சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் மீது போலீசு தாக்குதல்: உண்மை அறியும் குழு அறிக்கை!
சில ஆண்டுகட்கு முன்னர் இன்றைய முதல்வர் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது தமிழக காவல்துறையின் ஈரல் அழுகிவிட்டது என்றார். ஈரல் மட்டுமல்ல இதயமும் சேர்ந்து அழுகிவிட்டது என்று சொல்லத்தக்க அளவில் சமீப காலத்தில் சில சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. சில மாதங்களுக்கு முன் சட்டக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கலவரங்களின் போது கல்லூரி நிர்வாகம் காவல்துறைக்கு எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து நின்றது விமர்சனத்திற்கு உள்ளானது. இன்று யாருடைய ஆணையும் இன்றி உள்ள நுழைந்து தலைமை நீதிபதி (பொறுப்பு) வேண்டிக்கொண்டும் வெளியேறாமல் இரக்கமற்ற கொடுந் தாக்குதல் ஒன்றை வரலாறு காணாத வகையில் வழக்குரைஞர்கள் மீது மேற்கொண்டுள்ளது. காவல்துறையினரே பொதுச் சொத்துக்களையும் வழக்குரைஞர்களின் உடமைகளையும் கொடூரமாக அழித்துள்ளனர். இந்திய அளவில் இன்று பரப்பரபாகியுள்ள இச்சம்பவம் குறித்த உண்மைகளை அறிய தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய ஒரு உண்மை அறியும் குழு கீழ்க்கண்டவாறு அமைக்கப்பட்டது.
உறுப்பினர்கள்:
1. பேரா. என். பாபையா, மக்கள் ஜனநாயக கழகம் (PDF), கர்நாடகம்.
2. பேரா. ஜி.கே. இராமசாமி, மக்கள் ஜனநாயக கழகம் (PDF), கர்நாடகம்.
3. திரு. வி.எஸ்.கிருஷ்ணா, மனித உரிமைக் கழகம் (HRF), ஆந்திரா.
4. திரு. கோ.சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி.
5. பேரா. அ.மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), தமிழ்நாடு. 6. முனைவர். ப. சிவக்குமார், கல்வியாளர், முன்னாள் அரசு கல்லூரி முதல்வர், சென்னை.
7. பேரா. சே.கோச்சடை, மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL), காரைக்குடி.
8. திரு. அயன்புரம் இராஜேந்திரன், பொறியாளர், தென்னிந்திய இரயில்வே, சென்னை.
9. திரு. சிவகுருநாதன், மனித உரிமைளுக்கான மக்கள் கழகம் (PUHR), திருவாரூர்.
10. திரு. நடராசன், மனித உரிமை ஆர்வலர், சென்னை.
இக்குழு உறுப்பினர்கள் சென்ற பிப்ரவரி 25, 26, 27, 28 ஆகிய தேதிகளில் சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தையும் அழிக்கப்பட்டுள்ள பொது சொத்துக்களையும் பார்வையிட்டனர். பாதிக்கப்பட்ட மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வழக்குரைஞர்களைச் சந்தித்தனர். சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும், சிகிச்சைக்குப் பின் வெளியே அனுப்பப்பட்டுள்ள வழக்குரைஞர்களையும் சந்தித்தனர். சென்னைஉயர்நீதி மன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தலைவர் திரு. பால் கனகராஜ், முன்னாள் தலைவர் திரு. கருப்பன், சென்னை சட்டக் கழகத் தலைவர் திரு.டி.வி.கிருஷ்ணகுமார், நீதிமன்றப் பதிவாளர் (மேலாண்மை) திரு.விஜயன், பாதிக்கப்பட்ட நீதிமன்ற ஊழியர்கள் ஆகியோரையும் சந்தித்தனர். பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது அங்கு வந்த சட்டமன்ற உறுப்பினரும் வழக்குரைஞருமான பதர் சயீத் அவர்களுடனும் உரையாடியுள்ளார். தலைமைப் பதிவாளர் திருமதி.மாலா பதிவாளர் (நிர்வாகம்) ஆகியோர் பார்க்க மறுத்துவிட்டனர். பதிவாளர் விஜயன் எங்களைச் சந்தித்த போதும் பிரச்சினை விசாரணையில் உள்ளது எனச் சொல்லி எந்தத் தகவலையும் அளிக்க மறுத்துவிட்டார். தாக்குதல் மற்றும் பொருள் அழிவு குறித்து புகார்கள் ஏதும் தரப்பட்டுள்ளதா என்பது போன்ற சாதாரணத் தகவல்களையும் கூட, பொது நல நோக்கில் ஆய்வுக்கு வந்துள்ள சிவில் சமூக உறுப்பினர்களுக்குத் தருவதற்கு விசாரணை எந்த வகையில் தடையாக உள்ளது என்பது எங்களுக்கு விளங்கவில்லை. அதேபோல் நகர காவல்துறை ஆணையர் திரு. ராதாகிருஷ்ணனை எமது குழு பிப்ரவரி 27 மாலை தொடர்பு கொண்டபோது, குழு உறுப்பினர்களின் பெயர்களை எல்லாம் விளக்கமாகக் கேட்டுக் கொண்ட அவர், அரசு பேச அனுமதி அளித்தால்தான் பேச முடியும் என்றார். அவர் கூறியபடி இரவு 8 மணிக்குத் தொடர்பு கொண்டபோது தொலைபேசியை எடுக்கவே மறுத்துவிட்டார்.
