Tuesday, March 31, 2009

வெற்றியும் தோல்வியும்

- சுகன்

எனக்கு மகன் முறையானவன்
நாலுநாள் முன்னர் இறந்தான்
யானை சிங்கம் புலி தவிர
அவன் எல்லாப் பிராணிகளையும் பறவைகளையும்
வளர்த்தான்.

அவன் எப்போதாவது படித்து நான் பார்த்ததில்லை
ஆனால் நானும் வேறெவரும் பார்க்காமலேயே
அவன் நன்றாகப்படித்திருக்கவுங்கூடும்
படிப்பை வெறுத்திருக்கவுங்கூடும்.

அவனும் அவனது நண்பன் ஜெயாவும் புலிகளோடு சேர்ந்தபின் ஜெயா மாத்தையாவின் கீழ் இயக்கத்தில் பெரிய ஆளாகி மாத்தையாவின் பெருந்தலைகள் பதினெட்டுப்பேரை பொட்டர் போட்டபோது பதினெண்கீழ்க்கணக்கில் வந்தான். ஜெயா அப்போது காதலித்துமிருந்திருக்கலாம். அவனுக்கு ஒரு காதல் இருந்தது என்றும் கேள்விப்பட்டதாக ஞாபகம். ஜெயாவும் எனது மகனும் அவனது இன்னொரு நண்பனான இன்சூரும் அவர்கள் உறவான சிங்கப்பரராச சூரியரின் மகன் 'ரெலோ' தவராசாவைப் போட்டார்கள். இன்சூர் தீவுப்பகுதிக்குப் பொறுப்பாக பின்னர் இருந்தான். இன்சூரின் மாமா பொலிஸ் நாதன் துரோகியாக
சிலவருடங்களின்முன் போடப்பட்டிருந்தார்.

எனது மகனுக்கு மானிப்பாயில் ஒரு காதல் இருந்தது
படித்த பிள்ளையான அந்தப்பிள்ளையை
இவன் தூக்கிக்கொண்டுவந்தான்.

ஆகவே அவன் அப்போது மிகவும் விபரமானவனாக
இருந்திருக்கவேண்டும்
சாதி வித்தியாசங்காரணமாக அந்தப்பிள்ளை வீட்டார்
இவர்களுடன் எந்தத் தொடர்பும் இல்லை.
இவர்களுக்கு இரண்டு இரண்டு இரணைப்பிள்ளைகளாக
நாலு குழந்தைகள்.

நாலு நாள் முன்னர் இவன் புதுமாத்தளனில்
'ஆட்லெறி'யால் கொல்லப்பட்டான்
மனைவிக்கு இரண்டு கால்களும் இல்லையெனவும்
மனைவி மன்னாருக்கு கொண்டுபோகப்பட்டார் எனவும்
இரண்டு நாளுக்குமுன் செத்தவீட்டுச் செய்தி வந்தது
இன்று மனைவியும் இறந்துபோனார் எனவும்
பிள்ளைகளை பொறுப்பெடுக்க அவன் அம்மாவும்
எனது அக்காவும் காத்திருக்கிறார்களெனவும்
செய்தி வந்தது.

மருமகள் சொன்னாள்: "அது உயிர்கொல்லி நிலம் மாமா,
எத்தினையோ சனம் வருத்தத்தாலையும் குண்டுகளாலையும் அங்கை செத்துப்போச்சு அம்மம்மா, அக்கா எண்டு, அங்கை ஒருத்தரும் இருக்க ஏலாது"


அவள் அம்மம்மா என்று சொல்கிற
எனது அம்மாவை எழுபது வயதில்
பிரபாகரன் தனது பாதுகாப்புக்காக
வன்னிப் பெருநிலத்திற்குக் கூட்டிச் சென்றார்.

No comments: