Saturday, July 01, 2006

ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் - நூல் விமர்சனம்

தமிழரசன் பெர்லின்

மிழ்த்தேசிய எழுச்சியானது மிருகத்தனமான புலிப்பாசிச சர்வாதிகாரமாக அது சார்ந்த அரசியல் இராணுவ ஒழுங்காக மாறி அழிந்துபடும் திசையைத் தேடத் தொடங்கி விட்டது. முழுத்தமிழ் பரப்பும் புலி ஊடகபயங்கரவாதிகளாலும் அது சார்ந்த பிரச்சார எழுத்துக்களாலும் ஆட்சி செய்யப்படும் நிலையில் மனித விசுவாசத்தை அரசியல்ப்பண்பாட்டை விமர்சன உணர்வை வெளியிடக்கூடிய சக்திகள் மிகமிக அரிதாகவே உள்ளன. சந்தர்ப்பவாதம், கோழைத்தனம், தேசிய வாதம் சார்ந்த பிழைப்புவாத அரசியல் போக்கே எங்கும் நிரம்பி வழிகின்றது. புலிப்பாசிசத்தை தேசியவிடுதலையென என்று அழகுபடுத்த முயலும் தனிநபர்களும் குழுக்களும் ஆய்வாளர்களும் எங்கும் முளை விட்டு துளிர்காட்டுகின்றனர். நடுநிலைமை, பக்கம்சாராத நீதி அறம் என்ற குறிப்புக்களுடனும் புலியதிகாரத்திற்கு தொண்டாற்றும் சக்திகள் முன்னெப்பொழுதையும் விட திறமையாக தம்மை வெளியிடுகின்றன. இக்காலத்தேதான் ஈழப்போராட்டத்தில் 'கொட்டை போட்டு பழம் தின்றவராக' 'ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்' என்ற நூலினூடாக புஸ்பராசா தோன்றியுள்ளார். புஸ்பராசா தன்னை ஈழப்போராட்டத்தின் ஆதி முதல்வனாக இளைஞர்தம் ஒப்பாரும் மிக்காரும் மற்ற வழி காட்சியாக தன்னைத்தானே சுயநியமனம் செய்து கொள்வதுடன் அவரது 600 பக்கநூல் தொடங்குகிறது. தமிழரசு கூட்டணி தமிழ் இளைஞர் பேரவை, EPRLF புலிகள் போன்ற தமிழ் தேசியவாதப்போக்குகளின் திரனையாக ஒன்றுக்கொன்று முரண்பட பல்திரட்டல் வாதத்தின் குவியலாக அவர் அமைகின்றனர். தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனையை குறைந்த பட்சம் சராசரி ஜனநாயக அடிப்படையில் கூட அவரால் அணுகவும் பதிவு செய்யவும் முடியவில்லை.

செல்வநாயகம், அமிர்தலிங்கம் பத்மநாபா, பிரபாகரன் போன்ற சில மனிதர்களே ஈழப்போராட்டத்தின் பிரதான நபர்களாக புஸ்பராசாவிற்கு தென்படுகிறனர். மக்களின் பாத்திரம், அர்ப்பணிப்பு, துயரங்கள் சார்ந்து அவர் எதையும் தொடவில்லை. தமிழ் மக்களின் சமூகநிலை, அரசியல் பெருளாதார அடிப்படையில் இருந்து விபரிப்பை தொடங்கவிலை. வழக்கமீறா யாழ்பாண மத்தியதர வர்க்க அரசியல் விளக்கமான தரப்படுத்தல் இருந்தே புஸ்பராசாவும் அரசியலை ஆரம்பிக்கிறார். தமிழரசுக்கட்சி மற்றும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் முதலாளித்துவ அரசியல் எழுதல் முறைக்கு அவர் சிறந்த உதாரணமாகவிடுகிறார். யாழ்ப்பாண நடுத்தரவர்க்க உத்தியோகவம்சத்தினருக்கு தரப்படுத்தல் தடையாக இருந்த அதேசமயம், வன்னி, கிழக்குமாகாணம், மலையகத்திலிருந்து முதல் முதலில் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு தரப்படுத்தலின் பின்பே ஏனைய தமிழ் மக்கட்கு கிடைத்தது என்பதை தமிழீழ ஒற்றை சிந்தனையாளர்கள் சிந்திப்பது கூடக் கிடையாது. 1970 தொடக்கத்தில் தமிழ் மாணவர்பேரவை எழுந்த போது உலகம் முழுவதும் மாணவர் இயக்கங்கள் எழுந்தன. இவை சோசலிசம், பெண்விடுதலை, அணுவாயுத எதிர்ப்பு, யுத்த எதிர்ப்பு என்று தம்மை அறிவித்துக் கொண்டன. ஹிப்பீக்கள், ஹரேகிருஷ்ணா, அமைப்பியல்வாதம், பீற்றில்ஸ் என்று முதலாளிய கலாச்சாரத்துடன் சச்சரவுகளை வெளிப்படுத்தின. ஆனால் இலங்கையில் தோன்றிய தமிழ் மாணவர் பேரவைக்கு அத்தகைய அரசியல் பண்புகள் எதுவும் இருக்கவில்லை. அது வெறுமனே சிங்கள, முஸ்லீம் வெறுப்புக்களை சூடிக் கொண்டதாகவே இருந்தது. ஆனால் இக்காலத்துக்குரிய தென்னிலங்கை JVP அமைப்பானது குறிப்பிடத்தக்க சமூக அக்கறைகளை, சர்வதேச அரசியலை, ஒடுக்கப்பட்ட சமூகப்பிரிவுகளில் சில தேவைகளை வெளியிட்டது. ஆயுத எழுச்சி மூலம் இலங்கை அரசை நிர்மூலமாக்கி அரசு இயந்திரத்தைக் கைப்பற்ற முடியும் என்ற துணிவை வெளியிட்டது.

ஆனால் தமிழ் மாணவர் பேரவை யாழ் குடா நாட்டிற்கு வெளியேயுள்ள தமிழ் மாணவர்களைக் கூட உள்ளடக்காத தரப்படுத்தலால் பாதிப்புற்ற சுத்தமான யாழ்ப்பாணிகளின் அமைப்பாக இருந்தது. இவர்கள் சிங்கள, முஸ்லீம் மாணவர்களுடன் கூட்டுறவு, இணைந்து போராடுதல் என்ற நிலையையே பஞ்சமாபாதகம் என்று கருதக் கூடியளவு அதீத தமிழ் வெறியால் பீடிக்கப்பட்டு இருந்தனர். இந்த அமைப்பின் தலைவரான சத்தியசீலன் தீவிரமான இடதுசாரி எதிர்பாளராகவும் ஒரு சில நாட்டு எறிகுண்டுகளுடனும் கைத்துப்பாக்கிகளுடனும் தமிழீழக்கனவு காண்பவராகவும் இருந்தார். இத்தகைய மூலங்களை கொண்ட தமிழ் மாணவர் பேரவையின் நிழலாகவே பிற்காலத்திய தமிழ் இளைஞர் பேரவை தோற்றம் பெற்றது. புஸ்பராசா போன்ற உதிரியான சக்திகள் பிறந்து தேசியவாத வழியில் வளர்ந்தனர். இவர்கள் செல்வநாயகம், அமிர்தலிங்கம் போதித்த அற்பமான தியாகி, துரோகி அரசியலுக்கு அப்பால் எதையும் கற்றுத் தேறவில்லை. இடதுசாரிகளை எதிர்க்கும் வலதுசாரி தமிழ் அரசியல் கலாச்சாரத்தை தொடர்ந்து பாதுகாத்தனர். அகிம்சை பேசிய செல்வநாயகத்திற்கும், அமிர்தலிங்கத்திற்கும் கையைக் கீறி இரத்தத்திலகமிடும் அரசியலற்ற இளைஞர் கும்பல்கள் தீவிரமாய் வளர்ந்தன. இவர்களே பிற்காலத்தில் தம் சொந்த மிதவாத தலைமைகளை கொலை செய்வதன் மூலம் தம் பரப்பிலிருந்து அகற்றினர். அமிர்தலிங்கத்தை 'என் தலைவன்! என் தலைவன்!!' என்று பாடிப்பாடி பரவசமெய்திய காசி ஆனந்தன் 1987 இல் வல்வெட்டித்துறையில் TELO அழிப்போடு நடந்த புலிகளின் கூட்டமொன்றில் பேசியபோது அமிர்தலிங்கமே! நீ ரோசமுள்ள மனிதன் என்றால்… அமிர்தலிங்கமே! நீ இனப்பற்றுள்ள மனிதன் என்றால்… அமிர்தலிங்கமே! நீ உண்மையான தமிழன் என்றால்... உனது கட்சியைக் கலைத்து விட்டு வந்து எனது தலைவன் பிரபாகரனை உனது தலைவனாக எற்றுக் கொள் என்று பேசுமளவு நிலை மாறியது. காசிஆனந்தன் திருமணத்திற்கு மட்டுமல்ல வீடு வாங்க, அச்சகம் போட என்று அமிர்தலிங்கம் நிதி தரட்டி தந்தவர். அப்போதெல்லாம் அமிர்தலிங்கம் காசிஆனந்தனால் 'தமிழீழத்தின் ஆபிரகாம்லிங்கன்' என்று உளமுருகிக் கவிதைகளால் பாமாலை சூடப்பட்டவர். காசி ஆனந்தன் முதல் புஸ்பராசா வரை திரு.அமிர்தலிங்கம் உட்பட கூட்டணித் தலைவர்களிடம் செஞ்சோற்றுக் கடன் பட்டவர்களாகவே இருந்தனர். ஆனால் வலதுசாரிகட்கு நட்பு, தனிப்பட்ட உறவுகள் சார்ந்த கடந்த காலம் எத்தகைய மனநெகிழ்வையும் மனித மதிப்பையும் விட்டுச் செல்வதில்லை. அவர்கள் நிகழ்கால கடுமைக்கும் கொடூரத்திற்கும் விரைவாக ஆட்பட்டுவிடுவார்கள். புஸ்பராசா தமிழ் இயக்கங்கள் உச்ச வளர்ச்சி பெறுமுன்பே நாட்டை விட்டு வெளியேறி அந்நிய நாட்டில் வாழ்ந்தமையால் அவரது கருத்தோட்டங்கள், அமிர்தலிங்கம் மேலான பக்தி என்பன ஓரளவுக்கு சுத்தமான வடிவில் பாதுகாக்கப்பட்டன.

அமெரிக்க ஆதிக்கத்திற்கு எதிராக இந்தியாவை ஆதரிப்பதாக எமது பிராந்தியத்தின் பாதுகாப்பு, பொருளாதாரம் இவை அவசியமென இடதுசாரிகளே மூர்ச்சித்து விழுமளவு புஸ்பராசா ஏகாதிபத்திய எதிர்ப்புப் பேசுகிறார். இங்கு புஸ்பராசா பேசவது அவர் கொஞ்சக் காலம் EPRLF இல் வாசம் செய்த காலத்தில் பெற்றுக்கொண்ட சிந்தனைத் திரவியமாகும். இந்திய ஸ்டாலினிசவாதக்கட்சிகளின் சீர்திருத்தவாத நியாயத்தைத்தான் இந்திய ஆயதப்பயிற்சிக்குப் போன காலத்தில் EPRLF தமது தத்துவமாய் சொல்லித் திரிந்தார்கள். அது புஸ்பராசாவிற்கு கூட எட்டியுள்ளது என்பது அதிசயம்தான். சகல தமிழ் இயக்கங்களும் இந்தியாவின் இராணுவ அரசியல் விருப்பங்கட்கு கருவியாய் போன போது இப்படித்தான் சொல்லிச் சொல்லி நாசமாய்ப் போனார்கள். இறுதியாக இந்திய உளவுத்துறையின் வேலைக்காரர்களாகிப் போயினர். ஆனால் இந்தியாவை நம்பியதற்கு அதன் பின்னே போனதற்கு படிப்பினை கிடைத்த பின்னரும் புஸ்பராசா பழைய கோசத்தை, பட்டுக் கெட்டுக் கைவிட்ட குரல்களை புனருத்தானம் செய்கிறார். இன்றைய உலகமயமாதல் காலத்தில் இந்தியாவின் தேசிய பொருளாதாரத்திற்குள்ளேயே அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் புகுந்து விட்டன. அவர்களது மூலதனமும் நிதி நிறுவனங்களும் இந்தியாவைக் கண்காணித்து கட்டுப்படுத்துகின்றன. சோவியத்யூனியன் காலத்தில் இந்திராகாந்தி ஆண்ட போது சில வருட காலம் உண்மை போல தோன்றிய இந்தியாவின் முற்போக்கு முகம் பற்றிய அரசியல் கற்பனைகள் கலைந்து வெகுநாளாகிவிட்டதை விளங்குமளவிற்கு வலிமையான அரசியல் மனிதராக புஸ்பராசா இல்லை.

இன்று இந்தியாவை மீறி ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம் போன்ற நாடுகளிலும் இப்போது சுனாமியைக் காட்டி அமெரிக்கா இலங்கையிலும் நுழைகின்றது. தடுக்க யாரும் இல்லை. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நுழைந்த போது இந்தியா அதை ஆதரிக்க வேண்டிய பரிதாபக் கட்டத்தில் இருந்தது. சீனாவின் பிரமாண்டமான வளர்ச்சி, ஜப்பான் போன்ற நாடுகள் பொருளாதார பலம் இவைகளினூடு இந்தியாவும் இந் நாடுகளைச் சார்ந்து தன்னை ஆசியரீதியில் நாட்டிக் கொள்ள இன்று முயன்ற போதும் இந்தியாவின் பிராந்திய பாதுகாப்பு என்ற கருத்து இன்று உயிருடன் இல்லை. கடந்த காலத்தில் வாழ்க்கை நடத்தும் புஸ்பராசாவிற்கு இந்தியாவின் பிராந்திய பாதுகாப்பிற்கு எதிராக இலங்கையரசு மட்டுமல்ல சர்வதேச சமூகம் பற்றிய உளறல்களில் ஈடுபட்டிருக்கும் புலிகள் முதல் கூட்டணிவரை செயற்படுவது புலப்படவில்லை. இந்திய துணைக்கண்டத்தின் தனித்துவம் மட்டுமல்ல இலங்கையின் தமிழ் சிங்கள தேசியங்கள் கூட உலகளாவிய ஏகாதிபத்திய பொருளாதார ஓட்டத்தாலும் அது சார்ந்த நுகர்வுக்கலச்சாரத்தாலும் கரையத் தொடங்கிவிட்டன. இங்கு இந்திய துணைக்கண்டம் இனியொருபோதும் தனித்தீவாக இயங்க முடியாது.

தமிழர் இளைஞர் பேரவைக்கு தான் தலைமை தந்ததாய் புஸ்பராசா எழுவது இவர் தீவிரவாத இளைஞர்கள் கூட்டணிக்கு எதிராக முறுகியடித்த காலத்தில் திரு.அமிர்தலிங்கத்திற்கு காட்டிய விசுவாசத்திற்காக சிறிது காலம் தரப்பட்ட பரிசாகும். மாவை சேனாதிராசா, வண்ணை ஆனந்தன், காசிஆனந்தன் போன்ற இளைஞர்கள் வரிசையில் சேர்க்கப்பட்ட முடியாத முத்தல்களையே கூட்டணித்தலைமை த.இ.பே தலைவர்களாக நீண்ட நாட்களாக காட்டி வந்தது. இவர்களே பேச்சுத்திறமை கொண்டவர்களாகவும் மக்களால் அறியப்பட்டவர்ளாகவும் இருந்தனர். இடதுசாரித் திசையில் பயணிக்க முயன்ற சந்ததியார் போன்றவர்களே முதன் முதலாக இந்தக் கூட்டணி வாரிசுகளை அசைத்தனர். கூட்டணி தலைமையோடும் திரு.அமிர்தலிங்கத்துடனும் புஸ்பராசா விட்ட சிறு சிறு குழப்படிகள் தனது முக்கியத்துவத்தை அதிகரிக்கவும் கவனத்தையும் ஈர்க்கவும் செய்தவை என்பதே அவரது காலத்து நண்பர்களது அபிப்பிராயமாகும். புஸ்பராசா கதை காவித்திரிபவராகவும், நிலையற்றவராகவும் கருதப்பட்டார். ஆனால் இப்பேது புஸ்பராசாவின் எழுத்து தன்னைக் கதாநாயகனாக்க பலரை வில்லன்களாக உருவாக்கிவிட்டது.

