மானுட வரலாற்று நிலையும், தமிழில் சமூக அறிதலும் குறித்த குறிப்புகள்
- ராஜன் குறை
பகுதி 1: அமெரிக்கா, நவம்பர் 2008.
நவம்பர் 4 ஆம் தேதி, அமெரிக்காவில் வரலாறு தன் முகத்தை மீண்டும் காட்டியது. ஒருபுறம், கடவுளைக் கண்டது போல வரலாற்றுவாதிகள் மகிழ்ந்தனர். இன்னொரு புறம், நள்ளிரவில் நியூயார்க் நகர வீதிகளில் மக்கள் ஆடிப்பாடினார்கள். ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் மகிழ்ச்சி யாரையும் நெகிழச் செய்வதாய் இருந்தது. மனிதர்களாகவே நடத்தாத, ஓட்டுப் போடும் உரிமைக்காக போராட வைத்த அமெரிக்க நிறவெறி, ஒரு கறுப்புத் தோல் மனிதரை நாட்டின் அதிபராக அனுமதிக்க நேர்ந்ததை எப்படிக் கொண்டாடாமல், நெகிழாமல் இருக்க முடியும்? எங்கும் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் கண் கலங்குவதையும், அழுவதையும் பார்க்க முடிந்தது. அவர்களது நினைவுகளின் சுமை அத்தகையது. வரலாற்றுவாதிகளுக்கோ இரண்டுவிதமான மகிழ்ச்சி. ஒன்று, மானுட வரலாற்றை தலைமையேற்று வழிநடத்தும் அமெரிக்கா தனது அவமானகரமான கடந்த காலத்திற்கு பரிகாரம் செய்துவிட்டது. இரண்டு, மாற்றம் என்ற ஒற்றைச் சொல் கோஷத்தை முன்வைக்கும், தீர்க்கதரிசியின் தொனி கொண்ட மனிதர் அமெரிக்க அதிபராகியிருக்கிறார். ஆனால், ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட எனக்கு வரலாற்றுவாதிகளின் மகிழ்ச்சியில் பங்குகொள்ள முடியவில்லை. பல சிந்தனையாளர்களின் நிலையும் இதுதான்.
முதலில் தேர்தலின் போக்கையும், முடிவுகளையும் பரிசீலிக்கும் போது கடும் பொருளாதார நெருக்கடி தோன்றியிராவிட்டால் ஓபாமா வெற்றி பெற்றிருப்பாரா என்பது சந்தேகம் என்றே தோன்றுகிறது. தொழிலாளர் வர்க்கத்தை சேர்ந்த வெள்ளையர்கள் (Blue Collar Whites) - குறிப்பாக பென்சில்வேனியா மாநிலத்தில் - நாங்கள் எப்போதும் ஜனநாயகக் கட்சிக்கு (ஓபாமாவின் கட்சி) வாக்களித்தாலும் அதற்காக ஒரு கறுப்பருக்கு ஓட்டுப் போட முடியாது என வெளிப்படையாகக் கூறியதாகப் பத்திரிகைகள் தெரிவித்தன. பெரும்பாலான வெள்ளையர்க்கு கடைசி நொடியில் ஒரு கறுப்பருக்கு ஓட்டுப் போட முடியாமல் கை இழுத்துக் கொண்டுவிடும் என பல பத்திரிகையாளர்கள் நினைத்தனர். இது எப்படியானாலும் ஓபாமாவின் வெற்றியுடன் நிறவெறி முடிவுக்கு வந்துவிட்டது என்பது நுனிப்புல் பார்வை. கே.ஆர்.நாராயணனும், அப்துல் கலாமும் இந்திய அதிபர்களானதால் கைர்லாஞ்சியும், குஜராத்தும் நிகழாமல் போய்விடவில்லை. தவிரவும் என்னுடைய முதல் அரசியல் நடவடிக்கை, பள்ளியிறுதியாண்டில் (1977), கோவையில் ஜனதா கட்சி, CPI (M) கட்சித் தொண்டர்களுடன் “ஜெய் ஜெய் ஜனதா, ஜெயிச்சாச்சு ஜனதா” என்று கோஷமிட்டு ஊர்வலத்தில் சென்றதுதான். வரலாறு என்பது அபத்த நாடகம் என்று தோன்ற சில ஆண்டுகளே தேவைப்பட்டன.
இந்திய ஜனநாயகத்திற்கும் அமெரிக்க ஜனநாயகத்திற்கும் வேற்றுமைகள் பல இருந்தாலும், ஒற்றுமைகளும் அதிகரிக்கின்றன. இஸ்லாமிய வெறுப்பு, அறிவுஜீவி வெறுப்பு, இடதுசாரி வெறுப்பு ஆகிய மூன்றிலும் இந்திய வலதுசாரி தேசிய மன நிலையும், அமெரிக்க வலதுசாரி தேசிய மனநிலையும் இணைய முனைகின்றன. முக்கியமாக அமெரிக்க ஜனநாயகத்தை புரிந்துகொள்ள ஓபாமா மீது குடியரசுக் கட்சி (அவரை எதிர்த்து போட்டியிட்ட மெக்கெயினின், இகழ்பெற்ற தற்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் கட்சி) ஓயாமல் சுமத்திய மூன்று கடும் குற்றச்சாட்டுகளை கவனிக்கவேண்டும். இவை மக்களிடையே கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தின என்பதுடன் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்தவையும்கூட.
1. ஓபாமா ஒரு சோஷலிஸ்ட். (அமெரிக்காவில் மோசமான கெட்ட வார்த்தை). செல்வத்தை பகிர்ந்தளிக்கவேண்டும் என்கிறார். பணக்காரர்களுக்கு வரி அதிகரிப்பு என்கிறார். (என்ன அநியாயம்?)
ஒபாமா எதிர்வினை: நான் சோஷலிஸ்ட் இல்லை. இது சத்தியம், இல்லாவிட்டால் கோடீஸ்வரர் Warren Buffet என்னை ஆதரிப்பாரா?
2. அவர் தேசத்தின் இறையாண்மைக்கு எதிரான தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தார். புரட்சியாளர், ஆபத்தானவர். Too Radical, Too Risky.
(அ) வில்லியம் அயர்ஸ் என்கிற வியட்நாம் போர் காலத்தில் (1969) குண்டு வெடிப்புகளில் ஈடுபட்ட நபருடன் நட்பாக இருந்தார்.
ஓபாமா எதிர்வினை: பொது இடத்தில்தான் அவரை பார்த்தேன். அவர் இப்போது ஒரு பேராசிரியர். இருவரும் சில நலத்திட்டங்களுக்கான நிர்வாகக் குழுவில் இருந்தோம். அவ்வளவுதான். அவர் குண்டு வைத்தபோது எனக்கு எட்டு வயது. அச்செயலை நான் கண்டித்து விட்டேன்.
(ஆ) ரஷித் காலிதி (Rashid Khalidi) என்ற பாலஸ்தீன ஆதரவு பேராசிரியருடன் நட்பாக இருந்தார். எனவே தீவிரவாத உணர்வு கொண்டவர். இஸ்ரேலுக்கு எதிரானவர்.
ஓபாமா எதிர்வினை: காலிதி ஒரு புகழ்பெற்ற அறிஞர். சிகாகோ, பின்னர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர். அவருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடுகள் அதிகம் ஆனாலும் அவருடன் கருத்துக்களை விவாதித்திருக்கிறேன். அவ்வளவுதான்.
3. அவர் ஒரு ரகசிய முஸ்லிம். இந்த திடுக்கிடும் "குற்றச்சாட்டு" பகிரங்கமாக வைக்கப்படவில்லை; வதந்தியாக பரப்பப்பட்டது. அவரது நடுப் பெயரான ஹுசைன் அழுத்தமாக உச்சரிக்கப்பட்டது.
ஓபாமா எதிர்வினை: என் தந்தை முஸ்லிம். தாய் கிருஸ்துவர். நான் கிருஸ்துவன். தயவுசெய்து என்னை நம்புங்கள்.
