anonymous said...

உங்களில் எவனொருவன் தவறிழைக்காதவனோ அவன் முதற் கல்லை எறியட்டும்

Anonymous said...

//மேற்கு நாடுகள் தமது சொந்த ஏகாதிபத்திய நலன்ளைக் கருதியே ஒரு நாட்டின் மேல், ஒரு இயக்கத்தின் மேல் தடைவிதிக்கிறார்கள் அல்லது ஆதரிக்கிறார்கள்..//
இவைகள் புரியாமல் பலர் தலை தலையாக அடித்து குழறி அழுகினம்.

உலக மயமாக்கலில் இதுகும் ஒரு பகுதி......
சொல்லப் போனால் கனக்க கதைக்க வேண்டி வரும்......
ஆனால் என்ன கொடுமையெண்டால் இந்த தடை புலிகளை ஒன்றும் செய்யப் போவதில்லை அவர்களின் அய்ரோப்பிய "நிறுவனங்களை" பாதிக்கப் போவதுமில்லை. இதுவே தமிழ்ச்செல்வனின் கூற்றும் கூட....

ஆனால் இலங்கையில் கிடக்கிற (வெளி நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் அல்ல! ) ஏழைத் தமிழர்களின் மேல் இலங்கை அரச இயந்திரங்களால் இழைக்கப்டும் அநீதிகளும் கொடுமைகளும் அவர்கள் மேல் சுமத்தப்படும் 'தேசத் துரோகி' 'எட்டப்பர்' பட்டங்களும் மரணங்களும்தான் கேட்பார் இன்றிப் போகப் போகிறது...

காத்து said...

வணக்கம் சோபா சக்தி...! நீங்கள் இயக்கத்தில் இருந்து விலகிய காலத்தில் நான் சிறு பிள்ளையாக இருந்த காலம் என்னால் மறக்க முடியாதது.... சில விதைகள் எனக்குள் ஊண்றப்பட்ட காலம் என்றும் கூட சொல்லாம்..

எனது தமையனார் TEA ( பனாகொட மகேஸ்வரனுடைய அமைப்பு) அமைப்பில் இருந்து புலிகளின் வேண்டுகையால்... ஆயுதங்களை ஒப்படைத்து சண்டை ஏதும் இல்லாது புலிகளில் சிலர் இணைய சிலர் விலகினர்... விலகியவர்களில் அவரும் ஒருவர்... காலம் கடந்து வந்த இந்திய இராணுவதின் உதவியாளர்களான தமிழ் அண்ணாக்களினால் கல்வியங்காட்டில் வைத்து சுடப்பட்ட போது அவருடன் சைகிளில் கூடப்போன என்னால் தாங்கிக் கொள்ள முடியாமல் போனதில் சந்தேகமில்லை...

காலவோட்டத்தில் இந்திய இராணுவம் வெளியேறும்காலத்தில் எனது 14வது வயதில் என்னை புலிகள் உறுப்பினர் ஆக்கியதில் நடந்த அந்த சம்பவத்துக்கும் தொடர்பு உண்டு...

யாழ் மத்திய கல்லூரியில் கல்வி பயிண்றுவந்த என்னை 89ம் வருட முதற்பகுதியில் கட்டாய ஆயுதப்பயிற்சிக்காய் பிடித்துப்போய் மணியம் தோட்ட முகாமில் வைத்து அடித்து பயிற்ச்சி தந்த அண்ணாக்களில் ஒருவருக்கு நீங்கள் பதில் எழுதி இருப்பது எனக்கு மனதுக்கு இப்போதும் மகிழ்ச்சியாய் இல்லை...

பிகு:- உங்கள் மீது தேனியில் ஒருவர் சொன்ன குற்றச்சாட்டில்த்தான் புலிகள் அமைப்பில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டேன்... "அடித்துக்காக அல்ல மிரட்டியதுகாக"... அதற்காக நான் புலிகளை வெறுப்பவன் அல்ல...