- ராஜன் குறை
அண்டம் கிடுகிடுக்கிறது; ஆகாசம் நடுநடுங்குகிறது. "மூவுலகையும் ஒரு குடை நிழலில்" ஆளும் அமெரிக்காவின் பொருளாதாரம் பெரும் நெருக்கடிக்கு உள்ளாயிருக்கிறது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் ஆட்சியாளர்கள் தொலைக்காட்சியில் தோன்றி தேச மக்களிடம் நெருக்கடி, நெருக்கடி என்று அரற்றுகின்றனர். ஐஸ்லாந்து நாடே திவாலாகிவிடும் போலிருக்கிறது. "நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே" என்று திருவாளையாடல் படத்தில் பாடும் சிவனைப்போல, உலக பொருளாதாரம் அமெரிக்க பொருளாதாரத்துடன் பிணைக்கப்பட்டுள்ளதால், உலகில் யாரும் பாதிப்பிலிருந்து தப்பமுடியாது என்கின்றனர் பொருளாதார வல்லுனர்கள். உலக வங்கித் தலைவரும் முதலீடுகள் குறையுமென்பதால் உலக பொருளாதாரம் தேக்கமடையும் என்கிறார். அரை வயிற்றுக்கும், கால் வயிற்றுக்கும் என்ன பெரிய வித்தியாசம் என வாழும் உலகின் பெரும்பான்மை மக்களுக்கு இதெல்லாம் நகைச்சுவைதான் என்றாலும், அவர்களைக் குறித்தும், தங்களைக் குறித்தும் அக்கறைப்படும் சிந்தனையாளர்கள், வரலாற்றுவாதிகள் என்னதான் நடக்கிறது இங்கே என்று கேட்காமலிருக்க முடியாது.
பதினேழாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் மூன்று முக்கிய போக்குகள் கூர்மையைடந்தன. "மக்களாட்சி" எனப்படும் புதிய அரசியலமைப்பு, அறிவியல் - தொழில்நுட்ப அணுகுமுறை, முதலீட்டிய சந்தை பொருளாதாரம். இவை மூன்றும் சேர்ந்து செய்த அறிவிப்பு: "வளர்ச்சி, வளர்ச்சி, அனைவருக்கும் வளர்ச்சி, எல்லையற்ற வளர்ச்சி" என்பது. அதனடிப்படையில் பிறந்தது வரலாற்றுவாதம். "வேகம், வேகம், போவோம் தூரம் மாஜிக் ஜர்னி" என்பது இதன் பாடல். இதற்கு தத்துவப் பரிமாணமளிக்க ஒரு கூட்டமே இயங்கியது. சிறந்த தத்துவ அறிஞர்களிடம் விமர்சனங்கள் பரிமளித்தாலும், அவர்கள் தத்துவம் பயணத்தை சீரமைக்க எத்தனித்தாலும் அவர்கள் காலத்தின் கைதிகளாகவே சிந்தித்தனர்; அதற்கு நீட்சே மட்டுமே விதிவிலக்கு என்று தோன்றுகிறது. பொதுவாக நவீன சிந்தனையில் எதுவும் தேங்கவும் கூடாது, நிற்கவும் கூடாது. வரலாறு என்பது ஓயாமல் நேர்கோட்டில் பயணிப்பது. ஆன்மீக ரீதியாக விடுதலைக்கு பதில் சுதந்திரத்தை முன்னிறுத்துவது. இதன் மையத்தில் எழுந்த மர்ம அடையாளமே நவீன "மனிதன்." (இச்சிந்தனைகளின் ஆண்சார்பை முன்னிட்டு ஆண்பால் விகுதியை பயன்படுத்துகிறேன்.) இந்தப் பிண்ணனியை மனதில் கொள்ள வேண்டும் முதலில்.