ஓபாமா பலமுறை 'ஓசாமா பின் லேடனை பாகிஸ்தானுக்குள் நுழைந்தாவது பிடிப்பேன்' என உறுதி கூறினார். ஓபாமாவின் வெற்றியை ஒளிபரப்பியபோது போது கென்யாவில் அவரது ஆப்பிரிக்க முஸ்லிம் பங்காளிகளை காட்டினர். எனவே இப்போது ஒரு சுவாரசியாமான, ஆனால் அபத்தமான சித்தரிப்பு சாத்தியமாகிறது. ஒரு ஆப்பிரிக்க முஸ்லிம் குடும்பத்திற்கு வம்சாவழி உறவுடைய ஓபாமா, உலக வரலாற்றுத் தலைமை கொண்ட தேசத்தின் அடையாளமாகிறார். அந்தத் தேசத்தை கண்மூடித்தனமாக எதிர்ப்பதாக, பிற்போக்குத்தனமானதாக, மாற்றத்தை விரும்பாததாக கூறப்படும் அதே முஸ்லிம் மதத்தின் தீவிரவாத்திற்கு அடையாளமான ஓசாமா அவரது முதல் எதிரி ஆகிறார்.
ஓபாமா x ஓசாமா. மானுட வரலாற்றின் அடுத்த சுற்று. அதன் கேள்வி: தேசமா? மதமா? தேசமென்னும் மதமா, அதன் முன்னேற்றமா? அல்லது மதம் என்னும் தேசமா, அதன் தேக்கமா? முடிவை டி.வி. திரையில் காண்க. இந்தச் சித்தரிப்பு ஏன் அபத்தமானது? அப்படித்தானே ஊடகங்கள் கூறுகின்றன? சில காரணங்களைக் காண்போம்.
பகுதி 2: காகமோனா
சென்ற ஆண்டு, என் நண்பரின் 11 வயது மகளிடம் நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் வீட்டில் கம்ப்யூட்டரெல்லாம் கிடையாது என்றேன். அவளுக்கு ஆச்சர்யம். அப்போது எப்படி ஈ-மெயில் பார்ப்பீர்கள் என்று கேட்டாள். அப்போது ஈ-மெயிலே கிடையாது என்றுவிட்டு அடுத்த கேள்விக்கு முன்னால் இடத்தை விட்டு நகர்ந்துவிட்டேன். தமிழ் சமூக அறிதலின் பிரச்சினை நாம் வாழும் காலத்தில் காண்பதெல்லாம் எல்லா காலங்களிலும் இருந்ததாக நம்புவதுதான். குகைச்சுவரில் கிறுக்கப்பட்டதும், புறாக்காலில் கட்டப்பட்ட ஓலைத்துணுக்கும், ஈமெயிலும் ஒன்றுதான் எனக் கூறும் சாராம்சவாதிகள் வித்தியாசத்தை மறுப்பவர்கள். தகவல் பரிமாற்றம் என்று ஒன்று இருந்தால் அது ஈமெயில் வரை வந்துதான் தீரும் என நம்பும் வரலாற்றுவாதிகள் தற்செயலை மறுப்பவர்கள். வித்தியாசம், தற்செயல் ஆகிய இரண்டு கருத்துக்களின்றி வரலாற்றுத் தடங்களிலிருந்து சமூக அறிதலை உருவாக்கிக் கொள்ள முடியாது. தேசம், மதம், மனிதன் ஆகிய மூன்றுமே பன்னெடுங்காலமாக ஒரே போல் தொடர்வதாக மேற்குலகிலும் இந்தியாவிலும் பலர் கருதுகின்றனர். Samuel Huntington போன்று ‘பண்பாடுகளின் மோதல்’ என்று ஓபாமா x ஓசாமா பிரச்சினையை வர்ணிக்கின்றனர். இவர்களுக்கு காகமோனா பற்றித் தெரிவதில்லை; அதன் முக்கியத்துவம் புரிவதில்லை.
சில வருடங்களை மறக்கக் கூடாது. 1439 - கூடன்பர்க் அச்சுக்கூடத்தை உருவாக்கினார். 1492 – கொலம்பஸ் இந்தியா போக நினைத்து புதிய நிலப்பகுதியை கண்டறிந்தார். 1498 – வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு கடல்வழியை கண்டுபிடித்து காலிகட்டில் வந்திறங்கினார். இவற்றால் நிகழத்துவங்கிய மாற்றங்கள் அடுத்த நூறாண்டுகளில் ஐரோப்பாவை மானுட வரலாற்று மாலுமியாக உருவகம் கொள்ள வைத்தன. இங்கு ஐரோப்பாவை நிலப்பகுதியாக பார்க்காமல், ஒரு கருத்தாக்க-உருவகமாக பார்க்கவேண்டும். (Concept-Metaphor; ஐரோப்பாவை இப்படி அணுகுவது தீபேஷ் சக்ரவர்த்தியின் பரிந்துரை. பார்க்க: Provincializing Europe) பதினேழாம் நூற்றாண்டில் ஹாப்ஸ், தேகார்த், கலிலியோ ஆகிய மூவரையும் குறிகளாகக் கொண்டால் காகமோனா காலம் துவங்கியது தெளிவாகும். காகமோனா என்றால் என்ன?
