- நிர்மலா ராஜசிங்கம்
"21ம் நூற்றாண்டு பெண்ணியச் சிந்தனை" எனும் தலைப்பில் நாவலன் மிகுந்த அபத்தமான கட்டுரை ஒன்றைத் 'தேசம்' இணையத்தளத்தில் எழுதியிருக்கிறார். அதற்கு எதிர்வினையாக மட்டுமன்றி சில அடிப்படை விடயங்ளையும் தெளிவுபடுத்தவே இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது. நாவலனது கட்டுரையில் ஆக்கபூர்வமான விமர்சனங்கள் அரிதெனினும் கட்டுரையில் அவரின் தீராத பெண்ணிய வெறுப்பும், பெண் வெறுப்பும்(misogyny) மேலோங்கியுள்ளதாலும் அது தமிழ் பெண்ணியவாதிகளைக் குறித்து அவதூறான கருத்துகளைப் பரப்ப முயற்சி செய்வதாதாலும் கோட்பாட்டு ரீதியாகவும் தரவு ரீதியாகவும் தவறான அபிப்பிராயங்களை ஏற்படுத்த முயலுவதினாலும் இக்கட்டுரையை எழுதுகிறேன்.
'பாலியல் சீரழிவுக் கலாச்சாரத்திற்கே மேற்கத்திய பெண்ணியவாதம் தூபமிடுவதாகவும் பெண்களைப் பாலியல் இயந்திரங்களாக மாற்றும் முதலாளித்துவ தந்திரத்திற்குப் பெண்ணியவாதம் துணை போவதாகவும்' திட்டித் தீர்த்திருக்கிறார் நாவலன். பெண்ணியவாதத்தின் மேலுள்ள காழ்ப்புணர்வால் இவர் அடிப்படையான இரண்டு முக்கிய விடயங்களைத் தந்திரமாகத் தவிர்த்துத் தனது திட்டலை முடித்திருக்கிறார்.
முதலாளித்துவ சமூக ஆரம்பத்திற்கு முன்னரே வரலாறு தெரிந்த காலத்திலிருந்து பெண்கள் பாலியல் சுரண்டலுக்கும் அடக்குமுறைக்கும் ஆளாகி வருகிறார்கள். ஆண்களே பெண்ணடக்குமுறையின் பிரதான இயக்கிகளாகச் (agents) சமூக கட்டமைப்பில் பங்கேற்றுகிறார்கள். சமூகக் கட்டமைப்பானது பெண்களை அடக்கும் கருவிகளாக ஆண்களை உருவாக்கியிருக்கிறது. இது சமூகவியலின் பால பாடம். இதனைப் பற்றிய எவ்விதமான அறிதல்களும் நாவலனிடம் கிடையாது.
இவ்வகையான அடக்குமுறை மேற்கத்திய நாடுகளில் மட்டுமே பிரத்தியேகமாகக் காணப்பபடுவதில்லை. மாறாகத் தமிழ் சமூகம் உட்பட மற்றைய சமூக அமைப்புகளிலும் இது ஊறிக்கிடக்கிறது. இது இரண்டாவது பால பாடம். இந்த விடயத்தையும் நாவலன் தந்திரமாக மறந்து விடுகிறார். இந்த இரண்டு பால பாடங்களையும் நான் சொல்ல வேண்டிய தேவை இல்லையெனினும் இந்த இரண்டு விடயங்களையும் தவிர்த்தே அவரது கட்டுரை எழுதப்பட்டிருப்பதால் இந்த இரண்டு பால பாடங்களையும் நான் நினைவுறுத்த வேண்டியுள்ளது.
மேற்கத்திய சமூகத்தின் 'பாலியல் சமூகச் சீரழிவை' சதா சிந்தித்து ஏதோவொரு மன வெப்பியாரத்தில் சஞ்சரிக்கின்றனர் நாவலன் போன்றோர். இவ்வெப்பியாரத்தின் வக்கிரம் பெண்களின் மீதான பாலியற் சுரண்டலுக்கு பெண்ணியவாதிகளின் மீது பழி சுமத்தி பெண்ணியவாதிகளே பெண்களை பாலியல் வக்கிரங்களுக்கு ஏவுகின்றனர் என குற்றச்சாட்டையும் வைக்க அவர்களைத் தள்ளுகின்றது.
நிலவும் சமூகக் கட்டுமானமானது பெண்களை ஒடுக்குவதைத் தன்னகத்தே கொண்டிருக்கிறதென்பதும் ஆண்கள் அதன் இயக்கிகளாக செயற்படுகிறார்கள் என்பதும் சமூக எதார்த்தம். இந்த எதார்த்தத்தைப் புரிந்து கொளளுங்கள் எனப் பெண்ணியவாதிகள் கேட்பதொன்றும் ஆண்களுக்கு எதிரானதல்ல. ஒட்டுமொத்த மானிட விடுதலையைன்பது பெணகளின் விடுதலையில் தான் முழுமையடைகிறது என்பதைப் பெண்ணியவாதிகள் நம்புகிறார்கள். பெண்கள் தமது உரிமைகளுக்காகப் போராடும்போதோ அதற்கான தத்துவார்த்தப் புலத்தையும் செயற்திட்டங்களையும் விவாதிக்கும்போதோ கலாச்சார - ஒழுக்கப் பொலிஸ் வேடம் தரித்துப் பெண்ணியவாதிகளுக்கே பெண்ணியம் போதிக்கும் ஆண்கள் சிலரின் உள்நோக்கம் குறித்து நாம் தீவிரமாகச் சந்தேகப்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
மனித நாகரீகம் தோன்றிய காலத்திலிருந்து அந்தப்புரங்களும் பல தார மணமும் பாலியற் களியாட்டங்களும் ஆண்களால் நிறுவப்பட்டன என்பதற்கு ஆதாரங்கள் தேடத் தேவையில்லை. இது வெறும் முதலாளித்துவ சமூக அமைப்பின் சீரழிவு என்று நாவலன் சொல்லும் புனைவை நாம் நம்பத் தேவையில்லை. பெண்ணிய அரசியலை வெறுக்கும் 'குறிப்பிட்ட' இந்த ஆண்கள் எமது சமூகத்திலும் அய்ரோப்பாவிலும் பாலியல் வன்முறை, கும்பலாகப் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடல், குடும்ப உறவுக்குள்ளும் வெளியேயும் பெண்கள் அனுபவிக்கும் பாலியல் மற்றும் உடல்ரீதியான சித்திரவதைகள், இதனால் பெண்களின் உளநிலை பாதிக்கபடுதல் போன்ற பெண்கள் எதிர்நோக்கும் சமூகப் பிரச்சனைகள் பற்றி வாய் திறப்பதில்லை. மாறாகப் பெண்ணியவாதம் மேற்கத்திய முதலாளித்துவத்தின் சீரழிவு எனப் புனைகதைகளை உருவாக்கும் இவர்களின் திரிபுகளை தமிழ் பெண்ணியவாதிகள் நம்பத் தயாரில்லை.
பெண்கள் இரண்டாம் நிலைப் பிரஜைகள் என்ற கருத்தியல் ஆழமாக வேருன்றியிருக்கும் எமது சமூகத்தில் பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள் எனும் புறநிலை எதார்த்தத்தை நாம் சுட்டிக்காட்டும் போது ‘முற்போக்குச் சிந்தனை’ கொண்ட ஆண்கள் இந்தப் பிரச்சனைக்கு முகம் கொடுத்தே ஆகவேண்டும். இதை விடுத்து முற்போக்கு முலாம் பூசிக்கொண்டு பெண்ணியவாதிகளை எதிர்க்கும் போர்வையில் தங்கள் அரைவேக்காட்டுத்தன நியாயப்படுத்தல்களை வைப்பவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்கின்றனர்.
மேற்கத்திய பெண்ணியவாத சிந்தனைகளை வரித்ததன் மூலம் தமிழ் பெண்ணியவாதிகள் 'சமூக சீரழிவுக்கான' பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்ற நாவலனது ஆணாதிக்க அவதூறு பெண்ணிய அரசியலாளர்களுக்கு ஒன்றும் புதிதல்ல. இவ்வாறான படு பிற்போக்குத்தனமான கருத்துகளும் போக்குகளும் பல தளங்களிலிருந்து வருவதும் ஒன்றும் புதிதல்ல. நாவலனின் கட்டுரையானது சுயமரியாதை கொண்ட பெண்கள் தங்கள் சக சகோதரிகளுக்காகக் குரல் கொடுக்கும் பணியை நிந்தை செய்யும் கைங்கரியமே. பெண்களைப் பற்றிய படு பிற்போக்கான கருத்துகளை வைத்திருக்கும் பொதுப்புத்தி சார்ந்த தமிழ் ஆண்களினதும் முற்போக்கு முலாம் பூசியிருக்கும் நாவலனினதும் கருத்தியல் தள அடிப்படையில் வேறுபாடேதுமில்லை. வெள்ளைக்காரப் பெண்கள் உடலுறவுக்கு பரவாயில்லை, கல்யாணம் என்று வந்து விட்டால் 'நல்ல' ஒழுக்கமான சிவந்த இளம் தமிழ் பெண்ணை இறக்குமதி செய்ய வேண்டுமெனக் கருதும் தமிழ் இளைஞர்கள் மற்றும் கிழவர்களுக்கும் நாவலனுக்கும் வேறுபாடுதான் என்ன?
'பாலியல் சீரழிவு' என்று தொடர்ந்து வரிக்கு வரி கட்டுரையில் நாவலன் கூக்குரலிடும்போது அவருள்ளே ஒளிந்திருக்கும் ஆழமான பெண்ணிய எதிர்ப்பே (பெண் எதிர்ப்பும் கூட) வெளிவந்து பிரதியில் கேவலமாகப் பல்லிளிக்கிறது. சமூக - பொருளாதார - அரசியல் - உளவியற் துறைகளில் பெண்ணியத்தின் காத்திரமான தத்துவார்த்த, கோட்பாடுரீதியான பங்களிப்புகள் பற்றியோ மற்றைய துறைகளில் பெண்ணிய கோட்பாடுகளின் தாக்கங்கள் பற்றியோ எவ்வித அறிதலுமற்றவரே நாவலன் என்பதை அவரின் பிரதி அறிவிக்கிறது. வரட்டுத்தனமான பெண்ணிய எதிர்ப்புணர்வே நாவலனிடம் வெளிப்படுகிறது. தமிழ் பெண்ணியச் செயற்பாட்டாளர்களிடம் இவர் போன்றவர்களுக்கு இருக்கும் அச்சம் தமது ஆணதிகாரத்தை இழந்துவிடுவோமோ எனும் கிலி போன்ற காரணிகளே இவரது வசவுத்தனமும் வம்புத்தனமும் சிந்திய அரைவேக்காட்டு கட்டுரையின் அடிப்படைகள். இதுவே ஒரு வெற்று ஆய்வாக வெளிவந்திருக்கிறது.
சுதந்திரமான, சுயாதீனமான பெண்கள் 'ஒழுக்கச் சீரழிவாக' நடக்கிறார்கள் என எப்போதும் ஓதிக்கொண்டிருக்கும் ஆண்கள் ஆழ்மனதில் பாலியல் மன வியாதியில் உழல்பவர்களே என்பது எனது கணிப்பு. பெண்களைப் பாலியல் ரீதியாகத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள துடிக்கும் இவர்கள் தம்மை சூழவுள்ள பெண்கள் அப்படித் தமது கட்டுப்பாட்டுக்குள் வரமாட்டார்கள் எனத் தெரிந்தவுடன் சினமடைகிறார்கள் அல்லது அச்சமடைகிறார்கள். இது பெண்ணியவாதிகள் அனுபவரீதியாகக் கண்ட பாடம். இந்த ஆண்கள் இரட்டை வேடதாரிகள். 'கலாச்சாரச் சீரழிவு', ' பாலியல் சீர்கேடு' என்று மனக்கிலேசமடைந்து அதற்குள்ளேயே சஞ்சாரித்து உழலும் இவ்வாறான ஆண்கள் பற்றி மிக அவதானமாக இருக்குமாறு நான் சக சகோதரிகளுக்குச் சொல்லியிருக்கிறேன். ஆண்களுக்குப் பிடித்த, அவர்களுக்கு ஏதுவான ' கலாச்சாரத்தை' பெண்கள் ஏன் எற்றுகொள்ள வேண்டும்? எங்களுக்கென்று தனித்த அரசியற் தேர்வுகளும், சிந்தனை முறைமைகளும் வாழ்வியல் முறைமைகளும் ஏன் இருக்கலாகாது?
எமது விழுமியங்களையும், கலாச்சார நடைமுறைகளையும் தீர்மானிக்க எமக்கு உரிமை இருக்கிறது! கலாச்சாரத்தின் பெயரால் நீங்கள் வசவு பாடும் பின்னணி எதுவென்பது எமக்குப் புரியும். காலங்காலமாக பேணி வந்த தமது ஆணாதிக்கச் சமூகக் கட்டுமானத்திற்கு ஆபத்து வருகிறதேயென ஆழ்மனதில் உறைந்து கிடக்கும் பய உணர்வுடன் தமது வீட்டுப் பெண்கள் மேல் கொண்டுள்ள நேரடி ஆதிக்கத்தையும் கட்டுப்பாட்டையும் இழந்துவிடுவோமோ எனும் அச்சமும் பின்னிப் பிணைந்து வெளிப்படுவதே நாவலன் போன்றோரின் 'ஒழுக்கப்' பாடங்களுக்களுக்கும் வசவுப் பாடலுக்களுக்குமான பின்னணி.
இனி நாவலனின் கட்டுரையைக் கட்டவிழ்ப்போம். அவரது அடிப்படையான வாதத்தைச் சிக்கெடுப்பதற்கு முன் சில தகவற் பிழைகளைச் சுட்டிக்கட்டுவது அவசியம். மலினொவ்ஸ்கி (Malinowski) அமைப்பியல்வாதியென இவர் கூறுவதும் பெண்ணியவாத தத்துவார்த்தச் சிந்தனை முறை பற்றிய எள்ளளவு அறிவுமின்றி இவர் அமைப்பியல்வாதத்தையும் மலினொவ்ஸ்கியையும் வலிந்து கட்டுரையில் புகுத்துவதும் ஏனென்று இங்கு புரியவில்லை. மலினொவ்ஸகி அமைப்பியல்வாதியல்ல. அவர் 'பங்ஸனலிஸ'த்தின் (functionalism) தந்தை என வர்ணிக்கப்படுபவர். 1920 -30களில் மானுடவியல் ஆய்வை மேற்கொண்டவர். மாறாக அமைப்பியல்வாதத்தின் (structuralism) தந்தையெனக் கூறபடுபவர் கிளோட் லெவி ஸ்ரோஸ் (Claude Levi Strauss) . இவர் பிரஞ்சு நாட்டைச் சேர்ந்த மானுடவியலாளர். இவரது அமைப்பியல்வாத அணுகு முறையே அல்தூசர் போன்ற மாக்சிய அறிஞர்களின் மாக்சிய அமைப்பியல்வாதத்திற்கு அடித்தளமானது.
பாலியல் புரட்சி (sexual revolution)!
'பாலியல் புரட்சி' எனப்படுவதும் பெண்களின் மறு உற்பத்தி மற்றும் உடல் சம்பந்தமான அரசியல் பார்வை. அதற்கான போராட்ட முன்னெடுப்புகளும் பெண்ணிய அமைப்புகளின் பங்களிப்பும் போராட்டமும் ஒன்றல்ல. இவை இரண்டும் வெவ்வேறு விடயங்கள். நாவலன் இவை இரண்டையும் ஒன்றென நினைந்து குழம்புகிறார். மற்றவர்களையும் குழப்புகிறார். 'பாலியல் புரட்சி' பெண்ணியவாதிகளால் முன்னெடுக்கப்படவில்லை. பாலியல் சுதந்திரம் மட்டுமே பெண்களுக்கு விடுதலை பெற்று தராது என்பதில் பென்ணியவாதிகள் தெளிவுடன் அப்போதும் / இப்போதும் இருக்கின்றனர். பெண்ணியவாதத்தின் இரண்டாவது அலைக்காலம் என குறிக்கப்படுவது 1970கள். இக்காலகட்டத்திற்கு முன்னால் நிகழ்ந்ததே 'பாலியல் புரட்சி' எனப்படுவது. சமூக வரலாற்றைக் கிஞ்சித்தும் புரியாமல் ஒருசில பதங்களைத் தேர்ந்தெடுத்து கட்டுரையெழுதும் மேலோட்டப் பார்வையே இக்குழப்பங்களுக்குக் காரணி.
'பாலியல் புரட்சி' என்பது ஒரு திடீர் நிகழ்வல்ல. 1940களில் கின்ஸி என்பவர் நூற்றுக்கணக்கானவர்களிடமிருந்து தகவல்களைத் திரட்டினார். அவர்களது பாலியல் நடவடிக்கைகள் குறித்து வெளிப்படையான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். சமூகத்தில் பேசப்படகூடாத விடயங்கள் என இவை அக்காலத்தில் பழிக்கபட்டன. இதனைத் தொடர்ந்து அடுத்த தசாப்தத்தில் மாஸ்டேர்ஸ் / ஜோன்சன் என்பவர்கள் சமூகத்தில் பாலியல் நடவடிக்கைகளை நேரடியாக அவதானித்து அவற்றை நாடாவில் பதிவு செய்து வெளியிட்டனர். இந்த நிகழ்வானது சமூக விழுமியங்கள், பாலியல் நடத்தைகள், ஒழுக்கம் சம்பந்தமான பெரும் சர்ச்சைகளையும் விவாதத்தையும் அமெரிக்காவில் மட்டுமல்ல அய்ரோப்பாவிலும் உருவாக்கியது.
