Sunday, April 26, 2009

குழந்தைப் போராளி: ஆண்களுக்கான கண்ணாடி

-மீனாமயில்
திகாரமற்ற ஓர் உலகை கற்பனை செய்து பாருங்கள். கடலும் மலைகளும் வனமும் சூழ்ந்து, கோடி கோடி மனிதர்கள் வாழும் இவ்வுலகில் அதிகாரம் எனும் வேட்டை நடைபெறாத இடம் எதுவெனத் தேடுங்கள்! அதிகாரமற்ற உலகு எப்படிப்பட்டதாக இருக்குமென நினைத்துப் பார்ப்பது, நமக்கு முடியாத செயலாகப் போகலாம். காரணம், அப்படிப்பட்டதொரு வாழ்சூழலுக்குப் பழக்கமற்றவர்கள் நாம். நீங்கள் ஒரு தாழ்த்தப்பட்டவராகவோ, பெண்ணாகவோ இருப்பீர்களானால், இந்தக் கருத்தின் வலிமை புரியக் கூடும்.

உயர எழும்பி நின்று கையில் கோலை ஏந்தி, ‘நானே வலியவன்; சகல அதிகாரமும் படைத்தவன்' என முதலில் கூவிய ஆணின் அதிகாரக் குரல், இவ்வுலகம் முழுவதும் எதிரொலியாக எந்நேரமும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. கூடவே அடக்கப்பட்டவர்களின் ஓலமும் குரல்வளை நசுக்கப்பட்ட நிலையிலும் விடாது கேட்கிறது. இதுவொரு போர். அதிகாரத்திற்கும் விடுதலைக்குமான ஓயாத போர். அதிகாரத்தின் குரல் தடித்ததாகவும் ஒற்றைத் தன்மையுடையதாகவும் இருக்கிறது. அதற்கு மாறாக, விடுதலையின் ஓலம் கூரியதாகவும் பன்மைத்தன்மை கொண்டதாகவும் கிளர்ந்தெழுகிறது.

அதிகாரம் என்பது அதிக சுவையுடையதாக இருப்பதால், ஆண்கள் அதை எப்போதுமே களிப்புற மேய்ந்து கொண்டேயிருக்கிறார்கள். இந்த மேய்ச்சல் அவர்களுக்கு அலுப்பூட்டாத விளையாட்டு. உலகில் யார் எந்த மூலையில் இந்த விளையாட்டைத் தொடங்கினாலும் நடத்தினாலும் எட்டுத் திக்கிலிருந்தும் பாய்ந்து பெருக்கெடுத்து வரும் அதிகார ஆதரவு, விளையாட்டின் வீரியத்தைப் பன்மடங்கு பெருக்குகிறது. ஆக, ஒடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே இது விடுதலையை இலக்காகக் கொண்ட போர். போரை விளையாட்டாகப் பார்க்கிறவர்களுக்கு வெற்றியே குறி. வெற்றிக்கும் விடுதலைக்குமான வேறுபாடு புரியாதவர்கள் இடையில் நின்று கைதட்டுகிறார்கள் – தலையில் விழும் பிணங்களைப் பொருட்படுத்தாமல்...

உகாண்டாவில் பிறந்து இன்றைய தேதியில் டென்மார்க்கில் அகதியாக வாழும் சைனா கெய்ரெற்சி, வலி மிகுதியோடு நினைவடுக்குகளைக் கிளறி – ஞாபகத்திலிருக்கும் முதல் நிகழ்விலிருந்து தன் வாழ்வை மிக உக்கிரமாகப் பதிவு செய்திருக்கிறார், "குழந்தைப் போராளி' என்ற வாழ்க்கை வரலாற்று நூலில். சில கணங்கள் மறக்கக் கூடாததாக நம்மில் தேங்கிவிடும் இல்லையா? சில நிகழ்வுகள் கடக்க முடியாததாக நம்மைத் தேக்கிவிடும் அல்லவா!

முன்னூறு பக்கங்களில் அடங்கிய சைனா என்ற இளம் பெண்ணின் வாழ்க்கை, அப்படியொரு நிகழ்வாகவும் கணமாகவும் வாசிக்கிற யார் மனதிலும் காலத்திற்கும் அழியாமல் தேங்கிப் போகும். இனி, கொடுமையான பொழுதுகளை, துன்பியல் அனுபவங்களை, சகிக்க முடியாத அநீதிகளை சந்திக்க நேரும் போதெல்லாம் சைனாவின் வாழ்வு நினைவில் பாய்ந்து வலிமையோடு எதையாவது உணர்த்தும் என்பது உறுதி.

நல்ல உடல் வலிமையும் ஆரோக்கியமும் கொண்ட கறுப்பினத்தவர்கள் சராசரியாக நூறு வயது வரை வாழ்வார்கள் என்று வைத்துக் கொண்டாலும், தன் ஆயுட்காலத்தின் கால் பகுதி வாழ்வை சைனா கடந்திருக்கும் விதத்தை மனித நேயம் கொண்ட எவரும் வெறுத்தே தீர வேண்டும். மனிதருக்கு வாழ்நாளில் மிக எளிதான ஒன்றாக இருப்பது குழந்தைப் பருவமே! ஆனால் பெருகும் சமூக அநீதிகள், குழந்தைகளிடமிருந்து குழந்தைமையையும் இனிமைகளையும் பறித்து வீசி எறிகின்றன. குடும்ப வன்முறைகளும், சமூக வன்மங்களும் பேரலையைப் போல மூர்க்கமாகத் தாக்குவதால் அடைக்கலங்களைத் தொலைத்து, சிதையும் குழந்தை மனம் வாழ்ந்தே தீர வேண்டிய கட்டாயத்திற்காக எந்த எல்லை வரை சென்று, எத்தகைய கொடுமைகளையெல்லாம் சகித்துக் கொள்கிறது என்பதை சைனா தன் வீரியமிக்க வார்த்தைகளால் எடுத்துரைக்கிறார்.

பெண் குழந்தைகளை பெற்றுப் போடுவதை குற்றமாகக் கருதும் தந்தைக்குப் பிறந்தது, சைனாவின் முதல் துயரம். பெண்ணைப் பெற்றதற்காக வீட்டிலிருந்து விரட்டப்படும் சைனாவின் தாய், அதிகாரமும் ஆணவமும் நிறைந்த கணவனிடம் மகளை விடுவதன் மூலம், அந்த சிறுமிக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய குழந்தைப் பருவ மகிழ்ச்சிகளையும் அமைதியான நல்வாழ்வையும் புதைத்துவிட்டுச் செல்கிறார். முதலில் பாட்டியிடமும் அடுத்தடுத்த மாற்றாந்தாய்களிடமும் வளரும் சைனா தான் யார் என்பதுவும், தன் வயது, பாலினம் பற்றி எந்தப் புரிதலும் இல்லாமலே வளர்கிறார். அவருடைய கேள்விகளுக்கு பதில் தரவோ, அய்யங்களைத் தீர்க்கவோ, அன்பு செலுத்தவோ வாழ்வின் வழியில் யாருமே வரவில்லை. பண்ணை வீட்டில் ஒரு நாய்க்குட்டியைப் போன்றோ, பூனையைப் போலவோ அச்சிறுமி திரிந்து கொண்டிருக்கிறாள். தெரிந்தோ தெரியாமலோ இழைத்துவிடும் சிறுசிறு தவறுகளுக்காக மூர்க்கமாகத் தாக்கப்படும் கொடூரத்தை சைனா ஒவ்வொரு கட்டத்திலும் அனுபவிக்கிறார்.

சைனாவிடம் மட்டுமின்றி தன் பிற பெண் குழந்தைகளிடமும், மனைவிகளிடமும், தன் வேலையாட்களிடமும் சைனாவின் தந்தை – அதிகாரத்தோடும் எதிரியைப் போலவும் நடந்து கொள்கிறார். "ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவில், பலம் பொருந்தியவர்களின் சட்டங்களே செல்லுபடியாகும்' என்று சைனாவே குறிப்பிடுவது போல ஆண் தன்னைச் சார்ந்த பெண்ணையும், பெண் தன்னைச் சார்ந்த ஆணையும் எப்போதும் வன்மம் தீர்த்துக் கொள்வதும்; ஆணும் பெண்ணும் சேர்ந்து பலவீனமானவர்களாக தங்களை அண்டியிருக்கும் குழந்தைகளிடம் வெறுப்பையும் கோபத்தையும் விதைக்கின்றவர்களாகவுமே இருக்கிறார்கள்.

இப்படியொரு சகிக்க முடியாத அடிமைச் சூழலில் வளரும் குழந்தைகள், குறிப்பாக பெண்கள் ஒவ்வொருவராக வீட்டை விட்டு ஓடுகிறார்கள். சிலர் திரும்பி வருவதும் திருப்பி ஓடுவதுமாக இருக்கிறார்கள். காதலனோடு சென்று திரும்பி வரும் சகோதரி ஒருவரை தந்தை அடித்து நொறுக்கும் கொடுமையைத் தாங்க முடியாமல், "இனி இங்கு வராதே' என்று சைனா கூறுவதும், "அது முடியாது; பெண்களுக்கு செல்வதற்கு இடமில்லை என்று தெரிந்தால், ஆண்களுக்கு அதுவே பலம்' என அவருடைய சகோதரி குறிப்பிடுவதும் – இப்படி நூல் முழுவதும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான சமூக உண்மைகளை உரக்க உரைக்கிறார் சைனா.

ஒரு நாள் சைனாவும் தன் வீட்டை விட்டு வெளியேறும் சூழல் உருவாகிறது. தந்தையின் அடி உதைக்கும், வெறுப்பைக் கக்கும் பார்வைக்கும் அஞ்சி, தன் தாயை கண்டுபிடிக்கும் எண்ணத்தோடு வீட்டை விட்டு வெளியேறுகிறார். தாயை கண்டுபிடித்த போதும், திடீரென சந்திக்கும் புதிய நபரோடு பழகத் தடுமாறும் நிலையே சைனாவுக்கு உண்டாகிறது. அதனால் அங்கிருந்தும் ஓடி வருகிறார். இப்படி உறவுகளிடமிருந்து விலகி ஓடியோடி, அந்த ஓட்டத்தின் முடிவில் அவர் வந்து சேரும் இடம் ராணுவமாக இருக்கிறது.

எந்தக் கேள்விகளுமின்றியே மந்தையில் ஓர் ஆட்டைப் போல சைனா ராணுவ அணியில் இணைக்கப்படுகிறார். அங்கு சைனாவைப் போலவே பத்து வயது கூட ஆகாத சிறுவர்களும் சிறுமிகளும் கையில் ஆயுதமேந்தி கண்களில் இன்னதென்று கணிக்க முடியாத தீர்க்கத்தோடு திரிகிறார்கள். அதிகாரிகளின் மந்திரச் சொல்லுக்கு கட்டுப்பட்டு, உயிரை எடுக்கவும் இழக்கவும் எந்நிலையிலும் தயாராக இருக்கிறார்கள். ராணுவத்தில் சேர்ந்த இரண்டொரு நாட்களிலேயே எந்தப் பயிற்சியும் இல்லாத நிலையிலும் சைனா போர் முனைக்கு அனுப்பப்படுகிறார்.

பெரியவர்கள் எதை கற்பிக்கிறார்களோ அதையே குழந்தைகள் கற்றுக் கொள்கிறார்கள். அன்பைக் கொடுத்தால் அன்பையும், வன்முறையைப் பழக்கினால் வன்முறையையும் குழந்தைகள் எந்தக் கேள்விகளுமின்றி ஏற்றுக் கொள்கிறார்கள். பல்வேறு காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியேறும் / துரத்தப்படும் குழந்தைகளுக்குப் போராளிகளாவதில் எந்த சிரமமும் இருப்பதில்லை. வீடுகளில் தங்கள் உறவுகளிடம் வளர்த்துக் கொண்ட குரூரங்களை போராளியாகும் போது "கைகாட்டப்படும்' எதிரிகள் மீது செலுத்துவதில் குழந்தைகளுக்கு எந்தத் தடையும் ஏற்படுவதில்லை.

மனதில் அடைந்து கிடக்கும் வன்மங்களை கொலைகளின் மூலமாகவும் சித்ரவதைகளின் மூலமாகவும் குழந்தைப் போராளிகள் தீர்த்துக் கொள்ள முடியும். கொலைகளும் சித்ரவதைகளும் பெரியவர்களைப் போலவே குழந்தைகளுக்கும் விளையாட்டாக கற்பிக்கப்படுகிறது. எவ்வளவு கொலைகள் செய்கிறோமோ அவ்வளவு வேகமாக தங்களின் தகுதியும் தளபதிகளிடம் நன்மதிப்பும் கூடும் என்பதால், குழந்தைப் போராளிகள் மிக நேர்த்தியாகவும் புதிய உற்சாகத்தோடும் கொலைகளில் ஈடுபடுவதாக சைனா குறிப்பிடுகிறார்.

குழந்தைப் போராளிகள் உருவாகும் முறையையும், அவர்கள் வளர்த்தெடுக்கப்படும் வழிகளையும் நூலில் படிக்கும் போது எழும் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ராணுவத் தலைவரான முசேவெனியின் விடுதலை உரைகளைக் கேட்டு நரம்புகள் முறுக்கேறி போருக்குப் போகும் குழந்தைகள் நிலை குறித்து, சைனா மிக நுணுக்கமான பல தகவல்களையும் கேள்விகளையும் முன் வைக்கிறார். சாதாரண குழந்தைகளைப் போல மணலில் விளையாடியபடியே எதிரிகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு ராணுவத்தினர் குழந்தைப் போராளிகளை ஒரு கேடயம் போல பயன்படுத்துகிறார்கள். இதனால் ராணுவத்தினரின் உயிர் சேதம் பெரிதளவில் தடுக்கப்படுகிறது. ஆனால் குழந்தைகள் கொத்துக் கொத்தாக செத்து விழுவது குறித்த எந்த சலனத்தையும் அது ராணுவத்தினரிடையே ஏற்படுத்தவில்லை.

தேர்ந்த போராளியாக முன்னேறினாலும் சைனாவிற்குள் பொங்கி வழியும் மனிதநேயம் ஒவ்வொரு கட்டத்திலும் எதிரே நின்று கேள்வி எழுப்புகிறது. இதனால் சைனா எந்த நிலையிலும் வரம்புகளை மீறத் துணியவில்லை. இதுதான் விடுதலையா என்ற கேள்வியும் விடுதலையை இப்படித்தானா அடைய வேண்டுமென்ற வினாவும் அவரை துளைத்தெடுக்கின்றன. பிடிபட்ட ராணுவத்தினர் மீது செலுத்தப்படும் சித்ரவதைகள் மனித மாண்புக்கு துளியும் தொடர்பற்று இருப்பது கண்டு, "தன் அதிகாரத்திற்கு கீழ்ப்பட்டோரை துன்புறுத்துவது தான் மனிதனுக்கு எல்லாவற்றையும் விட அதிக இன்பத்தைக் கொடுக்கும்' என விரக்தியோடு கூறுகிறார் சைனா.

எத்தனையோ முறை தப்பிப் போக நினைத்தும் வேறு போக்கிடம் இல்லாததால் சைனாவின் வாழ்வு ராணுவத்திலேயே கழிகிறது. ராணுவ வீராங்கனையாக தெருவில் நடந்து போகும்போது பொது மக்கள் கொடுக்கும் மதிப்பும் மரியாதையும் ஒரு சாதாரண பெண்ணாக இருந்தால் கிடைக்காது. மீண்டும் தான் பழைய கொடுமைகளை அனுபவிக்க நேரிடும் என்ற அச்சம், சைனாவை ராணுவ முகாம்களில் கட்டிப் போடுகிறது. உயிர் வாழ்தல் என்பது சாதாரண விஷயமல்ல. திரும்புகிற இடமெல்லாம் உயிர் வேட்டை நடக்கிற இது போன்ற சூழலில் உயிரைத் தாக்குப் பிடிப்பது

சாகசம்தான். சைனா தன் திறமையான போர் சாகசங்களால் எதிரிகளிடமிருந்து உயிரைப் பாதுகாத்துக் கொள்ள முடிகிறது. ஆனால் ராணுவ அதிகாரிகளால் தான் வன்புணர்வு செய்யப்படுவதும், அதற்கு சம்மதிக்காத சூழல்களில் சூழ்ச்சிகளுக்கு ஆளாகி கடுமையான தண்டனைகளை அனுபவிக்க நேர்வதும் ஒரு பெண்ணாக சைனாவுக்கு கிடைத்த கூடுதல் துயரங்கள். பெண் போராளிகளின் குழந்தைகள் பெரும்பாலும் தகப்பன் பெயர் தெரியாதவர்களாகவே பிறப்பதையும், எந்த ராணுவ வீரனும் "இது தன் குழந்தை'யென பொறுப்பேற்கத் துணிவதில்லை என்பதையும் சைனா வேதனையோடு பதிவு செய்கிறார். எங்கே இருந்தால் என்ன? எத்தனை சாகசங்களை புரிகிறவர்களாக இருந்தால்தான் என்ன? விடுதலையை உருவாக்குகிறவர்களே ஆனாலும் ஒரு பெண்ணை அவள் ஒப்புதலின்றி தொடக்கூடாது என்ற நாகரிகத்தை மட்டும் ஆண்கள் கற்றுக் கொள்வதில்லை.

ராணுவத்தில் யாரும் யார் மீதான ஆதரவையும் வெறுப்பையும் வெளிப்படையாகக் காட்டிவிட முடியாது. இன்று பொறுப்பிலிருக்கும் ஓர் அதிகாரி எந்நேரமும் சூழ்ச்சிக்கு இரையாகி கைது செய்யப்பட்டு சாகடிக்கப்படலாம். அப்போது அந்த அதிகாரியை சார்ந்திருந்த எல்லோருமே வலையில் விழ வேண்டியிருக்கும். வலியும் அயர்ச்சியும் மிகுந்த பல போராட்டங்களுக்குப் பின் சைனா விழுவது இந்த வலையில்தான். கசிலிங்கி என்ற அதிகாரியின் கீழ் வேலை பார்த்ததற்காக, அவர் இன்று ராணுவ எதிரியாக்கப்பட்டதால் சைனாவிற்கும் அந்தப் பட்டம் வந்து சேர்கிறது. விடுதலை என்ற ஒற்றைச் சொல்லுக்குக் கட்டுப்பட்டு உயிரைப் பொருட்படுத்தாமல் போராடியதற்காக சைனாவிற்கும் கடைசியில் விலை வைக்கப்படுகிறது.

விடுதலையை இலக்காக நிர்ணயித்த முசேவெனி ஆட்சிப் பீடத்தில் அமர்ந்துவிட்ட போதும் அவர் உருவாக்கிவிட்ட எண்ணற்ற குழந்தைப் போராளிகளின் வாழ்விலோ, சமூகத்திலோ எந்த மாற்றத்தையும் சைனாவால் காண முடியவில்லை. உண்மையில் கைகளுக்குக் கிடைக்காத, அனுபவிக்க வாய்க்காத "விடுதலை' சைனாவை தலைமறைவு வாழ்க்கைக்கு தள்ளியது ஒன்றுதான் மிச்சம். இதற்கிடையில் வன்முறையும் வன்புணர்வுமாக தொடரும் போராளி வாழ்வில் சைனாவுக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன. ஒன்று டிராகோ என்ற ராணுவ வீரனின் மீதான அவரின் காதலுக்கு கிடைத்த பரிசு. இன்னொரு குழந்தைக்கு தந்தை யாரெனத் தெரியாது. ஆனால் உயிருக்கு அஞ்சிய இந்த ஓட்டத்தில் குழந்தைகளை இணைத்துக் கொள்ள முடியாமல் ஒன்றை காதலனின் மனைவியிடமும், இன்னொன்றை தோழியிடமும் விட்டுவிடுகிறார்.

ஒரு திரைப்படத்தின் இறுதிக் காட்சியைப் போல, சைனா உகாண்டா உளவுப் படையினரால் கடத்தப்படுகிறார். அதற்குப் பிறகு தனக்கு இழைக்கப்படும் கொடுமைகளை சொல்லவோ, எழுதவோ அவர் விரும்பவில்லை. அவமானத்தின் காலமாக சைனா அதைக் குறிப்பிடும் போதே அந்தக் கொடுமைகள் எப்படிப்பட்டவையாக இருந்திருக்கும் என்று உணர முடிகிறது. சில மாதங்கள் நீடித்த உளவுப் படையினரின் சித்ரவதைகள், சைனாவின் உருவத்தையும் உள்ளத்தையும் சிதைத்திருந்தன. வதை முகாமிலிருந்து வாகனத்தில் எங்கோ அழைத்துச் செல்லப்படும் வழியில் சைனா வாகன நெருக்கடியான சாலையில் விழுந்து ஓடித் தப்பிக்கிறார். உள்நாட்டு அலுவல்கள் அமைச்சகத்தில் இருக்கும் பெண் அதிகாரி ஒருவரின் வழிகாட்டுதல்படி அகதிகளுக்கான சர்வதேச உயர் மட்ட ஆணையத்திடம் தஞ்சம் புகுவதோடு அவரின் ஓட்டம் முடிவுக்கு வருகிறது.

கடுமையாக மனநிலை பாதிக்கப்பட்ட சைனா தீவிரமான கவுன்சலிங் மற்றும் சிகிச்சையால் ஓரளவுக்கு தேறிய நிலையில் டென்மார்க்கில் தற்பொழுது அகதியாக வாழ்கிறார். நம் எல்லோரையும் போல சைனா விரும்பியது ஓர் அமைதியான, துரத்தல்களற்ற நல்வாழ்வைதான். அதைப் பெற அவர் தன் வாழ்வின் 25 ஆண்டுகளை தொலைக்க வேண்டியிருந்தது. வன்முறையற்ற வாழ்வை வாழ சைனா கொடுத்திருக்கும் விலை மிக மிக அதிகம். நாம் எத்தனைதான் நியாயங்களை கற்பித்துக் கொண்டாலும் சண்டையும் போரும் வன்மமும் குழந்தைகளுக்கானது அல்ல. அந்த சுமை குழந்தைகளால் சுமக்கக் கூடியதுமல்ல. போர் மற்றும் வன்முறையின் தன்மையைப் புரிந்து கொள்ள முடியாத யாரும் அதற்கு பயிற்றுவிக்கப்படவோ பழக்கப்படுத்தப்படவோ கூடாது. மணல் வீடுகளை கட்டுகிற வயதில் வெடிகுண்டுகளை இயக்கப் பழக்குவது அநீதியின் உச்சமேயன்றி வேறில்லை. தசைகள் இறுகியிராத பிஞ்சுக் கைகளிலும் தோள்களிலும் சுமக்க முடியாத ஆயுதங்களை ஏந்தும் காட்சி நினைக்கவே ஒவ்வாததாக இருக்கிறது.

சைனா குறிப்பிடுவது போலவும் அனுபவித்தது போலவும் போராளிக் குழந்தைகள் கடுமையான மனச் சிதைவுக்கு ஆளாவது நிச்சயம். விடுதலையை அடைந்த பிறகு மனநிலை பாதிக்கப்பட்ட சின்னஞ்சிறுப் போராளிகள், சமூகத்தின் ஆரோக்கியத்திற்குப் பெரும் சவாலாக இருப்பார்கள் என்பதில் அய்யமில்லை. இன்று மீட்கப்பட்டு விட்டாலும் சைனாவின் நினைவுகளும் கனவுகளும் எத்தனைக் கொடியவையாக இருக்கும் என்பது கணிக்கக் கூடியதே! சைனாவை போன்ற ஒரு குழந்தை தன் வாழ்வில் எப்போதுமே அன்பை அனுபவிக்காமல் செத்துப் போவதை விடவும் அநீதி வேறெதுவும் இவ்வுலகில் உண்டா? இந்நூலில் இரண்டு முக்கியமான கடிதங்கள் இருக்கின்றன. ஒன்று சைனாவின் சகோதரி ஹெலன் தன் தந்தைக்கு எழுதியது:

“அப்பா, நீ எனக்கு தந்த குழந்தைப் பருவம் மகிழச்சியற்றது. அதற்கான தண்டனையை நீ பெறுவாய்... உலகில் இலக்கின்றி நான் அலையப் போகிறேன். அன்பே காட்டாத நீ என்னை உனது ரத்தமும் சதையுமெனச் சொல்கிறாய்... நான் துயரத்துடன்தான் மரிப்பேன். நீ இறக்கும் போது கூட உன் குற்றங்களை ஒருமுறையேனும் கேள்விக்குள்ளாக்காமலேயே இறப்பாய். நீ எனக்களித்த வலியினை நீயும் உன் வாழ்வில் கட்டாயம் அனுபவிப்பாய்''

இன்னொன்று சைனா முசேவெனிக்கு எழுதியது: “மேதகு முசேவெனி! ... என்னை கண்ணாடியில் பார்க்கும்போது, அங்கே உன் முகம்தான் எனக்கு தெரிகிறது... நீ என் கைகளில் திணித்த புதிய வாழ்க்கையும் ஒளிரும் எதிர்காலமும் அளிப்பதாக நீ வாக்குக் கொடுத்த அந்த குழந்தைகளை உனக்கு ஞாபமிருக்கிறதா? ... களங்களிலும் காடுகளிலும் மாண்டு போன குழந்தைகளின் எண்ணிக்கையாவது உனக்குத் தெரியுமா? தங்களது குழந்தைகளைத் தேடி அலையும் பெற்றோருக்கு நீ என்ன பதிலைச் சொல்லப் போகிறாய்?''

இரண்டு கடிதங்களும் வஞ்சிக்கப்பட்ட இரண்டு பெண்களால் ஆண்களுக்கு எழுதப்பட்டவை. ஒன்று தந்தைக்கும், இன்னொன்று தலைவனுக்கும் எழுதப்பட்டிருந்தாலும் இரண்டின் சாராம்சமும் ஒன்றையே வலியுறுத்துகின்றன. களவாடப்பட்ட தங்கள் வாழ்வைக் கோரும் வார்த்தைகள் அவை. குடும்பமும் சமூகமும் குழந்தைகளுக்கு குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு இழைக்கும் துரோகத்தை "குழந்தைப் போராளி' எந்தத் தடையுமின்றி எடுத்துரைக்கிறது. எங்கோ ஆப்பிரிக்கக் கண்டத்தில் சைனாவுக்கு இழைக்கப்பட்ட துரோகம் உலகம் முழுக்க மொழி, இனம், நிறம் என்ற பாகுபாடுகளைக் கடந்து எல்லா பெண்களும் அனுபவிப்பதுதான். குடும்பம் மற்றும் சமூக வன்முறைகள் இந்தியப் பெண்களுக்கு அன்றாட நிகழ்வு. இந்த நூலை ஒவ்வொரு பெண்ணும் வாசிக்க வேண்டும். ஆண்களுக்கு இந்த நூல் ஒரு கண்ணாடியைப் போல அமையலாம்.

தீராத மனச் சிக்கலிலும் துயரங்களிலும் சைனாவால் அத்தனை வலிமையான மொழியில் தேர்ந்த இலக்கியப் படைப்பாக "குழந்தைப் போராளி'யை உருவாக்க முடிந்தது, வியப்பிற்கும் பாராட்டிற்கும் உரியது. இவ்வுலகிற்கு அவர் ஆற்றியிருக்கும் பெருந்தொண்டாகவே இதை நாம் கொண்டாட வேண்டும். சைனாவின் மொழி ஆளுமை அவரது வேதனைகளிலிருந்து பிறந்தது. "பார்வைக் கொல்லுமாயின் அப்பா எரிந்து சாம்பலாகியிருப்பார்' என்பது போன்ற வாக்கியங்கள், வெகு காலத்திற்கு உள்ளத்தில் கிடந்து அழுத்தும். அதிகார வெறி கொண்ட எவருடைய கண்களை சந்திக்கும் போதும் அந்த வரி நினைவிற்கு வந்து உசுப்பேற்றும். இச்சமூக அமைப்பில் வன்முறை எனும் சுமை திணிக்கப்பட்ட ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்வை எழுதியாக வேண்டிய தேவை இருக்கிறது. நாளை வலி மிகுந்த வாழ்வைப் பதிவு செய்ய விரும்பும் யாருக்கும் சைனாவின் 'குழந்தைப் போராளி' ஓர் ஈடற்ற உந்துதலாக இருந்து ஆட்டி வைத்துக் கொண்டிருக்கும்... உறங்க விடாமல்.

குழந்தைப் போராளி
சைனா கெய்ரெற்சி
தமிழில்:தேவா
வெளியீடு: கருப்புப்பிரதிகள்

நன்றி: தலித் முரசு/ keetru.com

Monday, April 20, 2009

மரண பூமி

"சிறிலங்கா அரசு - விடுதலைப் புலிகள் என இருதரப்புமே யுத்தவிதிகளை மீறக்கொண்டிருக்கிறார்கள்" என்கிறார் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தை(Human Rights Watch) சேர்ந்த ஆய்வாளர் Anna Neistat. தொடர்கையில் "வன்னியில் சிறிய நிலப்பரப்பினுள் ஏறக்குறைய ஒரு இலட்சம் மக்கள் மரணப்பொறியினுள் சிக்கியிருக்கிறார்கள். அந்தப் பகுதியை மோதல் தவிர்ப்பு வலயமாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தும் அந்தப் பகுதியினுள் அரசபடையினர் தொடர்ச்சியாகவும் கண்மூடித்தனமாகவும் எறிகணை வீச்சுகளை நிகழ்த்துகிறார்கள். அங்கு சிக்கயிருக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேற முடியாதவாறு விடுதலைப் புலிகள் மக்களைத் தடுத்து வைத்திருக்கிறார்கள்" என்கிறார் Anna Neistat.

கீழேயுள்ள படங்கள் புதுமாத்தளனில் அமைந்திருக்கும் தற்காலிக வைத்தியசாலையில் எடுக்கப்பட்டவை. ஏப்ரல் 8 மற்றும் 9ம் தேதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் காயமடைந்தவர்கள் இவர்கள். பெண்களும் குழந்தைகளுமே பெருமளவில் காயப்பட்டுள்ளனர். பொக்கணை எனும் பிரதேசத்தில் உணவுப் பொருட்களைப் பெறுவதற்காக நின்றுகொண்டிருந்தவர்கள்மீது இலங்கை இராணுவத்தினர் எறிகணைகளை வீசியுள்ளனர்.

Friday, April 17, 2009

எம்.ஜி.ஆர். கொலைவழக்கு

-ஷோபாசக்தி

கேளுங்கள் பௌசர்! இதுதான் கதை. இந்தக் கதையை நீங்கள் நம்பலாம் அல்லது நம்பாதிருக்கலாம். இந்தக் கதையை நீங்கள் உங்கள் பத்திரிகையில் பிரசுரிப்பதும் பிரசுரிக்காமல் விடுவதும் உங்கள் பிரச்சினை. இந்தக் கதை நடந்து அதிக நாட்களாகவில்லை. நீங்கள் பெரியார் நினைவு விழாவுக்குப் பாரிஸுக்கு வந்துவிட்டுப் போனீர்களே, அதற்கு இரண்டு நாட்கள் கழித்து எனக்கொரு தொலைபேசி அழைப்பு வந்தது.

அன்று கடும் குளிர்நாள். மைனஸ் ஏழு என்றளவில் குளிர் வதைத்தது. நான் வெளியே எங்கேயும் போவதில்லை என்ற முடிவுடன் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தேன். தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய மஹ்முட் தர்வீஷ் பற்றிய விவரணப் படம் ஒன்றை நான் பார்த்துக்கொண்டிருந்தபோது எனது சொந்தக்காரப் பொடியன் நியூட்டன் என்னைத் தொலைபேசியில் அழைத்து "மாமா நாங்கள் டொனாஸைப் பிடிச்சு வைச்சிருக்கிறம். நீங்கள் ஒருக்கா என்ர வீட்ட வரவேணும்" என்றான்.

எனக்கு டொனாஸ் என்றால் யாரென்று தெரியவில்லை. நான் "அது ஆர் டொனாஸ்?" என்று கேட்டேன்.

"அது மதிலேனம் அன்ரியின்ர கடைசி மகன் மாமா, அவன் ஊரில இயக்கத்திலயிருந்து கன சனத்தைக் கொலை செய்திருக்கிறான்" என்றான் நியூட்டன். எனக்கு இப்போது ஞாபகம் வந்தது. நான் தொலைக்காட்சியை அணைத்துவிட்டு உடைகளை அணிந்துகொண்டு வெளியே கிளம்பினேன். நியூட்டனின் வீடு பாரிஸின் புறநகரான மூலோனில் இருந்தது. அந்த வீட்டில் எங்கள் ஊர்ப் பொடியன்கள் ஆறுபேர் சேர்ந்திருக்கிறார்கள். எல்லோருக்குமே இருபதிலிருந்து இருபத்தைந்து வயதுக்குள்தானிருக்கும்.

நான் அவர்கள் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்றபோது நேரம் இரவு ஏழாகியிருந்தது. அங்கிருந்த பொடியன்கள் ஒரு விறுவிறுப்புடன் என்னை வரவேற்றார்கள். அந்த வீட்டின் ஹோலில் நடுவாகயிருந்த ஒரு நாற்காலியில் டொனாஸ் என்ற அந்த அழகிய இளைஞன் கண்களில் மிரட்சியுடன் உட்கார்ந்திருந்தான். அவன் அசாதாரணமான அழகன். நெற்றியிலும் பிடரியிலும் புரளும் அடர்த்தியான தலைமுடியும் உருளைக் கண்களும் ஓங்குதாங்கான உடலும் பவுண் நிறமுமாக அடிவாங்கிய ஒரு பந்தயக் குதிரைபோல அவன் நாற்காலியில் அமர்ந்திருந்தான். அவனின் உதடுகள் வீங்கிக் கிடந்தன. இடப்புறக் கண் அடியால் சிவந்திருந்தது. அவன் என்னைப் பாரத்ததும் எழுந்திருக்க முயன்றான். அவனின் வாயில் ஒரு பரிதாமான இளிப்பு வந்து போயிற்று. அவன் என்னிடம் "மாமா என்னைத் தெரியுதா?" என்று கேட்டுக் கேட்ட வாயை மூட முன்பே நியூட்டன் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். டொனாஸ் என்னைப் பார்த்ததும் நான் தன்னைக் காப்பாற்றக்கூடும் என்று நம்பியிருக்கலாம். நியூட்டனின் அந்த அடியுடன் அவனின் நம்பிக்கை சிதறிப்போயிருக்கும்.

பதினைந்து வருடங்களிற்கு முன்பு நான் வெளிநாட்டுக்கு வரும்போது டொனாஸுக்கு அய்ந்து அல்லது ஆறு வயதிருக்கும். வறுமையாலும் வெயிலாலும் வாடி வதங்கிக் கருவாடாயிருந்த எங்கள் ஊர்ச் சிறுவர்களிடையே இவன் ஒரு தேவதையைப் போல திரிந்துகொண்டிருந்தான். எல்லோருக்கும் அடித்த வெயில்தான் இவனுக்கும் அடித்தது. எல்லோர் வீட்டுக் குழந்தைகளைப் போலவே இவனும் வீசிக் கந்தோரில் கொடுக்கப்படும் திறிபோசா மாவைச் சாப்பிட்டுத்தான் வளர்ந்தான். ஆனாலும் இவன் பனங்குருத்துப் போல இருப்பான். மதிலேனம் மாமி நல்ல அழகி. அவரிலிருந்து அந்தச் சிவப்பும் பொலிவும் இவனுக்கும் கிடைத்திருந்தது. நான் அவனைப் பார்க்கும்போதெல்லாம் அவனைக் கைகளில் தூக்கி முத்தமிடுவேன்.

நான் டொனாஸையே பார்த்துக்கொண்டிருந்தேன். மற்றைய பொடியள் மௌனமாக டொனாஸைச் சுற்றி நின்றிருந்தார்கள். திரைப்படங்களில் குற்றவாளியைப் பெரிய பொலிஸ் விசாரணை செய்யும்போது சின்னப் பொலிசுகள் கைதியைச் சூழ அடிப்பதற்குத் தயாராக நிற்பார்களே அப்படியிருந்தது அந்தக் காட்சி. நான் எழுந்து போய் டொனாஸின் முன்னால் நின்றேன். நானும் அவனுக்கு அடிக்கப் போவதாக அவன் நினைத்திருக்கலாம். அவனின் இமைகள் வெட்டித் தெறிக்க அவனது தேகம் ஒருமுறை நடுங்கி நின்றதை நான் பார்த்தேன். அவன் மெதுவாக "மாமா நான் விரும்பி இயக்கத்துக்குப் போகயில்ல, என்னை வைபோசாய்தான் பிடிச்சு வைச்சிருந்தவங்கள்" என்றான். அவன் அடுத்த வார்த்தை பேசினால் அது அழுகையாகத்தான் இருக்கும் போலயிருந்தது.

அவனுக்குப் பின்னால் நின்றிருந்த பொடியன் ஓங்கி அவனின் பிடரியில் குத்தினான். சாதாரணமாக அந்த அடிக்குப் பொறி கலங்கி டொனாஸ் முகங்குப்புற விழுந்திருக்க வேண்டும். ஆனால் ஒரு சிறிய அசைவுடன் டொனாஸ் அடித்தவனைத் திரும்பிப் பார்த்தான். அடித்தவனுக்கு அவமானமாயிருந்திருக்கும். அடித்தவனிடம் டொனாஸ் "மச்சான் உங்கள் எல்லாரையும் நம்பித்தானே நான் பிராஞ்சுக்கு வந்தனான்" என்றான்.

அல்லைப்பிட்டியிலோ மண்கும்பானிலோ ஒவ்வொரு அனர்த்தமும் கொலையும் கைதும் நடக்கும்போது இயக்கத்தின் பெயர் செய்திகளில் அடிபடும். இயக்கத்திலிருந்த டொனாஸின் பெயரையும் இணைத்தே எங்கள் ஊர்ச் சனங்களிடமிருந்து எங்களுக்குச் செய்திகள் வரும். டொனாஸ் இலங்கையிலிருந்து சென்ற கிழமைதான் பிரான்ஸுக்கு வந்திருக்கிறான். இன்று காலையில் 'லாச்சப்பல்' கடைத்தெருவில் நியூட்டன் இவனைக் கண்டிருக்கிறான். பார்த்தவுடனேயே "என்ன மச்சான்? எப்ப வந்தனி?" என்று பாசத்தைக் பொழிந்து தனது வீட்டுக்கு வருமாறு நியூட்டன் கேட்டிருக்கிறான். முதலில் டொனாஸ் நியூட்டனுடன் வர மறுத்திருக்கிறான். நியூட்டன் கொஞ்சம் தந்திரமாக அவனுக்குத் தங்குவதற்கு நல்ல இடமும் நல்ல வேலையும் ஒழுங்குசெய்து தருவதாக நாடகமாடியிருக்கிறான். அதை நம்பி டொனாஸ் நியூட்டனோடு கிளம்பி வந்திருக்கிறான். வரும் வழியிலேயே நியூட்டன் தொலைபேசியில் தன்னுடைய நண்பர்களுக்குத் தான் டொனாஸை அழைத்துவரும் செய்தியைச் சொல்லியிருக்கிறான். டொனாஸ் நியூட்டனின் வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்ததுமே எல்லாப் பொடியன்களுமாகச் சேர்ந்து டொனாஸை அடித்திருக்கிறார்கள். அதற்குப் பின்பு அவனை என்ன செய்வது என்று அவர்களுக்குத் தெரியாததால் எனக்குப் போன் செய்திருக்கிறார்கள்.

நான் டொனாஸிடம் "ரத்தினத்தின்ர கடைக்குள்ள எட்டுப்பேரை நீதான் சுட்டனியாம்?" என்று கேட்டேன்.

"இல்லை மாமா, அது என்ன நடந்ததெண்டால் வேவியற்ற மகள் ஒரு நேவிக்காரனைக் கலியாணம் கட்டியிருக்கிறாள். அதுக்குப் பிறகு அல்லப்பிட்டியில வேவியும் அவற்ற மகளும் வச்சதுதான் சட்டம். அவையளும் ஒரு கடை வைச்சிருந்தவை. பிஸினஸ் பிரச்சினையிலதான் வேவியற்ற மகள் நேவிக்காரன்கள வைச்சு ரத்தினத்தின்ர கடைக்குள்ள சுடப் பண்ணினவள்" என்றான்.

"நேவியோட நீங்களும் போனது எண்டுதானே சொல்லுறாங்கள்?"

"அது எனக்குத் தெரியாது மாமா, நான் அது நடக்கயிக்க நெடுந்தீவில இருந்தனான்."

"சில்வஸ்டர நீதானே சுட்டனி?"

"இல்லை மாமா அவர் என்ர தொட்டையா. எனக்கு அவர்தான் தலை தொட்டவர். அவர நான் சுடுவனா? அவரைக் கொட்டிதான் சுட்டது" பொடியன் புலிக்குக் 'கொட்டி'யென்று சொல்கிறான்.

எல்லாக் கேள்விக்கும் டொனாஸ் இல்லை என்ற வார்த்தையுடனேயே பதிலைத் தொடங்கினான் பதிலை முடிக்கும்போது மாமன், மச்சான், சித்தப்பா என்று பதிலை முடித்தான். எங்கள் விசாரணைக்குழு சோர்ந்துவிட்டது. அப்போது கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. நியூட்டன் போய்க் கதவைத் திறந்ததும் திறக்காததுமாகக் கதவைத் தள்ளிக்கொண்டு "எங்க அவன், எங்க அவன்" என்று கேட்டுக்கொண்டே திரவியம் உள்ளே ஓடிவந்தார். திரவியத்திற்கு அய்ம்பது வயதுக்கு மேலேயிருக்கும். உயர்ந்த ஒல்லியான பலவீனமான மனிதர். இரண்டு வருடங்களிற்கு முன்பு அவரின் பதினைந்து வயதான மகனைக் கடத்தி வைத்துக்கொண்டு அய்ந்து இலட்சம் ரூபாய்கள் பணயத் தொகையாகக் கேட்டிருக்கிறார்கள். அந்தத் தொகையைத் திரட்டுவதற்காக அந்த மனிதர் பாரிஸ் முழுவதும் ஓடித்திரிந்தார். நான்கூட ஆயிரம் ஈரோக்கள் கடனாகக் கொடுத்திருந்தேன். அவர் பணயத்தொகையை அனுப்ப முன்னமே அவரின் மகன் சடலமாக வேலணைக் கடற்கரையில் கிடந்தான். அந்த ஆயிரம் ஈரோக்களை என்னிடம் திருப்பித் தந்த நாளில் திரவியத்தின் முகத்தில் ஒட்டிக்கிடந்த துயரப் புன்னகை என்னைத் தலைகுனிய வைத்தது. திரவியத்தின் மகனைக் கடத்துவதற்கும் கடத்தினால் வெளிநாட்டிலிருந்து காசு வருமென்றும் டொனாஸ்தான் துப்புகள் கொடுத்ததாக அப்போதே திரவியம் என்னிடம் சொல்லியிருந்தார்.

ஓடிவந்த திரவியம் முதலில் டொனாஸின் முகத்தில் காறி உமிழ்ந்தார். பின்பு அவனின் தலைமுடியை பற்றிப்பிடித்து அவனின் முகத்தில் கைகளால் அறைந்தார். திரவியம் அவனின் சட்டையைப் பற்றி இழுத்தபோது அவன் நாற்காலியிலிருந்து முன்னே விழுந்தான். அவனை இழுத்து விழுத்துமளவிற்குத் திரவியம் பலசாலியல்ல. அவர் அடிப்பதற்கும் உதைப்பதற்கும் விழுத்துவதற்கும் தோதாகத் தன்னுடைய தேகத்தை டெனாஸ் அப்போது வளைத்துக் கொடுத்துக்கொண்டிருப்பதாகவே எனக்குப்பட்டது. நான் திரவியத்தைத் தடுக்க முயற்சித்தபோது திரவியம் அழத் தொடங்கினார். பின்பு தளர்நடையுடன் போய்க் கைகளைக் கழுவிவிட்டு வந்தார். பின் அமைதியாக ஒரு நாற்காலியில் உட்கார்ந்தார். அதற்குப் பின்பு அவர் ஒரு வார்த்தை பேசவில்லை. அவர் அங்கே வரும்போதே என்ன செய்ய வேண்டும் என ஒரு நிகழ்ச்சி நிரலைத் தயாரித்துக்கொண்டுவந்து அதன்படி நிகழ்ச்சிகளை நடத்தி முடித்ததும் திருப்பதியாக அமர்ந்திருப்பது போலத் தோன்றியது.

டொனாஸ் தரையில் மல்லாக்கக் கிடந்தான். அவனது ஆடைகள் தும்பு தும்பாகக் கிழிந்திருந்தன. உண்மையில் அவனை அடிக்கிறேன் என்ற பெயரில் திரவியம் அவனது ஆடைகளைத்தான் கிழித்திருந்தார். டொனாஸ் மெதுவாக எழுந்து தலையைக் குனிந்தவாறே தரையில் சப்பணம் கட்டி அமர்ந்தான். நான் அவனிடம் "இப்ப நீ என்ன சொல்றாய்? உன்ர முகத்தைப் பார்த்தாலே ஆயிரம்பேரைக் கொலை செய்தவன்ர முகம் மாதிரி இருக்கு, நீ ஒருத்தரையும் கொலை செய்ய இல்லையோ?" என்று கேட்டேன்.

டொனாஸ் நிமிர்ந்து என்னைப் பார்த்தான். பின்பு கண்களைத் தாழ்த்திக்கொண்டு "மாமா நான் உண்மையச் சொல்லுறன், அந்தோனியார் சத்தியமா நான் எம்.ஜி.ஆரை மட்டும்தான் கொலை செய்தனான், வேற எதிலும் எனக்குச் சம்மந்தமில்லை" என்றான்.

அங்கிருந்த நாங்கள் எல்லோருமே அப்போது திடுக்கிட்டோம். ஏனென்றால் எம்.ஜி.ஆர் தற்கொலை செய்ததாகத்தான் எங்களுக்குச் செய்தி வந்திருந்தது. அவர் தலையில் தொப்பியுடனும் கண்களில் கறுப்புக் கண்ணாடியுடனும்தான் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தாராம்.

2

பழைய கதை சொல்கிறேன் கேளுங்கள் பௌசர்! எங்கள் ஊருக்கு அல்லைப்பிட்டி என்று பெயர் வைத்ததற்குப் பதிலாக எம்.ஜி.ஆர்.பட்டி என்று பெயர் வைத்திருக்கலாம். அப்போது எங்கள் கிராமம் எம்.ஜி.ஆர். ரசிகர்களாலும் பக்தர்களாலும் நிரம்பியிருந்தது. ஒரு உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள்:

எனது அண்ணனுக்குப் பதினைந்து வயதிருக்கும்போது வீட்டை விட்டு ஓடிப்போனான். அப்போது எங்கள் கிராமத்துச் சிறுவர்களுக்கு இரண்டு பொழுதுபோக்குகள்தான் வழமையாயிருந்தன. ஒன்று, சூள் கொளுத்தி நண்டு பிடிக்கப்போவது. இரண்டாவது, வீட்டை விட்டு ஓடிப்போவது. சினிமா பார்ப்பது என்பது எங்களைப் பொறுத்தவரை பொழுதுபோக்கு என்ற வகைக்குள் அடங்காது. அது வாழ்க்கை முறைமை, கடமை, இலட்சியம்.

வீட்டை விட்டு ஓடிப்போவதில் மூன்று முக்கியமான படிகள் இருந்தன. முதலாவதாக வீட்டிலிருந்து கொஞ்சம் பணம் திருடவேண்டும். வீட்டில் எப்போது பணம் திருட வாய்ப்பிருக்கிறதோ அதுவே ஓடிப்போவதற்கான நாளாக அமையும். இரண்டாவது படியாக யாழப்பாணம் போய் இரவுவரைக்கும் தொடர்ச்சியாகப் படம் பார்க்க வேண்டும். மூன்றாவது படியாக இரவு ரயிலைப் பிடித்துக் கொழும்புக்குப் போக வேண்டும். கொழும்பில் நான்காம் குறுக்குத் தெருவிலோ, அய்ந்தாம் குறுக்குத் தெருவிலோ அரிசிக் கடைகளில் வேலை கிடைக்கும்.

வீட்டை விட்டு ஓடிப்போன எனது அண்ணன் இரண்டாவது படியை நிறைவேற்றுவதற்காகப் படம் பார்க்கப் போயிருக்கிறான். அன்று அவன் எம்.ஜி.ஆரின் 'அன்னமிட்ட கை' படம் பார்த்திருக்கிறான். படத்தைப் பாரத்ததும் அண்ணனுக்குள் தாய்ப்பாசம் பொங்கிவிட்டது. அவன் கொழும்புக்குப் போகாமல் அம்மாவைத் தேடித் திரும்பவும் வீட்டுக்கே வந்துவிட்டான்.

ஒரு ஊரென்றால் அங்கே எம்.ஜி.ஆர் ரசிகர்களும் சிவாஜி கணேசன் ரசிகர்களும் ஜெய்சங்கர் ரசிகர்களும் கலந்திருப்பதுதானே வழமை. ஆனால் அந்த வழக்கமெல்லாம் எங்கள் கிராமத்தில் கிடையாது. சிவாஜி கிவாஜி என்று யாராவது முணுமுணுத்தால் நாங்கள் முளையிலேயே அந்தக் குரலைக் கிள்ளியெறிவதுதான் வழக்கம். எம்.ஜி.ஆரைத் தவிர வேறு எவருக்கும் எங்கள் ஊரில் ரசிகர்கள் இருக்கக் கூடாது என்பது எங்கள் கொள்கை. ஏக பிரநிதித்துவக் கொள்கை. 1979ல் யாழ்ப்பாணத்தில் தொலைக்காட்சியும் டெக்கும் அறிமுகமாகி கிராமங்கள் தோறும் திருவிழாவாக அது கொண்டாடப்பட்டபோது 'அண்ணன் ஒரு கோயில்' என்ற சிவாஜியின் படமே முதன் முதலாக எல்லா இடங்களிலும் காண்பிக்கப்பட்டது. அப்போது வேறு படப் பிரதிகள் புழக்கத்திலில்லை. நாங்கள் காத்திருந்து 'மீனவ நண்பன்' என்ற எம்.ஜி.ஆரின் படத்துடன்தான் மாதா கோயில் பெருநாளில் எங்கள் ஊரில் தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தினோம். அப்போது காலையில் எழுந்ததும் உத்தரியமாதா, அந்தோனியார் இவர்களுடன் சேர்த்து எம்.ஜி.ஆரையும் வணங்கும் பழக்கம் எனக்கிருந்தது.

அப்போதெல்லாம் இந்தியாவில் படம் வெளியாகி நான்கு, அய்ந்து வருடங்களுக்குப் பிறகுதான் இலங்கையில் படம் வெளியாகும். அப்படியும் எம். ஜி. ஆரின் 'சங்கே முழங்கு', 'பட்டிக்காட்டு பொன்னையா' என்ற இருபடங்களும் கடைசிவரை இலங்கையில் வெளியாகவேயில்லை. படம் வெளியாவதற்குச் சில மாதங்களுக்கு முன்னமே தியேட்டரில் படத்தின் சுவரொட்டியும் படத்தின் நான்கைந்து ஸ்டில்களும் ஒட்டப்படடிருக்கும்; அந்த ஸ்டில்களையும் சுவரொட்டியையும் வைத்தே நான் எனக்குள் அந்தப் படத்தைக் கற்பனை செய்துகொள்வேன். அப்போது படக்கதை சொல்வது என்றொரு அருமையான பழக்கமிருந்தது. வெறும் நான்கு ஸ்டில்களைப் பார்த்ததை வைத்துக்கொண்டே நான் என் பள்ளிக்கூடச் சிநேகிதர்களுக்கு முழுநீளப் படக்கதையும் சொல்வேன். படம் வெளியாகும்போது பார்த்தால் நான் சொன்ன கதை கிடடத்தட்டச் சரியாகவேயிருக்கும். 'ராமன் தேடிய சீதை' மட்டும்தான் கொஞ்சம் மிஸ்ஸாகி விட்டது. சுவரொட்டியிலும் ஸ்டில்களிலும் எஸ்.ஏ.அசோகன் சக்கரநாற்காலியில் உட்கார்ந்திருந்ததால் அசோகனுடன் எம்.ஜி.ஆர். சண்டையிடும்போது எம்.ஜி.ஆரும் சக்கரநாற்காலியில் அமர்ந்துதான் சண்டையிடுவார் என நான் நினைத்திருந்தேன். இதற்கு ஒரு முன்னுதாரணமும் இருந்தது. 'அடிமைப் பெண்' படத்தில் ஒரு காலில்லாத அசோகனுடன் எம்.ஜி.ஆரும் ஒருகாலைக் கட்டிக்கொண்டுதான் சண்டையிடுவார். ஆனால் இந்தப்படத்தில் சக்கரநாற்காலியில் உட்கார்ந்திருந்த அசோகன் கடைசிக் கட்டத்தில் சக்கர நாற்காலியிலிருந்து துள்ளியெழுந்து இருகால்களையும் ஊன்றி நின்று சண்டை போடுவார் என்பதை நான் எதிர்பார்த்திருக்கவில்லை.

'ஒளிவிளக்கு' இரண்டாவது தடவையாக ராஜா தியேட்டரில் வெளியாகி நூறு நாட்களைக் கடந்தபோது நாங்கள் எங்களது கிராமத்தின் சார்பில் தியேட்டருக்கு முன்பு கஞ்சி காய்ச்சி ரசிகர்களுக்கு வழங்கினோம். 'நாளைநமதே' ராணி தியேட்டரில் தொடர்ந்து 140 காட்சிகள் ஹவுஸ்புல்லாகக் காண்பிக்கப்பட்டது. இது அகில இலங்கை வசூல் சாதனை. அப்போது எம்.ஜி.ஆரின் படங்களுக்குக் காட்சி நேரம் நிர்ணயிக்கப்படுவதில்லை. கொழும்பிலிருந்து ரயிலில் படப் பெட்டி வந்தவுடனேயே அதிகாலையிலேயே காட்சி தொடங்கிவிடும். இரவு முழுவதும் நாங்கள் தியேட்டருக்கு முன்புதான் படுத்துக்கிடப்போம். எம்.ஜி.ஆரின் புதிய பட விளம்பரங்களுக்குக் கீழே 'கொட்டகை நிறைந்ததும் காட்சிகள் ஆரம்பமாகும், பாஸ்கள் சலுகைகள் ரத்து' என்ற வரிகள் தவறாமல் இடம்பெறும்.

எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்குப் புகழ்பெற்றிருந்த குருநகரில் கூட வாசகசாலைக்கு 'அண்ணா சனசமூக நியைம் 'என்றே பெயர் வைத்திருந்தார்கள். ஆனால் எங்கள் ஊர் வாசகசாலைக்கு நாங்கள் 'மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் சனசமூக நிலையம்' என்று கட்டன் ரைட்டாக பெயர் வைத்திருந்தோம். மட்டக்களப்பில் புயலால் ஏற்பட்ட சேதத்துக்கு நிவாரணமாக அப்போது எம்.ஜி.ஆர் பத்து இலட்சம் ரூபாய்கள் வழங்கியதற்கு நன்றி தெரிவிப்பதற்காக மனோகரா தியேட்டரில் பத்து நாட்களுக்கு எம்.ஜி.ஆரின் பத்துப் படங்களை அரை ரிக்கட்டுக்குக் காண்பித்தார்கள். எம்.ஜி.ஆர். மட்டக்களப்புக்கு நிதி வழங்கியதையொட்டி நாங்களும் எங்கள் வாசகசாலையின் பெயரிலிருந்த 'மக்கள் திலகம்' என்ற பட்டத்தை நீக்கிவிட்டு 'பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் சனசமூக நிலையம்' எனப் புதிதாகப் பெயரிட்டோம். அந்த வாசகசாலைக்கும் நாங்கள் நடத்திவந்த எம்.ஜி.ஆர் கலாமன்றத்துக்கும் பரிமளகாந்தன் தான் தலைவர்.

எம்.ஜி.ஆர் கலாமன்றத்திலிருந்த நாங்கள் எல்லோரும் விடலைகளாகவேயிருந்தோம். பரிமளகாந்தன் மட்டுமே எங்களில் வயதில் மூத்தவர். பரிமளகாந்தனுக்கு அப்போதே முப்பது வயதுக்கு மேலிருக்கும். எங்கள் ஊர் கிராமசபைக் கட்டடத்தில் அவர் இரவு நேரக் காவலாளியாக வேலைபார்த்து வந்தார். எம்.ஜி.ஆர் போலவே பரிமளகாந்தனுக்கும் குழந்தைகள் கிடையாது. பரிமளகாந்தன் எம்.ஜி. ஆருக்கு ரசிகர் என்றால் பரிமளகாந்தனின் மனைவி பரிமளகாந்தனுக்கு ரசிகை. மாலைநேரங்களில் இரண்டுபேருமாகச் சோடிபோட்டுக்கொண்டு கையில் தேநீர் குடுவையுடன் கடற்கரைக்குப் போய் மணலில் உட்கார்ந்திருப்பார்கள். கடற்கரைக்குப் போய்க் காற்று வாங்கும் பழக்கமெல்லாம் எங்கள் ஊரில் அப்போதும் கிடையாது, இப்போதும் கிடையாது. இவர்கள் ஏன் கடற்கரையில் உட்கார்ந்திருக்கிறார்கள் என்று எங்கள் ஊர்ச் சனங்களுக்குக் கடைசிவரை விளங்கவேயில்லை. பரிமளகாந்தனின் வீட்டில் பக்கத்துக்குப் பக்கம் எம்.ஜி.ஆரின் படங்கள் மாட்டப்பட்டிருக்கும். எல்லாப் படங்களுக்கும் நடுவாக அறிஞர் அண்ணாவின் படமும் மாட்டப்பட்டிருந்தது. எம்.ஜி.ஆர் படங்களின் பாடல் புத்தகங்கள் அழகாக பைன்ட் செய்யப்பட்டு அவரிடமிருந்தன.

எங்கள் எம்.ஜி.ஆர். கலாமன்றத்தால் 'காதலா கடமையா', 'விமலாவின் வாழ்வு', 'பெண்ணின் பெருமை', 'இரு துருவங்கள் இணைந்தபோது' போன்ற நாடகங்கள் மேடையேற்றப்பட்டன. எல்லா நாடகங்களிற்கும் பரிமளகாந்தன்தான் கதை, வசனம், டைரக்சன். 'பெண்ணின் பெருமை' நாடகத்தில் நீதிதேவதை பாத்திரத்தில் பரிமளகாந்தன் தன் மனைவியை நடிக்க வைத்தார். எங்கள் கிராமத்திலெல்லாம் கல்யாணமான ஒரு பெண் மேடையில் ஏறி நடிப்பதைக் கற்பனை செய்யவே முடியாது. ஆனால் பரிமளகாந்தனின் மனைவி நடித்தார்.

நாடக விழா கேள்விப்பட்டிருப்பீர்கள். நாடகம் போடுவதையே விழாவாகக் கொண்டாடுவதை நீங்கள் எங்கள் ஊரில்தான் பார்க்க முடியும். பரிமளகாந்தன் நாடகம் எழுதும்போதே எங்கள் மன்றத்திலுள்ள எல்லோருக்கும் பாத்திரங்களை உருவாக்கித்தான் எழுதுவார். ஒத்திகை அவர் வீட்டில்தான் நடக்கும். அவரின் மனைவி கணவரின் முகத்தையே பூரிப்போடு பார்த்தவாறிருப்பார்.

அநேகமாக மாதா கோயில் பெருநாள் அல்லது அம்மன் கோயில் திருவிழா இரவில் நாடகம் மேடையேறும். நாடகத்தில் நடிப்பவர்களின் வீட்டில் அன்று பெருவிழாவே நடக்கும். "எங்கிட மகன் நாடகம் நடிக்கிறான், நீங்கள் கட்டாயம் வரவேணும்" என்று அயலூர்களிலுள்ள உறவினர்களுக்கெல்லாம் அழைப்புப் போகும். நாடகத்தின் ஒரு பாத்திரம் மேடையில் தோன்றும்போது அந்த நடிகனின் உறவினர்கள் பட்டாசு வெடிப்பார்கள். சரவெடி தூள் பறக்கும். மேடையில் மன்னாதி மன்னன் தோன்றும்போதும் வெடிதான், வில்லன் தோன்றும்போதும் வெடிதான், துறவி தோன்றும்போதும் வெடிதான். அநேகமாக நாடகத்தின் கடைசிக் காட்சியில் பொலிஸாக நடிக்கத்தான் எங்கள் பொடியன்கள் விருப்பப்படுவார்கள். பொலிஸ் யூனிபோர்மும் சப்பாத்துகளும் அணிந்து மிடுக்காக நடிப்பதில் அவர்களுக்கு ஒரு விருப்பம். ஒத்திகை தொடங்குவதற்கு முன்பே அவர்கள் சீருடைகளைத் தயார் செய்து விடுவார்கள். அநேகமாக எங்கள் ஊர் தபால்காரரின் மற்றும் நுளம்புக்கு மருந்தடிப்பவரின் காக்கிக் காற்சட்டைகளையும் மேற்சட்டைகளையுமே அவர்கள் இரவல் வாங்குவார்கள். ஒத்திகைக்கு வரும்போதே காக்கிச் சீருடை தரித்துக் கையில் பெற்றன் பொல்லுகளுடன் மிடுக்காக வருவார்கள். நாடகம் நடத்தும் நாள்வரை அவர்கள் அந்த உடைகளுடனேயே ஊருக்குள் சுற்றிக்கொண்டிருப்பார்கள்.

ஒருமுறை எனக்கு நீதிக்காகப் போராடி பொலிஸாரிடம் அடிவாங்கும் தியாகி பாத்திரம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் என் அப்பாவுக்கு நான் அந்தப் பாத்திரத்தில் நடித்தது பிடிக்கவில்லை. என்னை அடிக்கும் பொலிஸ் பாத்திரத்தில் நடித்தவன் அய்ந்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்தியிருந்தான். நான் அப்போது ஒன்பதாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தேன். என் அப்பா "அவன் அஞ்சாம் வகுப்புப் படிச்சவன் அடிக்கிறான், நீ படிச்ச முட்டாள் அடிவாங்கிறாய், நீயெல்லோ பொலிசுக்கு நடிச்சிருக்க வேணும், வேலணை சென்றல் ஸ்கூலில என்னதான் படிக்கிறியோ" என்று சலித்துக்கொண்டார்.

நாடகம் நடக்கும் நாளன்று அங்கே இணக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மேடையாலும் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் திரைச்சீலைகளாலும் இறுதி நேரத்தில் கவரப்படும் மன்றத்தில் இல்லாத பொடியன்கள் தங்களுக்கும் அன்றிரவு நாடகத்தில் நடிக்க வாய்ப்பு வேண்டுமெனப் பரிமளகாந்தனிடம் கேட்பதுண்டு. உடனேயே பரிமளகாந்தன் நாடகத்தில் அவர்களுக்கு ஒரு சிறிய பாத்திரமும் ஒன்றிரண்டு வசனங்களும் கொடுத்துக் கெட்டிக்காரத்தனமாக அவர்களையும் நாடகத்தில் நுழைத்துவிடுவார். அது அநேகமாக மேடையில் சிக்கலில்தான் முடியும். நாடகம் குழம்புகிறதே என நாங்கள் துடிப்போம். ஆனால் பரிமளகாந்தனுக்கு நாடகம் முக்கியமில்லை. அதில் நடிப்பவர்களின் மகிழ்ச்சியே அவருக்கு முக்கியம். அவருக்குக் கோபமே வராது.

பரிமளகாந்தனுக்கு ஒருமுறை கோபம் வந்தபோது அது அடிதடியில்தான் முடிந்தது. அந்தச் சண்டை வாசகசாலையில்தான் நடந்தது. வாசகசாலைக்கு முன்னால் பரிமளகாந்தனுடன் நாங்கள் நின்றிருந்தபோது மத்தியாஸ் கொஞ்சம் வெறியில் அந்தப்பக்கம் வந்தான். மத்தியாஸ் கொஞ்சம் சண்டியன். அவனுக்கு என்ன கோபமோ எங்களைப் பார்த்துக் காறித் துப்பிவிட்டு வாசகசாலைக்குள் போனவன் அங்கேயிருந்த வாங்கில் நீட்டி நிமிர்ந்து படுத்தவிட்டான். பரிமளகாந்தன் உள்ளே போய் அவனின் தோளில் தட்டி "இஞ்ச படுக்கக் கூடாது, வெளிய போ!" என்றார். மத்தியாஸ் "ஏன் படுக்கக் கூடாது" என்றான். அவனின் கேள்வி நியாயமான கேள்விதான். எங்கள் வாசகசாலையில் ஒரு எம்.ஜி.ஆர். படத்தையும் ஒரு மேசையையும் இரண்டு வாங்குகளையும் தவிர வேறெதுவுமில்லை. முன்னொரு காலத்தில் 'ஈழநாடு' பத்திரிகை மட்டும் வாசகசாலையில் போடப்பட்டது. பின்பு பணமில்லாததால் அதுவும் நிறுத்தப்பட்டுவிட்டது. நாங்கள் எங்கள் கலாமன்றக் கூட்டங்களை நடத்தவும் ஒரு கௌரவத்திற்காகவும்தான் அந்த வாசகசாலையை நடத்திவந்தோம். வாசகசாலையின் கௌரவத்தை மிகக் கண்டிப்புடன் பரிமளகாந்தன் காப்பாற்றி வந்தார். எங்களைக் அங்கே கடதாசி விளையாடக்கூட அவர் அனுமதிப்பதில்லை.

வாசகசாலையிலிருந்து வெளியே வந்து மத்தியாஸ் காலைத் தூக்கி வாசகசாலை வேலியை உதைத்தான். ஒரு உதையில் வேலி பாட்டில் பாறி விழுந்தது. பரிமளகாந்தன் அமைதியாகக் கைகளைக் கட்டியவாறே மத்தியாஸைப் பார்த்து அங்கிருந்து போய்விடும்படி சொன்னார். மத்தியாஸ் அங்கிருந்து போவதாயில்லை. அவன் பரிமளகாந்தனை 'மலடன்' என்று ஏசினான். பரிமளகாந்தன் அமைதியாகக் கையைக் கட்டிக்கொண்டு நிதானமாக மத்தியாசுக்கு அருகில் வந்து அவனுக்குப் புத்திமதி சொன்னார். "நீதிக்கு முன்பு அநீதி ஜெயிக்காது, "அநீதிக்கு முன்பு நீதி தோற்காது", "என் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு" என்று அவர் சொன்னதெல்லாம் எம்.ஜி.ஆர். பட வசனங்களாகவேயிருந்தன. மத்தியாஸ் திடீரெனப் பரிமளகாந்தனின் கன்னத்தில் ஒரு அறைவிட்டான். நாங்கள் பொடியன்கள் கொதித்துப்போய் மத்தியாஸை நோக்கிப் பாய்ந்தோம். பரிமளகாந்தன் தனது வலது கையால் அடிபட்ட கன்னத்தைத் தடவிக் கொடுத்தவாறே இடது கையால் எங்களைத் தடுத்து நிறுத்திவிட்டு "இது எனக்கும் மத்தியாசுக்குமான பிரச்சினை நீங்கள் தலையிட வேண்டாம்" என்றார். இதுவும் எம்.ஜி.ஆர். பாணிதான். இதைக் கேட்டவுடன் மத்தியாஸ் துள்ளி இன்னொரு அறைவிட்டான். பரிமளகாந்தன் அடுத்த கன்னத்தைத் தடவிக் கொடுத்தார். அவரின் கண்களில் கோபம் கொப்பளித்தது. மூன்றாவது அடியையும் மத்தியாஸ் அடித்தபோது பரிமளகாந்தன் பொறிகலங்கி மல்லாக்க நிலத்தில் விழுந்தார். அதற்குமேல் எங்களால் பொறுக்க முடியவில்லை. எல்லாப் பொடியன்களும் ஒருசேரப் பாய்ந்து மத்தியாஸைக் கும்மிவிட்டோம். அடிப்பதை நாங்கள் நிறுத்தினால் மத்தியாஸ் எங்களைத் திரும்ப அடிப்பான் என்ற பயத்திலேயே நாங்கள் நிறுத்தாமல் அடித்தோம். கடைசியில் தன்னை விட்டுவிடுமாறு மத்தியாஸ் கெஞ்சியபோதுதான் நாங்கள் அடிப்பதை நிறுத்தினோம். எங்கள் அடியின் வேகத்தில் மத்தியாஸ் ஒட்டகப்புலத்தாரிடம் போய் புக்கை கட்டினான் என்று கேள்விப்படடோம். அவனின் மனைவி எங்கள் வாசிகசாலைக்கு வந்து நாங்களும் எங்கள் மன்றமும் தொலைய வேண்டுமென மண்ணள்ளி எறிந்து சாபமிட்டாள்.

அவளின் சாபம் பலிக்கத் தொடங்கியது. அப்போது யாழ்ப்பாணத்தில் 'கிழக்கே போகும் ரயில்' படம் ஓடிக்கொண்டிருந்தது. எங்கள் ஊர் குமர்ப்பெண் ஒருத்தி தனது சிநேகிதிகளுடன் சேர்ந்து அந்தப் படத்திற்குப் போவதற்கு அனுமதி கேட்டபோது அவளின் தாயார் அனுமதி மறுத்துவிட்டார். அந்தப் பெண் உடனே பொலிடோல் குடித்துச் செத்தப்போனாள். அந்தப் படம் ஓடிய தியேட்டரில் 'இந்தப் படத்தைக் காண முடியாததால் நஞ்சு குடித்துக் காலமான அல்லைப்பிட்டி சூரியகலாவுக்கு இந்தப் படம் சமர்ப்பணம்' என்று ஸ்லைட் போட்டுவிட்டே காட்சியைத் தொடங்கினார்கள். மித்திரன் பேப்பரில் தலைப்புச் செய்தியாக அவளின் சாவு எழுதப்பட்டது. இதற்குப் பிறகு ஊருக்குள் தொலைக்காட்சியில் படம் ஓடுவதையோ நாங்கள் கலாமன்றம் நடத்துவதையோ சனங்கள் கொஞ்சம் கடுப்புடன்தான் பாரத்தார்கள். அடிமேல் விழுந்த அடியாகப் பரிமளகாந்தனின் மனைவியும் திடீரென இறந்து போனார்.அம்மாள் வருத்தம் என்று படுத்தவர் செங்கமாரி மங்காமாரியாக்கி இறந்துபோனார். பரிமளகாந்தன் தனித்துப் போனார். அவர் தனியாக வீட்டிலிருந்து எம்.ஜி.ஆரின் போட்டோவோடு பேசிக்கொண்டிருப்பதைப் பொடியன்கள் பார்த்திருக்கிறார்கள்.

எங்கள் ஊரில் நடந்த முதலாவது இயக்கக் கூட்டம் எங்கள் வாசகசாலைக்குள்தான் நடந்தது. அப்போதெல்லாம் இயக்கக் கூட்டங்கள் திடீரெனத்தான் ஏற்பாடு செய்யப்படும். கூட்டத்துக்குப் பதினைந்து இருபதுபேர்கள்தான் வருவார்கள். அவ்வளவுபேரும் இளந் தரவளிகளாக இருப்பார்கள். அன்றைய கூட்டத்திற்கு இரண்டு இயக்க இளைஞர்கள் வந்திருந்தார்கள். அவர்களில் ஒருவரின் கையில் ஒரு பையிருந்தது. அந்தப் பைக்குள்தான் துவக்கு இருக்கும் என நாங்கள் இரகசியமாகப் பேசிக்கொண்டோம். ஆனால் அந்தப் பையை அவர் திறந்தபோது அதற்குள் பத்திரிகைகளும் தமிழீழப் படம் அச்சடிக்கப்பட்ட 1984ம் ஆண்டுக்கான கலண்டர்களுமேயிருந்தன. அன்று கூட்டத்தில் அந்த இளைஞர்கள் பேசியதில் முக்கால்வாசி எங்களுக்கு விளங்கவில்லை. ஆனால் அவர்கள் பேசி முடித்தபின்பு அவர்களில் எங்களுக்கு மிகப்பெரிய மரியாதை வந்தது. கூட்டத்திற்கு பரிமளகாந்தன் வரவில்லை. கூட்டம் முடிந்ததும் வந்திருந்த இரண்டு இயக்கப் பொடியன்களும் 'பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். சனசமூக நிலையம்' என்றிருக்கும் வாசகசாலையின் பெயரை மாற்றியமைப்பது நல்லது என்றார்கள். எங்களின் மதிப்புக்குரிய அந்த இளைஞர்களுக்கு என்ன பதிலைச் சொல்வது எனத் தெரியாமல் நாங்கள் தடுமாறினோம். நாங்கள் அவர்களைச் சற்றுக் காத்திருக்குமாறு கூறிவிட்டு பரிமளகாந்தனை அழைத்துவர ஆள் அனுப்பினோம்.

பரிமளகாந்தன் தூய வெள்ளை வேட்டியும் வெள்ளைச் சட்டையும் தோளில் சால்வையும் அணிந்து வரும்போதே அந்த இளைஞர்களை நோக்கிக் கைகளைத் தனது முகத்துக்கு நேராகக் கூப்பிக் கும்பிட்டவாறே வந்தார். அந்த இளைஞர்கள் தமிழ்ப்பற்று, விடுதலை, புரட்சி இவைகளைக் குறிக்கும் வகையில் வாசகசாலையின் பெயரை மாற்றலாம் என்றார்கள். அந்தப் பண்புகள் ஒன்றாகக் குவிந்திருக்கும் முன்றெழுத்து மந்திரம்தான் எம்.ஜி. ஆர். என்றார் பரிமளகாந்தன். அந்த இளைஞர்கள் கொஞ்சம் யோசித்துவிட்டு வாசகசாலையின் பெயரை 'புதியபூமி சனசமூக நிலையம்' என மாற்றலாம் என்றார்கள். அதுவும் எம்.ஜி.ஆர் நடித்த படம்தான் என்றார் பரிமளகாந்தன். கடைசிவரை வாசகசாலையின் பெயரை மாற்றப் பரிமளகாந்தன் மறுத்துவிட்டார். எங்களாலும் இயக்க இளைஞர்கள் தங்களது உடல்களில் எங்கே துப்பாக்கிகளை ஒளித்து வைத்திருந்தார்கள் என்பதைக் கடைசிவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

அடுத்தடுத்த வருடங்களில் எம்.ஜி.ஆர் கலாமன்றத்தின் பாதிப்பொடியன்கள் இயக்கத்துக்கென்றும் பாதிப்பொடியன்கள் வெளிநாடுகளுக்கென்றும் தெறிக்கத் தொடங்கினார்கள். வெளிநாடுகளுக்குப் போனவர்கள் சவூதி அரேபியா, அய்ரோப்பா, கனடா என்று பல நாடுகளுக்கும் போனார்கள். ஆனால் இயக்கத்துக்குப் போன நாங்கள் அப்படியே 'செட்'டாக ஒரு இயக்கத்துக்குத்தான் போனோம். எங்கள் ஊரில் நாங்கள்தான் கடைசி எம்.ஜி.ஆர். ரசிகர்களாக இருந்தோம். இரண்டு வருடங்கள் கழித்து நான் ஊருக்குத் திரும்பிவந்தபோது எங்கள் ஊரில் டி.ராஜேந்தருக்கும் கராட்டி மணிக்கும்தான் அதிகமான ரசிகர்கள் இருந்தார்கள். அப்போது 'தங்கக் கோப்பை', 'அதிசயப் பிறவிகள்' போன்ற படங்களில் நடித்துக் கராட்டி மணி பிரபலமாயிருந்தார். ஊருக்குள் தொலைக்காட்சியில் படம் போட்டு இந்த ரசிகர்கள் கூடியிருந்து பார்க்கும்போது நாங்கள் அந்த இடத்தைச் சுற்றி வளைத்து அவர்களைப் பிடித்துச் சென்றி பார்க்கக் கூட்டிச் சென்றோம்.

எங்களுக்கு ஒரு காரியமாகத் தீவுப்பகுதியின் நிலவியல் வரைபடம் தேவைப்பட்டது. அதை எங்கே எடுக்கலாம் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. ஒரு பொடியன் அது கிராமசபை அலுவலகத்தில் இருக்கலாம் என்றான். கிராமசபைக்குப் புதிய ஓவிசியர் வந்திருந்தார். அவர் வெளியூரிலிருந்து எங்கள் ஊருக்கு வேலைக்கு வந்து போய்க்கொண்டிருந்தார். நான் கிராமசபை அலுவலக்திற்குப் போய் இன்ன இன்ன மாதிரி நான் இன்ன இயக்கம் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு எங்களுக்கு அவசரமாகத் தீவுப்பகுதியின் நிலவியல் வரைபடம் தேவையாயிருக்கிறது என்றேன். ஓவிசியர் முதலில் முழித்தார். பின்பு மென்று விழுங்கி அது தன்னிடமில்லை என்றார். அவரின் முகத்திலிருந்தே அங்கே நிலவியல் படம் இருக்கிறது என்று நான் விளங்கிக்கொண்டேன்.

இரவு, நாங்கள் கிராமசபைக் கட்டடத்துக்குச் சென்றோம். கட்டடத்தின் வாசலில் இரவுக் காவலாளி பரிமளகாந்தன் தூங்கிக்கொண்டிருந்தார். அவரைத் தட்டியெழுப்பி ஒரு பொடியன் கட்டத்தின் சாவியைக் கேட்டான். பரிமளகாந்தன் கையைக் கட்டிக்கொண்டு உதட்டைக் கடித்துக்கொண்டு தலையைச் சாய்த்துப் பார்த்தார். அது அச்சொட்டான எம்.ஜி.ஆர். பார்வை. நான் சிரித்தக்கொண்டே கையை நீட்டினேன். பரிமளகாந்தன் என்னை முறைத்துப் பார்த்துவிட்டு "நீ கொள்ளையடிக்கவும் தொடங்கிற்றியா?" எனக் கேட்டார். நான் "அண்ணே இது மலைக்கள்ளன் படம்மாதிரி" என்றேன். அரைமணிநேரம் பேசிய பின்பு அவர் சாவியைத் தந்தார். நான் கதவைத் திறந்து உள்ளே போனேன். உள்ளே அலுமாரி பூட்டப்பட்டிருந்தது. அலுமாரியை உடைக்க வேண்டியதாயிருந்தது. அங்கே நிலவியல் வரைபடம் இருந்தது.

1987 நத்தாருக்கு முதல்நாள் எம்.ஜி.ஆர் இறந்துபோனார். எம்.ஜி.ஆர் இறந்த செய்தி வந்ததுமே பரிமளகாந்தன் மொட்டையடித்துக்கொண்டார். என்னைத் தெருவில் கண்டபோது என்னிடம் "அவர் இப்படித் திடீரெண்டு போவார் எண்டு நான் எதிர்பார்க்கயில்ல" என்றார். மொட்டைத் தலையை மறைப்பதற்காக பரிமளகாந்தன் தொப்பியணியத் தொடங்கினார். அது எம்.ஜி.ஆர் அணியும் அதேபாணியிலான வெள்ளைத் தொப்பி. சில நாட்கள் கழித்து அவர் கறுப்புக் கண்ணாடியும் அணியத் தொடங்கினார். இப்படித்தான் அவரை ஊருக்குள் பொடியன்கள் எம்.ஜி.ஆர் என்று அழைக்கத் தொடங்கினார்கள். எங்கள் ஊரில் மலேரியாக் காய்ச்சலும் பட்டப் பெயரும் டக்கெனப் பரவும்.

நான் பிரான்சுக்கு வந்ததற்குப் பிறகும் பரிமளகாந்தனைப் பற்றி அவ்வப்போது கேள்விப்பட்டுக்கொண்டிருந்தேன். அவர் பென்ஷன் வாங்கி விட்டார் என்றும் இப்போதும் அதே அழுக்குத் தொப்பியுடனும் கறுப்புக் கண்ணாடியுடனும்தான் திரிகிறார் என்றும் கேள்விப்பட்டேன். ஒரு வருடத்திற்கு முன்பு பரிமளகாந்தன் தனது வீட்டில் தூக்கில் தொங்கித் தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி வந்தது. அந்தச் செய்தியைக் கதையோடு கதையாக எனக்குத் தொலைபேசியில் சொன்ன எனது அம்மா "எம்.ஜி.ஆர். தூக்குப் போட்டுச் செத்துப்போனான்" என்றுதான் சொன்னார். அவர் சாகும்போதும் தொப்பியும் கறுப்புக் கண்ணாடியும் அணிந்திருந்தாராம்.

3

டொனாஸ் தலையைக் கவிழ்ந்தவாறே தரையில் அமர்ந்திருந்தான். நியூட்டன் 'அடிக்கவோ' என்று என்னிடம் சைகையால் கேட்டான். நான் அவனைப் பொறுத்திருக்குமாறு சொல்லிவிட்டு டொனாஸின் அருகில் சென்று அவனுக்குப் பக்கத்தில் தரையில் உட்கார்ந்துகொண்டேன். பின்பு அவனிடம் "அது தற்கொலையில்லையா?" என்று கேட்டேன்.

டொனாஸ் தலையை நிமிர்த்தாமலேயே "இல்லை. நான்தான் கழுத்தை நெரிச்சுக் கொலை செய்துபோட்டு எம்.ஜி. ஆரின்ர கழுத்தில கயிறுபோட்டு முகட்டில கட்டித் தூக்கினான்" என்றான்.

"ஏன் அப்பிடிச் செய்தனி?" என்று கேட்டேன்.

டொனாஸ் முகத்தை நிமிர்த்தாமலேயே "எம்.ஜி.ஆர். கொட்டிக்கு ஆதரவு" என்றான்

"என்ன கதை சொல்லுறாய், தீவுப் பகுதி முழுக்க உங்கிட கட்டுப்பாடு அங்க எங்க புலி வந்தது?" என்று நான் கேட்டேன்.

டொனாஸ் தலையை நிமிர்த்தி என்னைப் பார்த்தான். அவனின் உருண்டைக் கண்கள் விரிந்திருந்தன. அவன் ஒரு இரகசியத்தை வெளியிடும் தோரணையில் குரலைத் தாழ்த்தி "உங்களுக்குத் தெரியாது மாமா, எம்.ஜி.ஆர். கோடி கோடியாய் கொட்டிக்குக் காசு குடுத்தவர்" என்றான்.

நம்ப முடிகிறதா பௌஸர்? அந்தக் கொலைக்கு அவன் சொல்லும் காரணத்தை உங்களால் நம்ப முடிகிறதா? டொனாஸை நியூட்டனின் பொறுப்பிலேயே விட்டுவிட்டு நானும் திரவியமும் அங்கிருந்து புறப்பட்டோம். நாங்கள் வெளியே வந்தபோது என் பின்னாலேயே வந்த நியூட்டன் "மாமா அவனை என்ன செய்யிறது" என்று கேட்டான். "அவன் இரவுக்கு இஞ்சயே இருக்கட்டும் நான் விடியப் போன் செய்யிறன்" என்று சொல்லிவிட்டு வந்தேன்.

நான் காலையில் ஒன்பது மணிக்குப் போன் செய்தபோது நியூட்டனின் வீட்டில் யூட்டைத் தவிர மற்ற எல்லோரும் வேலைக்குப் போயிருந்தார்கள். யூட்டும் வேலைக்குப் போகும் அவசரத்திலிருந்தான். "டொனாஸ் எங்கே?" என்று கேட்டேன். "அவனைப் பார்க்கப் பாவமாயிருந்தது, அவனை விடியப்புறமே விட்டுட்டம்" என்றான் யூட்.

இது நடந்து நான்கு நாட்களுக்குப் பிறகு நான் டொனாஸை லாச்சப்பல் தெருவில் கண்டேன். என்னைக் கண்டதும் டொனாஸ் ஓடிவந்து என் பக்கத்தில் நின்றான். "எப்படியிருக்கிறாய்?" என்று கேட்டேன் "நல்ல சுகம் மாமா" என்றவன் கொஞ்சம் நிறுத்தி, "அண்டைக்கு நீங்கள் போன பிறகும் யூட் மச்சான் எனக்கு அடிச்சவர்" என்றான். தலையசைத்து விட்டு நான் அங்கிருந்து நடக்க முயன்றபோது டொனாஸ் என்னை 'மாமா' என்று மெதுவாகக் கூப்பிட்டான். நான் நின்றேன். டொனாஸ் என் கண்களைப் பார்த்தவாறே "மாமா நான் இப்ப ரெண்டு மூண்டு எம்.ஜி.ஆரின்ர படம் பார்த்தனான். எம்.ஜி.ஆர். உண்மையிலேயே நல்ல ஆள்" என்றான். எனக்கு அப்போது ஏற்பட்ட உணர்வுக்கு என்ன பெயர் என்று தெரியவில்லை. அந்தரம் என்பதுகூட எனது உணர்வை விளக்கப் போதுமான சொல்லல்ல. நான் "எம்.ஜி.ஆரும் புண்டையும்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நடந்தேன்.

'எதுவரை' (ஏப்ரல்- மே) இதழில் வெளியான சிறுகதை

Sunday, April 12, 2009

பா.செயப்பிரகாசத்துக்கு மறுப்பு

1980களில் ஈழப்போராளிகள் தமிழகத்தை 'பின்தளம்' என்றே குறிப்பிடுவார்கள். ஈழப்போராட்டத்தில் தமிழக மக்களுடைய வகிபாகம் அளப்பெரிது. தமிழகத்துக் கட்சித் தலைவர்கள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், இயக்கப் போராளிகள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள், வெகுனங்கள் எனப் பல தளங்களிலிருந்தும் ஈழப்போராட்டத்திற்கு ஆதரவு கிடைத்தது. ஈழப்போராட்டத்தில் அடுத்தடுத்து கசப்பான சம்பவங்களும் வரலாற்றுத் தவறுகளும் இழைக்கப்பட்டபோதும் இன்றுவரை ஈழத் தமிழ் மக்களுக்காகத் தமிழகம் வலுவான குரலை ஒலித்துக்கொண்டிருக்கிறது.

ஈழப்பிரச்சினையை மிகவும் பொறுப்புடனும் உணர்வுபூர்வமாகவும் தியாகங்களுடனும் அணுகுபவர்களைப் போலவே ஈழப்போராட்டத்தையும் ஈழத்தமிழர்களின் இன்னலையும் பிழைப்புவாதமாகவும் மலிவான அரசியல் இலாபங்களுக்காகவும் ஒரு சாகச மனநிலையிலும் அணுகுபவர்களும் தமிழகத்தில் இல்லாமல் இல்லை. அப்படியான ஒரு பெருங்கும்பல் இலங்கையிலும் புகலிடங்களிலுமே இருக்கும்போது தமிழகத்தில் இந்தப் பிழைப்புவாதநோக்கும் இருப்பதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. ஈழப்பிரச்சினையை முன்னிறுத்தி அரசியல் கட்சிகள் அடித்த பிழைப்புவாதக் கூத்தை இன்றையத் தேர்தல் கூட்டணிகள் அம்பலப்படுத்தியுள்ளன. ராணி, தேவி வாராந்திரிகள் முதற்கொண்டு கிழக்குப் பதிப்பகத்தின் 'பிரபாகரன்' நூல், இன்று குமுதத்தில் பா.ராகவன் எழுதிவரும் தொடர் போன்றவை எந்தவிதப் பொறுப்புமில்லாமல் ஈழத்தவர்களின் மனிதவுரிமைப் பிரச்சினைகளை மிகத் தவறான தரவுகளைக்கொண்டு மனோரதிய நிலையிலிருந்து விளக்குபவை.

மிகவும் ஆய்வு நோக்கிலும் பொறுப்புணர்வோடும் செயற்படுவதாக வாயடிக்கும் 'காலச்சுவடு'ம் வம்புத்தனத்தைச் செய்யத் தவறவில்லை. அப்பத்திரிகையின் இம்மாத இதழில் சை. பீர்முகம்மது "காட்டிக்கொடுக்கும் கருணா: ஒரு போராளி துரோகியான கதை" என்றொரு கட்டுரையை எழுதியுள்ளார். இது ஒன்றும் அரசியல் ஆய்வுக் கட்டுரை கிடையாது. இதுவும் பா.ராகவன் எழுதுவதைப்போல 'புலனாய்வு'க் கட்டுரைதான். சை. பீர்முகம்மது கருணாவைப் பாரத்தபோதே மின்வெட்டும் நேரத்தில் கருணா நம்பிக்கைக்குரிய மனிதர் அல்ல என்பதைக் கண்டுபிடித்துவிட்டாராம். பன்னாட்டு விமானநிலைய சோதனைகளின்போது நூற்றுக்கணக்கான காவற்துறையினரையும் அதிநவீன கருவிகளையும் இனிப் பயன்படுத்தத் தேவையில்லை. சை. பீர்முகம்மதுவை வாயிலில் நிறுத்தி வைத்தால் போதும். தீவிரவாதிகளை மின்வெட்டும் நேரத்தில் முகத்தைப் பார்த்தே கண்டுபிடித்துவிடுவார்.

கட்டுரையில் பீர்முகம்மதுவின் கண்டுபிடிப்புகளைப் படித்தால் பிரபாகரனே அதிர்ச்சியடைவார். மட்டக்களப்புக் கட்டளைத் தளபதி கண்ணன் அல்லது கர்ணன் என்றொரு கற்பனைத் தளபதியை உருவாக்கும் சை.பீர்முகம்மது அந்த இல்லாத தளபதி உடைவுக்கு முன்னமே கருணாவால் கொல்லப்பட்டார் என்றொரு செய்தியைச் சொல்கிறார். இந்த முழுப்பிழையான தகவலைக் கூட விட்டுவிடலாம். கிட்டுவும் புலேந்திரனும் குமரப்பாவும் வந்த கப்பலை இந்திய கடற்படை வழிமறித்ததால் அவர்கள் கப்பலை வெடிக்க வைத்து ஒருசேர இறந்தார்கள் என்ற ஒரு தகவல் போதாதா சை. பீர்முகம்மதுவின் புலனாய்வுத் திறமைக்கு. பன்னாடை! பன்னாடை!!

கருணாவை விமர்சனங்களிலிருந்து காப்பாற்றுவது நமது வேலையல்ல. தவிரவும் நம்மிடமே அவர் குறித்த ஏகப்பட்ட விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளுமுண்டு. ஆனால் கிழக்கின் சுயாதீன அரசியலையும் கிழக்கில் வாழும் மூவின மக்களின் தனித்துவமான அரசியல் உரிமைகளையும் அங்கு காலாதிகாலமாய் கனன்றுகொண்டிருந்த யாழ் மையவாதத்திற்கு எதிரான எதிர்ப்புணர்வு கருணாவின் உடைவையொட்டி வீறுடன் எழுந்ததையும் வெறுமனே 'கருணாவின் துரோகம்' என்ற ஒற்றைச் சொல்லாடலுக்குள் மறைத்துவிட முடியாது. ஆனால் அந்த வேலையைத்தான் நூற்றுக்கு நூறு விழுக்காடு தவறான தகவல்களோடு சை. பீர்முகம்மது செய்துள்ளார். அதைப் பொறுப்பில்லாமல் காலச்சுவடும் வெளியிட்டுள்ளது. அரசியல் நிலைப்பாடுகளைத்தான் சரிபார்க்க மாட்டீர்கள், நேற்று நடந்த வரலாற்று நிகழ்வுகளைக் கூடவா சரிபார்க்க மாட்டீர்கள்? இதற்குள் காலச்சுவடுக்கு சேரன், பத்மநாபன், மகாலிங்கம் என ஏழெட்டு ஈழத்து மதியுரைஞர்கள் வேறு. 'தந்தை' செல்வா சொன்னதைத்தான் நாம் மறுபடியும் அவருப்புடன் சொல்ல வேண்டியிருக்கிறது.

இதற்கிடையில்தான் பா. செயப்பிரகாசம் "யாருக்காகப் பேசுகிறார் அ. மார்க்ஸ்" என்றொரு கட்டுரையை 'கீற்று' இணையத்தில் எழுதியிருந்தார். அ.மார்க்ஸ் 'புத்தகம் பேசுது' இதழுக்கு வழங்கியிருந்த நேர்காணலை எப்படியெல்லாம் திரிக்க முடியுமோ அப்படியெல்லாம் திரித்து, மேற்கோள்களை எப்படியெல்லாம் சிதைக்கமுடியுமோ அப்படியெல்லாம் சிதைத்து பா.செ. அந்தக் கட்டுரையில் புலிகளுக்கு வக்காலத்து வாங்கியிருந்தார். பல இடங்களில் பா.செயப்பிரகாசம் காலச்சுவடுக் கட்டுரையாளரை மட்டுமல்லாமல் குமுதம் கட்டுரையாளரையும் தாண்டிச் சிந்தித்துள்ளார். ஓவராய் சிந்தித்ததன் விளைவுதான் ராஜீவ் காந்தியைப் புலிகள் கொல்லவில்லையென்ற அவரது புதிய கண்டுபிடிப்பு. சிவராசனுக்கும் அகிலாவுக்கும் தனுவுக்கும் சூசகமாக வீரவணக்கக் குறிப்புகளை புலிகள் தங்களது பத்திரிகைகளில் எழுதியதை பா. செ. அறியாமலிருந்திருக்கலாம். ராஜீவ் காந்தியை எதற்காகக் கொன்றீர்கள் என்ற கேள்விக்கு வன்னிப் பத்திரிகையாளர் மாநாட்டில் பிரபாகரன் தலைகுனிந்ததைக்கூட பா.செ. அறியமாட்டாரா? இதிலே பின்நவீனத்துவம் குறித்து பா.செக்கு விமர்சனம்வேறு. தமிழ்நாட்டில் மதுரை ஆதீனம் மட்டும்தான் இன்னும் பின்நவீனத்துவம் மீது விமர்சனம் வைக்கவில்லை.

ஆனால் பா.செயப்பிரகாசம் நம் மதிப்புக்குரிய எழுத்தாளர். அவர் 'மனஓசை'யைப் பொறுப்பேற்று நடத்திய காலங்களுக்காக நம்மிடம் மதிப்புப்பெற்றவர். எனவே காசுக்காக எழுதித் தள்ளிக்கொண்டிருக்கும் பா.ராகவனைப் போலவோ முகரேகை சாஸ்திரி சை.பீர்முகம்மதுவைப் போலவோ நாம் அவரை அலட்சியம் செய்துவிட முடியாது. எனவே நாம் பொறுப்புடன் அவர் கட்டுரையைப் படித்து, பொறுப்புடன் மறுக்க வேண்டியிருந்தது. சுகன் கீற்றுவுக்கு ஒரு மறுப்புக் கட்டுரையை அனுப்பி வைத்தார். அது கீற்றுவின் பின்னூட்டப் பகுதியில் வெளியாயிற்று. இப்போது மிகுந்த பொறுப்புடனும் சரியான சான்றுகளுடனும் சிராஜூதீன் அதே கீற்று இணையத்தளத்தில் பா.செக்குப் பதில் அளித்துள்ளார். அந்தப் பதிலை கீழே படிக்கலாம். நூறு அறிவாளிகளுடன் போராடுவதைவிட ஒரேயொரு முட்டாளோடு மோதுவது சிரமமானது என்பார் தந்தை பெரியார். சிராஜூதீனும் சிரமப்பட்டுத்தான் எழுதியிருப்பார். வாழ்த்துகள் சிராஜூதீன்.

பா.செயப்பிரகாசம் கட்டுரைக்கான எதிர்வினை:
- சிராஜூதீன்

புத்தகம் பேசுது இதழுக்காக அ. மார்க்ஸ் அவர்களை நான் எடுத்த நேர்காணல் குறித்து ‘யாருக்காக பேசுகிறார் அ. மார்க்ஸ்’ என்ற கட்டுரையை கீற்று இணையதளத்தில் எழுதியது மட்டுமல்லாமல் நகலெடுத்து தான் செல்லுமிடமெல்லாம் விநியோகித்து வருகிறார் பா. செயப்பிரகாசம். நேர்காணல் செய்தவன் என்ற முறையில் சில விஷயங்களை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1. அ. மார்க்ஸிடம் ஈழப் பிரச்சனை குறித்து மட்டுமே நேர்காணல் செய்ய வேண்டும் என்கிற நோக்கில் எங்களின் ஆசிரியர் குழுவின் முடிவின்படி தொகுத்தெடுத்துக் கொண்ட கேள்விகளுக்கான பதிலை அவரிடம் பெற்று வெளிவந்த நேர்காணல் அது. ஆய்வுபூர்வமான அடிப்படையில், சிந்திக்கத்தக்க, ஆழமான கருத்துகளைக் கொண்டு இருந்தது அந்த நேர்காணல். இனவெறி, மொழி வெறி அற்றவர்கள் மத்தியிலும், தமிழகம் அயல்நாட்டிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஒரு மூத்த எழுத்தாளர் பா.செ. தரங்கெட்ட மொழியிலும் முற்றிலும் அவதூறுமிக்க ஒரு எதிர்வினையை அந்நேர்காணலுக்கு எழுதி இருப்பதும், அதை பெருமைக்குரிய செயலாக செல்லுமிடமெல்லாம் விநியோகித்துக் கொண்டு திரிவது மிகவும் கேலிக்குரியது. தன்னைப் பற்றிய கவன ஈர்ப்புக்காக எதையும் செய்பவர், எதையும் குளறுபடியாக விதைப்பவர், கேள்வியும் நானே பதிலும் நானே என அவதூறுகளில் அவர் சரண் புகுவதில் இருந்தே மார்க்ஸ் எழுப்பிய எந்தக் கேள்விக்கும் அவரிடம் தரவுகள் இல்லை என்பதையே காட்டுகிறது.

2. சிவத்தம்பி, கைலாசபதி, குணவர்த்தனே ஆகியோரின் கருத்துகள் மற்றும் வரலாற்று தகவல்கள் அடிப்படையில் அ.மா. சில கருத்துகளை முன்வைத்துள்ளார். இதில் தேவையில்லாமல் பின்நவீனத்துவத்தை இழுப்பதும், மார்க்சியத்தை எள்ளி நகையாடுவதும் அ.மா. எழுப்பிய எந்தக் கேள்விகளுக்கும் அவரிடம் சரக்கு இல்லாததையே காட்டுகிறது.

அந்த நேர்காணலில் பின்நவீனத்துவம் என்ற சொல்லையோ, மார்க்சியம் என்ற ஆய்வு முறையையோ அ.மா. சுட்டிக்காட்டவில்லை. இலங்கைத் தமிழர் என்ற சமூக உருவாக்கம் எண்பதுகளுக்குப் பிறகு ஏற்பட்ட சமூக மாற்றங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே அவர் தனது பதிலைச் சொல்லி உள்ளார். இங்கே தேவையில்லாமல் பின்நவீனத்துவமும், மார்க்சியமும் எங்கே வந்தது?

3. பா. செயப்பிரகாசம் பின் நவீனத்துவத்தைக் காட்டிலும் மார்க்சியத்தையே தாக்குகிறார். தங்களின் தவறான செயல்பாடுகளின் மூலம் மக்களின் விடுதலையை சிதைத்த புலிகளின் முகவர்களில் ஒருவரான பா.செயப்பிரகாசத்திற்கு ந. சண்முகநாதன் போன்ற மார்க்சியர்களையும், கம்யூனிஸ்ட் கட்சியையும் குறை சொல்வதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது? இன்று ராஜபக்ஷேயின் கொடும் பாசிச ஆட்சியை எதிர்த்து வருவது மட்டுமல்ல மலையகத் தமிழர்கள் நாடற்றவர்களாக சிங்கள பேரினவாத அரசால் அறிவிக்கப்பட்ட போதும் குரல் கொடுத்தவர்கள் கம்யூனிஸ்டுகள்தான்.

4. சோவியத் பின்னடைவிற்குப்பின் உலகெங்கிலும் தேசிய முரண்பாடுகள் மேலெழுந்தன எனவும், மார்க்சிஸ்டுகள் இதைக் கவனிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டுகிறார் பா.செ. தேசிய இன அடையாளம் மட்டுமல்ல, பல்வேறு அடையாளங்களும் தங்களை உறுதி செய்து கொள்ளும் அரசியல் மேலெழுந்தது என்பதை அ.மா. ஆதாரப்பூர்வமாக சுட்டிக்காட்டுகிறார்-

இந்தியாவில் தலித், நேபாளத்தில் ஜனசாதி, மாதேசிகள், ஈழத்தமிழர்கள் மத்தியில் தலித்கள், முஸ்லிம்கள், கிழக்கு மாகாணத்தினர் என்றெல்லாம் இன்று அடையாள உருவாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் கணக்கிலெடுத்துக் கொள்ளாததோடு வன்முறையாக ஈழத்தில் எழும்பிய அடையாள எழுச்சியை ஒடுக்க முயற்சித்ததின் விளைவாகத்தான் இன்று புலிகள் களத்தில் மட்டுமல்ல அரசியலிலும் தோற்றுப்போய் உள்ளனர்.

ஈழத் தமிழ் சமூகத்திற்குள் ஏற்பட்டுள்ள இந்த அடையாள விகசிப்புகளுக்கு முஸ்லிம்களால் நடத்தப்படும் ‘பெருவெளி’, தலித்துகளால் நடத்தப்படும் ‘தூ’ கிழக்கு மாகாணத்தவர்களால் நடத்தப்படும் ‘எக்ஸில்’ போன்ற சஞ்சிகைகளே சான்று பகரும்.

இது குறித்து பா.செயப்பிரகாசத்தின் கள்ள மௌனத்திற்கு அர்த்தம் என்ன?

5. ம.க.இ.க.வினர் புலிகளை பாசிஸ்ட் இயக்கம் என சொல்வதாக அ.மா. சொல்கிறார். இதற்குப் பதிலாக பா.செ. என்ன சொல்கிறார் என கீற்று வாசகர்கள் படிக்கவும். ம.க.இ.க.வினர் அப்படி குரல் எழுப்பினார்கள், இப்படி குரல் எழுப்பினார்கள் எனச் சொல்லும் பா.செ. ம.க.இ.க.வினர் புலிகளை பாசிஸ்ட் இயக்கம் எனச் சொல்லவில்லை என எந்த தரவுகளோடும் மறுக்க முயலவில்லை.

6. வடக்கு மாகாணத்தில் இருந்து முஸ்லிம்களை வன்முறையாக வெளியேற்றியதற்கு புலிகள் வருந்தி முஸ்லிம்களை திரும்ப அழைத்தார்களாம். இராணுவம்தான் அவர்களை தடுத்து நிறுத்தி வைத்திருக்கிறார்களாம். கீற்று வாசகர்கள் எல்லோரும் காதில் பூ சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் என பா.செ. நம்புவதுபோல் தெரிகிறது. வெறுமனே வருத்தம் தெரிவித்தல் போதாது மீண்டும் அவரவர் இடத்திற்கு வரலாம் என அதிகாரப்பூர்வமாக புலிகள் அறிவிக்க வேண்டுமென்றுதான் முஸ்லிம்கள் கெஞ்சினார்கள். புலிகளின் இரக்கமற்ற மனம் கடைசி வரை அதைச் செய்யவில்லை. ‘பெருவெளி’ அக்டோபர் 07 கட்டுரையை பா.செ. வாசிக்குமாறு பரிந்துரைக்கிறேன்.

முஸ்லிம்களை இராணுவம் தடுத்து வைத்திருக்கிறது என்பதும், முஸ்லிம்கள் சிங்கள பேரினவாதத்திற்கு துணைபோகிறார்கள் என எழுதுவதும் (தாரகா) முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான் பயிற்சி அளிக்கிறது என்பதுவும் உங்களிடமுள்ள இந்து மனத்தைத்தான் வெளிப்படுத்துகிறது.

7. தீராநதியில் ஷோபா சக்தியின் பேட்டியின் வழியாக அ.மார்க்ஸ் உடன்பட்ட கருத்துக்கும், பின்னர் அவர் புத்தகம் பேசுது நேர்காணலில் வெளியிட்ட கருத்துக்கும் ஏதோ பெரிய வேறுபாடு இருப்பதாக மிகப்பெரிய கண்டுபிடிப்பை கண்டதாக சொல்கிறார் பா.செயப்பிரகாசம்.

கருணா மற்றும் பிள்ளையானை ஷோபா சக்தியோ அ.மார்க்ஸோ அந்த நேர்காணலிலும் இந்த நேர்காணலிலும் ஆதரித்தது கிடையாது. அங்கு ஒரு தேர்தல் நடந்தது மக்கள் விரும்பி பங்கேற்றார்கள். தேர்தலுக்குப்பின் ஒப்பீட்டளவில் மக்கள் அமைதியாக வாழ்கிறார்கள். இப்பொழுது வேண்டுவது அமைதி மட்டுமே. பேட்டியில் சொல்லப்பட்ட கருத்துகளை தனது காஷ்மீர் பயண அனுபவத்தையும் இணைத்து அ.மா. சொல்லியுள்ளார். 30 ஆண்டு காலப் போரில் அனைத்தையும் இழந்து களைத்துப் போன மக்கள் அமைதி வேண்டுவதை மையப்படுத்தியே ஷோபாவின் பேட்டியும் மார்க்ஸின் பேட்டியும் அமைந்துள்ளது.

கொலைகள், ஆள் கடத்தல் குறிப்பாக குழந்தைகளை கட்டாயமாக போர்க்களத்திற்கு இழுத்துச் செல்வதெல்லாம் ஒப்பீட்டளவில் குறைந்திருக்கிறது என தீராநதி நேர்காணலில் ஷோபா கூறி இருந்தார். இன்னும் முழுமையாக அமைதி திரும்பவில்லை என மார்க்ஸ் கூறுகிறார். இதிலென்ன முரண்பாட்டை அவர் கண்டார்.

8. புலிகளின் முகவர் என பா.செயப்பிரகாசத்தையும், அவரையொத்தவர்களையும் மார்க்ஸ் சொல்வதால் செயப்பிரகாசத்திற்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறதே!

இராஜபக்ஷேவையும், கருணாவையும் மார்க்ஸ் ஆதரிப்பதனால் அவர்களின் ஏஜெண்ட் என மார்க்ஸை சொல்லலாமா என ரொம்பவும் புத்திசாலித்தனமாக கேட்கிறார் பா.செ. ராஜபக்ஷேவையும், கருணாவையும் மார்க்ஸ் எந்த இடத்தில் ஆதரித்தார்? நேர்மை இருந்தால் ஒரு சிறிய ஆதாரத்தையாவது அவர் தரட்டுமே.

‘எதுவரை’ என்றொரு சஞ்சிகை பிரிட்டனிலிருந்து வெளிவருகிறது. அவ்விதழில் ராஜபக்ஷேவின் அரசு கொடூரமான இனவாத பாசிச அரசாக உள்ளது என்பதை இதுவரையும் சொல்லாத தரவுகளோடு எழுதி உள்ளார். அந்தச் சஞ்சிகையையும் பா.செயப்பிரகாசம் வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

மார்க்ஸ் மீது புலிகளுக்கு உள்ள காழ்ப்பெல்லாம் அவர் ராஜபக்ஷேவை, கருணாவை ஆதரிக்கிறார் என்பதற்காக அல்ல. அவர் ஆதரிக்கவில்லை என்று புலி முகவர்களுக்கு தெரியும். பிரச்சனை என்னவெனில், ராஜபக்ஷே, கருணா ஆகியவர்களோடு புலிகளின் அக்கிரமங்களையும், பாசிச நடவடிக்கைகளையும் கண்டிக்கிறார் என்பதுதான்.

ஒருவரை முகவர் என வரையறை செய்வதற்கான காரணிகளை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்த இயலுமென நினைக்கிறேன்.

_ யாருக்கு முகவர்களாக இருக்கிறார்களோ அவர்களின் செயல்பாடுகளுக்கும், அநீதிகளுக்கும் ஒத்தூதுவது.
_ அவர்களுக்காக தங்கள் வாழும் இடத்தில் லாபி செய்வது
_ அவர்களுக்குப் பயன்படுவது, அவர்களால் ‘பயன்’ பெறுவது

எல்லாம் போகட்டும் முகவர் என மார்க்ஸ் சொன்னதற்காக பா.செ. இவ்வளவு பொங்குகிறாரே கருணாநிதி தனது பத்திரிகையில் புலிகளின் பேரால் காசு சுருட்டும் காகிதப் புலிகள் என எழுதினாரே அப்போது எங்கே போனார்கள் முகவர்கள்? கருணாநிதிக்கு எதிராக பா.செ. தான் செல்லுமிடமெல்லாம் துண்டறிக்கை ஏன் விநியோகிக்கவில்லை? அவர் கையில் உளவுத் துறை இருக்கிறது என்ற அச்சமா? ஒரு பெரியவர், மூத்த அரசியல்வாதி இப்படிப் பேசலாமா என்கிற ரீதியில் தானே நசுக்கி, நசுக்கி புலி முகவர்கள் கோபத்தை வெளிப்படுத்தினார்கள்.

புலிகளுக்காக எதையும் செய்யக்கூடியவர்தான் பா.செ. என்பதை நவீன தமிழ் இலக்கிய உலகம் நன்கறியும். ஈழம் தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்த டெல்லிக்கு சென்ற ‘தோழமையின் குரல்’ நவீன தமிழ் இலக்கிய குழாமிற்கு பயணச்சீட்டு இரயிலில் வாங்குவதற்கு ரூபாய் முப்பத்தி நான்கு ஆயிரத்தை அனாயசமாக உருவித் தந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பா.செயப்பிரகாசம். தமிழகத்தில் நடக்கும் எந்தப் போராட்டத்திற்கும் இந்த மாதிரி உதவி செய்ததாக நமக்குத் தெரியவில்லை. (பின்னால் புலிகளுக்கு ஆதரவான முழக்கத்தை ஆர்ப்பாட்டத்தின்போது வைக்க முடியாது என அவர்கள் மறுத்ததால் அவர்களிடமிருந்து பணத்தை திரும்பப் பெற்றுக்கொண்டது வேறு கதை). தலித்துகள் மீது தமிழகத்தில் நடத்தப்படும் வன்முறைகளை ஒரு தமிழன் இன்னொரு தமிழன் மீது வன்முறையை நிகழ்த்த வேண்டாம் என வன்முறையை நிகழ்த்தும் மேல்சாதி தமிழனை பார்த்து எந்தப் புலி முகவர்களும் தமிழின ஒருமைப்பாடு பேச முன்வரவில்லையே. ஏன்?

புலி ஆதரவு, தமிழ் ஆதரவு, தமிழர் ஆதரவு என்ற பெயரால் இங்கே எப்படியெல்லாம் காசு சுரண்டப்படுகிறது என்பதை கீற்று வாசகர்களுக்கு விளக்கத் தேவையில்லை. ஓவியர் புகழேந்தி மென்பொருள் துறையைச் சேர்ந்தவர்களிடம் காசு பறித்ததை கீற்று நந்தன் எழுதியதை வாசித்திருப்பீர்கள். அந்தச் சம்பவம் ஒன்று தான் வெளிவந்திருக்கிறது. வெளிவராத சம்பவங்கள் இன்னும் நிறைய.

பத்மநாபா உள்ளிட்ட இதர போராளிகளை புலிகள் கொன்றதெல்லாம் இந்திய உளவுத் துறையின் ஊடுருவலைத் தடுக்க, ராஜீவ் காந்தியைக் கொன்றது சந்திரசாமி, ஈழத்தில் நடக்கும் போரை இந்தியாவே நடத்துகிறது. தமிழினமே என்ற அடையாளமே இல்லாமல் செய்ய இந்தியா மூலசக்தியாக இயங்குகிறது என்றெல்லாம் பல ‘அதிரடியான’ உண்மைகளை அடுக்குகிறார். இப்படி விஷயங்களை மிக எளிமைப்படுத்தி பார்ப்பதுதான் புலி ஆதரவாளர்கள் வழக்கம்.

இலங்கை அரசாங்கத்திற்கு இந்திய ஆயுத மற்றும் பொருளாதார உதவி வழங்குகிறது. இந்தியாவின் விரிவாக்க நோக்கத்திற்கு உட்பட்ட செயல் இது என்றுதான் நாம் கூறமுடியுமே தவிர, இந்தியாவே போரை நடத்துகிறது என்று சொன்னால் அதன் பொருள் என்ன? ஆதாரங்கள் இருக்கிறது என்கிறாரே சொல்லுங்களேன்.

பத்மநாபன் இந்திய உளவுத்துறையின் ஆள் எனச் சொல்கிறீர்கள். சரி வைத்துக் கொள்வோம். மாத்தையாவைப் புலிகள் கொன்றார்களே அவர் இந்திய உளவாளியா? விபச்சாரிகள் என்றும் திருடர்கள் என்றும் மின் கம்பத்தில் கட்டி வைத்து சுடப்பட்ட தமிழர்கள் எல்லாம் இந்திய உளவாளிகளா? பள்ளி வாசலில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்களை சுட்டுக் கொன்றது அவர்கள் இந்திய உளவாளி என்பதாலா? முஸ்லிம்களை இருபத்து நான்கு மணி நேரத்தில் 500 ரூபாய் பணம் அல்லது அத்தொகைக்கு நிகரான பொருளோடு வெளியேற வேண்டும் என்று புலிகள் உத்தரவு போட்டார்களே இதெல்லாம் எதனால்? அவர்கள் இந்து வெள்ளாள மனநிலைதான் என்பது கூடவா உங்களுக்குத் தெரியாது. உங்களுக்கு எல்லாம் தெரியும். புலிகள் தமிழர்களை காப்பாற்ற மாட்டார்கள் என்று கூட உங்களுக்குத் தெரியும்.

அவர்கள் தமிழர்களை காப்பாற்ற மாட்டார்கள் என்பதற்கு சமீபத்திய நிகழ்வுகளே சான்று. தமிழர்களை மனிதக் கேடயமாக பயன்படுத்தி அபயம் தேடுகிறார்கள். புலிகள் தப்பிச் செல்லும்போது தமிழர்களை கொன்றொழிக்கிறார்களே இதுவும் உங்களுக்குத் தெரியாதா என்ன?

ராஜீவ் காந்தி கொலை சம்பவத்தை பிரபாகரனே அது ஒரு துன்பியல் சம்பவம் என ஒத்துக்கொண்ட பிறகு நரசிம்மராவுக்காக சந்திராசாமி, சுப்பிரமணியசாமி தான் ராஜீவைக் கொல்வதற்கு துணைபோனார்கள் எனச் சொல்வது நல்ல நகைச்சுவை.

அ. மார்க்ஸ் புலிகளை ஆதரிக்கும் எல்லோரையும் முகவர் எனச் சொல்லவில்லை. புத்தகம் பேசுது நேர்காணலின் கடைசிப் பதிலை ஊன்றிப் படித்துப் பாருங்கள். மாவோயிஸ்டுகளைக் கூட அப்படிச் சொல்லவில்லை. உங்களைத்தான் உங்களைப் போன்றவர்களைத்தான் அப்படிச் சொல்ல முடியும்.

சி.பி.எம்.முக்கும், அ.மார்க்சுக்கும் நிறைய கருத்து முரண்பாடுகளும், கருத்து வேறுபாடுகளும் உண்டு. அவரும் எங்களை விமர்சனம் செய்வதுண்டு. நாங்களும் அவரை விமர்சிக்கத்தான் செய்கிறோம்.

ஈழம் தொடர்பான கருத்து நிலைகளில் கூட அவருக்கும் எங்களுக்கும் நிறைய முரண்பாடுகள் இருக்கிறது. எங்கள் இருவருக்கும் ஈழப்பிரச்சினையில் ஒத்த கருத்து இல்லை என சி.பி.எம்.மையோ, அ.மார்க்ஸையோ அவதானிப்பவர்களால் விளங்கிக் கொள்ள முடியும். அது உங்களால் முடியாது. ஏனென்றால் நீங்கள் ஈழத் தமிழ் மக்களை நேசிப்பவர் அல்ல. புலிகளை ஆதரிப்பவர். நாங்கள் மக்களை நேசிப்பவர்கள். அந்தப் புள்ளியில் மட்டும்தான் இந்த நேர்காணல் புத்தகம் பேசுது இதழில் வெளியானது. அவ்வளவே.

‘பெருவெளி’ இதழின் வழியாக முஸ்லிம்கள் ‘சோனகர் தேசம்’ என்ற கருத்தாக்கத்தை முன்வைக்கிறார்கள். அவர்கள் இந்த கருத்து நிலைக்கு தள்ளப்பட்டதற்கு புலிப் பாசிசம்தானே காரணம். மார்ச் 10, 2009 அன்று நடைபெற்ற மீலாது விழாவில் புலிகளின் மனித வெடிகுண்டு தாக்குதலில் 20 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிகழ்வுக்கு பா.செயப்பிரகாசம் என்ன விளக்கமளிக்கப் போகிறார்? புலிகள் தலித்துகள், முஸ்லிம்கள் விரோதி மட்டுமல்ல; மனிதகுல விரோதிகள். அவர்களின் நடவடிக்கைகளை, படுகொலைகளை மீலாது ஊர்வலத் தாக்குதல் வரை தொகுத்துப் பாருங்கள். ஒரு தேர்ந்த மார்க்சியவாதி நீங்கள். ஒரு மார்க்சியவாதிக்கு மட்டுமே உண்மைகளை மிக எளிதாக அடையாளம் காணமுடியும்

Wednesday, April 08, 2009

அஞ்சலி:

பேராசான் இ.வெ.செல்வரட்ணம் அவர்கள்.
(1930 - 2009)

இலங்கை அரசியல் ஆடுகளத்தில் கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் இவற்றின் தோற்றங்களை ஆய்வுறுவோருக்கும் ஆர்வலருக்கும் பேராசான் இ.வெ.செல்வரட்ணம் அவர்களின் பெயரும் இடமும் தெரியவரும்.

அடங்காத்தமிழர்,இரும்பு மனிதர் ,வீரமறவர், கோப்பாய்க்கோமான்....... இன்னோரன்ன தமிழ் அரசியல் அபத்தநிலைகளுக்கு முன்னர் மகத்தான நேர்மையான தமிழ் அரசியற் செல்நெறியான 'சிறுபான்மைத்தமிழர் மகா சபையின்' முதலீட்டாளர் பேராசான் இ.வெ.அவர்கள்.

இனவெறியிலும் கொடுமையான, ஏகாதிபத்திய ஒடுக்குமுறைகளுக்கு நிகர்த்த கச்சிதமாகவும் அரக்காதும் ஒழுங்கமைக்கப்பட்ட யாழ்ப்பாண வெள்ளாள நிறுவனத்தின் ஒடுக்குமுறையை மறுத்து திமிறிஎழுந்த நாகரீகத்தின் முதற்தலைமுறையான யோவேல் போல் அவர்களின் அடுத்தகாலடி இலங்கையன் எனவும் அறியப்பட்ட இ.வெ.செல்வரட்ணம் அவர்கள்.

சிறுபான்மைத் தமிழர் மகாசபை செயற்பாடுகளிலிருந்து அவரது 'வாழ்வும் வடுவும்' நூல்வரை அவரது போராட்டம் விரவிக்கிடக்கிறது.மேற்சாதியினருக்குக் கல்வி ஓர் கடமை, வாழ்க்கைநெறி எனில் தலித்துகளுக்கு அது ஒரு போராட்டம்! பெருங்கனவு!!

பிறப்பின் அடையாளமே சாதி அடையாளமாக உரைத்துப் பார்க்கும் சனாதன தர்மம் அவரது பிறப்பிலிருந்தே அவரைச் சீண்டுகிறது.சாதி வெறியனான வெள்ளாள விதானையிடமிருந்து 'மெலிஞ்சியன்' என இ.வெ. அவர்களின் பிறப்புச் சான்றிதழை அவரது தந்தையார் பெற்றுக்கொள்கிறார். மேற்சாதி கொடுத்த இழிவான பெயரைத் தானே மாற்றியதிலிருந்து யாழ்ப்பாண சமூகத்தின் மிகப்பெரும் கல்வியாளனாக அவர் மாற்றமுறுகிறார்.

117.பருத்தித்துறை வீதி, நல்லூர், யாழ்ப்பாணம் முகவரியில் அமைந்த அகில இலங்கை சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் 16 வது வருட மாநாட்டின் கெளரவ இணச்செயலாளர்களில் ஒருவரான கவிஞர் க.பசுபதி அவர்களுடன் இணைந்து 03.08.1959 இல் அவர் வடிவமைத்த அறிக்கை அவர் மேதமையையும் அறிவு விசாலத்தையும் சொல்கிறது. அவ் அறிக்கையின் ஒரு பகுதி இப்படிச் சொல்கிறது:

உதவித்தொழில் மந்திரியின் வருகையும் நெருக்கடியும் :

09.06.57 இல் 14 வது ஆண்டு மாநாட்டிற்கு அப்போதைய உதவித் தொழில் மந்திரி M.P.D. சொய்சாவை அழைத்திருந்தோம் அன்னாரின் வருகையைப் பெரும்பான்மைத் தமிழர்கள் பலரும் சிறப்பாக ஒரு அரசியற் கட்சியும் ஆர்ப்பாட்டம் செய்து கற்களையும் கறுப்புக் கொடிகளையும் வீசி, தங்கள் எதிர்ப்பைக் காட்டியதுடன் நில்லாமல் மாநாடு நடைபெற இருந்த மாநகரசபை மண்டபத்தையும் ஆக்கிரமித்து நம்மைக் கூட்டம் நடாத்த விடாதும் மந்திரி அவர்களை மாநாட்டில் கலந்துகொள்ளவிடாதும் கத்தினர். காலை 10 மணிக்கு நடக்கவிருந்த மாநாடு ஆக்கிரமிப்புக்காரர்களின் தலையீட்டால் பகல் 12 மணிக்கே நடத்த முடிந்தது.

இந்த எதிர்ப்பிற்கு மத்தியிலும் அன்று மாலை மந்திரியவர்களுக்கு திரு.இ.வே .செல்வரட்ணம் அவர்கள் வீட்டில் வைத்து வரவேற்பு நடத்தியது குறிப்பிடத்தக்கது. நமது சரித்திரத்திலே ஏன் தமிழர்களுடைய சரித்திரத்திரத்திலேயே இது கறைபடிந்த நிகழ்ச்சியாகும்.இந்த வேளையில் நாம் நெஞ்சில் நிறுத்தவேண்டியதொன்று.
நாம் மந்திரியை வரவழைத்தது சிறுபான்மைத் தமிழர்களின் வாழ்க்கைநிலை ,கல்வி ,பொருளாதாரநிலைகளைப்பற்றி எடுத்துச்சொல்லி நியாயமான இதுகாலவரை மறுக்கப்பட்ட உரிமைகளை அரசாங்கத்திடமிருந்து பெறுவதற்காகவே. இது நமது குற்றமா? பல வழிகளிலும் உரிமை இழந்திருந்த நாம் எமது உரிமைகளைப்பெற முனைவது குற்றமென்றால் இன்று தமிழர்கள் சிங்களவர்களிடம் உரிமைப்போராட்டம் நடத்துவதில் என்ன அர்த்தமிருக்குமோ?

இ.வெ.செல்வரட்ணம் அவர்களின் நுட்பமான தூரநோக்கான மகாசபை தீர்மானங்களில் ஒன்று பல்வேறு கட்சிகளில் அங்கத்துவராகவோ பொறுப்புகளிலோ இருக்கும் ஒருவர் மகாசபையின் நிர்வாகத்தில் பங்குபெறுவதைத் தவிர்த்தல் என்பதாகும். அந்த வகையில் தலித்துகளிற்கான தனித்துவமான அமைப்பை அவர் அவாவி நின்றார்.

28.02.1930 இல் உடுப்பிட்டி நாவலடியில் பிறந்து 21.03.2009 கனடாவில் இவர் காலமானார். இலங்கையில் கல்வி அதிகாரியாகவும், கனடாவில் கல்வி ஆலோசனைகளிலும் பணியாற்றினார். சென்ற்-பற்றிக்ஸ் கல்லூரியை அரசுடமையாக்குவதற்கு யாழ்-வேளாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தபோது அதற்கெதிராக ஏ.ஜே.கனகரட்ணா குரலெழுப்பியதை அவரது அஞசலி நிகழ்வில் இ.வெ. நினைவுகூர்ந்தார்.

தமிழ்ச்சமூகத்தின் அநேகமான, சிறப்பான தலைவர்கள் எல்லோருமே அகதியாய் பனியும் நோயும் மிடிமையும் என புகலிட வாழ்வு நோற்று இறந்துபடும் காலம் இவர் மரணத்தோடாவது முடிவுறவேண்டும்.

- சுகன்
08.04.2009

Friday, April 03, 2009

பன்னாட்டு கண்டன ஆர்ப்பாட்டம்

இடம்: மெமோரியல் ஹால்
நாள்: 08-04-2009
நேரம்: மாலை 3-6 மணி

தோழர்களே! இலங்கைத் தமிழர்களை படுகொலை செய்வதை நிறுத்தக் கோரியும் தமிழ்ப் பகுதிகளிலிருந்து படைகளை திரும்பப் பெற கோரியும் பன்னாட்டு அளவில் இலங்கை அரசை வற்புறுத்த வேண்டிய ஒரு காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். சர்வதேச அளவில் நமக்குள்ள தொடர்புகளைப் பயன்படுத்தி பாசிச இலங்கை அரசு குறித்தும் இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது குறித்தும் உலக அளவிலான மனித உரிமைப் போராளிகள், தொழிலாளர் இயக்கங்கள், ஜனநாயக சக்திகள், மற்றும் இடது சாரிகள் அகியோரின் கவனத்தை ஈர்ப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது‘இலங்கையில் போரை நிறுத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டும் குழு’

இக்குழு இந்த நோக்கங்களுக்காக வரும் 8.04.2009 அன்று உலகெங்கிலும் உள்ள முக்கிய நகரங்களில் சாத்தியமான அளவிற்கு ஆர்பாட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது.அதே நேரத்தில் சென்னையிலும் மேலே குறிப்பிட்டவாறு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.இலங்கையில் போரை நிறுத்துவதற்கும், தமிழர்களை படுகொலை செய்வதை முடிவுக்கு கொண்டு வருவதற்கும், இந்தியா உள்ளிட்ட ‘உலக நாடுகள்’ இலங்கைக்கு உதவி செய்வதை எதிர்த்தும் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளாக பங்கு பெறுமாறு வேண்டுகிறோம்.

ஈழப் பிரச்சனையில் அக்கறை உள்ள இயக்கப் பிரதிநிதிகள் பலரும் பங்கு பெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நீங்களும் பங்குபெறுவீர்!

கண்டன உரைகள்:

பேரா.அ.மார்க்ஸ், ஒருங்கிணைப்பாளர் அணிதிரட்டும் குழு

கோ.சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி

பாவேந்தன், செயலர் தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்

முனைவர் ப. சிவக்குமார், முன்னாள் அரசுக் கல்லூரி முதல்வர்

துரைசிங்கவேல், புதிய போராளி இதழ்

அருள் எழிலன், பத்திரிகையாளர், சென்னை

மோகன்,பொதுச்செயலாளர், சென்னை பத்திரிகையாளர் சங்கம்.

உதயம் மனோகரன், மக்கள் வழக்குறைஞர் சங்கம், சென்னை.

மோகன் குமார், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், கோவை

இசையரசன், ‘தண்டோரா’ அமைப்பு

கென்னடி, மக்கள் போராட்ட மையம்,கொள்ளிடம்

கீதா, அமைப்பு சாரா தொழிலாளர் தேசீய இயக்கம்.

காதர் ஷெரீப், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்,காஞ்சிபுரம்

ஜெயக்குமார், வழக்குறைஞர், சென்னை

வெங்கட், புதிய சோசலிச மாற்று

ஜென்னி, அணி திரட்டும் குழு

இலங்கை அரசே, போரை நிறுத்து!
தமிழர்களை கொல்லாதே!
இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளே! பாசிச இலங்கை அரசுக்கு உதவாதீர்!!

-இலங்கையில் போரை நிறுத்தி ஜனநாயகத்தை நிலைநாட்ட அணிதிரட்டும் குழு