Saturday, September 02, 2006

மாற்றம்

இன்று முதல் எங்கள் பக்கம் http://www.satiyakadatasi.com/ க்கு மாற்றப்பட்டுள்ளது.
நன்றி.

Sunday, August 20, 2006

உரையாடல் தொடர்கிறது

வடமராட்சி
18.07.2006
அன்புடன் தோழருக்கு
நீங்கள் அனுப்பிய அநிச்ச 2005 மார்ச் 2006 இதழ்கள் கிடைத்தன. இதழ்கள் காத்திரமாக வந்துள்ளன அ.மார்க்சின் 'பார்ப்பனர்கள் அரங்கேற்றும் ஆரியக்கூத்து' கட்டுரை மிக விரிவாகவும் ஆழமாகவும் எழுதப்பட்டுள்ளது. வரலாறுகள் உண்மையானதாய் எழுதப்படல் வேண்டும்.

மகாகவியிடம் மாத்திரமல்ல, ஈழத்தவர்கள் பலரிடம் சாதியம் மறையாமலே இருக்கின்றது. ஒவ்வொரு சாதியும் தனக்கு கீழ் உள்ள சாதியை மிதிப்பதிலேயே கருத்தாக இருக்கின்றது. ஒரு முற்போக்குக்காரருடன் கதைத்துக் கொண்டிருந்த பொழுது ஊரின் மறுபகுதியில் வசிப்பவர்களைச் சுட்டி 'நாங்கள் அங்கு கை நனைப்பது இல்லை' என்றார். இருபகுதியும் ஒரே சாதிதான். சில காலங்களுக்கு முன் இந்த நண்பர் வீட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சில நண்பர்கள் சாப்பிட வராமல் தவிர்த்துக் கொண்டார்கள். இத்தனை அழிவுகள் உயிர் இழப்புகளுக்குப் பின்கூடச் சாதியத்தைப் பிடித்துக் கொண்டிருப்பது வேதனையாக இருக்கின்றது.
ரகுநாதனின் நேர்காணல் பற்றி; மாவிட்டபுரப் போராட்டம் 1968ல் நடந்தது, யாழ் பல்கலைக்கழகம் 1974 பிற்பகுதியில் திறக்கப்பட்டது."அக் காலையில் இவ்விரு பேராசிரியர்களும் யாழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார்கள். மாணவர் மத்தியில் இக் கருத்துகளை வலியுறுத்தி சாதி ஒழிப்புப் போராட்டத்தில் அவர்களையும் ஈடுபடச் செய்தார்கள்" என அவர் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. அக்காலகட்டத்தில் சு.வே.சீனிவாசகம், சூடாமணி போன்றவர்களுடன் நான் ஒவ்வொரு நாளும் போய் வந்தவன். ஒருநாள் கூட இவ்விரு பேராசிரியர்களையும் மாவிட்டபுர வீதிகளில் கண்டதில்லை. சிவத்தம்பியின் ஊரில் இருக்கும் பிள்ளையார் கோவில் இன்றுவரை சிறுபான்மையினரை கோவில் உள்ளே விடவில்லை. 'கந்தன் கருணை' ஆடிய இளைய பத்மநாதனின் குடும்பக் கோயிலான முருகையன் கோவிலிலும் உள்ளே விடுவதில்லை இவைதான் யதார்த்தம்.
தன் சமகால எழுத்தாளரான மு.தளையசிங்கம் பற்றி ஒன்றும் தெரியாது என்று கூறும் தான் ஒரு சமூகபொறுப்பு உள்ள எழுத்தாளர் என்று கூறுவது கேலியாக இருக்கிறது. தீவகப்பகுதியில் சாதி எதிர்ப்பு போராட்டத்தில் எவ்வளவு மூர்க்கத்தனமாக மு.த ஈடுபட்டார் என்பதை குடாநாடு அறியும். சாதிமான்மாரின் தாக்குதலே அவரின் மரணத்தை விரைவு படுத்தியது என்பது ஈழத்து இலக்கிய உலகத்துக்கும் தெரியும்.
ஊரைச் சொன்னாலும் பேரை சொல்ல கூடாது என்பர்.ஆனால் இங்கு இரண்டையும் கூறக் கூடாது. அதனால் S.ராமகிருஷ்ணன் என பெயரை மாற்றுகிறேன்.
அன்புடன்
S.ராமகிருஷ்ணன்
10.08.2006
------------------------------------------------------------------------------------------------Paris
15.08.2006
தோழர் S. ராமகிருஷ்ணனுக்கு,
பிரெஞ்சுப் பிரதமர் டோமினிக் து வில்பன் இற்கு நான் கைகொடுத்த அன்று இது நிகழ்ந்தது - 28-07-2006 மாலை
லாச் சப்பலில் ஒரு புடைவைக் கடையின் முன்னே பொலிசார், அவசர மருத்துவ உதவிப்பிரிவு, எல்லோரும் வந்து ஓர் இளைஞனைப் பிணத்தை ஏற்றுவது போல் ஏற்றிக்கொண்டு போகின்றனர்.

கடை முதலாளி தனது மகளுடன் இந்தியாவிற்கு 'எஸ்கேப்' ஆகிவிட்டார்.
நியாயம் கேட்டும், இந்திய ரெலிபோன் நம்பர் கேட்டும், எதிர்த்தும் இளைஞனால் முடியாது போகவே, விசத்தை எடுத்து அவர்களுக்கு முன்னால் குடித்து மயங்கி இப்போது ஆஸ்பத்திரியில் இருக்கிறார் இளைஞர்.

இச்சம்பவத்திற்குப் பின்னர்தான் அக்கடை வெள்ளாளர்களின் கடை என்று எனக்குத் தெரிந்தது.
சுவிஸிலிருந்து ஒரு வானொலி நேயர் சொன்னார். "சாதி பாராமல் ஒரு வெள்ளாளன் 'ஒரு புரொப்போசல் மரேஜ்' செய்தால் நான் ஒரு லட்சம் பிராங் நன்கொடையாகவே தருவேன்."

நன்றியோடும்
நெகிழ்ச்சியோடும்
சுகன்.

Saturday, August 05, 2006

நூல் அறிமுகம் - தியோ




.......சுணைக்கிது

சிறுகதைகள்
நிரூபா



குஞ்சிஐயா, குஞ்சியம்மா, ஜீவி, ஜீவன், நிர்மலா, விசயா, கேதீஸ், நிரூபா, சோதி, குமரன், ஜெகதீஸ்வரன், பிரபாகரன், ஜீவனா, நந்தினி, மதியழகன், கலா அக்கா, மலர் அக்கா, நித்தியண்ண, விலாசய்யா, ராசமணி, ஆச்சி, அப்பு, கணபதி.. என்று ஒரு அயல் அட்டமே, ஒரு சிறு கிராமமே நிரூபாவின் புனைவுலகில் நமக்கு அறிமுகமாகி மெல்ல மெல்ல அவர்கள் நம்மோடும் நெருக்கமாகி விடுகிறார்கள். அவர்களது மன எழுச்சிகள்,பிரிவுகள், சந்திப்புக்கள், வெறுமைகள், துரோகங்கள், எழுத்தெழுத்தாகத் திரும்பத் திரும்ப நிரூபாவால் எழுதப்பட்டுள்ளன. இது ஒரு சிறுகதைத் தொகுப்பாக இருக்கும் அதே வேளையில் புனைவுக் களத்தைப் பொறுத்த வரையில் வரிசை மாறிக் கட்டப்பட்ட அத்தியாயங்களைக் கொண்ட நாவலாகவும் தன்னை இயல்பாகவே நிறுத்திக் கொள்கிறது.

நிரூபாவின் கதைகளில் புகலிடப் பெண் எழுத்தாளர்களின் பேரடையாளங்களான சல்லிசான கோஷங்களோ, நீதிமொழிகளோ, வசைகளோ தேங்கி நிற்பதில்லை.அவை இஸங்களுக்குள் சிக்கிக் கொள்ளாமல் வாழ்க்கையை அதன் அழகுகளுடனும் அபத்தங்களுடனும் 'குழந்தைத்தனமான' பரிசுத்தத்துடன் சித்திரித்துக் காட்டுபவை.

இந்த வகை எழுத்துக்கள் ஒரு அன்பான கடிதம் போல நமக்கு உடனேயே நெருக்கமாகி மனக் கசிவை ஏற்படுத்தி விடுகின்றன. இது ஒரு கதை சொல்லியின் பலமென்றால் இதுவே நிரூபாவின் பலவீனமும் ஆகி விடுகிறது. பல தருணங்களில் நிரூபாவின் கதைகள் வெறும் உருக்கமான வாக்குமூலங்களாகவே நின்று விடுகின்றன. அவை வாசகர்களிடம் இரக்கத்தை அல்லது தீர்ப்பைக் கோரி நிற்கும் பிரதிகளாகவே எஞ்சிவிடுகின்றன. நிரூபாவின் பிரக்ஞாபூர்வமான கட்டுப்பாட்டிலிருந்து பிரதி நழுவி விடும் தருணங்களிலெல்லாம் பிரதி தானாகவே கோள்மூட்டித்தனமான எழுத்துக்களையும் எழுதிச்செல்கிறது.

தொகுப்பின் தலைப்புக் கதையான "சுணைக்கிது" மிகவும் முக்கியமான கதை. ஒரு சிறுமி பாலியல் வதை செய்யப்படும் வலியை முதலைக் கண்ணீரோடு வாசக மனதைச் சுரண்டிவிடும் நோக்கமற்று வெறும் வாசிப்பு அதிர்ச்சிக்காக அல்லாமல் வலியை வலியாக அதன் சாத்தியமான எல்லாப் பரிமாணங்களுடனும் நிரூபாவால் கலையாக நிகழ்த்திக் காட்ட முடிகிறது. அதே வேளையில் தனது மையப் பாத்திரப் படைப்புக்களுக்காக நிரூபா ஆடும் வழக்கை பிரதியில் எதிர் மறையாகக் கட்டப்பட்டிருக்கும் பாத்திரங்களுக்காக நிரூபா ஆடுவதில்லை. கிட்டத்தட்ட பூலன் தேவியின் நீதி முறைமை தான் ஒட்டுமொத்தப் பிரதியிலும் காணக்கிடைக்கிறது. இந்தப் படைப்புக் கோணம் ஏராளமான வில்லன்களைக் கதைகளில் உருவாக்கிவிட (வில்லன்கள் கிடைக்காவிட்டால் நிரூபா பிரதியில் உடனடியாகவே பாம்புகளையும் மயிர்க்கொட்டிகளையும் ஊர விட்டு விடுகிறார்) நல்லவர்கள் கெட்டவர்கள் என்ற எதிர்வுகளே கதைகளை வளர்த்துச் செல்கின்றன. இந்தத் தட்டையான கதை சொல்லும் முறையிலிருந்து தமிழ் நவீன கதைப் பரப்பு நகர்ந்து வெகு நாட்களாகின்றன.

ஒரு ஊரில் ஒரு கொடுமைக்கார அரசன் இருந்தானாம். அங்கு ஒரு கூலி இருந்தானாம். இளவரசிக்கு கூலி மேற் காதலாம் என்ற வகைமாதிரியில் கணபதி என்ற 'தோட்டக்காட்டு'க் கூலி பற்றி 'ஒரு பழம் தப்பிச்சிண்ணு...'என்றொரு கதை.
'ஒருக்கா என்னட்டச் சொல்லிப்போட்டுப் போயிருக்கலாம்தானே'.எனத் தொடங்கி 'கணபதியெண்டா எனக்கு நல்ல விருப்பம்'. எனக் கதை முடிகிறது. தோட்டக்காட்டார்கள், கள்ளத் தோணிகள், வடக்கத்தியார்கள் எனப் பழித்துரைக்கப்படும் மனிதர்களில் ஒருவன் கணபதி. இளவரசிக்கு கணபதி என்றால் விருப்பம். அவள் கணபதியில் பச்சாதாபத்தைக் கதையில் பொழிகிறாள். ஆனால் கணபதிக்கு இளவரசியில் நல்ல விருப்பமா? என்ற கேள்விக்குள் நிரூபா நுழைவதில்லை. ஒரு அரசியற் குரலை ஒலிக்க விடுவதற்கான சந்தர்ப்பத்தை நிரூபா லாவகமாகத் தவிர்த்துக் குழந்தைத் தனமான வெற்று மனிதாபிமானத்தினுள் ஒழித்து விடுகிறார். 'பிரச்சாரம் கலையாகாது ஆனால் நல்ல கலை பிரச்சாரமாகும்' என்பார்கள்.
'கோணக் கோண மலையேறி
கோப்பிப் பழம் பறிக்கையிலே
ஒரு பழம் தப்பிச்சிண்ணு
உதைச்சானய்யா சின்னத்துரை'
சின்னத் துரையை இளவரசி என மாற்றிப் பாடக் கணபதிக்கு ஒரு நொடி போதும். மற்றவர்களின் குரலை நிரூபா எக் காரணம் கொண்டும் பிரதிக்குள் அனுமதிப்பதேயில்லை. இதைக் நிரூபாவின் குறையாகச் சொல்ல முடியாது. இத்தகைய ஒற்றைப் பார்வை எதார்த்தவாத எழுத்தின் குறைபாடு. எதார்த்தவாத எழுத்து முறைமை பிரதிக்குள் பல்வேறு குரல்களை ஒலிக்க விடுவதற்கு பெரும் தடையாக இருப்பதால் தான் இச் சவாலை எதிர் கொள்ளும் படைப்பாளி இடையறாது அ-வரிசை எழுத்து, மாயா எதார்த்தவாத எழுத்து, பின் நவீனத்துவ எழுத்து என வேறு வேறு இலக்கியச் செல் நெறிகளைத் தேடிச் சென்று கொண்டேயிருக்கிறார்.

இத்தகைய பலவீனங்களை விட்டு வட்டால் நிரூபாவின் எழுத்துக்களின் இலக்கு முக்கியமானது. தமிழ்ப் புனைகதையுலகு விட்ட குறை தொட்ட குறையாகத் தட்டிச் சென்ற குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, தமிழ்ப் பண்பாடு எனக் கட்டமைக்கப்பட்டிருக்கும் ஆதிக்க சாதி ஆண் முதன்மைவாத இந்துப் பண்பாட்டுக்கும் குழந்தைகளின் அக உலகிற்கும் இடையலான முரணகள் ஆகியவற்றைக் கலையூடாக விசாரணை செய்வதிலேயே நிரூபாவின் படைப்புச் சிரத்தை குவிக்கப்பட்டுள்ளது. ஒரு அகதியாக ஒரு பெண்ணாக ஒரு கறுப்பியாக நிரூபாவின் தன்னிலை அவர் எடுத்துக் கொண்ட புனை களத்தில் அவரை இடையறாது இயங்க வைக்கிறது.அந்தத் தன்னிலைகள் நிரூபாவிற்கென சிறப்பான மொழி நடை ஒன்றையும் வகுத்துக் கொடுத்திருக்கின்றன.

பெண் உடலின் பருவ மாற்றங்கள், சிறுமிகளின் பாலியல் மதிப்பீடுகள், பெண்களின் மனோவுலகு போன்ற தனித்துவமான கூறுகளை வெகு நறுக்காக எழுதிச் செல்லும் நிரூபா பெண்களின் அகவுலகை ஒரு பெண்ணால் மட்டுமே துல்லியமாக இலக்கியத்தில் சித்திரிக்க முடியும் என மீண்டும் ஒருமுறை இத் தொகுப்பின் வழியே எண்பித்துக் காட்டியிருக்கிறார். பெண் மொழியின் பல்வேறு சாத்தியங்களுடன் நிரூபாவிற்கு வட்டார வழக்கும் துல்லியமாகக் கை வருகிறது. இலங்கை வானொலி நாடகங்களின் 'அப்புக்குட்டி' ராஜகோபால், 'முகத்தார்' ஜேசுரட்ணம் பாணியிலான செயற்கைத் தமிழ் வடிவம் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கென புகலிட இலக்கியப் பிரதிகளில் புழங்கி வரும் சூழலில் பதின்ம வயதுகளில் புலம் பெயர்ந்து வந்த நிரூபாவின் மொழியாளுமை ஆச்சரியப்படுத்துகிறது.

சில படைப்பாளிகளுக்கு இன்றைய புகலிட எழுத்தாளர்களுக்கு அதுவும் ஆண்களுக்கு கிடைக்கிற “புத்திஜீவிகள் அங்கீகாரம்” “மகுடம்” பெண்களுக்கு கிடைப்பதில்லை என எவரும் வருந்த வேண்டியதில்லை. அங்கீகாரங்கள் மகுடங்கள் யாரால் யாருக்கு எப்போழுது கொடுக்கப்படுகிறது என நாம் பரிசீலிப்பது முக்கியமானது. யார் அங்கீகரித்தால் என்ன? அங்கீகரிக்காவிட்டால் என்ன? குஞ்சிஐயா, குஞ்சியம்மா, ஜீவி, ஜீவன், நிர்மலா, விசயா, கேதீஸ், நிரூபா, சோதி, குமரன், ஜெகதீஸ்வரன், பிரபாகரன், ஜீவனா, நந்தினி, மதியழகன், கலா அக்கா, மலர் அக்கா, நித்தியண்ண, விலாசய்யா, ராசமணி, ஆச்சி, அப்பு, கணபதி.. எல்லோருமே நிரூபாவுடன் இருப்பார்கள். நிரூபாவும் அவர்களுடன் இருப்பார்.

04.08.2006

Saturday, July 22, 2006

சுகனின் கவிதைகள்


விழித்திருப்பவனின் மறுநாள்


தோழர் சண்முகலிங்கம்
கனடாவிலிருந்து வந்து சொன்னது:

நாங்கள் ஊரில இருக்கேக்கை
வெள்ளாளன் எங்களைப் படிக்கவேவிடயில்லை.

இங்கை வந்து படிக்க வெளிக்கிட்டால்
தமிழைப் படி என்கிறான்.

அவங்கள் ஊரிலையும் ஆங்கிலத்திலைதான்
படிச்சாங்கள்.

இங்கையும் ஆங்கிலத்திலைதான்
படிக்கிறாங்கள்.

என்னென்றால்:
இரண்டு கிழமை வந்து நின்று
கலைச் செல்வனைச் சந்திக்க முடியவில்லை
முதல் நாளிரவு ரெலிபோனில் கதைத்திருக்கிறார்.
'நாளை விடிய வீட்டை வாங்கோ நிற்பேன்'
என்றிருக்கிறார் கலைச்செல்வன்.
விடிய வந்தபோது ஆறாம் மாடியிலிருந்து
கலைச் செல்வனின் உடலைத்தான் அவரால் இறக்க முடிந்தது.

( யூலை2006)

தீர்ப்பு

ஒரு தாய்க்கு இரண்டு பிள்ளைகள்
இடுப்பிலிருந்து இறங்கி
போராடப் போனது ஒன்று
இங்கு ஓடி வந்தது ஒன்று

நீதி கேட்டுத் தாய் ஓடினாள்
மன்னன் சாலமன் சபையில் விசித்திரம் நிகழ்ந்தது

"கத்தியையும் தீர்ப்பு எழுதும் பேனாவையும்
வருபவர்களிடம் கொடு" என்று கூறி
மன்னன் 'எயர் போர்ட்' போய் விட்டதாக
வாயிற் காவலன் கூறினான்
தாய் திகைத்தாள்

வாயிற் காவலன் சாதாரணமாக
தாயிடம் கேட்டான்
"இன்றைய நாணய மாற்று விகிதம் என்ன?
100 பிராங் எத்தனை ரூபாய்?"

( தாயகம் 1992)

Tuesday, July 18, 2006

தேசியம் - பெரியார் பேசுகிறார்.




தோழர்களே! கடவுள் மதம் ஜாதீயம் தேசாபிமானம் என்பவை எல்லாம் மக்களுக்கு இயற்கையாக, தானாக ஏற்பட்ட உணர்ச்சிகள் அல்ல. சகல துறைகளிலும் மேல்படியிலுள்ளவர்கள் தங்கள் நிலை நிரந்தரமாயிருக்க ஏற்ப்படுத்திக் கொண்டிருக்கும் கட்டுப்பாடான ஸ்தாபனங்களின் மூலம் பாமர மக்களுக்குள் புகுத்தப்பட்ட உணர்ச்சிகளேயாகும். இந்தப்படி புகுத்தப்பட வேண்டிய அவசியமும் காரணமும் என்னவென்று பார்த்தால், அவை முற்றும் பொருளாதார உள் எண்ணத்தையும், அந்நியர் உழைப்பாலேயே வாழவேண்டும் என்கின்ற உள் எண்ணத்தையும் கொண்ட பேராசையும், சோம்பேறி வாழ்க்கைப் பிரியமுமேயாகும்.

தேசியம் என்பதும் முற் கூறியவற்றைப் போன்று ஒரு போலி உணர்ச்சிதான். ஏனென்றால், தேசிய உணர்ச்சி என்பதானது இன்று உலகப் பொதுமக்கள் அதாவது உலகில் எங்கும் பெரும்பான்மையான மக்கள் பாமரராயும், தொழில் இன்றியும், தொழில் செய்தாலும் ஜீவனத்திற்க்கும் வாழ்விற்க்கும் போதிய வசதிகள் இன்றியும் கஷ்டப்படும் மக்கள் ஒன்று சேர்ந்து தங்களுடைய நிலைமைக்குப் பரிகாரம் தேடுவதைத் தடைப்படுத்தவும் ஆங்காங்குள்ள செல்வந்தர்களாலும் அதிகாரப்பிரியர்களாலும் சோம்பேறி வாழக்கைச் சுபாவிகளாலும் கற்பிக்கப்பட்ட சூழ்ச்சியாகும். தேசியம் என்பதும் மனிதனுக்கு ஒரு மயக்கமும் வெறியும் உண்டாக்கும் வார்த்தையாக ஆகிவிட்டது.

தேசம் என்றால் எது? உலகப்பரப்பு அய்ந்து கண்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு கண்டத்திற்கும் பல தேசங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தேசத்துக்கும் பல மாகாணங்கள் இருக்கின்றன ஒவ்வொரு மாகாணத்திற்கும் பல ஜில்லாக்களும், மற்றும் பல உட்பிரிவுகளும் இருக்கின்றன.தேசம் என்பவற்றில் சில கண்டத்தை விட பெரிதாகவும், பல மதங்களாகவும் பல பிறவிகளாகவும், பல மொழி, பல நாகரிகம், பல கலை ஆகவும் இருக்கின்றன. இவை தவிர ஒவ்வொரு கண்டத்திலும், தேசத்திலும், மாகாணத்திலும் பலமாதிரியான பிறவிகளும், பல ஜாதிகளும், பல பாஷைகளும், பல மதங்களும், பல உட்ப்பிரிவுகளும், பல பழக்கவழக்கங்களும் இருக்கின்றன. இவை அவரவர்களுக்கு தெய்வகட்டளை என்றும் மதக் கட்டளை என்றும் தேசியக் கொள்கை என்றும், தங்கள் வாழ்நாளில் எப்பொழுதும் மாற்ற முடியாதது என்றும் இவற்றில் எதையும் காப்பாற்ற உயிர்விட்டாவது முயற்சிக்கவேண்டுமென்றும் கருதிக் கொண்டிருப்பவையாகும்.

இவற்றின் பயனாய் மக்கள் ஒருவருக்கொருவர் வேற்றுமை உணர்ச்சி கொண்டிருப்பதை நன்றாய்ப் பார்க்கிறோம். அன்றியும் உலகத்தில் உள்ள தேசம் முழுவதிலும் உயர்ந்தஜாதி - தாழ்ந்த ஜாதி, ஏழை - பணக்காரன், கீழ்நிலை - மேல்நிலை, கஷ்டப்படுகிறவன் - கஷ்டப்படுத்துகிறவன், முதலிய கொடுமைகள் இருந்தும் வருகின்றன. இவற்றுள் என்ன கொள்கைமீது எப்படிப்பட்ட மக்கள் எவ்வளவு விஸ்தீரணத்தைப் பிரித்தக்கொண்டு தங்களுக்கெனத் தனித்த தேசம், தேசியம் என்று ஒன்றைச் சொல்லிக் கொள்வது என்பது எனக்குப் புரியவில்லை, நமது தேசம் என்ற விஸ்தீரணத்தையும் தன்மையையும் தனிப்படுத்திக் கொண்டு பேசினாலும், அதிலுள்ள தன்மைகள் என்னென்னவோ, அதுதான் மற்ற எந்தக் கண்டம் என்பதிலும் நாடு என்பதிலும் இருந்து வருகிறது. நாம் குறிப்பிடும் தேசத்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகின்றவர்களாகவும் தாழ்மைப் படுத்தப்பட்டவர்களாகவும் இருந்து வருகிறார்களோ அவ்வளவு நிலையில்தான் மற்ற தேசத்தார் என்கிற மக்களும் இருந்து வருகின்றார்கள். நம்முடைய தேசம் என்பதிலுள்ள எந்தவிதமான மக்களின் துயரம் நீக்கப் பாடுபடுகின்றோம் என்கிறோமோ, அவ்விதமான துயரம் கொண்ட மக்கள் அந்நிய தேசம் என்பதிலும் இருந்துதான் வருகிறார்கள். நம்முடைய தேசம் என்பதிலேயே எந்தவிதமான மக்கள் சோம்பேறிகளாகவும் சூழ்ச்சிக்காரர்களாகவும், செல்வவான்களாகவும், அரசாங்க ஆதிக்கக்காரர்களாகவும் குருமார்களாகவும் இருந்து பெரும்பான்மையான பொதுஜனங்களைப் பல சூழ்ச்சிகளால் அடக்கி ஆண்டு அடிமைகளாக்கிப் பட்டினிபோட்டு வதைத்து தாங்கள் பெருஞ்செல்வம் சேர்த்து சுகபோகம் அனுபவித்து வருகின்றார்களோ, அது போலதான் அந்நிய தேசமென்பதிலும் சிலர் இருந்து அந்நாட்டுப் பெரும்பான்மையான மக்களைக் கொடுமைப்படுத்தி வருகின்றார்கள். ஆனால், அப்படிப்பட்டவர்கள் நம் நாட்டில் ஒரு பிரிவார் பிறவியின் பேரால் இருக்கிறார்கள். இந்த நிலைமையில் என்ன கொள்கைகளைக் கொண்டு, எந்த இலட்சியத்தைக் கொண்டு உலகப்பரபில் ஒரு அளவை மாத்திரம் பிரித்துத் தேசாபிமானம் காட்டுவது என்று கேட்கின்றேன்.

துருக்கி தேசத்துக்கும் இந்திய தேசத்துக்கும் சண்டை வந்தால் இந்திய இஸ்லாமியர்களுக்குத் தேசாபிமானம் இந்தியாவுக்கா ? துருக்கிக்கா ? ஹைதராபாத்துக்கும் மைசூருக்கும் யுத்தம் தொடங்கினால், ஹைதராபாத் இந்தியர்கள் தேசாபிமானம் மைசூருக்கா? ஹைதராபாத்துக்கா? ஆகவே, 'தேசம்' 'தேசாபிமானம்' என்கின்ற வார்த்தைகளும் கடவுள், மதம் என்பது போன்ற ஒரு வகுப்பாருடைய சுயநலத்திற்க்கு ஏற்ற ஒரு சூழ்ச்சிவார்த்தை என்ற சொல்ல வேண்டி இருப்பதைத்தவிர வேறு ஒன்றும் சொல்லமுடியவில்லை. முடிவாகக் கூறும் பட்சத்தில் தேசாபிமானம் என்பது ஒவ்வொரு தேச முதலாளியும் ம ற்றத் தேச முதலாளிகளுடன் சண்டைபோட்டுத் தங்கள் தங்கள் முதலைப் பெருக்கிக்கொள்ள ஏழைமக்களை - பாமரர்களைப் பலிகொடுப்பதற்காகக் கற்ப்பித்துக் கொண்ட தந்திர வார்த்தையாகும்.

