-சுகன்
கம்யூனிஸ இயக்க வளர்ச்சியில் தமிழ்ப்பெண்கள்
வீ.சின்னத்தம்பி
வெளியீடு:ஐரோப்பிய கீழைத்தேய தொடர்பு மையம்.
முற்குறிப்பு:
எனது ஊரவரான நூலாசிரியர் வீ.சின்னத்தம்பி அவர்களை 1984இன் இறுதிப் பகுதியில் கடைசியாக வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குப் பின்புறத்தே உள்ள அவரது வீட்டில் சந்தித்தேன். "வெள்ளைப் பூனையானாலென்ன கறுத்தப் பூனையானாலென்ன எலி பிடித்தாற் சரி" என்ற டெங் சியாவோ பிங்கின் புகழ்பூத்த பொன்மொழிக்கு அவரிடம் என்ன விளக்கம் எனப் பாடம் கேட்க நானும் ஒரு தோழரும் போயிருந்தோம்.
இதோ! இதில் இருக்கும் செத்த எலிகூட உனது முன்னேற்றத்திற்கு உதவும், என்று ஒருவர் அறிவுரை கூற அவன் அந்த செத்த எலியை எடுத்துக்கொண்டு வழியிற் போகும்போது பூனை வளர்க்கும் ஒருவர் எதிரே வர, செத்த எலியை அவரிடம் விற்பதற்காக அவன் முயன்றபோது கை விரலை நனைத்து கீரைக்கொட்டையில் குத்தி அதில் ஒட்டியுள்ள கீரைதான் அதன் பெறுமதி என அவர் கூற செத்த எலியைக் கொடுத்துவிட்டு அந்த விரலளவு கீரையை வாங்கி முளைக்கப்போட்டு அதை விற்று படிப்படியாக அவன் பெரும் செல்வந்தனானான், என்ற கதை நமக்கு நினைவிருக்கும். காட்டில் ஆயிரம் விலங்குகள் இருந்தாலும் எலிக்குப் பூனைதான் எதிரி என்ற வழக்கையும் கேள்விப்பட்டிருப்போம்.
தோழர்.சின்னத்தம்பி மிகப்பொறுமையோடு மாஒவிற்கும் டெங்கிற்கும் உள்ள வித்தியாசத்தை நமக்கு விளக்கிக்கொண்டிருந்தார். அவர் சிறிதுகாலத்திற்கு முன்னர்தான் சீன வானொலியில் பணியாற்றிவிட்டு வந்திருந்தார். சீனக் கம்யூனிஸத்தின் நுட்பங்களை அவரளவிற்கு பார்த்து அறிந்தவர்கள் ஈழத்தமிழரில் இல்லையெனலாம்.
"இலங்கையின் வடபுலத்தில் கம்யூனிச இயக்கத்தின் வளார்ச்சியில் பெண்கள் ஆற்றிய பங்கு அவர்களுடைய கணவன்மார்களின் சேவையின் பகுதியாகவே கருதப்படுகிறது" என இச்சிறு கைநூலின் தொடக்கத்தில் சின்னத்தம்பி கூறிச்செல்கிறார். காலஞ்சென்றவர்களான திருமதி வேதவல்லி கந்தையா, திருமதி தங்கரத்தினம் கந்தையா, திருமதி பரமேஸ்வரி சண்முகதாசன், திருமதி வாலாம்பிகை கார்த்திகேசன், திருமதி பிலோமினாம்மா டானியல் ஆகியோர்களைப் பற்றிய சுருக்கமான அதேவேளை அவர்களது படங்களுடன் கூடிய அரியதோர் ஆவணமாக இக்கையேட்டை தந்தை டானியலின் அனுக்கத்தோழரான வி.ரி.இளங்கோவன் தொகுப்பாசிரியராக இருந்து ஒரு கம்யூனிஸ்டிற்குரிய ஓர்மத்தோடு செய்திருக்கிறார்.
"அறுபதுகளின் பிற்பகுதியில் தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களில் நேரடியாகக் களத்தில் நின்று போராடிய இளம்பெண்கள் சிலர் இன்றும் ஈழத்தில் வாழ்கிறார்கள்" என இளங்கோவன் சுட்டுவது நிச்சாமம் களம் கண்ட செல்லக்கிளி போன்றவர்களாக இருக்கலாம். நூலில் சிறப்பான கவனத்திற்குரியதாக தங்கரத்தினம் அவர்கள் பற்றிய சித்திரம் மெய்சிலிர்க்க வைக்கக்கூடியது.அதை முழுமையாக இங்கு தருவது சிறப்பானது, சால்பானது, காலப்பொருத்தமானது, முன்னுதாரணமானது,ஈழத்தமிழரின் வரலாறென்பது இதுதானென்பது,வரலாற்றைப் புரட்டிப்போடுவது.
எதேச்சாதிகாரத்தை எதிர்த்த தங்கரத்தினம்
திருமதி.தங்கரத்தினம் கந்தையா வட்டுக்கோட்டையில் (1920 - 1989)பிறந்தவர். உடுவில் மகளிர் கல்லூரியில் கல்விகற்று ஆசிரியையானவர். தொழிற்சங்கவாதி, சமூக சேவகி,கம்யூனிசப் போராளி. இலங்கை முற்போக்கு மாதர் முன்னணியின் தலைவர்களுள் ஒருவரான திருமதி தங்கரத்தினம் தொல்புரம் மாதர் சங்கத்தின் இயங்கு சக்தியாகவும் விளங்கினார். கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரான இவர் ஒருகாலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக் கிளையொன்றின் செயலாளராகவும் பணிபுரிந்தார்.
திருமதி தங்கரத்தினத்தின் அரசியல் கொள்கைப்பிடிப்பு இலக்கிய அந்தஸ்த்துப் பெற்றுள்ளது.காலஞ்சென்ற டானியல் தமது நாவல் ஒன்றில் அவர் தொடர்பான நிகழ்ச்சியொன்றைக் குறிப்பிடுகிறார். சங்கானையில் ஒருபாடசாலையில் அது நிகழ்ந்தது. சரஸ்வதி பூசைத்தினம். உண்டிவகை செய்வதற்காக தேங்காயைத் தாழ்த்தப்பட்ட மாணவி ஒருத்தி துருவ முற்பட்டபோது மற்ற ஆசிரியர்கள் அதைத் தடுக்க முனைந்தார்கள். ஆசிரியை தங்கரத்தினம் ஏன் அம்மாணவி துருவக்கூடாது என்று கூறி அவரைத் துருவ விட்டார். விளைவு, இரவினில் பாடசாலை எரிக்கப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளராகவும் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராகவும் சேவையாற்றிய திருமதி தங்கரத்தினம் இவற்றின் காரணமாக எத்தனையோ இடர்களைச் சந்தித்தார். அரசியல் மேடைகளிற்கூட தமிழ்த்தலைவர்கள் எனப்படுவோரால் பெயர்சுட்டித் தாக்கப்பட்டார். ஒரு கம்யூனிஸ்ட் என்ற வகையிலும் ஒரு ஆசிரியர் சங்கத் தொழிற்சங்கவாதி என்ற முறையிலும்,ஒரு சமூக சேவகி என்ற முறையிலும் அவர் இந்த எதிர்ப்புகளிற்கு முன் துவண்டுவிடாமல் எதேச்சாதிகாரத்திற்கெதிராக போராடினார். இந்துமகாசபை பாடசாலைகளில் படிப்பித்த திருமதி தங்கரத்தினம் 12 தடவைகளுக்குக் குறையாமல் இடமாற்றம் செய்யப்பட்டார். 'இந்து போர்ட்'டின் பலம்வாய்ந்த செயலாளரான இராசரத்தினத்திற்கெதிராக அவர் நேருக்கு நேர் நின்று போராடினார். அரசாங்கம் பாடசாலைகளைக் கையேற்றபோது திருமதி தங்கரத்தினம் அதற்கு ஆதரவாகச் செயற்பட்டார். தேர்தற் கூட்டங்களில் கம்யூனிஸ்ட் கட்சி, இடதுசாரி அபேட்சகர்களூக்கு ஆதரவாக அவர் உரையாற்றினார்.
குடும்ப வாழ்விலும் கம்யூனிச இலட்சியத்தைக் கடைப்பிடிப்பதில் அவர் முன்னுதாரணமான பங்கை வகித்தார். நான்கு புத்திரர்களையும் இரண்டு புத்திரிகளையும் பெற்ற அவர் தனது பிள்ளைகளின் கருத்துகளிற்கு மதிப்புக்கொடுக்கும் ஒரு அன்னையாகத் திகழ்ந்தார். பிள்ளைகள் பொதுவாக முற்போக்குக் கொள்கைகள் உடையவர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. திருமதி தங்கரத்தினம் ஒரு தாயார் என்ற முறையில் தமது பிள்ளைகளை வளர்க்க வறுமையுடன் போராடினார். அதற்காக தமது கொள்கையில் அவர் ஈடாட்டம் அடையவில்லை.
No comments:
Post a Comment