Wednesday, April 08, 2009

அஞ்சலி:

பேராசான் இ.வெ.செல்வரட்ணம் அவர்கள்.
(1930 - 2009)

இலங்கை அரசியல் ஆடுகளத்தில் கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் இவற்றின் தோற்றங்களை ஆய்வுறுவோருக்கும் ஆர்வலருக்கும் பேராசான் இ.வெ.செல்வரட்ணம் அவர்களின் பெயரும் இடமும் தெரியவரும்.

அடங்காத்தமிழர்,இரும்பு மனிதர் ,வீரமறவர், கோப்பாய்க்கோமான்....... இன்னோரன்ன தமிழ் அரசியல் அபத்தநிலைகளுக்கு முன்னர் மகத்தான நேர்மையான தமிழ் அரசியற் செல்நெறியான 'சிறுபான்மைத்தமிழர் மகா சபையின்' முதலீட்டாளர் பேராசான் இ.வெ.அவர்கள்.

இனவெறியிலும் கொடுமையான, ஏகாதிபத்திய ஒடுக்குமுறைகளுக்கு நிகர்த்த கச்சிதமாகவும் அரக்காதும் ஒழுங்கமைக்கப்பட்ட யாழ்ப்பாண வெள்ளாள நிறுவனத்தின் ஒடுக்குமுறையை மறுத்து திமிறிஎழுந்த நாகரீகத்தின் முதற்தலைமுறையான யோவேல் போல் அவர்களின் அடுத்தகாலடி இலங்கையன் எனவும் அறியப்பட்ட இ.வெ.செல்வரட்ணம் அவர்கள்.

சிறுபான்மைத் தமிழர் மகாசபை செயற்பாடுகளிலிருந்து அவரது 'வாழ்வும் வடுவும்' நூல்வரை அவரது போராட்டம் விரவிக்கிடக்கிறது.மேற்சாதியினருக்குக் கல்வி ஓர் கடமை, வாழ்க்கைநெறி எனில் தலித்துகளுக்கு அது ஒரு போராட்டம்! பெருங்கனவு!!

பிறப்பின் அடையாளமே சாதி அடையாளமாக உரைத்துப் பார்க்கும் சனாதன தர்மம் அவரது பிறப்பிலிருந்தே அவரைச் சீண்டுகிறது.சாதி வெறியனான வெள்ளாள விதானையிடமிருந்து 'மெலிஞ்சியன்' என இ.வெ. அவர்களின் பிறப்புச் சான்றிதழை அவரது தந்தையார் பெற்றுக்கொள்கிறார். மேற்சாதி கொடுத்த இழிவான பெயரைத் தானே மாற்றியதிலிருந்து யாழ்ப்பாண சமூகத்தின் மிகப்பெரும் கல்வியாளனாக அவர் மாற்றமுறுகிறார்.

117.பருத்தித்துறை வீதி, நல்லூர், யாழ்ப்பாணம் முகவரியில் அமைந்த அகில இலங்கை சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் 16 வது வருட மாநாட்டின் கெளரவ இணச்செயலாளர்களில் ஒருவரான கவிஞர் க.பசுபதி அவர்களுடன் இணைந்து 03.08.1959 இல் அவர் வடிவமைத்த அறிக்கை அவர் மேதமையையும் அறிவு விசாலத்தையும் சொல்கிறது. அவ் அறிக்கையின் ஒரு பகுதி இப்படிச் சொல்கிறது:

உதவித்தொழில் மந்திரியின் வருகையும் நெருக்கடியும் :

09.06.57 இல் 14 வது ஆண்டு மாநாட்டிற்கு அப்போதைய உதவித் தொழில் மந்திரி M.P.D. சொய்சாவை அழைத்திருந்தோம் அன்னாரின் வருகையைப் பெரும்பான்மைத் தமிழர்கள் பலரும் சிறப்பாக ஒரு அரசியற் கட்சியும் ஆர்ப்பாட்டம் செய்து கற்களையும் கறுப்புக் கொடிகளையும் வீசி, தங்கள் எதிர்ப்பைக் காட்டியதுடன் நில்லாமல் மாநாடு நடைபெற இருந்த மாநகரசபை மண்டபத்தையும் ஆக்கிரமித்து நம்மைக் கூட்டம் நடாத்த விடாதும் மந்திரி அவர்களை மாநாட்டில் கலந்துகொள்ளவிடாதும் கத்தினர். காலை 10 மணிக்கு நடக்கவிருந்த மாநாடு ஆக்கிரமிப்புக்காரர்களின் தலையீட்டால் பகல் 12 மணிக்கே நடத்த முடிந்தது.

இந்த எதிர்ப்பிற்கு மத்தியிலும் அன்று மாலை மந்திரியவர்களுக்கு திரு.இ.வே .செல்வரட்ணம் அவர்கள் வீட்டில் வைத்து வரவேற்பு நடத்தியது குறிப்பிடத்தக்கது. நமது சரித்திரத்திலே ஏன் தமிழர்களுடைய சரித்திரத்திரத்திலேயே இது கறைபடிந்த நிகழ்ச்சியாகும்.இந்த வேளையில் நாம் நெஞ்சில் நிறுத்தவேண்டியதொன்று.
நாம் மந்திரியை வரவழைத்தது சிறுபான்மைத் தமிழர்களின் வாழ்க்கைநிலை ,கல்வி ,பொருளாதாரநிலைகளைப்பற்றி எடுத்துச்சொல்லி நியாயமான இதுகாலவரை மறுக்கப்பட்ட உரிமைகளை அரசாங்கத்திடமிருந்து பெறுவதற்காகவே. இது நமது குற்றமா? பல வழிகளிலும் உரிமை இழந்திருந்த நாம் எமது உரிமைகளைப்பெற முனைவது குற்றமென்றால் இன்று தமிழர்கள் சிங்களவர்களிடம் உரிமைப்போராட்டம் நடத்துவதில் என்ன அர்த்தமிருக்குமோ?

இ.வெ.செல்வரட்ணம் அவர்களின் நுட்பமான தூரநோக்கான மகாசபை தீர்மானங்களில் ஒன்று பல்வேறு கட்சிகளில் அங்கத்துவராகவோ பொறுப்புகளிலோ இருக்கும் ஒருவர் மகாசபையின் நிர்வாகத்தில் பங்குபெறுவதைத் தவிர்த்தல் என்பதாகும். அந்த வகையில் தலித்துகளிற்கான தனித்துவமான அமைப்பை அவர் அவாவி நின்றார்.

28.02.1930 இல் உடுப்பிட்டி நாவலடியில் பிறந்து 21.03.2009 கனடாவில் இவர் காலமானார். இலங்கையில் கல்வி அதிகாரியாகவும், கனடாவில் கல்வி ஆலோசனைகளிலும் பணியாற்றினார். சென்ற்-பற்றிக்ஸ் கல்லூரியை அரசுடமையாக்குவதற்கு யாழ்-வேளாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தபோது அதற்கெதிராக ஏ.ஜே.கனகரட்ணா குரலெழுப்பியதை அவரது அஞசலி நிகழ்வில் இ.வெ. நினைவுகூர்ந்தார்.

தமிழ்ச்சமூகத்தின் அநேகமான, சிறப்பான தலைவர்கள் எல்லோருமே அகதியாய் பனியும் நோயும் மிடிமையும் என புகலிட வாழ்வு நோற்று இறந்துபடும் காலம் இவர் மரணத்தோடாவது முடிவுறவேண்டும்.

- சுகன்
08.04.2009

No comments: