மெளனம் என்பது சாவுக்குச் சமம்
('மாத்யமம்' மலையாள வார இதழில் 2005 மார்ச்25 ல் வெளியாகிய நேர்காணலின் தமிழ் வடிவம் )
நேர்கண்டவர் - T.T.ராமகிருஷ்ணன்
தற்காலத் தமிழ் இலக்கியத்தில் ஈழத்தமிழ் இலக்கியத்தின் இடம் என்ன?
ஆம்! அப்படியொரு காலம் இருந்தது. தமிழ் உரை நடையில் ஆறுமுகநாவலர் தொடக்கம் இலக்கிய விமர்சனத்தில் பேராசிரியர்கள் கைலாசபதி, கா.சிவத்தம்பி போன்றவர்களும் புனைகதையில் எஸ்.பொன்னுத்துரை, மு.தளையசிங்கம் போன்றவர்களும் தலித் இலக்கியத்தில் கே.டானியலும் கவிதையில் பிரேமிளும் குறிப்பிடத் தகுந்த ஆளுமைகளாக இருந்ததோடு மட்டுமல்லாமல், இவர்கள் தமது துறைகளில் புதிய போக்குகளை வடிவமைத்தார்கள். யுத்தம் ஆரம்பித்ததோடு எல்லாம் முடிந்து போயிற்று. ஈழத்தில் எழுத்தாளர்கள் திறந்த வெளிச் சிறைச்சாலைகளில் வாழ்கிறார்கள். ஒவ்வொரு எழுத்தும் ஆயுதம் தாங்கியவர்களால் கடுமையாகக் கண்காணிக்கப்படுகிறது. எழுதியதற்க்காக மட்டுமே கொல்லப்பட்டவர்கள் என்று ரஜனி திரணகம, செல்வி போன்று ஒரு பட்டியலே உள்ளது. ஒரே ஒரு இயக்கம்! ஒரே ஒரு கருத்து! ஒரே ஒரு தலைவன் என்று விடுதலைப் புலிகள் தமது ஏகபிரதிநிதித்துவத்தை நிறுவுவதற்காக எதைச் செய்யவும் எவரைக் கொல்லவும் ஆயத்தமாயிருக்கிறார்கள். இப்போது விடுதலைப் புலிகளுக்கு வணங்கிய எழுத்தாளர்கள் 'தலைவன்' புகழ் பாடும் கவிதைகளையும் பாஸிஸச் சாய்வுச் சயனைட் இலக்கியங்களையும் எழுத இதை ஒப்பாத மாற்றுக் கருத்துள்ள எழுத்தாளர்கள் பெரும்பாலும் துப்பாக்கிகளின் முன் மெளனமாக இருக்கிறார்கள். அல்லது அரசியல் நீக்கம் செய்யப்பட்ட பிரதிகளை எழுதுகிறார்கள். புலிகள் மட்டுமல்லாது அரச படைகள்,E.P.D.P போன்றவர்களும் எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்கள் மீது கொலைச் செயல்களையும் அச்சுறுத்தல்களையும் நிகழ்த்துகிறார்கள். பத்திரிகையாளர்களான நிமலராஜன், நடேசன் போன்றவர்களை அவர்களே கொன்றார்கள்.புலம் பெயர்ந்து வாழக் கூடிய ஈழத்து எழுத்தாளர்கள் ஓரளவு இந்த நச்சு வளையத்திலிருந்து தப்பியவர்கள். புகலிடச் சிறுபத்திரிகைகள் அனைத்து அதிகாரங்களையும் கேள்விக்குள்ளாக்கின.எண்ணம், சிந்தனை, அறுவை, தூண்டில், மனிதம், சுவடுகள், சுமைகள், அஆஇ, உயிர்நிழல், எக்ஸில், அம்மா, தேடல், பள்ளம், தாயகம், கண், சக்தி, மரபு, அசை, புன்னகை, பனிமலர், ஊதா, சமர், ஓசை,நமதுகுரல், மார்க்ஸிய முன்னோக்கு, நான்காவது பரிமாணம், தேசம், அக்னி உள்ளிட்ட புலம்பெயர் சிறுபத்திரிகை இயக்கம் மட்டுமே ஒரு அவலமான காலகட்டத்தில் எந்தவித அதிகார சக்திகளிடமும் அடிபணிந்து போகாமல் எதிர்த்து நின்றது, மனித விழுமியங்களை எழுதிக் காட்டியது என்று வரலாறு பதிவு செய்து கொள்ளும்.
எழுத்தில் முதல் முறையாக எப்படி சம்மந்தப்பட்டீர்கள் ?
நான் எனது பள்ளிப்பருவத்தில் இருந்தே இயக்க அரசியலில் ஈடுபட்டு வந்தவன். இலங்கையில் என்னால் வாழ முடியாத சூழலில் நான் அகதியாக அய்ரோப்பாவுக்கு வந்தேன். இங்கே இன்று வரை எனக்கு எந்த அரசியல் உரிமையும் கிடையாது. வாக்குரிமை, பிரஜாவுரிமை ஏதும் கிடையாது. நான்கு வருடங்கள் சர்வதேச ட்ரொஸ்கிய முகாமில் "புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தில்" இயங்கினேன். 1997 ல் அவர்களிடமிருந்து தொடர்பை நான் முறித்துக் கொண்ட போது என் முன்னே சூனியம் இருந்தது. இங்கே இருக்கக் கூடிய எல்லாவித இடதுசாரி இயக்கங்களும் வெறும் தொழிற் சங்கங்களாகக் குறுகியுள்ள நிலையில் அனார்கிஸ்டுடகள் தமது எல்லாவித கலகக் குரல்களையும் நிறுத்திக்கொண்டு பசுமைப் புரட்சி, எய்ட்ஸ் ஒழிப்பு எனறு தடம்புரண்ட போது என் முன்னே இருந்தது அரசியல் இருள்வெளி. தனியனாக எழுத ஆரம்பித்தேன். எனக்கு முறையான கல்வியறிவோ இலக்கியப் பரிச்சயமோ கிடையாது என்றாலும், எனக்குத் தெரிந்த நான் பார்த்த அனுபவித்த கதைகளைச் சொல்ல ஆரம்பித்தேன்.
நவீன தமிழ் இலக்கியத்தைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
தமிழில் வரும் இலக்கியங்களைப் பொத்தாம் பொதுவாக நவீன தமிழ் இலக்கியம் என்னும் ஒரே வரையறைக்குள் நிறுத்திவிட முடியாது. இங்கே ஆதிக்க சாதியினரும் எழுதுகிறார்கள், தலித்துக்களும் எழுதுகிறார்கள். ஆண்கள் எழுதுகிறார்கள், பெண்களும் எழுதுகிறார்கள். பெரிய பொலிஸ் அதிகாரியும் எழுதுகிறான், பொடா அரசியல் கைதியும் எழுதுகிறான். ஆகவே ஓவ்வொரு தனி எழுத்துக்குப் பின்னும் அவர்கள் சார்ந்த அரசியல், சாதி, அதிகாரங்கள் இன்னபிற விரவிக் கிடக்கின்றன. எனினும் தற்போது நீண்ட காலமாகத் தமிழ் இலக்கியத்துக்குள் ஆதிக்கம் செலுத்தி வந்த பார்ப்பனார்களின் ஆதிக்கம் ஒழிந்து விட்டது என்றே நான் கருதுகிறேன். என் தலைமுறையில் குறிப்பிட்டுப் பெயர் சொல்ல ஒரு பார்ப்பன எழுத்தாளன் தமிழில் கிடையாது. தலித் எழுத்துக்கள் ராஜ்கெளதமன், ம.மதிவண்ணன், அழகியபெரியவன் என்று பலரிடமிருந்து உத்வேகத்தோடு வெளிப்படுகின்றன. இன்னொரு புறத்தில் பிரேம்-ரமேஷ், சாருநிவேதிதா, மாலதி மைத்ரி, ஜே.பி. சாணக்யா போன்றவர்கள் தமிழ் இலக்கியத்தை இன்னொரு வெளிக்கு எடுத்துச் சென்றுள்ளார்கள். அந்த வெளி அனைத்து அதிகாரங்களையும் ஒழுங்குகளையும் விசாரணை செய்கிறது. வாழ்வையும் உடலையும் கொண்டாடுகிறது. விடியல் சிவா, அடையாளம் சாதிக், போன்றவர்கள் தொடர்ந்து ஒடுக்கப்பட்டவர்களின் குரல்களைப் பதிப்பித்து வெளியிடுகிறார்கள். பிரம்மராஜன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்கள் ஒரு வெறியோடு உலக இலக்கியங்களைத் தமிழில் அறிமுகப்படுத்துகிறார்கள். ஒரே ஒரு நாவல் சாதியச் சாய்வுடனோ இந்துத்துவச் சாய்வுடனோ வெளியானால் உடனே நமது தோழர்கள் இறங்கி அடிக்கிறார்கள். உடனுக்குடன் எதிர்வினை புரிகிறார்கள். இந்த மத்திய தரவர்க்க கூப்பாடு இலக்கியங்கள் உள்ளொளி, தரிசன இலக்கியப் பம்மாத்துக்கள் எல்லாம் - அது சுந்தரராமசாமி அசோகமித்திரன் போன்றவர்கள் எழுதினால் கூட- இனி நிராகரிக்கப்படும் என்றே நம்புகிறேன்.
நவீன தமிழ் எழுத்துக்கும் பின் நவீனத்துவ உலக இலக்கியத்துக்கம் என்ன சம்மந்தம் ?
தெரியாது ..!
கொரில்லா என்ற நாவல் பற்றிச் சொல்லலாமா ?
கொரில்லா என்னுடைய முதலாவது நாவல். அது தன்வரலாறும் புனைவும் கலந்த முறையில் எழுதப்பட்டது. நான் விடுதலை இயக்கத்தில் இயங்கிய நாட்களையும் எனது அகதி வாழ்வையும் மட்டும் அல்ல, என் போன்ற மற்றும் சிலருடைய அனுபவங்களையும் தொகுத்து அந்த நாவலை எழுதினேன். அது மிக நேரடியான ஒரு அரசியற் பிரதிதான். எனினும் நிலவும் ஈழ அரசியல் நிலைமைகளைக் கருதி பல இடங்களில் நாவலில் சுய தணிக்கைகள் செய்திருந்தேன், என்பதையும் நான் வெட்கத்தை விட்டு ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். வேறு என்ன சொல்ல? என் நாவல் பற்றி நாவலில் சொல்லாத எதை நான் நாவலுக்கு வெளியே சொல்லிவிட முடியும் ?...
உங்கள் எழுத்தின் அரசியல் என்ன ?
நான் இப்போது எந்தவொரு அரசியல் அமைப்பையும் சார்ந்தவனல்ல. அதற்காகக் கவிஞர் சேரன் சொல்வது போல "அமைப்புக்களுக்குள் கட்சிகளுக்குள் கட்டுப்படாமல் விட்டு விடுதலையாகிக் கலைஞனாக நிற்கிறேன்" என்று சொல்லக் கூடியவனும் அல்ல. நான் "விடுதலை" இயக்கத்திலும் கொம்யூனிஸ்ட் இயக்கத்திலும் நீண்ட காலங்களை முழுமையாகச் செலவு செய்திருக்கிறேன், மக்களுக்கு விடுதலையை அளிப்பார்கள் என நான் விசுவாசித்த அந்த அமைப்புகள் மக்களுக்கு அதிகாரங்களையும் ஒடுக்குமுறைகளையுமே பரிசளித்தன. அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான, அதிகாரங்களை மேலிருந்து திணிக்காமல் கீழிருந்து எளிய மனிதர்கள் அதிகாரங்களைச் செலுத்தும், மக்கள் விடுதலையை நேசிக்கும், ஓர் இயக்கத்தையோ ஒரு கட்சியையோ நான் கண்டடையும் போது கண்டிப்பாக, நான் ஒரு உறுதியான இயக்கக்காரனாகவோ கட்சிக்காரனாகவோ ஆகிவிடுவேன். அதுவரைக்கும் நான் தனியனாக அதிகாரங்களுக்கு எதிராக எனது பலவீனமான குரலைத் தன்னும் ஒலித்துக் கொண்டேயிருப்பேன். மெளனம் என்பது சாவுக்குச் சமம்!
உங்களுக்கும் விடுதலை இயக்கத்துக்கும் தொடர்பு வந்தது எப்படி ?
நான் என் நினைவு தெரிந்த பருவத்தில் இருந்தே தமிழ்த் தேசியப் பிரச்சாரங்களுக்கு இடையில் வாழ்ந்தேன். தமிழர் விடுதலைக் கூட்டணியும் பின்பு விடுதலை இயக்கங்களும் ஈழப் புலத்திலே மிகுந்த செல்வாக்கோடு திகழ்ந்தார்கள். 1977 மற்றும் 1981, 1983 ல் தமிழர்கள் மீது இலங்கை இனவாத அரசு பெரும் இனப்படுகொலைகளை நிகழ்த்திய காலத்தில் நான் வாழ்ந்தேன். ஆயுதந் தாங்கிய தமிழ் இயக்கங்களின் எழுச்சிக்கு பின்பாக அதுவரை கணிசமான மக்கள் ஆதரவோடு இயங்கி வந்த கம்யூனிஸ்ட் கட்சிகளும சாதியொழிப்பு இயக்கங்களும் துப்பாக்கிகளால் மெளனமாக்கப்பட்டன. தமிழ்க் குறுந்தேசியத்துக்கு எதிரான எந்தவொரு கருத்தும் போராளிகளால் அனுமதிக்கப்படவில்லை. இன, பண்பாட்டு, சாதிய, வர்க்க ஒடுக்குமுறைக்கான தீர்வும், விடுதலையும் தனித் தமிழீழத்திலேயே சாத்தியம் என்று நாங்கள் நம்ப வைக்கப்பட்டோம். வெலிகடச் சிறையில் 53 அரசியல் கைதிகள் அரசின் சதியால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வும் தெற்கு, மேற்குப் பிரதேசங்களிலிருந்து வடக்குக்கு தமிழர்கள் கப்பல்களில் அகதிகளாய் வந்து சேர்ந்த தருணங்களும் என்னை இயக்கின. இயக்கத்தில் இணைந்து கொண்டேன். அப்போது எனக்குப் பதினைந்து வயது -குழந்தைப் போராளி- எனினும் இயக்கத்தின் சுத்த ஆயுதக் கண்ணோட்டத்தினுள்ளும் அவர்களின் அப்பட்டமான வலது சாரித்தனத்தினுள்ளும் ஒரு பாஸிஸ இயக்கத்தை ஒத்த அவர்களின் இயக்க ஒழுங்கு முறைகளுக்குள்ளும் என்னால் மூன்று வருடங்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
இயக்கத்தை விட்டு வெளியே வந்த பின்பு என்ன செய்தீர்கள் ?
எதுவுமே செய்ய முடியாமல் பைத்தியம் பிடித்தவன் போல இருந்தேன்.அப்போது எனக்குப் பதினெட்டு வயது. என் முன்னே எந்த வழிகளும் இருக்கவில்லை. அடுத்த வருடம் இந்திய அமைதிப்படை அங்கு வந்து சேர்ந்தது. இந்திய இராணுவத்துக்கும் புலிகளுக்கும் யுத்தம் மூண்ட உடனேயே தமிழர்கள் இலங்கை இராணுவத்திடம் கூட அனுபவித்திராத அடக்குமுறைகளை இந்திய இராணுவம் தமிழர்கள் மீது ஏவியது. அதுவரையில் இலங்கை இராணுவம் செய்திருந்த கொடுமைகளை இந்திய இராணுவம் ஒரே வருடத்தில் செய்து முடித்தது. இந்திய இராணுவத்தால் இரண்டாயிரத்துக்கும் அதிகமான அப்பாவிகளும் பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டனர். இந்திய இராணுவம் கணக்கற்ற பாலியல் வல்லுறவுகளை சிறுமிகள் மீதும் பெண்களின் மீதும் நிகழ்த்தியது.பொதுமக்களின் குடியிருப்புகள் மீது விமானங்களில் இருந்து குண்டு பொழிந்தது. காரணங்களே இல்லாமல் மக்கள் சிறைபிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார்கள். அவமானப் படுத்தப்பட்டார்கள். உண்மையில் இலங்கை இராணுவத்தாலோ புலிகளாலோ செய்யப்பட முடியாத ஒன்றை என் விடயத்தில் இந்திய இராணுவத்தினர் நிகழ்த்தினார்கள். இந்திய இராணுவத்தாலேயே அப்போது நான் நாட்டை விட்டு வெளியேறினேன். அவர்களின் காட்டாட்சியின் கீழ் எங்கள் கிராமங்கள் இருந்த காலங்களில் தான் நான் என் நாட்டிலிருந்து துரத்தப்பட்டேன்.
பிரான்சுக்கு எப்படி வந்து சேர்ந்தீர்கள் ?
அப்போது பிரான்சுக்கு வருமளவுக்கு என்னிடம் பணம் இருக்கவில்லை. இலங்கையிலிருந்து முதலில் தாய்லாந்துக்குத் தான் போனேன். அய்க்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையத்தின் பராமரிப்பின் கீழ் அரசியல் அகதியாகச் சில வருடங்கள் பாங்கொக்கின் புறநகர் ஒன்றில் வாழ்ந்தேன். அப்போது ஆசியாவில் இருந்து அய்ரோப்பா அமெரிக்காவுக்கு புலம்பெயரும் அகதிகளின் -வெள்ளையர்களின் மொழியில் சொன்னால்- சட்ட விரோத குடியேற்றவாசிகளின் ஒரு சந்திப்பு சந்திப்பு மையமாக, இடைவழியாக பாங்கொக் இருந்தது. அங்கிருந்து 1993 ல் பிரான்சுக்கு வந்தேன்.
இப்போது L.T.T.E அமைப்பு குறித்தும் விடுதலைப் போராட்டம் குறித்தும் உங்கள் கருத்து என்ன ?
சிங்களப் பேரினவாத அரசின் தொடர்ச்சியான ஒடுக்கு முறைகள் தான் விடுதலைப் புலிகளின் இருப்புக்கு காரணம் என்பதில் எனக்கு எதுவித மாற்றுக் கருத்தும் கிடையாது. அரச ஒடுக்கு முறைகள் தோற்றுவித்த ஒரு விடுதலை இயக்கத்தின் இன்றைய நிலை எவ்வாறு இருக்கிறது? இன்று விடுதலைப்புலிகள் முற்றுமுழுதான வலதுசாரிகளாக உருவெடுத்து இருக்கிறார்கள். அமெரிக்காவினதும் அய்ரோப்பிய யூனியனதும் ஒவ்வொரு உத்தரவுக்கும் அவர்கள் அடிபணிகிறார்கள். தங்களுடைய பொருளாதாரக் கொள்கை திறந்த பொருளாதாரக் கொள்கை தான் என்று புலிகளின் தலைவர் அறிவித்திருக்கிறார். வெட்கம்! பிரபாகரனின் இடம் இப்போது ஒரு விடுதலை இயக்கத் தலைவனின் இடம் அல்ல. அவர் ஒரு யுத்தப் பிரபு ( war lord) மட்டுமே. ஏனெனில் ஒரு மக்கள் விடுதலை இயக்கத்துக்குரிய எந்தப் பண்புகளும் L.T.T.E இயக்கத்திடம் அறவே கிடையாது. என் சமூகத்தில் நிலவும் கொடூரமான சாதியத்தை ஒழிக்கப் புலிகள் எந்தத் திட்டத்தையும் முன் வைக்கவுமில்லை நடைமுறைப்படுத்தவுமில்லை. இது தவிர காலம் காலமாக ஈழத்து தமிழர்களோடு இணைந்து வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் மீது அவர்கள் நடத்திய வன்முறையை மன்னிக்கவே முடியாது. வடபகுதியில் வாழ்ந்த அத்தனை முஸ்லீம்களையும் புலிகள் ஒரே இரவில் வடபகுதியை விட்டு வெளியேற்றினார்கள். அதுவும் எப்படி? முற்று முழுதாக முசுலீம்களின் சொத்துக்களைக் கொள்ளையிட்ட பின்பே விரட்டினார்கள். பரம்பரை பரம்பரையாய் அந்த மண்ணில் வாழ்ந்த இஸ்லாமிய மக்கள் தம்மோடு 500 ரூபாய்கள் மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள்.கடந்த மூன்று வருடங்களாக இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் யுத்த நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டு இது சமாதான காலமாக இரு தரப்பினராலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சமாதான காலத்தில் மட்டும் மாற்று இயக்க உறுப்பினர்களில் 300 பேர் வரையில் புலிகள் கொன்றிருக்கிறார்கள்.
நடந்த பேச்சு வார்த்தைகளில் வடக்கு கிழக்குக்கான அதிகாரத்தை தமது இயக்கத்திற்க்கு பெற்றுக் கொள்வதே புலிகளின் நோக்கமாக இருந்தது. அதாவது இன்று நிலவும் சமூக ஒழுங்குகளுக்குள் தமக்கான அதிகாரம். இன்று இலங்கை மீதான அமெரிக்காவின் வல்லாண்மை சந்தேகத்திற்க்கு இடமின்றி நிரூபணமாகியுள்ளது. அமெரிக்க இராணுவத்துடன் இலங்கை இராணுவம் கூட்டுப்பயிற்சிகளில் - இந்தியா கூட - ஈடுபடுகிறது. தாய்லாந்தில் இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் பேச்சு நடந்த போது இரு தரப்புக்கும் அமெரிக்கப் படையினர் தான் பாதுகாப்பு வழங்கினார்கள், அல்லது கண்காணித்தார்கள். ஏகாதிபத்தியத்தினதும் புலிகள் பிரதிநிதித்துவப்படுத்தும் யாழ் மேட்டுக்குடியினரதும் வர்க்க நலன்கள் ஒன்றானவை. இந்த இடத்தில் புலிகளைச் சில மேற்கு நாடுகள் தடை செய்துள்ளனவே? என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அதே மேற்கு நாடுகள் தான் புலிகளை ஈழத் தமிழ்-முசுலீம்களின் ஏகப்பிரதிநிதிகளாக அங்கீகரித்துப் பேச்சுவார்த்தை மேசைகளுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள், பேச்சுவார்த்தைக்கு அனுசரணையாளர்களாக இருக்கிறார்கள்
என்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும். மீண்டும் சொல்கிறேன் மேற்கு நாடுகளினதும் இலங்கை ஆட்சியாளர்களினதும் விடுதலைப் புலிகளினதும் வர்க்க நலன்கள் பொதுவானவை.எந்த நேரத்திலும் புலிகள், அவர்களைத் தடைசெய்த அதே நாடுகளின் செல்லப் பிள்ளைகளாக எடுபிடிகளாக ஆகச் சாத்தியங்கள் உருவாகாது எனறு கூறி விடுவதற்கான அரசியல் தருக்கங்கள் ஏதாவது நம்மிடம் உள்ளனவா? அதற்கான தடயத்தைத் தன்னும் புலிகள் நமக்கு விட்டு வைக்கவில்லையே! தமது கடந்த கால அரசியல் நடவடிக்கைகளின் மூலம் தம்மையொரு ஏகாதிபத்தியச் சாய்வுள்ள சிறு முதலாளிய இயக்கமாகவே விடுதலைப் புலிகள் அடையாளம் காட்டியுள்ளார்கள். மாற்று இயக்கங்களின் மீதும், மாற்றுக் கருத்தாளர்கள், எழுத்தாளர்கள், தொழிற்சங்கவாதிகள் மீதும் முஸ்லீம், சிங்களக் குடியானவர்கள் மீதும் நிகழ்த்திய ஒடுக்குமுறைகள், கொலைகள் மூலம் தம்மைப் பாஸிஸ்டுகளாக நிறுவியிருக்கிறார்கள்.ஆகவே நாம் விடுதலைப் புலிகள் மீது அபிமானம் கொள்ள எந்தவொரு காரணமும் கிடையாது.
மாறாக இலங்கை அரசோ தமிழர்கள் மீதான தனது ஒடுக்குமுறையை மேலும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சிங்கள மக்கள் மத்தியில் J.V.P, ஹெல உருமய போன்ற இனவாதக் கட்சிகளின் செல்வாக்கு அதிகரித்துக் கொண்டு போகிறது. தனியார் மயமாக்குதல் அதி வேகத்தோடு நடக்கிறது. உண்மையில் இலங்கையில் தமிழ் மக்களும் சரி சிங்கள மக்களும் சரி முஸ்லீம்களும் சரி ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு கொண்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் மீது கரிசனம் கொண்ட ஒரு அரசியல் தலைமை இல்லாமல் தான் இருக்கிறார்கள். தமிழர் மத்தியில் அவ்வாறான ஒரு புரட்சிகர அரசியற் தலைமை தோன்ற தமிழ்த் தேசிய வாதமும் புலிகளும் பெரும் தடைகள்.
உங்கள் புதிய நாவல் பற்றிச் சொல்லுங்கள் ?
'ம்' என்னுடைய இரண்டாவது நாவல். 1983 ஜீலை 25 -27 ம் திகதிகளில் இலங்கை அரசாங்கம் வெலிகட சிறையில் நடத்திய கொலை வெறியாட்டத்தை ஆவணமாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந் நாவலை எழுதினேன். இன்னொரு புறத்தில் தமிழ்ப் போராளிகள் பற்றி வீரம், தியாகம், இலட்சியம் போன்ற ஹீரோயிஸப் படிமங்கள் எழுந்துள்ளதையும் விசாரணை செய்ய முயன்றேன்.
நவீன இலக்கியச் சூழலில் உங்கள் மாதிரியான ஆட்க்களுக்கு இடம் இல்லை என்று நினைக்கிறீர்களா?
அது தான் சொன்னேனே! தமிழ் எழுத்தாளர்களில் மட்டுமல்லாமல் வாசகப் பரப்புகளிலும் தமிழ் விமர்சனத் துறையிலும் இதழியலிலும் விளிம்பு நிலைக் குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இது எங்களுக்கான காலம் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் தலித்துக்களுக்கும் பெண்களுக்குமான காலம்.
நாவல்கள் தவிர்த்து வேறு என்னென்ன எழுதியிருக்கிறீர்கள் ?
அரசியல் சிறு பிரசுரங்களையும் துண்டறிக்கைகளையும் சுவரொட்டிகளையும் அய்ரோப்பாவிலும் தொடர்ந்து எழுதி வருகிறேன். தவிர மூன்று நாடகங்களும் சிறுகதைகளும் எழுதியுள்ளேன். சிறுகதைகள் 'தேசத்துரோகி' என்ற பெயரில் தொகுப்பாக வெளியாகியுள்ளன.
ஓர் எழுத்தாளர் ஆகாமல் இருந்தால் என்னவாக இருந்திருப்பீர்கள்?
முன்பெல்லாம் சினிமா நடிகைகளிடம் தான் இப்படியான கேள்விகளைக் கேட்பீர்கள், இப்போது எழுத்தாளர்களிடமும் கேட்க ஆரம்பித்து விட்டீர்களா? ஒரு நாடற்றவன், அகதி, மாற்றுக் கருத்தாளனாக அல்லது துரோகியாகச் சொல்லப்படுபவனின் வாழ்க்கையை அவன் மட்டுமே தீர்மானிப்பதில்லை.
தமிழில் பெண்ணிய இலக்கியம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?
"இப்போது பெண்களின் படைப்பு மொழியில் ஆபாசம் பொதிந்துள்ளது... யோனி, முலை, மயிர் என்றெல்லாம் எழுதிப் பண்பாட்டைக் கலாச்சாரத்தைக் கெடுக்கிறார்கள்" என்று சொல்பவர்களை நிபந்தனையில்லாமல் செருப்பால் அடிக்க வேண்டும் என்பதை முன் நிபந்தனையாக வைத்துக் கொண்டு ஒன்று சொல்லலாம் என்று நினைக்கிறேன்.
ஆண்களின் உடல் மேலாண்மை அதிகார மேலாண்மை எல்லாவற்றிற்க்கும் குடும்பம், காதல் போன்ற கருத்தாக்கங்களே இடமளிக்கின்றன. ஆக குடும்பத்தையும் காதலையும் நாம் கொண்டாடும் வரை அடுத்த கட்டத்துக்குப் பெண்ணியம் நகர முடியாது என்றே நான் நம்புகிறேன். கணவனையோ காதலனையோ திட்டி ஒரு கவிதை எழுதுவதை விட விவாகரத்துச் செய்வதும் காதலை முறிப்பதும் இலகுவானது, வசதியானது, உண்மையானது என்றே நான் நினைக்கிறேன்.
குடும்பம், கலாச்சாரம் ஒழுக்கம் குறித்தெல்லாம் உங்கள் கருத்தென்ன ?
இந்த விசயங்களில் நான் முற்று முழுதான பெரியாரிஸ்ட். "திருமணம் செய்வதைக் கிரிமினல் குற்றமாக்க வேண்டும்" என்றார் தந்தை பெரியார். இந்த முதலாளிய சமூக ஒழுங்குகளின் அடிப்படைக் கண்ணி ஆலைகள் அல்ல. குடும்பங்களே அடிப்படைக் கண்ணிகள். குடும்பப் பொறுப்பும் பற்றுமே தொழிலாளர்களை ஓய்வெடுக்க விடுவதில்லை. உலகத் தொழிலாளர்கள் ஓய்வெடுத்தால் முதலாளியப் பொறியமைவு சரிய ஆரம்பிக்கும். இம் முதலாளியக் கலாச்சாரம் ஒழுங்குகள் எல்லாம் தகர்ந்து விழும். பேராசான் கார்ல் மார்க்ஸ் சொன்னது போல குடும்பம் என்பது ஒரு குட்டி அரசுதானே. அங்கு கணவன் அதிகார மையம் தானே! ஒழிந்து போகட்டும் குடும்பங்கள். அது ஒழியும் போது இந்த நிலவும் நாற்றெமெடுத்த கலாச்சாரங்களும் ஒழுக்கங்களும் கூடவே ஒழிந்து போகும்.
உங்கள் காதல், குடும்பம் பற்றிச் சொல்லலாமா?
காதல் என்பது பொறாமையின் இன்னொரு வடிவம் என்பார்கள். காதல் என்பது வெறும் "சென்டிமென்ட் பிளாக் மெயில்" என்றே நான் கருதுகிறேன். இரு உடல்கள் சேருவதற்க்கு நமக்கு ஒரு கலாச்சார காரணம் தேவைப்படுகிறது. அதற்கு நாம் காதல் என்று பெயரிட்டுள்ளோம். பிறகு இந்த அன்பு என்ற ஏமாற்றும் இங்கே உள்ளது. எவரொருவர் எமது ஆளுமையை ஏற்றுக் கொள்கிறாரோ அவரை நாங்கள் அன்பு செலுத்துகிறோம். எமது ஆளுமையை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்கள் எமது அன்பு வளையத்துக்குள் சிக்குவதில்லை. இந்தக் காதல் அன்பு போன்ற கற்பிதங்களை விட்டுத் தொலைத்து ஜி.நாகராஐன் சொன்னது போல ஒருவரை ஒருவர் மதிக்கக் கற்றுக் கொள்வோம். ஒருவரையொருவர் காதலின் பெயராலும் குடும்பத்தின் பெயராலும் அதிகாரம் செய்வதை விடுத்து ஒருவரை ஒருவர் மரியாதை செய்வோம். செக்ஸ் உறவுக்கு காதல், அன்பு, குடும்பம்,மறு உற்பத்தி, போன்ற காரணங்களைத் தவிர வேறு பல இன்பமூட்டக் கூடிய காரணங்கள் இருக்கின்றன. அந்தக் காரணங்களை நோக்கி இயங்குவோம், கண்டடைவோம்!
10 comments:
"இப்போது பெண்களின் படைப்பு மொழியில் ஆபாசம் பொதிந்துள்ளது... யோனி, முலை, மயிர் என்றெல்லாம் எழுதிப் பண்பாட்டைக் கலாச்சாரத்தைக் கெடுக்கிறார்கள்" என்று சொல்பவர்களை நிபந்தனையில்லாமல் செருப்பால் அடிக்க வேண்டும் என்பதை முன் நிபந்தனையாக வைத்துக் கொண்டு ஒன்று சொல்லலாம் என்று நினைக்கிறேன்.
;-)
இலக்கான பதில்
சில விமர்சனங்கள் இந்த நேர்காணல் குறித்து இருந்தாலும், மலையாளம் போன்ற மற்ற மொழிகளிலும் ஈழத்துப்படைப்பாளிகள் பற்றிய குறிப்புக்கள் வருவது உவப்பான விடயமே.
....
நவீன இலக்கியம், பெண்களின் படைப்புக்கள் போன்றவை குறித்து இங்கே பதியப்பட்ட உங்கள் கருத்துக்களோடு முழுமையாக உடன்படமுடிகிறது. நன்றி.
ஷோபா சக்தியின் கருத்துக்கள் யாவும் மிகவுறுதியான மனிதவிடுதலை குறித்த, ஒரு ஒடுக்கப்பட்ட மனிதரின் குரலாக வெளிப்படுகிறது.அவரது நேரிய பார்வைகள் நம்மை இன்னும் உறுதிப்படுத்தும்.மௌனம் என்பது சாவுக்குச் சமம் என்பது சரியானது!