இன்றைய "நெருக்கடிக்கு" வருவோம். அமெரிக்காவிற்கு ஏன் பொருளாதார நெருக்கடி? மாதம் மும்மாரி பொழியவில்லையா? வானம் பொய்த்துவிட்டதா? நோய்க்கிருமிகள் பரவி மக்களும், மாக்களும் மடிந்தனரா? இயற்கை சீற்றமா? அல்லது பத்தொன்பதாம்/இருபதாம் நூற்றாண்டு போல தொழிலாளர் வேலை நிறுத்தமா? மக்கள் புரட்சியா? பின் லாடன் போன்ற எதிரிகளின் தாக்குதலா? அதெல்லாம் ஒன்றுமில்லை தோழர்களே. அமெரிக்காவில் ஒரு வீதி. அதன் பெயர் வால் ஸ்டிரீட். அங்கு பங்கு சந்தை மற்றும் நிதி முதலீட்டியத்தை (Finance Capital) செயல்படுத்தும் நிறுவனங்கள் உள்ளன. அந்த வீதியின் பெயர் அத்தகு நிறுவனங்களுக்கான ஆகுபெயராக செயல்படுகிறது. வால் ஸ்டிரீட் நிதி நிறுவனங்கள் தோற்றுவித்த நெருக்கடிதான் இது. அவை எப்படி இந்த நெருக்கடியை தோற்றுவித்தன என்பதையும், பொதுவாக எப்படி இயங்குகின்றன என்பதையும் குறித்த சிறு குறிப்புகளை எனக்குப் புரிந்தவரையில் விவாத நோக்கில் கீழே தருகிறேன்.
முதலீட்டு வங்கிகளுக்கு தங்கள் செயல்பாடுகளின் பரிமாணத்தை தொடர்ந்து விரிவாக்க வேண்டிய நிர்ப்பந்தம். இந்த CEO என்ற ஒரு இனம் இருக்கிறது. கடவுள், அரசர் என்பதுபோல ஒன்று அது. தலைமை செயல் நிர்வாகி என்று பொருள். நாம் சீயீவோ என்று அழைக்கலாம். அந்த வங்கிகளுக்கும் சீயீவோ உண்டு. அவர்களிடம் "நீங்கள் எப்படியாவது இந்த வங்கியின் சொத்து மதிப்பை அதிகம் செய்யுங்கள். உங்களுக்கு அதில் நல்ல கமிஷன் உண்டு" என அந்த வங்கியின் பங்குதாரர்கள் சொல்கின்றனர். அவர் ஒரு முடிவெடுக்கிறார். நிறைய கடன் தர வேண்டும். ஏனென்றால் வசூல் ஆக வேண்டிய கடன்களென்றால் நிறைய வட்டி - இலாபம் என்று பொருள். இந்த கடன்களுக்கு மதிப்பு உண்டு. அவற்றை விற்கலாம்.
அதாவது நான் உங்களுக்கு ஐந்து வருடத்தில் ஐயாயிரம் ரூபாய் தர வேண்டும் என்று வையுங்கள். அதற்கு வட்டி மூவாயிரம் ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். உங்களிடம் இன்று ஐந்து வருடம் கழித்து எட்டாயிரம் பெறக்கூடிய பத்திரம் இருக்கிறது. நீங்கள் அதை ஆறாயிரம் ருபாய்க்கு உடனே விற்கலாம். (வாங்குபவருக்கு மீத வட்டி இரண்டாயிரம் கிடைக்குமல்லவா) ஐயாயிரம் கொடுத்தீர்கள். உடனே ஆயிரம் ரூபாய் இலாபம். அடுத்த மனிதருக்கு ஆறாயிரம் ருபாய் கடன் கொடுக்கலாம். அந்த பத்திரத்தை 7,200 க்கு விற்கலாம். இப்படியாக தொடர்ந்து கடன் கொடுப்பதன் மூலம் சொத்தை அதிகரிக்கலாம். கடன் வாங்கியவர் திருப்பித்தராவிட்டால் நட்டமடையாமலிருக்க அக்கடன் பத்திரங்களை காப்பீடு (இன்ஷ்யூர்) செய்து கொள்ளலாம்.
இதில் ஒரு சிக்கல். ஒரு வங்கி கடன் தருவதற்கு, கடன் பெறும் நபருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் பற்றி விதிமுறைகள் இருக்கின்றன. அவருக்கு திருப்பிக் கொடுக்குமளவு வருமானம் இருக்கிறதா போன்றவை. இதிலிருந்து தப்பிக்க சீயீவோ என்ன செய்தார்? அவர் ஒரு கடன் வழங்கு நிறுவனத்தை தனியாக தோற்றுவித்தார். அந்த நிறுவனத்திற்கும் சீயீவோ உண்டு. அவர் வேலையுமில்லாத, வருமானமுமில்லாத பீட்டரிடம் சென்றார். "பீட்டர், பீட்டர் உனக்கு ஐந்து இலட்சம் விலையுள்ள வீடு வேண்டுமா? நான் வாங்கித் தருகிறேன்" என்றார். பீட்டர் நான் எப்படி தவணை கட்டுவேன் என்று கேட்டார். அதற்கு சீயீவோ சொன்னார். "நாங்கள் நிறைய பேருக்கு கடன் தருவதால், வீடுகளின் விலைமதிப்பு அதிகரிக்கும். உன் வீடு ஒரு வருடத்தில் ஆறு இலட்சமாகி விடும். அப்போது நீ அதன் மீது கடன் வாங்கலாம். வாங்கி தவணையை கட்டலாம்." பீட்டருக்கு ஒரே சந்தோஷம். இருக்காதா பின்னே? கடன் நிறுவன சீயிவோ, அவரிடமிருந்த பத்திரத்தை வாங்கும் வங்கி சீயீவோ, காப்பீடு சீயீவோ எல்லோருக்கும் சந்தோஷம். எல்லோருக்கும் இலாபம், வியாபாரப் பெருக்கம், கமிஷன். உதாரணத்திற்கு, ஒர் கடன் நிறுவன சீயீவோவின் வருமானம், அதிகமில்லை, ஒரு மணி நேரத்திற்கு சுமார் எட்டு இலட்சம் இந்திய ரூபாய். நம்ப முடியவில்லையா? எனக்கும்தான்.
(பார்க்க: http://www.nytimes.com/2008/09/18/opinion/18kristof.html )
இப்படியாக தொடர்ந்து கடன் தர, தொடர்ந்து வீட்டின் மதிப்பு அதிகரிக்க ஒரே பொருளாதார வளர்ச்சி. திடீரென்று வீட்டின் விலை ஏற மறுக்கிறது. பீட்டர் தவணை கட்டவில்லை. கடன் பத்திரங்கள் மதிப்பிழக்கின்றன. கடன் நிறுவனம் மூழ்கிப்போகிறது. வங்கி, காப்பீடு நிறுவனம் எல்லாம் தவிக்கின்றன. இதுதான் நெருக்கடி.
கடந்த இரண்டாண்டுகளில் கடன் கட்ட முடியாமல் அமெரிக்காவில் பத்து இலட்சம் பேர் வீடுகளை இழந்தனர். அடுத்த ஆண்டு இன்னம் பத்து இலட்சம் பேர் வீடுகளை இழக்கப் போகின்றனர். கற்பிதமாக உருவாக்கப்பட்ட மதிப்பீட்டு மண்டலம் சரிவதால் பெரும் வர்த்தக நெருக்கடி உருவாகிறது. வங்கிகளின் மீதுள்ள நம்பிக்கையே முதலீட்டியத்தின் அடிப்படை. அதுவே எதிர்கால மதிப்பை இன்றைய மதிப்பாக்குகிறது. "இன்று கடன், நாளை ரொக்கம் (இடையில் வட்டி)" என்பதே முதலீட்டியத்தின் தாரக மந்திரம். உருண்டோடிடும் பணம் காசுகள் ஆங்காங்கே உறைந்து நிற்கின்றன. பங்குச் சந்தை பரிமாற்றங்கள் ஓய்கின்றன. கடன் வசதியின்றி உற்பத்தியும், வர்த்தகமும் சுருங்குவதால் வேலை வாய்ப்புகள் குறைந்து வறுமை எங்கும் அதிகரிக்கும் எனலாம். இதையே தேக்கம் (recession) அல்லது மந்தநிலை (depression) என்கின்றனர். இது எவ்வளவு முற்றும் எப்படி சரியாகும் என்பது குறித்து "பொருள்" ஆதார நிபுணர்கள் விவாதிக்கின்றனர்.
