ஜமுனா ராஜேந்திரன் 'தேசம்' இணையத்தளத்தில் எழுதிய கட்டுரையின் மீதான எதிர்வினையாய் சில குறிப்புகள்:
- சுகன்
'குமிஞ்சான்', 'குள்ளன்' என்று ஒருவரை எள்ளி நகையாடும் மனோபாவத்திடம் விவாதிப்பது மனித உணர்வுள்ள எவருக்கும் சாத்தியமில்லை. இலக்கியம் அரசியல் இவற்றின் பேரால் இத்தகைய வக்கிரங்களை எதிர்கொள்வது அவற்றிற்கு மரியாதை செய்வதுமாகாது. கவுண்டமணியின் 'கோமுட்டித் தலையா', 'நெல்சன் மண்டலோ மண்டையா' போன்ற வசவுகளுக்கும் 'குமிஞ்சான்' என்று வசைபாடும் மனநிலைக்குமுள்ள அருவருப்பான ஒப்புவமை, ஒற்றுமையைக் கவனிக்கும் ஒருவருக்கு இதுதான் கவுண்டர் கல்ச்சரோ ( கவனிக்க : Counter Culture அல்ல) என்ற சந்தேகம் எழுவது தவிர்க்க முடியாததே.
இருந்தும்,
செருப்பையும் விளக்கையும் வைத்துக் கூட்டம் தொடங்குவதற்கு ஜ.ரா. இப்படி ஆத்திரப்படத் தேவையில்லை. அது- அது அதனதன் இடத்தில் இருக்க வேண்டுமென்றும் ஒவ்வொருவரும் அதனதன் இடத்தில் அவற்றை வைக்க வேண்டுமென்றும் எதிர்பார்ப்பவருக்கு இராணுவக் கல்லூரி இருக்குமிடத்தை நோக்கித்தான் எம்மால் கைகாட்ட முடியும்.
செருப்பையும் விளக்குமாறையும் வைத்து நாம் கூட்டம் தொடங்குவோம். முடிந்தால் பார்ப்பனர் ஒருவரை அழைத்துவந்து செருப்புக்கு பூஜையும் செய்வோம். ஆர். எஸ். எஸ்.காரர்களைத் தவிர வேறுயாரும் இதற்காக அதிருப்தியடைவார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஜமுனா ராஜேந்திரன் போர்த்தியிருக்கும் கிழிந்த இடதுசாரிப் போர்வையினுள் ஒளிந்திருப்பது ஆர். எஸ். எஸ் பசுத்தான் என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை. இந்தப் பசுவில் முன்பொரு முறை நான் பாலே கறந்து காட்டியிருக்கிறேன். அந்த விபரம் 'மாட்டுப் பைத்தியமும் மார்க்ஸியமும் முப்பது வெள்ளிக்காசுகளும்' என்ற தலைப்பில் கட்டுரையாக 'நாட்டாமை' தொகுப்பில் (1999) வெளியாகியுள்ளது.
முரண்பாடு என்று பார்த்தால் எனக்கும் ஜ.ரா.விற்குமான முரண்பாடு இப்படித்தான் தொடங்கியது: பத்துப் பதினைந்து வருடங்களிருக்கும், 'சுவடுகள்' ( நோர்வே) இதழில் ஜ.ரா. "புகலிட இலக்கியம் தனது அரசியல் நிலைப்பாட்டிற்காக கசாயம் குடிக்க வேண்டும்" என ஒரு கட்டுரை எழுதியிருந்தார். தமிழில் புகலிட இலக்கிம் குறித்தும் ஐரோப்பிய, சர்வதேச புகலிட இலக்கிங்கள் குறித்தும் நாம் விவாதித்து வந்த காலமது. கருத்துச் சுதந்திரம் மிகவும் நசுக்கப்பட்ட காலமது. (அந்த கருத்துச் சுதந்திர மறுப்பின் 'சைபர்' வடிவம்தான் தற்போது இணையங்களில் ஒளிந்திருந்து பின்னூட்டக் கல் எறிவது.)
"சல்மான் ருஸ்டி உனக்குப் பொலிஸ் காவல், எனக்கு?" என்ற புகழ்மிக்க வரிகளை இளவாலை விஜயேந்திரன் எழுதிய காலமது. புகலிட இலக்கியத்தின் அடிப்படைக் கூறுகளை நாம் வரைவு செய்திருந்தோம். புகலிட இலக்கியம் அதன் பாஸிச எதிர்ப்பு, போர் எதிர்ப்பு, சாதிய எதிர்ப்பு.... என்பவற்றின் அடிப்படையில் எதிர்ப்பு இலக்கியம் என்பது நமது தீர்மானங்களில் ஒன்று. ஆனால் இந்த எதிர்ப்பு இலக்கிய அரசியல் நிலைப்பாட்டிற்காக புகலிட இலக்கியம் கசாயம் குடிக்க வேண்டுமென்றார் ஜ.ரா. அந்த மருத்துவ சிபாரிசைக் கண்டித்து நான் சுவடுகள் சஞ்சிகைக்கு ஒரு வாசகர் கடிதம் எழுதினேன்.
தனக்குத் தெரியாத விடயங்களில் (தலித் அரசியல், கவிதை, மற்றும் பல ) ஜ.ரா. இப்போது மூக்கை நுழைப்பது போலத்தான் அப்போதும் அன்னார் ஈழத்து அரசியலில் தலையிட்டார்.
நான் சொன்னேன்: "தோழரே தயவு செய்யுங்கள். ஏனெனில் உங்களால் ஈழத்து அரசியலின் அவலங்களை ஒருபோதும் சரிவரப் புரிந்துகொள்ள முடியாது. அப்படிப் புரிந்துகொள்வதற்கு நீங்கள் உண்மையில் ஈழத் தமிழனாக இருக்க வேண்டும், துரத்தப்பட்டிருக்க வேண்டும், புலியிடமோ ஆர்மியிடமோ இரண்டு அடியாவது வாங்கியிருக்க வேண்டும், அகதியாகக் கள்ளப் பாஸ்போர்ட்டில் வந்திருக்க வேண்டும்..." இப்படியாக. ( நினைவிலிருந்து எழுதுகிறேன்)
இன்றுவரை ஜ.ரா.விற்கு இவை பிடிபடுவதேயில்லை. ஈழத்து அரசியலைப் புரிந்துகொள்ளச் சொல்லி ஜ.ரா.வை யாரும் கேட்கவில்லை. அவர் அவஸ்தை அவருக்கு. ஆனால் எமது அரசியலைப்பற்றி எமக்கே பாடம் எடுக்க அவர் முற்பட்டபோது 'No Thanks' என்று சொல்வதைத் தவிர வேறு எப்படி அவரை எம்மால் எதிர்கொள்ள முடியும். அவரைப் புலிகளின் ஈழமுரசுவிலும் ஐபிசி ரேடியோவிலும் என்னால் எதிர்கொள்ள முடியாது.
ஜ.ரா.வை மீண்டும் எதிர்கொண்டது இன்னும் சுவாரசியமானது. பாரிஸ் இலக்கியச் சந்திப்பில் எந்த விடயம் குறித்து அவர் உரையாற்ற வந்தார் என்பது ஞாபகத்திலில்லை. ஆனால் அவர் உரையாற்றத் துவங்க முதலே தோழர். ரவிக்குமாரை தலித் விரோதியாக அறிமுகப்படுத்தித்தான் அவர் உரை தொடங்கிற்று.
அப்போது நான் எழுந்து "தோழர் ரவிக்குமார் தலித் அரசியலை நிலை நிறுத்தியவர்களில் முதன்மையானவர். போதி, தலித், நிறப்பிரிகை, காலச்சுவடு பத்திரிகைளின் ஆசிரியர் குழுவில் ஒருவர். தலித்துகளின் விடுதலை அரசியல் குறித்து ஏராளமாக எழுதியிருப்பவர். முக்கியமாக அவரொரு களச் செயற்பாட்டாளர். தமிழில் தலித் அரசியலிற்கு உறுதியான அத்திவாரமிட்டதில் அவரின் சிந்தனையும் உழைப்பும் மகத்தானது. அவரை நீங்கள் தலித் விரோதியாக அறிமுகப்படுத்துவது தவறு! தவறு! தவறு!!" என்று எனது மறுப்பைத் தெரிவித்தேன்.
உடனடியாக எதிர்வினையாற்றுவது நமது மரபு! இது இடையூறு செய்வதல்ல! உடனடி எதிர்வினை! ரவிக்குமாரை நான் கௌரப்படுத்தியது ஜ.ரா.விற்குப் பிடிக்கவில்லை. ரவிக்குமாரை முகாந்திரமாக்கித் தலித் அரசியலின் மீது சேறடிக்கப் புறப்பட்டவருக்கு இந்த ஒரேயொரு எதிர்வினையிலேயே அவர் தயாரித்துக்கொண்டு வந்த உரை குழம்பியிருக்க வேண்டும். 'தேசம்' இணையத்தில் எழுதிய கட்டுரையில் நான் தொடர்ந்து அவரின் உரையைக் குழப்பியதாக அவர் உண்மைக்குப் புறம்பாக எழுதுகிறார்.