இதனைத் தொடர்ந்து 60களில் வாழ்வியல் பரீட்சார்த்த நிகழ்வுகள் நிகழ்ந்தன. 'ஹிப்பி' வாழ்வுமுறை, எதிர்க்கலாச்சார நடைமுறைகள் பரீட்சித்துப் பார்க்கப்பட்டன. பாரதூரமான சமூக சீரழிவு எனக் கருதப்பட்ட திருமணத்துக்கு முன்னான பாலுறவு ( அண்மைய குஷ்பூ சர்ச்சை) பரீட்சித்துப் பார்க்கப்பட்டது. ஹிப்பி கலாச்சாரமானது முதலாளித்துவ வாழ்வுமுறையை நிராகரித்தது, வியட்நாம் யுத்தத்தை எதிர்த்தது என்பதும் இங்கே குறிப்பிட வேண்டியது. கருத்தடை மாத்திரையின் விற்பனை பெண்களுக்கு திருமணத்துக்கு முன் பாலியல் உறவு கொள்ளும் சுதந்திரத்தை அளித்ததும் கவனிக்கத்தக்கது. இவ்வாறான சமூக மாற்றத்தினால் பாலுறவு சம்பந்தமாக முன்னிருந்த தடையுணர்வுகள் படிப்படியாக மாற்றம் கண்டன. இவ்வாறான எதிர்க் கலாச்சார நடவடிக்கைகளால் பெண்கள் தம்மை முழுமையாக விடுவிக்கவில்லை என்பதும் உண்மையே.
திருமணதுக்கு முன்னான அல்லது திருமணத்துக்குப் புறம்பான பாலியல் உறவுகள் மிகக் குறுகிய சுதந்திரத்தையே அவர்களுக்குக் கொடுத்தன என பெண்கள் உணரத் தலைப்பட்டனர். ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான அதிகார உறவுகளில் மாற்றமேதுமில்லாமல் 'பாலியல் சுதந்திரம்' என்ற நிலையில் மட்டுமே செயற்படுவது சிலசமயங்களில் ஆண்கள் பெண்களுக்குமேல் செலுத்தும் ஒடுக்குமுறையை அதிகரிக்கச் செய்யவதாகவும் அவர்கள் உணர்ந்தனர். சமையல் செய்பவராகவும், துப்பரவு செய்பவராகவும், குழந்தை பராமரிப்பவராகவும் பெண்ணின் பாத்திரம் சமூகத்தில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் போது பாலியல் சுதந்திரம் என்பதும் ஆணின் ஆணைக்குட்பட்டே நிகழ்கிறது.
பாலியல் சுதந்திரம் பற்றிய மேற்கண்ட விமர்சனத்தை முன்வைத்தவர்கள் வேறு யாருமல்ல, இரண்டாவது அலையாக முகிழ்த்த 70 களின் பெண்ணியவாதிகளே இந்த விமர்சனத்தை வைத்தார்கள். சமூக அமைப்பில் பெண்ணொடுக்குமுறையின் இயக்கிகளாக ஆண்கள் இருக்கும்போது ஆண்களுடன் சுதந்திரமாகப் பாலுலுறவு கொள்வதன் மூலம் பெண்ணொடுக்குமுறை ஒழிந்துவிடாது எனப் பாலியல் சுதந்திர கருத்தாக்கத்தின் மேல் விமர்சனம் வைத்தவர்கள் இப் பெண்ணியவாதிகளே. இதனை பற்றிய அறிதலின்றி நாவலன் கண்மூடித்தனமாக எழுதுகிறார். "பெண்ணின் பாத்திரம் சமூகத்தால் கட்டமைக்கப்படுகிறது, வெறும் பாலியல் சுதந்திரத்தால் அது அழிந்து விடாது" என 70களின் பெண்ணியவாதிகள் நினைவுபடுத்தினர். கடந்த அரை நூற்றாண்டு கால சமூக வரலாற்றைப் பற்றிய தவறான புரிதல் நாவலனை பெண்ணியத்தையும் 'பாலியல் சமூகச் சீரழிவையும்' சமப்படுத்தும் வெற்று கோஷத்திற்கு இட்டு சென்றிருக்கிறது.
ஏங்கெல்சும் பெண்ணியமும்
'குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்' என்ற ஏங்கெல்ஸின் நூலை மேலோட்டமாக மேய்ந்துவிட்டு நாவலன் தனது கட்டுரையை ஆரம்பிக்கிறார். லூயிஸ் மோர்கன் எனும் சமூக ஆய்வாளரின் 'புராதன சமூகம்' எனும் புத்தகத்தின் தகவல்களின் அடிப்படையை வைத்தே 'குடும்பம் தனிச்சொத்து, அரசு' எழுதப்பட்டது. காட்டுமிராண்டி சமூகத்திலிருந்து நாகரீக சமூகத்துக்கான ஒற்றைப் பரிமாண வளர்ச்சியை 'சமூக டார்வினிஸ' பார்வையிலிருந்து எழுதிய புத்தகமே 'புராதன சமூகம்'. மோர்கன் மனிதர்கள் அனைவரும் ஒன்றே என்று ஏற்று கொண்டாலும் அமெரிக்க இந்திய பழங்குடியினர் போன்ற மக்களிடம் உள்ள சமூக நடைமுறைகளை காட்டுமிராண்டி வாழ்க்கையாகவும் அமெரிக்க அரச அமைப்பை அதியுயர்ந்த நாகரீகமாகவும் கருதிய ஐரோப்பிய மையவாத சிந்தனை முறையிலிருந்து எழுதப்பட்டதே 'புராதன' சமூகம். பழங்குடிகள் நாகரீக உலகத்தின் எச்சசொச்சமென்ற வெள்ளை மேலாதிக்க உணர்வு கலந்த தொகுப்பே அந்த புத்தகம். ஆனாலும் அகமணம் - புறமணம் சம்பந்தமான வகைப்படுத்தல், ஆண்கள் சொத்துடமையாளராகும் போது ஒரு துணை வாழ்க்கை எனும் கோட்பாடு எழுந்ததற்கான தேவை, பெண்வழி சமுதாயமே மனித சமுதாயத்தின் தொடக்கத்தில் இருந்தது போன்ற கருது கோள்களை மோர்கன் முன்வைத்தது எங்கெல்ஸைக் கவர்ந்தது. இதுவே 'குடும்பம், தனிச்சொத்து, அரசு' எனும் புத்தகத்தின் தோற்றம்.
இந்தப் புத்தககங்கள் 19 நூற்றாண்டின் பிற்பகுதியில் வந்தன. இன்றோ புரதன சமூகம் பற்றிய மோர்கனின் பார்வையோ ஏங்கெல்ஸின் அணுகுமுறையோ உலகளாவியதில்லை என நிராகரிக்கப்பட்டுள்ளது. ஒரு சீரான வளர்ச்சிப் போக்கில் எல்லாச் சமூகங்களும் நகர்வதில்லை. ஆண்வழி சமூக அமைப்பில் பெண்கள் சொத்துரிமைகொண்டவர்களாக சில சமூகங்களில் இருக்கிறார்கள். எனவே இந்த ஆய்வு உலகளாவியதல்ல என்பதை மார்க்சியர்கள், பெண்ணியவாதிகள் உட்பட பலர் ஏற்று கொண்டுள்ளனர்.
அத்துடன் மார்க்ஸை விட ஏங்கல்ஸ் பெண்களின் பிரச்சினை பற்றிக் கரிசனை கொண்டிருந்தார் எனப் பொதுவான கருத்துள்ளது. மார்க்ஸ் வர்க்கக் கூறுகளிலேயே முதன்மையான கரிசனை கொண்டிருந்ததாலும் பெண் பிரச்சினை பற்றி பெரிதும் அலட்டிக்கொள்ளாததாலும் ஏங்கல்ஸைப் போன்று பெண்களைப் பற்றிய சமூகக் கற்பிதங்களை மோர்கனின் சமூக டார்வினிஸத்தின் மீது ஏற்றி மேலும் தவறான முடிவுகளுக்கு மார்க்ஸ் வராதது நல்ல விடயமே எனச் சில பெண்ணியவாதிகள் கருதுகிறார்கள்.
