தீராநதி: ஒக்டோபர் - 2008
விமர்சனமற்ற முறையில் விடுதலைப் புலிகளை ஆதரிப்பது, அல்லது விடுதலைப் புலிகளை எதிர்ப்பது என்கிற வகையில் இலங்கை அரசையும்கூட ஆதரிக்கும் நிலையை எடுப்பது என்கிற இரு எதிரெதிர் நிலைப்பாடுகளுக்கிடையே ஈழப் பிரச்சினையில் நடுநிலையான ஒரு பார்வையைத் தொடர்ந்து பேணி வருபவர் எழுத்தாளர் ஷோபாசக்தி. சென்ற மாதத்தில் நான் பிரான்ஸ் சென்றிருந்தபோது ஈழப் போராட்டம் இன்றொரு தேக்கநிலையை எட்டியிருப்பது குறித்து அவரிடம் நானெடுத்த பேட்டி இது. இன்றைய தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளியாகிய ஷோபாசக்தியின் இக்கருத்துக்களை வேறும் நேர்காணலாகவன்றி உடன்பாட்டுடன் முன்வைக்கிறேன். பாரிசிலிருந்து சுமார் 800 கி.மி. தொலைவிலுள்ள Pau என்னும் நகரில் சென்ற ஆகஸ்ட் 3 அன்று பதிவு செய்யப்பட்டது இது.
-அ. மார்க்ஸ்
ஜூலை 83 இனப்படுகொலையின் 25-ம் நினைவு நாளை நீங்கள் எவ்விதமாக நினைவு கூர்கிறீர்கள்?
இன்றைக்கு மிகவும் துக்ககரமாகவும், வெட்கப்படக்கூடிய நிலையிலும் நமது முன்னாள் ஆயுதப் போராட்ட இயக்கங்களும், உதிரிகளாய் இருக்கும் முன்னாள் போராளிகளும் யூலைப் படுகொலைகள் இலங்கை அரசால் திட்டமிட்டுச் செய்யப்பட்டதல்ல என்றும், அங்கே நடந்தது இன அழிப்பு அல்லவென்றும் பிரச்சாரம் செய்யக்கூடிய நிலையை நாங்கள் பார்க்கிறோம். ஏதோ பாலும், தேனும் ஓடிக்கொண்டிருந்த ஒரு தேசத்தில் தமிழ் இளைஞர்கள், தமிழர்களின் உரிமைகளைக் கேட்டு ஆயுதம் தாங்கிய காரணத்தினாலேயே இலங்கை அரசு அப்படுகொலைகளை நிகழ்த்தியதென ஒரு சப்பைக் காரணம் சொல்லிக் கொண்டுள்ளனர். ஆனால், இலங்கை அரசால் மிகக் கவனமாகத் திட்டமிடப்பட்டு, தெற்குப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த தமிழர்களது வீடுகள், வியாபார நிறுவனங்கள் முதலானவை குறித்த தகவல்கள் துல்லியமாகத் தொகுக்கப்பட்டு, வெளிக்கடைச் சிறை ஆணையாளரை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு, மிக நிதானமாக, கட்டங்கட்டமாக இப்படுகொலைகளைச் செய்து முடித்தார்கள். ஆயிரக்கணக்கான உயிர்கள் கொல்லப்பட்ட அப்படுகொலை குறித்து இன்றுவரை ஒருவர் கூடச் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட்டதில்லை.
இத்தனை தியாகங்கள், உயிரிழப்புகள், புலப்பெயர்வுகளுக்குப் பின் இன்று ஈழப் போராட்டத்தில் ஏற்பட்டுள்ள தேக்கம் குறித்து என்ன கருதுகிறீர்கள்?
ஏற்கெனவே ஈழத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள், சாதி ஒழிப்புப் போராட்ட இயக்கங்கள் ஆகியவற்றால் உணர்வு பெற்றிருந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள்தான் இந்தப் படுகொலைகளைத் தொடர்ந்து தமிழர் தேசியப் போராட்டத்திற்குத் தலைமை ஏற்க வந்தனர்.
`சோஷலிசத் தமிழ் ஈழம்' என்பது அன்று அவர்களின் பிரதான முழக்கமாக இருந்தது. இதற்குப் புலிகளும்கூட விலக்கல்ல. முக்கியமாக இந்தப் பண்பு பல அறிவுஜீவிகளை, இளைஞர்களை ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாகத் திருப்பியது. ஆனால் போராட்டம் உக்கிரமடைந்த காலகட்டத்திலே, ஒரு பக்கம் போராட்டம் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, இன்னொரு பக்கம் இந்திய அரசுக்கு இந்த இளைஞர்கள் முழுமையாக அடிபணிந்தார்கள். ஒட்டுமொத்த இயக்கங்களின் ஆயுத பலத்தை மட்டுமல்லாமல், அவர்களின் போராட்ட நெறிகளையும் தீர்மானிக்கும் சக்திகளாக `ரோ' (Raw) அதிகாரிகளும், இந்திய ராஜதந்திரிகளும் விளங்கினர். ஆக போராட்டத்தைத் தொடங்கும்போதே இவர்கள் தாங்கள் வைத்திருந்த இடதுசாரி, சோஷலிசக் கருத்தாக்கங்களை ஒவ்வொன்றாகக் கைவிட்டுக்கொண்டே வந்தார்கள். எந்த முழக்கங்களால் பரவலாக இளைஞர்களிடமும், வெகு ஜனங்களிடமும் அவர்கள் செல்வாக்குப் பெற்றிருந்தார்களோ, அவை வெறும் வெற்று முழக்கங்களே என்பது எங்களுக்குப் புரியத் தொடங்கியது.
அனைத்துப் பெரிய இயக்கங்களுமே அப்பாவி மக்களைக் கொலை செய்தனர். எல்லோரும் எல்லோரையும் கொலை செய்தனர். சகோதர இயக்கங்களின் மீதும் படுகொலை நிகழ்த்தினார்கள். இந்தியாவின் கருணை, தங்கள் இயக்கத்தின் சொந்த வளர்ச்சி, இவற்றைத் தவிர மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்தோ, அங்கே நிலவிய சாதியச் சிக்கல்கள், தமிழ், முஸ்லிம் முரண்பாடு, வடகிழக்கு முரண்பாடு குறித்தோ இவர்கள் சிந்தித்தது கிடையாது. இடைவிடாது மாறிக்கொண்டுள்ள சர்வதேச அரசியலைக் கவனித்து அதற்கு ஏற்றவாறு அவர்களின் போராட்ட உத்திகளை வகுத்ததும் கிடையாது. குறிப்பாக புலிகள் இயக்கத்தினுடைய அதிஉச்சமான அராஜகங்களாலும், மாற்று அரசியல் சக்திகளை அவர்கள் துப்பாக்கி முனையில் ஒடுக்கியதாலும், விடுதலைப் புலிகளுக்கு அஞ்சி, தமக்கான பாதுகாப்பைத் தேடி மற்றைய இயக்கங்கள் இலங்கை அரசுக்கு அடிபணிந்ததாலும், அமைதிப்படை காலகட்டத்தில் அதை எதிர்கொள்வதற்காக இலங்கை அரசாங்கத்திடம் புலிகள் தஞ்சம் புகுந்ததாலும் போராட்டத்திலிருந்து மக்கள் அந்நியப்பட்டனர். தமிழ் மக்களைப் போராட்ட சக்திகளாகக் கருதாமல் வெறுமனே தங்களுக்குக் கப்பம் கட்டும் மந்தைகளாகவும் தமது இராணுவத்திற்குப் பிள்ளைகள் பெற்றுத் தருபவர்களாகவும் மட்டுமே புலிகள் ஆக்கி வைத்துள்ளனர்.
இன்றைய தமிழ் இளைஞர்களின் போராட்ட அரசியல் என்பது, சோஷலிசம், இடதுசாரித் தத்துவமல்ல. வேறெந்தத் தத்துவமும்கூட அவர்களுக்குக் கிடையாது. எல்லாவற்றிலுமே அரசியல் நீக்கம் செய்யப்பட்ட குட்டிக் குட்டி யுத்தப் பிரபுக்களின் வலிமைகளைப் பரிசோதிக்கும் களமாக இன்று அது மாற்றப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் அரசியல் வெளிகளில், தமிழ் மக்களுக்கு நீதியுடனான சமாதானத்தை வழங்குவதற்கு அருகதையுள்ள, விசுவாசமுள்ள எந்த ஒரு அரசியல் சக்தியும் இன்று கிடையாது. நாங்கள் ஒரு போராட்டத்தைத் தோற்றுவிட்டு நிற்கிறோம்.
இதிலிருந்து மீண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகள் ஏதும் தென்படுகின்றனவா?
யுத்தத்தின் மூலமே இப்பிரச்சினைக்குத் தீர்வு என்பதில் முன் எப்போதையும்விட இன்றைய அரசு உறுதியாக நிற்கிறது. அது அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் வெற்றிமேல் வெற்றிகளைக் குவித்துக்கொண்டுள்ளது. கிழக்கு முற்றுமுழுதாக இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது. வடக்கில் புலிகளிடம் எஞ்சியிருக்கும் சிறு நிலப் பகுதியும்கூட எந்த நேரமும் இலங்கை இராணுவத்தால் வெற்றி கொள்ளக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. தமிழீழம் நிராகரிக்கப்பட்டு `ஒற்றையாட்சி' என்பதை தமிழர்களின் பல்வேறு இயக்கங்கள், சக்திகள், அமைப்புகள் ஏற்றுக்கொள்கின்றன. கூர்ந்து அவதானித்தோமானால் விடுதலைப்புலிகள் உள்ளிட்டு எந்த இயக்கங்களும் நீண்டகாலமாகத் தமிழ் ஈழம் என்ற கோரிக்கையை முன் நிறுத்தவில்லை. இடைக்காலத் தன்னாட்சி நிர்வாகம் என்பதே பேச்சுவார்த்தைகளில் புலிகளின் கோரிக்கையாக இருந்தபோதும் அதையுங்கூட இலங்கை அரசு ஏற்கவில்லை. புலிகள் தொடர்ந்து ஏகப் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்திக் கொண்டுள்ளனர். வேறு யாரையும் பேச அழைக்கக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர். இலங்கை அரசும், அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அனுசரணையாக இருந்த நார்வே, ஜப்பான், ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா முதலான நாடுகளும் அதை ஏற்றுக்கொண்டன. இத்தனைக்குப் பின்னுங்கூட யுத்தத்தில் தமிழ் மக்கள் அனுபவிக்கும் அவலம் குறித்தோ, இந்த அர்த்தமற்ற போரை நிறுத்த வேண்டியதன் அவசியம் குறித்தோ, நிரந்தரமான சமாதானத் தீர்வை நோக்கி நாம் போகவேண்டிய அவசியம் குறித்தோ எந்தக் கரிசனையும் இல்லாமல், தங்களது இயக்கத்திற்கு அதிகாரங்களைப் பெற்றெடுப்பதிலேயும், இந்தப் பேச்சுவார்த்தையைப் பயன்படுத்தி மாற்று அரசியல் இயக்கங்களை ஒழித்துக்கட்டுவதிலேயும் மட்டுமே புலிகள் குறியாக இருந்தனர். போர் நிறுத்த காலத்தில் மட்டும் நானூறுக்கும் மேற்பட்ட மாற்று இயக்கங்களின் முக்கியஸ்தர்களைப் புலிகள் கொன்றொழித்துள்ளனர்.
அன்று நீங்கள் உரையில் குறிப்பிட்டதுபோல அரசாங்கம் இன்று யுத்தத்தை மட்டுமே நம்பியுள்ளது. அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டிற்கு புலிகள் தவிர்த்த மற்ற இயக்கங்கள் இராணுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஒத்துழைப்பு வழங்குகின்றனர்.
பேச்சுவார்த்தைகளில் புலிகள் மற்ற இயக்கத்தவரையும் அனுமதித்திருந்தால் இந்நிலை தவிர்க்கப்பட்டிருக்குமா?
அனுமதித்திருந்தாலுங்கூட இலங்கை அரசு எந்த அளவிற்கு யோக்கியமாக நடந்துகொள்ளும் எனச் சொல்ல இயலாது.
இதர அம்சங்களைப் பொறுத்தமட்டிலாவது புலிகள் பேச்சுவார்த்தைகளில் நேர்மையாக நடந்துகொள்கிறார்களா?
பேச்சுவார்த்தைகளில் அரசாங்கம் மட்டுமல்ல, புலிகளும் நேர்மையாகவும், உண்மையாகவும் இல்லை. அதனால்தான் பேச்சுவார்த்தைகள் தோல்வியிலேயே முடிந்தன. இருவருமே யுத்தத்தை விரும்புகின்றனர். யுத்தத்தின் மூலமாகவே இருவரும் தமது அதிகாரத்தையும், செல்வாக்கையும் நிலைநிறுத்திக் கொள்கின்றனர். இடையில் புகுந்து குட்டையைக் குழப்பும் அந்நிய வல்லாதிக்க சக்திகளையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அமைதிப் பேச்சுவார்த்தைகளில் மட்டுமல்லாமல், யுத்தத்தைத் தீர்மானிப்பதிலும் இவர்களுக்கு ஒரு பங்குள்ளது.
