Monday, October 29, 2007

தலித் மாநாடு: பின்குறிப்புகள்

-ஷோபாசக்தி

பிரான்ஸில் நடந்து முடிந்த தலித் மாநாட்டில், எழுபத்தெட்டுப் பேர்கள் கலந்துகொண்டார்கள் என்கிறது 'தூ' இணையத்தளம். எனக்கென்னவோ அதற்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டிருப்பார்கள் என்றே மதிப்பிடத் தோன்றுகிறது. இந்தியா, கனடா, ஜெர்மனி, இங்கிலாந்து, சுவிஸ் போன்ற வெளிநாடுகளிலிருந்து மட்டும் நாற்பது பேர்கள் வரையில் கலந்துகொண்டார்கள். இருநாள் நிகழ்வுகளில் தோழர்கள் வருவதும் போவதுமாக இருந்ததாலும் மாநாட்டு மண்டபத்திற்கு வெளியேயும் மாறி மாறித் தோழர்கள் குழுமி நின்று பேசிக்கொண்டிருந்ததாலும் 'தூ' இணையத்தால் தொகையைத் துல்லியமாகக் கணக்கிட முடியாமல் போயிருக்கலாம். வந்தவர்கள் 78 பேர்கள்தான் என்று வைத்துக்கொண்டாலும் பாரிஸில் நான்கு நாட்களாகத் தொடர்ந்து நிகழ்ந்த தொடருந்துப் பணியாளர்களின் வேலைநிறுத்தத்தால் எற்பட்ட நெருக்கடி, 'தலித் மாநாட்டில் கலந்துகொள்பவர்கள் புலியெதிர்ப்பாளர்களாக அடையாளம் காணப்படுவீர்கள்' என்ற மிரட்டல்கள், ஆதிக்கசாதி எழுத்தாளர்களின் உள்குத்து வேலைகள் எல்லாவற்றையும் மீறி இவ்வளவு தொகைத் தோழர்கள் மாநாட்டில் கலந்துகொண்டது நிரம்பவே உற்சாகத்தையளிக்கிறது.

மாநாட்டில் கலந்து கொள்வதாயிருந்த சில பேராளர்கள் வந்திராத போதிலும் மாநாடு தொய்வின்றியும் எந்தவிதக் ‘கரைச்சலின்றியும்’ நடந்து முடிந்தது. இரண்டாம் நாள் அமர்வில் காலையிலிருந்து மதியம்வரை அனைவருக்கும் கருத்துரைக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. அநேகமாக மாநாட்டில் கலந்துகொண்ட குழந்தைகளைத் தவிர மற்றெல்லோருமே கருத்துரைக்க விரும்பியதால் மாநாட்டு ஏற்பாட்டாளர்களால் ஓரிரு நிமிடங்களையே கருத்துரையாளர்களிற்கு வழங்கமுடிந்தது.

மாநாடு நடத்துவதற்கு 'கார்ஜ் லே கோனேஸ்' நகரசபையின் இலவச மண்டபமே முதலில் ஒழுங்கு செய்யப்பட்டு விளம்பரங்களில் அறிவிக்கப்பட்டபோதிலும், கடைசி நேரத்தில் அந்த மண்டபத்தைப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டதால் தனியார் மண்டபம் ஒன்றில் மாநாடு நடந்தது. மண்டப வாடகை, சில பேராளர்களிற்கான பயணக்கட்டணம், மாநாட்டில் உணவு வழங்கல் மற்றும் சில்லறைச் செலவுகள் சேர்த்து மூவாயிரம் ஈரோக்கள் வரை செலவானதாகவும் அச்செலவை மாநாட்டு அரங்கில் சேகரிக்கப்பட்ட தொகையையும் பாரிஸில் சில தோழர்களிடம் சேகரிக்கப்பட்ட பணத்தையும் மற்றும் தலித் சமூக மேப்பாட்டு முன்னணித் தோழர்களது கைக்காசாலும் ஈடுசெய்ததாக மாநாட்டு அமைப்பாளர்களில் ஒருவரான தேவதாசன் என்னிடம் தெரிவித்தார். முழுமையான மாநாட்டு வரவு செலவுக் கணக்கு அடுத்த 'வடு' இதழிலும் தொடர்ந்து 'தூ', 'சத்தியக்கடதாசி' போன்ற இணையத்தளங்களிலும் வெளியிடப்படும்.

***
மாநாடு நடைபெறுவதற்குச் சில வாரங்களிற்கு முன்பிருந்தே சபேசன், சாத்திரி போன்றவர்கள் இணையத்தில் தங்களது எதிர்ப் பிரச்சாரங்களை அவிழ்த்துவிட்டார்கள். அவர்கள் இந்த மாநாடு ஸ்ரீலங்கா அரசின் நிதியுதவியோடும் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டிலும் நடக்கவிருக்கிறது என்றெல்லாம் ஓயாமல் எழுதினார்கள். அவர்களின் துப்பறியும் ஜெர்னலிஸத்தில் மயங்கிய சில பெயரிலிப் பின்னூட்ட மன்னர்களும் "தலித் மாநாட்டை அம்பலப்படுத்திய சபேசனுக்கும் சாத்திரிக்கும் நன்றி" என்றார்கள்.

ஆனால் தலித் மாநாடு இலங்கை அரசிடமிருந்து நிதியுதவி பெற்றது என எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இவர்கள் எழுதினார்கள் என்று கேட்டால் சபேசனும் சாத்திரியும் எழுதியதுதான் ஆதாரம் என்கிறார்கள். அவதூறுகளைக் கணனியின் முன்னாலிருந்து உருவாக்குவது அறமற்ற யாவருக்கும் எளிதான செயல். தலித் மாநாடு இலங்கை அரசினதும் டக்ளஸ் தேவானாந்தாவினதும் ஏற்பாட்டிலேயே நடைபெற்றது என்பதற்கான ஆதாரங்களை சபேசனாலும் சாத்திரியாலும் வெளியிட முடியுமா என்று எழுத்து அறத்தின் பெயரால் கேட்கிறேன். அப்படி அவர்களால் ஆதாரங்களை வெளியிட முடியாத பட்சத்தில் அவர்கள் அவ்வாறு எழுதியது வெறும் ஊகம் அல்லது அவதூறு என்பதைத் தவிர வேறென்ன?

சபேசனுக்கும் சாத்திரிக்கும் நேர்மையிருந்தால் அவர்கள் தட்டிக்கழிக்க முயற்சிக்காமல் இந்தக் கேள்வியை எதிர்கொண்டு பதிலளிக்க வேண்டும். அவர்கள் தலித் மாநாடு, இலங்கை அரசிடமிருந்து நிதி பெற்றதை ஆதாரபூர்வமாக நிரூபித்தால் தலித் மாநாட்டிற்கும் 'தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினருக்கும்' எதிராகச் சத்தியக்கடதாசி முற்றுமுழுதான எதிர்நிலையை எடுக்கும் என்று உறுதி கூறுகிறேன். இப்போது பந்து சபேசனினதும் சாத்திரியினதும் கால்களிலிருக்கிறது. அவர்களின் நேர்மை அவர்கள் சொல்லப்போகும் பதிலில் தங்கியிருக்கிறது.

***

தலித் மாநாட்டில் கருத்துரைத்தவர்களின் கருத்துகளைத் தொகுத்து http://www.thesamnet.net/ வெளியிட்டிருந்தது. மாநாட்டில் பேசப்பட்ட கருத்துகளிலிருந்து சில துண்டுகளை மட்டும் தொகுக்கும்போது சில விடுபடல்கள் தவிர்க்க முடியாததே. பேச்சுக்களைச் சுருக்கும்போது சற்றுப் பிசகினாலும் ஒருவர் பேசியதற்கு தலைகீழான அர்த்தங்கள் தொனிப்பதற்கும் சாத்தியங்களுள்ளன. மறுபுறம் உரைகளை மாநாடு நடந்த மறுநாளே முழுமையாக வெளியிடுவது 'தேசம்' போன்ற ஓரிருவரின் உழைப்பில் மட்டுமே தங்கியிருக்கும் சிறியதொரு இணையத்தளத்தின் சக்திக்கு அப்பாற்பட்டதே. மாநாட்டில் பேசியவர்களின் உரைகள் தவறாகத் தேசத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தால் அதைத் தேசம் வேண்டுமென்றே செய்வதாக நம்ப நான் தயாரில்லை. இது பத்திரிகை, இணைய நடைமுறைச் சிக்கல்களால் உருவாவது என்பதுதான் எனது கருத்து.

தேசத்தில் தனது கருத்துக்கள் என வெளியிடப்பட்டவற்றில் தனக்கு உடன்பாடில்லை என மனோ எழுதிய பின்னூட்டத்தைத் தேசம் பிரசுரித்திருக்கிறது. அதில் தான் மாநாட்டில் பேசியது எதுவென்பதையும் மனோ விபரமாகவே எழுதியிருக்கிறார், தீர்ந்தது சிக்கல்! ரயாகரனும் தேசத்தில் வெளிவந்த பதிவோடு தனக்கு உடன்பாடில்லை எனத் தேசத்திற்கு எழுதியிருந்தார். தவறிருந்தால் திருத்திக்கொள்ளச் சம்மதம் என்றார் 'தேசம்' ஆசிரியர் ஜெயபாலன், முடிந்தது பிரச்சனை. ரயாகரனும் தான் மாநாட்டில் பேசிய கருத்துகளைத் தனது இணையத்திலேயே வெளியிட்டிருக்கிறார்.

ஆனால் தமிழச்சியின் பிரச்சினை சற்று வித்தியாசமானது. "காறித்துப்பாமல் என்ன செய்வார்கள். வெளிநாட்டுக்கும் வந்து கோவில், தேங்காய் உடைப்பது என்று காட்டு மிராண்டித்தனமாக நடந்து கொள்கிறார்கள். என்னைப் பற்றி விடுதலைப் புலிகள் தரக்குறைவாக மோசமாக எழுதுகிறார்கள்" எனத் தமிழச்சி பேசினார் எனத் 'தேசம்' பதிவு செய்திருந்தது. ஆனால் தனது உரையைத் 'தேசம்' இருட்டிப்புச் செய்துவிட்டதால் தேசத்தைக் கண்டிப்பதாகத் தனது வலைப்பதிவில் தமிழச்சி அறிவித்திருக்கிறார். தமிழச்சியின் உரையை மட்டுமல்ல வேறெவரது உரையையும் முழுயாகப் பதிவிடுவது உடனடிச் சாத்தியமல்ல என்பதைத் தமிழச்சியும் புரிந்துகொள்வார் என்றே நம்புகிறேன். 'இருட்டடிப்பு' என்பதெல்லாம் பாரதூரமான வார்த்தைப் பிரயோகம், ஒரு ஊடகத்தின் நேர்மையையை ஆட்டங்காண வைக்கும் சொல்லாடல்.

தமிழச்சி சொன்னவற்றை முழுமையாகத் 'தேசம்' வெளியிடவில்லை. ஆனால் அவர் சொல்லாத எதையும் 'தேசம்' வெளியிடவில்லை என்றே தமிழச்சி பேசும்போது அரங்கில் அமர்ந்திருந்தவன் என்ற முறையில் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். தமிழச்சி ‘இயக்கம்’ என்று குறிப்பிட்டு மாநாட்டில் பேசியதை நான் உட்படப் பலரும் அவர் விடுதலைப் புலிகளைக் குறித்துப் பேசியதாகவே விளங்கிக்கொண்டோம். தேசத்திலும் அவ்வாறே வெளியாகியுள்ளது. தான் பேசிய கருத்துகளைத் தேசம் 'திரித்து' வெளியிட்டிருக்கிறது எனத் தமிழச்சி கருதினால் மாநாட்டில் என்ன பேசினார் என்பதைத் தமிழச்சி தனது வலைப்பதிவில் வெளியிட்டால் தீர்ந்தது சிக்கல். தேசமும் ஒரு தேவையில்லாத இருட்டடிப்புப் பழியிலிருந்து தப்பிக்கும். தமிழச்சியின் வலைப்பதிவில் வந்து ‘அப்போதே சொன்னோம் கேட்டியா?’ எனப் பாடம் நடத்தும் பின்னூட்ட மன்னர்களின் வாயையும் எளிதாகவே அடக்கிவிட முடியும்.

***
தலித் மாநாட்டிற்கு வீ. ஆனந்தசங்கரி, EPRLF ( ப.நா) செயலாளர் சிறீதரன் போன்றவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்கள். வாழ்த்துகளை வரவேற்போம்.

ஆனால் ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணி அரசியலே யாழ் ஆதிக்கசாதியினரின் அரசியல் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடவில்லை. இரண்டு வருடங்களிற்கு முன்பு நடந்த 'ஸ்ருட்காட்' இலக்கியச் சந்திப்பில் ‘யாழ்ப்பாணத்தில் சாதிப் பிரச்சினையே கிடையாது’ என ஆனந்தசங்கரி சொன்னது இப்போதும் எனது காதில் கேட்டுக்கொண்டேயிருக்கிறது. தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கத்தின் எழுச்சிக் காலத்தில் ஒப்புக்குத் தாங்களும் சமபந்திப் போசனங்களை ஏற்பாடு செய்த தமிழரசுக் கட்சியின் சுத்துமாத்து அரசியலின் இன்றைய தொடர்ச்சிதான் சங்கரியாரின் தலித் மாநாட்டிற்கான வாழ்த்து.

சாதியப் பிரச்சினையில் கூட்டணி, LTTE, PLOTE, TELO போன்ற அமைப்புகளுடன் நாம் EPRLFவை ஒப்பிட்டுப் பேசக்கூடாது. ஒப்பீட்டளவில் EPRLF தலித் மக்களிடம் தமது வேர்களைப் பதித்திருந்தார்கள். ஆனால் கே. டானியல் சொன்னது போல இவர்கள் எசமானையும் அடிமைகளையும் இனப்பிரச்சினை சுலோகத்தின் கீழ் ஒன்றிணைத்து இறுதியில் தமிழருக்கென மட்டுமே ஒரு தமிழ்ச் சோசலிஸ ஈழத்தை உருவாக்கி விடலாமென்றே முடிவு கட்டினர்கள்.

உண்மையில் புலிகளோ கூட்டணியோ ஈபிஆர்எல்எவ்வோ இன்று சாதியொழிப்புப் போரைக் கையிலெடுத்தால் எதற்காகப் புதிதாகத் தலித் இயக்கம் தொடங்க வேண்டும். மேற்சொன்ன அணிகள் தமது அரசியல் நலன்களிற்காக ஈழத்தின் பெரும்பான்மையினரும் அனைத்துத் தளங்களிலும் செல்வாக்குப் பெற்றிருப்பவர்களுமான ஆதிக்க சாதியினரைப் பகைத்துக்கொள்ள விரும்பமாட்டார்கள். இவர்களில் எவருக்காவது உண்மையில் சாதியொழிப்பில் அக்கறையிருந்தாற் கூட இவர்களின் பிற்போக்குவாதத் தமிழ்த் தேசியவாத வேலைத்திட்டம் சாதியொழிப்பைச் செயலாக்க இவர்களை அனுமதிக்காது. எனவேதான் 'சிறுபான்மைத் தமிழர் மகாசபை' போன்றதொரு தனித்துவமான தலித் விடுதலை இயக்கத்தின் தேவையொன்று இப்போது உணரப்படுகிறது.

அந்தத் தனித்துவமான 'தலித் இயக்கம்' புலிகளின் பாஸிச அரசியல் ஆதரவுப் போக்கிற்குள் சிக்காமலிருப்பது எவ்வளவு முக்கியமோ அதைப்போலவே இனவாத அரசின் கொடுமைகளை நியாயப்படுத்திக்கொண்டே இந்திய அரசையும் இலங்கை அரசையும் மாறிமாறி நக்கிக்கொண்டிருக்கும் 'தனிப்' புலியெதிர்ப்புப் போக்கிற்குள் சிக்காமலிருப்பதும் முக்கியமானது. இந்த நிலைப்பாட்டைத் தலித் அரசிலாளர்கள் பகிரங்கமாகத் திரும்பத் திரும்ப அறிவித்துக்கொண்டேயிருப்பதும் அவசியமானது. மரம் பழுக்க வெளவால் வரும்! நாம் தான் எச்சரிக்கையுடனிருக்க வேண்டும்.

***
'மாநாட்டை நடத்தியவர்கள் புலிகளின் எதிர்ப்பாளர்கள்' என்று சிலர் இணையத்தளங்களில் ஓயாமல் கூக்குரலிடுகிறார்கள். போததற்குச் சிலர் வெளியான மாநாட்டு உரைகளிலிருந்து அசைக்க முடியாத எடுத்துக்காட்டுகளைக் காட்டித் தலித் அரசியலாளர்கள் புலிகளின் எதிர்ப்பாளர்கள் என்றும் நிறுவியிருக்கிறார்கள். இதற்கு எதற்கு இவர்கள் இவ்வளவு சிரமப்பட வேண்டும் என்பதுதான் எனக்கு உண்ணாண விளங்கவில்லை. நாங்கள்தான் பல வருடங்களாகவே "நாங்கள் அரசியலில் புலிகளின் சற்றேனும் விட்டுக்கொடுக்காத எதிரிகள்" என்று தமிழில் மட்டுமல்லாது பிரஞ்சு, ஆங்கிலம், சிங்களம், மலையாளம் எனப் பல பாஷைகளிலும் எழுதிவருகிறோமே! ஒளிவுமறைவில்லாமல் சொல்லி வருகிறோமே! சபேசனும் சாத்திரியும் லக்கிலுக்கும் எங்களைப் புலிகளின் எதிர்ப்பாளர்கள் என்று சொல்லத் தேவையில்லை. நாங்களே பிரகடனப்படுத்துகிறோம்! ஆம் நாங்கள் புலிகளின் பாஸிச அரசியலை சமரசத்துக்கிடமில்லாமல் எதிர்ப்பவர்கள்தான். இடதுசாரிகளையும் இஸ்லாமியர்களையும் சமூகவிரோதிகள் எனப் பட்டங்கட்டித் தலித் இளைஞர்களையும் அப்பாவிச் சிங்களச் சகோதரர்களையும் மாற்றுக் கருத்தாளர்களையும் பாலியல் தொழிலாளர்களையும் ஆயிரக்கணக்கில் கொன்று குவித்த விடுதலைப் புலிகளின் கால்களை நீங்கள் வேண்டுமானால் நக்கிக் கிடவுங்கள். ஆனால் எங்களையும் நக்கச் சொல்ல உங்களுக்கு எந்த உரிமையுமில்லை.

புலிகளின் பாஸிச அரசியலுக்கு எதிராக நாங்கள் நியாயமான எதிர்ப்புக் குரல்களை எழுப்பும்போது அதை நேர்வழியில் எதிர்கொள்ளத் திராணியில்லாமல் புலிகளை எதிர்ப்பவர்களெல்லாம் அரசின் கைக்கூலிகள் என்றொரு சுலபமான பொய்யால் இந்தப் புலிவாலுகள் தங்கள் அரசியலை ஒப்பேற்றிக்கொண்டிருக்கிறார்களே தவிர இவர்களிடம் சொந்தமாக அரசியல் சரக்குமில்லை, தூ! ஒருதுளி நேர்மையுமில்லை.

தலித் மாநாட்டில் புலி எதிர்ப்பு அரசியல் பேசப்பட்டது என்கிறீர்களே, அன்று மாநாட்டில் சிறிலங்கா அரசின் இனப் படுகொலைகளையோ தமிழ்மக்கள் மீதான அடக்குமுறைகளையோ நியாயப்படுத்தி எவராவது பேசினோமா? புலிகளை எதிர்ப்பவர்களெல்லாம் அரசின் கைக்கூலிகள், ஒட்டுக்குழுக்கள் என்பதெல்லாம் எந்த அரசியல் தருக்கத்துக்குள் அடங்குகிறது என்று புரியவேயில்லை. பெரியார், சார்த்தர், தெரிதா, அம்பேத்கர், மனிதவுரிமை என்றெல்லாம் நுண் அரசியல் பேசிக்கொண்டிருக்கும் அறிவாளர்கள் கூட அப்பாவி மக்களைப் புலிகள் கொல்வதைப் பார்த்துக்கொண்டு, அட அச்சத்தில் மவுனமாயிருந்தாலும் பரவாயில்லை, மாறாகக் கொலைகாரர்களை ஆதரிக்கிறீர்களே... நீங்கள்தான் ஈழத் தமிழ் மக்களின் முதல் எதிரிகள். புலிகளால் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களின் இரத்தப்பழி உங்கள் கைகளிலும் கறையாயிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

***
புலி எதிர்ப்பு அரசியலைச் செய்யத் தலித் அரசியலை லேபிளாக உபயோகிக்கிறார்கள் என்றும் தேசிய இனப்பிரச்சினை அரசியலில், சாதிய அரசியலை கிளப்புவது, தேசியப் போராட்டத்தைப் பலவீனப்படுத்தும் நோக்கில்தான் என்றும் வெள்ளாளத்தனமான குற்றச்சாட்டுகளும் தலித் அரசியலாளர்கள் மீது வைக்கப்படுகின்றன.

இவையொன்றும் புதிய குற்றச்சாட்டுகள் கிடையாது. அறுபது வருடங்களிற்கு முன்பு சிறுபான்மைத் தமிழர் மகாசபையும், நாற்பது ஆண்டுகளிற்கு முன்பு தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கமும் சாதி ஒழிப்புப் போராட்டங்களை முன்னெடுத்தபோதும் இதே வெறுக்கத்தக்க குற்றச்சாட்டைத் தமிழ்த் தேசியவாதிகள் சாதியொழிப்புப் போராளிகளிற்கு எதிராகக் கிளப்பினார்கள். ஜீ.ஜீ. பொன்னம்பலமும், தளபதி அமிர்தலிங்கமும், அடங்காத்தமிழர் சுந்தரலிங்கமும் தமிழ்த் தேசியம், தமிழர் ஒற்றுமையென முழக்கமிட்டவாறே சாதியத்தைப் பாதுகாத்தார்கள் என்பதை வரலாறு குறித்துத்தான் வைத்திருக்கிறது.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு வாக்குரிமை வழங்கக்கூடாது என்றார் ஜீ.ஜீ.பொன்னம்பலம். சங்கானைப் போராட்டத்தின்போது ‘சங்கானை ஷங்காயாக மாறிவிட்டது’ எனப் பாராளுமன்றத்தில் கூக்குரலிட்டார் அமிர்தலிங்கம். மாவட்டபுரம் ஆலயப் பிரவேசப் போராட்டத்தின்போது தாழ்த்தப்பட்டவர்களை கோயிலினுள் விடமாட்டேனென்று கையில் துப்பாக்கியோடு ஆலய வாசலை மறித்து நின்றார் சுந்தரலிங்கம்.

நாங்கள் சாதிய அரசியலை முன்னிறுத்துவது கிடையாது. நாங்கள் சாதிகளை முற்றுமுழுதாக ஒழிக்கவேண்டுமென்று சாதியொழிப்பு அரசியலைத்தான் முன்னிறுத்தி வருகின்றோம். சாதியொழிப்புக் குரல்கள்தான் புதிதாகத் தமிழர்களிடையே பிளவுகளை ஏற்படுத்த வேண்டுமென்றில்லை. ஏனெனில் தமிழர்கள் ஏற்கனவே பல நூற்றாண்டுகளாகச் சாதியால் திட்டவட்டமாகப் பிளவுண்டுதான் கிடக்கிறார்கள். எனவே சாதியொழிப்புத்தான் தேசிய இன அய்க்கியத்திற்கு முன்நிபந்தனையாக அமையும். எனவே சாதியொழிப்புக் குரல்கள் தேசியப் போரட்டத்திற்கு எதிரானது என்ற குற்றச்சாட்டு ஆதிக்கசாதிச் சாதிப்பற்றை மறைப்பதற்கான தந்திரங்களே தவிர வேறல்ல.

ஈழத்தில் சாதி ஒழிக்கப்பட்டுவிட்டது என்ற ஆதிக்கசாதியினரின் பொய்களுக்குப் பின்னாலிருப்பது ஈழத்தில் சாதியத்திற்கு எதிரான போராட்டம் நசுக்கப்பட்டுவிட்டது என்ற உண்மைதான். ஈழத்தில் தொடரும் சாதியக் கசடுகளை பல்வேறு அரசியல் சக்திகளும் எழுத்தாளர்களும் சமூக அக்கறையாளர்களும் ஒட்டுமொத்த தலித் சமூகமும் சாடிக்கொண்டுதானிருக்கிறது. விடுதலைப் புலிகள் அமைப்பிலுள்ள சிவா சின்னப்பொடி போன்றவர்கள்கூட ஈழத்திலும் புகலிடத்திலும் தொடரும் சாதிய ஒடுக்குமுறைகள் குறித்துத் தீவிரமாகப் பேசிவருகிறார்கள். சாதியிருக்கிறதாம், ஆனால் அதை எதிர்த்துப் பேசக்கூடாதாம், சாதியொழிப்பு அரசியலை முன்நிறுத்தக்கூடாதாம் என்றால் இந்தப் பேச்சில் ஏதாவது யோக்கியமிருக்கிறதா?

தலித் அரசியல் இந்தியாவிலிருந்து இறக்குமதியானது அது ஈழத்திற்குப் பொருந்தாது என்கிறார்கள். அந்நிய நாட்டிலிருந்து வந்ததாலேயே ஒரு கோட்பாடு நிராகரிப்பிற்கு உரியதாகிவிடுமா? இவர்கள் இப்போது கோரும் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை இவர்கள் என்ன வல்வெட்டித்துறையிலா கண்டுபிடித்தார்கள்?

ஈழத்தமிழர்களின் சனத்தொகையில் முப்பது விழுக்காடுகளுக்கும் அதிகமான தலித்களிடமிருந்து நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து இந்த 2007வரை அறுபது வருடங்களில் முன்று பாராளுமன்ற உறுப்பினர்கள்தானே வரமுடிந்தது. ஆனால் விகிதாசாரப்படி இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட தலித் எம்பிக்கள் அல்லவா பாராளுமன்றிற்குச் சென்றிருக்க வேண்டும். எத்தனை தலித்கள் துணைவேந்தர்களாகவும் நீதிபதிகளாகவும் கல்லூரி அதிபராகவுமிருக்கிறார்கள்? இருந்த ஒருவரையும் புலிகள் சுட்டுக்கொன்றுவிட்டார்களே! இன்றுவரை யாழ்ப்பாணத்தில் நூற்றைம்பதிற்கும் மேற்பட்ட கோயில்கள் தலித்களுக்குத் திறக்கப்படவில்லையென புதிய ஜனநாயகக் கட்சியின் ‘புதியபூமி’ பத்திரிகை ஆதாரத்துடன் கட்டுரை வெளியிடுகிறது. நான் இதைச் சுட்டிக்காட்டினால் “நூற்றைம்பது கோயில்கள் யாழ்ப்பாணத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு திறக்கப்டாமலிருப்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் யாழ் மக்களில் பெரும்பாலானோர் இராணுவத்தின் அனுமதியில்லாமல் ஆலயங்களிற்குள் போகமுடியாமலிருக்கிறார்கள்” என்று ‘தீராநதி’ இதழில் எனக்கு மறுத்தான் விடுகிறார் தோழர் யதீந்திரா. தமிழனைத் தமிழனே சாதியத்தின் பேரால் ஒடுக்குகிறான் என்று நான் சொன்னால் சிங்களவனும்தானே ஒடுக்குகிறான் என்று பேசுவது அறமாகுமா? அதையும் பேசுங்கள்! இதையும் பேசுங்கள்! என்கிறேன் நான்.அதைவிடுத்து தேசிய இனப்பிரச்சினையை முன்னிறுத்திச் சாதிய ஒடுக்கமுறையை கண்டுகொள்ளாமலிருப்பது என்ன நியாயம்!

இன்னும் சில ஆதிக்கசாதி அறிவுஜீவிகள் ஒரு ஆறுதல் திட்டத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குக்கு முன்மொழிகிறார்கள். அதாவது தமிழீழம் பிடிக்கும் வரை அமைதிகாத்தால் அவர்கள் பிற்பாடு சாதியத்ததை ஒழிக்க வழி செய்வார்களாம். ஏதோ ஈழத்துச் சமூக அசைவியக்கமே இப்போது நின்று போயிருப்பது போலவும் தமிழீழம் கிடைத்த பின்புதான் அது மறுபடியும் அசையும் என்பது போலவுமிருக்கின்றன இவர்களின் சாட்டுகள். தமிழீழம் கிடைக்கும் வரை யாரும் கலியாணம் கட்டாமல் இருக்கிறீர்களா? பிள்ளை பெறாமல்தான் விட்டீர்களா? பள்ளிக்குப் படிக்கப் போகவில்லையா? பல்கலைக் கழகங்களில் பட்டம் பெறவிலையா? கோயில் திருவிழாக்கள் செய்யவில்லையா? தலைவரின் அய்ம்பதாவது பிறந்தநாளுக்கு அய்ம்பது கிலோ கேக் வெட்டவில்லையா? அய்ம்பத்தியரண்டாவது பிறந்தநாளுக்கு அய்ம்பத்தியிரண்டு பானைகளில் பொங்கவில்லையா? இவையெல்லாம் கோலாகலமாய் நடக்குமாம். ஆனால் தலித்துகள் மட்டும் சாதியிழிவைச் சுமந்துகொண்டு தமிழீழம் கிடைக்கும் வரைக்கும் காத்திருக்கவேண்டுமாம்.

தமிழ்த் தேசியத்தின் ஆயுதப் போராட்டத்திற்கு முப்பதுவருட வரலாறுதான். ஆனால் ஈழத்தில் சாதியொழிப்பு ஆயுதப் போராட்டத்திற்கு அறுபதுவருட வரலாறிருக்கிறது.

***
புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் சாதிரீதியான குடிமைச் சேவகத்தை ஒழித்திருப்பதாயும் சாதியைச் சொல்லி இழிவு செய்தால் தண்டனைகளை வழங்குவதாகவும் கேள்விப்படுகிறேன். புலிகள் இந்தச் சீர்திருத்தங்களை செம்மையாக நடைமுறைப்படுத்துவது உண்மையானால் இந்த விடயத்தில் நான் முழுமனதோடு புலிகளை ஆதரிக்கிறேன். ஆனால் சாதியொழிப்பு என்பது வெறும் சீர்திருத்தங்களால் சாத்தியப்படுவதில்லை. அது இன்றைய தலித் அரசியலின் புரிதலின்படி இடஒதுக்கீடுகள், தனிவாக்காளர் தொகுதிகள் போன்ற பல்வேறு உரிமைகளை வெற்றிகொள்வதின் மூலம் நகர்ந்து சாதியத்தைக் காப்பாற்றும் இந்து மதத்தை வேரோடு கில்லியெறிவதின் முலம்தான் சாத்தியப்படும்.

சாதியத்தின் வேரையே கில்லிப்போடும் இந்த வேலைத்திட்டத்தை விடுதலைப்புலிகளோ அல்லது ஈபிஆர்எல்எவ்வோ அல்லது வேறெந்த அமைப்போ ஏற்றுக்கொண்டால் நடைமுறைப்படுத்தினால் நாங்கள் எதற்காகத் தனியாத் தலித் அரசியலைப் பேசவேண்டும்? வெறும் சீர்திருத்தங்களைக் காட்டித் தலித் மக்களை ஏமாற்றுவதைத் தலித் அரசியல் அனுமதிக்காது. ஈழத்தில் இருபதாம் நூற்றாண்டு சாதியச் சீர்திருத்தங்களின் காலமாயிருந்தது. ஆனால் இந்த நூற்றாண்டு சாதியொழிப்பு நூற்றாண்டாயிருக்கட்டும்.

இந்துமத ஒழிப்பு, தலித்துகளிற்கான சிறப்பு இடஒதுக்கீடுகள், தனி வாக்காளர் தொகுதிகள் ஆகிய இலக்குகளை நோக்கி நகராமல் சாதியை ஒழிக்கமுடியுமா சொல்லுங்கள்? இந்த வேலைத் திட்டத்திற்குப் புலிகள் சம்மதிக்கிறார்களா என்று கேட்டுச் சொல்லுங்கள்! இந்தச் சாதியொழிப்பு வேலைத்திட்டத்திற்கு சம்மதிக்காத எவரையும் எதிர்த்துக் குரலெழுப்ப நாங்கள் தயங்கமாட்டோம். இந்தப் பின்னணியில்தான், தலித் அரசியலாளர்கள் புலிகளையும் கூட்டணியையும் இடதுசாரிகளையும் விமர்சிப்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

புலிகள் சரியானதொன்றைச் செய்யும்போது ஆதரிக்க எனக்கு உரிமையிருக்கிறது. அதேபோன்று புலிகள் தவறொன்றைச் செய்யும்போது தட்டிக்கேட்கவும் எனக்கு உரிமையிருக்கிறது.

***
ஈழத்திலும் புகலிடத்திலும் திருமணத்தைத் தவிர வேறெதிலும் சாதியில்லை என்று கொஞ்சங்கூடக் குற்றவுணர்வில்லாமல் சிலர் எழுதுகிறார்கள். இப்படிச் சொல்வது 'ஒருவரின் உடலில் உயிரைத் தவிர மற்றவையனைத்தும் சீராயிருக்கின்றன, ஆகவே ஆள் சுகமாயிருக்கிறார்' என்று கூறும் முட்டாள்தனத்திற்கு ஒப்பானதல்லவா? திருமணத்தில் கலக்க மறுப்பது தீண்டாமையின்றி வேறென்ன? அகமணமுறையென்பதுதானே சாதியின் அடித்தளமே. அதில் ஒரு பொத்தலைக்கூட விழுத்தாமல் ஈழத்தில் சாதியில்லை எனச் சொல்வதற்கு உங்களிற்கு உறுத்தவில்லையா?

வெள்ளாள அன்பர்களே தயவு செய்து ஈழத்தில் சாதியொழிந்துவிட்டது என்று சொல்லாதீர்கள். ஈழத்தில் தலித்துகள் சாதியத்தால் ஒடுக்கப்படவில்லை என்று ‘சேர்டிபிகற்’ கொடுக்க நீங்கள் யார்? வாழ்க்கை முழுவதும் சாதியத்திற்கெதிராகப் போராடி இன்றும் ஈழத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் சாதியொழிப்புப் போராளிகளான தங்கவடிவேல் மாஸ்டரும், தெணியானும், டொமினிக் ஜீவாவும், சி.கா. செந்திவேலும் ஈழத்தில் சாதியொழிந்துவிட்டது எனச் சொல்லட்டும் நாங்கள் வாயையும் அதையும் பொத்திக்கொண்டு சும்மாயிருக்கிறோம். உங்களுக்கு எப்பனாவது நேர்மையிருந்தால் நான் மேலே குறிப்பிட்ட பெரியோர்களின் இன்றைய எழுத்துகளைப் படித்துவிட்டு, அவர்களின் உரைகளைக் கேட்டுவிட்டு அதன் பின்பு ஈழத்தில் சாதியில்லை என நெஞ்சிலே கையை வைத்துச் சொல்லுங்கள்!

***
கடந்த பத்து வருடங்களாகவே புகலிடச் சூழலில் சிறுபத்திரிகைகளிலும் இலக்கியச் சந்திப்புகளிலும் கருத்தரங்குகளிலும் தலித் அரசியல் விவாதிக்கப்பட்டு வந்தாலும் நடந்து முடிந்த தலித் மாநாடோடு தலித் அரசியல் இன்னொரு பரிணாமத்தை எட்டியிருப்பதை அவதானிக்க முடிகிறது. ஈழத்தில் சாதிய விடுதலையைச் சாதிக்க ஒரு தனித்துவமான தலித் அமைப்பு தேவையென்று முற்போக்கு சக்திகளை ஏற்றுக்கொள்ள வைப்பதில் இந்த மாநாடு பெரும் பங்காற்றியுள்ளது.

இதற்கு வெளியே ஊடகங்களில் சாதிய ஒடுக்குமுறைகள் குறித்த உரையாடலையும் இம் மாநாடு தூண்டிவிட்டுள்ளது. தலித் என்ற சொல் தேவையா? பஞ்சமர் என்று ஏன் அழைக்கக் கூடாது? ஈழத்தில் பிறப்புச் சான்றிதழ்களில் சாதி குறிப்பிடப்படுவதில்லையே? என்ற தொடக்க நிலைக் கேள்விகளை மட்டுமல்லாது தமிழ்த் தேசியமும் தலித்தியமும்/ புலிகளும் சாதியமும்/ இடதுசாரிகளும் தலித்தியமும்/ தலித் அரசியலை இலங்கை அரசுக்கு ஆதரவான தமிழ் இயக்கங்கள் தமது அரசியல் இலாபங்களிற்காக ஆதரிக்கிறார்களா? போன்ற முக்கியமான உரையாடல்களையும் இம்மாநாடு தொடக்கி வைத்துள்ளது. 'செயல் என்பதே சிறந்த சொல்' என்பார்கள். ஆனால் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை முப்பத்தேழிற்கும் மேற்பட்ட ஆயுத இயக்கங்களில் செயலோ செயற்பட்டு இப்போது மொக்கயீனப்பட்டு நிற்கிறோம். எனவே அடுத்த செயலைத் தொடக்க முன்பு எங்களுக்குள்ளே வெளி வெளியான உரையாடல்களும் அதன் வழியே தெளிவான கோட்பாட்டு உருவாக்கங்களும் தேவை. அடுத்த தலித் மாநாட்டை லண்டனில் நடத்தப்போவதாக லண்டன் தோழர்கள் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். அங்கேயும் விவாதிப்போம், உரையாடுவோம். வெற்றுப் பேச்சாளர்கள் என்று சில 'செயல் வீரர்கள்' எங்களை நக்கல் செய்யக் கூடும். பாவம் அவர்கள் அறியாமல் செய்கிறார்கள். தோழர்களே! ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தில் களப்போராளிக்கு இருக்கும் தேவை, முக்கியத்துவம், கடமை ஆகியவை சிந்தனையாளர்களிற்கும் எழுத்தாளர்களிற்கும் கருத்துப் போராளிகளிற்கும் இருக்கின்றன என்பதை மறவாதீர்கள்!

13 comments:

நற்கீரன் said...

தமிழ் விக்கிபீடியாவையும் நீங்கள் அலசி இருப்பீர்கள் என்று உங்கள் கட்டுரையில் இருந்து ஊகிக்கிறேன். பல வரலாற்று தகவல்களை சேகரித்து வைத்திருக்கும் நீங்கள் அதை த.வி விலும் தகவல் நோக்கில் சேர்த்தால் நன்று. [[தமிழ்ச் சூழலில் தலித்துக்களின் எதிர்ப்புப் போராட்ட வரலாறுக் காலக்கோடு]], மற்றும் அமைப்புகள் பற்றிய குறிப்புகள், வரலாற்று நிகழ்வுகள் பற்றிய குறிப்புகள் ஆகியவற்றை த.வி ஆவணப்படுத்தினால் நன்று. த.வி வின் நடுநிலைமையும் விடயநோக்கைகயும் மனதில் நிறுத்தி இந்தப் பணியைச் செய்தால் அது உங்கள் வேலைத்திட்டத்தின் ஒரு அரிய பங்காகவும் இருக்கும். நன்றி.

Anonymous said...

‘//இருட்டடிப்பு’ என்பதெல்லாம் பாரதூரமான வார்த்தைப் பிரயோகம் ஒரு ஊடகத்தின் நேர்மையையை ஆட்டங்காண வைக்கும் சொல்லாடல்.////

ஷோபா சக்தி நீங்கள் சொல்வது உண்மைதான். நான் இயக்கம் என்று சொன்ன வார்த்தையை விடுதலைபுலிகள் என்று மாற்றி சொல்லியிருப்பதைத் தவிர மற்ற செய்திகள் அனைத்தும் உண்மையே. தமிழ்நாட்டில் களத்தில் இருப்பவர்களை விடுதலை புலிகள் எனவும் அமைப்பை சேர்ந்தவர்களை இயக்கத்தினர் எனவும் குறிப்பிடுவோம். பிரான்சில் பெரியார் விழிப்புணர்வு இயக்கம் செயல்படும் போதெல்லாம் மிரட்டல்களும் என்னைப்பற்றிய அவதூறுகளை பரப்புவதும் ஊடகங்களில் தவறான செய்திகளை பதிவு செய்வது போன்ற அநாகரிக செயல்களில் பிரான்சில் இருக்கும் இயக்கத்தை சேர்ந்தவர்களில் சிலர் ஈடுபடுகிறார்கள். வி.சபேசன் அவர்கள் இவை பற்றி நேரடியாகவே என்னிடம் பேசி இருக்கிறார். எனக்கு பெரியார் கொள்கைகளை இணையத்திலும் சமூதாயத்தில் செயலிலும் காட்ட வேண்டும் என்ற லட்சியம் மட்டும் தான் இருக்கிறதே தவிர அரசியலோ சுயநல நோக்கமோ அல்ல. பிரான்சில் தமிழ்சோலையில் நடந்த சம்பவத்தை பற்றி இணையத்தில் நான் எழுதியதை தொடர்ந்து நான் சந்தித்த மிரட்டல்கள் அதிகம். தனியொருத்தியாக நின்று போராடினேன். போராடிக் கொண்டும் இருக்கிறேன். கருத்துச் சுதந்திரம் என்பது மனிதனின் பிறப்புறிமை. அதை மட்டுப்படுத்த முயலும் சர்வாதிகாரத்தனத்தை கண்டு என்னால் ஒதுங்கி போக முடியாது. அதனால் தான் துணிந்து நடந்த சம்பவங்களைப் பற்றி வெளி உலகத்திற்கு தெரியப்படுத்தி கொண்டு வருகிறேன். தேசம் பற்றி நான் குறிப்பிட்டது தற்போது விவாதத்தில் இருப்பதால் என் வலைப்பூவில் தலீத் மாநாட்டில் நடந்த சம்பவத்தை கண்டிப்பாக எழுதுகின்றேன்.
நன்றி
-தமிழச்சி.

Anonymous said...

சாதியம் சாகவில்லை. இந்தக் கருத்துடன் உடன்படுகின்றேன். அனால் எனக்கொரு சந்தேகம். யாராவது விளக்குவீர்களா?

+ ஐரோப்பிய தமிழ் சமூகத்தின் பொதுவாழ்வில் சாதியம் காணப்படவில்லை. இந்த சூழ் நிலையில் தலித் மகானாட்டிற்கான ப‌ய‌ன் எவ்வாறு அமைய‌ப்போகிற‌து?


+ தலித் என்ற சொல்லிற்கு நிகரான தமிழ் சொல்லே இல்லையா?
தமிழுக்குப் பரிச்சயமற்ற இந்த சொல் இந்தச் சமூத்திற்கு "கௌரவத்தை" தருகிறதாக‌ எண்ண‌ப்ப‌டுகிற‌தா?


ஒரு ஈழ‌த்து த‌மிழ‌ன்

Anonymous said...

நன்றி ஷோபா. இதுவரை 'தலித் மாநாடு' பற்றிய எந்த ஒரு பதிவையும் படிக்காமல் உங்களின் விமர்சனத்துக்கு காத்திருந்தது வீணாகவில்லை என நினைக்கிறேன்!

மேலும்,
//**பாரிஸில் நான்கு நாட்களாகத் தொடர்ந்து நிகழ்ந்த தொடருந்துப் பணியாளர்களின் வேலைநிறுத்தத்தால் எற்பட்ட நெருக்கடி,**//

இதெல்லாம் நெருக்கடியாக தோன்றக்கூடாதே! தொழிலாளவர்க்கத்தின் நீதியான போராட்டமல்லவா? உங்களிற்கு என்று வரும்போது 'நெருக்கடி' ஆகிறதோ??


//**ஆனால் தமிழச்சியின் பிரச்சினை சற்று வித்தியாசமானது.**//

திமிழிச்சியின் பிரச்சனை எக்கச்சக்கமான வித்தியாசமானது. அவருக்கு தான் எங்கே நிற்கிறார் என்றே தெரியவில்லை. அகதித்தமிழனை எள்ளி நகையாடுகிறார் (தட்டுக்கழுவிகள்) பின்னர் பிரஞ்சுக்காரன் காறித்துப்புவது நியாயம் என்கிறார். பின்னர் ஈழத்தில் "காறித்துப்பப்பட்ட " மக்கள் நிகழ்வுகளில் கலந்து கதை அளக்கிறர். இறுகும்போது ஈழத்தமிழர் பிரச்சினை அவ்வளவாக தெரியாது என்கிறார். பெரியாருக்கு வந்த சாபமோ இவர் என் எண்ணத்தலைப்படுகிறேன்!

//**இரண்டு வருடங்களிற்கு முன்பு நடந்த 'ஸ்ருட்காட்' இலக்கியச் சந்திப்பில் ‘யாழ்ப்பாணத்தில் சாதிப் பிரச்சினையே கிடையாது’ என ஆனந்தசங்கரி சொன்னது **//

அவ்வாறா சொன்னார். ஆனால் இவ்வளவு நாளும் திரு.செல்லன் கந்தையன் பற்றி அழுது நியாயம் கேட்டாரே? இது இவரின் 'சிங்கள பேக்கரி மாமா' கதை போலத்தான்.

//**தலித் மாநாட்டில் புலி எதிர்ப்பு அரசியல் பேசப்பட்டது என்கிறீர்களே, அன்று மாநாட்டில் சிறிலங்கா அரசின் இனப் படுகொலைகளையோ தமிழ்மக்கள் மீதான அடக்குமுறைகளையோ நியாயப்படுத்தி எவராவது பேசினோமா?**//

அன்று மாநாட்டில் சிறிலங்கா அரசின் இனப் படுகொலைகளையோ தமிழ்மக்கள் மீதான அடக்குமுறைகளையோ கண்டனம் செய்து எவராவது பேசினீர்களா என அறிய ஆவலாயுள்ளேன்!

நன்றி!
ரூபன்

Anonymous said...

தியோ,

உங்கள் பின்குறிப்புகள் சிந்தனைக்குரியவை.
எனினும் இன்றைய பீ.பீ.சி தமிழோசையில் மாநாடு பற்றி திரு.சீவகன் தொகுத்தளித்த குறிப்புகள் மிகவும் ஏமாற்றம் அளிப்பனவாக இருந்தன. அதில் மாநட்டில் கலந்து கொண்டவர்கள் சொன்ன கருத்துகள் வெறும் மேலோட்டமானவையாகவோ அன்றி ஏற்கனவே அறியப்பட்டனவாகவோ தான் இருந்தன். வெறும் கருத்துகள் மட்டும் போதாது. இவர்கள் சொன்னதெல்லாம் எமக்கு கேட்டுக்கேட்டு புளித்தன வாகவே இருந்தது வேதனை. புளித்த என்ற வார்த்தைப்பிரயோகம் கடுமையானதாக இருந்தால் மன்னித்துக்கொள்வீர்கள் என நினைக்கிறேன்! எனது கருத்து என்னவெனில் யாருமே இப்பிரச்சினையை எவ்வாறு கையாளலாம் அல்லது தீர்வுகாணலாம் எனச்சொல்ல்லாமல் பிரச்சினை இருக்கிறது எனும்பொருள் படி தான் சொல்லிக்கொண்டிருந்தனர். அதற்கு மாநாடு தேவை எனில் மாநாட்டுக்கு வெற்றிதான்!
என்னைப் பொறுத்தவரை பிரச்சினை இருப்பது அறியப்பட்ட ஒன்றுதான். இதை 1980களின் முற்பகுதியில் புலிகள் தவிர்ந்த எல்லா இயக்கங்களும் ,கூட்டங்களும் படிப்புகளும் வைத்து விவாதித்தன. (சீன சார்பு மொஸ்கோ சார்பு காய்ச்சல்) புலிகளும் அவ்வாறு செய்திருக்கலாம் அனால் எனக்கு அவ்வியக்கத்தினுள் எந்த தொடர்பும் இருக்காததால் தெரிந்திருக்கவில்லை. ஆனால் எந்த இயக்கமோ தீர்மானமாக தெளிவாக ஒன்றும் சொல்லவில்லை. இதில் இன்று "புலிக்குளிர்" காயும் ஈ.பி.ஆர்.எல்.எஃப்ம் அடக்கம்!!!!

மீண்டும் பீ.பீ.சீக்கு வருகிறேன்...முக்கியமாக மாநாட்டு அமைப்பாளர் -திரு.தேவதாசன் என நினைக்கிறேன்- சொன்னார் சட்டங்கள் கொண்டுவரப்படவேண்டும் அது இது என்று. பின்னர் உணர்ந்துகொண்டவராக அவை நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்று. பிரச்சினையே இங்குதான். சட்டமும் அதன் நடைமுறைகளும் பற்றி அறிவதற்கு 'தலித்' என்கின்ற சொல்லாடலை 'இறக்குமதி' செய்தவர்கள் சட்டத்தின் நடைமுறை சாத்தியம் பற்றியும் அங்கிருப்போரிடம் அறிந்து வந்திருக்கலாம் என்ற ஆதங்கம் எழாமலில்லை!
மேலும் 'தலித்' என்ற சொற்பதத்தை ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் சொல்லாக பயன்படுத்துவதில் தப்பேதுமில்லை. மாறாக நல்ல உத்திதான். ஆனாலும் 'உலகத்தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்', ' அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம்' இவ்வாறு ஒருங்கிணைக்க கனவு கண்டவர்களே இன்று வெறுத்துப்போய் ஒதுங்கிவுட்டனர். சிலரோ சரியான காரணம் தேடுவதை விடுத்து புலியை பார்த்து குரைத்துக்கொண்டு திரிகின்றனர். இன்னும் சிலரோ இவ்வளவுகாலமும் ராகவ அமைதி 'காத்துவிட்டு' தலித் மாநாட்டில் புலி அப்போதே அது செய்தது இது செய்தது. எனக்குத்தெரியும் என 'கருணா'தனமாக அறிக்கை வாசிக்கிறார்கள். அவரின் அறிக்கை என்னவோ சொந்தக்கருத்தாகத்தெரியவில்லை. கட்டுரையில் 'ஹூல்' மணக்கிறது!!!! இவை எல்லாவற்கும் மேலாக அதே பீ.பீ.சி செய்தி அரங்கில் "உலக கழிவறை வசதி மாநாடு " பற்றிய குறிப்பில் கழிவகற்றும் தொழிலாளர்கள் பற்றியும் மனித கழிவுகளை மனிதர்கள் அகற்றும் அவலம் குறித்து ஆவணப் படம் எடுத்த ஆர்.பி.அமுதன் பகிர்ந்துகொண்ட கருத்துக்கள் ஆழமானவை ஆகவும் வேதனை தருபவையாகவும் வெட்கித்தலை குனியவைப்பனவாகவும் இருந்தன.

Anonymous said...

தோழர் சோபா சக்தியிடம் சில கேள்விகள்?




//எனவே சாதியொழிப்புத்தான் தேசிய இன அய்க்கியத்திற்கு முன்நிபந்தனையாக அமையும். எனவே சாதியொழிப்புக் குரல்கள் தேசியப் போரட்டத்திற்கு எதிரானது என்ற குற்றச்சாட்டு ஆதிக்கசாதிச் சாதிப்பற்றை மறைப்பதற்கான தந்திரங்களே தவிர வேறல்ல.-சோ.ச//

மேலே தோழர் சோபா சக்தி சாதி ஒழிப்புத் தான் தேசிய இன அய்கியத்திற்கு முன் நிபந்தனையாகும் என்கிறார்.ஆனால்
தோழர் இராகவன் தேசியம் பற்றி இப்படிச் சொல்கிறார்,


/தேசியவாதத்திற்கு உலகளாவிய பார்வை கிடையாது. அது தன்னைத் தான் கற்பனை பண்ணும் பிரதேசத்திற்குள் குறுக்கிக் கொள்கிறது. பிறப்பையும் பாரம்பரியத்தையும் மொழியையும் கலாச்சாரத்தையும் தனது அடையாளத்திற்கான கருப்பொருட்களாகக் காண்கின்றது.தமிழ்த் தேசியவாதம் சாதிய அடிப்படையிலான சமூக - கலாச்சாரக் கூறுகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. ஏனெனில் அதன் அடிப்படை பிறப்பு, இரத்த உறவு, பாரம்பரிய நிலம் போன்ற சாதியக் கருத்து நிலைகளே.தலித்தியம் தமிழத் தேசியத்தின் அடிப்படைக் கருத்தியலை கேள்விக்குள்ளாக்குகிறது. ‘சாதி அடிப்படை பிறப்பாலானது’ என்ற சனாதன சைவ வேளாள ஆதிக்கசாதிக் கருத்தியலை மறுதலிப்பதன் மூலம் அது பிறப்பால் தமிழன் என்ற தேசிய அடித்தளத்தையே தகர்க்கிறது. தமிழ்மொழி சாதியக் கூறுகளை கொண்டிருப்பதை அம்பலப்படுத்தித் தமிழ் பேசுபவன், தமிழன் என்ற தேசிய அடையாளத்தையே நிர்மூலமாக்குகிறது. -இராகவன் //

இராகவனின் கூற்றுப்படி தோழர்கள் முன்வைக்கும் தலித்தியம் தமிழ்த் தேசிய அடையாளத்தையே நிர்மூலமாக்கிறது.தேசிய இன அடையாளத்தையே நிர்மூலமாக்கியபடி எங்கனம் தலித்தியம் தேசிய இன அய்கியத்திற்கு வழி வகுக்கும் என்பதைத் தோழர் சோபா சக்தி விளக்குவாரா? தலித்தியமென்பதே தேசியமென்பதை நிராகரிக்கும் போது உங்கள் குரல்கள் தேசியப் போரட்டத்திற்கு எதிரானது என்பது நியாயமான ஒரு குற்றச் சாட்டுத் தானே?

(2)
//தமிழனைத் தமிழனே சாதியத்தின் பேரால் ஒடுக்குகிறான் என்று நான் சொன்னால் சிங்களவனும்தானே ஒடுக்குகிறான் என்று பேசுவது அறமாகுமா? அதையும் பேசுங்கள்! இதையும் பேசுங்கள்! என்கிறேன் நான்.அதைவிடுத்து தேசிய இனப்பிரச்சினையை முன்னிறுத்திச் சாதிய ஒடுக்கமுறையை கண்டுகொள்ளாமலிருப்பது என்ன நியாயம்!//


தோழர் இராகவனின் கட்டுரைப் படி சாதியம் ஒழிய வேண்டும் எனில் தமிழ்த் தேசியம் நிர்மூலமாக வேண்டும்.தமிழ்த் தேசியமென்பதே கற்பனையானதாக இருக்கும் போது, சிங்களப்பேரின வாதமென்பதுவும் தேசியப் பிரச்சினை என்பதுவும் ஆதிக்க சாதிகளின் கற்பனைகள் தானே.பிறகெப்படி நீங்கள் தமிழ்த் தேசியம் பற்றியும் இனப் பிரச்சினை பற்றியும் பேசுவீர்கள்?


//ஆனால் சாதியொழிப்பு என்பது வெறும் சீர்திருத்தங்களால் சாத்தியப்படுவதில்லை. அது இன்றைய தலித் அரசியலின் புரிதலின்படி இடஒதுக்கீடுகள், தனிவாக்காளர் தொகுதிகள் போன்ற பல்வேறு உரிமைகளை வெற்றிகொள்வதின் மூலம் நகர்ந்து சாதியத்தைக் காப்பாற்றும் இந்து மதத்தை வேரோடு கில்லியெறிவதின் முலம்தான் சாத்தியப்படும்.//


இட ஒதுக்கீடு, தனி வாக்களர் தொகுதிகளென்பவை எல்லாம் சீர்திருத்தம் அன்றி வேறென்ன? மேலும் இவற்றை யாரிடமிருந்து கோருகிறீர்கள்?.தமிழ்த் தேசியத்தை நிராகரிக்கும் நீங்கள் எந்தத் தேசிய அரசிடமிருந்து இதனைக் கோருகிறீர்கள்? அரச அதிகாரமென்பதே தேசிய அரசுகளிடமிருக்கும் போது ,தேசியத்தை நிர்மூலமாக்க முயலும் உங்களின் கோரிக்கைகள்
எவ்வகையில் ஏற்கப்படுமென்று கருதுகிறீர்கள்? கோரிக்கைகளே ஏற்கப்படாத விடத்து தலிதுக்களுக்கு நீங்கள் காட்டும் போராட்ட வழி முறை என்ன?மேற் கொண்ட சீர்திருத்தங்களால் சாதியம் ஒழியுமெனில், ஆதிக்கச் சாதிய நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படாத புலத்தில் எங்கனம் சாதியம் தழைத்து ஓங்குகிறது?


//இந்துமத ஒழிப்பு, தலித்துகளிற்கான சிறப்பு இடஒதுக்கீடுகள், தனி வாக்காளர் தொகுதிகள் ஆகிய இலக்குகளை நோக்கி நகராமல் சாதியை ஒழிக்கமுடியுமா சொல்லுங்கள்? இந்த வேலைத் திட்டத்திற்குப் புலிகள் சம்மதிக்கிறார்களா என்று கேட்டுச் சொல்லுங்கள்! இந்தச் சாதியொழிப்பு வேலைத்திட்டத்திற்கு சம்மதிக்காத எவரையும் எதிர்த்துக் குரலெழுப்ப நாங்கள் தயங்கமாட்டோம். இந்தப் பின்னணியில்தான், தலித் அரசியலாளர்கள் புலிகளையும் கூட்டணியையும் இடதுசாரிகளையும் விமர்சிப்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.//

இந்து மதத்தை எவ்வாறு ஒழிப்பீர்கள்? மத மாற்றங்களின் மூலமா?இந்து மதத்தை தடை செய்வதன் மூலமா? அப்படியாயின் மத வழிபாட்டுச் சுதந்திரமென்னும் அடிப்படை உரிமையை எங்கனம் உறுதி செய்யலாம்? இசுலாமியரிடமும்,கிரித்துவர்களிடமும் ,சிங்களப் பவுத்தரிடமும் சாதிய அடுக்குகள் கிடையாதா? இந்து மதத்தை மட்டும் அழிப்பதால் சாதியம் அற்று விடுமா? புலிகளையும், தமிழ்த் தேசியத்தையும் நிர்மூலமாக்குவதன் மூலமே தலிதுக்களின் விடுதலை சாத்தியமென்னும் தெளிவான நிலையில் நின்று கொண்டு புலிகளிடம் என்ன சம்மதத்தை எதிர் பார்க்கீறீர்கள்?

உங்கள் தலித்தியம் என்பது புலி எதிர்ப்பு,தமிழ்த் தேசிய எதிர்ப்பு என்னும் ஒற்றை நோக்கை உடையது.இதனால் தான் இவ்வளவு முரண்பாடுகள்.தலித்து மக்களின் விடுதலையையும் உரிமைகளையும் குழி தோண்டிப் புதைக்க வல்லது.துரோகிகள் அல்லது தேசிய எதிர்ப்பாளர்கள் என இலகுவில் முத்திரை குத்தப்பட்டு இன்று தமிழ்த் தேசிய அரசியலில் அதிகாரத்தில் ஆளுமை செலுத்தும் தலிதுக்கள் ,ஆதிக்கச்சாதியினரால் ஒதுக்கப்படக் கூடிய ஏது நிலையை உருவாக்கக் கூடியது.உங்கள் பின்னால் இதனாலையே புலி எதிர்ப்பு துரோகக் கும்பல் மட்டுமே அணிவகுத்து நிற்கிறது.இராயகரனின் பதிவுகள் இதனை நன்கு அம்பலப்படுத்தி உள்ளன.அங்கே தலித்துக்கள் எவரும் இல்லை.

தலிதுக்களின் விடுதலை என்பது தமிழ்த் தேசிய அரசில் அவர்கள் செலுத்தும் ஆளுமையினாலையே சாத்தியமாகும்.போர் புரட்டிப் போட்ட சாதிய அடுக்கின் அதன் நிறுவனங்களின் அழிவில் இருந்தே ஒரு சம தர்மமான தமிழ்த் தேசிய அரசு சாத்தியமாகும். களத்தில் நின்று போராடிய சக்திகளே அரசியல் அதிகாரத்தைத் தமது கைகளில் தக்க வைத்திருப்பதே புலம் பெயர்ந்த ஆதிக்கச் சாதியிடம் அதிகாரம் மீண்டும் செல்லாது இருப்பதை உறுதி செய்யும். தலித்தியம் எதிர் தமிழ்த் தேசியமென்னும் சமன் பாட்டால் இது சாத்தியப் படப் போவதில்லை.



அற்புதன்

Anonymous said...

டக்ளஸ் கொடுத்த பணத்திற்கு என்ன ஆனது??!!
தமிழ்மணத்தில் தலித் மாநாடு பற்றி பல விவாதங்கள் நடத்து கொண்டிருந்த போது "கள்ள மௌனம்" சாதித்த சோபசக்தி இப்பொழுது வாய் திறந்திருக்கிறார்.
"மாநாட்டை நடத்தியவர்கள் புலிகளின் எதிர்ப்பாளர்கள்' என்று சிலர் இணையத்தளங்களில் ஓயாமல் கூக்குரலிடுகிறார்கள். போததற்குச் சிலர் வெளியான மாநாட்டு உரைகளிலிருந்து அசைக்க முடியாத எடுத்துக்காட்டுகளைக் காட்டித் தலித் அரசியலாளர்கள் புலிகளின் எதிர்ப்பாளர்கள் என்றும் நிறுவியிருக்கிறார்கள். இதற்கு எதற்கு இவர்கள் இவ்வளவு சிரமப்பட வேண்டும் என்பதுதான் எனக்கு உண்ணாண விளங்கவில்லை. நாங்கள்தான் பல வருடங்களாகவே "நாங்கள் அரசியலில் புலிகளின் சற்றேனும் விட்டுக்கொடுக்காத எதிரிகள்" என்று தமிழில் மட்டுமல்லாது பிரஞ்சு, ஆங்கிலம், சிங்களம், மலையாளம் எனப் பல பாஷைகளிலும் எழுதிவருகிறோமே! ஒளிவுமறைவில்லாமல் சொல்லி வருகிறோமே!"
இப்படி சோபாசக்தி தன்னுடைய தளத்தில் எழுதியிருக்கிறார். இதை முதலிலேயே சொல்லித் தொலைத்திருந்தால் பல கசப்புணர்வுகள் தவிர்க்கப்பட்டிருக்கும். "தலித் மாநாடு" என்ற பெயரில் விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்கள் ஒன்று கூடுகிறார்கள் என்று நாம் மீண்டும் மீண்டும் சொல்வது உண்மை என்பதை அனைவரும் உணர்ந்திருப்பார்கள். மாநாடு நடக்கும் வரை கள்ள மௌனம் சாதித்து விட்டு இப்பொழுது கொக்கரிப்பதிலிருந்து இவர்களின் தீய நோக்கத்தை புரிந்து கொள்ளலாம்.
இதை விட சோபாசக்தி எழுதிய இன்னொரு விடயம் எனக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.
டக்ளஸ் தேவானந்தா கொடுத்த பணம் மாநாட்டு ஏற்பாட்டாளர்களுக்கு போய்ச் சேரவில்லையாம். மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் பணம் இல்லாமல் கஸ்ரப்படுகிறாராம்.
சோபாசக்தி எமக்கு காதுகுத்த முனைகிறாரா?
இப்படி ஒரு செய்தியைச் சொல்லி சோபாசக்திக்கு மாநாட்டு ஏற்பட்டாளர்கள் காது குத்தியுள்ளார்களா?
இந்தியா செல்வதற்கு வைத்திருக்கும் பணத்தில் சிறிதை இரக்கப்பட்டு தமக்கு கொடுப்பார் என்று மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கிறார்களா?
உண்மையிலேயே டக்ளஸ் பணம் கொடுக்காது ஏமாற்றி விட்டாரா?
கொடுத்த பணத்தை இடையில் யாராவது அமுக்கி விட்டார்களா?
நிறையக் கேள்விகள் எழுகின்றன. யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதால், அனைத்திற்குமே சந்தர்ப்பங்கள் உள்ளன. எதற்கும் இதைப் பற்றி உள்வட்டாரங்களில் விசாரித்துப் பார்க்க வேண்டும்.
இன்றைக்கு பத்திரிகை அலுவல்கள் இருக்கின்றன. நாளை "தீபாவளி இறுவட்டு" வேலைகள் முடிக்க வேண்டும். தொடர்ந்து வரும் நாட்களில் இறுவட்டுக்களை வினியோகிக்கும் வேலை இருக்கிறது.
தற்பொழுது "டக்ளஸ் கொடுத்த பணத்திற்கு என்ன ஆனது" என்று கண்டுபிடிக்கும் புலனாய்வு வேலைகளில் ஈடுபடுவது உடனடியாக சாத்தியம் இல்லை. இந்த வேலையை நண்பர் சாத்திரி மேற்கொண்டால் நல்லது. எனக்கு வேலை மிச்சம்.

-சபேசன்

Anonymous said...

சோபா சக்தியின் கட்டுரை பற்றிய ஒரு சில விமர்சனங்கள் வைப்பது அவசியம். தலித் மாநாட்டிற்கு வீ. ஆனந்தசங்கரி, EPRLF ( ப.நா) செயலாளர் சிறீதரன் போன்றவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்கள். வாழ்த்துகளை வரவேற்போம்.

ஆனால் ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணி அரசியலே யாழ் ஆதிக்கசாதியினரின் அரசியல் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடவில்லை. இரண்டு வருடங்களிற்கு முன்பு நடந்த ‘ஸ்ருட்காட்’ இலக்கியச் சந்திப்பில் ‘யாழ்ப்பாணத்தில் சாதிப் பிரச்சினையே கிடையாது’ என ஆனந்தசங்கரி சொன்னது இப்போதும் எனது காதில் கேட்டுக்கொண்டேயிருக்கிறது

என் கிறார் சோபா சக்தி. ஆனந்த சங்கரி சொன்ன விடயம் கவனத்துக்கு எடுக்கப்பட வேண்டியதே. ஆனாலும் ஆனந்த சங்கரி வாழ்த்து தெரிவித்ததில் ஒரு மாற்றம் இருக்கிறது. இதுவரையில் சாதிக்கெதிரான போராட்டங்களை கூட்டணித்தலைமைகளும் அதன் வாரிசுகளும் எதிர்த்து வந்தனர். ஆனந்தசங்கரி இன்று ஒருநலிந்த குரல். அவர் பற்றிய விமர்சனங்கள் பல் வேறு இருக்கிறன. தலித்திய சிந்தனை அதன் அரசியல் தத்துவார்த்த பின்னணி ஆகியவற்றை எதிர்கொள்ள முடியாமல் சேறு வாருவதில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் தேசிய வாதிகள் அரை குறை மாக்சிய வாதிகள் மத்தியில் ஆனந்த சங்கரியின் வாழ்த்தை குறைந்த பட்சம் தலித்தியத்தை அங்கீகரிக்கும் ஒரு பொசிடிவ் விடயமாக ஏன் பார்க்க கூடாது. அது மட்டுமல்ல தேசிய வாத கருத்தியலை மையமாக கொண்டு சிந்திக்கும் அனைத்து அரசியலாளர்களும் தலித்திய சிந்தனையை எதிர்கொள்ள தயங்கும் இக்கால கட்டத்தில் ஆனந்த சங்கரி துணிச்சலாக வாழ்த்தாவது தெரிவித்திருக்கிறார். இந்த வாழ்த்து அவரை தேசிய வாத சக்திகளிடமிருந்து மேலும் அன்னிய படுத்தும் என்பதை தெரிந்து கொண்டு.

Anonymous said...

// ஆனாலும் ஆனந்த சங்கரி வாழ்த்து தெரிவித்ததில் ஒரு மாற்றம் இருக்கிறது…//

அந்த ஒரு மாற்றம் என்னவென்றால் அவரைப் புலிகளுக்கு பிடிக்காமல் போய்விட்டது தான் ,மாறாக அவருக்கு புலிகளைப் பிடிக்கவில்லை என்று அர்த்தம் கொள்வீர்களானால் உங்களள நீங்களே ஏமாற்றுகிறீர்கள், தேவை எனின் அவர் ஈ.பி.டி.பி யினரால் தாக்கப்பட்ட பின்னான அவர் அறிக்கைகளைத்தேடிப் படிக்கவும்
//இதுவரையில் சாதிக்கெதிரான போராட்டங்களை கூட்டணித்தலைமைகளும் அதன் வாரிசுகளும் எதிர்த்து வந்தனர். ஆனந்தசங்கரி இன்று ஒருநலிந்த குரல்.///

நலிந்தகுரலை வைத்து அரசியல் செய்தவர்கள் என்ற அவமானத்தை தலித்மக்களுக்கு ஏற்படுத்தாதீர்கள்! ஆனந்தசங்கரி தலித்துகளுக்கு எந்த நன்மையையும் கொண்டுவரமாட்டார். மாறாக தீமையே விழையும். அவரின் குறிக்கோள் எல்லாம் புலிகளிடமிருந்து அதிகாரம் தனது கைக்கு வரவேண்டுமென்பது தான். இதை விளங்க ஒரு படிப்பும் தேவையில்லை. அத்துடன் அவர் பேச்சுவார்த்தைக்கு சுவிற்சலாந்து சென்ற புலி அமைப்பினரை ‘இவர்களுக்கு என்ன தெரியும்’ என எள்ளிநகையயடியதையும் கவனிக்கவேண்டும். இவர் எள்ளலில் புலிஎதிர்ப்பையும் விஞ்சிநின்றது மேட்டுக்குடித்தன நக்கலே!!! தலித்துகளுக்கு இந்நக்கல்த்தனம் புரியாததல்ல!

///தேசிய வாதிகள் அரை குறை மாக்சிய வாதிகள் மத்தியில் ஆனந்த சங்கரியின் வாழ்த்தை குறைந்த பட்சம் தலித்தியத்தை அங்கீகரிக்கும் ஒரு பொசிடிவ் விடயமாக ஏன் பார்க்க கூடாது. ///

புலிஆதரவும் இதேகேள்வியை மாற்றிக்கேட்டால்???

// இக்கால கட்டத்தில் ஆனந்த சங்கரி துணிச்சலாக வாழ்த்தாவது தெரிவித்திருக்கிறார். ///

வாழ்த்தென்ன வாழ்த்து அவர் அரசு நடாத்திய பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் உரையே ஆற்றியவரரச்சே!!! அம்மாநாட்டை பல பயங்கரவாத எதிர் ‘நிபுணர்கள்’ அரச பிரச்சார மாநாடென காரணம் காட்டி தவிர்த்தார்கள்! இவரோ எங்கு சந்து கிடைக்கும் சிந்துபாடலாம் என அலைகிறார். நீங்கள் என்னடா என்றால் புல்லரித்து பூரிக்கிறீர்கள்!

//இந்த வாழ்த்து அவரை தேசிய வாத சக்திகளிடமிருந்து மேலும் அன்னிய படுத்தும் என்பதை தெரிந்து கொண்டு.//

ம்ம்ம்ம்ம்ம்!!!! மேலும் அன்னியப்படுத்தும்? அவர் எழுதிய எள்ளல் கடிதங்களும் அனுராதபுரக்கண்டனங்களும் படுத்தாததை தலித் வாழ்த்து படுத்தும் என்பது வேண்டுமானால் தலித் மாநாட்டை பெரிதாக காட்ட பயன்படலாமே அன்றி உண்மை அதுவல்ல!

rooban

Anonymous said...

தோழர் அற்புதனுக்கு
சிங்கள தேசியவாதத்தின் கண்ணாடி விம்பமே தமிழ் தேசிய வாதம் என்பது எனது கருத்து. தேசியமென்பது அடிப்படையில் கற்பிதமே. ஆனாலும் அந்த கற்பிதம் கருத்தியலாகி அரசியல் செயல் பாடாக வரும் போது அதுநடைமுறையாகிறது. தேசியவாதம் ஒரு புறம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை ஒற்றை பரிமாண அடையாளத்துள் குறுக்குகிறது. மறுபுறம் சமூக யதார்த்தமாக இருக்கும் வர்க்க சாதி ஏற்ற தாழ்வுகளை கலாச்சார வேறு பாடுகளை பிரதேச வேறுபாடுகளை மூடி மறைக்கப்பார்க்கிறது. இந்த விடயங்களை தமிழ் தேசிய வாத அரசியல் தனது வேலைத்திட்டத்தில் வைத்துநடைமுறைப்படுத்தினால்நான் எனது கருத்தை மாற்ற தயார். அது விடுதலை புலிகளாக இருந்தால் என்ன அல்லது மாற்று கருத்து கொண்ட தமிழ் தேசியவாத அமைப்புகளாக இருந்தாலென்ன தலித்திய அரசியலை அதன் வரலாற்றை ஏற்று கொண்டு தலித் மக்களுக்கான விடுதலையை சம காலகட்டத்தில் எடுப்பார்களா. தீர்வுத்திட்டம் சமஸ்டி தனிநாடு என பல கோசஙகள். இந்த கோசங்கள் தீர்வு திட்டங்களில் காலங்காலமாக ஒடுக்கப்பட்டு வந்த தலித் மக்களை பற்றிய அவர்களின் சுபீட்சத்தை பற்றிய என்வ்வித முன்னெடுப்புகளும் காணப்படாதது வெட் க கேடு. இந்த தேசிய அரசியலுக்கு விட்டு கொடுத்து தலித்திய அரசியல் தன்னை மாற்ற வேண்டுமென கருதுவது என்னநியாயம். தலித்துகளுக்கு குறைந்தபட்சம் ஊர் என்ற அடையாளம் கூட மறுக்கப்படுகிறது. ஒரு புறம் தீண்டதகாதவன் என்ற அடையாளத்தை கொடுத்து தலித் மக்களை தொடர்ந்து அவமானப்படுத்தி புறக்கணித்து கொண்டு மறுபுறம் நீங்கள் தேசியத்திற்குள்ளே ‘ ஒற்றுமை’ யாக வாங்கோ என கேட்பதில் என்ன தார்மீகம் இருக்கிறது. ஆத்வன் தீட்சண்யா கீற்றில் கொடுத்தநேர்காணலில் கூறுகிறார்:

"தமிழன் என்ற பொது அடையாளத்தோடு ஒன்றுபடுவது, பேசுவதற்கு உவப்பானதாக இருக்கலாம். தமிழன் என்ற பொது அடையாளத்தை வைத்துக்கொண்டு சாலையில் ஒரு தலித் சுதந்திரமாக நடந்துவிடவோ, மற்றவர்களுடன் சேர்ந்து சாப்பிடவோ, மற்ற சாதிகளில் திருமணம் செய்து கொள்ளவோ முடியுமா? ஹரியானாவில் கொல்கிறார்கள். ஆந்திராவில் சுண்டூரில் கொல்கிறார்கள். பீகாரில் தலித்துகளைக் கொல்ல தனிப்படையே இருக்குது. கயர்லாஞ்சியில் நடந்த கொடுமை நாடறியும். இதிலிருந்து தமிழ்நாடு எந்தவிதத்தில் மாறுபட்டிருக்கு? தமிழன் எந்தளவிற்கு சாதி வித்தியாசம் பாராமல் தீண்டாமையை கைக்கொள்ளாமல் சமத்துவம் பாராட்டுகிறவனாய் இருக்கிறான்? இந்த நாட்டில் எங்கேயிருந்தாலும் எங்கள் உயிரும் உடைமையும் மசுருக்கு சமானமாகக்கூட மதிக்கப்படலேன்னா தமிழன் அல்லது இந்தியன் என்கிற வெட்டிப் பெருமையை நானெதெற்கு சுமந்து திரியவேண்டும்?"

மீண்டும் கூறுகிறேன் தமிழ் தேசிய வாத சிந்தனை முறையிலிருந்து நாம் விடயங்களை ஆராய்வது தான் பிரச்சனை. தேசியவாததிற்கு வெளியே ஒரு பரந்த உலகம் இருக்கிறது.

அற்புதன் said...

//சிங்கள தேசியவாதத்தின் கண்ணாடி விம்பமே தமிழ் தேசிய வாதம் என்பது எனது கருத்து.//

சிங்களத் தேசியவாதத்தின் ஒடுக்கு முறைக்கு எதிராகத் தோற்றம் பெற்றதே தமிழ்த் தேசிய வாதம். தமிழ்த் தேசிய வாதம் சிங்களவர்களை ஒடுக்குவதற்காகத் தோன்றவில்லை.இந்த நிலையில் எவ்வாறு தமிழ்த் தேசியவாதம் சிங்களத் தேசியவாதத்தின் விம்பம் என்பீர்கள்?
ஒன்று ஒடுக்குகிறது,இன்னொன்று ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுகிறது.இரண்டும் ஒன்றல்ல.

//தேசியமென்பது அடிப்படையில் கற்பிதமே. ஆனாலும் அந்த கற்பிதம் கருத்தியலாகி அரசியல் செயல் பாடாக வரும் போது அது நடைமுறையாகிறது. //

எல்லாமுமே கற்பிதங்கள் தான்.சாதியம் ஒரு கற்பிதம் அதன் அடிப்படையில் எழும் தலித்தியம் ஒரு கற்பிதம் தான்.

//தேசியவாதம் ஒரு புறம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை ஒற்றை பரிமாண அடையாளத்துள் குறுக்குகிறது.//

இதே கூற்றை நான் மாற்றிக் கூறினால், தலித்தியம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை ஒற்றைப் பரிமாண அடையாளத்துக்குள் குறுக்கிறது என்றும் கூறலாம்.அடையாளம் என்பதுவே பொதுமைப் படுத்துவது தான்.அமெரிக்காவில் வாழும் 'தலித்துக்கள்', மலையகத் 'தலித்துக்கள்', மட்டக்களப்புத் 'தலித்துக்கள்',தமிழ் நாட்டில் இருக்கும் 'தலிதுக்கள்' என எல்லோரையும் ஒற்றைப் பரிமாணத்தில் தலித்தியம் அடக்குகிறது, பொதுமைப் படுத்துகிறது ஆகவே தலித்தியம் ஒற்றைப் பரிமாணம் உடையது என்று கூறினால் ஏற்றுக் கொள்வீர்களா?

யார் தலித்து என்னும் உங்கள் வரைவிலக்கணப் படி பெண்களும் தலித்துக்கள் தான்.அப்படியெனின் கில்லரி கிளிண்ட்டன் முதல் எங்களூர் செல்லம்மா வரை எல்லோரையும் தலித்தியம் ஒற்றைப் பரிமாணத்திற்குள் அடக்குகிறது.

ஆகவே இங்கே பொதுமைப் படுத்துவதல்ல பிரச்சினை.யார்,யாரை என்ன அடையாளத்தின் மூலம் ஒடுக்கிறார்கள் என்பதே பிரச்சினை.


//ம் தேசியப்போராட்டத்தை
மறுபுறம் சமூக யதார்த்தமாக இருக்கும் வர்க்க சாதி ஏற்ற தாழ்வுகளை கலாச்சார வேறு பாடுகளை பிரதேச வேறுபாடுகளை மூடி மறைக்கப்பார்க்கிறது.//

ஒரே தருணத்தில் பல்வேறு முரண்பாடுகள் ஒரு சமூகத்தில் இருக்கும்.இவற்றில் எந்த அடையாளத்தின் அடிப்படையில் பிரதானமான ஒடுக்குமுறை நிகழுகிறதோ, அந்த அடையாளத்தை ஒட்டியே மக்கள் அணிதிரளுகிறார்கள்.தமிழர்கள் என்பதற்காக எவரெல்லாம் ஒடுக்கப்படுகிறார்களோ ,அவர்கள் எல்லாம் தமிழர் என்னும் ஒரு பொது அடையாளத்தால் ஒன்று படுகிறார்கள்.எனெனில் அவ்வாறு ஒன்று படாமல் போராட முடியாது.
தமிழர்களுக்குள் இருக்கும் முரண்பாடுகளின் அடிப்படையில் போராடிக் கொண்டே, தமிழர்களால் ஒன்று பட்டு, தேசிய ரீதியில் போராட முடியாது.
வரலாற்று இயங்கியல் என்பது அது தான்.இன ரீதியான ஒடுக்குமுறை பரவலாக நிகழாத காலகட்டத்திலேயே சாதியப் போராட்டங்கள் நடைபெற்றன.எனெனில் அன்றைய காலகட்டத்தில் அதுவே பிரதான ஒடுக்கு முறையாக இருந்தது.


// இந்த விடயங்களை தமிழ் தேசிய வாத அரசியல் தனது வேலைத்திட்டத்தில் வைத்துநடைமுறைப்படுத்தினால்நான் எனது கருத்தை மாற்ற தயார்.//

போர் என்பது சாதியக் கட்டுமானக்களை உருட்டிப் போட்டுள்ளது.சமூகத்தின் அடித்தள மக்களே போராடும் குணம் படைத்தவர்களாக இருப்பதுவும், சாதிய அடுக்கின் உயர் நிலை தமது வசதி வாய்ப்புக்களைப் பயன் படுத்திப் புலம் பெயர்ந்ததும், போரால் நிகழ்ந்த மாற்றங்கள்.இந்த மாற்றங்களின் மேல் தான் தமிழ்த் தேசிய அரசு கட்டப்படுகிறது.இந்த யதார்த்தைப் புறந்தள்ளி விட்டு பழம் கதை பேசி அய்ரோப்பாவில் இருந்து நீங்கள் எல்லோரும் தலித்தியம் பேசுவது தான் வேடிக்கையான விடயம்.

தமிழ்த் தேசியத்தை விடு விட்டு நீங்கள் இருக்கும் அய்ரோப்பாவில் வாழும் 'தலிதுக்களின்' நிலையை உயர்த்தும் நடை முறைப்போராட்டங்களிலாவது செயற்படுங்கள்.

ஆனால் நீங்கள் எவருமே இதனைச் செய்ய மாட்டீர்கள் எனெனில் புலிகளை எதிர்ப்பதே உங்கள் பிரதான இலக்கு.அதற்கு இப்போது இந்தியாவில் உருவாகியிருக்கும் தலிதுக்களின் எழுச்சியையும் தலித்திய இயக்கங்களையும் பயன்படுத்தலாம் என்று இறங்கி இருக்கிறீர்கள்.

Anonymous said...

நடந்து முடிந்த தலித் மாநாட்டின் வரவு செலவு அறிக்கையைத் 'தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினர்' வெளியிட்டுள்ளனர். அதை இங்கே பார்க்கலாம்.
http://www.thuuuu.canalblog.com/
-சத்தியக்கடதாசி

மாசிலா said...

உலகத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் எவராயிருந்தாலும் அவரவர் தத்தமது பிரச்சினைகளுக்கு தான் சார்ந்த சமுதாய முன்னேற்றத்திற்கு, நல்வாழ்க்கைக்கு, தம் வரும் தலைமுறைகளுக்கு நல்ல அலோசனைகள், திட்டங்கள், படிப்பினைகள் போன்றவைகளை தமது சமூதாய தனிப்பட்ட சொந்த முயற்சியில் கையிலெடுத்து மாண்டுபோன உரிமைகளை, சுதந்திரத்தை மீட்டெடுக்க, அடிப்படை மனித வாழ் தேவைகளுக்காக போராடுவதை நாம் ஆதரிக்க வேண்டும்.

தலித்துக்கள் யாருடைய சொத்தும் கிடையாது. இவர்கள் முற்றிலும் ஒரு சுதந்திர சமூகத்தினர். உலகத்தின் எந்த ஒரு சமூகத்தினர் போலவும் இவர்களுக்கும் இம்மண்ணில் இவர்கள் இட்டப்பட்ட வாழ்க்கை வாழ அனைத்து உரிமைகளும் உண்டு. இவர்கள் வாழும் முறையை இவர்களே தேர்ந்தெடுக்கவும் உரிமை உண்டு. இவர்கள் பிரச்சினைகளை இவர்களே கையிலெடுத்து தீர்வுகள் காண இவர்களுக்கு உரிமை மற்றும் திராணியுண்டு என்பதை மற்றவர்கள் மறைக்கவோ ஏற்க மறுக்கவோ முயல்வது அறிவின்மை.

இந்தியாவைப்போல், பலதரப்பட்ட இனம், மொழி, கலாச்சாரம், பண்பாடு, மதங்கள் ஆகியவைகளை உட்கொண்டு மிகுந்த சகிப்புத்தன்மையுடன் வாழ கற்றுக்கொள்ளவேண்டும். பன்முக சமுதாயமே உண்மையான சனநாயக சுதந்திர சமுதாயம். பன்முக சமுதாயங்களின் ஒற்றுமையுடனான இணைந்த சகிப்புத்தன்மை மற்றும் மாற்றான் வேற்றுமைகளை ஏற்று மதித்து நடக்கும் ஒழுக்கமுடைய சமூதாயம் ஒரு சீரிய சனநாயக மனித சக்தியாகும்.

ஒருவரை குற்றம் கோள் சொல்லி நேரம், சக்திகளை வீண்விரயம் செய்வது காரியத்திற்கு ஆகாதது.