கா - CA – CAPITALISM – முதலீட்டியம்
க - CO – COLONIALISM – காலனீயம்
மோ – MO – MODERNITY – நவீனம்
னா – NA – NATIONALISM – தேசியம்
CA-CO-MO-NA = காகமோனா.
இது ஒரே நாளில் தோன்றியதில்லை. முன்னூறு ஆண்டுகளாக வலுப்பெற்று இன்று உலகளாவிய நிலையாக இருப்பது. காலனீயமும், தேசியமும் நுட்பமாக பிணைக்கப்பட்டவை. உதாரணமாக ஒரு தேசிய அரசினுள் இருக்க விரும்புவோருக்கு அந்த அரசு தேசிய அரசு. விரும்பாதோர்க்கு காலனீய அரசு. வட கிழக்கு மாநில, காஷ்மீர் மக்கள் இயக்கங்கள் இந்திய அரசை காலனீய அரசாகவே பார்க்கின்றன. தமிழ் புனைவெழுத்தாளர் ஜெயமோகன் தேசிய அரசாகப் பார்க்கிறார். கா, க, மோ, னா - இவை நான்கும் கலந்த அற்புதக் கலவையாக காகமோனாவை புரிந்து கொள்ளாவிட்டால் எந்த விஷயத்திலும் தெளிவு பிறக்காது. காகமோனா தான் தீண்டிய அனைத்தையும் மாற்றி அமைக்கும். சில இடங்களில் மாற்றம் கண்ணுக்குத் தெரியும், பல இடங்களில் தெரியாது. எல்லாமே எப்போதும் மாறும் தன்மையன என்பதால் காகமோனா மாற்றத்தின் தனிக் குணங்கள் புரிந்துகொள்ளப் படுவதில்லை.
இதில் பெரிய வேடிக்கை, தேசியவாதிகள் தங்கள் பழமையை காப்பாற்றிக் கொள்வதாக கூறுவது. அவர்கள் தேசியமே காகமோனா என்னும்போது எந்தப் பழமையை எதைக்கொண்டு காப்பாற்றப் போகிறார்கள்? அதேபோல முதலீட்டியமும், நவீனமும் நுட்பமாக பிணைக்கப்பட்டவை. நவீனத்தில் காலூன்றி முதலீட்டியத்தை மட்டும் எதிர்க்கும் இடதுசாரிகள் தேசியவாதிகள் போன்றே முரண்பாடான நிலைக்கு வருகிறார்கள். இடதுசாரி தேசியவாதிகளோ மிகப்பெரிய குழப்பத்திற்கு இட்டுச்செல்கிறார்கள். மாற்றத்தையே தேசத்தின் சாராம்சமாக்கிவிடலாம் என்ற மூன்றாமுலக நம்பிக்கை படிப்படியாக தகர்ந்துவிட்டது. அந்த தகர்ப்பின் ஒரு பகுதிதான் 1992 டிசம்பர் மற்றும் 2002 குஜராத்.
இப்படியெல்லாம் கூறும்போது காகமோனாவை விடுத்து பின்னோக்கி போகவேண்டும் என்பதல்ல. ஒரு வளைவில் திரும்பவேண்டும். முதலில் காகமோனாவை ஒரு வாழ்முறையென்றும், அதேசமயம் ஒரு அறிதல் முறையென்றும் புரிந்துகொள்ளவேண்டும். இரண்டையும் அதாவது அறிதல்முறையையும் வாழ்முறையையும் பிரிக்க முடியாது. ஒன்றை சுவீகரிக்கும்போது மற்றொன்றும் இணைந்தே வரும். ஆனால் இரண்டையும் பிரிக்கலாம் என்ற நம்பிக்கை காகமோனா அறிதல்முறையின் ஓரங்கம். இதை புரிந்துகொள்ள எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் One Step Outside Modernity என்ற கட்டுரையில் விவாதிக்கப்படும் யு. சிவசாமி அய்யரை உதாரணமாகப் பார்க்கலாம். விரிக்கில் பெருகும். ஆனால் காகமோனாவின் இயங்கியலில் விமர்சனப்பார்வையும் எழுந்தது. காலங்காலமாக இயங்கும் தத்துவம் என்ற சுயபரிசீலனையின் துணையுடன் அந்த விமர்சன மரபுகள் வளர்ந்தன. இதை நான் சமூக அறிதல் என குறிக்க விரும்புகிறேன். முக்கியமான வரையொன்றை முன்வைக்கிறேன்.
