-ராஜன் குறை
எதிர்வரும் செப்டம்பர் 10ம் தேதி ஓர் புதிய அறிவியல் பரிசோதனை தொடங்கவிருக்கிறது. அறிவியல் என்றால் மனிதன் எதையும் அறிந்துகொள்ளாமல் விடக்கூடாதுதானே. இந்த பிரபஞ்சம் ஒன்று இருக்கிறது! எல்லையில்லாமல்!அது எப்படி துவங்கியிருக்கும் என யோசிக்க வேண்டாமா? கடவுள் படைத்தார் என்றோ, அது தான்தோன்றி என்றோ சொல்லிவிட்டு போக முடியுமா? எண்பது ஆண்டுகளாக ஆற்றலைப் பற்றிய புரிதல் வளர்ந்ததையொட்டி, Big Bang Theory என்ற ஆதி வெடிப்பை பற்றிய கோட்பாடுகள் உருவாயின. இதை முழுதும் புரிந்துகொள்ள அணு ஆற்றல் பருப்பொருளாக மாறுவதன் மர்மத்தை அறிய வேண்டும். அப்போதுதான் அனைத்தையும் பற்றிய கோட்பாட்டை (Theory of Everything) உருவாக்கமுடியும்.
ஜெனிவாவிற்கு அருகே, பிரான்ஸ்-சுவிட்சர்லாந்து எல்லையில் பூமிக்கு 300 அடி ஆழத்தில் 27 கிலோமீட்டர் நீளமுள்ள சுரங்கத்தில் LHC (Large Hydron Collider) என்ற பிரம்மாண்டமான ஆய்வுக்கூடத்தில் அறிவியலின் அறியப்பட்ட எல்லைகளைக் கடக்கும் பரிசோதனை ஒன்று இன்னும் சில நாட்களில் செப்டம்பர் 10ம் தேதி தொடங்கவிருக்கிறது. இரு திசைகளிலிருந்து அணுக்கதிர்கள் அச்சுரங்கத்தினுள்ளே செலுத்தப்படப்போகின்றன. அவை சந்திக்கும்போது...?
(ரோபோ படத்திற்கான செட் இல்லை: இதுதான் LHC )
(1290 டன் எடையுள்ள 'அணுத்துகள்மானி'-சும்மா நான் வைக்கும் பெயர்- இத்துளையின் வழியாக 100 மீட்டர் இறக்கப்பட்டது. (இதுபோன்ற பிரம்மாண்ட தகவல்களை வலைத்தளங்களில் தவறாமல் படித்து மகிழுங்கள். Google இல் போய் Large Hydron Collider என்று போட்டால் போதும். CERN என்று போட்டால் இந்த அமைப்பு பற்றி மேலும் தகவல்கள் கிடைக்கும்) ஒருமுறை அல்ல, ஆயிரக்கணக்கான முறை அணுத்துகள்களை (particles) பல விதமான வேகங்களில், சூழல்களில் மோதவிடுவதுதான் இந்த ஆராய்ச்சி என புரிந்து கொள்கிறேன்.)
ஒரு ஆராய்ச்சி அல்ல; ஆறு பெயர்களில் பல ஆய்வுகள் அணுத்துகள் மோதல்களின் மூலம் நடத்தப்படப் போகின்றன. இதன் பலன்களுள் ஒன்று என்னவென்றால் ஆற்றலிலிருந்து பருப்பொருள் உருவாகக் காரணமாக இருக்கலாம் என கருத்தளவில் ஊகிக்கப்பட்டுள்ள ஹிக்ஸ் போஸான் (Higgs Boson) என்ற சமாச்சாரத்தைக் காட்டித்தரலாம் எனக் கூறப்படுகிறது. இதை கடவுள் துகள் (God Particle) எனக் குறிப்பிடுகின்றனர். ஹிக்ஸ் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்றாலும், அறிவியலாளர்களில் பலர் இறைவனை அணுக விழைபவர்கள். இத்திட்டத்தின் அறிவியலாளர் ஒருவர், Jos Engelen, “கடவுளுக்கு மிக அருகே மனிதன் செல்லப்போகும் தருணமிது” எனக்குறிப்பிட்டுள்ளார்.(கடவுள் துகள் உருவாகும் சாத்தியத்தை குறிக்கும் போலி நிகழ்வு “simulated event”)
இப்பிரபஞ்சம் எப்படி உருவாகியது என்பதை அணுகிச்சென்று புரிந்துகொள்வதே இப்பரிசோதனையின் நோக்கம். எதிலிருந்து என்றோ, எதனால் என்றோ அறிவியலால் கேட்க முடியுமா? எனவே கடவுளை நெருங்குவதாக நினைக்கிறார்கள் அறிவியலாளர்கள்.
அணுத்துகள் மோதும் பரிசோதனை புதியது அல்ல. அதன் பரிமாணங்கள் இம்முறை பிரம்மாண்டமாயிருக்கின்றன. Anti-matter எனப்படும் எதிர்பொருள் எப்படி இயங்குகிறது என்ற முக்கிய கேள்விக்கு பதில் தேடுகிறார்கள்.இந்த பரிசோதனைகள் எதைக்குறித்து என்று விளக்கும் விதமாக LHC அறிவியலாளர் ஒருவர் ஒரு ராப் பாடல் படம் எடுத்திருக்கிறார். விஞ்ஞானிகள் ஆடிப்பாடி விளக்கும் இந்த அற்புதமான பாடலை அவசியம் கேளுங்கள். நாளும் கோடிக்கணக்கானவர்கள் youtube இல் கேட்டு மகிழும் இதை நாமனைவரும் உடனே கேட்க வேண்டிய தேவையும் உரிமையும் கடமையும் இருக்கிறது. ஒருமுறை கேட்டுவிட்டு மேலே படியுங்கள். http://link.brightcove.com/services/link/bcpid1488655367/bclid1453516501/bctid1753815421
ஆனால் இந்த அறிவியலாளர்கள்களும் மற்ற துறையினர் போலத்தான். ஒருவர் செய்வதை மற்றவர் எதிர்ப்பது. LHC-ஐ எதிர்ப்பவர்கள் என்ன சொல்கிறார்கள்? LHC அணுத்துகள் மோதல்களில் கருந்துளைகள் உருவாகும் என்கிறார்கள். இந்த கருந்துளைகளுக்கு ஒரு கெட்ட பழக்கம். அது சில சமயம் உலகத்தையே அல்லது உலகங்கள் அடங்கிய பிரபஞ்சத்தையே விழுங்கிவிடும். (அதாவது பூமியின் சுற்று வட்டாரம் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.) இப்பரிசோதனையை நிறுத்தக்கோரி வழக்கு தொடர்ந்த ஒட்டோ ரோஸ்லர் என்ற ஜெர்மானிய பேராசிரியர் "ஒரு ஓடுகாலி கருந்துளை நான்கு ஆண்டுகளில் வளர்ந்து உலகை விழுங்கிவிடும்" என்கிறார்.
இதற்கு LHC நடத்துபவர்கள் என்ன சொல்கிறார்கள்? சிறிய கருந்துளைகள் நிறைய உருவாகும்; ஆனால் அவை உடனே அழிந்துவிடும் என்கிறார்கள். இயற்கையில் நடக்காதது எதையும் நாங்கள் செய்யவில்லை. ஆகவே உலகத்திற்கும் அதன் “உடனடி பிரபஞ்சத்திற்கும்” எதுவும் ஆபத்தில்லை என்கிறார்கள். (உடனடி பிரபஞ்சம் - இச்சொற்றொடர் என்னுடையது; கருந்துளை எவ்வளவு பெரிதாகும் எனத்தெளிவாகத் தெரியாததால்) வழக்குகளினடிப்படையில் தடையுத்திரவு எதுவும் பிறப்பிக்கிப்படவில்லை என்றாலும் மனிதயுரிமை அடிப்படையில் போடப்பட்டுள்ள வழக்கு விசாரணையில் இருக்கிறது. இவ்வழக்கு எழுப்பும் பிரச்சினை சுவாரசியமானது.
இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட அரசாங்கங்கள் CERN அமைப்பில் பார்வையாளர் தகுதி வகிக்கின்றன. ஐரோப்பிய அரசாங்கங்கள் இதன் உறுப்பினராக உள்ளன. இப்பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் உலக விஞ்ஞானிகள் பகிர்ந்துகொள்ள பிரம்மாண்டமான தகவல் பகிரும் ஆற்றல் கொண்ட GRID என்ற கணனி மற்றும் optical fibre தொடர்பமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்பரிசோதனை அறிவியலின் விளிம்பில் நிகழ்வதால் என்ன விளைவுகள் உருவாகும் என்பதை முற்றிலும் கணிக்க முடியாது என்பதை அறிவியலாளர்கள் ஒப்புக்கொள்கின்றனர். ஏதுமறியா மக்களின் உயிரை பணயம் வைத்து இப்பரிசோதனையை செய்ய இந்த அரசாங்கங்களுக்கும், அறிவியல் நிறுவனத்திற்கும் உரிமை இருக்கிறதா என இந்த வழக்கு கேட்கிறது.
உலகில் வெகுஜன இயக்கங்கள் எதுவும் இந்த பரிசோதனைக்கு இன்னும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை (குறைந்த பட்சம் வலைத்தளங்களில் இன்னும் நான் பார்க்கவில்லை) பெரும்பான்மையோருக்கு இன்னும் தகவலே தெரிந்திருக்காது. இந்நிலையில் மக்களின் ஒப்புதலை பெறாமல் இத்தகையை பரிசோதனைகளில் ஈடுபடுவது மனிதர்களின் அடிப்படை உயிர்வாழும் உரிமை மீறல் என்கிறது ஹவாயில் போடப்பட்டுள்ள வழக்கு.
மக்களின் ஒப்புதலை பெறலாம் என்று வைத்துக்கொண்டால்கூட, கூடவே அழியக்கூடிய விலங்கினங்கள், தாவரங்கள் இவற்றின் ஒப்புதலை எப்படிப் பெறுவது என்று ஒருவர் கேட்கலாம். எந்த அறத்தின் அடிப்படையில் இதுபோன்ற துணிகர செயல்களில் அனைத்துயிர்களும் ஈடுபடுத்தப்படுகின்றன? இதை ஹவாய் நீதிமன்றம் தீர்மானிக்க முடியுமா? இதுபோன்ற வழக்குகள் முடிவுக்கு வர பல்லாண்டுகள் ஆகும். இன்னும் சில நாட்களில் தொடங்கும் இப்பரிசோதனையும் பல்லாண்டுகள் நடக்கலாம். திடீரென்று ஒருநாள் பிரபஞ்சத்தைக் காணவில்லையென்றால் தேடாதீர்கள் என்று மட்டும் சொல்லத்தோன்றுகிறது. “இந்த எரியும் பிரபஞ்சம் என் தலையில் சுழல்கிறது; அதை எங்கே வைப்பது எனக்குப் புரியவில்லை” என்ற பிரக்ஞை பத்திரிகையில் படித்த சதிகுமார் என்ற பஞ்சாபிக் கவிஞரின் வரி நினைவுக்கு வருகிறது.
No comments:
Post a Comment