1>
//உடன்படமுடியவில்லை.குடும்பம் என்கிற ஒன்றுக்குள் இருந்து எந்த பொறுப்புமற்று வெளியேறக் கூடிய நிலையிலா பெண்கள் இருக்கிறார்கள்?//
//எல்லாவற்றிற்கும் தீர்வு இவ்வளவு இலகுவாய் இருப்பதில்லை.//
ஆண் நிலைப்பார்வை இவற்றை கருத்திலெடுப்பதில்லை.
2>
இந்தியாவில், மலையாளத்தில் போய் இந்திய ராணுவத்தின் அட்டூழியங்களை சொன்னது நல்ல கிளுகிளுப்பை தருகிறது. நன்றி.
தங்கள் பதில்கள் மிகவும் தெளிவாகவும், உண்மையாகவும் உள்ளன. நன்றி. குடும்பம் என்ற அமைப்பின் மேல் எனக்கான கருத்தும் அதுவே. இருந்தும் எம்மைச் சுற்றி இருக்கும் மக்கள் சமுதாகத்திற்காய் நாமும் பொய்யாகச் சிலவேளைகளில்(முழுவேளைகளிலும்) வாழவேண்டியுள்ளது. இந்த நிலை ஆண்களை விடப் பெண்களின் மேல் அதிகமாகத் திணிக்கப்படுகின்றது.
Thanks for this post.
நவீன தமிழ் எழுத்துக்கும் பின் நவீனத்துவ உலக இலக்கியத்துக்கம் என்ன சம்மந்தம் ?
தெரியாது ..!
இப்பதில் ஒன்றுக்காகத்தான் , உங்கள் மேல் ஒரு மதிப்பே ஏற்பட்டது."சோ" வுக்குப் பின் ,"எனக்குப் பதில் தெரியவில்லை" . என்ற ஒரே தழிழ்ப் பிரபலம் ,நீங்கள் ஒருவர் தான் என்று நினைக்கிறேன்.மேதாவித் தனத்தைக் காட்டுகிறேனென எங்களைக் கொல்லாததற்கு நன்றி!!.ஈழத்தமிழர் எழுத்து,,; தழிழ் கடந்து வேற்றுமாநிலம் சென்றது .மகிழ்வே!
யோகன்
பாரிஸ்
மாற்றுக் கருத்துக்கள் உடைய நபர்களிடம் (புலிகளை விமர்சித்தால்) "அப்ப நீங்க புது அமைப்பை உருவாக்கி போராடுங்களன்" என்பார்கள்; தோன்றிற எல்லாத்தையும் களையெடுக்கிற சூழலில... அது சாத்தியமா என்றெல்லாம் பார்க்காமல் பரிந்துரைப்புகள். ஒன்றுமில்லாதததற்கு (பெரும் பூதமாய் வளர்ந்து நிக்கிற ஒன்றுடன் மல்லுக்கட்ட முடியாவிட்டாலும்) "பேச"வாவது செய்வோம் (அதூடாக எதிர்ப்போம்) என்பதுபோலத்தான்.. பெண்கள் (கணவன்களுக்கு/காதலன்களுக்கு எதிராக) கவிதை எழுதுவதும்.
ஏதோ இதாவது முடிகிறதே... என்ற திருப்தி..
// இந்தியாவில், மலையாளத்தில் போய் இந்திய ராணுவத்தின் அட்டூழியங்களை சொன்னது நல்ல கிளுகிளுப்பை தருகிறது. நன்றி. //
மயூரன்:மலையாளத்தில் மட்டுமல்ல தெலுங்கில் சொன்னால் கூட இதில் என்ன கிளுகிளுப்பென்று விளங்கவில்லை. மலையாளம் என்பதால்?! அல்லது -குறிப்பாய்- 'இந்த விடயத்தை' எங்கேயும் சொல்லக் கூடாதென்று சட்டம் ஏதாவது இருக்கிறதா?
கிளுகிளுப்பு என்பது, இப்ப பாருங்க, எங்கட பிரச்சனையை வெளில சொல்லக்குள்ள வாற சந்தோசம் தான். அமெரிக்கா
அரசாங்கத்தை கண்டிச்சு அறிக்கை விட்டா வாற கிளுகிளுப்பு, ஜெயலலிதா ஏதோ, "ஆதரவா" பேசுறாவாம் எண்ட கிளுகிளுப்பு.
இப்படியானவைதான்.
இந்தியாவில போய், இந்திய ராணுவத்தை பற்றி சொல்லேக்குள்ள கிளுகிளுப்பாத்தானே இருக்கும். என்னடாப்பா இது?
மயூரன்,
"மனுசர் பட்ட வேதனைகளைச் சொல்லேக்க, அதிலயென்ன கிளுகிளுப்பு வேண்டிக்கிடக்கு?" எண்டு பொடிச்சி சொல்லிறாவோ தெரியேல.
Post a Comment