இது ஒருபுறமிருக்க, முதலாளித்துவ சமுதாயத்தில் பெண்களின் நிலை பற்றிய ஏங்கெல்ஸின் முக்கியமான கருதுகோள் அவரது மறு உற்பத்தி பற்றிய கூற்று. 'முதலாளித்துவத்தில் பெண்கள் பாலியல் சீரழிகிறார்கள்' எனக் கூறிய நாவலனின் கட்டுரையில் இது பற்றி எவ்வித மேற்கோள்களும் இல்லை. பெண்ணியச் சிந்தனையில் ஏங்கெல்சின் இந்த கருதுகோள் முதன்மையானது.
ஏங்கெல்சும், உழைப்பின் மறு உற்பத்தியும் (reproduction of labour)
'பாலியல் இயந்திரம்' என்று உச்சாடனம் செய்யும் நாவலனுக்கு இடதுசாரிப் பெண்ணியவாதிகளின் தத்துவார்த்த அடிப்படைக்கு ஏங்கெல்சின் மறு உற்பத்தி பற்றிய கோட்பாடும் தத்துவ அணுகலும் எவ்வாறு செழிப்பூட்டியது என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பது ஆச்சரியம்தான். முதலாளித்துவ சமூக அமைப்பில் பெண்களின் பாத்திரம் பற்றிய அறிதலை ஏங்கெல்சின் 'மறு உற்பத்தி' கருத்தாக்கம் நன்கு விளக்குகிறது.
முதலாளியப் பொருளாதார அடிப்படை அலகாக குடும்பமே இருக்கிறதென்றார் ஏங்கெல்ஸ். குடும்பத்தில் 'மறு உற்பத்தி' பாத்திரத்தைப் பெண் வகித்தாள். மறு உற்பத்தியென்பது வெறுமனே இனபெருக்கம் மட்டுமல்ல. அது உழைப்பின் மறு உற்பத்தியும் சேர்ந்ததே. உழைப்பின் மறு உற்பத்தியென்பதன் பொருள் பற்றிப் பல்வேறு விவாதங்கள் 80களில் இடதுசாரிப் பெண்ணியவாதிகளால் நிகழ்த்தப்பட்டன. வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் உழைப்பு மதிப்பை எவ்வாறு கணக்கிடுவது? மறு உற்பத்திக்கான அதன் பங்கென்ன? சந்தையில் தன் உழைப்பை விற்கும் தொழிலாளியை வீட்டில் பராமரிப்புக்கும் பெண்ணின் உழைப்பின் மதிப்பு என்ன? எதிர்காலத் தொழிலாளிகளாக உருவாகும் குழந்தைகளை மறு உற்பத்தி பண்ணும் பெண்களின் உழைப்பை மார்க்ஸியம் கவனத்தில் கொள்கிறதா? போன்ற புதிய கேள்விகள் எழுந்தன. இவ்வாறான பெண்களின் மறு உற்பத்தி உபரிமதிப்புக்கு எவ்வாறு பங்களிக்கின்றது போன்ற தத்துவார்த்த விவாதங்கள் பெண்ணியவாதிகளால் முன்வைக்கப்பட்டன. மறு உற்பத்திக்கும் உபரி மதிப்புக்குகான தொடர்பு பற்றியே இவ்விவாதங்களின் அடிப்படை அமைந்திருந்தது. இது பற்றிய புரிதல் நாவலனிடம் இல்லையென்றே தோன்றுகிறது.
ஒரு துணை உறவு (monogamy) என்பது சமூகத்தால் பெண்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது என்பதை ஏங்கெல்ஸ் தெளிவாகப் புரிந்துகொண்டிருந்தார். ஒருதுணை உறவை ( ஊத்தைத் தமிழில்: கற்பு ) பெண்கள் மட்டுமே கடைப்பிடிக்க வேண்டுமென்பதே ஆணாதிக்க சமூக விதி. காலம்பூராகவும் ஆண்கள் சமூக அங்கீகாரத்துடன் பல பெண்களைத் தமது உடமைகளாக வைத்திருக்கும் உரிமையை பெற்றிருந்தனர் என்பது வெளிப்படை.
முதலாளித்துவமும் பெண்ணின் உழைப்பு மீதான சுரண்டலும்
நாவலனின் வாதத்திற்கு வருவோம். நாவலன் சொல்கிறார்:
"முதலாவதாக முதலாளித்துவம் உருவான காலப்பகுதியில் சமூகத்தின் அரைவாசிப் பகுதியான பெண்கள் வீட்டுக்குள் அடங்கிக் கிடந்த போது தொழிற்சாலைகளுக்கும் ஏனைய புதிய உற்பத்தித் துறைகளுக்கும் தொழிலாளர் சக்தி தேவைப்பட்ட நிலையில் பெண்களைப் பாவிக்க வேண்டிய தேவை ஏற்பட அவர்களின் விடுதலைக்கான கோசம் இந்த முதலாளித்துவ தத்துவ கர்த்தாக்களால் முன்வைக்கப்பட்டது. அது எந்த நிராகரிப்புமின்றி பெண்களாலும் புதிய பெண்ணிலைவாதிகளாலும் உள்வாங்கப்பட்டன. பெண்ணிலைவாத கோசங்களும் கருத்துக்களும் சமூகத்தின அதிகார மட்டத்திலிருந்தே ஊக்குவிக்கப்பட்டது."
நாவலனுக்குக் குறைந்தபட்சம் அவர் மேற்கோள் காட்டும் ஏங்கெல்ஸின் கருதுகோளைத் திரிக்காமல் சொல்லும் நேர்மை கூட இல்லை. ஏங்கெல்ஸ் எழுதுகிறார்:
"Since large-scale industry has transferred the woman from the house to the labour market and the factory, and makes her, often enough, the bread-winner of the family, the last remnants of male domination in the proletarian home have lost all foundation - except, perhaps, for some of that brutality towards women which became firmly rooted with the establishment of monogamy. . . .It will then become evidence that the first premise for the emancipation of women is the reintroduction of the entire female sex into public industry."
-Frederick Engels, The Origin of the Family, Private Property and the State.
"பெரும் தொழிற்துறை உருவாக்கமானது வீட்டுக்குள் இருந்த பெண்கள் தமது உழைப்பைச் சந்தையில் விற்கும் நிலையை ஏற்படுத்தியது. அவளைக் குடும்ப பொருளாதாரத்தை கொண்டு நடத்துபவளாக மாற்றியது. ஒரு துணை மணமுறையில் ஆழப் பதிந்துள்ள குடும்ப வன்முறை தவிர்ந்த மற்றய குடும்ப விடயங்களில் ஆணாதிக்கம் தனது அடிப்படையை இழந்தது. பெண்களைப் பொது வேலைதளங்களில் மீளறிமுகம் செய்ததானது பெண் விடுதலைக்கான முதல்படி" என்கிறார் ஏங்கெல்ஸ். (கவனிக்க: ஏங்கல்ஸ் குறிப்பிடுவது தொழிலாளி வர்க்கப் பெண்களை )
ஏங்கெல்ஸின் இக்கருத்தை முழுமையாகப் பெண்ணியவாதிகள் ஏற்றுக்கொள்ளாவிடினும் மார்க்ஸியராகத் தன்னை முகம் காட்டும் நாவலன் மாக்சியத்தையே திரித்துக் கூறுவேண்டிய தேவையென்ன என்பதை வாசகர்கள் - குறிப்பாக நமது சகோதரிகள் -புரிந்து கொள்ளுவர். பெண்களைச் சுரண்ட பாலியல் ஒடுக்குமுறைக்கு ஆளாக்க பெண் விடுதலைக் கோஷத்தை முதலாளித்துவம் முன்வைத்தது. பெண்ணிய வாதிகள் அதற்காகப் பாவிக்கப்பட்டார்கள் என்பதெல்லாம் ஆதாரமில்லாத அளப்புகள். மேற்கத்திய நவீன சமூக வரலாற்றைக் குறித்த நாவலனது வாசிப்பையும் அவரது சிரிப்புக்கிடமான முடிவுகளையும் கண்டு நான் அதிர்ந்துதான் போனேன். மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் அல்லது அதற்கு பின் வந்த பல மார்க்சிய அறிஞர்கள் இவ்வாறான எவ்வித உண்மைக்கு புறம்பான தகவல்களையும் சொல்லவில்லை. இவ்வளவு பாரதூரமான தவறான கருத்துகளை இவர் முன் வைப்பது அறிவில்லாததலா? வாசிப்பில்லாததாலா? அல்லது நேர்மையில்லாததாலா? என யோசிக்கத் தோன்றுகிறது. அவருடைய ஒருசில மார்க்ஸிய உச்சாடனங்களைத் தவிர்த்தால் கட்டுரையில் தீவிர பெண் எதிர்ப்பும் பெண்ணிய எதிர்ப்புமே மீதம்.
