"எங்களுடைய எசமானர்களாக இருப்பது உங்களுடைய நலன்களுக்கு உகந்ததாக இருக்கக்கூடும். ஆனால் உங்களுடைய அடிமைகளாக இருப்பது எங்களுக்கு எவ்வாறு ஏற்புடையதாக இருக்கும்?"
___________________________________________ -துசிடிடெஸ்
எதிர் வரும் 16-17ம் தேதிகளில் இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி இரண்டாவது தலித் மாநாட்டை இலண்டனில் நடத்தவிருக்கிறது. மாநாட்டில் இலங்கையிலிருந்து தோழர். ந. இரவீந்திரனும் தமிழகத்திலிருந்து தோழர்கள் அ.மார்க்சும், ஆதவன் தீட்சண்யாவும் கலந்துகொண்டு உரைவீச்சு நிகழ்த்தவிருக்கிறார்கள். மாநாட்டு அறிவித்தல்கள் வெளியானதும் சென்ற தடவை போலவே இம்முறையும் தலித் அரசியல் குறித்துப் பல்வேறு கேள்விகள் தோழர்களால் இணையத்தளங்களிலும் நேரிலும் எழுப்பப்படுகின்றன.
ஒடுக்கப்பட்ட சாதியினரைக் குறிக்கப் பஞ்சமர் என்ற சொல் வழக்கத்திலிருக்கும்போது அதை மறுத்து 'தலித்' என்ற சொல் ஏன் முன்னிறுத்தப்படுகிறது என்ற எளிமையான கேள்வி மறுபடியும் மறுபடியும் எழுப்பப்படுகிறது. பஞ்சமர் என்பது ஈழத்தில் ஒடுக்கப்பட்ட சாதிகளான பள்ளர், பறையர், நளவர், வண்ணார், அம்பட்டர் ஆகிய அய்ந்து சாதிகளையும் குறிப்பதற்கான சொல் என்றொரு தவறான புரிதல் பலரிடமுண்டு. கே. டானியல், டொமினிக் ஜீவா போன்றவர்கள் கூட இந்த அய்ந்து சாதிகளையும் குறிக்கும் சொல்லே பஞ்சமர் என்று (பஞ்ச பூதங்கள், பஞ்ச பாண்டவர் என்பதைப்போல) பல தடவைகள் பேசியும் எழுதியுமிருக்கிறார்கள். ஆனால் இந்தப் புரிதல் சரியற்றது.
இந்துமத வருணாசிரம நெறிகளின்படி பார்ப்பனர்கள், ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் எனப்படும் நான்கு வருணத்தினரும் முறையே பிரம்மனின் தலை, மார்பு, தொடை, பாதம் ஆகிய பகுதிகளிலிருந்து தோன்றியவர்களாம். இந்த நான்கு வருணங்களிற்கும் புறத்தே தள்ளி வைக்கப்பட்ட மக்கள் பிரம்மனிடமிருந்து தோன்றவில்லையாம். எனவே பிரம்மனிடமிருந்து தோன்றாதவர்கள் அ- வருணர்கள் அல்லது அய்ந்தாவது வருணத்தவர்கள் என்று இந்துமதத்தில் குறிப்பிடப்பட்டார்கள். இந்த அய்ந்தாவது வருணக் கோட்பாட்டிலிருந்ததான் 'பஞ்சமர்' என்ற இந்துமதச் சொல், இழிவுச்சொல் உருவாக்கப்பட்டது. காந்தியார் பிரம்மனிடமிருந்து தோன்றாத இந்த மக்கள் பெருமாளிடமிருந்து தோன்றியவர்கள் என்றொரு சொல்லாடலைக் கண்டு பிடித்து பெருமாளின் மக்கள் எனும் பொருள்பட 'அரிஜனங்கள்' என்று பெயரிட்டு அழைத்தார். அரிஜன் என்ற பெயர் காந்தியாரின் காலத்திலேயே பாபா சாகேப் அம்பேத்கரால் நிராகரிக்கப்பட்டது.
ஆக, பஞ்சமர் என்ற பெயர் மட்டுமல்லாமல் அரிஜன், பறையர், பள்ளர் என்ற பெயர்களும் கூட சாதியத்தை உருவாக்கிய ஆதிக்க சாதியினராலும் இந்து மதத்தாலும் தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட பெயர்களே தவிர தலித் மக்கள் தாங்களே தேடிக்கொண்ட பெயர்கள் கிடையாது. எனவே அந்த இழிவுச் சொற்களை மறுத்து நொருக்கப்பட்ட மக்கள் என்ற பொருள்கொண்ட 'தலித்' என்ற சொல்லை மகராட்டிரத்தில் தலித் சிந்தனையாளர்கள் முன்னிறுத்தினார்கள். உலகம் முழுவதுமுள்ள தாழ்த்தப்பட்ட மக்களை ஒன்றிணைக்கும் மற்றும் அடையாளப்படுத்தும் சொல்லாகத் தலித் என்ற சொல் இன்று உருவாகியுள்ளது. முன்பெல்லாம் தீண்டப்படாத மக்களைக் குறிக்க அய்ரோப்பிய மொழிகளில் 'Paraiyas' என்ற வார்த்தை உபயோகிக்கப்பட்டது. இப்போது இந்த மொழிகளில் தலித் என்ற சொல்லே கையாளப்படுகிறது. பல்வேறு சாதிய அடையாளங்களுக்குள் தள்ளிவிடப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களை உட்சாதிப் பிரிவுகளைக் கடந்து ஒன்றிணைக்கும் அடையாளமாகவும் தலித் என்ற அடையாளம் திகழ்கிறது.
ஈழத்தில் யோவேல் போல், ஜேக்கப் காந்தி போன்றவர்கள் 1940களிலேயே பஞ்சமர் என்ற சொல்லை நிராகரித்து 'சிறுபான்மைத் தமிழர்கள்' என்ற அடையாளத்தையே முன்னிறுத்தினார்கள். அவர்கள் கட்டியெழுப்பிய சாதியொழிப்பு அமைப்பிற்கு 'சிறுபான்மைத் தமிழர் மகாசபை' என்றுதான் பெயர்.
அப்படியானால் தலித் என்ற சொல்லை விடுத்துச் சிறுபான்மைத் தமிழர்கள் என்று அழைத்துக்கொள்ளலாமே என்றொரு இடக்குமடக்கான கேள்வியும் எழுப்பப்படுகிறது. இப்போது ஈழத்திலிருந்து ஏராளமான வெள்ளாளர்கள் புலம்பெயர்ந்துவிட்டதால் ஈழத்தைப் பொறுத்தவரை அவர்கள்தான் இப்போது சிறுபான்மையினர். வேண்டுமென்றால் வெள்ளாளர்கள் தங்களைச் சிறுபான்மைத் தமிழர்கள் என்று அழைத்துக்கொள்ளட்டும்
என்றாலும் தலித் தமிழ் வார்த்தையில்லையே? என்றுறொரு துணைக்கேள்வியும் அடிக்கடி கேட்கப்படுகிறது. பஞ்சமர் மட்டும் தமிழ் வார்த்தையா என்ன? அதுவும் வடமொழி வார்த்தைதானே. சாதி என்ற வார்த்தையும் வடமொழிதான். தமிழில் புழக்கத்திலிருக்கும் தேசம், ஜனநாயகம், சோசலிசம், கொம்யூனிஸம், போன்ற ஊருப்பட்ட வார்த்தைகளைத் தமிழ்மொழி பிறமொழிகளிலிருந்துதானே ஏற்றுக்கொண்டுள்ளது. ஏன் சூரிய தேவன், துவக்கு, துப்பாக்கி போன்றவை கூட பிறமொழி வார்த்தைகள்தானே! இதைவிட அன்றாட வாழ்வியற் சொற்களில் கூட எண்ணுக்கணக்கற்ற பிறமொழிச் சொற்களைத் தமிழ்மொழி உள்வாங்கித்தானேயிருக்கிறது. ஒரு மொழி பிறமொழிச் சொற்களைக் கொள்வதும் கொடுப்பதும் தவிர்க்க முடியாததே. இன்று புழக்கத்திலிருக்கும் எல்லா மொழிகளுமே பிறமொழிச் சொற்களை - குறிப்பாக அரசியலிலும் அறிவியலிலும் - உள்வாங்கியுள்ளன. தேசம் என்னும்போதோ சோசலிசம் என்னும்போதோ சூரியதேவன் என்னும்போதோ வாயைப் பொத்திக்கொண்டிருப்பவர்களுக்குத் தலித் என்று நாங்கள் சொன்னால் மட்டும் தனித் தமிழ்பற்றுப் பொங்கிவருவதை என்னவென்று சொல்வது!
'புலம்பெயர் தேசங்களிலுள்ள தலித் அரசியலாளர்கள் மார்க்ஸிய எதிரிகள்' என்று ஒரு நான்கு மடையர்கள் எப்போதும் கூக்குரலிட்டுக்கொண்டேயிருக்கிறார்கள். மார்க்ஸியத்தின் போதாமைகள் குறித்து நாங்கள் பேசியிருக்கிறோம். பின்நவீனத்தைக் கொண்டாடும் அதே தருணத்தில் 'பின்நவீனத்துவநிலை என்பது ஒரு தத்துவமோ, அரசியல் இயக்கத்தின் வேலைத்திட்டமோ, இலக்கியக் கோட்பாடோ கிடையாது. அது அறிதல் முறைகளின் தொகுப்பு மட்டுமே' என்று நாங்கள் மறுபடியும் மறுபடியும் சொல்லிவருகிறோம். மார்க்ஸியம் சாதிச் சமூகத்தின் தனித்துவமான இயங்குமுறைகளைக் கவனத்திலெடுத்து வளர்த்தெடுக்கப்பட வேண்டியது என்கிறோம். தமிழகத்திலும் ஈழத்திலும் தொடர்ந்து மார்க்ஸியர்களுடன் உரையாடிக்கொண்டிருக்கிறோம். எங்கள் இணையத்தளங்களிலும் இதழ்களிலும் அவர்களின் எழுத்துகளை மகிழ்வுடன் பிரசுரிக்கிறோம். இதன் பொருள் நாங்கள் மார்க்ஸிய விரோதிகள் என்பதா?
இலண்டன் தலித் மாநாட்டில் உரைவீச்சு நிகழ்த்த அழைக்கப்பட்டிருப்பவர்களின் பெயர்களைச் சற்றுக் கவனியுங்கள். தோழர் ந. இரவீந்திரன் இலங்கையிலுள்ள குறிப்பிடக்கூடிய மார்க்ஸியச் சிந்தனையாளர்களில் ஒருவர், புதிய ஜனநாயக் கட்சியில் இயங்குபவர், தேசிய கலை இலக்கியப் பேரவையின் செயற்பாட்டாளர். தோழர் ஆதவன் தீட்சண்யா இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கலை இலக்கியப் பிரிவான முற்போக்கு எழுத்தளர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர். தோழர் அ. மார்க்ஸ் நீண்ட நாட்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் செயற்பட்டு எண்பதுகளின் ஆரம்பத்தில் ஈழப் போராட்டத்திற்கு ஆதரவான நிலையெடுத்ததால் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர். இன்றுவரை தன்னை மார்க்ஸிஸ்டாக உறுதியோடு அடையாளப்படுத்துபவர். நக்ஸல்பாரிகளோடு அவர் இயங்கிய காலத்தையே தனது அரசியல் வாழ்வின் உன்னதமான தருணங்கள் என்பவர். இவற்றைத் தனது எழுத்துகளிலும் பதிவு செய்திருப்பவர்.
நவீனத்துக்குப் பிந்திய சிந்தனை முறைமைகளை அறிமுகப்படுத்துவதும் அவை குறித்து உரையாடுவதும் இன்றைய குறிப்பான புறச்சூழல்களுக்கும் குறிப்பான சமூக அமைப்புகளுக்கு ஏற்றவாறு மார்க்ஸியத்தை வளர்த்தெடுக்க வேண்டுமென்பதும் மார்க்ஸிய விரோதமாகாது. தலித் அரசியல் தனக்கு மிக நெருங்கிய அரசியல் போக்காக மட்டுமல்லாமல் தாய் அரசியலாகவும் மார்க்ஸியத்தைத்தான் கருதுகிறது. அதே வேளையில் அது வரட்டுவாத மார்க்ஸியர்களை ஈவிரக்கமின்றி நிராகரிக்கிறது. இந்தத் அரைகுறை மார்க்ஸியர்களோடு மல்லுக்கட்டுவதிலும் எந்தப் பயனுமில்லை. ஏனெனில் "நூறு அறிஞர்களோடு மோதுவதைவிட ஒரு முட்டாளோடு மோதுவது சிரமமானது" என்று எங்களுக்குப் பெரியார் சொல்லித் தந்திருக்கிறார்.
'தேசியம் ஒரு கற்பிதம்' என்கிறார்கள் தலித் அரசியலாளர்கள் என்று இன்னொரு காட்டமான விமர்சனமும் வைக்கப்படுகிறது. தேசியம் ஒரு கற்பிதம் என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் தெரிந்துவைத்துக்கொண்டு தேசியம் ஒரு மாயை அல்லது பிரமை என்ற பொருள்பட எளிமைப்படுத்திப் புரிந்துகொள்வதால் நேரும் தவறிது. பெனடிக்ற் அன்டர்ஸனின் 'Imagined Communities' என்ற நூலை முன்வைத்துத்தான் தமிழில் இந்த உரையாடல் நிறப்பிரிகையால் தொடக்கிவைக்கப்பட்டது. 'தேசியம் ஒரு சமூகமாகக் கற்பிதம் செய்யப்படுகிறது. ஆனால் ஒரு சனநாயகச் சமூகத்துக்குரிய பண்புகள் தேசியமாகக் கற்பிதம் செய்யப்பட்ட சமூகத்திற்குக் கிடையாது. அது தனக்குள்ளே ஒடுக்குமுறைகளை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. அதேவேளையில் ஒடுக்குபவனையும் ஒடுக்கப்படுபவனையும் தேசியம் என்ற மந்திரச் சொல்லால் ஒரே சமூகக் கயிற்றில் கட்டிப்போடுகிறது. ஒடுக்கப்படுபவனை தேசியத்தின் பெயரால் ஒடுக்குமுறைகளைச் சகித்துக்கொள்ள நிர்ப்பந்திக்கிறது. எனவே தேசியம் ஒரு இயல்பாய் உருவாக்கமான சமூகம் கிடையாது. அது அதிகாரத்தால் கட்டமைக்கப்படுவது' என்பதுதான் அன்டர்சனின் கருத்தாக்கம். இந்தக் கருத்தாக்கம் வேறுயாருக்கு முக்கியமோ இல்லையோ தலித் மக்களுக்கு மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் தேசியம், தமிழர் போன்ற பேரடையாளங்களால் சாதிய ஒடுக்குமுறைகளைச் சகித்துக்கொள்ளுமாறு தலிததுகள் வரலாறு முழுவதும் நிர்பந்திக்கப்பட்டே வந்திருக்கிறார்கள். அம்பேத்கரையும் பெரியாரையும் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பேரால் ஆதிக்கசாதியினர் நிராகரித்திருக்கிறார்கள். பெரியாரோ சுதந்திர தினத்தை துக்க தினமாகப் பிரகடனப்படுத்தியவர். தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கத்தை தமிழ் தேசியப் பேரடையாளத்துக்குள் ஒழித்துக்கட்டிவிட தமிழரசுக் கட்சி முயன்றது. ஆனால் தலித் மக்களின் தனிப்பெரும் தலைவர் எம். சி. சுப்பிரமணியமோ தனித் தலித் தேசியம் என்றே முழங்கினார். தேசியம் என்கிற கட்டமைக்கப்பட்ட சமுகத்துள்ளிருக்கும் சிக்கல்களை நாங்கள் பேசுவதால் தேசியமே கிடையாது அது மாயையானது என்று நாங்கள் சொல்வதாகப் பொருள் கிடையாது. தோழர்கள் பெனடிக்ற் அண்டர்சனின் நூலையும், நிறப்பிரிகை வெளியிட்ட 'தேசியம் ஒரு கற்பிதம்' என்ற நூலையும் படித்துப் பார்க்க வேண்டும்.
தலித்தியம் பேசி சாதியத்தை நாங்கள் வளர்க்க முயல்கிறோம் தமிழர்களிடையே பிரிவினையை உருவாக்க முயல்கிறோம் என்றும் குற்றச்சாட்டப்படுகிறோம். இது ஒரு அயோக்கியத்தனமான குற்றச்சாட்டு. நாங்கள் சாதிய அரசியலை முன்னிறுத்துவது கிடையாது. நாங்கள் சாதிகளை முற்றுமுழுதாக ஒழிக்கவேண்டுமென்று சாதியொழிப்பு அரசியலைத்தான் முன்னிறுத்தி வருகின்றோம். சாதியொழிப்புக் குரல்கள்தான் புதிதாகத் தமிழர்களிடையே பிளவுகளை ஏற்படுத்த வேண்டுமென்றில்லை. ஏனெனில் தமிழர்கள் ஏற்கனவே பல நூற்றாண்டுகளாகச் சாதியால் திட்டவட்டமாகப் பிளவுண்டுதான் கிடக்கிறார்கள். எனவே சாதியொழிப்புத்தான் தமிழர்களிடையே அய்க்கியத்திற்கு முன்நிபந்தனையாக அமையும். எனவே சாதியொழிப்புக் குரல்கள் தமிழர்களின் உரிமைப் போரட்டத்திற்கு எதிரானது வர்க்கப்போராட்டத்திற்கு எதிரானது என்ற குற்றச்சாட்டுகள் ஆதிக்கசாதிச் சாதிப்பற்றை மறைப்பதற்கான தந்திரங்களே தவிர வேறல்ல.
சென்ற தலித் மாநாட்டுக்கு வீ. ஆனந்தசங்கரியும், EPRLF (ப.நா) செயலாளர் சிறீதரனும் வாழ்த்துகளை அனுப்பியிருந்தார்கள். மாநாட்டில் ஒருசில ENDLF, PLOTE, EPRLF உறுப்பினர்களும் கலந்துகொண்டார்கள். எனவே தலித் அரசியல் துரோக அரசியல் என்றொரு குற்றச்சாட்டுமுண்டு. என்னைப் பொறுத்தவரை நான் புலிகளைக் கண்டிப்பதைப் போலவே எப்போதும் கூட்டணியையும் மற்ற இயக்கங்களையும் கண்டித்து வந்துள்ளேன். அதே வேளையில் புலிகள் இயக்கத்திலும் சரி பிற அமைப்புகளிலும் சரி சாதிய விடுதலையில் அக்கறைகொண்ட தலித்துகளும் சொற்ப அளவில் தலித் அல்லாதவர்களுமிருக்கிறார்கள் என்ற உண்மையை நாம் மறந்துவிட முடியாது. ஒரு தலித் புலியாயிருக்கலாம், புளட்டாய் இருக்கலாம் கொம்யூனிஸ்டாக இருக்கலாம். ஆனால் அவர் தன்னளவில் சாதியத் தளையிலிருந்து விடுபடவே விரும்புவார். ஆதிக்கசாதியினருக்கு எதிரான தார்மீகக் கோபம் அவரது உள்ளத்தில் கனன்றுகொண்டுதானிருக்கும். எனவே இந்த இயக்க அரசியல்களுக்குப் புறத்தே சாதியொழிப்பு என்ற தளத்தில் சாதியத்திற்கு எதிரான சக்திகளைச் சாத்தியமான வழிகளிலெல்லாம் அய்க்கியப்படுத்த வேண்டும். சாதியம் குறித்து மிகக் கூர்மையான பார்வையும் எழுத்து வன்மையும் கொண்ட சிவா சின்னப்பொடி, 'வெப் ஈழம்' சபேசன் போன்றவர்களெல்லாம் தலித் அரசியலுக்கு வெளியே இருப்பது தலித் அரசியலுக்கு நிச்சயமாகவே இழப்புத்தான்.
எனவே இந்தத் மாவீர அரசியல் X துரோக அரசியல் எதிர்வுகளுக்குப் புறத்தே சாதியொழிப்பை விரும்புவர்கள் அய்க்கியப்பட வேண்டும். இது நடக்க முடியாத ஒன்றல்ல. வரலாற்றில் நமக்கொரு முன்னுதாரணமும் இருக்கிறது. ஈழத்தில் சாதியொழிப்புப் போராட்டங்களைத் தொடக்கிக் கணிசமான வெற்றிகளைச் சாதித்த சிறுபான்மைத் தமிழர் மகாசபையில் கொம்யூனிஸ்டுகளும் இருந்தார்கள். தமிழரசுக் கட்சியினரும் இருந்தார்கள். எதிரும் புதிருமான அரசியல் நிலைகளுக்கு அப்பாலும் தலித் விடுதலை என்ற உணர்வு அவர்களை அய்க்கியப்படுத்தியது.
மாநாடு நடத்துவதால் தலித்துகளுக்கு விடுதலை கிடைத்துவிடுமா என்றொரு கேள்வியும் கேட்கப்படுகிறது. 'நாங்கள் தலித்துகளிற்கு விடுதலை பெற்றுக் கொடுத்துவிடுவோம், அதற்கான வேலைத் திட்டம் எங்கள் கையிலிருக்கிறது' என்றெல்லாம் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியோ அதன் ஆதரவாளர்களோ ஒருபோதும் சொன்னதில்லை. சாதியக் கட்டமைப்பின் பண்புகள் மற்றும் சாதிக்கட்டமைப்பிலிருந்து மீள்வதற்கான வழிகளை உருவாக்குதல் போன்றவற்றை ஆராய்வதற்கும் உரையாடுவதற்குமான முயற்சியிலேயே தலித் மாநாடுகள் கூட்டப்படுகின்றன. இந்த உரையாடல்கள் வழியேதான் காலப்போக்கில் ஈழத்தில் சாதிய விடுதலைக்கான ஒரு அரசியல் வேலைத்திட்டத்தை உருவாக்கிக்கொள்ள முடியுமென்று நாங்கள் நம்புகிறோம்.
மாநாட்டிற்கு இலங்கை அரசு நிதிவழங்குகிறது, பிரஞ்சு அரசு நிதியுதவி வழங்குகிறது போன்ற ஆதாரமற்ற அவதூறுகளிற்கு நான் ஏற்கனவே சத்தியக்கடதாசியில் பதிலளித்திருக்கிறேன். நிரூபிக்க முடியுமா? என்று அவதூறுகளை விதைத்தவர்களிடம் கேள்வியெழுப்பியுள்ளேன். அவர்கள் இன்றுவரை தங்களது குற்றச்சாட்டுகளிற்கு ஆதாரங்களைத் தெரிவிக்கவில்லை, அயோக்கியப் பயல்கள்!
'புகலிடத்தில் எல்லாக் கோயில்களுக்குள்ளும் தலித்துகள் போகலாம்' என்றொரு கருத்தை 'தேசம்' இணையத்தளத்தில் ஒரு தோழர் முன்வைத்திருக்கிறார். ஆனால் அந்தக் கோயில்களின் கருவறைகளுக்குள் ஏன் பார்ப்பனர்கள் அல்லாதவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை? ஏன் பார்ப்பனர்கள் தவிர்ந்த மற்றைய சாதியினருக்கு அர்ச்சகராகும் உரிமை கிடையாது என்ற கேள்வியையும் அந்தத் தோழர் கேட்டுப்பார்க்க வேண்டும். இது தீண்டாமையில்லையா? வெறுமனே வீரகேசரியிலும் தினக்குரலிலும் வெளியாகும் சாதியத் திருமண விளம்பரங்களைப் படித்தாலே ஒருவரால் புகலிடத்திலும் உறைந்துகிடக்கும் சாதிய மனநிலைகளை விளங்கிக்கொள்ள முடியுமே!
நம் கடவுள் சாதி காப்பாற்றும் கடவுள்,
நம் மதம் சாதி காப்பாற்றும் மதம்,
நம் இலக்கியம் சாதி காப்பாற்றும் இலக்கியம்,
நம் மொழி சாதி காப்பாற்றும் மொழியென்றார் தந்தை பெரியார். இங்கே பொதுவான தமிழ்ப் பண்பாடென்றோ பொதுவான தமிழ்க் கலாச்சாரமென்றோ எதுவுமே கிடையாது. நமது கலாச்சாரம் சாதியத்தாலேயே வடிவமைக்கப்பட்டது. பிறப்புச் சடங்குகள் தொடங்கி திருமணம், இறப்புச் சடங்குகள்வரை சாதி சார்ந்தே நமது தமிழ்க் கலாச்சாரம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சாதியக் கலாச்சாரத்திலிருந்து புகலிடம் கூடத் தப்பிக்கவில்லை.