இக் குழு உறுப்பினர் அ.மார்க்ஸ் சென்ற பிப்ரவரி 26 அன்று மதுரையில் சில வழக்குரைஞர்களையும் மதுரை வழக்குரைஞர் சங்கச் செயலாளர் திரு.ஏ.கே.ராமசாமி அவர்களையும் சந்தித்துப் பேசினார். சுப்பிரமணிய சாமியைச் சந்திக்க நாங்கள் முயற்சித்தபோது அவர் டெல்லியில் உள்ளதாகப் பதிலளித்தார்.
பின்னணி:
ஈழத்தில் இன்று இனவாத இலங்கை அரசு மேற்கொண்டுள்ள போர், அதனால் தமிழ் மக்கள் பெரிய அளவில் அழிக்கப்படுதல், இந்திய அரசு அதற்கு இராணுவ ரீதியான உதவிகளைச் செய்தல் ஆகியவற்றை எதிர்த்து தமிழக வழக்குரைஞர்கள் பெரிய அளவில் கடந்த ஜனவரி, 29 முதல் வேலை நிறுத்தம் செய்து போராடி விடுகின்றனர். மனித உரிமை நோக்கிலும், மனிதாபிமான அடிப்படையிலும் தமிழகம் தழுவி நடைபெறுகிற இன்றைய போர் எதிர்ப்புப் போராட்டங்களில் வழக்குரைஞர்களும், மாணவர்களும் முன்னணியில் இருப்பது அரசுக்கு எரிச்சலூட்டுவதாக இருந்து வந்தது. கல்லூரி மற்றும் விடுதிகளை மூடி மாணவர் போராட்டத்தை ஓரளவு கட்டுப்படுத்தியது போல வழக்குரைஞர்கள் போராட்டத்தை அரசால் முடிவுக்குக் கொண்டுவர இயலவில்லை. இந்நிலையில் அவர்களின் போராட்டத்தை கடுமையாக ஒடுக்குவது என்கிற முடிவை அரசு மேற்கொண்டது.
அரசின் இந்நிலைப்பாட்டின் முதல் வெளிப்பாடாக சென்ற பிப்ரவரி 4 நிகழ்ச்சிகள் அமைந்தன. அன்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்னும் கூட்டமைப்பு தமிழ்நாடு தழுவிய பந்த்தை அறிவித்திருந்தது. அன்று கடைகளை அடைக்க வற்புறுத்தியதாக மூன்று வழக்குரைஞர் குழுக்களைக் காவல்துறையினர் தனித்தனியே கைது செய்தனர். இரு குழுக்களை மாலையில் விடுதலை செய்த காவல்துறையினர் போராட்டத்தில் முன்னணியிலுள்ள இளம் வழக்குரைஞர்கள் அடங்கிய ஒரு குழுவை மட்டும் ‘ரிமாண்ட்’ செய்வதற்காக அன்று மாலை சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றனர். அதை அறிந்த பிற வழக்குரைஞர்கள் அவர்களுக்கு ஆதரவாகவும் பிணை கோரவும் பெருந்திரளாக, முழக்கங்களுடன் அவர்கள் சென்ற போலீஸ் வேனைப் பின்தொடர்ந்தபோது எவ்விதத் தூண்டலும் இன்றி காவல்துறையினர் மேற்கொண்ட தடியடிப் பிரயோகத்தில் வழக்கறிஞர் புகழேந்தியின் தலை உடைந்தது. வேறு சில வழக்குரைஞர்களும் அடிபட்டனர். தலையில் 5 தையல்களுடன் புகழேந்தி சென்னை பொது மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற நேர்ந்தது. ‘ரிமாண்ட்’ செய்ய வேண்டியவர்களை ராஜராத்தினம் ஸ்டேடியத்திற்குக் கொண்டு சென்று இரவு வெகு நேரம் கழித்து நீதிபதி ஒருவரை அழைத்து வந்து ரிமாண்ட் செய்ய முயற்சித்துள்ளனர்.
தொடர்ந்து ஈழஆதரவு குற்ற நடைமுறைச் சட்டத் திருத்த எதிர்ப்பு ஆகியவற்றை முன்னிருத்தி வழக்குரைஞர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். போராட்டம் தீவிரமாக செல்வதையும், கொடும்பாவி எதிப்பு முதலான வடிவங்கள் எடுப்பதையும் அரசும் காவல்துறையும் ஆத்திரத்துடன் கவனித்து வந்தன. இங்கொன்றைக் குறிப்பிடுவது முக்கியம். வழக்குரைஞர் தொழிலில் இன்று இளம் வழக்குரைஞர்களின் வீதம் அதிகம். தவிரவும் ஒரு காலத்தில் வழக்குரைஞர்கள் தொழில் சமூகத்தின் மேற்தட்டுகளிலிருந்து வந்தவர்களாலேயே நிரப்பப்பட்ட நிலை இன்று மாறி அடித்தளச் சமூகத்தினர் பெரிய அளவில் பங்கேற்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. முற்றிலும் மனித உரிமைகள் சார்ந்த இன்றைய பிரச்சினையில் போர் நிறுத்தம் கோரியும் இந்திய அரசு போருக்கு உதவி செய்வதை எதிர்த்தும் நடத்திய இப்போராட்டத்தில் இத்தகைய இளம் வழக்குரைஞர்கள் முன்னணியில் நிற்பது யாரும் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்று. ஆனால் அரசும், காவல்துறையும், பொதுவான மத்தியதர வர்க்க மனப்பாங்கும் இதைப் புரிந்து கொள்ள மறுத்தன.
இந்நிலையில்தான் சென்ற 17ந் தேதி நடைபெற்ற ஒரு சிறு சம்வத்தை வழக்குரைஞர்களுக்கு எதிராகக் காவல்துறை பயன்படுத்தியது. வழக்கம்போல அன்றும் வேலை நிறுத்தத்தில் உள்ள வழக்குரைஞர்கள், வேலை நடைபெறக்கூடிய நீதிமன்றங்களுக்கு எதிரில் முழக்கங்கள் இட்டுச் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது நீதிமன்ற வளாகம் ஒன்றில் நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா மற்றம் கே.சந்துரு முன்னிலையில் சிதம்பரம் நடராஜர் கோயிலை அறநிலையத்துறை எடுத்துக் கொள்வதற்கு எதிரான ‘ரிட் அப்பீல்’ வழக்கு ஒன்று விசாரிக்கப்பட இருந்தது. மத்திய அமைச்சர் சுப்பிரமணிய சாமி அங்கு வந்து வழக்குரைஞர்கள் அமரும் மேடையில் (Dias) அமர்ந்தார். அவருடன் அவரது வழக்குரைஞர் ராதா மோகனும் இருந்துள்ளார். ஈழப் போராட்டத்தில் மட்டுமின்றி இது போன்ற வழக்குகளில் இடையீடு செய்வதை வழக்கமாக கொண்ட அவரைக் கண்டதும் வழக்குரைஞர்கள் அவருக்கு எதிராக முழக்கமிட்டுள்ளனர்.
அவர்களின் கோபத்தைத் தூண்டும் வண்ணம் அவர் தனது வழக்குரைஞரிடம் இவர்களைப் பற்றி இழிவாகப் பேசியும் உள்ளார். முழங்கங்கள் தீவிரமானபோது யாரோ சிலர் சாமி மீது முட்டைகளை வீசியுள்ளனர். நீதிபதி சந்துரு கண்டித்த பின் வழக்குரைஞர்கள் கலைந்துள்ளனர். சுப்பிரமணியசாமியும் புகர் ஏதும் தராமல் வீடு சென்றுள்ளார். எனினும் பத்திரிகைகளில் இது செய்தியாகியது. நீதிபதி சந்துரு, நடந்த நிகழ்ச்சி குறித்து தலைமை நீதிபதிக்கு (பொறுப்பு) அறிக்கை ஒன்று அளித்துள்ளார். எனினும் அதில் எந்த வழக்குரைஞர்கள் பெயரும் குறிப்பிடப்படவில்லை. நடந்த நிகழ்ச்சி வருந்தத்தக்கதுதான். தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியதுதான். எனினும் இந்தச் சிறிய நிகழ்வை அதற்குரிய சட்டப்படி சந்திக்காமல் இதை முன்னிட்டு வழக்குரைஞர்களை வழிக்குக் கொண்டுவர அரசும் காவல்துறையும் முடிவு செய்தது தொடர்ந்த நிகழ்ச்சிகள் மூலம் உறுதியாகிறது.