ஜ.ரா. பேச்சு முழுவதும் எனனைப் பார்த்தவாறே பேசியபடியிருந்தார். வன்முறை, அரசியல் நாகரீகம் இவற்றை ஈழமுரசிலும் ஐபிசி ரேடியோவிலும் பேசுவதுதான் ஜ.ரா.விற்குப் பொருத்தமாயிருக்கும். எந்தத் தரிசனமும் அவர் பேச்சில் அன்றும் இருந்ததில்லை, என்றும் இருந்ததில்லை.
முன்பும் ஒரு தடவை லண்டனில் அவர் பேசப் பார்த்திருக்கிறேன். தோழர். சி. சிவசேகரமும் ஜ.ராவின் அந்தப் பேச்சின் போது மண்டபத்தில் அமர்ந்திருக்க வேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்ததால் சிவசேகரம் வீட்டிலிருந்து வரும்போதே பஞ்சைக் கையோடு எடுத்துவந்து தனது காதுகளிற்குள் திணித்துக்கொண்டு அமர்ந்திருந்தோடு மட்டுமல்லாமல் அருகிலிருந்தவரிடமும் 'உமக்கும் பஞ்சு வேணுமோ?' என்று கேட்டதாகவும் அறிந்தேன். அதை உறுதிப்படுத்துவதிற்கு இப்போதும் எனக்கு ஆர்வமில்லாததால் விட்டுவிடுகிறேன். கடைசிவரை நாம் பேசுவதை எல்லோரும் பொறுமையோடு கேட்டுக்கொண்டிருந்து கைதட்டுவார்கள் என்று நினைப்பதைப் போல நானறிந்தவரை முட்டாள்தனம் வேறெதுவுமில்லை.
இனி ஜ.ரா.வைக் கடுப்பேற்றிய அந்தக் கவிதைக்கு வருவோம். அந்தக் கவிதையும் தலைப்பும் என்னவென்றே என்னால் இங்கே முழுமையாகத் தரமுடியவில்லை. அவ்வப்போது தோன்றுவதை எழுதி அனுப்பிவிடுவது. நண்பர்கள் பலரின் வலியுறுத்தலின் பேரில் கூட கவிதைகளைத் தொகுப்பாக்கவோ அல்லது ஞாபகங்களிலிருந்து மீட்டு எழுதவோ மனநிலையில்லை.
அநேகமாகக் கவிதை இறுதியில் இப்படியாக இருந்திருக்க வேண்டும்:
கவிதையின் தலைப்பு 'சார்ள் து கோல் விமான நிலையம்' அல்லது 'ஒஸ்லோ விமான நிலையம்' என்றிருக்கலாம்.
தரையிறங்கும் காலநிலை விமானத்திற்கில்லை.
குடிக்க ஏதாவது வேண்டுமா என
விமானப் பணிப்பெண் கேட்க
ஒரேன்ஜ் யூஸ் அல்லது முலைப்பால்.
(வேறு எதைக் கேட்கப் போகிறேன்)
எனது ஊருக்கு வா
சுடுமணலால் மூடி முரல் சுட்டுத் தருகிறேன்.
இப்படி முடியும் அந்தக் கவிதை. இதையொட்டி நான் எதிர்கொண்ட ஒரு நெகிழ்ச்சியான தருணம்: எனது பேரன்புக்குரிய நண்பி ஒருத்தி "உனக்கு இந்த உலகத்தில் முதலாவதாக என்ன பிடிக்கும்?" என்று கேட்க நான் "முரல் மீன்" என்றேன். நீண்ட மவுனத்தின் பின் "நீ என்னைத்தான் பிடிக்கும் என்று சொல்வாய் என்று நினைத்திருந்தேன்" என்றாள் அவள்.
இப்படியாகக் கவிதையும் அபத்தமான கவித்துவத் தருணங்களுமான வாழ்க்கை இருப்பதால் புத்தகங்களிலிருந்து வாசிப்பதில் முலைப்பாலை மட்டும் பத்து வருடங்களாக ஞாபகத்திலிருந்து அகற்றாத ஒருவரின் மூளையை எப்படி இனங்காண்பதென்றே எனக்குப் புரியவில்லை. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே செத்த மூளைகளுடன் எப்படி உரையாடுவது என்றும் புரியவில்லை.
'மதிப்பு மறுப்பறிக்கை' கதையை எழுதியதற்காக 'லா சப்பலில்' எனக்கு மரணதண்டனையை சுட்டிக்காட்டிய திரு. பா. அவர்கள் மீது எனக்கு மதிப்புண்டு. பிரான்ஸில் புலிகளின் முக்கிய பிரமுகர் அவர். எல்லோரையும் விட சமூகத்தின் மீது அவருக்கு அதிகம் பொறுப்பிருக்கிறது. கூட்டுக் கலவி வாழ்க்கை முறையின் ஆரம்ப காலங்களில் நாங்களிருந்தபோது நான் எழுதிய மிகச் சாதாரண கதையது. அந்தக் கதை 'எக்ஸில்' இரண்டாவது இதழில் வெளியாகியிருந்தது. அதை அப்போதே எல்லோரும் நல்வாய்ப்பாக மறந்துவிட்டார்கள். கனடாவிலிருந்து ஒருவர் வந்தார். மீண்டும் ஞாபகமூட்டினார். இந்தா பிடி! இந்தா பிடி! என்று. வாசிப்பதாலேயே ஒருவன் பூரணமடைகிறான்.