இதனை விட, முதலாளித்துவ தொடக்க காலத்தில் பெண்கள் ஆண்களை விட அடிமட்ட வேலைகளிலேயே அமர்த்தப்பட்டார்களென்றும் ஆண்களே அவர்களுக்கு மேலாளராக இருந்தனரென்றும் (இன்றும் கூட) அவர்களுக்கு ஆண்களை விடக் குறைவான ஊதியமே வழங்கப்பட்டதென்பதும் மார்க்சியர்களிலிருந்து பெண்ணியவாதிகள் வரை அறியப்பட்ட உண்மை. இவர் கூறுவது போல் முதலாளித்துவம் அனைத்துப் பெண்களையும் ஒன்றாகச் சேர்த்துத் தொழிலாளராக அன்று மாற்றியிருப்பின் பெண்ணுரிமைவாதிகளின் சமவுரிமை போராட்டங்கள், வாக்குரிமைப் போராட்டங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து இன்று ஆண்களுக்குச் சமமாகப் பெண்களும் உழைப்புச் சந்தையில் இருந்திருக்க வேண்டும். மாறாக இன்றும் வேலைத்தளங்களில் ஆண்களே அதிகம். வேலைத் தளங்களில் பாலியற் பாகுபாடுகள் தொடர்கின்றன. வறுமைப்பட்ட கிராமப்புறப் பெண்கள் முதலாளித்துவ உருவாக்கத்துக்கு முன்னரும் காடுகளிலும் கழனிகளிலும் வேலை செய்தார்கள் என்பதை நினைவு படுத்தவேண்டும். முதலாளித்துவம் உழைப்பை விற்பதற்கான கதவை திறந்துவிட்ட போதிலும் பெண்கள் அவ்வளவு இலகுவாகத் தமது உழைப்பைச் சந்தையில் விற்க முடியவில்லை.
முதலாளித்துவமும், தந்தைவழிச் சமூக அமைப்பும் (patriarchy) ஒன்றோடு ஒன்றாகப் பின்னிப்பிணைந்து எவ்வாறு சிக்கலான வலைபின்னல் போன்ற ஒரு சமூக அமைப்பைக் கொண்டிருக்கின்றது என மார்க்ஸிய பெண்ணியவாதிகள் விளக்கினர். காலங்காலமாக் சமூகத்தால் உள்வாங்கப்பட்ட ஆணாதிக்க கருத்தியல் இச்சமூக அமைப்பில் என்ன பாதிப்பைச் செலுத்துகின்றது என்பதைப் பற்றிப் பெண்ணியவாதிகள் புரிந்துதான் வைத்திருக்கிறார்கள். பெண்கள் வேலைக்கு சென்றாலும் அவர்களது மையம் வீடுதான் (மறு உற்பத்திக்கான தேவை) என்பதை தந்தைவழி - முதலாளித்துவ சமூக அமைப்பு நடைமுறையிலும் கருத்தியலிலும் கொண்டிருக்கிறது. ஏங்கெல்ஸை மீள் வாசிப்பு செய்தால் இது புரியும். முதலாளித்துவ வளர்ச்சியின் ஆரம்பங்களில் தொழிலாளிக்குக் குடும்பம் இருப்பின் 'குடும்பக் கூலி' கொடுக்கப்பட்டது. இதற்கான காரணம் பெண்ணை வீட்டில் முடக்குவதே. நாவலன் கருதுவது போல முதலாளித்துவ வளர்ச்சி பெண்களை ஒரே கூடைக்குள் போட்டுத் தொழிலாளர்களாக மாற்றவில்லை. இது உண்மையில் ஒரு சிக்கலான வளர்ச்சி போக்கு.
பெண்களின் 'இயல்பு', அவர்களது பகுத்தறிவின்மை, உணர்ச்சிவசப்படுதல், உடற்பலமின்மை, மதி நுட்பமின்மை போன்ற சனாதன கருத்துகளும் வாதங்களும் இன்றும் நிகழ்ந்து வருகின்றன. இதனால் ஆண்களுக்குச் சமமாக வேலைத்தளங்களில் வேலை செய்வதற்குப் பெண்களுக்கு இன்றும் வாய்ப்புகள் மறைமுகமாக மறுக்கப்படுகின்றன.
இரண்டாவது உலக யுத்த காலத்தில் அமெரிக்கா, ஐரோப்பா குறிப்பாகப் பிரித்தானியா தொழிலாளர் பற்றாக் குறையை சந்தித்தது. யுத்தத்தில் திரளான ஆண்கள் கலந்து கொண்டதால் இந்தப் பற்றாகுறை ஏற்பட்டது. இந்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முன்னெப்போதும் இருந்த நிலையை விடப் பெண்கள் 'தேசபக்த கடமை' எனும் பேரில் வேலைத் தளங்களை நிரப்பினர். ஆயுத தொழிற்சாலைகளிலேயே இவர்கள் பெரும்பாலும் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். யுத்தப் பொருளாதாரத்தைத் தாக்குப் பிடிக்கவே இவர்கள் வேலைக்கு அமர்த்தபட்டனர். உணவு, உடைகள் தயாரிப்பிலும் ஈடுபடுத்தப்பட்டனர். ஆண்கள் யுத்தத்திலிருந்து திரும்பி வந்தவுடன் தங்களது பெண்கள் வீட்டுக்கு திரும்புவதையே விரும்பினர். தங்களது வேலைகள் திரும்பவும் தங்களுக்கே கிடைக்க வேண்டுமென எதிர்பார்த்தனர். பெண்கள் வேலைத்தளங்களில் தங்கள் சம உரிமைகளை நிலை நாட்ட மீண்டும் போராட வேண்டியிருந்தது. இவ்வாறு பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் வெவ்வேறு நாடுகளில் பெண்களை வித்தியாசமான முறைகளில் பாதித்துள்ளன.
பெண்கள்: நுகர்வாளர்கள் - நுகரப்படுபவர்கள்
முதலாளித்துவமானது அனைத்துப் பொருட்களையும் பண்டமாக மாற்றீடு செய்து விற்று லாபமீட்டவே விரும்பும். எடுத்துக்காட்டான (மொடல்) நுகர்வாளர்கள் என்ற வகையிலேயே பெண்களை முதலாளித்துவம் குறி வைக்கிறது. வர்த்க விளம்பரங்களில் பெண்களை அலங்காரம் கலையாத குடும்பப் பெண்களாகவும், தாயாகவும், காதல் மனைவியாகவும், வீட்டுப் பொறுப்புள்ளவர்களாகவும் அல்லது பெண்களின் உடலழகை காட்டுவதாகவும் காட்சிப் படிமங்கள் முன் வைக்கப்படுகின்றன. சோப் விளம்பரம், கார் விளம்பரங்கள், குடிவகை, சலவைத் தூள் விளம்பரம், அழகு சாதன விளம்பரம் என்று எண்ணற்ற எடுத்துக்காட்டுகள் இவற்றிற்குச் சான்றுகள். பெண்களை நுகர்வாளர்களாக்குவது அல்லது பெண்களின் உடலைக் காட்டி ஆண்களை நுகர்வாளராக்குவதே இந்த வித்தை. இவ்வகையில் முதலாளித்துவ விளம்பர முறையானது பெண்கள் பற்றிய காலங்காலமான கலாச்சார கருத்தியல் படிமங்களையும் காப்பாற்றி வருகிறது. கற்புக்கரசியாகவும் நல்ல தாயாகவும் மனைவியாகவுமே இப்படிமங்கள் உருவாக்கம் செய்யப்படுகின்றன.
"பெண்கள் இரவு விடுதிகளிலும், பாலியல் விடுதிகளிலும், பாலியல் தொழிலாளர்களாகவும் பணியாற்றுவது முதலாளித்துவத்தின் சீரழிவுக் கலாச்சாரத்தின் ஒரு பகுதி முதலாளித்துவம் பெண்களைப் பாலியல் இயந்திரங்களாக மாற்றி விட்டது" என்கிறார் நாவலன். நாகரீக சமூகத்தின் தோற்றமும் விபச்சாரமும் ஒரே காலம் என்பது பொதுப்புத்தி சார்ந்த நம்பிக்கை. பெண்கள் இவ்வாறான வேலைகளில் ஈடுபடுத்தபட்டது முதலாளித்துவம் முன்தோன்றா காலம் என்பதைத் தெருவில் போகும் எவரைக் கேட்டு பார்த்தும் தெரிந்து கொள்ளலாம். அரசர்களும் நிலப் பிரபுக்களும் தங்களது பாலியல் வக்கிரங்களுக்காக அந்தப்புரங்களை நிரப்பியது பற்றி ஆரம்பத்தில் கூறியதை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். பெண்கள் பாலியல் அடிமைகளாக முதலாளித்துவ காலத்துக்கு முன்னரே இருந்திருக்கிறார்கள். இராஜராஜ சோழன் என்ற சோழப் பேரரசன் ஆயிரக்கணக்கான பெண்களைப் பொட்டுக் கட்டித் தேவதாசிகளாக்கியது வரலாறு. முதலளித்துவ சமூக அமைப்பில் பாலியல் சுரண்டல் ஒன்றும் புதிதாக முளைத்து வந்ததல்ல. அவ்வாறு பாலியல் சுரண்டலுக்கு ஆளாகும் பெண்களுக்குக் கூடப் பெண்ணிய வாதிகளின் போராட்டங்களால் சட்டப் பாதுகாப்பு குறைந்தபட்சமாவது இருக்கின்றது. பாலியல் தொழிலாளிகளை ஆண்கள் எவ்வாறு மோசமாக நடத்துகிறார்கள் என்பதைப் பெண்ணியவாதிகள் அறிவதும், அவர்களின் பாதுகாப்புக்காக குரல் கொடுப்பதும் பெண்ணிலைவாதப் போராட்டத்தின் ஒரு அம்சமாகும்.
மேற்கத்திய பெண்ணியம்
மேற்கு நாடுகளில் பரந்த அளவில், வெவ்வேறு கருத்தியல் தளங்ளில், கால கட்டங்களில் தோன்றிய பெண்ணிய அமைப்புகளை எளிமைப்படுத்தி அவை அனைத்தையும் ஒரே தராசில் நிறுக்கும் கைங்கரியத்தை நாவலன் தனது கட்டுரையில் செய்திருக்கிறார். இது கோட்பாடு ரீதியாக முற்றிலும் தவறானது.
பெண்ணிய அமைப்புகள் ஒற்றைப் பரிமாணத்துள் அடங்காதவை என்பது இன்னொரு அரசியற் பாலபாடம். பல்வேறு தத்துவார்த்த கோட்பாடுகள், அரசியல் நிலைப்பாடுகள் பெண்ணிய அமைப்புகளுக்குள் காணப்படுகின்றன. மேற்கத்தியப் பெண்ணியத்தைப் பற்றிய பின் காலனித்துவ பெண்ணிய திறனாய்வும், வெள்ளைப் பெண்ணியப் பார்வை பற்றிய கருப்புப் பெண்ணியத் திறனாய்வும் இதற்குள் அடங்கும்.
பெண்ணியம் என்ற பரந்தளவிலான விசயத்துக்குள் இருக்கும் பல்வேறு தத்துவார்த்த அரசியல் நிலைப்பாடுகளைத் திறனாய்வு வசதி கருதி 7 வகைகளாக வகுக்கலாம்:
1. பெண்ணியத்தின் முதலாவது அலை- வாக்குரிமைப் போராட்டம்.
2. அமெரிக்கா - அய்ரோப்பாவில் தோன்றிய பெண்ணியத்தின் இரண்டாவது அலை (1970) மத்தியதர வெள்ளையினப் பெண்களால் இது முன்னெடுக்கப்பட்டிருப்பினும் கருப்பின பெண்களும் பெண் தொழிலாளிகளும் தங்களது தனித்துவ அடையாளங்களுடன் ஒருங்கிணைந்தனர்.
3. தீவிர பெண்ணிய அமைப்பு - ஆண்களே அனைத்து அடக்கு முறைகளுக்கும் காரணம் என்ற பால் உயிரியல் நிர்ணயவாத அடிப்படையில் முகிழ்த்த சாராம்சவாத போக்குடைய அமைப்பு.
4. சோசலிஸ்ட் - மார்க்சிஸ்ட் பெண்ணியம் - ஆணாதிக்க முதலாளிய சமூக அமைப்பே பெண் ஒடுக்கு முறையின் காரணம் என்ற கருத்தாக்கம்.
5. அய்ரோப்பிய மையவாத வெள்ளையின பெண்ணியத்தை விமர்சித்து எழுந்த கருப்பின பின்காலனித்துவ பெண்ணியம்
6. பின் அமைப்பியல் வாத பெண்ணியம் - அதிகாரம் , அறிவு, ஒழுங்கமைப்பு, விளிம்புநிலை போன்ற மிஷல் ஃபூக்கோவின் கருதுகோள்களல் ஆகர்சிக்கப்பட்ட அமைப்பு
7. பெண்ணின் அடையாளம் எவ்வாறு செய்முறை, செயற்பாடுகள், Performance ஆகியவற்றால் கட்டமைக்கப்படுகின்றன என்பதைப் பற்றிய பார்வை கொண்ட பெண்ணியம்- பால் வேறுபாடுகள் போன்றவை செயல் வடிவம் சார்ந்தவை. அவற்றுக்கு உயிரியல் சாராம்சம் இல்லை எனச் சொல்பவர்கள். அடையாளங்கள் நெகிழ்வுத் தன்மை கொண்டவை தொடர்ந்து மாறிக்கொண்டிருப்பவை என்பவர்கள். இவர்களும் ஃபூக்கோவினால் ஆகர்சிக்கப்பட்டவர்கள்.
மேற்குறிப்பிட்ட நிரல்படுத்தலில் உள்ள போக்குகள் நிச்சயமாகத் தனித்தனியாக நிற்கும் போக்குகளல்ல. விளக்குவதற்கு ஒரு வசதி கருதியே இவ்வாறு நிரல்படுத்துகிறோம். ஒவ்வொரு போக்குகளுக்கிடையே சில அடிப்படை ஒற்றுமைகளும் உண்டு. வேற்றுமைகளும் உண்டு. இதனை விளக்க நீண்ட கட்டுரை எழுத வேண்டிவருமென்பதால் இங்கே தவிர்க்கிறேன்.
இந்த விடயங்களை நான் சொல்ல வந்ததன் நோக்கம் எதுவெனில், பின் காலனித்துவ கருப்பு பெண்ணியவாதிகள் மேற்கத்திய பெண்ணிய பார்வை மேல் வைத்த விமர்சனங்களை அடிப்படையாக வைத்து நாவலன் எதுவும் சொல்லவில்லை. அனைத்து பெண்ணியத்தையும் ஒரே கூடைக்குள் போட்டு 'பாலியல் சீரழிவு', 'சமூக கலாச்சார சீரழிவு' என்று அரற்றுவதே அவரது கட்டுரைக்கான அடித்தளம்.
மறு உற்பத்தி பாலியல் பற்றிய பெண்ணின் உரிமைகள் குறித்துப் பொதுவான உடன்பாடு இந்த பிரிவுகளுக்குள் உண்டு. ஒரு விடயம் தெளிவு படுத்த வேண்டும். பின் காலனித்துவ பெண்ணியவாதிகளுக்கும் மேற்கத்தைய பெண்ணியவாதிகளுக்கும் இடையில் பெண்களின் பாலியல் உரிமைகள் பற்றி கருத்து வேறுபாடு கிடையாது.
பெண் ஒடுக்கு முறையை ஒற்றைப் பரிமாணமாகக் கருத முடியாது. ஒரு பெண்ணின் சமூக அந்தஸ்து, அவரது வர்க்கப் பின்னணி, நிறம், சாதி போன்ற விடயங்கள் அந்த அடக்கு முறையின் வடிவங்களை அதன் வீச்சை தீர்மானிக்கின்றன. கருப்புப் பெண் கருப்பாக இருப்பதாலும் பெண்ணாக இருப்பதாலும் அவள் மீதான அடக்குமுறையும் ஒரு வெள்ளைக்கார பெண்ணின் மீதான பெண் அடக்கு முறையும் வேறுபடுகின்றன. மற்றவர்கள் போலவே பெண்களும் பல்வேறு அடையாளங்களை கொண்டிருக்கிறார்கள். பின் காலனித்துவ கருப்பு பெண்ணியவாதக் கருத்தாக்கங்கள் இவ்வாறான அடையாள பிரச்சனைகளையும் ஒரு குறிப்பிட்ட பெண்ணின் சமூக இருப்பு / அந்தஸ்து பற்றியும் கவனெமெடுத்துப் பெண்ணை ' பெண்' என்ற ஒரே அடையாளத்துள் புதைத்துவிட முடியாதென்பதை வலியுறுத்தின. ‘பெண்’ என்ற கட்டுதல் அல்லது கட்டமைத்தல் சமூகத்திலேயே ஏற்படும் கட்டுதல் ஆகும். பெண் ஒடுக்குமுறை, ஆணாதிக்கம் பற்றிய இறுக்கமான கோட்பாடுகளையும் உலகப் பொதுவான பார்வைகளையும் இவர்கள் நிராகரிக்கிறார்கள். இந்த அடையாளம் நெகிழ்வானது. மாறக்கூடியது என்பதே இவர்களது துணிபு.
இந்த எல்லா அமைப்புகளும் அவர்களது தத்துவார்த்த பின்புலமும் அரசியல் -பொருளாதார உரிமைகள், மறு உற்பத்தி, பாலியல் உரிமைகள் ஆகிய விடயங்களில் பெண்கள் போராட உந்து சக்தியாகச் செயற்பட்டன. இதன் காரணமாக மேற்குலகில் பெண்கள் அரசியல் அதிகாரத்திற்கும் கல்வி, வேலை வாய்ப்பு போன்ற விடயங்களில் முன்னுக்கு வரவும் குறைந்த பட்ச சுதந்திரத்தை அடையவும் ஓரளவுக்கு வழி வகுத்தன. ஆனாலும் இன்னும் வெகு தூரம் போகவேண்டும் என்பது உண்மையே. நவ தாராளவாத கொள்கையின் பிறப்பிடமான அமெரிக்காவில் குடும்ப வன்முறையால் பெண்கள் கொல்லப்படுவதே சாவதற்கு முதன்மைக் காரணியாக இருக்கிறது. அதே வேளை ஆண்கள் துப்பாக்கி சூட்டில் அல்லது கார் விபத்தில் கொல்லப்படுவதே அதிகம்.
பெண்ணின் உடல் - பாலியல் பண்பு - மறு உற்பத்தி உரிமை
Women’s body sexuality and reproductive rights
பெண்ணியவாதத்தின் அனைத்துத் தத்துவார்த்த பிரிவுகளும் ஒருவிடயத்தில் ஒன்றுபடுகின்றன. ஏன் ஆண்களும் ஆணாதிக்கமும் பெண்களின் உடலை கட்டுப்படுத்த முனைகின்றனர் என்ற விடயம் அவர்களின் ஒரு முதன்மைக் கேள்வியாக உள்ளது. பெண்ணின் உடல் மீது அதிகாரத்தை பிரயோகித்து அந்த ஒடுக்குமுறை உத்திகளை அவள் உடலில் வரைந்து அவளுடைய பாலியல் ரீதியான கீழ்ப்படிவை ஈட்டி அதுவே இயல்புநிலையாக (normalisation) கட்டமைக்கப்படுகிறது.
பெண்ணிய அமைப்புகள் தோன்றும்வரை இருந்த கருத்து என்னவெனில் பெண்ணின் கடன் ஆண்களை திருப்திப்படுத்தல் என்பதே. அவளது குடும்பக் கடமைகளை நிறைவேற்றுதல் என்பதே. பெண்ணின் உணர்வுகள் அவளது சுய மரியாதை அவளது பாலியல் விருப்பு வெறுப்புகள் பற்றிய விடயங்கள் ஒதுக்கி வைக்கபட்டன. சோம்பலான வீட்டு வேலை செய்யாத கணவன், தனது பாலியல் தேவைகளை முடித்த மறு கணத்திலேயே குறட்டைவிட்டுத் தூங்கும் ஒரு கணவனுடன் எந்த பெண்தான் விருப்பத்துடன் பாலியல் உறவு கொள்ள முடியும்? இது தொடரும் போது அவள் இது தான் உலகம் என நம்பி தனது அடிமை வாழ்வைச் சரியென நினக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறாள். தாயென்றும், விசுவாசமான மனைவியென்றும் ,அர்ப்பணிப்புள்ள காதலியென்றும் உணர்ச்சிபூர்வமாகக் கட்டமைக்கப்பட்ட கருத்தியல் படிமங்கள் பெண்ணின் இரண்டாந்தர நிலையை நியாயப்படுத்துகின்றன.
தான் பலவீனமானவள், பகுத்தறிவில்லாதவள், கடின உடலுழைப்புக்கு இலாயக்கில்லாதவள், தன்னைக் கவனிக்க முடியாதவள் என கட்டமைக்கப்பட்டிருக்கும் உளவியல் பொறிக்குள்ளிருந்து அவள் வெளிவருவதே தன்மேலான ஒடுக்குமுறைக்குத் தானே தன்னை அறியாமல் பலியாவதிலிருந்து அவளைத் தடுக்கும். இந்தப் பலிபீடத்திலிருந்து அவள் மீள்வதற்கு அவள் தனது உறவுமுறைகளை -பாலியல் உறவு முறை உட்பட - மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கிறது.
தனிச்சொத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும் தனது வாரிசுக்கு அது சேர்வதை உறுதி செய்யும் மார்க்கமுமே பூர்சுவா மணமுறை. அந்த வகையில் பெண்களின் பாலியல் பண்பும் பாலியல் நடைமுறையும் திருமண பந்தத்தால் கட்டுப்படுத்தப்படுகிறதென்ற பொருளாதாரவாத ஆய்வுமுறை சரியானது. ஆனால் அதுவே எல்லாவற்றிற்குமான விளக்கம் என்பது சமூகச் சிக்கல்களை ஆழமாகப் புரிந்துகொள்ளப் பஞ்சிப்படும் மிக எளிதுபடுத்தப்பட்ட வாதமாகும்.
வன்முறை மூலமும் அளவுகடந்த கட்டுப்பாடு மூலமுமே பெண்கள் அடிபணியும் நிலைக்கான சமூகக் கட்டுதல் (social construction of gender- which is different from sex. Sex is defined as biological while gender is seen as being socially constructed.) மேற்கொள்ளபட்டது. இந்த வன்முறை பெண்களின் உடலை நோக்கியே ஏவப்படுகிறது. பெண்ணின் உடலை அடிப்படையாக கொண்ட சமூகக் கட்டுமானமே பெண் பற்றிய கருத்தாக்கம் என்றனர் பெண்ணியவாதிகள். பெண்களின் உடலை கட்டுப்படுத்துவது என்பது அவளது உடை, நடை, பாவனையிலிருந்து அவளது உறவுகள் வரைக்கும் நீளும். இந்த உடல்ரீதியான கட்டுப்பாடு கருத்தியல்ரீதியாக அவளுக்குத் தன்னை பற்றிய ஒரு விம்பத்தை கொடுக்கிறது. அவளது அடிமைத்தனம், அதிகார எல்லை, பாலியல் பண்பு அனைத்தும் அவளது உடலில் சமூகத்தால் பொதித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கையறுநிலையில் பெண்ணியவாதிகள் இதுவரை பொறுத்தது போதும்! எங்களது உடலை கட்டுப்படுத்துவதற்கு எமக்கு மட்டுமே உரிமையுள்ளது! என முழங்கினார்கள். எப்போது கருத்தரிப்பது, எப்போது பிள்ளை பெறுவது, திருமணம் மூலமாகக் குழந்தை பெறுவதா இல்லையா, எங்கு, எப்போது யாருடன் உடலுறவு கொள்வது என்பதைத் தீர்மானிக்கும் உரிமை பெண்களுடயது என்றனர். பெண்கள் திருமண உறவிலும் கூட தங்கள் உடலைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க விரும்பினர். கணவன் மனைவியிடையே மனைவியின் விருப்பமின்றிப் பாலியல் வன்முறை நிகழ்வதைத் தண்டனைக்குரிய குற்றமாகக் கொண்டு வந்ததில் பெண்ணியவாதிகளுக்கும் பெண்ணியவாத ஆதரவாளர்களுக்கும் பெரும் பங்குண்டு. ஒரு பெண் ஒரு ஆணுக்கு விசுவாசமாக இருக்கிறாளா இல்லையா என்பது அவளது தனிப்பட்ட விடயம். அதில் மற்றவர்கள் தலைபோட வேண்டிய அவசியமில்லை. ஆண்களின் உறவுகள் சம்பந்தமாக சமூகச் சட்டங்களோ, நடைமுறைகளோ இல்லாதபோது பெண்ணை மட்டும் அவ்வாறு நிர்ப்பந்திப்பது என்ன நீதியென்றது பெண்ணியம். இதைப் பாலியல் சீரழிவு என்கிறார் மார்க்சிய 'வார்த்தைகளை' மாத்திரம் பிரயோகிக்கும் நாவலன்.
தனது பாலியல் பண்பின் மேல் சுமத்தும் கட்டுப்பாடுகளை பெண் எதிர்க்கும்போது அது இதுவரைக்கும் இருந்து வந்த நடைமுறையை கேள்விக்குள்ளாக்கியது. இதுவரையும் தன்மேல் சுமத்தப்பட்ட பெண் சம்பந்தமான கடமைகள், அவளது பாலியல் பண்பு எப்படி இருக்க வேண்டுமென்ற நிபந்தனைகள் போன்றவற்றை இனியும் அவள் கேள்வியின்றி ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை. இந்த மாற்றம் நிகழும்போது ஆண்கள் கவலை கொள்ள தொடங்குகின்றனர். அப்போது தான் 'சமூக சீரழிவு', ' கலாச்சார சீரழிவு' போன்ற பிற்போக்கான கோஷங்களை இவர்கள் முன்வைக்கின்றனர். இதன் பின்னால் ஒளிந்திருப்பது குடும்ப வாழ்வின் புனிதம் பற்றிய கற்பிதமே. கணவன் மனைவியை அடிக்கும் போதோ, கல்யாணத்துக்கு வெளியே உறவு கொண்டாலோ, பெண்ணுக்குத் தனது கருவை அழிக்கும் உரிமையை மறுக்கும்போதோ, மனைவியை கைவிட்டாலோ திருமணம் / குடும்பம் பற்றிய புனிதங்களை இவர்கள் பேசுவதில்லை. ஆனால் பெண் ஒரு மோசமான கணவனை விட்டு 'எஸ்கேப்' பானால் போதும் இவர்கள் குடும்ப புனிதத்தைப் போதிக்க வரிந்து கட்டிக்கொண்டு வந்துவிடுகிறார்கள்.