பாதிப்படைந்த நபர் எந்தப் புகாரும் அளிக்காதபோதும் வழக்குரைஞர்கள் ரஜினிகாந்த், விஜேந்திரன், கினி இமானுவேல், புகழேந்தி, ஜெய்குமார், மனோகர், சிவசங்கரன், வடிவாம்பாள், செங்கொடி, கயல் (எ) அங்கயற்கண்ணி, ரவிக்குமார், பார்த்தசாரதி மற்றும் 6 பேர்கள் மீது இ.பி.கோ 147, 451, 355, 353, 333, 506(II), 294(B), 153(A), 307 மற்றும் 3(1) TNPPD சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, 18-ந் தேதி அன்று இவர்களில் கினி இமானுவேலைக் கைதும் செய்தனர். மற்றவர்களையும் கைது செய்வதற்குக் கெடுபிடிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்கிடையில் சென்ற 19 முதல் வேலைநிறுத்தத்தை முடிந்துக்கொண்டு நீதிமன்றங்களுக்குச் செல்வது என்கிற முடிவை வழக்குரைஞர்கள் எடுத்தனர். அன்று நீதிமன்றம் இயங்கியது. மேற்கண்ட 20 பேரையும் கைது செய்ய காவல்துறை மும்முரமாக உள்ளதை அறிந்த தொடர்புடைய வழக்குரைஞர்கள் அதற்குத் தயாராக வந்தனர். எனினும் 17-ந் தேதி நிகழ்வின்போது தம்மை இழிவு செய்யும் வகையில் பேசிய சுப்பிமணிசாமியை விட்டுவிட்டு தம்மீது மட்டுமே இத்தகைய மோசமான பிரிவுகளில் வழக்கு மேற்கொள்ளபட்டுள்ளதைக் கணக்கில் கொண்டு, மேற்படி வழக்கில் ஏ1 ஆக உள்ள ரஜினிகாந்த், சுப்பிரமணியசாமி மீது புகாரளிப்பது என முடிவு செய்து, முன்னாள் தலைவர் கருப்பன் உள்ளிட்ட சுமார் 200 வழக்குரைஞர்கள் நீதிமன்ற வளாகத்திற்குள் உள்ள பி4 காவல் நிலையத்திற்குச் சென்றனர். கடும் விவாதத்திற்குப் பின்னர் சுப்பிரமணியசாமி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. நீங்கள் கேட்டபடி அறிக்கை பதிவு செய்தாகிவிட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் வேனில் ஏறுங்கள் என காவல்துறையினர் கெடுபிடி செய்தனர்.
இதற்கிடையில் சுமார் 200 லத்தி ஏந்திய போலீசார் பி4 காவல்நிலையம் அருகே கொண்டு வந்து குவிக்கப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட 20 பேரும் அந்த இடத்தில் இல்லை. ஒரு சில வழக்குரைஞர்கள் தமது சங்கக் கட்டிடத்திற்குச் சென்று 20 பேரில் கைதானவர் ஒருவர் தவிர மீதியுள்ளவர்களைத் திரட்டிக் கொண்டு வந்து முழக்கமிட்ட வண்ணம் கைதாகலாம் என்கிற முடிவுடன் சங்க அலுவலகத்திற்குச் சென்றனர்.
இந்நிலையில் உதவி ஆணையர் விஸ்வநாதன் மற்றும் இணை ஆணையர் இராமசுப்பிரமணி ஆகியோர் அங்கிருந்த சுமார் 15 வழக்குரைஞர்களை “ரவுண்ட் அப்” செய்து வேனில் ஏற்றினார். இவர்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆத்திரமடைந்த வழக்குரைஞர்கள் முழக்கமிட்டு முன்னேறிவர காவல்துறையினரின் வரலாறு காணாத கொடுந்தாக்குதல் தொடங்கியது. அப்போது நேரம் சுமார் மாலை 3.30 மணி.
தாக்குதல்
உயர்நீதி மன்றத்தின் வாயில்களை அடைத்த காவல்துறையினர் மூர்க்கமாகத் தாக்கத் தொடங்கினர். மேலும் அதிக அளவில் தாக்குதல் படை (SAF) கொண்டு வந்து குவித்துத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. வளாகத்திற்குள் நின்றிருந்த
வழக்குரைஞர்கள் மற்றும் எல்லோரது வாகனங்களும் மூர்க்கத்தனமாக தாக்கி அழிக்கப்பட்டன. காவல்துறையினர் தமது வேன்களில் கற்கள் கொண்டு வந்ததை நேரில் பார்த்ததாகப் பெயர் குறிப்பிட விரும்பாத மூவர் எங்களிடம் கூறினர். நகர சிவில் நீதிமன்றம், குடும்பநீதி மன்றம், ஆகிவற்றிற்கு அருகில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் பெரிய அளவில் அழிக்கப்பட்டன.
காயமடைந்த வழக்குரைஞர்கள் ரத்தம் சொட்டச் சொட்ட வளாகங்களுக்குள் ஒடி ஒளிந்து கொண்டனர். நடப்பதை அறிந்த தலைமை நீதிபதி (பொறுப்பு), காவல்துறைஆணையரைத் தொடர்புகொண்டு படைகளை வெளியே அனுப்புமாறு கேட்டுக்கொண்டும் பயனில்லை. 4மணி சுமாருக்கு நீதிபதி சுதாகர் வெளியே வந்து தாக்குதலை நிறுத்த முனைந்தார். பின் தலைமை நீதிபதியும் வெளிவந்தார். இதனால் சுமார் 15 நிமிடங்கள் தாக்குதல் நிறுத்தப்பட்டது. ரத்தம் ஒழுகும் சுமார் 10 வழக்குரைஞர்கள் வெளியே கொண்டு செல்லப்பட்டனர். நீதிபதிகள் திரும்பியவுடன் காவல்துறையின் வெறியாட்டம் மீண்டும் தொடங்கியது. இம்முறை சுமார் 1மணி நேரம் மாலை 5.30 வரை தாக்குதல் நடந்தது. 5.30 மணி சுமாருக்கு நீதிபதி ஆறுமுக பெருமாள் ஆதித்தன் உள்பட 5 நீதிபதிகள் வெளியே வந்தனர். சமாதானம் செய்வதும் தாக்குதலை நிறுத்துவதும் மட்டுமே அவர்களின் நோக்கம். ஆனால் இம்முறை நீதிபதிகளையும் விட்டுவைக்க காவல் துறையினர் தயாராக இல்லை. அவர்களும் தாக்கப்பட்டனர். நீதிபதி ஆதித்தன் அவர்கள் லத்தியால் தாக்கப்பட்டார். தலையிலும் காயம் அடைந்தார். மற்ற நீதிபதிகளும் தாக்கப்பட்டனர்.
ஆதித்தன் அவர்களைத் தாக்கும் போது “அவர் நீதிபதி அவரை அடிக்காதீர்கள்” எனக் கூவி பாதுகாப்புக்கு வந்த இளம் வழக்குரைஞர்கள் ஏழு பேர் கடுமையாகத் தாக்கப்பட்டு, ஒரு சிலர் மண்டை உடைந்து அப்போலோ மருத்துவமனையில் இருந்ததை குழு உறுப்பினர்கள் கண்டனர். நீதிபதி என்ற போது, “எந்த தேவடியா மகனா இருந்த என்னடா” என்று அடித்ததை அவர்கள் குறிப்பிட்டனர். பெண் நீதிபதி ஒருவரை, “நீதிபதியா இவ, ஆயா மாதிரி இருக்கா” எனச் சொல்லி அடித்துள்ளனர்.
நீதிமன்ற வளாகங்களுக்குள் புகுந்து கண்ணாடிக் கதவுகள், கணினிகள், நூலகங்கள், வழக்குரைஞர் அறைகள், வழக்கு மன்றங்கள் அனைத்தும் தாக்கித் தகர்த்து நொறுக்கப்பட்டன. கண்ணில்பட்ட கருப்பு வெள்ளை சட்டை அணிந்த வழக்குரைஞர்கள் ஒவ்வொருவரும் அடித்து நொறுக்கப்பட்டனர்.
மாலை 6.30 மணி வாக்கில் எப்படியோ தப்பி வெளியே என்.எஸ்.சி. போஸ் சாலைக்கு வந்தவர்கள் எல்லாம் அடித்து தாக்கப்பட்டனர். சாலையில் துரத்தித் துரத்தி வழக்குரைஞர்கள் அடிக்கப்பட்டனர். பெண் வழக்குரைஞர்களை “தேவடியாச் சிறுக்கிகளா” எனக் கத்தி தாக்கியதாக ஒரு பெண் வழக்குரைஞர் குறிப்பிட்டார்.
சாலையில் தங்களை விரட்டி விரட்டி அடித்ததைச் சொல்லும் போது வழக்குரைஞர் சுதாவின் கண்கள் கலங்கின. கயல் என்னும் பெண் வழக்குரைஞர் கடும் காயம்பட்டு அப்போலோ மருத்துவமனையில் சிகிக்சை பெற்றுள்ளார். வழக்குரைஞர் அலுவலகங்கள் அதிகம் உள்ள தம்பு செட்டித் தெருவிலும் புகுந்து தாக்கியுள்ளனர்.
வழக்குரைஞர்களுக்கு சீருடை தைக்கும் கடை, செராக்ஸ் செய்து கொடுக்கும் டால்பின் செராக்ஸ் முதலிய கடைகளும் கூட உடைக்கப்பட்டன. அங்கிருந்தவர்களும் தாக்கப்பட்டனர். இரவு 7.00 மணிவரை வெறியாட்டம் தொடர்ந்தது.
எந்த அளவுக்கு காவல் துறையினர் வெறியோடு இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர் என்பதற்கு ஏராளமான எடுத்துக் காட்டுகளைச் சொல்லாம். பெண் வழக்குரைஞர்கள் தாக்கப்பட்டது தவிர, நீதிபதிகளும் பெண்களும் தம் வாழ் நாளில் கேட்டிராத வசவுகளால் இழிவுசெய்யப்பட்டது தவிர, குடும்ப நீதிமன்றம், வழக்குரைஞர் ஒய்வு பகுதியில் உள்ள குழந்தை காப்பகங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. சென்னை சட்டக் கழகம் மற்றும் வழக்குரைஞர் சங்க அலுவலகளிலுள்ள நூலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ள நிலை இனப்படுகொலைகளின் போது நூலகங்கள் எரியூட்டப்படுவதை நினைவுறுத்துகிறது.
சென்னை சட்டக் கழகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த சோனி தொலைக்காட்சி, இரு செராக்ஸ் எந்திரங்கள், நூலக அரங்கம், சலவைக்கல் மேஜைகள் ஆகியவை அழிக்கப்பட்டதோடு 60 வயதான அதன் மேலாளர் ராஜகுருவும் தாக்கப்பட்டு தலையில் காயமடைந்துள்ளார். மூன்று ஊழியர்களும் கூட தாக்கப்பட்டுள்ளனர். வழக்குரைஞர்கள் தவிர நீதிமன்ற ஊழியர்கள் பலரும் தாக்கப்பட்டுள்ளனர். தமது அலுவலகத்திலிருந்து சில ஆவணங்களைக் காவல்துறையினர் தூக்கிச் சென்றதாகவும் ஒரு பெண் ஊழியர் எங்களிடம் குறிப்பிட்டார்.
பத்திரிகையாளர் சிலரும் தாக்கப்பட்டுள்ளனர். ‘தமிழ் ஓசை’யைச் சேர்ந்த கார்த்திக் பாபு, ‘மக்கள் தொலைக்காட்சி’ யைச் சேர்ந்த ஜோதிமணி, சேதுராமன் மற்றும் ‘நக்கீரன்’ இதழைச் சேர்ந்த ஒருவர், ‘தமிழ்ச்சுடர்’ புகைப்படகாரர் எனப் பலரும் தாக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் (கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள்) அடித்து நொறுக்கி நாசமாக்கப்பட்டுள்ளன. பெரிய அளவில் வழக்குரைஞர்கள், பெண்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் அச்சம் உறைந்துள்ளது. பொருள் இழப்புகளை விட இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள அச்சம் கவலைக்குரியதாக உள்ளது. பல ஊழியர்கள் பேச மறுக்கின்றனர். சுதாகர் என்னம் இளம் வழக்குரைஞர் மாடியிலிருந்து சன்ஷேட் ஒன்றில் குதித்து இரு கரங்களும் கூப்பி நிற்கும் காட்சி யாரையும் கலங்க அடிக்கும். கைது செய்யப்பட்டு 6 நாட்கள் வரை காவ-ல் இருந்து விடுதலையாகியுள்ள வழக்குரைஞர் கினி எங்ளிடம் பேசியபோது காவல்நிலையத்தில் “கோட்டா” வழக்குரைஞர்கள் எனப் போராடுகிறவர்களை இட ஒதுக்கீட்டில் பயன் பெற்றவர்கள் எனக் கேலி செய்ததைக் குறிப்பிட்டார். சுமார் 83 வழக்குரைஞர்கள் முதல் அரசு மருத்துவமனையிலும் பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தனியார் மருத்துமனைகளிலும் அனுமதிக்கப்பட்டனர். இது தவிர சொந்தப் பொறுப்பில் தனியார் மருத்துவமனைகளில் தங்கிச் சிகிச்சை பெற்றவர்கள், வெளி நோயாளிகளாகச் சிகிச்சை பெற்றவர்கள் ஏராளம்.