சாதியம் என்பது வறுமை, சீதனம் போன்ற ஒரு சமூகக் குறைபாடு கிடையாது. சாதியம் ஒரு வாழ்வியல் முறைமையாக இங்கே கட்டமைக்கப்பட்டுள்ளது. மதம், மொழி, இலக்கியம் என எல்லாப் பரப்புகளிலும் சாதியம் தனது நீண்ட கரங்களை எறிந்து வைத்துள்ளது. எனவே நமக்கு இப்போது தேவை ஒரு கலாச்சாரப் புரட்சி. சாதியத்திற்கு, சாதிய மனநிலைக்கு முடிவுகட்டாமல் வேறெந்த விடுதலை குறித்தும் நாங்கள் பேசவே முடியாது.
இவை குறித்துப் பேசவும் விவாதிக்கவும் இன்னும் ஏராளமிருக்கிறது. தோழர்களே! தலித் மாநாட்டிற்கு வாருங்கள். விவாதத்திற்கும் கருத்துரைப்புகளிற்கும் மாநாட்டில் போதியளவு நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. சாதியொழிப்பைக் குறித்த கூட்டுவிவாதத்தின் மூலம் ஒரு பொதுக்கருத்தை இந்த மாநாட்டில் உருவாக்க நீங்களும் பங்களிப்புச் செய்ய வேண்டும்!
- ஷோபாசக்தி
13.02.2008
5 comments:
தலித்? இதற்கு தமிழ் வழக்கே இல்லையா?
மகா நாடு நடத்தும் உறவுகளே! பாரிசிலும், லண்டனிலும் நடத்துவதைக் காட்டிலும் தமிழகத்திலும், ஈழத்திலும் நடத்துங்கள் பயன்கிடைக்கும். லண்டனில் நடத்தினால் பத்திரிகை விளம்பரமும், கவிதை பாட வாய்ப்பும் கிடைக்கலாம்.
//சாதியம் என்பது வறுமை, சீதனம் போன்ற ஒரு சமூகக் குறைபாடு கிடையாது. சாதியம் ஒரு வாழ்வியல் முறைமையாக இங்கே கட்டமைக்கப்பட்டுள்ளது. மதம், மொழி, இலக்கியம் என எல்லாப் பரப்புகளிலும் சாதியம் தனது நீண்ட கரங்களை எறிந்து வைத்துள்ளது. எனவே நமக்கு இப்போது தேவை ஒரு கலாச்சாரப் புரட்சி. சாதியத்திற்கு, சாதிய மனநிலைக்கு முடிவுகட்டாமல் வேறெந்த விடுதலை குறித்தும் நாங்கள் பேசவே முடியாது.//இது:மிகச் சரியானது!
ஷோபாசக்தி,தங்கள் கட்டுரை மிகத் தெளிவானது!மிகக்கூர்மையானது.இக்கட்டுரை ஊடாக நீங்கள் பலருடைய கருத்துக்களை(தலித்துவத்துக்கெதிரான)வெட்டிச் சாய்த்துள்ளீர்கள்!உதாரணத்துக்குச் சின்னப் பயல்(அனுபவத்தில்)அற்புதன் போன்ற மேற் புல்-நுனிப் புல் கடிப்பாளர்களுக்கு மிக நேர்த்தியாகப் பதிலளித்துள்ளீர்கள்.இந்த விவேகம் இன்றைய நிலையில் இந்த வலைப்பதிவுலகத்தில் எவருக்குமில்லை!இது உங்களிடம் மிக அழகாக இருக்கிறது!இவ்வளவு நிதானத்துடன்... உங்கள் கட்டுரையைப் படித்தபோது நான் பெருமையடைகிறேன்.நீண்ட நாட்கள் காணாது போனாலும்,"இதோ எனது பதிலென" எல்லோருக்கும் -எல்லோர் முதுகிலும் சாட்டை சொடுக்கியுள்ளீர்கள் நண்ப!
-கந்தையா இரகுநாதன்
தேசியத்தை விமர்சித்த அ.மார்கஸ் இன்று இஸ்லாமிய அடிப்படைவாத
புதைச்சேற்றில் நின்று தமுமுக என்ற பிற்போக்கான அமைப்பிற்கு உதவியாக இருக்கிறார்.பின் நவீனத்துவம் இன்ன பிறவெல்லாம்
இதை மறைப்பதற்கான முகமூடிகள்.
தஸ்லீமா விவகாரம் உட்பட பலவற்றில் மெளனம் காத்தவர்
அவர்.ஆதவன் தீட்சண்யா ஒரு வரட்டு
மார்க்சிய-பெரியாரியவாதி.அவரது
புரிதல் ஒரு குறிப்பிட்ட பிரிவினை
வசைபாடுவதுடன் நின்றுவிட்டது.ஈழப் பிரச்சினை குறித்து புதிய விசையில்
எத்தனை முறை,என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதை பார்க்கவும். இந்திய கம்யுனிஸ்ட்
கட்சி(மார்க்ஸிஸ்ட்)யின் விசுவாசி, தொழிற்சங்க பொறுப்ப்பளர். கட்சியின் நிலைப்பாடு ஈழப்பிரச்சினையில் தவறு என்று
எப்போதும் பேசியதும்/எழுதியதும்
இல்லை.ஜேவிபி யை இந்திய
கம்யுனிஸ்ட் கட்சி தன் மாநாட்டிற்கு
அழைத்த போது இவர் வாயே
திறக்கவில்லை.இவர் சார்ந்துள்ள
கட்சியும்தான். இதையெல்லாம்
மறைக்க தலித் முகமூடியா,
வெட்கக்கேடு.
இவர்களை வைத்து தலித் மாநாடா-
நல்ல காமெடிதான்.
“சாதியத்திற்கு, சாதிய மனநிலைக்கு முடிவுகட்டாமல் வேறெந்த விடுதலை குறித்தும் நாங்கள் பேசவே முடியாது”
இது போல் பேசித்தான் பெரியார்
காலனியாதிக்கத்தினை எதிர்க்க மறுத்தார்.நீங்களும் யாரையோ
எதிர்க்க மறுக்க தலித்,சாதி
மறுப்பு என்ற முகமூடிகளை அணிந்து கொண்டிருக்கிறீர்கள். அதை தெளிவாக
சொல்லிவிடலாமே.
//உதாரணத்துக்குச் சின்னப் பயல்(அனுபவத்தில்)அற்புதன் போன்ற மேற் புல்-நுனிப் புல் கடிப்பாளர்களுக்கு மிக நேர்த்தியாகப் பதிலளித்துள்ளீர்கள்.இந்த விவேகம் இன்றைய நிலையில் இந்த வலைப்பதிவுலகத்தில் எவருக்குமில்லை//
கந்தைய அண்ணொய் வணக்கமுங்க,
நீங்கள் எண்டாலும் என்னை மறக்காம நாபகம் வச்சு இருக்கிறியள், நன்றி அண்ணொய்.
எனக்கு அனுபவம் குறைய எண்டு என்னெண்டு அண்ணொய் கண்டு பிடிச்சியனியள்? என்னை உங்களுக்குத் தெரியுமா அண்ணொய்?
புளொக்கில நான் எழுதிறதைப் படிச்சு போட்டு எண்டா, அய்யனார் சொன்ன மாதிரி புளொக்கில எழுதிறது எல்லாம் புனைவு அண்ணொய், நம்பாதையுங்கோ;-).
நான் சோபசக்தியிட்டையும் இராகவனிட்டையும் கேட்ட கேள்விகள் இன்னும் எனது பதிவில் பதில் இல்லாமத் தான் இருக்கண்ணை.
தனது நீண்ட மவுனத்தைக் கலைத்து சோபாசக்தி அவர்கள் எந்தக் கேள்விக்கும் பதில் அழித்துள்ளதாக எனக்குப் படவில்லை.
நாவலன் அண்ணை வலு சுருக்கமாக மாகப் பதில் சொல்லி இருக்கிறார்.
//அரசியலற்ற தலித்தியம் பின்னவீனத்துவத்தின் அமைப்பியல் எதிர்ப்பிற்குத் தீனி போடுகிறது. மார்க்ஸியத்தின் எதிரியாகின்றது.//
இதில் அரசியல் எதுவும் அற்ற பின் நவீனத்துவம் என்பதால் தான் சோபாசக்தியால் எந்தப் பதிலையும் சொல்ல முடியாமல் இருக்கிறது.அதுக்காகத் தான் வாங்கோ சும்மா கூடிக் கதைப்பம் எண்டு முடிச்சு இருகிறார்.கூடிக் குசு குசுக்கிறதுக்கு இதென்ன எங்கட தனிப்பட்ட விசயமோ?அரசியல் விடய்ங்களைப் பகிரங்கமாக விவாதிக்கலாமே? ஏன் பயப்பிடுறியள்? இப்படி ஒழிச்சுப்பிடிச்சு விளையாடுறியள்?
நாங்கள் ஏன் மினக்கெட்டு தலித் மா நட்டுக்கு வரவேணும்.இணையம் மூலம் கதச்சுக்கொண்டு தானே இருக்கிறம்.எல்லாப் பக்கத்தாலையும் உந்தப்பின் நவீனதுவக் காரரிடம் கேள்விகள் சரமாரியா விழுகுது, ஆனப் பாருங்கோ இந்தப் பின் நவீனத்துவக் காரரிட்ட இருந்து தான் ஒரு பதிலும் வருகுதில்லை.
தேசியம் கற்பிதம் என்றால், தலித்தியமும் ஒரு கற்பிதம் தான் என்னும் மிக இலகுவான ஒரு தர்கத்திற்கு பதில் சொல்லத் தெரியவில்லை, இதில் நுனிப்புல், சில்லறை, என்னும் உருவேற்றிய சொல்லடால்களைத் தவிர வேறு ஒரு உருப்படியான பதிலும் உங்களிடம் இல்லை.