அந்நிய வல்லாதிக்க சக்திகள் என நீங்கள் எவற்றைக் குறிப்பிடுகிறீர்கள்?
இந்தியாவிற்கு முக்கியப் பங்குள்ளது. இலங்கையின் பல பகுதிகளில் இந்திய முதலாளிகள் முதலீடுகளைச் செய்து கொண்டுள்ளனர். உலக மகா போலீஸான அமெரிக்காவும், தன் பங்கைச் செவ்வனே ஆற்றுகிறது. குறிப்பாக இந்தியாவின் பொருளாதார நலன்கள் முக்கியமாக உள்ளது. இலங்கையில் அனல் மின் நிலையம் அமைக்க இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கையின் மிகப் பெரிய சீமெந்துத் தொழிற்சாலையை இன்று இந்திய முதலாளிகள் வாங்கியுள்ளனர். தவிரவும் நாடு முழுவதிலும் இந்திய முதலாளிகள் நிலங்களையும், சொத்துக்களையும் வாங்கிக் குவிக்கின்றனர். இதற்குச் சிறு எதிர்ப்பும்கூட இலங்கையில் கிடையாது.
இந்திய விஸ்தரிப்பு வாதத்தை மையமாக வைத்து இயங்கிய ஜே.வி.பி. இயக்கம் கூடவா எதிர்ப்புக் காட்டவில்லை?
இந்திய விஸ்தரிப்பை எதிர்த்துப் போராடிய ரோஹண விஜயவீரவின் ஜே.வி.பி.க்கும் இன்றைய ஜே.வி.பி.க்கும் நிறைய வேறுபாடு உண்டு. இன்று ஜே.வி.பி. அரசின் பங்காளியாக உள்ளது. இனவாதத்தைக் கக்குவதில் `ஹெல உருமைய' போன்ற இனவாதக் கட்சிகளுக்கு இணையாக இன்று அவர்கள் உள்ளனர். இலங்கை ஒரு இறையாண்மையுள்ள நாடு என்கிற கருத்து இருந்தால்தானே இந்திய விஸ்தரிப்பு வாதம் பற்றிய உணர்வு இருக்கும். ஆனால் இன்று ஜனாதிபதி உட்பட யாருக்கும் இலங்கை ஒரு இறையாண்மையுடைய நாடு என்கிற கருத்து கிடையாது. இந்தப் போரைச் சாக்காக வைத்து நாட்டில் பல பத்து வருடங்களாக நடைமுறையிலுள்ள அவசர நிலை தொடர்கிறது. இந்த அவசரகால நிலை உள்ளதாலேயே மக்கள் தங்கள் பிரச்சினைகளுக்காகப் போராட இயலாத நிலையுள்ளது. இதன் விளைவாகவே எந்த எதிர்ப்புமின்றி இந்தியா தனது விஸ்தரிப்பு நடவடிக்கைகளை நிறைவேற்றி வருகிறது.
நான் இங்கு வந்துள்ள சில நாட்களில் பல தரப்பட்ட ஈழத் தமிழர்களையும் சந்தித்துப் பேசும்போது கிழக்கு மக்கள், முஸ்லிம்கள், தலித்துகள் எனப் பல்வேறு பிரிவினரும் தமது தனித்துவத்தை வலியுறுத்துவதும், `ஈழத் தமிழர்' என்கிற ஒற்றை அடையாளத்திற்குள் தம்மை நிறுத்திக்கொள்ள விரும்பாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளதையும் உணர்கிறேன்...
உண்மைதான். ஆனால் இந்த நிலைமை எப்போதிலிருந்து தொடங்குகிறது என்பதைக் கவனிக்கவேண்டும். 90களுக்குப் பின்புதான் இது உருவாகிறது. நான் தொடக்கத்தில் சொன்னதுபோல இந்தப் போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் 'சோஷலிசத் தமிழ் ஈழம்' என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இன்றுள்ள சூழலில் அது வேடிக்கையாகத் தோன்றினாலுங்கூட, அன்று அது சாத்தியம் என்கிற நம்பிக்கை நான் உள்ளிட்ட பலருக்கும் இருந்தது. அதை ஒட்டியே பல தலித் இளைஞர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள், கிழக்கு மாகாணத்தினர் எல்லோரும் ஈழப் பேராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள நேர்ந்தது. நிகரகுவா போன்ற நாடுகளில் ஏற்பட்ட மாற்றங்களும் இத்தகைய அணி சேர்க்கைக்கு ஊக்குவிப்பாக அமைந்தது. ஆனால் போகப் போக ஈழப் போராட்டம் இந்த சோசலிசம் முதலான எல்லாவித அரசியல், தத்துவப் பார்வைகளையும் விட்டுவிட்டு, ஜனநாயக நடைமுறைகளையெல்லாம் ஒழித்துவிட்டு, சக இயக்கங்களையெல்லாம் அழித்துவிட்டு, முழுக்க முழுக்க யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட ஒரு ஆதிக்க, அதிகாரப் போராட்டமாக மாறத் தொடங்கியது. இதன் விளைவுதான் இன்று தலித்களும், கிழக்கு மாகாணத்தினரும் தமது தனித்துவத்தை வலியுறுத்தி, தமிழ் ஈழக் கோரிக்கையிலிருந்து விலகி மட்டுமல்ல, அதற்கு எதிராகவும் நிற்க வைத்துவிட்டது. ஆனால் அதே நேரத்தில் உலக அளவில் பல விடுதலைப் போராட்டங்கள் இந்த வேறுபாடுகளைக் கணக்கிலெடுத்துக்கொண்டு செயல்பட்டதால் இன்று முன்னோக்கி நகர்ந்துள்ளன. நேபாளம் ஒரு நல்ல உதாரணம்.
`தலித் சமூக மேம்பாடு முன்னணி' என்னும் அமைப்பைத் தோழர்கள் தேவதாசன், நாதன் முதலியோர் முன் முயற்சி எடுத்து உருவாக்கியுள்ளனர். பாரிசிலும், லண்டனிலும் இரு மாநாடுகளும் நடைபெற்றுள்ளன. இதுகுறித்துக் கொஞ்சம் சொல்லுங்கள்.
சாதி ஒழிப்புப் போராட்டத்திற்கு ஈழத்தில் ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி உண்டு. குறிப்பாக 60களின் இறுதியிலும் 70களின் தொடக்கத்திலும் சாதி ஒழிப்புப் போராளிகள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைச் சாதித்தார்கள். முன்னைவிட இப்போது ஈழத்தில் சாதிப் பிரச்சினை சற்றுத் தளர்வாக உள்ளதென்றால் அதை ஏற்படுத்திய பெருமை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியையும், தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தையும், உலகளாவிய மாற்றங்களையும்தான் சாருமேயொழிய தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு இதில் எந்தப் பங்குமில்லை. டானியல் சொன்னது போல அடிமையும், எஜமானனும் ஒன்றிணைந்து, ஒரு சேரக் கலந்து தமிழ் ஈழத்தைக் கட்டுவது சாத்தியமில்லை. ஆனால் அதைத்தான் தேசிய இயக்கங்கள் முயன்றன. தமிழ்த் தேசியவாத அலையில் `தமிழர் ஒற்றுமை' என்கிற முழக்கமே சாதி எதிர்ப்புப் போராட்டங்கள் நீர்த்துப் போவதற்குக் காரணமாயின. சாதி ஒழிப்புப் போராட்ட அமைப்புகள், தமிழ் ஈழப் போராளிகளால் துப்பாக்கி முனையில் மௌனமாக்கப்பட்டன. முப்பது வருட காலமாகக் கவிந்த இந்த மௌனத்தை முதன்முதலாக இன்று `தலித் சமூக மேம்பாட்டு முன்னணி' கலைத்துள்ளது. 'புதிய ஜனநாயகக் கட்சி' போன்ற அமைப்புக்கள் சாதி ஒழிப்பைத் தொடர்ந்து பேசி வந்துங்கூட, சாதியம் குறித்த அவர்களது பார்வைகள் மரபு மார்க்சீயத்தைத் தாண்டமுடியாமல் இன்றுவரை தேங்கிப்போயுள்ளன. ஆனால் இன்று இந்தியாவிலும், தமிழகத்திலும் தலித்தியம் குறித்துப் பல சிந்தனைப் போக்குகள் உருவாகியுள்ளன. தீண்டாமை மற்றும் சாதியத்தை வெறுமனே நிலப்பிரபுத்துவத்தின் ஓரங்கமாகப் பார்க்காமல், அதை இந்து மதத்துடன் தொடர்ப்படுத்தியும், இந்து மதத்தை ஒழிக்காமல் தீண்டாமையை ஒழிக்க முடியாது என்பது போலவும் அங்கே பார்வைகள் உருவாகியுள்ளன. தலித்துகளின் தனித்துவம், அவர்களுக்குத் தனித்துவமான கட்சி ஆகியன பற்றியும் இன்று பேசவேண்டிய நிலை அங்கு ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றங்களையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்ட வகையிலேயே த.ச.மே. முன்னணி, மற்றைய இதற்கு முந்திய சாதி ஒழிப்பு இயக்கங்களிலிருந்து வேறுபட்டு நிற்கிறது. இந்த அடிப்படையின்கீழ் இன்று த.ச.மே. முன்னணித் தோழர்கள் ஒரு உரையாடலை உருவாக்கியுள்ளனர். இது ஒரு முக்கியமான மாற்றம் என்பதில் ஐயமில்லை. ஈழ தேசியப் போராட்டத்தின் ஆரம்பத்தில் `ரவுடிகள்' என அடையாளங்காட்டப்பட்டுப் பல தலித் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் உண்மையில் தத்தம் பகுதிகளில் தலித் மக்களைத் தீண்டாமைக் கொடுமைகளிலிருந்து பாதுகாத்தவர்களாகவுமிருந்தது குறிப்பிடத்தக்கது. யாழ் பொது நூலகத் திறப்பு விழா, தலித் மேயரான செல்லன் கந்தையனின் தலைமையில் நடக்கக்கூடாது என்பதற்காகவே பல்வேறு சாக்குப் போக்குகளையும் சொல்லி தடுத்து நிறுத்தப்பட்டது. அதேபோல வரலாற்றிலேயே முதன்முறையாக யாழ்ப்பாணத்தின் பாரம்பரியமிக்க யாழ் மத்திய கல்லூரிக்கு ராஜதுரை என்கிற தலித் ஒருவர் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டதிலிருந்து அவர் சாதி ரீதியாகப் பல்வேறு பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. இறுதியில் 2005-ல் அவர் கொல்லவும்பட்டார். எல்லோரும் இந்தக் கொலையை ஒரு ஜனநாயக விரோதச் செயலாக மட்டுமே பார்த்து, இதற்குப் பின்னாலிருந்த சாதியக் காரணங்களைக் கண்டுகொள்ள மறுத்தனர். த.ச.மே. முன்னணி மட்டுமே நான் இப்போது குறிப்பிட்ட இந்தப் பிரச்சினைகளிலெல்லாம் பின்புலமாக இருந்த சாதியக் காரணங்களை அடையாளம் காட்டியது. இன்று புதிய ஜனநாயகக் கட்சியெல்லாம்கூட இந்த நோக்கிலிருந்து பேசவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வகையில்தான் த.ச.மே. முன்னணியின் முக்கியத்துவத்தை நாம் வரையறுக்கவேண்டி இருக்கிறது. ஐரோப்பாவிலிருந்துகொண்டு இதைச் செய்வதிலுள்ள எல்லைகள், வரம்புகள் ஒரு பக்கம் இருந்தபோதிலும் இன்று இதன்மூலம் உருவாகியுள்ள உரையாடல் குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டிலுள்ள தலித் இயக்கங்களிடமிருந்து போதிய ஆதரவு இம் முயற்சிக்குக் கிட்டியுள்ளதா?
த.ச.மே. முன்னணி ஒரு இளம் அமைப்பு. புதிதாக உருவாகியுள்ள ஒன்று. இன்றும் இப்படியொரு இயக்கம் உருவாகியுள்ள செய்தி உலக அளவில் பரவலாகவில்லை. எங்களாலும் விரிவாகத் தமிழகம் தழுவிய அளவில் கொண்டு செல்ல இயலவில்லை. இப்படி ஒரு அமைப்பு உருவாகியுள்ளதும், அது தலித் மாநாடுகளை நடத்தி வருவதும், தமிழ்ச் சிறு பத்திரிகை சார்ந்த ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்துள்ள நிலையுள்ளது. இது ஒரு காரணமென்றபோதிலும் இன்னொரு முக்கிய காரணத்தையும் நாம் மறந்துவிட இயலாது. இன்று தமிழக தலித்களின் முக்கிய பிரதிநிதியாக உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முழுக்க முழுக்க விடுதலைப்புலிகள் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. புலிகளை ஆதரிப்பது அவர்களது உரிமை அல்லது அரசியல் என நாம் ஏற்றுக்கொண்ட போதிலும், ஒரு தலித் கட்சி என்கிற வகையில் அது அங்குள்ள சாதி, தீண்டாமைப் பிரச்சினைகளைக் கண்டுகொள்ளாதிருப்பதும், ஈழத்தில் சாதிப் பிரச்சினை விடுதலைப்புலிகளுக்குப் பின் ஒழிந்துவிட்டது என்பது போன்ற கருத்துக்களைத் தமது மவுனத்தின் மூலம் ஆதரிப்பதும் விடுதலைச் சிறுத்தைகளுடனும், அவற்றின் தலைவர் திருமாவளவனிடமும் ஒரு உரையாடலை ஏற்படுத்துவதை இதுவரை சாத்தியமில்லாமற் செய்துவிட்டது. தேசிய விடுதலைப் போராட்டத்தினூடாக இன்று சாதிப் பிரச்சினை சற்றே குறைந்துள்ளது எனக் கருதுகிறவர்களுங்கூட, இன்று அங்கு சாதிப் பிரச்சினையே இல்லை எனச் சொல்வதில்லை.
ஆனால் விடுதலைச் சிறுத்தைகளோ அங்கே சாதிப் பிரச்சினையே இல்லை என்பது போல பேசுவது மற்றும் இணங்குவதன் மூலமும், முஸ்லிம் மக்களுக்கும், கிழக்கு மாகாணத்தினருக்கும் விடுதலைப் புலிகள் செய்துவிட்ட துரோகத்தைக் கண்டுகொள்ளாமல் இருப்பதன் மூலமும் தலித் மக்களுக்குத் துரோகமிழைக்கின்றனர். இதுகுறித்து `தேனி' இணையதளத்தில், கிழக்கு மாகாணத்தினரின் தனித்துவத்தை வற்புறுத்தி இயங்குபவரும் `எக்ஸில்' இதழாசிரியருமான எம்.ஆர். ஸ்ராலின் திருமாவளவனுக்கு எழுதிய திறந்த மடல் குறிப்பிடத்தக்கது. எனினும் ஒரு முக்கிய தலித் கட்சி என்கிற வகையில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புடன் ஒரு உரையாடலுக்கு த.ச.மே. முன்னணித் தோழர்கள் தயாராகவே உள்ளனர்.
இன்று கிழக்கிலுள்ள நிலைமை குறித்து சற்று விரிவாகச் சொல்லுங்கள்.
விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிந்து வந்த இரண்டு நாட்களில், இங்கே ஒரு வானொலி நிலையத்தில் அது குறித்த ஒரு உரையாடல் நடைபெற்றது. கோவை நந்தன், தேவதாஸன் கலந்துகொண்ட அந்த உரையாடலில் நான் தொலைபேசி மூலம் என் கருத்துக்களைச் சொன்னேன்.
"பிரிந்து வந்தவுடன், கிழக்கு மாகாணத்தினர் தொடர்ந்து புறக்கணிப்புச் செய்யப்படுவது, கிழக்கின் சுயாட்சி பற்றியெல்லாம் கருணா பேசியது வரவேற்கத்தக்கதுதான் என்ற போதிலும், இந்தப் பேச்சு ஒரு தவறான மனிதரின் வாயிலிருந்து வருகிறது'' என நான் அன்று சொன்னேன். பிரபாகரன் ஒரு 'ஹிட்லர்' என்றால் கருணா ஒரு 'முஸோலினி' என்றும் சொன்னேன். தொடர்ந்து அவரது செயற்பாடுகளும், பேச்சுக்களும் அதை நிரூபித்தன. கிழக்கின் சுயாட்சி பற்றியவை தவிர அவரது மற்ற பேச்சுக்கள் எல்லாம் கிட்டத்தட்ட புலிகளைப் போலவே இருந்தன. ஆள் கடத்தல், கொலை செய்தல் இவை எல்லாம் தொடர்ந்தன. இராணுவத்துடன் சேர்ந்து செயல்படும் நிலையும் இருந்தது. இந்நிலையில், சர்வதேச அழுத்தத்தின் காரணமாக கிழக்கு மாகாணத்தில் தேர்தல் ஒன்றையும் அரசு நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டது. அந்தத் தேர்தலில் `தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு' தவிர மற்றெல்லா அரசியல் கட்சிகளும் பங்குகொண்டன. தேர்தலும் பெரிய அராஜகங்களின்றி நடைபெற்றது. அரசுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்ட சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) முதலமைச்சரானார்.