ஊடகங்களில் ஏதோ வழக்குரைஞர்களும் காவல்துறையினரும் சம அளவில் ஒருவரை ஒருவர் கல்வீசித் தாக்கிக் கொண்டதாகக் காட்டப்பட்டது. முதற் கட்டத்தில் வழக்குரைஞர்களும் கூட சிறிது நேரம் கல்வீசியிருக்கலாம். ஆனால், கொடுந்தாக்குதலுக்குப் பின் அவர்கள் எல்லோரும் தம்மைத் தற்காத்துக் கொள்வதிலும், ஓடி ஒளிந்து கொள்வதிலும், அச்சத்தில் திகைத்துத் தப்புவதிலும்தான் குறியாய் இருந்துள்ளனர். இடையில் பி4 காவல் நிலையம் எரிக்கப்பட்டது. மேல் தோற்றத்தில் இது வழக்குரைஞர்கள் செய்தது போலத் தோன்றினாலும் அப்போது அங்கிருந்த சூழல், காவல் நிலையத்திற்கு முன்னதாகப் பெரிய அளவில் போலீஸ் மற்றம் தாக்குதல் படை குவிக்கப்பட்டிருந்தது. எனவே வழக்குரைஞர்கள் இதைச் செய்திருப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. தலைமை நீதிபதி (பொறுப்பு), நீதிபதி தனபாலன், நீதிபதி சந்துரு ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தமது ஆணையில் பதிவு செய்துள்ளபடி சம்பவத்தின் போதே பெண் வழக்குரைஞர்கள் பலரும் இதை மறுத்துள்ளனர். காவல்துறையே நிலையத்திற்குத் தீ வைத்திருக்க வேண்டும் என்கிற ஐயமும் இன்று முன்வைக்கப்படுகிறது. இது தனியே விசாரிக்கப்பட்டு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். குறிப்பாகச் சில இளைஞர்களை அரசும் காவல்துறையும் மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்தி அடையாளம் காட்டுவதை எமது குழு மிகக் கவலையுடன் நோக்குகிறது. மிகவும் அடிப்படையான மனிதாபிமான நோக்கிலிருந்து நடத்தப்படுகிற ஒரு போராட்டத்தில் முன்னணியாக இருந்தார்கள் என்கிற ஒரே நோக்கிற்காகவும், மனித உரிமைகளுக்காகப் போராடக்கூடிய சில வழக்குரைஞர் அமைப்புகளில் இருக்கிறார்கள் என்பதற்காகவும் பழைய வழக்குகளை எல்லாம் தேடிப்பிடித்து எடுத்து தாதாக்களைப் போல காவல் துறையினர் இவர்களைச் சித்திரிக்கின்றனர்.
காவல்துறையினர் சொல்வதை அப்படியே ஏற்று “Gang of 20” என்பது போன்ற மொழியில் ஒரு சில பத்திரிகைகள் எழுதுவதும், படங்களை வெளியிடுவதும் வருத்தத்தை அளிக்கின்றன. அடிப்படை பத்திரிக்கை தருமங்களுக்கு இது முரணானது என்பதை எமது குழு வருத்தத்துடன் சுட்டிக் காட்டுகிறது.
எமது பார்வைகளும் பரிந்துரைகளும்
1. சட்டத்தின் காவலாளர்களான, தமது உரிமைகளையும் சட்டங்களையும் நன்கறிந்த வழக்குரைஞர்களே இவ்வாறு சென்னை போன்ற ஒரு பெரு நகரில் வைத்துத் தாக்கப்படுவார்களேயானால், ஏழை, எளிய பாமர மக்களின் கதி என்ன என்கிற கவலை உருவாகிறது. ஜனநாயக அரசு ஒன்றில் காவல்துறை இப்படி மேலும் மேலும் அதிகாரம் பெறுவதும், அரசு மட்டுமின்றி ஏனைய அரசியற் கட்சிகளும் அதைக் கண்டு கொள்ளாததும் கவலையளிக்கிறது. மதுரையில் உயர் போலீஸ் அதிகாரி கிருஷ்ணமூர்த்தி கையில் துப்பாக்கியை நீட்டி வழக்குரைஞர்களை நோக்கி வரும் புகைப்படம் எல்லா இதழ்களிலும் வெளிவந்துள்ளது. காவல்துறையின் ஈரலும் இதயமும் அழுகியிருப்பதற்கு இது ஒரு சான்று.
2. அமைதியாகப் போராடிக் கொண்டுள்ள வழக்குரைஞர்களைக் கைது செய்வதற்கு பெருங் கலவரங்களை ஒடுக்குவதற்காகப் பயிற்சி பெற்ற தாக்குதல் படை (SAF), அதுவும் இந்த அளவில் ஏன் குவிக்கப்பட்டது? இந்தப் படைக் குவிப்பிற்கு உத்தரவிட்டது யார்? தாக்குதலுக்கு உத்தரவிட்டது யார்? நீதிமன்றம் கேட்ட கேள்விக்கு ஏன் இன்னும் அரசு பதிலளிக்கவில்லை? நீதிமன்றமும் ஏன் இதைக் கண்டுக்கொள்ளவில்லை? வெறும் 147 காவல்துறையினரே அன்று குவிக்கப்பட்டிருந்ததாகவும், அதில் 122 பேர் காயமடைந்துள்ளதாகவும், நீதிமன்றத்திற்கு அரசு தன் வழக்கறிஞர் மூலம் தகவல் அளிப்பது எத்தனை அபத்தமானது. வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய பொய்யுரை இது.
3. முட்டை வீசியதாக குற்றம் சாட்டி கடும் பிரிவுகளின் கீழ் வழக்குரைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ள அரசு, சுப்பிரமணிய சாமி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதா? அவர் மீது நடவடிக்கை எடுக்க இத்தனை அவசரம் ஏன் காட்டப்படவில்லை?
4. நேர்மையாளராகப் பெயர் பெற்றுள்ள நீதியரசர் ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதையும், அதற்கு வழக்குரைஞர்கள் முழுமையாக ஒத்துழைக்க முடிவெடுத்துள்ளதையும், இக்குழு வரவேற்கிறது .
5. அரசு ஆணைப்படியும், நீதிமன்ற உத்தரவின்படியும், ஒரு சில காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலை போதாது. தாக்குதலுக்கு காரணமானவர்களாக அடையாளம் காட்டப்பட்டுள்ள கீழ்கண்ட அதிகாரிகள்
1. கே. ராதாகிருஷ்ணன், காவல்துறை ஆணையர்,
2. டி. ராஜேந்திரன், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் ஓழுங்கு),
3. ஏ.கே. விஸ்வநாதன், கூடுதல் ஆணையர்,
4. இராமசுப்பிரமணி, இணை ஆணையர்,
5. சந்தீப் ராய் ராத்தோர், இணை ஆணையர்,
6. சாரங்கன், துணை ஆணையர்,
7. பிரேம் ஆனந்த் சின்ஹா, துணை ஆணையர்,
8. பன்னீர்செல்வம், துணை ஆணையர்
ஆகியோர் உடனடியாகத் தற்காலிகப் பதவி நீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் தொடரப்படவேண்டும்.
5. வழக்குரைஞர்கள் மற்றும் நீதிமன்ற அலுவலகர்கள் மத்தியில் உறைந்துள்ள அச்சத்தை நீக்கி நம்பிக்கை ஏற்படுத்துவது அவசியம். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது தவிர இழப்புகள் ஈடு செய்யப்படுவது அவசியம். பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த காவல்துறையினர் அனைவர் மீதும் தமிழ்நாடு பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்போர் நடவடிக்கை சட்டம் (TNPPD Act) சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படவேண்டும். சட்ட அமைச்சரும் முதலமைச்சரும் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்க வேண்டும். இதுவரை பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் யாரும் வந்து பார்வையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
6. ஒரு சில இளம் வழக்குரைஞர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தாதாக்கள் போல சித்திரிக்கப்படுவது நிறுத்தப்படவேண்டும். உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் எடுத்த முடிவின் அடிப்படையில் செயல்பட்ட ஒரு சிலரை மட்டும் இப்படித் தனித்துப் பழிவாங்க அரசும், காவல்துறையும் முயற்சிக்கக்கூடாது.
No comments:
Post a Comment