இறுதியாக,
ஆர். எஸ். எஸ்.காரர்களைத் தவிர மற்ற அனைவருமே தலித் விடுதலை அரசியலுக்காக உழைக்கலாம். தோழர்கள் பொன். கந்தையா நா.சண்முகதாசன் கே.ஏ. சுப்பிரமணியம் போன்ற வெள்ளாள சமூகப் பின்னணியிலிருந்து வந்தவர்கள் சாதியத்திற்கெதிராகப் போராடியதைப்போல சாதிய விடுதலையில் அக்கறையுள்ள எவரையும் தலித் அரசியல் தன்னோடு இணைத்துக்கொள்ளும். ஒருவரின் அரசியற் செயற்பாட்டை வைத்துத்தான் அவர் தலித் அரசியல் செயற்பாட்டாளரா அல்லது போலி தலித் அரசியலாளரா அல்லது சாதியபிமானியா என்று அடையாளம் காண முடியுமே தவிர அவரின் பிறப்பை மட்டும் வைத்துக்கொண்டு போலி என ய.ரா முத்திரை குத்துவதில் தலித்துகளை தனிமைப்படுத்தி ஒதுக்கும் மேற்சாதியத் திமிரும் விசமத்தனமும்தான் தெரிகிறது.
வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான், ஒருவரைத் தவிர.
2 comments:
ஓய் சுகன்!இதுவெல்லாம் ஒரு விமர்சனமாவோய்?
ஜமுனா உங்கள் செயற்பாடு-சமூகம் சார்ந்து கருத்து வைக்கும்போது,நீரோ தனி நபரை நோக்கி அதைக் குறுக்கிவிடுகிறீர்!என்னவொரு பிழைப்போய்?
போய் வேறு வேலையைப் பாரும்!உமக்கும் விமாசனத்துக்கும் எட்டாம் பொருத்தம்.தெருவில நிற்பவனுக்கெல்லாம் என்னவோய் அருகதையிருக்கு அறிவார்ந்த விமர்சனத்துக்கு?
நீ எந்தப் பல்கலைக் கழகத்தில பட்டம் பெற்றாய்?
அல்லது ஆங்கிலமாவது தெரியுமா?அட அவ்வளவு ஏன் பிரன்ஞ்சு பேசுவாயா?இது தெரியாத நீங்கள் எல்லாம் ஜமுனாவை விமர்சிக்க?காலம்தான்ரா-கடவுளே!அந்த மனுசன் ஆங்கிலத்திலயே தத்துவங்களைப் படிச்சு-மூல மொழிகளில தத்துவம் படித்துத்தான் உங்களை விமர்சிக்குது.இந்தத் தகுதியற்ற தற்குறிகளான சுகனுக்கும்,ஷோபாவுக்கும் என்ன தகுதி இருக்கு விமர்சனம் செய்ய?
மடையர்களே!
போய் வேலையைப் பாருங்கடா!
அன்புடன்,
அயோக்கியப் பயல்.
மேலதிகமாய் ஒரு குறிப்பு:
வெள்ளாளப் பின்னணியிலிருந்து வரும் சாதியொழிப்புச் செயற்பாட்டாளர்களையும் தலித் அரசியல் தன்னுடன் இணைத்துக்கொள்ளும் என நான் கட்டுரையில் குறிப்பிட்டதை தலித் அமைப்புகளிற்குள் வெள்ளாளர்களும் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும் என நான் சொல்வதாகப் பொருள்கொள்ளக் கூடாது. இதை விளக்க வாசகர்களுக்கு ஒரு பெரியாரிய உதாரணத்தைத் தரமுடியும்.
சின்னக்குத்தூசி திராவிடக் கருத்தியலிற்காக கடுமையாக உழைத்தவர். ஆனால் அவர் பிறப்பால் பார்ப்பனர். சின்னக்குத்தூசி தன்னையும் திராவிடர் கழகத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டுமெனப் பெரியாரிடம் கேட்டபோது பெரியார் சொன்னார்: "இல்லை உங்களுக்காகக் கட்சியின் அடிப்படைவிதிகளைத் தளர்த்த வேண்டியிருக்கும் நீங்கள் வெளியிலிருந்தே நமக்காக உழைக்கலாம்".
-SUGAN
Post a Comment