புலோலி வங்கிக் கொள்ளையில் தனக்கு தொடர்பு இல்லை, தான் அப்போது சிறையில் இருந்தேன் என்கிறார் புஸ்பராசா. இந்த வங்கிக் கொள்ளையை இவர் சார்ந்த ஈழ விடுதலை இயக்கமே நடத்தியது. இவரது குடும்பத்தவர்கள் தொடர்பு என்று கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான சித்திரவதை, அவமானப்படுத்தல்கள் எங்கும் அறியப்பட்ட விடயமாக இருந்தது. மயிலிட்டியில் பெற்றோல் செட், நகைக்கடைக் கொள்ளையுடன் புஸ்பராசாவுக்கு தொடர்பு இருந்தன என்ற செய்திகள் இருந்த போதும் புஸ்பராணியும் புஸ்பராசாவும் கூட்டணியினரின் மேடைப்பேச்சிற் கூடாகவும் அன்று அறியப்பட்டிருந்தனர். புஸ்பராசா, பொதுவாக ஆயதம் ஏந்திய கிளர்ச்சியாளராக அதன் தொடர்புடையவராக அறியப்பட்டதில்லை. இவர் கூட்டணி சார்பான அரசியலுக்கு உருத்துடையவராகவே பொதுவாக அப்போது கணிக்கப்பட்டார். துரையப்பா கொலை வழக்கின் சந்தேகத்தின் பெயரிலேயே புஸ்பராசா கைது செய்யப்பட்டார். அதாவது கூட்டணியினர் மூலமாக பொலிசில் சரணடைந்தார். மற்றப் பக்கத்தால் புஸ்பராசா ஒரு பொலிஸ்காரனுக்கு அடித்து யுனிபோம் கிழித்து தொப்பி பறித்த கதையை ஒரு சண்டியனின் உற்சாகத்தோடு எழுதுகின்றார். இன்று 50 வயதை தாண்டிய மனிதராகிவிட்ட புஸ்பராசா தனது கடந்த காலத்திய வாழ்வு மீது சிறு சுயவிமர்சனம் கூட இல்லாமல் தனது வீரவாழ்வு பற்றி கதையாடல்களில் ஈடுபடுவது வாசிப்பவர்களின் மதிப்பை பெற்றுத்தராது.

EPRLF உடன் பிரான்சில் புஸ்பராசாவின் தொடர்பு கொண்டு இயங்கியமைக்கான அரசியல் ரீதியில் ஆழமான காரணங்களை அவர் தரவில்லை. தனது அடையாளத்தைக் காக்கும் பொருட்டே EPRLF ஐச் சார்ந்து இயங்கினார் என்று அவரது பிரான்சு நண்பர்களே கருத்துக் கூறுகின்றனர். ஒரு காலத்தில் திரு.அமிர்தலிங்கத்துடன் சேர்ந்து கொண்டு பத்மநாபா, வரதராஜப்பெருமாள் போன்றவர்களை சோசலிசப் போக்கு கொண்டவர்கள் என்று வெறுத்து விலத்திய புஸ்பராசா, பின்பு அதே நபர்களின் EPRLF இல் இணையும் போது அவரது அரசியல் பார்வை மாறியமைக்கான எந்த தடயமும் தென்படவில்லை. EPRLF இன் கட்டாய ஆள்பிடிப்பு, மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை விமர்ச்சிக்;க வேண்டிய தருணம் வரும் போது புஸ்பராசா ஏதோ தான் மூன்றாவது ஆள் இவைகளோடு தொடர்பற்ற வெளி ஆள் என்பதாக மாறி EPRLF பற்றி சிறிது விமர்சனம் சொல்ல முயல்கிறார். இத்தகைய தனது பொறுப்புக்களிலிருந்து தப்பிக்கும் போக்கு எங்கும் பரந்து வெளிப் படுகின்றது. இந்திய இராணுவத்துடனான EPRLF இன் உறவு பற்றி கிட்டதட்ட எதுவும் இவர் கூறாதொழித்தார்.

இலங்கைத் தமிழ் மக்களை படுகொலை செய்த இந்திய இராணுவத்தின் கப்பல், ஹெலி, ஜீப்புக்களில் பயணிக்க, ஊர் சுற்றிப் பார்க்க புஸ்பராசாவுக்கு எந்த மன நெருடலும் வரவில்லை. இந்தியபடையினரின் கப்பலில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பயணம் செய்ய நேர்ந்த போது படுக்கை, உணவு இவைகட்காக தான் பட்ட சிரமமே இவருக்கு பெரிதாக தெரிகிறது. இவைகளை ஒரு மேற்குலகம் சார்ந்த உயர்வர்க்கக் கனவான்களின் மனநிலையோடு புஸ்பராசா எழுதுகின்றார். நாகரீகமும், உயர்ந்த வாழ்க்கை முறையும், செல்வச்செழிப்பும் கொண்ட பிரான்சு தேசத்திலிருந்து கருணை கூர்ந்து இலங்கை சென்ற தனக்கு இத்தகைய இடர்கள் ஏற்பட்டதை எண்ணியெண்ணி அவர் அடைந்த வருத்தம் கொஞ்சம் நஞ்சமல்ல. இலங்கை பொலிஸ், இராணுவம் இவர்களிடம் தான் பட்ட சித்திரவதைகளை பெருமளவு நேர்மையோடு எழுதியுள்ள இவர் நாலாவது மாடிகளையும், இராணுவமுகாம்களையும் மிஞ்சவல்ல தூசாகக் கருதக் கூடிய தமிழ் இயக்கங்களின் படுகொலைககள், வதை முகாம்களை ஒப்பிட்டுப் பார்த்திருக்கலாம். பார்த்திருந்தால் சித்திரவதைக்கு பெயர்போன இன்ஸ்பெக்டர் பஸ்தியான்பிள்ளை போன்றவர்கள் மிகவும் அற்பமாய், சாதாரண புழு பூச்சியாய்த் தென்பட்டிருப்பார்கள். தமிழ் இயக்கங்களின் குரூரமான கொலையாளிகளை விட நல்ல மனிதர்களாக கண்டறியப்பட்டிருப்பார்கள். இலங்கை அரசின் வன்முறையை விட புலிகளின் பயங்கரவாதம் மோசமானது, எந்த மனித நெறிகட்கும் சட்டவிதிகட்கும் உட்படாதது. புலி அடிக்குமுன் கிலி அடிக்கும் என்பதற்கேற்ப புஸ்பராசா பரிபூரண எச்சரிக்கையுடனேயே புலிகளை நெருங்கியுள்ளார். வன்னியுட்பட பிரபாகரன் செங்கோலாட்சி செலுத்தும் பிரதேசங்களில் புஸ்பராசாவின் நூல் தடை செய்யப்படவில்லை என்பதையும் EPRLF இனரோ கூட்டணியினரோ இவரது எழுத்தை விமர்சிக்கவில்லை என்பதையும் நோக்கும் போது புஸ்பராசா எத்தகைய எழுத்தைப் படைத்துள்ளார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் அரசியலை மதிப்பவர்களின் நன்மதிப்பை புஸ்பராசாவினால் ஈட்ட முடியாது. ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் நூல் வெளிவந்த போது பிரான்சில் அதன் மேலான விமர்சன முயற்சிகள் எழுந்த போது புஸ்பராசா அவைகளை கடுமையாக எதிர்த்தவர். தன் கருத்தை இடைமறித்துப் பேசுபவர்களை அவர் பொறுத்துக் கொள்ளக் கூடியவரல்ல. தன் எழுத்து மீது அதிருப்தியை வெளியிட்டவர்களை அவர் மன்னித்தவருமல்ல. தன் கருத்தை மற்றொருவருடன் பகிர்ந்து கொள்வது என்ற போக்குகட்டு புஸ்பராசா பழக்கப்படாதவர். விமர்சனம செய்வது அவரைப் பொறுத்த வரை அவர் மேலான பிழைகண்டு பிடிப்பு, நொட்டைச் சொல்லல். புஸ்பராசா சராசரி ஜனநாயக ரீதியிலான கருத்து மாறுபடுகளைக் கூட சகித்ததில்லை. அவரது விசாலமற்ற சிந்தனையுள் இவைகட்கு இடமில்லை. வடக்கு கிழக்கு மக்களின் புவியியல் கலாச்சார வேறுபாடுகளை பேசாவிட்டாலும் பரவாயில்லை, தனது சொந்த ஊர், வாழ்ந்த கிராமம் பற்றிய சமூகவியல் நிலை, தான் விளைந்த சூழல் என்பன பற்றிய அறிமுகங்ளைக் கூட அவர் சொல்லவில்லை. சூழல் பற்றிய கவனமில்லாத மனிதரான புஸ்பராசா தமிழ்மக்கள் ஆளுமையோடு சொல்ல முடியாது போனது அதிசயமல்ல. 'இடுப்பு முறிந்த கோழிக்கு உரல் குழியே கைலாசம்' என்பது போல வலதுசாரி சிந்தனையாளரான புஸ்பராசாவிற்கு தமிழ் தேசியத்தில் முத்தியடைவதைத் தவிர வேறு மார்க்கமில்லை.

புஸ்பராசா ஐரோப்பிய இலக்கியசந்திப்புக் குழுவுடன் நீண்டகாலம் தொடர்புடையவர். அதனூடாகவே அவர் தன் இருப்பைத் தக்க வைத்துக் கொண்டவர். அதில் அவர் அநேகமான நண்பர்களைக் கொண்டிருந்தார் எனினும் அவை பற்றிய எந்தத் தகவலும் அவரது நூலில் புகலிடம்சார்ந்த விபரிப்புகளில் இடம் பெறவில்லை. புஸ்பராசாவின் அரசியல் இலக்கிய தோழரான புலிகளால் கொல்லப்பட்ட திரு.சபாலிங்கம் போதிய முக்கியத்துவத்தை இந்நூலில் பெறவில்லை. சபாலிங்கமும் புஸ்பராசாவும் இணைந்து ஈழப்போராட்டம் பற்றிய நுhல் எழுதி வருவதாய் சொல்லப்பட்ட சமயமே சபாலிங்கம் புலிகளால் பாரிசில் வைத்துக் கொல்லப்பட்டார். பழைய போராளியான சபாலிங்கம் பிரபாகரனின் உண்மையான வரலாற்றை எழுத முயன்றமைக்காகவே சுடப்பட்டதாய் இலக்கிய சந்திப்பு நண்பர்கள் வெளிப்படையாகவே பேசிக்கொண்டனர் இன்னமும் பேசிவருகின்றனர். சபாலிங்கம் புஸ்பராசா இருவரும் இணைந்து எழுதிய நூலே இப்போது புஸ்பராசாவின் பெயரில் வெளிவருவதாய் இப்போதும் பல இலக்கிய சந்திப்பு நண்பர்களிடம் கதையடிபடுகின்றது. இவைகளை நாம் எதிர்கால விமர்சகர்கட்கு தொடர்ந்து ஆய்வு செய்யும்படி விட்டுவிடலாம்.

புஸ்பராசா அவர்களின் பார்வையில் பிரபாகரன்

விரக்தியுற்று கெட்டு நொந்து போயிருக்கும் தமிழ் மக்களுக்கு பிரபாகரனை "தம்பி" என்று அழைத்து ஆற்றல்மிக்க தலைவர் என்று எமக்கு புஸ்பராசா அறிமுகமும் செய்து வைக்கின்றார். 'பிரபாகரன் என்ற மனிதர் இல்லாவிட்டால் புலிகள் இயக்கம் இப்படி இராணுவ, உளவுத்துறை நிர்வாக அறிவுகளைக் கொண்டதாக வளர்ந்திருக்க முடியாது' என அவரது எழுத்து அத்தாட்சி தருகின்றது. புஸ்பராசா தான் சகல இயக்கங்களையும் கடந்த பொது மனிதராக, அரசியல் ஆய்வாளராகத் தோற்றம் காட்டிக் கொண்டே புலிகள் பற்றிய எத்தகைய மனப்பதிவை எம்மிடம் எற்படுத்த முயற்சிக்கின்றார்? அவர் தன்னோடு வாழந்து போராடி மரணமடைந்த புலிகளால் கொல்லப்பட்ட மனிதர்களை எல்லாம் எப்படி மறந்து போனார். புஸ்பராசா மிகவும் மதித்த திரு.அமிர்தலிங்கத்தை, இவர் அங்கம் வகித்த EPRLF இன் தலைவர் தோழர் பத்மநாபாவை, பாரிசில் இவரது நெருங்கிய நண்பர் சபாலிங்கத்தை இப்படி பல ஆயிரம் பேரை எதிர்கருத்துடையவர்களைக் கொன்றொழித்த தேசியத் தலைவரை எப்படிப் பாராட்ட முடிகின்றது? புலிகளின் இராணுவம் உளவுப்படைகள் ஒரு பாசிச அடிப்படையில் கட்டப்பட்ட கொலை இயந்திரங்கள், சொந்த தமிழ் மக்களை அவர்கள் மத்தியிலான ஜனநாயக முறைகளைக் கூட சிதைத்தழித்தவை என்ற உண்மையை புஸ்பராசாவின் பாராட்டுக்கள் ஏன் கவனத்தில் கொள்ளவில்லை.? பாசிஸ்ட்டுக்களின் நல்ல பண்புகளை, இனிய குணாம்திசயங்களை, வீர இயல்புகளை தேடுபவர் எத்தகைய அரசியல் மதி கொண்டவராக இருப்பார்? புலிகளை பாசிச இயக்கம் என்று பிரகடனப்படுத்த வெட்கப்படுபவர்கள், தமிழ் தேசிய விடுதலையின் பெயரால் புலிகட்கு பொது மன்னிப்புத் தருவபவர்களும் பாசிச கலாச்சராத்தை வளர்ப்பவர்களே! அதை ஊக்குவிப்பவர்களே!! நாளைய வரலாற்று விசாரணைகளில் புஸ்பராசாவும் குற்றறவாளியாக கூண்டிலேற வேண்டி வரும்.

புஸ்பராசா அண்ணன் அமிர்தலிஙகம் அரசுகட்டிலில் வீற்றிருந்த காலததில் அவரை அண்டி நின்றார். பின்பு EPRLF ஆட்சியில் பத்மநாபாவுக்கு நெருக்கமானவர். இப்போ மலர்ந்துள்ள புலிகளின் ஆட்சியில் பிரபாகரன் மேல் மையல் கொள்கின்றார். ஆக புஸ்பராசாவை எல்லாக் காலத்திலும் பயிர் செய்யக்கூடியவர், அதிகாரத்தின் நிழலில் கூடி நின்று ஆதாயம் பெறக் கூடியவர் என்று நாம் நம்ப போதிய தரவுகள் உள்ளன. புஸ்பராசா பிரமிக்கும் புலிகளின் இராணுவ உளவு அமைப்புக்கள் எத்தகையவை? மக்களுக்கு இவற்றோடு உள்ள பங்கும் உறவும் எத்தகையது? என நாம் விசாரிக்க வேண்டியுள்ளது. புலிகளின் பாசிச இராணுவவாதம் தற்கொலையை போற்றியது மரணத்தையும் சுயஅழிவையும் வழிபாட்டுக்குரியதாக ஆக்கினார்கள். மரணத்திற்குப் பின்னரான மாவீரர் வாழ்வு இலட்சியமயப் படுத்தப்பட்டது. தமிழ் மக்களின் வாழும் ஆசை கோழைத்தனம் என்று இழிவு செய்யப்பட்டது. சாவெறித்தனமாகப் போற்றப்பட்டது; உன்னதமாக்கப்பட்டது. போராட்டம் வாழ்வதற்காக என்பது போய், சாவதற்கு மண்ணோடு மண்ணாய்க் கரைந்து போவதற்கு என்பதாயிற்று. தமது காரியங்கட்கு அரசியல் ரீதியில் பொறுப்புச் சொல்லத் தெரியாத குழந்தைகள் ஆயதபாணிகளாக்கப்பட்டு மிருக ஒழுங்குக்குள் ஈவிரக்கமற்ற முறையில் பயிற்றுவிக்கப்பட்டனர். கேள்விகளை எழுப்பாத சொன்னதைச் செய்யும் கொலை இயந்திரங்களாக அவர்கள் ஆயினர். உண்மையான புரட்சியாளர்கள் வாழ்வை இகழாதவர்கள் ஒவ்வொரு துளிப்பொழுதையும் மானுட விழுமியங்களால் அளப்பவர்கள். புலிகட்கு வாழ்வை பற்றி என்ன தெரியும்? ஆனால் 'தேசியத்தலைவர்' இலங்கையிலேயே ஆகக் கூடிய பாதுகாப்புடன் கூடிய மனிதர். அவரது உயிர் எதிரிகளிடமிருந்து பரிபூரணமாய் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையில் உள்ள எந்த மனித உயிரும் அது தமிழரோ, சிங்களவரோ, முஸ்லீமோ எவராயினும் அதைப் பறிக்க தேசியத் தலைவருக்கு உரிமையுண்டு. இந்த இராணுவவாதத்தை, பாசிச ஆயுத கலாச்சாரத்தை புஸ்பராசா திறமானது என்கின்றார், மெச்சுகின்றார்.

தேசியத்தலைவரது தனிப்பட்ட பண்புகள் போற்றத் தகுந்தவையா? இயக்கம் தொடங்கிய காலங்களில் தன் கூடப்படுத்தவர்களைக் கூட நம்பாமல் அவர்களின் துவக்கை வாங்கி தான் வைத்துக் கொண்டு படுக்கும் மனிதர். படுத்து விட்டு இடையில் இரவில் எழுந்து கால் இருந்த இடத்தில் தலையும் தலை இருந்த இடத்தில் காலும் வைத்து மாற்றி படுக்கும் பேர்வழி. தன் நிழலைக் கூட நம்பாதவர்கள், சிறந்த இராணுவ, தலைமை பண்புள்ளவர்களாக புஸ்பராசாவால் கண்டெடுக்கப்படுகின்றனர். மாற்று இயக்கங்களை மட்டுமல்ல, குழந்தைப் பருவத்திலே பழகிய மாத்தையா, மனோ மாஸ்டர் போன்றவர்கள் கூட தேசியத் தலைவரால் புதைகுழிகட்கு அனுப்பப்பட்டனர். மனோ மாஸ்டர்-பிரபாகரனை வல்வெட்டித்துறையில் புருசன் பெண்சாதி என்று ஊர்ச்சனம் பகிடி பண்ணுவது வழக்கம். அத்தகைய மனோ மாஸ்டர் பிற்காலத்தில் தெரு நாய் போல சுடப்பட்டார். இங்கு பிரபாகரனை அல்லது புலிகளைப் பாராட்டுவதென்பது தமிழ் மக்களின் பாரம்பரிய நாகரீகக் கலாச்சார விழுமியங்களையும் மனித ஆளுமைகளையும் அறிவுத்திறன்களையும் மானங்கெடுத்தி குழிதோண்டிப் புதைப்பதாகும். தமிழ் மக்களின் சுதந்திரத்தின் பெயரால் பெருத்துப் பரவியுள்ள பயப்பீதி, அரசியல் கோழைத்தனம், அடிமைத்தனம், பொது வாழ்வில் இருந்து ஒதுங்குதல், அநீதிகட்கு எதிராய் போராடாமல் இருத்தல் போன்ற பண்புகளை ஏற்றுக் கொள்வதாகும். தேசிய தலைவரின் சித்தமே தெய்வ சித்தம் என்பதாய் நிலைமையுள்ளது. முழுச்சமூகமும் அடிமைகளாக கட்டி வைக்கப்பட்டுள்ளது. புஸ்பராசாவின் பிரபாகரன் மீதான நேசத்தை தமிழ் விடுதலையின் பேரிலானதாக குழப்பியடித்து விட நிறைய மார்க்கங்கள் உண்டு. புலிகளை கைவிடும் தருணம் வரும் போது தான் தமிழ் தேசிய விடுதலைக்காகவே புலிகளை மெச்சியதாய் நியாயம் சொல்லத்தக்க வழியையும் அவர் விட்டு வைத்துள்ளார். இங்கு நாம் இத்தகைய சகல சந்தர்ப்பவாதத்திற்கும் இடம் தரக் கூடிய சகல பாதைகளையும் நாம் அடைக்க வேண்டும். வெட்டொன்று துண்டிரண்டாக தம் அரசியல் நிலையை வெளியிடாத சகல போக்குகளையும் அரசியல் ரீதியில் அம்பலப்படுத்தி மரியாதை கெடுத்த வேண்டும்.

புலிகள் பரப்பியுள்ள எண்ணற்ற பொய்களைத் தகர்க்க எமக்கு வாழ் நாள் போதாத நிலை. இந்த நிலையில் புலிகளின் பொய்கட்கும் பிரச்சாரங்கட்கும் அலங்காரம் செய்பவர்கள், அழகுபடுத்துவோர்கள் தொகை பெருகியுள்ளது. பிரபாகரன் 14 வயதில் போராளியானார் என்று கூட புலி பிரச்சாரங்கள் எழுதுகின்றன. அதாவது இளைஞர் போராட்டம் பற்றிய எந்தவித அசுமாத்தமும் எழாத 1968களில், 1954 ஆண்டில் பிறந்த பிரபாகரன் யாருமற்ற சூனிய வெளியிலே போராட ஆரம்பித்து விட்டார் என்ற வியத்தகு உண்மைகளை இந்நூலில் புஸ்பராசா பேசாமல்விட்டது கொஞ்சம் வியப்பாகவே உள்ளது. இன்றைய தேசிய தலைவரின் நானே அரசன்! நானே கடவுள்!! என்ற போக்கின் புதிய வடிவங்களை மோகிக்க புஸ்பராசாவிற்கு நிறைய காரணங்கள் உண்டு. அமிர்தலிங்கத்தையும் பிரபாகரனையும் ஏற்று ஒன்று சேர எப்படி புஸ்பராசாவால் ஆதரிக்க முடிகிறது? கொலை செய்தவரையும் கொலை செய்யப்பட்டவரையும் எப்படி ஒன்றாய் போற்ற முடிகிறது? இங்கு இவரை இணைப்பது தமிழ் தேசிய உணர்வல்ல வர்க்கம் சார்ந்த பொதுப் புத்தியாகும். அது சார்ந்த கருத்துக்களாகும்.

வல்வெட்டித்துறை

"வல்வெட்டித்துறை மக்களின் விடுதலைக்கான போராட்டம் மீதான ஆர்வத்தை யாரும் சந்தேகிக்க முடியாது. விடுதலைக்காக தங்களையே அழித்துக் கொண்ட மக்கள் அவர்கள் போர்மயமான வாழ்க்கைதான் ஆண்டாண்டு காலமாக அரசபடையுடன் மோதியே பழக்கப்பட்டவர்கள வல்வெட்டித்துறை என்றால் மாத்தறையில் உள்ள சிங்களவனுக்கு குலை நடுங்கும்" இது புஸ்பராசாவின் வல்வெட்டித்துறை பற்றிய வாழ்த்துப்பா. இந்தளவுக்கு வெளிப்படையாய் ஊர் பெருமை பேச புலிகள் கூட வெட்கப்படுவார்கள். ஆனால் ஒரே சமயத்தில் தமிழ் தேசியப்பற்றாளர், இடது போக்காளர், பின்நவீனத்துவத்தின் காதலர், தலித்தியத்தால் ஈர்க்கப்பட்டவர், பெரியாரில் புதையுண்டவர் என்று பெயரெடுக்க ஆசைப்படும் புஸ்பராசா என்ற பல்வேட நாயகரோ யாழ்ப்பாணப் பிரதேசம் சார்ந்த வல்வெட்டித்துறையின் ஊர்ப்பெருமை பேச தன்னை அர்ப்பணித்துள்ளார். வல்வெட்டித்துறை வீரத்தின் விளைநிலமாக ஆகிவிடுகின்றது. புலிகளின் பாசிசத்திற்கு தத்துவம் வரையும்> கூலித்தத்தவ ஆசிரியர் பாலசிங்கம் " வரலாற்று ரீதியாகவே வல்வெட்டித்துறை மக்கள் விடுதலையுணர்வும் வீரமிகுபண்புகளும் படைத்தவர்கள். இதனால் இப்பட்டினம் சிங்கள எதிர்ப்பு இயக்கத்திற்கு ஒரு தளமாக இருந்து வந்ததுடன் வீரம் செறிந்த தேசிய விடுதலை வீரர்களையும் உருவாக்கியது. இந்தப்புரட்சிகர சூழலில் பிறந்த பிரபாகரன் சிறுபிராயத்திலிருந்தே விடுதவையுணர்வும் வீரமும் மிக்கராய் திகழ்ந்தார்" என்கிறார். ஆக வல்வெட்டித்துறையில் பிறப்பவர்கட்கு வீரம், விடுதலையுணர்வு என்பன பிறவிக் கொடை, வல்வெட்டித்துறையில் பிறக்காதவர்கட்கு இத்தகைய கொடுப்பனவு கிடையாது, அவர்கள் சாதாரணமானவர்கள் என்று எமக்கு இவர்கள் பொருள் கொள்ளும்படி அறிவுரை தருகின்றார். புஸ்பராசா முதல் பாலசிங்கம் வரை எவருக்கும் சமூகவியல், மானுடவியல் பண்புகள் பற்றி எந்த கவலையும் அறிமுகமும் இல்லை.

புஸ்பராசாவின் வல்வெட்டித்துறை ஊர் சார்ந்த பிரதேசப்பெருமைகள் தேசிய வாதத்தை விட தரம் தாழ்ந்தவை, படுகேவலமானவை என்பதை நாம் சொல்லத் தேவையில்லை. யாழ்ப்பாணப் பிரதேசவாதத்திலும் குறுகிய ஊர்ப்பெருமைகளிலும் தின்று தினவெடுத்து நிற்கும் புஸ்பராசாக்கள் மானுட மதிப்புக்கு தீர்மானகரமன எதிரிகள். வல்வெட்டித்துறைக்கு விசேட குணாம்சங்கள் உள்ளனவா? வித்தியாசமான மனித நடத்தைகள் இயங்குகின்றனவா? என்பதை நாம் அதனது புவியியல் மற்றும் சமூக> பொருளியல் இயக்கத்தில் தேடிப் பார்க்க முயல வேண்டும். வல்வெட்டித்துறை ஒரு மைல் நீளமும் அரை மைல் அகலமும் கொண்ட சிறிய கிராமமாக இருந்த போதிலும் குடிசனத்தொகையில் இலங்கையில் காத்தான்குடியைப் போன்று சன அடர்த்தி கூடிய பகுதியாகும். வல்வெட்டித்துறை வல்வெட்டிக் கிராமத்தின் துறையாக இருந்து பின்பு வல்வெட்டித்துறையாக மாறியது. உண்மையில் வல்வெட்டியின் குறிச்சியே வல்வெட்டித்துறையாகும். வல்வெட்டித்துறையிலுள்ள பெரும்பகுதி நிலம் ஆரம்பத்தில் சிவன், அம்மன் கோவில் காணிகள் உட்பட யாவும் வல்வெட்டி சிறு நிலவுடமையாளர்கட்கே சொந்தமாய் இருந்தன. நல்ல நீரும் அருமையென்பதால் விவசாயம் இங்கு இல்லை. விவசாயத்திற்கேற்ற மண்ணும் அதுசார்ந்த பொருளாதாரமும் இன்மையால் சமூகத்தில் குடிமைமுறை நிலவவில்லை எனவே கடல்சார்ந்து வாழும் முறையே மீன்பிடியே பிரதான தொழிலாக இருந்தது. கள்ளக்கடத்தல் வளர்ந்து பொருளாதார ஆதிக்கம் பெருகிய பின்பே ஏழை மீன்பிடிக் கிராமமான வல்வெட்டித்துறை செல்வச்செழிப்பு மிக்க சட்டவிரோத நடவடிக்கையின் மையமாக யாழ் குடாநாட்டுள் உருவெடுத்தது. மீன்பிடி சமூகத்தையே கொண்டிருந்த இந்தக் கிராமம் தமக்குத் தொண்டு செய்யும் ஒரு ஒடுக்கப்பட்ட சாதிகளை சேர்ந்த சில குடும்பங்களையும் கொண்டிருந்தது. கள்ளக்கடத்தல் சமூகமாக வல்வெட்டித்துறை மாறிய பின்னர், இம்மக்களிடையே பொருளாதார ஏற்ற இறக்கமும் சட்டவிரோத பொருளாதாரத்துடன் இணைந்த வாழ்வும் வலிமை பெற்றது.

வல்வெட்டித்துறை மீன்பிடிச் சமூகத்துள் நான்கு முக்கியமான பிரிவுகளுண்டு. முதலாவது உயர்நிலைப்பிரிவான குருகுலக்கரையார். இவர்கள் சிறு படகுகள் கட்டுவதுடன் 1947 ஆண்டிற்கு முன்னர் வரை பிரிட்டிஸ் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு, சிங்கப்பூர், பர்மா வரை பொருட்களை கொண்டு சென்றனர். பெரும்பாலும் பண்டமாற்று வர்த்தகத்தில் ஈடுபட்டனர். இவர்கள் மீன்பிடித் தொழிலைச் செய்வதில்லை என்பதோடு அதை இழிவாய்க் கருதினர். இவர்கள் அநேகமாக பொருளாதார ரீதியில் உயர் நிலையில் இருந்தமையால் வர்த்தகர்களாகவும், அரச சேவைக்கும் சென்றனர். இவர்கள் கள்ளக்கடத்தலுடன் நீண்ட உறவுடையவர்களாவர். பிரபாகரன் இந்தப்பிரிவை சேர்ந்தவர். இரண்டாவது பிரிவானது ஆழ்கடலில் சென்று மீன்பிடிப்பவர்களாவர். இதில் தங்கத்துரை போன்றவர்கள் அடங்குவர். அடுத்த பிரிவு மீனவர்கள் சமூகமானது கட்டுமரங்களில் சென்று கிட்டடிக்கடலில் மீன்பிடிப்பவர்கள். குட்டிமணி இப்பரிவைச் சேர்ந்தவர் இறுதியாக உள்ள மக்கள் பிரிவு 'தப்புத்தண்ணிக்கரையார்' என அழைக்கப்பட்டவர்கள் இவர்கள் கரைக்குத்தி மீன்பிடிப்பவர்கள். மழைகாலத்தில் கடல் பெருகும் காலங்களிலும் மீன்பிடித்து வாழும் ஏழையான பின்தங்கிய மக்கள் பிரிவாகும். இவர்கள் கண்டி இறால் பிடிப்பது மற்றும் கூடுகட்டி மீன்பிடிப்பதென கடற்கரையோரங்களில் மரபு வழியான மீன்பிடியைத்தொழிலை செய்து வந்தனர். இந்த நான்கு பிரிவு மக்களிடமும் வர்க்க பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நிலவின. உண்மையான உழைப்பாளிகளான தப்புத்தண்ணீர்க்கரையாரிடம் தான் கூத்து போன்ற கலைவடிவங்கள் நிலவின. இவர்கள் தொழிலற்ற கோடைகாலங்களிலும், கள்ளு அதிகமாகவுள்ள காலங்களிலும் இவர்கள் கூத்துக்களில் ஈடுபடுவார்கள். ஆனால் கள்ளக் கடத்தல் வல்வெட்டித்துறையில் பெருகிய போது இவை அருகத் தொடங்கின. ஏனெனில் கடல்சார்ந்த உழைப்பு மீன்பிடித்தொழில் அழிவுற தொடங்கியமையின் அடையாளமாக இது இருந்தது.

வல்வெட்டித்துறைச் சிவன் கோவில் பிரபாகரனின் பூட்டனரான திருமேனிதாஸ் என்பவரால் கட்டப்பட்டது. திருமேனியர் குடும்பம் என்றும் அழைக்கப்பட்ட இவர்களே ஏனைய வல்வெட்டித்துறைக் கோயில்களான மாரியம்மன் கோவில், பிள்ளையார் கோவில்களையும் கட்டினர். இவை இவர்களது பரம்பரைக் கோவில்களாகும். வல்வெட்டித்துறை சிவன் கோயில் தர்மகர்த்தாவாக இருந்தவர் பிரபாகரனின் தந்தையான வேலுப்பிள்ளையாகும். இவர்களே முதன் முதலில் இந்தியாவிலிருந்து கிருபானந்தவாரியாரை அழைத்து சொற்பொழிவு செய்வித்தனர். மீனவர்கள் அல்லாத தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் இன்றுவரை வல்வெட்டித்துறையில் இவர்களின் கோவில்களுக்குள் நுழைய முடியாது கோவில் கிணறுகளில் தண்ணீரையும் அள்ளவும் முடியாது. கம்பர் மலையைச் சேர்ந்த புலிகள் அமைப்பில் முக்கிய நபராக இருந்த பண்டிதரோ அல்லது இன்றைய தமிழ்செல்வனோ இந்தக் கோவில்களில் இன்றும் நுழைய முடியாது. புலிகள் ஒடுக்கப்ட்ட மக்களை தம் சொந்த தலைவரின் ஊரில் கோவில்களில் இன்று வரை நுழைய விடவில்லை. வழிபாட்டில் சுதந்திரத்தை மனித சமத்துவத்தை வழங்கவில்லை. இந்த நிலையில் ஊர்ப்பெருமையில் கூட இருந்து விடுபட முடியாத பிரபாகரனை தமிழ் தேசியத்துக்குத் தலைவர் என்று கொண்டாடும் அற்பத்தனங்கள் மேடையேறுகின்றன. பிரபாகரனின் சொந்தக் கிராமம் புஸ்பராசா போன்றவர்களால் புகழப்படும் வல்வெட்டித்துறையின் கோவில்களில் பஞ்சமர்கள் அனுமதிக்கப் படுவதில்லை. பள்ளர் சமூகம் உள்ளே விடப்படுவது கிடையாது. பஞ்சமர்களில் கரையார சமூகம் இடம் பெறவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

கள்ளக்கடத்தல் மூலம் வல்வெட்டித்துறையில் மீனவ சமூகத்தில் ஒரு பிரிவு பொருளாதார ரீதியாக உயாந்தபோது, அயற்கிராமங்களில் உள்ள வேளாள சமூகத்துடன் சாதி ரீதியிலான முரண்பாடுகளைக் குறைத்தது. மேலும் நிலத்தில் உழைக்க வேண்டிய தேவையில்லாத வல்வெட்டித்துறையின் மீன்பிடிச சமூகத்தை, கடல் சார்ந்து வாழ்ந்தவர்களை வல்வெட்டித்துறைக்கு வெளியே நிலங்களையும் விவசாய நிலங்களையும் கொண்டிருந்த வேளாளர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. கள்ளக் கடத்தல் செய்வதன் மூலம் வல்வெட்டித்துறையில் உயர்பிரிவுகள் பருத்தித்துறை உட்பட பல முக்கிய இடங்களில் பெரிய வர்த்தகர்களாகவும், சமூகச் செல்வாக்குள்ள நபர்களாகவும் உருவாகியிருந்தனர். எனவே கிட்டத்தட்ட சமத்துவமான உறவு இரு பிரவுகளுக்கிடையேயும் நிலவியது. கடலில் சுதந்திரமாய் இருந்து செயற்பட்ட வல்வெட்டித்துறை உயர்மட்ட கரையாருக்கும் வேளாளருக்கும் 'முழங்கையில் பிடித்து விருந்துக்கு அழைப்பது' என்ற அளவுக்கு உறவு இருந்தது (முழங்கையில் பிடித்து விருந்துக்கு அழைத்தால் பிடிக்கும் பிடி வழுக்கி விடும்). 1980களின் பின்னர் இந்தப்போக்குகள்மாறி உயர்மட்டக்கரையார் வேளார்னளிடையே திருமணபந்தங்கள் ஏற்படத்தொடங்கின.

கள்ளக்கடத்தலும் வல்வெட்டித்துறையும்

வல்வெட்டித்துறையில் வீரம், விடுதலையுணர்வுகளை எழுதியோய்ந்த புஸ்பராசா, அடுத்து அதன் கள்ளக்கடத்தல் கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் விவாதங்களை முன்வைக்கிறார். இலங்கை, இந்திய அரசுகள் கடல் கடந்த வாணிபத்தை தடைசெய்து சட்டரீதியாக கட்டுப்படுத்திய போது தான் கள்ளக்கடத்தல் தோன்றியதாய் நியாதிக்கம் தரும் அவர் இலங்கை இந்திய தமிழர்களிடையே தொடர்புகளை இல்லாதொழிக்கவே இச்சட்டம் ஏற்படுத்தப்பட்டதாய் புதிய கட்டவிழ்ப்புக்களையும் நடத்துகின்றார். முதலாவதாக, இலங்கை இந்திய சுதந்திரத்திற்கு முன்பான சில போக்குகளை புஸ்பராசா இரு நாடுகளும் சுதந்திரம் அடைந்த பின்பான போக்குகட்கு எதிராக நிறுத்த முயல்கிறார். இலங்கை ஒரு சுதந்திர நாடு என்ற வகையில் அது தனக்குரிய எல்லைப்பாதுகாப்பு, சுங்கவரி சார்ந்த சட்ட விதிகளை கொண்டுள்ளது என்பதுடன் இலங்கையும் இந்தியாவும் சட்டபூர்வமாக கடல் வாணிபம் செய்கின்றன. இதை எப்படி சில வல்வெட்டித்துறை கள்ளக் கடத்தல் முதலாளிகள் தகர்க்க முடியும்? கள்ளக்கடத்தலை தடுப்பது எப்படி இந்திய இலங்கை மக்களுக்கிடையேயான உறவைத் தடுப்பதாகும்? என்று புஸ்பராசா எங்கும் தனது எழுத்தில் விளங்கப்படுத்தவில்லை. வல்வெட்டித்துறை கள்ளக் கடத்தல் சக்திகளுகட்கு இந்திய கள்ளக்கடத்தல் சக்திகளுடன் தொடர்பு இருந்ததே தவிர சாதாரண இலங்கை இந்திய தமிழர்கட்கு இத் தொழிலோடு எந்த கலாச்சார சார்ந்த இனப் பெருமை கொண்ட உறவும் இருக்கவில்லை.

கள்ளத் தோணிகள்


வல்வெட்டித்துறைக் கள்ளக்கடத்தலை பேசுபவர்களும், அதை சரி என்று வாதிடுபவர்களும் கவனமாக மறைக்கும் விடயம், கள்ளகடத்தலுக்கு முன்னோடியாக இருந்தது கள்ளதோணிகனில் ஆட்களை இந்தியாவிலிருந்து கடத்தி வந்து விற்பதாகும். இது ஒருவகை அடிமை வியாபாரமாகும். தமிழர்களை தமிழர்களே கடத்தி வந்து விற்பதாகும். தமிழக ஏழைத்தமிழர்களை விற்பனை செய்வதை புஸ்பராசா இரு நாடுகட்குமான கலாச்சார பாலமாக இந்தியா வாழ் இலங்கை தமிழர்களுக்கிடையேயான உறவாக விளங்கப்படுத்துவர் போலும். 1950 களில் தொடங்கி 1960 வரையிலான கால கட்டத்தில் இலங்கை ஒப்பிட்டு ரீதியில் இந்தியாவை விட உயர்வான பொருளாதார நிலைமைகளைக் கொண்டிருந்தது. இந்தியா பொருளாதார நெருக்கடிக்களையும், பசி, பட்டினியையும் அனுபவித்துக் கொண்டிருந்தது. இதனால் பல பத்தாயிரம் இந்தியாவின் தென் பகுதியைச் சேர்ந்த ஏழை மனிதர்கள் இலங்கையினால் ஈர்க்கப்பட்டனர். அக்கால கட்டத்தில் வல்வெட்டித்துறையில் கடத்தல் படகுகள் இரண்டு மூன்று என்று ஒன்று கூடி தமிழ்நாட்டில் இருந்து படகுக்கு 20, 25 பேர் என்ற அளவில் ஆட்களை கடத்தி வந்தன. இவர்களே கள்ளத்தோணிகள் என்று அழைக்கப்பட்டனர். ஆட்களை கடத்தி வரும்போது கடத்தல்காரர்கள் கடற்படையினரைக் கண்டால் அல்லது கரைகளில் இராணுவத்தையோ பொலிசையோ கண்டால் கடலில் ஆட்களை கவிழ்த்து விட்டு தப்பி ஓடி விடுவார்கள். இப்படி பிழைப்புத் தேடி இலங்கை வர முயன்ற ஆயிரக்கணக்கான இந்தியாவின் பஞ்சப்பட்ட மனிதர்கள் பாக்கு நீரிணைக் கடலடியில் உயிரோடு புதையுண்டு போயினர். இப்படி பல நுhறு மனிதர்கள் கதைகள் எழுதப்படாத இலக்கியங்களாக வாழ்கின்றன. இப்படி கடலில் இறந்த கள்ளத்தோணி மனிதர்களின் உடல்கள் கடற்கரையில் அநாதைப்பிணங்களாக ஒதுங்குவது சாதாரணமாக பத்திரிகைகளில் அனேகமாக இடம் பெறுவதில்லை.

கள்ளத்தோணிகளில் கொண்டு வரப்படுபவர்களை வாங்கிச் செல்லவதற்காக யாழ்ப்பாணம், கொழும்ப வன்னிப்பகுதிகளில் இருந்து ஆட்கள் வருவார்கள் இந்தக் கள்ளத்தோணி மனிதர்களை 100, 200, 500 என்று நிலைமைக்கு தகுந்தபடி விற்கப்படுவார்கள். இப்படி வாங்கப்படும் மனிதர்கள் கடைகள், களஞ்சியங்கள், தோட்டங்கள், வீட்டுவெலை, உணவுவிடுதிகள் என்று வேலைகளில் ஈடுபடுத்தப்படவார்கள் வாங்கியவரின் கடன்காசு தீரும் வரை பல வாங்கிய முதலாளியின் விருப்புக்குகேற்ப இந்த மனிதர்கள் வருடக்கணக்கிலும் பல சமயங்களில் வேலை செய்ய வேண்டியிருந்தது. அதன் பின்பே இந்த மனிதர்கள் சுதந்திரமாக உழைத்துப் பிழைத்து இந்தியாவில் உள்ள தமது குடும்பங்களுக்கோ பிள்ளை குட்டிகளுக்கோ பணம் சேர்க்க முடியும். அதுவும் பொலிஸ், காட்டிக் கொடுப்போரென்ற கெடுபிடிகளுக்கும் அஞ்சியே இவர்கள் வாழந்து உழைத்தனர். இப்படிக் கள்ளத்தோணியில் கொண்டு வரப்படுபவர்கள் வருடக்கணக்கில் சாப்பாடு மட்டும் கொடுத்து உழைப்பித்த சம்பவங்களும் அடித்து, உதைத்து, அடிமை போல் வேலை வாங்கிய கதைகளும் வருடக் கணக்கில் உழைத்துவிட்டு காசு கேட்ட போது பொலிசில் காட்டிக் கொடுப்பது, கொலை செய்வது, அடி போட்டுக் கலைப்பது என்பன கூட சாதாரணமாக இருந்தது. இக்காலத்தில் வன்னிப் பகுதிகளில் காடு வெட்டுவதிலும் அருவி வெட்டுதல், கிணறு வெட்டுதல், மாடு வளர்ப்பு, தோட்டவேலைகளைச்செய்ய கள்ளத் தோணியில் கொண்டு வரப்பபட்ட இந்த மனிதர்கள் பயன்படுத்தப்பட்டனர். நெடுங்கேணியில் தேத்தண்ணிக்கடையில் வேலைசெய்த 'வடக்கத்தையான்' போட்ட தேத்தண்ணியில் இலையான் இருந்தது என்பதற்காக அவன் அடித்துக்கொல்லப்பட்டு காட்டுக்குள் வீசப்பட்டான். கழு அல்பேட் மற்றும் ஒரு யானைததீப்பெட்டி புகழ் ஜி.ஜி.பொன்னம்பலம் கொலையாளிக்காக நீதிமன்றத்தில் வாதாடி கொலையாளியை விடுதலை செய்த கதை பிரபல்யமானது. இக்காலத்தில் இந்த அநாதரவான மனிதர்கள் மடடுமல்ல, சாதாரணமாக வாழ்ந்த ஏனைய இந்திய வம்சாவளிமக்களும் தோட்டத் தொழிலாளர்களும் கள்ளத்தோணிகள் என்று நையாண்டியாக அழைக்ப்பட்டனர். பிடிபடும் கள்ளத் தோணிகள் பொலிசாரால் துன்புறுத்தப்பட்டதுடன் அவர்கட்கு வாதாட சட்டத்தரணிகளும் கிட்டவில்லை. தமிழர்கட்காகவே அவதாரம் எடுத்ததாகச் சொன்ன தமிழரசுக் கட்சியினர் இந்தக் கள்ளத்தோணிகட்காக வாதாடியது கிடையாது. மாறாக கடத்தல்காரர்களை மீட்க தமிழரசுக் கட்சியில் சட்டதரணிகள் தாரளமாக இருந்தனர். கள்ளத்தோணிகளை அடைத்து வைக்க கொழும்பு கொம்பனித்தெருவில் தனிமுகாம் இருந்தது. இங்கு வருடக்கணக்கில் இந்த மனிதர்கள் அடைத்து வைக்கப்பட்டனர்.

வல்வெடடித்துறையில் தொடங்கிய கள்ளத்தோணியில் ஆட்களைக் கடத்துவது ஏனைய கரையோரக் கிராமங்களான பருத்தித்துறை, மயிலிட்டி, மாதகல்வரை பரவியது. இந்த இடங்களிலும் வல்வெட்டித்துறை ஆட்களே தமது ஆட்களை வைத்து இந்தியாவிலிருந்து ஆட்களை கடத்தி வந்தனர். இத்தொழில் கள்ளத்தோணிகளைக் கடத்தி வருவது, விற்பனை, தரகர்கள், வியாபாரிகள் கார்ச்சாரதிகள் என்ற பெரும் வலைப்பின்னலைக் கொண்டிருந்தது. கள்ளத் தோணியில் கொண்டு வருபவர்களை இராணுவம், பொலிசாரிடம் அகப்படாமல் பாதுகாப்பான இடங்கட்கு கொண்டு செல்ல இரவிரவாக ஏ போட்டி சோமுசெட் கார்கள் ஓடும். இக்காலத்திலேயே அதிக பொலிஸ் இராணுவ முகாம்கள் கடற்படை என்பன வல்வெட்டித்துறைப் பகுதியில் அரச கண்காணிபபுக்கள் பெருகத் தொடங்கின. குடா நாட்டின் கடற்கரையோரக் கிராமங்களில் அரசபடைகள் நுழைவது தொடங்கியது. இலங்கையில் கள்ளத் தோணி தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது.

தமிழ், தமிழினப் பெருமை பேசுவோர் அன்று சொந்த தமிழர்களை கடத்தி வந்து இலங்கையில் விற்றுத்தான் பெரும் செல்வம் திரட்டினர். அதையே தொழிலாகச் செய்தனர். சில சமயங்களில் இந்தக் கள்ளத்தோணித் தமிழர்கள் தென்னிலங்கைக்கு சிங்களவர்கட்கும் விற்று பணமாக்கப்பட்டனர். இவ்வாறாக தென்னிலங்கைக்கு கள்ளத்தோணித் தமிழர்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்காகவே முதன்முதலில் ஆனையிறவு இராணுவமுகாம் நிறுவப்பட்டது. இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட இம்மனிதர்கள் புதிய நிலைமைகளில் ஆதரவற்றவர்களாக சுயமாக இயங்க முடியாதவர்களாக கட்டளைகளை மீற முடியாதவர்களாக மனித இழிவுகளை சகிக்க கட்டாயப்படுத்தப்பட்டவர்களாக பிறவிகளாக இருந்தனர். எந்தத் தமிழ் பெருமை பேசம் பொய்யர்களும் இந்தக் கள்ளத் தோணி தமிழர்களுகட்கு இரங்கவில்லை. மனிதப்பிறப்பாக பொருட்படுத்தப்படவில்லை தமிழ் கட்சிகள் இந்த மனிதர்களை பொருட்படுத்தவில்லை. கள்ளத் தோணிகள் வராமல் தடுப்பது பற்றி பேசிக் கொண்டே மனிதர்களை கடத்துபவர்கள், கடத்தி பணம் சேர்த்தவர்கட்காக அவர்கள் வாதிட்டனர்.

இத்தகைய மனிதக் கடத்தல் கள்ளத் தோணி உழைப்பில் தான் வல்வெட்டித்துறை கடத்தல் துறையில் நுழைந்தது, பிரபல்யமானது, செல்வம் தேடிக் கொண்டது. கடத்தலின் ஆரம்பம் இந்தியாவிலிருந்து தமிழர்களை தமிழர்களே கடத்தும் விற்பனை செய்யும் வியாபாரம் தான். இது சராசரி 1968, 1970 களில் உலகப் பொருளாதார நெருக்கடிகள்> டொலர் நாணய வீழ்ச்சி என்பன இலங்கையின் விலைவாசி உயர்வு பொருளாதாரவீழ்ச்சி என்பவற்றை ஊக்கப்படுத்தியது. வாழ்க்கைத்தரம் வீழ்ச்சி தவிர்க்க முடியாததாகியது. இந்த நிலைமையில் இலங்கைக்கான கள்ளத்தோணி வரவு வீழ்ச்சி காணத் தொடங்கியது. மனிதர்களை கடத்துவது பொருளாதார ரீதியாக பயன்பாட்டுடைய தொழிலாக இருக்கவில்லை. அதே சமயம் வல்வெட்டித்துறை தனது மரபான மீன்பிடித் தொழிலுக்கு திரும்ப செல்லவில்லை. மீன்பிடி பிராதன தொழில் என்ற கவர்ச்சியை முன்னிலையை அடையவில்லை. போதியளவு வருவாய் ஈட்டும் தொழிலாகவும் இருக்கவில்லை. எனவே வழக்கமான கடத்தல் கள்ளத் தோணி உழைப்பில் ஈடுபட்ட்வர்கள் வசதி படைத்தவர்கள் பொருட்கடத்தலில் ஈடுபடத் தொடங்கினர். வல்வெட்டித்துறை, திக்கம், சக்கோன், பருத்தித்துறை போன்ற இடங்களில் புதிய கடத்தல் மையங்கள் தீவிரமாய் உருவாகின. இதன் எதிரொலியாக அரசாங்கம் புதிய பொலிஸ் இராணுவ நிலையங்களை அமைத்தது. கடற்படைமுகாம்கள் திறக்கப்பட்டது. கள்ளக்கடத்தலைத் தடுக்கும் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. கள்ளக்கடத்தல்காரர்கள் இலங்கையிலிருந்து சாதிக்காய், கராம்பு, பாக்கு, பாதரசம், மருந்துகள், லக்ஸ்சோப், நைலோன் துணிகள், ரான்சிஸ்டர் ரேடியோ கொண்டு சென்றனர். இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் சேலை, சாரம் திருமணப்பட்டுப்புடவைகள், அபின், தங்கம், பருப்பு, மஞ்சள் என்பன கடத்தப்பட்டன. கடத்தப்படும் பொருட்கள் குடா நாட்டிற்குள் மட்டுமல்ல வன்னி முதல் கொழும்பு வரை கொண்டு செல்லப்பட்டது. 1970 ஆண்டுகளில் இலங்கையில் இடதுசாரிக் கூட்டரசாங்கம் ஏற்பட்டு உள்ளுர் விவசாய முயற்சிகளும் உற்பத்தியும் ஊக்கம் பெற்றது. சுயசார்ப்பு பொருளாதாரம் வளர்ந்தது. 1972 இல் இலங்கை அரசு அந்நியப்பொருட்கள் இறக்குமதி கட்டுப்பாட்டுக் கொள்கையை கொண்டு வந்தது. இதன் மூலம் உள்ளுர் தொழில்கள் குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி யடைந்தன. விவசாய முயற்சிகள், இளைஞர் குடியேற்றத்திட்டங்கள் பெருகின. இந்தியாவிலிருந்து இதுவரை இறக்குமதி செய்யப்பட்ட உழுந்து, பயறு, பருப்புவகைகள் என்பன வன்னி மற்றும் கிழக்கு பகுதிகளில் பெருமளவு உற்பத்தி செய்யப்பட்டது. கோவா, லீக்ஸ், கரட் உட்பட வெளிநாட்டு காய்கறி வகைகளும் உற்பத்தியாகி பெருமளவில் சந்தைக்கு வரத் தொடங்கியது. செத்தல் மிளகாய் உற்பத்தி புதிய வேகம் பெற்றது. செத்தல் மிளகாய் பயிர் செய்த பல விவசாயிகள் நிறைய இலாபம் பெறும்காலம் தொடங்கியது. இலங்கையில் கூட்டுறவுத்துறை வேகமாக வளர்ந்தது. யாழப்;பாண மாவட்டத்திலும் கூட்டுறவுச்சங்கங்கள் சிறப்பாய் வளர்ச்சி பெற்றன. சங்கானை பண்டத்தரிப்பு போன்ற ப.நோ.கூ சங்கங்கள் போட்டி போட்டுக் கொண்டு வளாந்ததுடன் வெளிநாட்டுத் துணிகளின் தரத்தை எட்டத்தக்க செயற்கை நூலிழையிலான துணிகளையும் தராளமாய் உற்பத்தி செய்தன. பண்டதரிப்பு ப.நோ.கூ சங்கம் 'பண்ட்கோப்' என்ற பெயரில் பலவித பொருட்களை உற்பத்தி செய்து விற்றது. கூட்டுறவுத்துறையில் உற்பத்திப் பொருட்கள் வெளிநாட்டு ஏற்றுமதி மட்டத்திற்கு சென்றன. பெருந்தொகையானவர்கள் இங்கு வேலை செய்தனர் வரலாற்றில் முதன் முறையாக யாழ்குடா பெருமளவு உற்பத்தியை செய்தது. விவசாயிகட்கு உற்பத்திப் பொருட்களுக்குரிய விலை கிடைத்தது. பலர் விவசாய முயற்சிகளில் ஊக்கத்துடன் ஈடுபட்டனர். படித்த வாலிபருக்கான முத்தையன்கட்டு போன்ற குடியேற்றத்திட்டங்கள் பெரும் தொகையான குடாநாட்டு இளைஞர்கள் ஊக்கத்துடன் குடியேறத் தொடங்கினர். நம்பிக்கையோடு விவசாய முயற்சிகளில் ஈடுபட்டனர்.

இந்தக் கட்டத்தில் தான் வல்வெட்டித்துறையில் மற்றும் வடக்கின் கடற்கரை சார்ந்த பிரதேசங்களில் கள்ளக்கடத்தல் விரைவாகப் பெருகி வளர்ந்தது. இவை இந்தியாவிலிருந்து பொருட்கள் கடத்தி வந்ததின் மூலம் இலங்கையில் முக்கியமாக தமிழ்மக்களது உள்ளுர் உற்பத்தி பெரும் பாதிப்புக்குள்ளானது. இந்தியாவின் வளர்ச்சியடைந்த ஆடை உற்பத்தியின் முன்பு உள்ளுர் உற்பத்தி பெரிதும் பாதிப்புக்குள்ளாகியது. முக்கியமாக இந்தியாவின் வளர்ச்சியடைந்த ஆடை உற்பத்தியுடன் துறையுடன் இலங்கையினதும் தமிழ் பகுதிகளதும் உற்பத்திக்கு போட்டிநிலைக்கு தள்ளப்பட்டது. கடத்திக் கொண்டு வரப்பட்ட இந்தியாசசாரங்களுடன் உள்ளுரில் தயாரிக்கப்பட்ட சாரங்களால் போட்டி நிலையில் நின்று பிடிக்க முடியவில்லை. உண்மையில் கள்ளக்கடத்தலானது நேரடியாக தமிழ் மக்களின் சுய பொருளாதார வளர்ச்சியை சேதப்படுத்தியது. இடதுசாரிக் கூட்டரசாங்கம் கள்ளக்கடத்தலை ஒழிக்க முயன்றது அதை தடுக்குமுகமாக இராணுவம் மற்றும் கடற்படைகளின் தொகைகளை அதிகரித்தது. கடற்கரைகளில் நீண்ட தூரம் கண்காணிக்க் கூடிய 'சேர்ச்லைற்' கள் முதன் முதலாக ஏற்படுத்தப்பட்டன. இவ்வாறாக வல்வெட்டித்துறையின் சட்ட விரோதப் பொருளாதாரத்தை கறுப்புச்சந்தை வட்டத்தை உடைக்க அரசு முயன்றது.

எனவேதான் கள்ளத்தோணியில் ஆட்களைக் கடத்துதல்> கள்ளக்கடத்தல் போன்றவற்றிற்கு எதிரான இலங்கை பொலிஸ், இராணுவம், கடற்படை என்பவற்றிற்கு எதிர்ப்புக்கு காட்டுவதிலே தான் மோதலில் ஈடுபடுவதில் தான் அரசு எதிர்ப்பு தொடங்குகிறது. வல்வெட்டித்துறை எனும் முழுக்கிராமுமே கள்ளக் கடத்தலுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏதேனும் ஒருவிதத்தில் தொடர்புடையதாக இருந்தது. இலாபம் மீட்டும் கிராமாக இருந்தது. இவர்கள் அரசபடைகளை சிங்களவர்கள் என்றே அழைத்தனர். இதனூடு சிங்களவர்கள் வல்வெட்டித்துறை மக்களை வாழவிடாமல் தடுப்பததான கருத்தியல் உருவாக்கப்பட்டது. வல்வெட்டித்துறையில் மட்டுமல்ல வசாவிளான், மாதகல், காங்கேசன்துறை, மயிலிட்டி, பருத்தித்துறை போன்ற கடத்தலோடு தொடர்புடைய இடங்களிலும் அரசபடைகட்கு எதிர்ப்பு இருந்தது. அரசபடைகளை எதிர்ப்பது என்பது இவர்களது பொதுப்பண்பாக இருந்தது. இது தமிழர், சிங்களவர் முரண்பாடாக பல இடங்களில் விளக்கமளிக்கப்பட்டது. வல்வெட்டித்துறை போன்று உரும்பிராயிலும் அரச எதிர்ப்பு இருந்தது. உரும்பிராயில் கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் கள்ளச்சாராயம் காய்ச்சுவது வழக்கமாக இருந்தது. வடபகுதியில் உரும்பிராய் கள்ளச்சாரயத்துக்குப் புகழ் பெற்றது. மக்களின் வாழ்வு இத் தொழிலுடன் பின்னப்பட்டு இருந்தது. விவசாயத்தைவிட இது அதிக வருவாயையும் சிரமம் குறைவான தொழிலாகவும் இருந்தமையால் பலர் இத்தொழிலுக்குப் போனார்கள். நல்ல சந்தையும் இருந்தமையால் இத் தொழில் பெருகியது. உரும்பிராய் சட்டவிரோத சாராய உற்பத்தியின் மையமாய் மாறியமையால் பொலிஸ் சோதனை, அடியுதை, லஞ்சம், கைது, சிறை என்பன அங்கு சாதாரணமாக இருந்தது. பொலிஸ் தொந்தரவு என்பது அங்கு ஒரு நிரந்தரமான ஒன்றாக இருந்தது. இதே நிலைமையே வல்வெட்டித்துறைப் பகுதியில் இன்னும் மூர்க்கமான நிலைமையில் இருந்தது. சட்டவிரோத பொருளாதாரம் சட்டவிரோத வாழ்வு என்பன அரசை எதிர்ப்பதைக் கட்டாய நிபந்தனையாக்கியது. அரசபடைகளை எதிர்க்கும் பண்பாக மாற்றமடைந்தது. இதை தமிழின உணர்வாக கற்பிப்பது அரசியல் சந்தர்ப்பவாதமாகும்.

இதையே புஸ்பராசா வல்வெட்டித்துறையை வீரத்தமிழன் விளைநிலம் என்று பாடம் புகட்டுகின்றார் கடத்தல் தொழிலானது கூட்டமாய் சேர்ந்து வாழும் பண்பை கூடி நிற்பதை கட்டாயமாக்கியது. அடிபிடியும் துணிச்சலும் சாகத்தன்மையும் கொண்ட வாழும் நிலைமைய படைத்தது. பொலிசை, இராணுவத்தை எதிர்த்து போரிட்ட, தப்பிவந்த, ஏமாற்றிய கதைகள் வீரக் கதையாகியது. வல்வெட்டித்துறையில் உள்ள செல்வந்தர்கள், முதலாளிகள் தமது வள்ளங்களை கடத்தலில் ஈடுபடுத்தினர். சொந்தமாயும் கூலிக்கும் ஆட்கள் வைத்து தொழில் செய்தனர். இவர்கள் மயிலிட்டி தக்கம், சக்கோட்டை, காரைநகார், பருத்தித்துறை, நெடுந்தீவு வரை ஆதிக்கம் செலுத்தினர். இவர்கள் இலங்கைக் கடற்கரைகளில் மட்டுமல்ல இந்திய தமிழ் நாட்டு கடற்கரைகளிலும் சுங்கப்பகுதி பொலிஸ் போன்றவை சார்ந்த ஆபத்துக்களை எதிர்நோக்கினர். இவர்களது கடத்தல் பொருட்கள் கொள்ளையிடப்படுவதும் அங்கு நடைபெற்றது. அபின், தங்கம், வெடி மருந்து பொருட்கள் போன்றவை சார்ந்த கடத்தல் சிரமமான ஆபத்தான நடவடிக்கையாக இருந்தது. இலங்கையில் இவர்கட்கு கார் சராதிகள், ஏஜண்டுகள், புறொக்கர்கள், தகவல் தருவோர், பொருள் தூக்குவோர், ஓட்டிகள் என்று பலர் இருந்தது போல தமிழ் நாட்டிலும் கடத்தல் சார்ந்த ஒரு வலைப்பின்னல் இயங்கியது. கடத்தல் ஈடுபட்டவர்கட்கு தமிழ் நாட்டில் பெண்கள், மனைவி, குழந்தைகள் கூட இருந்தனர். இலங்கை தமிழ் நாடு என்று இரண்டு பக்கமும் மனைவி, குழந்தைகளைக் கொண்டிருந்தவர்களும் இருந்தனர். உதாரணமாக TELO தங்கத்துரையின் மனைவி தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்; ஒரு தமிழ்நாட்டுப் பெண்ணுக்கும் வல்வெட்டித்துறை நபருக்கும் மகளாகப் பிறந்தவர். தங்கத்துரையின் தமக்கை வல்வெட்டித்துறையுடன் தொடர்புடைய ஒருவரையே தமிழ் நாட்டில் திருமணம் செய்திருந்தார்.

கள்ளகடத்தல்காரர்களிடையே போட்டியும் ஒருவரையொருவர் கடலில் கொள்ளையிடுவதும் சாதாரணமாக இருந்தது. வள்ளத்தின் ஓட்டியைக் கொன்று அல்லது ஓட்டிக்குப் பணம் கொடுத்து பொருட்களை அபகரிப்பது, சூறையாடுவது கள்ளக்கடத்தலுடன் ஒட்டிப் பிறந்த அம்சமாக இருந்தது. வல்வெட்டித்துறையில் மற்றவர்களின் கடத்தல் பொருட்களை கொள்ளையிடுவதை 'கோட்டா அடித்தல்' என்று கூறுவார்கள். கடத்தல் பொருட்களை படகுகளிலிருந்து இறக்கும் வேலைக்கு பள்ளிமாணவர்கள் கூடச் சென்று பணம் உழைப்பார்கள். இதை 'தூக்குக்குபோதல்' என்று சொல்லப்படும். கள்ளக்கடத்தல் மோசமான தொழிலாக இலங்கை மக்களது சுயபொருளாதார வாழ்வு முயற்சிக்கு எதிரானதாக கருதப்படவில்லை. வல்வெட்டித்துறையில் கள்ளக்கடத்தல் சிறப்பான தொழிலாக கருதப்பட்டது. இது ஒரு போதும் தவறான தொழிலாக எண்ணபட்டதில்லை. கடத்தல் சார்ந்த சட்டவிரோத வாழ்வை நியாப்படுத்தும் போக்குகள் உருவாகின. அதுவே வாழும் தர்மமும் ஆகியது. வன்முறைகள் பிரதான அம்சமாக இருந்தது. கத்தி, வாள், திருக்கைவாள், துவக்கு, குண்டு என்பவற்றுடன் ஒரு சட்டவிரோதப் பொருளாதாரம் வல்வெட்டித்துறை மக்கள் மயமாகியது. சட்டவிரோதமாய் குவிந்த பணம் - பெரும் செல்வம் - அயற்கிராமங்கள் மேல் செல்வாக்கு செலுத்தும் போக்காய் மாறியது.

கள்ளக்கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீன்பிடித்தொழிலை மிகவும் இழிவான தொழிலாகக் கருதினர். இவர்கள் மீன்பிடித்தொழிலி ஈடுபட்டிருந்தவர்களை மதிக்கவில்லை; பொருளாதார ரீதியாக இவர்கள் உயர்நிலையில் இருந்தனர்; கெளரவமாய் மதிக்கப்பட்டனர்; கடத்தல்காரர்களுக்கு பெண் கொடுக்க எடுக்க போட்டி இருந்தது; சாதாரண மீன்பிடித்தொழிலாளர்களுடன் கள்ளக்கடத்தல்காரர்கள் பழக மாட்டார்கள், கொடுக்கல் வாங்கல் செய்யமாட்டார்கள், அவர்களை சபை சந்திக்கு அழைக்க மாட்டார்கள். இவர்களின் பிள்ளைகள் உயர்கல்வி, அரசசேவைகள் ஆகியவற்றில் ஈடுபட்ட போதும் கள்ளக்கடத்தலுடனான தொடர்பும் மறுபுறம் நிலவியது. வல்வெட்டித்துறையில் இதனால் செல்வம் திரட்டியவர்கள் வல்வெட்டித்துறையில் மட்டுமல்ல பருத்தித்துறை உட்பட பல இடங்களில் காணிகள், வீடுகள், வியாபார தாபனங்களை கொண்டிருந்தனர். பெருந்தொகை பணம், போட்டி, அரசியல் செல்வாக்கு இவைகளினூடாக சாராயத்தவறணைக் குத்தகைகள் இவர்களால் எடுக்கப்பட்டது. அந்தக் காலத்தில் பெரும் காசுக்காரர்களே சாராயத்தவறணையைக் குத்தகைக்கு எடுக்கப் போட்டியிட்டனர். யாழ்ப்பாணத்தில் புடவைக்கடை முதல் நகைக்கடைகள் வரை இவர்கள் கொண்டிருந்தனர்.யாழ்ப்பாணத்தில் பரிய நகைக்கடையான வைரமாளிகை வல்வெட்டித்துறையைச் செர்ந்தவர்களுக்கு உரியதாகும். நீச்சல் வீரரான 'ஆழிக்குமரன் ஆனந்தனின்' தந்தையார் விவேகானந்தன் கள்ளக்கடத்தலோடு தொடர்புடையவரே. வல்வெட்டித்துறையின் கள்ளக்கடத்தல் முதலாளியான சுப்பரமணியம் என்பவர் 1960 களின் நடுப்பகுதியில் ' சுபசரணசப்தகித்த' என்ற சிங்கள சினிமா படத்தை தயாரித்தவர். வல்வெட்டித்துறை ' ரஞ்சனா' தியேட்டர் 'பக்கர்' என்ற பட்டப்பெயரை கொண்ட கள்ளக்கடத்தல் பணக்காரரால் தான் கட்டப்பட்டது.

வல்வெட்டித்துறையில் பொலிஸ், இராணுவம், கடற்படை மட்டும் வெறுக்கப்படவில்லை அயற்கிராமத்தவர்கள், அந்நியர்கள், கிராமத்திற்குப் புதிதாக வருபவர்கள் வல்வெட்டித்துறையில் இலேசாக நுழைந்துவிட முடியாது. வல்வெட்டித்துறைக்கு புதியவர்கள் கிட்டத்தட்ட முழுக்கிராமத்தாலும் கண்காணிக்கப்பட்டனர். கள்ளக்கடத்தலின் பின்பே வல்வெட்டித்துறை பயமூட்டும் கிராமமாக மாறியது. சூழவுள்ள கிராம மக்கள் கூட வல்வெட்டித்துறைக்கு போய் வர பயந்தனர். சிறிது சந்தேகம் ஏற்பட்டாலும் அடியுதை போட்டுக் கலைக்கப்பட்டு விடுவார்கள். வல்வெட்டித்துறையில் புதியவர் ஒருவர் தென்பட்டால் ஏன் வந்தாய்? எதுக்கு வந்தாய்? ஆரிட்டைப் போய்விட்டு வாறாய்? என விசாரணைகள் நடப்பது சாதாரண விடயம் அயற்கிராமங்கள் வல்வெட்டித்துறையாருடன் பகைக்கக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள். விளையாட்டுப் போட்டிகள், பந்து விளையாட்டு என்று வல்வெட்டித்துறைக்குப் போய் சாத்து வாங்கிக் கொண்டு வருவது மிகவும் சாதாரண விடயமாகும்.

கள்ளக்கடத்தல் தொழில்தான் முதல் முதலில் வல்வெட்டித்துறையில் காட்டிக் கொடுப்போர், துரோகி என்ற பட்டம் பதவிகளும் அவர்களை அடிப்பது, கொல்வது, கிராமத்தை விட்டுத் துரத்துவது என்பனவும் தொடங்கியது. 1970 களில் 'மண்டையன் கோபாலன்' என்பவர் கடத்தலை பொலிசுக்கு காட்டிக் கொடுத்தாய் சுட்டுக் கொல்லப்பட்டார். இப்படிக் காட்டிக் கொடுப்பவர் கொல்லப்படுவது அடிக்கடி நடந்த போதிலும் காட்டிக் கொடுப்பதும் திரும்பத் திரும்ப நடைபெற்றது. காட்டிக் கொடுப்பவர்கள் வல்வெட்டித்துறையின் விரோதிகளாக சிங்களவரின் ஆட்களாக வர்ணிக்கப்பட்ட போதும் இதை ஒழிக்க முடியவில்லை. காட்டிக்கொடுப்பவர்கள் பெரும்பாலும் ஏழைகளாக, தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களாக, பொருளாதார பலமற்றவர்களாக இருந்தனர். இவர்கள் காட்டிக்கொடுப்பதினை மிகவும் இரகசியமாகவே செய்து வந்தனர். காட்டிதருபவர்கட்கு பிடிபடும் கடத்தல் பொருளில் ஒரு பங்கும், பணமும் கிடைத்ததால் வாழ முடியாத ஏழைகள் அடிக்கடி பொலிசுக்கு தகவல் தருவோர்களாக செயற்பட்டனர். இன்ஸ்பெக்டர் குமாரை துரோகி என்று குட்டிமணி சுட்டுக் கொன்ற நிகழ்ச்சியானது, கள்ளக்கடத்தல் சார்ந்த வல்வெட்டித்துறை கிராமத்தின் துரோகி ஒழிப்பின் தொடர்ச்சி தான். இன்ஸ்பெக்டர் குமார் கோலையில் குட்டிமணிக்கு எதிராக கண்ணால் கண்டதைச் சாட்சி சொன்னவர் குட்டிமணியாற் கொல்லப்பட்டார். குட்டிமணியால் சுடப்பட்டவரை சார்ந்தவர்கள் அதன் பின்பு குட்டிமணியின் விரோதிகளாக மாறினர். கடும் எதிர்ப்பை அவர்கள் குட்டிமணிக்கு காட்டினர்.

இராணுவம், பொலிஸ் வல்வெட்டித்துறையில் வீடுகளில் திடீர் திடீரென புகுவது சோதனையிடுவது கிட்டதட்ட அன்றாட நிகழ்வாக இருந்தது. அடிக்கடி நடந்தது. எனவே அரசபடைகட்கு எதிரான உணர்வு தீவிரமாக இருந்தது. படையினர் சிங்களவர் என்று காட்டப்பட்டபோதும் வல்வெட்டித்துறைக்கடத்தல் பொருட்கள் தென்னிலங்கைக்கும் கொழும்பு வரை அனுப்பபட்டன. சிங்கள மக்களுக்கும் பொருட்கள் விற்கப்பட்டன என்பது முரண்பாடான உண்மையாகும.; சிங்கள மக்களிடையே கடத்தல் பொருட்கள் விற்கப்பட்டபோது தமிழ் சிங்கள முரண்பாடு இங்கு இயங்கவி;லை மாறாக கடத்தல் தொழில்சார்ந்த வியாபார நலன்களே இயங்கின. அதேசமயம் வல்வெட்டித்துறையில் பொலிஸ், இராணுவத்துடனான துவக்குசூடு, குண்டு எறிவது, ஜீப் எரிப்பது என்று தகராறுகள் நிலவின. எனினும் பெரும் கள்ளக்கடத்தல் முதலாளிகள் பொலிஸ், இராணுவத்திற்கு இலஞ்சம் கொடுத்து கடத்தலை நடத்தினர். உயர் பொலிஸ் இராணுவ அதிகாரிகட்கு தென்னிலங்கைக்கு அவர்களின் வீடு தேடிப் போய் பெரும் அன்பளிப்புக்கள், பணம் என்பன கொடுப்பதை இவர்கள் வாடிக்ககையாய் கொண்டிருந்தனர். பல சமயங்களில் பொது நிகழ்வுகள், பாடசாலை விளையாட்டுப்போட்டிகட்கு ஆயதப்படைகளின் உயர்அதிகாரிகள் பிரதம விருந்தினர்களாக அழைக்கும் பழக்கமும் அவர்களை வசப்படுத்தும் தந்திரங்களும் சமமாய் நடந்து வந்தன. லஞ்சம் வாங்காத அன்பளிப்புகட்கு மசியாத நேர்மையான பொலிஸ் அதிகாரிகள் பெட்டிசம் போட்டு அரசியல் செல்வாக்கு ஊடாகவும் வேறு இடங்கட்கு மாற்றப்பட்டனர்.

வல்வெட்டித்துறையில் நடக்கும் பிரச்சனைகட்கு பொலிஸ் நீதிமன்றங்களுக்கு செல்லாமல் தமக்குள் தீர்த்துக் கொள்ளும் வழக்கம் மூலம் கிராம ஒற்றுமை பேண முயற்சிக்கப்பட்டது. இக்கிராமமானது சட்டத்தை உடைப்பதையும்; நன்னெறிகளை மீறுவதாயும் வழக்காகக்கொண்டு இருந்தது. உழைப்பின் அருமை தெரியாத கடத்தல் தொழிலின் சொகுசில் உழைக்காமல் வாழ்பவர்களாக இவர்கள் இருந்தனர். கள்ளக்கடத்தலைச் சித்தரிக்கும் சிறுகதையொன்றை வெளியிட்டமைக்காக 'வீரகேசரி' பத்திரிகை ஒரு முறை வல்வெட்டித்துறையில் எரிக்கப்பட்டது. கள்ளக்கடத்தல் தமது உரிமையென்று வல்வெட்டித்துறையில் கருதப்பட்டது. கள்ளக்கடத்தல் வழக்குளில் கள்ளக்கடத்தல்காரர்களை பாதுகாக்க முதலில் தமிழ்காங்கிரஸ், பின்னர் தமிழரசுக்கட்சிச் சட்டத்தரணிகள் வழக்காடினார். இதன் பின்பே தமிழ்காங்கிரஸ், தமிழரசுக்கட்சி என்பன பலமடைந்தன. தமிழீழம் கோரிய தமிழர் கூட்டணியை உருவாக்க மூலகாரணமாக இந்த தமிழர் விடுதலைக்கூட்டணியினாரல் 'ஞானமூர்த்தியப்பா' என அழைக்கப்பட்ட ஞானமூர்த்தி வல்வெட்டித்துறையை சேர்ந்தவர் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

கள்ளக்கடத்தல் உருவாகு முன்பு சாதாரண மீனவக் கிராமமாக வல்வெட்டித்துறை இருந்த சமயத்தில் 1960 களில் திருப்பதி போன்ற கொம்யூனிஸ்டுகளே நகரசபைத் தலைவராக இருந்தனர். 1954 இல் கொம்யூனிஸ்ட்கட்சி தமது மாநாட்டை வல்வெட்டித்துறையில் நடத்தியது. அம் மாநாட்டில் தமிழ்மக்களின் இனப்பிரச்சனைக்கு 'பிரதேசசுயாட்சி' என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. இது வல்வெட்டித்துறை தீர்மானம் என்று அப்போது அறியப்பட்டது. பொன் கந்தையா இப்பகுதிகட்கு மிகப்பெரும் சேவைகளைச் செய்தவர். தனது தொகுதியில் இருந்த 15ற்கு மேற்பட்ட ஒடுக்கப்பட்ட சாதி மக்களின் பள்ளிகளை அரசபள்ளிகள் ஆக்கினார். ' தனிச்சிங்களச்சட்டம்' கொண்டு வரப்பட்ட போது பொன் கந்தையா ' நெருக்கடியிலிருந்து நெருக்கடிக்கு' என்ற தலைப்பில் பாராளுமன்றத்தில் புகழ் கொண்ட உரையை நிகழ்த்தினார். வல்வெட்டித்துறையில் மீன்பிடித்தொழிலாளர்களின் உழைப்பாளர்களின் கிராம இருந்தவரை கொம்யூனிஸ்டுகளே அங்கு செல்வாககுப் பெற்றிருந்தனர். கள்ளக்கடத்தல் கலாச்சாரம் வளர்ந்த பின்பே தமிழ்தேசியவாதக் கட்சிகள் அங்கு வேர்விட்டன. 1960 களின் நடுப்பகுதியில் தொண்டமானாற்றிலிருந்து பருத்தித்துறை நோக்கி வந்த கொம்யூனிஸ்ட்டுக்களின் மேதின ஊர்வலம் வல்வெட்டித்துறையில் வைத்து தமிழரசுக் காடையார்களால் அடித்துக் குழப்பட்டது. 1970 நடுப்பகுதியில் ' தொழிலாளர்பாதை' பத்திரிகையை விற்ற வல்வெட்டித்துறையை சேர்ந்த தோழர் ஒருவர் விற்ற பத்திரிகைகளை திரும்பவும் வீடுவீடாகச் சென்று பணத்தைக் கொடுத்துவிட்டு திருப்பி வாங்க வேண்டும் என்று கத்தியைக் காட்டி வெருட்டும் மட்டத்திற்கு தமிழீழவாதிகள் அரசியல் விகாரமடைந்து விட்டனர். இவ்வாறாக கள்ளக்கடத்தல் மூலம் சட்டவிரோதப் பொருளாதாரத்தின் மூலம் வளர்ந்த சக்திகள் இறுதியில் தமிழீழக் கோரிக்கையின் பிதாக்களாக மாறினார்கள். பொன் கந்தையா போன்றவர்கள் வளர்த்த இடதுசாரி அரசியல் கலாச்சாரம் இப் பகுதியில் அழியத் தொடங்கியது.

N.M பெரேரா இலங்கையின் பழைய ரூபாய் நோட்டுக்களை செல்லாதவைகளாக்கி, புதிய ரூபாய் நோட்டுக்களை புழக்கத்திற்கு கொண்டு வந்த போது கள்ளக்கடத்தல் செல்வந்தர்களின் சட்டவிரோதப்பணத்தை மாற்றுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இதனால் இவர்கள் இடதுசாரிகள் மேல் கடும் கோபமடைந்தனர், பலத்த இடதுசாரி எதிர்ப்பைத் தூண்டியது. வங்கிமுகாமையாளர்கட்கு இலஞ்சம் கொடுத்தும் ஏனைய செல்வாக்குகள் மூலம் பெரும் தொகை வல்வெட்டித்துறைக் கடத்தல் சக்திகளின் பணம் மாற்றப்பட்டது. பணம் மாற்ற செல்வந்தர்கள் ஆட்களை அமர்த்தி ஆயிரம் ரூபாயிற்கு நுhறு ரூபாய் என்ற அளவில் கூட பணம் மாற்றி தருபவர்கட்கு கூலி தரப்பட்டது. பொதுவாகவே மக்களுக்கு பணத்தை வங்கியில் போடும் பழக்கம் இருக்கவில்லை அவர்கள் தமது பணத்தை, தங்கத்தை இரகசியமாக பதுக்கி வைப்பதையே வழக்கமாய் கொண்டிருந்தனர். விவசாய சமூக வழக்கப்படி வட்டிக்கு விடுவது, காணிகள், வீடுகள் வாங்குவது, நகைகளை அடைவு பிடிப்பது என்ற பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

கனடாவில் உள்ள 'தாயகம்' இதழ் குட்டிமணியைக் கடத்தல்காரன் என்று எழுதியதையிட்டு புஸ்பராசா தமிழ்தேசியத்தின் பெயரால் கொதித்தெழுகின்றார். குட்டிமணி மட்டுமல்ல, தங்கத்துரை உட்பட TELO புலி இயக்கங்கள் கள்ளக்கடத்தல் பின்புலத்திலேயே தோற்றம் பெற்றன என்பது சகலருக்கும் பிரசித்தமான ஒன்று. குட்டிமணி கைது செய்யப்பட்ட போது கொடுத்த வாக்கு மூலத்தில் தான் கள்ளக்கடத்தலையே தொழிலாக வயிற்றுப்பிழைப்புக்காக செய்து வந்ததாகவும் வெடிமருந்துப் பொருட்கள் கடத்துவது ஏனைய பொருட்களைக் கடத்துவதை விட 4 மடங்கு இலாபம் கிடைத்தாயும் சிறையில் காசி ஆனந்தன், சேனாதிராசா போன்றவர்களை சந்தித்த பின்பே தமிழீழ இலட்சியத்துக்கு மாற்றமடைந்ததாயும் கூறியிருக்கிறார். தங்கத்துரை, குட்டிமணியின் தொழில் கூட்டாளியான சின்னஜோதி தனது கள்ளக்கடத்தல் தேவையையொட்டி குண்டு தயாரித்துக் கொண்டிருந்த போது தென்னை மரத்திலிருந்து தற்செயலாக குரும்பட்டி விழுந்து குண்டு வெடித்தபோது அச்சமயத்தில் அருகே நின்று விடுப்புப் பார்த்துக் கொண்டிருந்த பிரபாகரனுக்கு காலில் காயம் ஏற்பட்டது. கள்ளக்கடத்தல்காரர்கள் இத்தகைய சம்பவங்களின் போது இலங்கையில் மருத்துவம் பார்ப்பதில்லை. பொலிஸ் பிரச்சனை வருமென்பதாய் இந்தியா போய்த்தான் வைத்தியம் பார்ப்பது வழக்கமாக இருந்தது. இந்தச்சம்பவம் புலிகளால் பிற்காலத்தில் பிரபாகரன் குண்டு தயாரித்த போது அது வெடித்துக் காலில் காயம் ஏற்பட்டதாய் கதையெழுதப்பட்டது. அதனூடு பிரபாகரன் ' கரிகாலன்' புனைபெயரையும் சூடிக்கொண்டார். தங்கத்துரை, குட்டிமணி, சின்னஜோதி போன்றவர்களின் கடத்தல்தொழில் உதவியாளனாகவே பிரபாகரன் முதலில் செயற்பட்டார்.

மாவை சேனாதிராசா உட்பட பல கூட்டணி முக்கியமானவர்களுக்குக் கூட குட்டிமணி போன்றவர்கள் கடத்தல் பொருட்களை அன்பளிப்புச் செய்துள்ளனர். கூட்டணியினர் சகலரும் இவர்கள் கடத்தலோடு தொடர்புடையவர்கள் என்று தெளிவாக அறிந்திருந்தனர். அது வெளிப்படையான உண்மையாகவே இருந்தது. இங்கு புஸ்பராசா வலிந்து குட்டிமணியை பரிசுத்தமான மனிதனாக வளர்த்தெடுக்க முயற்சிக்கின்றார். குட்டிமணியின் சிங்கள இனவாதத்திற்கு எதிரான அம்சத்தை நாம் பாராட்டலாமே தவிர ஒட்டுமொத்தமாக குட்டிமணியை புனிதப்படுத்தும் முயற்சிகள் வரலாற்று நேர்மைக்கு குந்தகம் விளைவிப்பதாகும். குட்டிமணி, தங்கத்துரையுடன் இந்தியாவில் இருந்து படகில் இலங்கைக்கு வந்த போது மூட்டை மூட்டையாக அவர்கள் மஞ்சள் கடத்தி வந்த நிகழ்ச்சியை சிவகுமாரின் போராட்ட நண்பரான அளவெட்டி ஆனந்தகுமார் இப்போது நினைவு கூர்கின்றார். குட்டிமணி பெண்கள் விடயத்தில் மோசமாக நடந்து கொண்டவர் என்று குற்றச்சாட்டி, அவரது TELO இயக்கமே அவர் மேல் நடவடிக்கை எடுக்க முனைந்த காலங்கள் இருந்தன. புஸ்பராசா கனடா 'தாயகம்' இதழுக்கு எதிராக முறுகுவதைவிட்டு விட்டு, பிரபாகரன் குட்டிமணிக்கு செய்த துரோகங்களில் கவனம் கொண்டு பல விடயங்களை எழுதியிருக்கலாம். குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோர் இந்தியாவிற்கு வள்ளத்தில் போகவிருப்பது பிரபாகரனுக்கு மட்டுமே தெரியும். அப்படியிருக்க எப்படி அந்தத் தகவல் பொலிசாருக்கு சென்றது? ஜெர்மனிக்கு முன்பு ஒருமுறை வந்திருந்த TElO வின் தலைவர் சிறீ சபாரத்தினம், பிரபாகரனே தம் தலைவர்களை பொலிசுக்கு காட்டிக் கொடுத்தாய் தன் நண்பர்களோடு உரையாடும் போது தெரிவித்து இருந்தார். குட்டிமணி ஆட்கள் பிடிபட்ட போது மானிப்பாய் எம்பியாக இருந்த தர்மலிங்கம் அவர்கள், பொலிஸ் தலைமையகத்தில் உள்ள தமது நண்பர்கள் மூலம் ஒரு செய்தியை அறிந்து சொன்னார். அதாவது குட்டிமணி தங்கத்துரை இந்தியா புறப்படவுள்ளது பற்றிய தகவல் கிடைத்தே பொலிசார் சென்று அவர்களை பிடித்ததாய் உறுதியான தகவலைச் சொன்னார். குட்டிமணி தங்கத்துரை கைது செய்யப்பட்டு நான்கு முதல் ஐந்து பொலிசார் மட்டுமேயிருந்த வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்தனர். அப்போது குட்டிமணி, தங்கத்துரை அணியோடிருந்த பிரபாகரனிடம் போதிய ஆயுதங்கள் இருந்தன, ஆட்களும் இருந்தனர். அப்படியிருந்தும் தம்மோடிருந்த பிரபாகரன், வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திலிருந்து தம்மை மீட்க ஏன் முயலவில்லை என்று சிறையில் இருந்த போது குட்டிமணி பிரபாகரனை கேட்டுச் செய்தியனுப்பினார். இதற்கு பிரபாகரனிடமிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை என்று குட்டிமணி சிறையில் பலரிடம் சொல்லியுள்ளார். குட்டிமணி குறைந்தபட்சம் நண்பர்களுக்கு நேர்மையாக இருந்த மனிதர், பிரபாகரனை பல சமயங்களில் தன்னுடைய ஆள் என்று அடையாளம் காட்டிக் காப்பாற்றியவர். பிரபாகரனைக் கொல்வதற்கு மூன்று பேர் கொண்ட குழு ஒன்று திட்டமிட்டுள்ளதாய், தெல்லிப்பளை குணாளன் மூலமாக குட்டிமணி கேள்விப்பட்டு, பிரபாகரனைக் கொல்ல திட்மிட்டவர்களை சென்ற தானே சந்தித்து சொன்னார் "பொடியின்ர தலையில் ஒரு முடி போனாலும் உங்களைக் குடும்பத்துடன் அழித்து விடுவேன்". இந்த நிகழச்சியின் பின்பு, குட்டிமணி தங்கத்துரையைச் சந்தித்த பிரபாகரன் "தங்கண்ணா" "குட்டிமணியண்ணா" நீங்கள் இருந்தபடியால்தான் நான் இன்று உயிரோடு இருக்கிறேனென நன்றி சொன்ன செய்திகளும் உள்ளன என்பதுடன், அத்தகைய குட்டிமணியை இன்றைய 'தேசியத்தலைவர்' பொலிசுக்கு உளவு தந்து காட்டிக் கொடுத்த கதை இன்னமும் ஆழமாய் ஆராயப்பட வேண்டியதாகும். இதனை புஸ்பராசா செய்வாரா?

குட்டிமணியைப் பொலிசாருக்கு காட்டித்தந்தவர் பற்றி ஆராய புஸ்பராசா தன்னைச் செலவிடவில்லை ஏனனெனில் அவர் பல சமங்களில் தேசியதலைவருக்கு ஆத்திரம் மூட்ட விரும்பாத நல்ல பிள்ளையாக இருக்கவே விரும்புகின்றார். உமா மகேஸ்வரனை விட்டு பிரிந்து வெறும் கையுடன் பிரபாகரன் குட்டிமணியிடம் சரணடைந்தார். பின்பு அவர்கட்கு துரோகம் இழைத்தவர். தஙகத்துரை, குட்டிமணி பிடிபடுவதில் இவை முடிவடைந்தன. குட்டிமணியோடு பிரபாகரனுக்கு முரண்பாடுகள் இருந்தன. "பிரபாகரனை நம்பக் கூடாது" என்று குட்டிமணி தங்கத்துரையை ஒரு முறை எச்சரித்த போது " உவர் என்ன மயிரை புடுங்கிறதோ" என்று தங்கத்துரை பதிலளித்ததாய் அக்காலத்தில் ஆயதப் போராட்டத்துடன் தொடர்புடைய ஒருவர் குறிப்பிடுகிறார். குட்டிமணியால் காப்பாற்றப்பட்டவரே பின்பு " குட்டிமணியை சுடுவோம்" என்று சொல்லித்திரிந்தபோது "வளர்த்தகடா மார்பில் பாய்கிறது" " பரம்பரை எதிரியை விட பழகித் திரிந்த நண்பன் நச்சுடையவனாக இருக்கிறான்" என்று குட்டிமணி வருத்தப்பட்டார்.

குட்டிமணி தீவிர தமிழரசு ஆதரவாளர், தி.மு.க அனுதாபி. அண்ணாத்துரை மேல் பித்துக் கொண்டவர். அண்ணாத்துரை இறந்த போது தமிழ்நாட்டின் அரைவாசித் தமிழர்களும் இறந்ததிற்கு சமம் என்று கண்ணீர் விட்டவர். அவரது அரசியல், 'கங்கை கொண்ட தமிழன், கடாரம் வென்ற' தமிழர்களின் கதையாடல்களோடும், பொன்னியின்செல்வன், வேங்கையின்மைந்தன், கடல்புறா கதை இலக்கியங்களோடு வளர்ந்த தமிழ் தேசியத்தின் கீழ்மட்ட அரசியலைஉடையது. அவர் தனது சொந்த உடல் வலிமையையும், சுடும் கெட்டித்தனத்தையும் நம்பியவர். புஸ்பராசாவின் வல்வெட்டித்துறை மேலான உயர்வுகற்பிப்பு, ஏனைய தமிழ் பகுதிகளை விட தலைசிறந்தது என்ற எழுத்துப்போதனை "தேசியதலைவ" ருக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும், பிரபாகரனைக் கெளரவிப்பதற்கு ஒதுக்கப்பட்டதாகும். வல்வெட்டித்துறை விடுதலைக்கு அளப்பரிய தியாகம் புரிந்ததாய் புஸ்பராசா அடுக்கிச் செல்வதும் மிகையே. குட்டிமணி, தங்கத்துரை ஜெகன், பிரபாகரன், மாத்தையா, பேபி சுப்பிரமணியம், பண்டிதர் ரகு, குமாரப்பா, சின்னஜோதி போன்ற ஆரம்ப கால இயக்கவாதிகளின் பின்பு வல்வெட்டித்துறையில் இருந்து ஏனைய தமிழ் பகுதிகளை விட அதிகம் பேர் போராடச் சென்றார்கள் என்பது ஆதரமற்ற ஒன்று. 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் இங்கிருந்து போராட்டத்திற்கு சென்றவர்கள் கிட்டத்தட்ட இல்லை என்று கூறலாம். பொருளாதார வசதி படைத்தவர்கள் இந்தியா, கொழும்பு, வெளிநாடுகள் என்று குடிபெயர்ந்து விட்டனர். ஏழைகள் பெரும் பகுதியினர் ஏனைய கிராமங்கட்கு அகதிகளாக குடிபெயர்ந்தனர். வல்வெட்டித்துறையை விட வன்னி கிழக்கு மாகாண மக்கள் ஈழப்போராட்டத்திற்கு செய்த அர்ப்பணிப்புக்களும் தியாகங்களும் பெரியதாகும் ஆனால் யாழ்குடாநாட்டுப் பெருமையிலும், வல்வெட்டித்துறையின் மகிமைகளிலும் கட்டுண்டு புஸ்பராசா மற்றைய பிரதேசங்களை கண்ணெடுத்துப் பார்க்கத் தயாராய் இல்லை. வெறுமனே புலி இலக்கியங்ளை மீட்கின்றார். வல்வெட்டித்துறையிலேயே உள்ள ஏற்றத்தாழ்வுகளை புஸ்பராசா பேசவதில்லை. மீன்பிடித்தொழில் புரிந்து உழைப்பவர்களை கடத்தல் சக்திகள் அநாகரீகமாய் கருதியதையும், 'மக்குவா' என்று கேலியாய் அழைக்கப்படதையும் காணவில்லை.

அண்மையில் வல்வெட்டித்துறையின் புதல்வனான T.S. துரை என்பவர் எழுதிய 'ஒரு பூ' என்ற நாவல் வல்வெட்டித்துறை மண்ணின் பெருமையை தீட்டுவதுடன் ' இலங்கை அரசுக்கு வரி கொடாமல் கிளாச்சி செய்த ஊராக' வல்வெட்டித்துறையை காட்டுகின்றது. கடல் பற்றிய அவதானிப்பை இந்த நாவல் வெளியிட்ட போதும் வல்வெட்டித்துறை மண் பெருமையுள் புதையுண்டு போனது. இதேபோலவே தேசியத்தலைவரின் குடிமகனான புஸ்பராசாவும் கள்ளக்கடத்தல் ஏதோ வரிகொடா இயக்கம், சமுதாய கிளர்ச்சியின் வடிவம் என்று கட்டமைக்கின்றார். "வல்வெட்டித்துறை என்ற பெயரைக் கேட்டாலே மாத்தறையில் உள்ள சிங்களவனுக்கும் ஈரல்குலை நடுங்கும்" என்ற வெளிப்படையான சிங்கள வெறுப்பினையும் விரோதத்தினையும் உமிழ்கின்றனர். வல்வெட்டித்துறை கள்ளக்கடத்தல். அது சார்ந்த வன்முறைச் சமூகமாக உருவெடுத்தமைக்கான மூல காரணத்தை பேசாமல் கலாச்சார இழிவுகளை பண்பாடாக வீர எழுச்சியாக புனையக்கூடாது. வல்வெட்டித்துறை மக்களுக்கு கடல் தெரியும் கடலை அறிந்தவர்களாக, கடல்பாதை தெரிந்தமையால் இலங்கையில் சுட்டுவிட்டு இந்தியாவிற்கு ஓடத் தெரிந்தது. இலங்கையில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போராடிய என்.எம்.பெரோரே, கொல்வின், ஆர்.டி சில்வா என்போர் வல்வெட்டித்துறையினூடாகத்தான் இந்தியாவிற்குத் தப்பிப் போனார்கள். தமிழ்நாட்டுக் கொம்யூனிஸ்டான ஜீவா வல்வெட்டித்துறையினூடாகத்தான் திரும்பவும் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு சென்றார். இந்தக்கடல் சார்ந்தநிலை இயற்கையாக புவியில் ரீதியில் எற்பட்ட வாய்ப்பாக வல்வெட்டித்துறைக்கு இருந்தது. மாத்தளை விவசாயத்திற்கு ஏற்ற நிலவளமும், மீன்பிடிப்புக்கு கடல் வளமும் ஒன்று சேர இணையப் பெற்ற வளமான பூமியாகும். வல்வெட்டித்துறைக்கு ஏற்பட்ட பெருமை அதன் உயர் பண்பாட்டுப் பெருமையினால் அறிவியல் பண்பால் ஏற்பட்டதல்ல மாறாக கள்ளக்கடத்தல் அது சார்ந்த வன்முறையையும் பணம் பெருமைகளிலும் ஏற்பட்டதாகும். இத்தாலியில் நாப்போலி பிரதேசத்தில் மாபியா குழுக்கள் அதிகம் எனவே நாப்போலியில் வாழ்பவர்கட்கு ஏனைய இத்தாலிய பிரதேசத்தில் வாழ்பவர்கள் அஞ்சுவர் என்பது பெருமைக்குரிய விடயமல்ல. அவ்வண்ணமே வல்வெட்டித்துறை மேல் ஏற்பட்ட பயமும் அதன் உயர் மனித நடத்தைக்கு வழங்கப்பட்ட மரியாதையல்ல.

வல்வெட்டித்துறை சிறந்த ஓட்டிகளை பெற்றிருந்தமை அதன் கடல் சார்ந்த வாழ்வின் நிகழ்வாகும். தரையில் வாழ்ந்த மக்கள் எப்படித் தரையை அதன் பண்புகளை சிறப்பாக அறிவார்களோ, வல்வெட்டித்துறை மக்களும் கடல்சார்ந்த அறிவைக் கொண்டுடிருந்தனர். கடலோடு அதிக பிணைப்புடையவர்களாக இருந்தனர். பிரிட்டனில் சிறந்த கடலோடிகள் இருந்தமை, சிறந்த கப்பல்கள் கட்டப்பட்டமை அந்த நாட்டின் தனிமைப்பட்ட புவியல் நிலைமைகளின் தேவையாக இருந்தது. நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட கடல் வழியே ஏனைய நாடுகளின் தொடர்புக்கு விதிக்கப்பட்ட அந்த நாடு சிறந்த கடற்படையை பெற்றது. கடலாய்வுகளை நிகழ்த்தியது. நாடுகளை கைப்பற்ற நீண்ட தூரம் கடலில் பயணிக்க அனுபவ அறிவைத் தந்தது. பிரபாகரன் புலிகட்கு கடற்படையைத் தேடிக் கொண்டது, பழைய கள்ளக்கடத்தல் மற்றும் கடல் சார்ந்த வாழ்வின் குணாதிசயத்தினாலாகும். வல்வெட்டித்துறை ஏதோ நீக்கமற தமிழீழ விடுதலைத் தீயில் குளித்து நிற்பதாக புஸ்பராசாவின் எழுதுக்கள் எம்மை நம்ப வைக்க முயல்கின்றன. ஆனால் பிரபாகரன் ஒரு போதும் முன்பு வல்வெட்டித்துறையில் ஒழிப்பது தலைமறைவாக வாழ்வது கிடையாது. அந்தளவுக்கு எதிர்ப்பு இருந்தது. பொலிசுக்கோ, இராணுவத்திற்கோ தகவல் கொடுக்கும் நிலை நிலவியது. பிரபாகரன் வல்வெட்டித்துறைக்கு அயல் கிராமங்களான கெருடாவில், கம்பர்மலை போன்ற இடங்களிலேயே தலைமறைவாய் வாழ்வது வழக்கம் புலிகள் TELO இயக்கத்தை அழித்த போது குட்டிமணி, தங்கத்துரையினால் இயக்கத்தில் சேர்க்கப்பட்ட பல இளைஞர்களை வல்வெட்டித்துறையில் புலிகள் கொலை செய்தனர். இதன் பின்பு அங்கு தேசியதலைவருக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. ஒரு காலத்தில் குட்டிமணியை எதிர்த்து விட்டு பிரபாகரன் வாழ முடியாது என்று இருந்த வல்வெட்டித்துறையில் பிரபாகரன் அதிகாரம் பெற்றதும் வல்வெட்டித்துறையிலும் மனித வேட்டை நடத்தத் தவறவில்லை. 1987இல் புலிகள் வல்வெட்டித்துறையில் நடத்திய கூட்டமொன்றில் புலிகளால் கொலை செய்யப்பட்ட குருநாதபிள்ளை உலகராசாவின் மனைவி எழுந்து, தன் கணவனைக் கொன்றதற்காக பகிரங்கமாக நீதி கேட்டார். "என் கணவனுக்கு அவர் கருத்தை சொல்ல இடம் விட்டீர்களா? நீதவான், விசாரணைசெய்பவர், குற்றஞ்சாட்டுபவர், தீர்ப்புத் தருபவர் எல்லாம் நீங்கள்தான! ; என் பிள்ளைகட்கு கடைசியாக அவர் முகத்தை பார்க்க எனக்கு அவர் உடல் மீது விழுந்து அழ அவரின் உடலைத் தந்தீர்களா?" என்று கேட்டார். கூட்டத்தில் இருந்த கிட்டு பதில் சொல்லாது நையாண்டியாய் சிரித்தார். உடனே அப் பெண் " என்னையும் சுடடா.... அவர் போன இடத்திற்கே நானும் போகிறேன்" என்று பெருங்குரலெடுத்து அழுதாள். உடனே கிட்டு தனது உயர் பண்புக்கேற்ப " இந்த பற வேசையை கூட்டத்துக்குள்ளாலே இழுத்து எறியுங்கடா" என்று தன் வளர்ப்புகட்கு கட்டளையிட்டார். இதுதான் தேசியதலைவர் தனது பிறந்த மண்ணுக்கு தந்த உயர் கெளரவமாகும்.
"அவள் தாலியறுத்தவள் அவளை விடுங்கோ" என்று பழைய கூட்டணிப்பிரமுகர் ஒருவர் குறுக்கிட்டு அப்பெண்ணின் உயிரைக் காப்பாற்றினார். புலிகள் தமிழீழம் வந்தால் கள்ளக்கடத்தலை சட்டத்துக்கு உட்படாத தொழிலாக அனுமதிப்பார்களா? தமிழீழத்தின் தேசியத்தொழிலாக தேசியத்தலைவரால் விசேடமாக அனுமதிக்கப்படுமா? போர்காலத்தில் தமக்காகவும் வாழ்வதற்காகவும் பொருட்களை வவுனியாவில் இருந்து வன்னிக்குக் கடத்தியவர்களைக்கூட புலிகள் ஆமியின் கையாள், தேசத்துரோகி என்று மரணதண்டனை வழங்கிய சம்பவங்கள் உண்டு, அதை இலங்கை அரசு கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து புலிகட்கு வரிகொடாமல் செய்யும்; துணிகரமான செயலாக, பரட்சிகரமான கடத்தலாக புஸ்பராசா கூட ஒப்புக்கொள்ளமாட்டார். ஆனா புலிகள் இராணுவத்திற்கு இலஞ்சம் கொடுத்ததும் வேறுவழிகளிலும் லொறி லொறியாய் பொருட்களை கடத்தி மக்களுக்கு கொள்ளை விலையில் விற்றுச் சுரண்டினார்கள். புலிகளின் கள்ளக்கடத்தல் கலாச்சாரம் இன்னமும் வாழ்கிறது. சர்வதேசரீதியாக கப்பலின் மூலம் புலிகள் கடத்ததில் ஈடுபடுகின்றனர். சர்வதேச மாபியா வலைப்பின்னலில் கூடி வாழ்கின்றனர். தாய்லாந்து முதல் இத்தாலி வரை சர்வதேச மாபியாக்களின் குடும்ப அங்கத்தவர்களாக உள்ளனர். இந்திய மீனவர்களின் படகுகள் தமிழீழக்கடலில் ஊடுருவி மீன்பிடிப்பதாய் புலிகள் இந்திய மீனவர்களை சுடுகின்றார்கள், பிடிக்கின்றார்கள். இங்கெல்லாம் புலிகளின் கடல்சார்ந்த பொருளாதார நலன்களே செயற்படுகின்றன. இதை தமிழ் மக்களின் நலன்களாக ஒப்பனை செய்வது சொந்த மக்களையே மோசடி செய்வதை ஏற்று அங்கீகரிப்பதாகும். புலிகள் TELO அழிப்பின் பின்பு வல்வெட்டித்துறையில் 1986 இல் கள்ளக்கடத்தலை தடை செய்தனர் ஆனால் தாம் மட்டும் தொடர்ந்து கடத்தி வந்தனர். புலிகள் கஞ்சா கடத்தி விற்பதை முறையற்ற செயல் என்று தமிழர் இளைஞர் பேரவையைச் சேர்ந்த முன்னால் வல்வெட்டித்துறை நபர் ஒருவர் சொன்னபோது, புலியின் முக்கிய நபரான குமரப்பா எமக்கு காசு தேவையாக உள்ளது அதனால்தான் இதில் ஈடுபடுகிறோம் ஆனால் தமிழர்கட்கு விற்கமாட்டோம் சிங்கள பகுதிகட்கே விற்போம் என்று புரட்சிகரமான கள்ளக்கடத்தல் விளக்கம் தந்தார்.

தொடரும்..

5 comments:

Anonymous said...

what a great critic!

a Former PLOTE member

Anonymous said...

நான் சிறுவனாக இருந்த போது கள்ளத்தோணிகள் பற்றி கதையிருந்தது. அதனை பலகாலங்கள் சென்றது அதன் முழுமையான கதையை அறிந்து கொள்வதற்கு கள்ளத்தோணிகளின் மீதான சுரண்டல் தேசியத்தினால் மறைக்கப்பட்டது உண்மையே.

கச்சைதீவுக்கு செல்பவர்கள் மிக கெடுபிடிக்கு உள்ளாகியதும் இந்தக் காலத்திலேயே.

சாதிய நிலையில் இருந்தே கிட்டுவின் ஆலோசகாராக இருந்த மு. திருனாவுக்கரசு இன்றும் தமிழீழ ஆய்வாளாராக இருக்கின்றார்>

ஆய்வின் போது வர்க்க நிலை என்பது தீர்மானிக்கின்றது. அதன் நிலையில் இருந்தே அதன் உள்ளடக்கமும் இருக்கும்.

தாங்கள் குறிப்பிட்டது போன்று கடத்தல் தொழிலே இராணுவ எதிர்ப்பிற்கு வழிகோளியது.

Anonymous said...

கசப்பான மருந்து.குடித்தே ஆக வேண்டும.

திருவடியான் said...

தங்களின் விளக்கம் மிகத்தெ ளிவாக இருந்தது. பற்பல அறியா விடயங்களையெல்லாம் எடுத்துவைத்திருக்கிறீர்கள். நன்றி. வரலாறறிந்தோர் தாம் அறிந்தவற்றை தெரிந்தவற்றை உண்மைகளை கண்டிப்பாக பதிவு செய்தல் வேண்டும். பிற்பாடு வரும் சந்ததியினருக்கு இந்த உண்மைகள் தெரியாமல் அழிக்கப்பட்டு விடக்கூடும். ஆகவே தாங்கள் ஒரு வரலாற்று புத்தகம் எழுதவேண்டுமாய் இந்த வலைப்பூவின் வழி வேண்டுகோள் வைக்கின்றேன்.

திருவடியான் said...

தங்களின் விளக்கம் மிகத்தெ ளிவாக இருந்தது. பற்பல அறியா விடயங்களையெல்லாம் எடுத்துவைத்திருக்கிறீர்கள். நன்றி. வரலாறறிந்தோர் தாம் அறிந்தவற்றை தெரிந்தவற்றை உண்மைகளை கண்டிப்பாக பதிவு செய்தல் வேண்டும். பிற்பாடு வரும் சந்ததியினருக்கு இந்த உண்மைகள் தெரியாமல் அழிக்கப்பட்டு விடக்கூடும். ஆகவே தாங்கள் ஒரு வரலாற்று புத்தகம் எழுதவேண்டுமாய் இந்த வலைப்பூவின் வழி வேண்டுகோள் வைக்கின்றேன்.