காகமோனா வாழ்முறையையும், காகமோனா அறிதல்முறையையும் கருத்தில் கொண்டு எந்த ஒரு நிகழ்பொருளின் காகமோனாவுக்கு முந்தைய பிந்தைய வடிவங்களையும் வம்சாவழித் தொடர்ச்சியாக அறிவதே சமூக அறிதல்.
இது காகமோனா அறிதல் முறையுடன் சுய விமர்சனத்தை இணைப்பது. வம்சாவழித் தொடர்ச்சி என்பது சுய மறு உருவாக்கமில்லை. பல விதமான மாற்றங்களையும், உடைப்புகளையும், முரணியக்கத்தையும் உள்ளடக்கியது.தமிழில் இச்சமூக அறிதலின்பாற்பட்டு ஒரு இயக்கமே உடனடியாகத் தோன்றவேண்டியிருக்கிறது. சமூக அறிதல் என்பது தகவல் சேகரிப்பல்ல. கோட்பாடுகளின் அணிவகுப்புமல்ல. அது காகமோனாவின் தடங்களை ஓயாது விசாரிப்பது. காகமோனா மனிதனைப்பார்த்து 'செய் அல்லது செத்துமடி' என்று சொல்லிவிட்டது. மனிதன் என்ற கருத்தையே காகமோனா அறிதல்முறை மாற்றிவிட்டதால் மானுடம் சந்திக்கும் சவால் மிகக் கடுமையானது. ஒவ்வொரு உள்ளூர் பிரச்சினையும் தனித்துவமானது. ஆனால் அந்த எந்தப் பிரச்சினையையும் காகமோனாவை விமர்சிக்கும் சமூக அறிதலன்றி எதிர்கொள்ள முடியாது. இந்தப் புரிதலே ஃபூக்கோவின் பரிசு.
பகுதி 3: தமிழில் சமூக அறிதலும் இலக்கிய முதன்மைவாதமும்
இலக்கியமும் சமூக அறிதலின் ஒரு பகுதிதான். ஆகச்சிறந்த இன்றியமையாத பகுதி என்று கூட சொல்ல்லாம். கோணங்கி, பிரேதா-பிரேதன், ஷோபாசக்தி, பா.வெங்கடேசன் உள்ளிட்ட பலரது எழுத்து சமூக அறிதலின் இன்றியமையாத அங்கம்தான். ஜெயமோகனின் ‘மாடன் மோட்சம்’ கதை காகமோனாவின் பயணத்தை மிகச் சிறப்பாக சொல்கிறது. பிரச்சினை என்னவென்றால், ஜெயமோகன் போன்ற முக்கியமான எழுத்தாளர் சிறுபிள்ளைத்தனமாக ‘எனது இந்தியா’ என ஒரு உணர்ச்சிக் கட்டுரையெழுதிவிடுவார். அவரது குரலுக்கும் அமெரிக்க வலதுசாரிகளின் குரலுக்கும் உள்ள ஒப்புமைகளை கவனியுங்கள்.
தமிழின் பிரச்சினை, சமூக அறிதலின் பாற்பட்டு இயங்கும் அ.மார்க்ஸ் என்ற சிந்தனையாளர் ஜெயமோகனை கண்டித்து எழுதுவதில் நேரத்தை செலவிட வேண்டியிருப்பதுதான்.