தொடர்ந்து இன்று கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றங்கள் குறிப்பிடத்தக்கவை. முதலில், பல ஆண்டுகளுக்குப் பின் முதன்முதலாக அங்கே போர் ஒழிந்து மக்கள் அமைதியாக உள்ளனர். கொலைகள், ஆட்கடத்தல்கள் எல்லாம் வெகுவாகக் குறைந்துள்ளன. குறிப்பாக ஏராளமான குழந்தைகள் கடத்திச் செல்லப்பட்டு, போர்முனையில் நிறுத்திக்கொல்லப்படும் அவலம் நின்றுவிட்டது.
தவிரவும் இன்று கிழக்குப் பகுதியில் முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும் இடையில் பல நல்ல, முக்கியமான ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன. நாங்கள் ஏற்கெனவே நிறைய இழந்துவிட்டோம். போரில் களைத்துப் போய்விட்டோம். ஏராளமான விலையைக் கொடுத்துவிட்டோம். "பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம்" என்றெல்லாம் கோஷம் போட எங்களுக்குச் சக்தியில்லை. ஆயுதக் கலாச்சாரத்தைக் கைவிட்டு, அனைவருமே ஜனநாயக அரசியல் நெறிகளுக்குத் திரும்பவேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வற்புறுத்துகின்றோம். இலங்கை அரசியலிலே கிட்டிய ஒரு அண்மை உதாரணம் ஜே.வி.பி. கடுமையான ஆயுதப் போராட்டத்தை மேற்கொண்ட ஜே.வி.பி. இன்றுள்ள அரசியல் சூழலில் அதைக் கைவிட்டு ஜனநாயகப் பாதைக்குத் திரும்பியுள்ளது. ஆயுதப் போராட்டத்தை நடத்தும்போது மக்களிடம் எந்த அளவு ஆதரவு பெற்றிருந்ததோ, அதைக் காட்டிலும் பலமடங்கு ஆதரவைப் பெற்றதோடு, இலங்கை அரசாங்கத்திலும் பங்கெடுத்துள்ளனர்.
நாளை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், ஆயுதக் கலாச்சாரத்தைக் கைவிட்டு, ஜனநாயகப் பாதைக்குத் திரும்பி, தேர்தலில் நின்றாரானால் அதைவிட மகிழ்ச்சிகரமான செய்தி தமிழ் மக்களுக்கு இருக்கமுடியாது. அதை நாங்கள் வரவேற்கிறோம். அந்த அடிப்படையிலேயே இன்று `தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்' (TMVP) தேர்தல் அரசியலுக்குத் திரும்பியதை நாங்கள் வரவேற்கிறோம். இதனுடைய அர்த்தம் சிவனேசதுரை சந்திகாந்தன் இலங்கை அரசாங்கத்தின் ஆதரவாளர் இல்லை என்பதோ, அவர் ஒரு நீதிதேவன் என்பதோ அல்ல. அவரது அரசியல் நெறிகள் மீது நமக்குக் கடும் விமர்சனம் எப்போதும் உண்டு.
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் முதலீடுகளை வரவேற்போம் எனக் கருணா இரண்டு நாட்களுக்கு முன் சொல்லியிருப்பது ரொம்பவும் ஆபத்தானது, கண்டிக்கத்தக்கது. இந்த விமர்சனங்களுக்கப்பால் அவர்கள் ஒரு ஜனநாயக எல்லைக்குள் நின்று தம் அரசியலைச் செய்வது வரவேற்கத்தக்கதுதான்.
துக்ககரமான வேடிக்கை என்னவென்றால் ஈ.பி.ஆர்.எல்.எப், பிளாட், ஈ.பி.டி.பி., டெலோ முதலிய அமைப்புகளெல்லாம் தேர்தல் பாதைக்குத் திரும்பியபோது மகிழ்ந்து வரவேற்ற யாழ் அறிவுஜீவிகளும், ஜனநாயகத்தைப் பேசுபவர்களும் இன்று சந்திரகாந்தன் தேர்தல் பாதைக்குத் திரும்பியதை அங்கீகரிக்க மறுப்பதுதான். தமிழ் மக்களின் முக்கிய அறிவுஜீவிகளாகவும், சிந்தனைப் பிரதிகளாகவும் உள்ள இவர்களே இதை மறுப்பது ஒன்றே கிழக்கு மாகாணத்தின் சுயாட்சி உரிமைக்கு நிரூபணமாகிறது.
No comments:
Post a Comment