எல்லா அடையாள அரசியலும் கற்பிதங்கள் தான்.எது எங்கே தேவை என்பதை போராடும் மக்களும் களமும் தான் தீர்மானிக்கிறது. நீங்கள் நாலு பேரும் அரச பணியில் இருந்து இழைப்பாறி ஊர் உலாத்த வருபவர்களும் பாரிசு லண்டன் என்று சுற்றுலா சுற்றி ஒண்டா இருந்து கூடிக் கதைச்சு, திண்டு குடிச்சுப்போட்டு பம்மாத்துப் பண்ணிப் போட்டு போறதால ஒண்டும் நடக்கப் போறேல்ல அண்ணொய்.
இப்படி இணையத்தில் படம் காட்டிக் கொண்டு பொழுதைப் போக்கிக் கொண்டி இருங்கோ.அங்க சனம் தங்களுக்கு எது தேவையோ அதன் அடிப்படையில் போராடும், வெல்லும்.
கன்னடியருக்கும், மலையாளிக்கும் இனப்பற்றோ, சுயமரியாதையோ இல்லை; மத்திய ஆட்சிக்கு அடிமையாக இருப்பது பற்றி அவர்களுக்குச் சிறிதும் கவலையில்லை. மேலும், சென்னை மாகாணத்தில் 7ல் ஒரு பாகத்தினராக இருந்துகொண்டு, தமிழ்நாட்டில் அரசியல், பொருளாதாரம், உத்தியோகம் முதலியவைகளில் 3-ல் 2 பாகத்தை அடைந்து கொண்டு, இவை கலந்திருப்பதால் - நம் நாட்டைத் தமிழ்நாடு என்று கூட சொல்லவதற்கிடமில்லாமல் தடுத்து ஆண்டு கொண்டிருக்கிறார்கள். ஆதலால், இவர்கள் சீக்கிரம் பிரியட்டுமென்றே கருதி வந்தேன்; அந்தப்படியே பிரிய நேர்ந்து விட்டார்கள். ஆதலால், நான் இந்தப் பிரிவினையை வரவேற்கிறேன்.
இந்தப் பிரிவினை நடப்பதில் சேர்க்கை சம்பந்தமாக ஏதாவது சிறு குறைபாடு இருந்தாலும், மேற்கண்ட பெரும் நலத்தை முன்னிட்டுக் கூடுமானவரை ஒத்துப் போகலாம் என்றே எனக்குத் தோன்றிவிட்டது. மற்றும், இந்தப் பிரிவினை முடிந்து தமிழ்நாடு தனியாக ஆகிவிட்டால், நமது சமய, சமுதாய, தேசிய, சுதந்திர முயற்சிக்கும், அவை சம்பந்தமான கிளர்ச்சிக்கும், புரட்சிக்கும் நமது நாட்டில் எதிர்ப்பு இருக்காதென்றும், இருந்தாலும் அதற்குப் பலமும் ஆதரவும் இருக்காது என்றும் கருதுகிறேன்.
ஆனால், நாட்டினுடையவும், மொழியினுடையவும், இனத்தினுடையவும் பெயர் அடியோடு மறைக்கப்பட்டுப் போய்விடுகிறதே என்கின்ற குறைபாடு எனக்கு இருக்கிறது. ஆந்திரர், கர்நாடகர், மலையாளிகள் பிரிந்து போனபின்பு கூட, மீதியுள்ள யாருடைய மறுப்புக்கும் இடமில்லாத தமிழகத்திற்குத் 'தமிழ்நாடு' என்ற பெயர்கூட இருக்கக்கூடாது என்று, அந்தப் பெயரையே மறைத்து, ஒழித்துப் பிரிவினையில் 'சென்னை நாடு' என்று பெயர் கொடுத்திருக்கிறதாகத் தெரிய வருகிறது. இது சகிக்க முடியாத மாபெரும் அக்கிரமமாகும்; எந்தத் தமிழனும் இதைச் சகிக்க முடியாது. இதைத் திருத்தத் தமிழ் நாட்டு அமைச்சர்களையும், சென்னை, டில்லி சட்டசபை - கீழ் மேல் சபை உறுப்பினர்களையும் மற்றும் தமிழ்நாட்டிலுள்ள புலவர்கள், பிரபுக்கள், அரசியல், சமுதாய இயல் கட்சிக்காரர்களையும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ், தமிழ்நாடு என்கின்ற பெயர்கூட இந்நாட்டிற்கு, சமுதாயத்திற்கு இருக்க இடமில்லாத நிலைமை ஏற்பட்டு விடுமானால், பிறகு என்னுடையவோ, எனது கழகத்தினுடையவோ, என்னைப் பின்பற்றும் நண்பர்களுடையவோ வாழ்வு எதற்காக இருக்க வேண்டும்?
('தனி அரசு', அறிக்கை 25-10-1955)
மேற் சொன்னவை பெரியார் வெளியிட்ட ஒரு அறிக்கையில் இருப்பவை.இதில் பெரியார் பேசி இருப்பது தமிழ்த் தேசியம் அல்லாமல் வேறு என்ன? பெரியாரை மேற் கோள் காட்டும் சோபாசக்திக்கு இவை எல்லாம் பெரியார் சொன்னவையாகக் கண்ணில் படவில்லையா?
Post a Comment