இந்தியா என்ற கருத்தாக்கத்தையும், இஸ்லாம் என்ற கருத்தாக்கத்தையும் சமூக அறிதலின் பாற்பட்டு விமர்சிக்க கடுமையாக உழைக்க வேண்டும். கடந்த இருநூறு ஆண்டுகளில் மத்தியக் கிழக்கு எனப்படும் பகுதியில் ஐரோப்பா செலுத்திய வன்முறையின் பரிமாணங்களையறியாமல் ஜிஹாத் குறித்தும், இஸ்லாம் குறித்தும் பேசும் நண்பர்களைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. ஏராமான ஆய்வுகள் இருக்கின்றன ஆங்கிலத்தில். ரஷித் காலிதி ஒரு உதாரணம். டிமோதி மிட்சலை படித்தேயாகவேண்டும். தலால் அசாதை தவிர்க்க முடியாது. எடவர்ட் சயித், ஜோசப் மசாத், ஃபைசல் தேவ்ஜி. அடேயப்பா, எத்தனை அறிஞர்கள், ஆய்வுகள், பார்வைகள். ஒரு அ.மார்க்ஸ் போதுமா? தமிழின் உடனடித் தேவை குறைந்தது நூறு அ.மார்கஸ்.
இஸ்லாமிய சமூகங்களை குறித்த காகமோனா வம்சாவழி சமூக அறிதலை தமிழில் ஏற்படுத்த மட்டும் நூறு பேர் வேண்டும். பிற சங்கதிகளுக்கு மேலும் ஆட்கள் தேவை. சமூக அறிதல் வலுப்பெறாவிட்டால் தொடர்ந்து விபரீதமான அடையாள அரசியல் மயமாதல் நடப்பதை தடுக்க முடியாது. இளைஞர்கள் மட்டுமின்றி, புனைவெழுத்தாளர்களும் கொச்சையான வன்முறை நிறைந்த அடையாள அரசியலே கதி என நினைக்கும் சூழல் உருவாகிறது. ஆங்கிலம் முதலீட்டியத்தின் மாளிகையில் சிறை வைக்கப்பட்டுள்ள ஒரு பெண் (ஒரு உருவகம்தான்.) அந்தப்பெண்ணால் சில உபகரணங்களை உருவாக்கி வெளியில் தூக்கி எறிய முடியும். பிற மொழிச் சமூகங்களில் அந்த உபகரணங்களால் ஆரோக்கியமான இயக்கங்கள் பிறக்க முடியும். ஏனென்றால் அச்சமூகங்களில் காகமோனா உறைநிலைக்கு வரவில்லை. தோரோவும், தால்ஸ்தாயும் அவர்கள் ஊரில் சாதிக்க முடியாததை அவர்களைப் படித்த காந்தியால் சாதிக்க முடிந்தது. வன்முறையற்ற மக்கள் இயக்கத்திற்கான மாதிரியை உருவாக்க முடிந்தது.
அ.மார்க்ஸ் என்ற பெயர் ஒரு உதாரணம்தான். தமிழில் சிந்தனைகளைப் பதித்த, பதிக்கும் அனைத்து நண்பர்கள் மீதும் எனக்கு மிகுந்த மரியாதையும் அபிமானமும் உண்டு. தமிழ் சிறு பத்திரிகை குழுத்தன்மையை நாம் பொருட்படுத்தக்கூடாது. சமூக அறிதல் உத்வேகம் கொள்ளும்போது இவை மறைந்துவிடும். கருத்துவேற்றுமை இல்லாத நட்பும், கருத்தொப்புமை இல்லாத விலகலும் சாத்தியமில்லை. எஸ்.என்.நாகராஜன், எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா, ரவிகுமார், சுந்தர் காளி ('சுயமுகமும், திருமுகமும்' என்ற அற்புதமான சிறு நூலை தமிழுக்கு அளித்துள்ளார்; அவசியம் படிக்கப்படவேண்டிய நூல்), தொ.பரமசிவம், ராஜ்கவுதமன், ‘அந்தக் காலத்தில் காபி இல்லை’ ஆ.இரா.வெங்கடாசலபதி, பொ.வேல்சாமி, இ.முத்தையா, ரவி ஸ்ரீநிவாஸ் உள்ளிட்ட பலர் சமூக அறிதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து இயங்கியுள்ளனர். ஞானி, தமிழவன், நாகார்ஜுனன், எம்.டி.முத்துக்குமாரசாமி, பிரேம் போன்ற முக்கியமான சிந்தனையாளர்கள் கோட்பாடு, தத்துவம், இலக்கியம் ஆகியவற்றை முக்கியப்படுத்தியவர்கள். இவர்களிடம் செயல்படுவது ஒருவகை இலக்கிய முதன்மைவாதம் என்று எனக்குத் தோன்றுகிறது. (எம்.டி.எம் இப்போது நானறிந்தவரை எழுதுவதில்லை) சமூக அறிதலின் களவயப்படுத்துதல் (localization) இவர்கள் இயக்கத்தில் படைப்பிலக்கியமாகவும் இலக்கிய விமர்சனமாகவும் கோட்பாட்டியலாகவும் பரிணமிக்கிறது. நிறுவனங்கள், இயக்கங்கள், சமூக நிகழ்வுகள் போன்றவற்றை ஆய்வதில்லை. மேற்கத்திய வகைப்பாட்டில் இவர்கள் Humanities எனப்படும் கலை,இலக்கிய சிந்தனைத்துறைகளில் நிற்கின்றனர். Social Sciences என்னும் சமூக அறிவியலை கருதுவதில்லை.
உதாரணமாக இந்திய சிந்தனையின் சமகால சாதனையாகிய அடித்தள ஆய்வுகளை (Subaltern Studies) அ.மார்க்ஸ்தான் தமிழில் கவனப்படுத்தினார். ரணஜித் குஹாவின் ‘சந்திராவின் மரணம்’, சாஹித் அமினின் ‘காந்தி மஹாத்மா’, பார்த்தா சாட்டர்ஜியின் ‘காந்தி: குடிமைச் சமூகத்தின் விமர்சகர்’ போன்ற கட்டுரைகளே தமிழில் சமூக அறிதல் தன் பயணத்தை துவங்க உதவும். சமீபத்தில் பார்த்தா சாட்டர்ஜி எழுதிய ‘ஆளப்படுவோரின் அரசியல்’ (The Politics of the Governed) உடனடியாக தமிழில் மொழிபெயர்க்கப் படவேண்டிய நூலாகும். களவயப்படுத்துதல் என்பதை விரிந்த பொருளில் கொள்ள வேண்டும். தெரிதா, ஃபூக்கோ, தெல்யூஸ், அகம்பென், பாதியூ எல்லாம் படித்தாலும் நாம் ஆராய்ந்து எழுதவேண்டியது வள்ளலார் குறித்தும், வைகுண்டசாமி குறித்தும், அயோத்திதாசர் குறித்தும்தான்; அதாவது உள்ளூர் களங்களைக் குறித்துதான். அத்தகைய எழுத்து மொழி, பிரதி, இலக்கியம், கதையாடல் என்று மட்டும் போகாமல், சொல்லாடல், செயல் வலைப்பின்னல், வம்சாவழி ஆய்வு என்றும் பரிணமிக்கவேண்டும். ஃபூக்கோவின் ஆய்வுகளை மறக்கக்கூடாது.
இலங்கை பிரச்சினை குறித்த கோட்பாட்டு நூல்கள், கட்டுரைகள்கூட ஏராளமாக ஆங்கிலத்தில்தான் இருக்கின்றன. நானறிந்தவரை அவை தமிழில் மொழி பெயர்க்கப்படவில்லை. இலங்கை அறிஞர்கள் உலகப்புகழ் அல்லது ஆங்கிலக் கல்விப்புல புகழ் பெற்றவர்கள். ஆனால் அவர்கள் தமிழில் அறியப்பட்டவர்களில்லை. சிங்களத்தின் நிலை எனக்குத் தெரியாது. அங்கு ஒரு இடதுசாரி இயக்கம், அடையாள வெறிகொண்ட தேசிய வலதுசாரி இயக்கமாக மாறியதை அறியும்போது அச்சம் பெருகுகிறது. தமிழில் வந்த புஸ்பராஜாவின் ‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியமோ’, நேபாளத்துடன் ஒப்பிட்டு அ.மார்க்ஸ் முன்வைத்த சீரிய சிந்தனைகளோ ஆங்கிலத்தில் எழுதும் நானறிந்த சிலர் கவனத்திற்கு வரவில்லை. இருமொழிச் சூழலின் சிக்கலிது. இதையே தமிழ் சமூகம் உலக வரலாற்றின் இன்றைய கட்டத்தில் சந்திக்கும் மிகப் பெரிய சவாலாக நினைக்கிறேன். என்னால் முடிந்தவரை என்னுடைய எளிய சாத்தியங்களுக்கு எட்டியவரை இச்சவாலை எதிர்கொள்வேன். என் கடன் இருமொழிகளிலும் எழுத்துப்பணி செய்து கிடப்பதே.
No comments:
Post a Comment