இந்த இடத்தில் நாம் இந்த பொருள்-ஆதாரம் எப்படி செயல்படுகிறது எனக் கவனிக்க வேண்டும். எதிர்காலத்தில் வரக்கூடிய இலாபத்தை கணக்கிட்டு அதை இன்றைய மதிப்பாக மாற்றி வர்த்தகம் செய்வது. பங்குகள் என்பதே அப்படித்தான் என்றால், பங்குகளின் மீது ஒப்பந்தங்கள் போடப்பட்டு அந்த ஒப்பந்தங்களை விற்பது அடுத்த கட்டம். கடன்களை விற்பது பற்றி பார்த்தோம். மிகச்சிக்கலான மதிப்பீடு வலைப்பின்னல் உருவாக்கப்படுகிறது. காலத்தில் முன்னோக்கிப் பாய்ந்து நாளைய தினத்தை இன்றே நுகர்வதான தோற்றம் வருகிறது. மாசக்கடைசியில் ஆயிரம் ரூபாய் சம்பளம் வருமென்றால் அதனடிப்படையில் இருபதாம் தேதியே ஐயாயிரம் ரூபாய் கடன் வாங்குபவர்களை பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? அதை நிறுவனமயப்படுத்திதான் கிரெடிட் கார்டுகள் தோன்றின. உழைப்பிலிருந்து துண்டிக்கப்பட்டு கடனே, நுகர்வே அடிப்படை மதிப்பாகிறது. இது எந்த அளவு என்றால் பொருளாதாரத்தை மேம்படுத்த அமெரிக்க ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விடுத்த அறைகூவல்: "சாமான்களை வாங்கிக் குவியுங்கள்" என்பது. தேவை நுகரும் உடல்கள்; உழைக்கும் கரங்களல்ல.
எதிர்கால மதிப்பை எப்படி கணக்கிடுவது? சந்தை நிலவரங்களை எப்படி கோட்பாடாக்குவது என்று பொருளாதாரம் என்ற சிந்தனைத்துறை யோசித்த போது அது இயற்பியலிலிருந்தே தன் மாதிரிகளைப் பெற்றது. அறிவியல் கணித்ததை பின்பற்ற, பொருளாதாரம் அறிவியலைப் பின்பற்றியது. கணிதம் என்பது மானுட சிந்தனையின் தர்க்கத்தின் வடிவம். அதை இயல்பெருவெளிக்கு பொருத்துவது இயற்பியல். அது பல நியதியாக்கங்களை கணித விதிகளின் அடிப்படையில் செய்கிறது. சந்தையில் மதிப்புகள் அடையும் மாற்றத்தை கணிக்க அந்த இயற்பியல் நியதியாக்கங்களை பின்பற்றுகிறது பொருளாதாரம். "ஈயத்தைக்கண்டு இளித்ததாம் பித்தளை" என்று ஒரு சொலவடை உண்டு. இந்த தொடர்புகளை பற்றி நுட்பமான விமர்சனங்களை எழுப்பி வருபவர் பிலிப் மிரோவ்ஸ்கி. அவரது நூலின் முன்னுரையொன்றை இந்த வலை விலாசத்தில் பார்க்கலாம்.
http://www.nd.edu/~pmirowsk/pdf/Effortless_Economy_Intro.pdf
புரூனோ லதூர், அவர் நண்பர்களின் சிந்தனைகளுடன், மிரோவ்ஸ்கியின் சிந்தனைகளை இணைத்துப் பார்த்தால் நம் சமகால உலகின் கற்பிதங்களின் வலைப்பின்னல் புரியும். நமது சாமிகளும், பூசாரிகளும், ஜோசியக்காரர்களும் வெகுளிகள் என்று தோன்றும்.
சூதாட்டத்தையே நிறுவனமாக்கி, தேசிய வாழ்வின், உலகளாவிய மானுட பயணத்தின் அடிப்படையாக மாற்றிவிட்ட இந்த சூனியக்காரர்களுக்கு முன்னால் பாவம் வேப்பிலை மந்திரவாதிகள் என்ன செய்யமுடியும்? அமெரிக்கா என்ற அவலம் மானுட தார்மீக வீழ்ச்சியை நிறுவனமாக்கியதில் முன்னின்றது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இன்றையை நெருக்கடி எப்படியோ சரி செய்யப்படலாம். சொப்பன வாழ்வில் மகிழ்ந்து அற்பப் பணப் பேய் பிடித்து அறிவிழப்பதையே மனித நாகரிகம் என்று சாதிக்கும் அமெரிக்க அவலம் என்று மாறும் என்று சொல்ல முடியாது. அதற்கு கொடுக்க வேண்டிய விலை, ஜேம்ஸ் ஹான்சன் எச்சரிப்பதுபோல, ஒட்டுமொத்த மானுட அழிவாக இருக்கலாம். ( http://www.columbia.edu/~jeh1/ )
No comments:
Post a Comment