மேற்கு நாடுகளில் பெண்கள் தம்மீது திணிக்கப்பட்ட சமூகக் கட்டுப்பாடுகளை எதிர்கொண்ட போது நாவலன் பாடும் இதே வசவுகள் தான் பல தசாப்தங்களுக்கு முன்னால் பாடப்பட்டன. இத்தனை போராட்டங்களுக்கு பின் இன்றும்கூட ஒரு பெண் ஆணை எதிர்த்து நின்றால் அவளை ' வேசி ' என்று சொல்வது ஐரோப்பிய சமூகத்திலும் நடக்கிறது. இந்நிலையில் முற்போக்கு முத்திரை குத்திக்கொள்ளும் சில ஆண்கள் இதே பெண்ணிய வெறுப்பில் இருந்து கொண்டு பெண்ணியத்தை பற்றிய வெற்று விமர்சனம் வைப்பது இவர்களது அச்சத்தையே வெளிப்படுத்துகிறது.
வெவ்வேறு தத்துவார்த்தப் பின்புலத்தைப் பெண்ணிய அமைப்புகள் கொண்டிருப்பினும் ஒரு புள்ளியில் அவர்கள் இணைகின்றனர். தனது பாலியல் உறவை தேர்ந்தெடுக்கும் உரிமை, யாருடன் பாலியல் உறவை எப்போது வைத்து கொள்ளலாம் என்ற உரிமை, தனது உடல் சம்பந்தமாக முடிவெடுக்கும் உரிமை ஆகியவை பெண்ணின் அடிப்படை உரிமைகள் என்கின்றனர் பெண்ணியவாதிகள். இது மேற்கு நாட்டு பெண்களுக்கு மட்டுமே உரித்தானதல்ல. தமிழ் பெண்களுக்கு உரித்தான உரிமையும் கூட. குடும்பம், பாலுறவு ஆகியவை பெண்ணடக்குமுறையின் கருவிகளாக இருப்பது மேற்கு நாட்டில் மட்டுமல்ல அனைத்து சமூகங்களுக்கும், தமிழ் சமூகத்திற்கும் பொருந்தும். அவர்கள் என்ன சாதி, என்ன மதம், என்ன நிறம், எந்த வர்க்கம் என்பதற்கு மேலாக இது எல்லா பெண்களுக்கும் பொதுவான அம்சம்.
ஆண் பெண்ணுக்கிடையே உள்ள அதிகார உறவுகள் அவர்களது திருமண, பாலியல் உறவுகளில் தனித்துவமான அர்த்தங்களைப் பெறுகின்றன. தனித்துவமான நெருக்கமும், உறவின் தனித்த பாங்கு உரிமை (private nature) சம்பந்தபட்ட தன்மையும்; அடக்குமுறையையும் கீழ்ப்படிதலையும் அகவியலாக்கி அதுவே அவர்களது வாழ்க்கைமுறையாகும் போது அந்த வாழ்வு சகிக்க முடியாதென அவர்கள் உணர பல வருடங்கள் ஆகின்றன. ஆண்களை இந்த பிரச்சனைகளில் எதிர்கொள்ள வேண்டிய முக்கியத்துவத்தை மறுப்பதற்கில்லை. 'பெண்ணியவாதிகள் பாலியல் விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்' என வசவு பாடும் ஆண்கள் பெண்ணியவாதிகளை ஈர்க்கும் எத்தனையோ முக்கியமான விடயங்களை பற்றிக் கருத்தில் கொள்ளாது, பெண்களின் பாலியல் உரிமைகளை மாத்திரமே தூக்கித் தூக்கிப் பிடிப்பது அரசியல் அதிகாரம், கல்வி, வேலைவாய்ப்பு, மறு உற்பத்தி உரிமைகள் ஆகிய பிரச்சினைகளைப் பேசமால் தவிர்க்கும் தந்திரமாகும்.
நாவலன் சொன்னதற்கு மாறாக - ஆண்கள் பெண்களின் உடலை பயன்படுத்துவது, அவர்களை பாலியல் இயந்திரங்களாகப் பயன்படுத்துவது, அவர்களைப் பாலியல் சுரண்டலுக்கு ஆளாக்குவது ஆகிய விடயங்களைப் பெண்ணியம் முற்று முழுதாக நிராகரித்து வந்திருக்கிறது. அது முதலாளித்துவ விளம்பரங்களையோ, செக்ஸ் தொழிற்சாலைகளையோ ஏற்று கொள்வதில்லை. பெண்ணியத்தின் அனைத்துப் பிரிவுகளும் இவற்றிற்கெதிராக எவ்வாறு போராடுவது, எவ்வாறு இது நிகழ்கிறது என்பது பற்றிய ஆய்வுகளையும் அதற்கான போராட்டங்களையும் நடத்தி வருகின்றன. 'சீரழிந்த மேற்கத்திய கலாச்சாரம்' என்ற கோஷத்தை வைத்துப் பூசாண்டி காட்டும் ஆண்களின் அச்சுறுத்தலுக்குப் பயந்து தமிழ் பெண்ணியவாதிகள் தங்களது பாலியல் உரிமை பற்றியும், மறுஉற்பத்தி உரிமை பற்றியும் பேசாமல் வாய் மூடி இருக்க போவதில்லை.
சாதிய - இன - வர்க்க ஒடுக்குமுறைகளுக்கெதிரான போராட்டங்களைத் தமிழ் பெண்ணியவாதிகள் முன்னெடுப்பார்கள். ஆண்கள் பெண்களின் உடலைப் பயன்படுத்துவது, அவர்களைப் பாலியல் இயந்திரங்களாகப் பயன்படுத்துவது, பெண்கள் வேலைத்தளங்களில் கண்ணியக் குறைவாக இரண்டாம் நிலையினராக நடத்தப்படுவது போன்ற எல்லாவித ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக அவர்கள் போராடுவார்கள். பெண்ணின் உடல் அசுத்தமானது, தீட்டானது போன்ற கற்பிதங்களை மறுத்து அவர்கள் உடலைக் கொண்டாடுவார்கள். குடும்பச் சூழலில் தாம் நடத்தப்படும் முறை பற்றி அவர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள். தமது மகன்கள் தமது மகள்மாருடன் சம அந்தஸ்தும் மதிப்பும் கொடுத்துப் பழகக் கற்பிப்பார்கள். அது மட்டுமல்ல, தமிழ் பெண்ணியவாதிகள் தமது உடலைத் தாமே கட்டுப்படுத்தும் உரிமை மற்றும் தமது பாலியல் பண்பு, மறு உற்பத்தி ஆகியவற்றைத் தீர்மானிக்கும் உரிமை தங்களுக்கே இருக்கிறதென்பதை உறுதிப்படுத்துவார்கள். இது அவர்களது அடிப்படைப் பிறப்புரிமை. நாவலன் உட்பட எவரும் இதைக் கேள்வி கேட்க முடியாது!
பெண்ணியவாதிகள் 'ஒழுக்கம் குறைந்தவர்கள்' அல்லது ' சீரழிந்த விழுமியங்ளைக் கொண்டிருப்பவர்கள்' எனச் சிறுபத்திரிகை சார்ந்த ஆணாதிக்க எழுத்தாளர்களாலும் பொதுப்புத்தி சார்ந்த ஆண்களாலும் வர்ணிக்கப்படுவது நமக்குப் பழகிப்போன சங்கதி. இந்த இரு தரப்புகளும் ஒன்றே. பெண்ணியத்தைப் பற்றிய புறநிலை விமர்சனமென நாவலன் தனது எதிர்ப்பு நிலையை மறைக்க வேடம் போட்டாலும் அவரது தத்துவார்த்தத் தெளிவின்மை, தவறான தகவல்களில் தங்கியிருப்பது, சமூக வரலாறு, பெண்ணியம் மற்றும் மார்க்சியத்தின் அரிச்சுவடி பற்றிய தவறான முடிவுகள் அனைத்தும் சேர்ந்து அவரது உண்மையான நோக்கத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கின்றன. அந்த வெளிச்சத்தில் எங்களுக்கு நாவலனின் பெண்ணிய எதிர்ப்பும் ஆணாதிக்கத் திமிரும் அப்பட்டமாகத் தெரிகின்றன. நாவலன் இன்று போய் நாளை வருக!
18.03.2008
No comments:
Post a Comment