Wednesday, November 26, 2008

1958 டிசம்பர் 13

அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களினதும் தினம் :50 ஆண்டுகள்

-சுகன்

நிறவெறியிலும் கொடுமையான தேசவழமைச் சட்டங்கள் நிலவிய காலமது!பொதுவீதியால் போகக்கூடாது, படிக்கக்கூடாது, (மேற்)சட்டை போடக்கூடாது,கோவில்கள் உணவகங்கள் இவற்றிற்குப் போகக்கூடாது.... என கொடூரமான வன்கொடுமையும் சாதி அடக்குமுறையும் நிலவிய யாழ்ப்பாண சமூகத்திலே இக்கொடுமைக்கு எதிராக பல்வேறு அமைப்புகளும் தத்தமக்குரிய வழி வகைகளில் போராட்டத்தை முன்னெடுத்திருந்தன.அப்போதிருந்த வெகுசன அமைப்புகள் 1958 டிசம்பர் 13 அன்று இவ் அடக்குமுறைக்கெதிராக பரந்த அளவில் எதிர்ப்பும் சத்தியாக்கிரகப் போராட்டமும் நடாத்துவதென்று முடிவெடுத்து போராட்டக்களத்தில் இறங்கின.

அனைத்து மக்களினதும் ஊடகங்களினதும் கவனத்தை ஈர்த்த இந்தப் போராட்ட தினத்தை அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் தினமாக பிரகடனப்படுத்துவதென்று சிறுபான்மைத்தமிழர் மகாசபை முன்வைத்த வேண்டுகோளை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

திருவாளர்கள்: கன்டி பேரின்பநாயகம், எஸ்.கே.வேலாயுதபிள்ளை, டாக்டர்.வி.ரி.பசுபதி, செனட்டர்.பி.நாகலிங்கம், அ.அமிர்தலிங்கம், வி.பொன்னம்பலம் முதலிய பிரமுகர்கள் இக்கொடுமைகளை நீக்குவது தொடர்பாகக் கூட்டப்பட்ட மாநாட்டில் பங்குபற்றி தமது கருத்துகளைத் தெரிவித்தது முக்கியமான ஒரு கட்டமாகும்.அன்று இலங்கை முழுவதையும் ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் கவனத்தை ஈர்த்தது இப்போராட்டம்.

இத்தகைய பரந்துபட்ட மக்களினது ஐக்கியத்திலும், போராட்டத்தின் மூலமே ஒடுக்கப்பட்ட மக்களினது விடுதலையையும் சுதந்திரத்தையும் அனைத்து மக்களினதும் சமத்துவத்தையும் உறுதிப்படுத்த முடியும் என்பது இந்த ஐம்பதாண்டுகால போராட்ட வரலாறு நமக்குக் கற்றுக் கொடுக்கிறது.

போராட்டத்தின் பல்வேறு சிறப்பான முன்னுதாரணங்களிற்கான காலமும் கருத்துகளும் அழிக்கப்பட்டாலும் ஒடுக்குமுறைகளின் வடிவம் காலத்திற்கேற்றவாறு தம்மை மறு தகவமைப்புச் செய்து நவீன வடிவில் தமது கொடூர கரங்களை ஒடுக்கப்பட்ட மக்களின்மீது இறுக்கிவருகிறது.ஒடுக்கப்பட்ட மக்கள் அனைத்து அதிகாரங்களையும் கைப்பற்றி சமூகத்தை மீள்கட்டுமானம் செய்தாலொழிய இதற்கு மாற்றுவழி ஏதுமில்லை.

அகில இலங்கை சிறுபான்மைத்தமிழர் மகாசபையின் 16 வது வருடமாநாட்டின் 1957-1959 ஆண்டிற்கான அறிக்கை இவ்வேண்டுகோளை விடுத்திருக்கிறது: " டிசம்பர் 13 ஐ மகாசபையின் வேண்டுகோளின்படி சகல ஒடுக்கப்பட்ட மக்களினதும் தினமாக கொண்டாடுவது அவசியமென்பதை ஒவ்வொருவரும் உணருவது நன்றாகும்"

50 ஆண்டுகளிற்கு முன்னான இவ் வேண்டுகோள் இன்றும் இனியும் விடுதலையை அவாவிநிற்கும் இனங்கள்,தேசியங்கள்,சமூகக்குழுக்களிற்கு முக்கியமானதும் தொடர்ச்சியாகப் பேணப்படவும் கொண்டாடப்படவுமான சிறப்பான முன்னுதாரணமாகும்.

No comments: