நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியின் அறிக்கை:
இலங்கையில் ஒரு துன்பியலான நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. சிறுபான்மை தமிழ் மக்களுக்கு எதிரான 30 வருட யுத்தத்தின் பின்னர் இராஜபக்சவின் அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டினுள் உள்ள ஒரு சிறிய பிரதேசத்தினுள் அண்ணளவாக 250,000 மக்களை அடைத்து வைத்துள்ளதுடன், பொதுமக்களை குற்றம்மிக்கவகையில் கொலைசெய்கின்றது.
புதுமாத்தாளான் வைத்தியசாலையில் கடமை புரியும் பிராந்திய சுகாதாரத் தலைவரான வைத்தியர் துரைராஜா வரதராஜா Associated Press செய்தி நிறுவனத்திற்கு பெப்பிரவரி 13ம் தேதி கருத்து தெரிவிக்கையில் "மோசமான செல் வீச்சுக்களால் நாளாந்தம் 40 பொதுமக்கள் கொல்லப்படுவதாகவும் 100 இற்கு மேற்பட்டோர் காயமடைவதாகவும்" , பெரும்பாலான காயங்கள் ஷெல்களினால் ஏற்படும் வெட்டுக்காயங்கள் எனவும், 8 வைத்தியர்களே அப்பிரதேசத்தில் உள்ளதாகவும், ஆபத்தை எதிர்கொள்வதால் கூடுதலான ஊழியர்கள் வேலைக்கு வருவதை நிறுத்திவிட்டதாகவும் குறிப்பிட்டார். வைத்தியசாலையில் பென்சிலின் உட்பட முக்கிய கிருமி எதிர்ப்பு மருந்துகள் தீர்ந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். உணவு, மருந்து உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தினுள் செல்வதை அரசாங்கம் கடுமையாக கட்டுப்படுத்தி வைத்துள்ளது.
அதேவேளை, தென் இலங்கையில் நடைமுறை ரீதியாக ஒரு சர்வாதிகாரம் நிறுவப்பட்டு, அரசாங்கத்தின் எதிர்ப்பாளர்களும், ஊடகவியலாளர்களும் கொலைப்படையினரால் கொலை செய்யப்படுகின்றனர். இலங்கையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுமே முற்றுமுழுதாக இந்த குற்றச்செயல்களுக்கு பொறுப்பாக உள்ளன.
ஆரம்பத்திலிருந்து யுத்தத்தை எதிர்த்துவரும் ஒரேயொரு கட்சி நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே.
லங்கா சமசமாஜ கட்சி (LSSP) ட்ரொட்ஸ்கிச கொள்கைகளைக் காட்டிக்கொடுத்து சிறிமாவோ பண்டாநாயக்காவின் முதலாளித்துவ அரசாங்கத்தில் 1964ம் ஆண்டு இணைந்து கொண்டதற்கு எதிராக சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (RCL) 1968 இல் நிறுவப்பட்டது. லங்கா சமசமாஜக் கட்சியின் அரசியல் காட்டுக்கொடுப்பானது இலங்கையில் உள்ள தொழிலாள வர்க்கத்திற்கு மட்டுமல்லாது, ஆசியாவினதும் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கும் பாரிய விளைவுகளை உருவாக்கியது.
புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் உருவாக்கமானது லங்கா சமசமாஜ கட்சியின் வரலாற்று காட்டுக்கொடுப்புடன் நேரடியாக பிணைந்துள்ளது. தனது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் முதலாளித்துவ ஆட்சியின் பாரம்பரிய வழிமுறைகளான தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தும் சிங்கள இனவாதத்திற்கு லங்கா சமசமாஜக் கட்சி அடிபணிந்தது.
சோசலிச சமத்துவக் கட்சி இந்த யுத்தத்தை சர்வதேசியவாதத்தின் அடித்தளத்தில் எதிர்க்கின்றது. வடக்கு கிழக்கிலிருந்து நிபந்தனையின்றி இராணுவத்தை வெளியேற்று என அழைப்புவிடுகையில், ஸ்ரீலங்கா முதலாளித்துவத்திற்கும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களுக்கும் எதிரான ஒரு பொதுப்போராட்டத்திற்கு சிங்கள - தமிழ் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்த போராடுகின்றது.
சோசலிச சமத்துவக் கட்சி, தமிழீழ விடுதலைப் புலிகளின் கோரிக்கையான ஒரு சுதந்திரமான தமிழ் அரசுக்கு ஆதரவளிக்கவில்லை. அவ்வாறான அரசு ஒன்று பொருளாதார ரீதியாக சாத்தியமற்றதும், ஏகாதிபத்திய சக்திகளின் கைகளில் ஒரு கருவியாகியும் விடும். இது தமிழ் முதலாளித்துவத்தின் நலன்களுக்கே சேவைசெய்வதுடன், இந்த முதலாளித்துவம் ஈழத்தை பன்னாட்டு நிறுவனங்களுக்கான மலிவு கூலி மேடையாக்கியும் விடும்.
இந்த முன்னோக்கின் தோல்வியே இந்த யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கையாலாக நிலைமைக்குக் காரணமாகின்றது. வர்க்கப் பிரச்சனைகளை அல்லாது இனத்தை அடித்தளமாக கொண்டமையால் அதனால் சிங்கள மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கதிற்கு அழைப்புவிட முடியாதுள்ளது. அதற்கு பதிலாக; கொழும்பிற்கு முக்கிய ஆதரவைக் கொடுத்து தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றுமுழுதாக தனிமைப்படுத்திவிட்ட இந்திய முதலாளித்துவத்தினதும், ஏகாதிபத்திய சக்திகளினதும் ஆதரவை அது நாடி நிற்கின்றது.
இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், அண்மைய மாகாணசபைத் தேர்தலில் நுவரேலியா மாவட்டத்தின் தலைமை வேட்பாளருமான மயில்வாகனம் தேவராஜா மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் செயலாளரும் உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழு உறுப்பினருமான பீட்டர் சுவார்ட்ஸ் ஆகியோர் இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியின் போராட்டம் பற்றியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் முன்னோக்கு பற்றியும் உரையாற்றுவர்.
இந்த போராட்டத்தின் படிப்பினைகள் ஆசியாவிலும், மத்திய கிழக்கிலும் மற்றும் ஐரோப்பாவிலும் பிரான்சிலுமுள்ள தொழிலாளர்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
பொதுக் கூட்டம்
15 மார்ச் 2009.
நேரம்: 2.30 பிற்பகல்
இடம்: 177 rue de Charonne, 75011 Paris.
Métro: Charonne -ligne 9, Alexandre Dumas, ligne 2,
Tél: 06 19 85 55 07
E mail: balasooria@gmail.com
--------------------------------------------------------------------------------
Copyright 1998-2008
No comments:
Post a Comment