உதாரணமாக, இங்கிலாந்து தேச முதலாளிகள் அமெரிக்கா தேசமுதலாளிகளுடன் சண்டை போட்டு வெற்றி பெற்றுத் தங்கள் செல்வத்தை மேலும் மேலும் பெருக்கிக்கொள்ள வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டால் அல்லது அமெரிக்க முதலாளிகள் வேறு தந்திரத்தின் மூலம் இங்கிலாந்து தேச முதலாளிகளின் செல்வத்தை கொள்ளை கொள்ள முயற்சிப்பதாயிருந்தால், இங்கிலாந்து தேச முதலாளிகள் இங்கிலாந்து தேச ஏழை மக்களையும் பாமரமக்களையும் பார்த்து, "ஓ இங்கிலாந்து தேசிய வீரர்களே, தேசாபிமானிகளே, தேசத்துக்கு நெருக்கடி வந்துவிட்டது; இங்கிலாந்து மாதா உங்கள் கடமைகளைச் செய்ய அழைக்கிறாள்; ஓடி வாருங்கள்! ஓடி வாருங்கள்!" என்று கூப்பாடு போடுவார்கள்.கூலிகளை அமர்த்தியும் வயிற்றுப்பிழைப்புப் பத்திரிகைக்காரர்களுக்கு எலும்பு போட்டும் பிரச்சாரம் செய்விப்பார்கள். இது போலவே அமெரிக்க முதலாளியும் தன் தேசம் நெருக்கடியில் நிலையில் இருப்பதாகவும் அமெரிக்க மாதா அங்குள்ள பாமரர்களையும், வேலையில்லாமல் வயிற்றுக் கஞ்சிக்கு வகையில்லாமல் பட்டினி கிடக்கும் ஏழை மக்களையும் தங்கள் கடமையைச் செய்ய அழைப்பதாகவும் கூவிக்கொண்டு கூலிகொடுத்துப் பிரச்சாரம் செய்வார்கள். இரண்டு தேச ஏழைகளும் மற்றும் சாப்பாட்டிற்க்கு அறவே வேறு வழியில்லாத மக்களும் கிளர்ச்சியில் சேர்ந்தும் பட்டாளத்தில் சேர்ந்தும் துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு சண்டைக்குப் போய் ஒருவரையொருவர் சுட்டுக் கொன்று கொள்ளுவார்கள். சிறைப் பிடிப்பதன் மூலம் இரு தேசச் சிறைகளையும் நிரப்பி விடுவார்கள். கணக்குப் பார்த்தால், இரு கட்சிகளிலும் பல லட்சக்கணக்கான மக்கள் உயிர் விட்டிருப்பார்கள். பிறகு இருவரும் இராஜியாகப் போயோ யாராவது ஒருவர் ஜெயித்தோ இருப்பார்கள்.

ஜெயம் பெற்றவர்களுக்கு முதலோடு முதல் சேரும் அல்லது தங்கள் முதல் என்றும் குறையாத மாதிரியில் பத்திரமேற்பட்டிருக்கும். ஆனால் சுட்டுக் கொண்டு செத்தவர்களுக்குச் சுடுகாடும், அவர்கள் பெண்ஜாதிகளுக்குச் சிறு பிச்சையும் அல்லாமல் மற்ற ஏழை மக்களுக்கு என்ன பயன் என்பதை யோசிதததுப் பாருங்கள். அமெரிக்கா குடி அரசு நடாத்துவதற்க்கும் அந்நிய ஆட்சியைத் துரத்துவதற்க்கும் அமெரிக்க ஏழைமக்கள், தொழிலாளி மக்கள் எவ்வளவு பாடுபட்டிருப்பார்கள், எவ்வளவு உயிர்ப்பலி கொடுத்திருப்பார்கள் என்று அமெரிக்க விடுதலைச் சரித்திரத்தைப் புரட்டிப்பாருங்கள். இன்று அதன் பயனாக உலகில் அமெரிக்காவிலேயே அதிகமான செல்வவான்களும், வியாபாரிகளும், விவசாயப் பெருக்கும் இருந்து வருகின்றன. ஆனால் ஏழைகள் படும் கஷ்டமும் வேலையில்லாத பட்டினியும் தொழிலாளிகள் அனுபவிக்கும் கொடுமையும் அமெரிக்காவில் இன்றைய தினம் இருந்து வருவது வேறு எந்த நாட்டிற்க்கும் குறைந்ததல்ல.

அது போலவே இந்தியத் தேசியத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பல ஏழைப் பாமர மக்களை தூண்டிவிட்டு அடிபடச் செய்து சிறையை நிரப்பி உரிமையும் பதவியும் அதிகாரமும் பெற்ற முதலாளிகள் பணத்தையும் சோம்பேறி வாழ்க்கைப் பிறவிகள் உத்தியோகங்களையும் பெற்றுத் தங்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பெருக்கிக் கொண்டதைத் தவிர இந்த இந்தியத் தேசியத்தால் ஏழை மக்கள், பாமரமக்கள் அடைந்த - அடையப்போகும் நன்மை என்னவென்பதைப் பாருங்கள்.

தோழர்களே ! அமெரிக்கத் தேசாபிமானத்தின் தன்மையும் அதன் பயனையும் சிந்தித்துப் பாருங்கள். அமெரிக்க அந்நியப் பயனையும் சிந்தித்துப்பாருங்கள். அமெரிக்கா அந்நிய ஆட்சியை ஒழித்தாலும், ஓர் அரசனையே விரட்டிவிட்டுக் "குடிகளின் ஆட்சி" ஏற்படுத்திக் கொண்டதாலும், ஏழைமக்களுக்கு என்ன பயன் ஏற்ப்பட்டது என்பதை மற்றொருதரம் யோசித்துப் பாருங்கள்.

இந்த இலங்கையில் இருந்துகொண்டு இந்தியத் தேசாபிமானம் பேசும் தேசிய வீரர்களைப்பற்றிச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். அவர்கள் ஏறக்குறைய அத்தனை பேரும் 100 -க்கு 90-பேர் இந்தியா முதலிய தேசத்தில் இருந்து வந்து இலங்கை தேசத்தைச் சுரண்டிக்கொண்டு போக இருக்கிறவர்களும் அவர்களுக்கு உதவியாளர்களாய் - அடிமைகளுமாய் இருப்பவர்களுமாவர்.

இலேவாதேவிக்காரர்கள் பெரிதும் மாதம் 100-க்கு 12-வரை வட்டிவாங்கி ஏழைமக்களையும் இலங்கை வாசிகளையும் பாப்பாராக்கிக் கொள்ளை கொண்டுபோக வந்தவர்களும், விவசாயக்காரர் பெரிதும் இலங்கைப் பூமிகளை ஏராளாமாய்க் கைப்பற்றி விவசாயம் செய்து கூலிகள் வயிற்றில் அடித்துப் பொருள் சேர்த்துக் கொள்ளை கொண்டுபோக வந்தவர்களும், வியாபாரிகள் கொள்ளை லாபம் அடித்து இலங்கைச் செல்வத்தைக் கொள்ளை கொண்டுபோக வந்தவர்களும், உத்தியோகஸ்தர்கள் இலங்கை ஆட்சியில் வந்து புகுந்து இலங்கையர்களின் அனுபவத்தில் மண்ணைப் போட்டுப் பணம் சுரண்டிக்கொண்டிருக்கும் படித்த கூட்டத்தாரும் ஆணவம்பிடித்த வன்னெஞ்சப் பார்ப்பானார்களுமாகக் கூடிக்கொண்டு இந்தியத் தேசாபிமானக் கூப்பாடு போடுகின்றார்கள்.

வெள்ளைக்காரனான அந்நியன் 100-க்கு வருஷம் 6-வட்டிக்கு கொடுத்தால், கருப்பனான அந்நியன் 100-க்கு மாதம் 6-வட்டிக்கு கொடுக்கிறான். வெள்ளையன் பணக்காரர்களிடம் வட்டி வாங்கினால், கருப்பன் ஏழைகளிடம்-கூலிகளிடம் வட்டிவாங்கிக் கொடுமைப்படுத்துகிறான்.

இந்தப்படி மக்களைச் சந்தித்துக் கொள்ளை அடிபவர்களே (வெள்ளையரிலும், கருப்பர்களிலும்) எங்கும் கடவுளபிமானம், மதாபிமானம், தேச அபிமானம் பேசுகிறார்கள்.

ஆகவே, இவ்விஷயங்களை அதாவது கடவுள், மதம், தேசம் என்கின்ற விஷயங்களை இனி அறவே மறந்துவிடுங்கள். அவை ஒரு நாளும் க ஷ்டப்படும் மக்களுக்குப் பயனளிக்கா. மற்றபடி அவை உலகில் ஏழை, பணக்காரன் என்று இரண்டு வகுப்புகள் இருக்கவும் ஏழைகளை தொழிலாளிகளைப் பணக்காரரும் சோம்பேறிகளும் வஞ்சித்து நிரந்தரமாய் வாழவும்தான் பயன்படும்.

தோழர்களே! முடிவாக ஒன்று கூறுகிறேன். சரீரத்தினால் நெற்றி வியர்வை சொட்ட கஷ்டப்படும் மக்களைப் பாருங்கள். அவர்களுக்கு கல்வி, மனிதத்தன்மை மானம் இல்லாமல், செத்திருப்பதையும் பாருங்கள். வேலையில்லாமல் திண்டாடும் மக்களையும் அவர்களது பெண்டு பிள்ளைகளின் பட்டினியையும், கொடுமையையும் பாருங்கள். வீடுவாசல் இல்லாமல் மூட்டை முடிச்சுகளைத் தலையில் சுமந்து கொண்டு கஞ்சிக்கு ஊர் ஊராய்த் திரியும் கூலி மக்களைப் பாருங்கள். இவ்வித மக்கள் உலகில் எங்கெங்கு யார் யாரால் கஷ்டப்படுத்தப் படுகிறார்கள் என்பதையும் பாருங்கள் உயர்ந்தவன் - தாழ்ந்தவன், பார்ப்பான் - பறையன், முதலாளி - தொழிலாளி, குரு - சிஸ்யன், மகாத்மா - சாதாரண ஆத்மா, அரசன் - குடிகள், அதிகாரி - பிரஜை என்பவை முதலாகிய பாகுபாடுகளை இடித்துத் தள்ளித் தரைமட்டமாக்குங்கள்.அதன்மீது தேசம், மதம், ஜாதி என்கின்ற பாகுபாடு இல்லாததாகிய மனித சமூகம் சமஉரிமை -சமநிலை என்கிற கட்டடத்தைக் கட்டுங்கள். இதைச் செய்ய நீங்கள் உலகத்திலுள்ள கஷ்டப்படும் எல்லா மக்களுடனும் ஜாதி, மதம், தேசம் என்கிற வித்தியாசம் இல்லாமல் பிரிவினைக்கு ஆளாகாமல் ஒன்று சேருங்கள். அப்போது நீங்கள் கண்டிப்பாய் வெற்றி அடைவீர்கள்.

(1932 ஒக்ரோபர் பயணத்தில் இலங்கையில் தந்தை பெரியார் ஆற்றிய உரை.)

Sunday, July 09, 2006

ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்- நூல் விமர்சனம்- 3

தமிழரசன் பெர்லின்

துரையப்பா

துரையப்பா துரோகி என்ற கூட்டணிக்குரல் இன்னமும் புஸ்பராசவிடம் மாறவில்லை. இரண்டு பத்தாண்டுகளுக்கு மேலாக புகலிடத்தில் வாழ்ந்தும், ஐரோப்பிய முதலாளித்துவ ஜனநாயகத்தின் மாற்றுக் கருததுச் சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டும், இலக்கிய சந்திப்புக்களில் அதிகாரத்துவ எதிர்ப்பு, பன்மைவாதக் கருத்தியல் ஆதரவு பேசிக் கொண்டுமிருக்கும் புஸ்பராசா தமிழ்த்தேசியம், கூட்டணி என்ற தன் இரண்டு கண்களையும் இழக்கத் தயாராக இல்லை. 'துரையப்பாவை துரோகி' என்றும் கூட்டணியின் தமிழ்தேசியத் திருடர்களை தியாகிகள் என்பதும் காலம் கடந்த கூட்டணிக்கால தமிழ்த்தேசியவாத அரசியல், இளம்பருவக் கோளாறு, பிஞ்சுப்புலம்பல் என்று அவருக்கு இன்றும் கூடத் தோன்றவில்லை. பழைய சக்கேறிய சிந்தனை முறைமாறவில்லை. கூட்டணி போன்றே துரையாப்பாவும் ஒரு முதலாளித்துவ அரசியல்வாதி. தன்வர்க்கம் சார்ந்து நின்றவர். தன் நலன்களை முதன்மைப்படுத்தியவர். இப்படியிருக்க கூட்டணியினர் தியாக சொருபங்களாகவும் துரையப்பா துரோகியாகவும் சித்தரிப்புக்குள்ளானது கூட்டணி ஜனநாயக உணர்வு வரண்ட சர்வாதிகார தமிழ் தேசிய விளக்கப்படிதானே தவிர வேறு எதுவுமல்ல. கூட்டணியோடு ஒப்பிடுகையில் துரையப்பா யாழ்ப்பாண நகரில் மட்டும் கோலோச்சிய நபர் ஆனால் கூட்டணியோ வடக்குக் கிழக்கில் கட்சி கட்டி நின்ற பெரிய அமைப்பு. ஆள் அணி பிரச்சாரபலம் அதனிடம் இருந்தது. அகிம்சை பேசிய கூட்டணி ஏன் சாதாரண ஜனநாயக வழி அரசியலில் துரையப்பாவை தோற்கடிக்க முடியவில்லை? ஏன் இளைஞர்களை தமது பேச்சின் மூலம் ஏவி விட்டனர்? மறைமுக ஆதரவு தந்தனர்? துரையப்பாவை துரொகி, துரோகி என்று கூட்டணிதான் இளைஞர்கட்கு திரும்பத் திரும்பக் கற்பித்தது. இன்றைய புலிகளின் துரோகி, தேசத்துரோகி, மாவீரர் என்ற பாசிச நியாயங்கட்கான மூலங்கள் கூட்டணியிடம் இருந்தே தோன்றின என்பது புஸ்பராசவிற்கு ஞாபகம் வருவதில்லை.

துரையப்பா கொலைக்கு தான் மட்டுமல்ல மக்களும் மகிழ்ந்தாக புஸ்பராசா எழுதுகின்றார் மாற்றுக்கருத்தியங்களை கொலையூடாக அகற்றும் அதே அரசியல் கலாச்சாரம் தான் புஸ்பராசாவின் தலைவர் அமிர்தலிங்கத்தையும் அவர் நண்பர் சபாலிங்கத்தையும் கூடக் கொன்றொழித்தது. தமிழ் துரோகிகளைப் பற்றி மேடைதோறும் பேசி வந்த அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், மதிமுகராசா, சிவமகாராசா, ஆலாலசுந்தரம், தருமலிங்கம் என்று ஒரு தொகைக்கணக்கு இல்லாத கூட்டணி நபர்கள் துரோகி என்று அழிக்கப்பட்ட வரலாறு இருக்கிறது. துரையப்பாவின் கொலையில் மக்கள் மகிழ்ந்தார்கள் என்று புஸ்பராசா எழுவது உண்மையல்ல. உண்மையில் மக்கள் திகிலடைந்தனர், இது எந்ததிசையில் செல்லுமோ என்று குழம்பினர். யாழ் நடுத்தரவர்க்கத்தின் ஒரு பகுதி இதை கெட்டித்தனமான வேலை என்று கருதியபோதிலும் துரையப்பாவை அறிந்த பெரும் பகுதி யாழ்ப்பாண மனிதர்கள் பெரிதும் வருந்தினர் என்பதே உண்மை. திரு.எஸ்.ஜே.வி.செல்வநாயகம் கூட இவங்கள் தொடங்கி விட்டாங்கள. இது எங்க போய் முடியுமோ? என்று சொன்னதாய் கூறப்படுகிறன்து. எந்த துப்பாக்கிகள் துரையப்பாவைச் சுட்டனவோ அவையே இடதுசாரிகளையும் சுட்டன, கடைசியாக கூட்டணியிரையும் சுட்டன. துரையப்பா கொல்லப்பட்ட போது ஆயிரக்கணக்கான மக்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்த கரையூர், பாசையூர் பகுதிகளில் அஞ்சலிக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. அநுதாப பிரசுரங்கள் வெளியிடப்பட்டன. நல்லூர் அரசடிச்சந்தியில் ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்ந்த இடங்களில் வாகனங்கள் மறிக்கப்பட்டு துண்டுப்பிரசுரங்கள் கொடுக்கப்பட்டன. கூட்டணியோ த.இ.பே. இனரோ அப்பகுதிகளில் எவரும் நுழைய முடியாமல் இருந்தது. துரையப்பா கொல்லப்பட்டு கிட்டத்தட்ட பத்துவருடங்களுக்கு பின்பாக கூட்டணியைச் சேர்ந்த ஆலாலசுந்தரம் அரியாலை நெசவு நிலையத்திலிருந்த துரையப்பாவின் படத்தை அகற்ற முயன்ற போது அரியாலை மக்கள் அதனை ஒன்றுகூடி கடுமையாய் எதிர்த்தனர்.

இன்று எவ்வாறு புலிக்கு எதிரான போராட்ட வரலாறு குறித்து வைக்கப்படவில்லையோ, அவ்வாறே அன்று கூட்டணிக்கு எதிரான மக்களின் எதிர்ப்புக்களும் புறக்கணிக்கப்பட்டு கூட்டணி சார்பான வரலாறு மட்டுமே எழுதப்பட்டது. கூட்டணி தமிழ் தேசியத்தை முன்னிறுத்தி அரசியல் செய்த போது துரையப்பா விளையாட்டரங்கு, தபாற்கந்தோர்,
நூல்நிலையம், நவீனசந்தை ஆகியவற்றை அமைத்ததுடன் தமிழ் அறிஞர்கள், சிந்தனையாளர்கட்கு சிலைகளை நிறுவினர். அதன் மூலம் அவரும் தமிழ் தேசிய உணர்வுகளில் பங்கு கொள்ள முயற்சித்தார். சங்கிலியனை கூட்டணி புகழ்ந்து தமிழரின் முதல் எழுச்சியின் வடிவமாய் காண்பித்தபோது, துரையப்பா சங்கிலியனுக்கு சிலை வைத்தார். துரையப்பா யாழ்ப்பாண நகரத்தை அழகுபடுத்தினார். கூட்டணியினரோ எமக்கு இத்தகைய சலுகைகள் அல்ல, உரிமைகள் தான் வேண்டும் என்றனர். கூட்டணியின் சிந்தனைச்சிற்பி, கோப்பாய் எம்.பி கதிரவேற்பிள்ளை சங்கிலியன் கொழும்பைக் கேட்டுக் கொண்டு தெருக்கள் அமைக்கவில்லை என்று சொன்னார். ஆனால் இன்றோ கூட்டணி, தமிழரசு முதல் புலிகள் வரை சகல தமிழீழவாதிகளும் அரசு மருந்து, உணவு தரவில்லை, அதைத்திருத்தவில்லை, இதை அமைக்கவில்லை என்று சலுகை கேட்டு யாசிக்கின்றனர். தமிழ் மக்களுக்கான சுயபொருளாதார அமைப்பைக்கட்டுவது பற்றிய ஆரமபத்திட்டம் கூட இன்றுவரை இவர்களிடம் கிடையாது. ஒப்பீட்டு ரீதியில் கூட்டணியின் எம்பி மாரை விட துரையப்பா நேர்மையானவர், எளிமையானவர், மேயராக இருந்த போதும் வெறும் சாரத்துடன் நகரில் நடமாடும் எவரும் எச்சமயத்திலும் கண்டு பேசக் கூடியவராவர். இத்தகைய நிராயுதபாணியான ஒரு நபரைக் கொல்ல பெரும்வீரம் தேவையில்லை.

இங்கு புஸ்பராசா கூட்டணிக்கு எதிரான மாற்றுக்கருத்துடைய எவருக்கும் உயிர்வாழும் உரிமையில்லை என்று மறுக்கிறார். கருத்தை கருத்தால் அல்ல ஆயுத வன்முறையால் அழித்தொழித்தல் நியாயம் என்று ஏற்றுப் பரப்புகின்றார். கருத்து வலியமையற்றவர்களே கொலையை ஏவுகின்றனர். அதன் மூலம் ஏனையோரை அச்சுறுத்துகின்றனர். துரையப்பா கொலையே அமிர்தலிங்கம் கொலைக்கு முன்னோடி என்று புஸ்பராசா புரிந்து கொள்ளவில்லை. தமிழ் மக்கள் சார்ந்த ஒரு கருத்து மட்டுமே நிலவ முடியும் என்பது சமூகமானது எதிர்கருத்துக்கள் இன்றி இயங்க முடியும் என்ற அரசியல் சூனியத்திற்கு புஸ்பராசாவை அழைத்துச் செல்கின்றது. துரையப்பாவை தமிழீழ விரோதி என்ற ஒதுக்கி வைக்கும் புஸ்பராசா துரையப்பாவின் அதே கட்சியின் தலைவியும் தமிழீழத்தின் மிக முக்கியமான எதிரியாக கூட்டணியினரால் வர்ணிக்கப்பட்ட சிறிமாவோ பண்டாராநாயக்கவுக்கு கூட்டணி கொடுத்த வரவேற்பையும் தானும் சேர்ந்து பாதுகாப்புக் கொடுத்தமையையும் எந்த முரண்பாடான உணர்வுமின்றி எழுதியுள்ளார்.

கூட்டணி துரையப்பாவை துரோகி என்று சாட்டிய போது துரையப்பா தமிழரசு, கூட்டணிக்கும்பல்கள் சிங்கள அரசாங்களுடன் சேர்ந்து, ஒத்துழைத்த, பதவிபெற்ற, சலுகைகள் பெற்ற சம்பவங்களை வரிசைப்படுத்தினார். கூட்டணி அரசாங்கத்திடம் இரகசிய உடன்பாடுகள் செய்ததை வெளியிட்டார். கூட்டணி துரையப்பாவின் வாயை மூட விரும்பியது. தமக்கு எதிர்ப்பற்ற அரசியல் போக்கை உருவாக்க முயன்றது. புஸ்பராசா போன்றவர்கள் இத்தகைய போக்குகளின் பிரச்சாரகர்களாவர். யாழ்ப்பாணம் தமிழரசுக்கட்சிக்கோ, கூட்டணிக்கோ செல்வாக்கு குறைந்த பிரதேசமாகவே இருந்தது. தமிழரசுக் கட்சியை சேர்ந்த மாட்டின் 56 வாக்குகள் மட்டுமே மேலதிகமாப் பெற்று ஒரு முறை வெற்றி பெற்றார். அவரும் கட்சியில் நீண்டகாலம் நிலைக்கவில்லை. தனது மனசாட்சிப்படி கட்சியைவிட்டு வெளியேறியதாய்க் கூறினார். அதனால் "மனச்சாட்சி மாட்டின்" என்று தமிழரசுக்கட்சியால் பழிக்கப்பட்டார். துரையப்பா யாழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர். துரையப்பாவை கொல்ல இளைஞர்கள் முயற்சி செய்து வந்தது அமிர்தலிஙகத்திற்கு நன்கு தெரியும். துரையப்பா கொல்லப்பட வேண்டியவர் என்று அமிர்தலிங்கமும் கருதினார், அதற்கு ஊக்கமளித்தார். துரையப்பாவைக் கொல்ல சிவகுமாரன், ஆனந்தகுமார், கிருபாகரன் ஆகியோர் மட்டுமல்ல அமிர்தலிங்கத்தின் மகன் காண்டீபனும் முயன்று வந்தார். துரையப்பா ஆதரவுப் பத்திரிகையொன்றில் திருமதி மங்கயற்கரசி அமிர்தலிங்கம் ஆங்கிலப்படம் பார்க்க போன செய்தியை நையாண்டிய செய்து எழுதப்பட்டிருந்தமைக்காக துரையப்பாவைக் கொன்று பழிவாங்க காண்டீபன் முயல்கிறார் என்ற செய்தி அப்போது நிலவி வந்தது.

துரையப்பாவின் கொலைச் செய்தியை அமிர்தலிங்கம் புன்சிரிப்போடு கேட்டார் என்று சொல்லப்படுகின்றது. துரையப்பா கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களை கைவிட முடியாது என்று கூட்டணிப் பொதுச்சபை முடிவெடுத்தது. அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், நவரத்தினம் போன்றவர்கள் வழக்குகளில் வாதாடினர். துரையப்பா கொலை வழக்கில் கைதான இளைஞர்களை சிறையில் சந்தித்த ஈழத்துக்காந்தி, அகிம்சாவாதி செல்வநாயகம் "உங்களுக்கு யார் வழக்கறிஞர்களாக வேண்டும், ஜி.ஜி பொன்னம்பலம் தேவை என்றாலும் நான் ஒழுங்கு செய்து தருகிறேன்" என்று அவர்களிடம் சொன்னார். தமிழாராய்ச்சி மாநாட்டில் பொலிசார் கூட்டத்தைக் கலைக்க வானத்தை நோக்கி சுட்டபோது மின்சார ஒழுக்கு ஏற்பட்டு ஒன்பது பேர் இறந்தனர். இது பொலிசாரின் பொறுப்பற்ற செயலாகும். இந்த ஒன்பது பேரின் மரணமும் துரையப்பா, சந்திரசேகரா இருவரும் இணைந்து செய்த கொலை என்று கூட்டணி வாதித்ததின் மூலம் துரையப்பாவை கொல்ல வேண்டும் என்ற இளைஞர்களது தீவிரம் அதிகமாகியது. அமிர்தலிங்கம் முதல் காசிஆனந்தன், வண்ணை ஆனந்தன், மாவை சேனாதிராசா வரை துரோகி ஒழிப்புப் பேச்சுக்கள் வேகமாயின. புதிய இரைகள் தேடப்பட்டன. கூட்டணி தன் அரசியலுக்காக துரையப்பாவை துரோகியாக்கி கொலை நடைபெறுவதற்கான சூழலை தோற்றுவித்தது.

யாழ் மேயரான துரையப்பா திட்டமிட்டு தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு அழைக்காமல் புறக்கணிக்கப்ட்டார். இதன் மூலம் துரையப்பா கூட்டணியால் தீவிர எதிர்நிலைக்குத் தள்ளப்பட்டார். துரையப்பாவைக் கொல்ல கிட்டத்தட்ட மூன்று தீவிரவாதக் குழுக்கள் அப்போ முயன்று வந்தன. தமிழீழ இலட்சியத்தை எதிர்த்தமைக்காக துரையப்பா துரோகி எனப்பட்டார். இன்று கூட்டணி, புலிகள் இருபகுதியும் தமிழீழ இலட்சியத்தை விட்டு ஐக்கிய இலங்கையுள்தீர்வு, சர்வதேச சமூகம், சமாதானத்தீர்வு, உள்ளக சுயாட்சி, பேச்சுவார்த்தை என்ற அரசியல்போக்குள் செல்லத் தொடங்கி விட்டன. இவர்களை புஸ்பராசா துரோகிகள் என்று அழைப்பதில்லை. கூட்டணி வட்டுக்கோட்டை மாநாட்டில் சகலரையும் விட முன்னேறி விஞ்ஞான சோசலிச தமிழ் ஈழம் என்றது. 1977 இல் கூட்டணி தேர்தலில் வென்றவுடன் தமிழீழத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக செயற்படுவோம் சொந்த தமிழீழ அரசியல் சட்டத்தை அமைப்போம் என்றவர்கள் இன்று புலிகளின் கள்ளவோட்டில் வென்று பாராளுமன்றத்தில் வாழ்க்கை நடாத்துகின்றார்கள். சோசலிசத் தமிழீழம் பேசிய புலிகள் உள்ளக தன்னாட்சிபற்றி பேசத் தொடங்கி விட்டனர். தமிழீழத்தை கைவிட்டதுக்காக அமிர்தலிங்கத்தை சுட்ட பிரபாகரனை இன்று யார் சுடுவது? யார் துரோகிப்பட்டியலில் இடம் பெறச் செய்வது? குருக்கள் குசுவினால் குற்றம் இல்லை என்பதுதான் புஸ்பராசாவின் அரசியலாகும். இட்டாருக்கு இடவும் செத்தாருக்கு அழவும் தெரிந்த வலதுசாரி காரியவாதி புஸ்பராசா.

தமிழாராய்ச்சி மாநாடு

தமிழாராய்ச்சி மாநாடு தனியே இலங்கையரசு மற்றும் துரையப்பா ஆகியேரோலாயே குழப்பட்டதான தமிழர்விடுதலைக் கூட்டணிக் கதை சொல்லலே புஸ்பராசாவிடமும் எந்தவித மாறுதலுமின்றி வெளியிடப்படுகின்றது. அதில் கூட்டணியின் பங்கு குறித்த மீள்பர்வை அவரிடம் இல்லை. அவருடைய அரசியலிருப்பிற்கு அது தேவைப்படவுமில்லை. 1967 இல் பாரிசிலும் பின்பு மலேசியாவிலும் தமிழாராய்ச்சி மகாநாடுகள் நடைபெற்றபோது அது தமிழ் மொழி சார்ந்த ஆய்வாளர்கள் கலந்து கொண்ட மாநாடுளாக இருந்தன. ஆனால் தமிழ் நாட்டில் சென்னையில் தமிழாராய்ச்சி மாநாடு நடாத்தப்பட்ட போது தி.மு.க அதை தன் அரசியல் மாநாடாக்கியது. தனது தமிழின அரசியலுக்கேற்றதாக மாற்றியது. தமிழராய்ச்சி மாநாடு இலங்கையிலும் அதே கதியையே அடைந்தது. கூட்டணி தமிழ், சிங்கள முரண்பாட்டை தனக்கு சாதகமான அரசியலாக்க முனைந்தது. தமிழாராய்ச்சி மாநாட்டு நிர்வாகம் முதலில் மாநாட்டை கொழும்பில் நடாத்தவே திட்டமிட்டது. அதற்கான ஏற்பாடுகளையும் செய்தது. ஒரு சர்வதேச மாநாட்டை நடாத்துவதற்கான வசதிகள் கொழும்பிலேயே இருந்தன. இந்த நிலையில் கூட்டணியினர் இதனுள் தலையிட்டனர். அதை யாழ்ப்பாணத்திலேயே நடத்த வேண்டும் என்று வாதிட்டதுடன் மாநாட்டு ஏற்பாட்டாளர்களையும் இணங்க வைத்தனர். யாழ்ப்பாணத்தில் நடத்தினால் அது கூட்டணியின் அரசியலுக்கு சாதகமாகி விடும் என்றதால் அரசாங்கம் அதை எதிர்த்தது. இருபிரிவுக்கும் நடந்த இழுபறிகளின் பின்பு யாழ்ப்பாணத்தில் நடத்த அரசாங்கம் வேறுமார்க்கமின்றி ஒப்புக் கொண்டது. இதில் கூட்டணி தான் முதன் முதலாவது வெற்றியை ஈட்டியதாக கருதியது.

யாழ்ப்பாணத்து தமிழாராய்ச்சி மாநாடு ஒரு மொழியாய்வு மாநாடு, அறிவியல் ரீதியில் ஆய்வு செய்யும் நிகழ்வு என்பது போய் கூட்டணிப்பிரச்சாரம், தமிழ் தேசிய உணர்வுகளை தூண்டும் மாநாடு என்ற போக்கை எடுத்தது. மலிவான தமிழ் தேசிய உணர்வுகளை கிளறக்க கூடிய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. ஆய்வறிஞர்கட்கும் மொழியாய்வாளர்கட்கும் பதிலாக தமிழ் தேசியவாதிகளும், பழம் பெருமை பேசுபவர்களும் அழைக்கப்பட்டனர். கருணாநிதி முதல் சாலை இளந்திரையன் வரை வரவுள்ளதாய் பேரொலி கிளப்பட்டது. சுகல தடைகளையும் மீறி தமிழராய்ச்சி மாநாடு தமிழினத்தின் எழுச்சி மநாடாக நடைபெறும் என்று கூட்டணி அறிவித்தது. ஏட்டிக்குபோட்டியான காரியங்கள் நடைபெற்றன. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாநாட்டிற்கு அப்போபது அதன் மேயராக இருந்த துரையப்பாவிற்கு அழைப்பு அனுப்பப்படவில்லை தமிழ் துரோகிகட்கு தமிழராய்ச்சி மாநாட்டில் இடமில்லை என்று கூட்டணி பிராச்சாரம் செய்தது. எனவே துரையப்பாவும் கூட்டணியின் பெயரால் தமிழராய்ச்சி மாநாட்டிற்கு எதிரானார். இடதுசாரி தமிழ் ஆய்வறிஞர்கள், சிந்தனையாளர்கள் போன்றோர் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டனர். பாரிஸ், கோலாலம்பூர் போன்ற மாநாடுகளுக்கு அழைக்கப்பட்ட பேராசிரியார் கைலாசபதி உட்பட இடதுசாரி கருத்துக்களை உடையவர்கள் ஒதுக்கப்பட்டனர். தம் சொந்த மண்ணில் நடைபெற்ற தமிழராய்ச்சி மாநாடு அவர்கள் பங்கு கொள்ளவிடாது கூட்டணி தடை விதித்தது, அவமானப்படுத்தியது. மாறாக பேராசிரியர் வித்தியானந்தன் போன்ற தேசியவாதிகள், பண்டிதர்கள், புலவர்கள், பழம் தமிழரசுக்கட்சி தமிழனவாதிகள் அழைக்கப்பட்டனர். ஆனால் புஸ்பராசாவோ அன்று சுதந்திரன் பத்திரிகை குயுக்தியாய் கைலாசபதி போன்றவர்கள் பகிஷ்கரித்தாய் எழுதியது போன்று இவரும் எழுதுகிறன்றார். தமிழ் காங்கிரஸ், தமிழர் சுயாட்சிக்கழகம், கொம்யூனிஸ்கட்சி தொழிற்சங்கங்கள், சிறுபான்மை தமிழர் அமைப்புக்கள் என்று கூட்டணிக்கு எதிரான எச்சக்திகளையும் கூட்டணி தமிழராய்ச்சி மாநாட்டில் நுழையவிடவில்லை. எல்லோரும் தமிழ் துரோகிகள் என்பதே கூட்டணியின் தீர்ப்பாகும். இதை அவதானிப்பவர்கட்கு இன்றைய புலிகளின் தாம் மட்டுமே தனிப் பெரும் இயக்கம் தமிழ் மக்களின் ஏக தலைமை என்ற குரல்கள் அதிசயமளிக்கமாட்டா.

தமிழராய்ச்சி மாநாட்டிற்கு இலங்கைக்கு வர அனுமதி மறுக்கப்பட்டவர்களில் ஒருவரான இரா.ஜனார்த்தனம் இரகசியமாக யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார். அவர் கூட்டணியின் உதவியுடன் யாழ்ப்பகுதிகளில் சுற்றி வந்தார். முன்பு தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் அறியப்படாத அநாமதேயமாய் இருந்த ஜனார்த்தனம் இந்த தமிழாராய்ச்சி மாநாட்டின் "சாகசம் மிக்க கதாநாயகன்" ஆக்கப்பட்டார். புஸ்பராசாவோ ஜனார்த்தனம் எந்த மேடையிலும் பேசவில்லை என்கிறார். யாழ்ப்பாணத்தில் கூட்டணி நபர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறு சிறு கூட்டங்களில் ஜனார்த்தனம் பேசினார். அத்தோடு மாநாட்டு மேடையில் தமிழ் நாட்டைச் சேர்ந்த நயினார் முகம்மது பேசிக் கொண்டு இருந்த போது தான் பொலிசார் தாக்கியதாக புஸ்பராசா பொய் சாட்சியமளிக்கிறார். நடந்தது என்னவெனில் நயினார் முகம்மது பேசிக் கொண்டு இருந்த போது தான் கதாநாயகன் ஜனார்த்தனம் மேடையில் தோன்றினார். உடனே மேடைக்கு முன்பு இருந்த சில கூட்டணி இளைஞர்கள் எழுந்து "ஜனார்த்தனம் வாழ்க" என்று சத்தமிட்டனார். உண்மையில் அங்கு கூடியிருந்த மக்களுக்கு ஜனார்த்தனம் யார் என்பது தெரியாமல் தான் இருந்தது. " ஜனார்த்தனம் வாழ்க" குரலையடுத்து கூடியிருந்த மக்கள் ஜனார்தனத்தை பார்க்க எழுந்தனர். எனவே கூட்டம் குழப்ப நிலையை அடைந்தது உடனே ஜனார்த்தனம் "எதிர்வரும் தைப்பொங்கல் போல் தமிழின உணர்வு பொங்குவதை இங்கு நான் காண்கிறேன்" என்று மக்களை உணர்ச்சியேற்றனார். இதனை புஸ்பராசா அறியவில்லை என்பதை நம்பமுடியாது. பல பத்தாயிரம் மக்கள் திரண்டுள்ள இடத்தில் பொலிசாரல் கைது செய்யப்படக் கூடிய நிலையில் உள்ள ஜனார்த்தனம் போன்ற ஒருவரை மேடையில் தோன்ற அப்புக்காத்துமாரின் கட்சியான கூட்டணி எப்படி அனுமதித்தனர்? மாநாட்டின் ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்துமே கூட்டணியினரிடமும், அவர்களின் இளைஞர்களிடமும் தான் இருந்தது. மாநாட்டுக்குழுவில் பெரும் பகுதியை அவர்களே கைப்பற்றியிருந்தனர். எனவே இது தற்செயலாக நிகழவில்லை. கூட்டணி இந்தப் பரபரப்பை ஏற்படுத்த விரும்பியது. தம்மை வீரத்திற்கு எடுத்துக்காட்டாக காட்டிக்கொள்ள விரும்பியது. ஆபத்தான வெளிப்படையான ஆத்திரமூட்டல்கள் மூலம் பொலிசாரை மக்களுக்கு எதிராக இறக்கிவிட்டது. பகைமை நிறைந்த நிலையில் பொலிசார் தமிழ் மக்களுக்கு எதிராக எப்படி செயற்படுவார்கள் என்பது கூட்டணிக்கு நன்கு தெரியும். தெரிந்தே கூட்டணி இத்தகைய விளையாட்டுக்களை அரங்கேற்றியது. இதில் கூட்டணியின் பாத்திரம் ஏதோ அப்பாவிகளின் பாத்திரமல்ல.

ஜனார்த்தனன் மேடையில் தோன்றியதும் பொலிசார் ஜனார்த்தனத்தை கைது செய்யவும் மேடையை நோக்கி செல்லவும் முயன்றனர். இடையில் தடையாக இருந்த மக்களை வானத்தை நோக்கி சுட்டுக் கலைக்க முயற்சி செய்தனர். அதன் போது மின்சாரத் தொடர்புகள் அறுந்து மக்கள் மேல் விழுந்தன. இது எதிர்பாராமல் நடந்த சம்பவமே எனினும் ஒரு இனவாதப்போக்குக் கொண்ட பொலிசார் மக்களிற்கு எதிராக இறங்கியதில் கூடடணிக்கு எப்பங்கும் இல்லையா? பொலிஸ் பயங்கரவாதம் சிறிது ஆத்திரமூட்டல் ஏற்பட்டாலும் செயலில் இறங்கிவிடும் என்று கூட்டணியினரின் சட்ட மூளைகட்கு தெரியாதா? பொலிஸ் இறங்குமாயின் அதற்கு எதிராக பொலிசிடம் இருந்து மக்களை பாதுகாக்க கூட்டணியிடம் தயாரிப்புக்கள் ஏதும் இருந்ததா? ஆனால் கூட்டணியும், சுதந்திரனும் தமிழராய்ச்சி மாநாடு நிகழ்வில் 9 பேர்கள் மரணத்திற்கு அரசாங்கமும் துரையப்பாவுமே காரணமென்றும், பொலிசார் சுட்டு 9 பேர்கள் இறந்ததாயும் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. துரைய்ப்பாவுக்கு யாழ்ப்பாண நகருக்குள் கூட்டணியை விட அதிக செவ்வாக்கு இருந்தது. துரையப்பா நினைத்திருந்தால் அவரால் கூட்டணிக்கு பலத்த எதிர்ப்புக்களை காட்டியிருக்க முடியும். கரையூர், பாசையூர், ஆரியகுளத்தடி ஆகிய பகுதிகளில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் உதவியைப் பெற்றுக் கூட்டாக பதிலடி கொடுக்க முடிந்திருக்கும். ஆனால் துரையப்பா அப்படிச் செய்யவில்லை.

தமிழாராய்ச்சி மாநாட்டின் மரணங்களிற்கு துரையப்பாதான் காரணம் என்ற வெறியூட்டுதலையடுத்து கூட்டணியின் தீவிரவாத இளைஞர்கள் துரையப்பாவைக் கொல்லச் சபதமெடுத்தனார். சத்தியசீலன், சிவகுமாரான், ஆனந்தகுமார், காண்டீபன், கிருபாகரன், பிரபாகரன், நடேசானந்தம், பிரான்சிஸ் போன்றோர் குழுக்களாக இதற்கு முயன்றனர். பொலிஸ் உதவியட்சராக இருந்த சந்திரசேகரா மீது கொலை முயற்சிகள் நடைபெற்றது. இளைஞர்கள் கொலைப்பட்டியல் தயாரிக்கத் தூண்டிய கூட்டணியினேரே பின்பு கொலைப்பட்டியலில் இடம் பெற்றனர் என்பது வரலாறாகும். தமிழ் - சிங்கள முரண்பாடுகள் இரு பகுதி முதலாளிய சக்திகளாலும் தூண்டப்பட்டதின் மூலம் ஒன்றிணைந்த தமிழ் சிங்கள மக்களின் எழுச்சி, சோசலிசப்புரட்சி என்பன சிதைக்கப்பட்டன. தமிழ் தேசியவாதத்தை சிங்கள இனவாதத்திற்கு பதிலீடாக்கியவர்கள் சொந்தத தமிழ்க் குறுந்தேசியவாத்தினாலேயே தின்னப்பட்ட காட்சி இன்று தீர்ப்புக்கு விடப்பட்டுள்ளது. இதிலிருந்தும் கற்க புஸ்பராசவிற்கு அரசியல் சேமிப்பு உதவிக்குவரவில்லை. அவர் இன்னமும் புலிப்பாசிசத்திற்கு காவல் சேவை செய்து வருகின்றார்.

ஈழவிடுதலை இயக்கம்

ஈழவிடுதலை இயக்கம் ஏன் எப்படித் தோன்றியது? எந்தக் காலத்தில் தமிழர் இளைஞர் பேரவையிலிருந்து வேறுபட்டது? அதன் மரணம் எப்படி நிகழ்ந்தது? என்று எந்தவொரு அறிவித்தலையும் புஸ்பராசா எமக்கு தரவில்லை. த.இ.பேரவை போன்று ஈழவிடுதலை இயக்கத்திலும் இவரே பிரதான தலைமைக் கர்த்தராக மிளிர்ந்தார் என்ற செய்தி மட்டுமே எமக்கு விடப்பட்டுள்ளது. ஒரு வரலாறு பதிவு செய்யப்படுகின்றது ஆவணமாகின்றது வரலாற்றுணர்வு புஸ்பராசாவிடம் இல்லை. தனது சொந்த தனிமனித ஆசைகட்கு முதன்மை தருவதினூடு அவர் வாசிப்பவரை தவறாக நம்ப வைக்கிறார். ஈழவிடுதலை இயக்கம் 1975 இல் கூட்டணி நடாத்திய சட்ட மறுப்புப் போராட்ட ஊர்வலத்தில் எழுந்த முரண்பாட்டில் இருந்தே பிறந்தது. நீண்ட காலமாய் கூட்டணியின் வீர வசனங்களில் அலுததுப் போன இளைஞர்கள் இந்தச் சட்ட மறுப்பு நடவடிக்கையில் பொலிசார் ஏற்படுத்திய வீதித்தடையை உடைத்துக் கொண்டு போக வேண்டும் என்றனர். ஆனால் மேடைப்பேச்சுக்களில் வீரகாவியம் புனைந்து இளைஞர்களை சூடேற்றிய கூட்டணியோ தலைமை, கட்டுப்பாடு, அகிம்சை என்று கூறி தனது ஓட்டுக்குள் சுருங்கிக் கொண்டது. செல்வநாயகம் பொலிஸ் ஏற்படுத்திய தடைக்கு முன்பாக கதிரை போட்டு உட்கார வைக்கப்பட்டார். இளைஞர்களோ பொலிஸ் ஏற்படுத்திய தடையை உடைத்துக் கொண்டு போக வேண்டும் என்றனர். கூட்டணி வழக்கமான தனது அகிம்சை போராட்டங்களின் பொலிஸ் விதித்த தடைகள், வேலிகளில் வாழ்ந்து பழக்கப்பட்ட கட்சி. எனவே அண்ணன் அமிர் இளைஞர்கள் கட்டுப்பாடு காக்க வேண்டும் என்ற போது இளைஞர்களோடு முரண்பாடு ஏற்பட்டது. சட்டத்திற்குட்பட்ட சட்டத்தரணிகளின் கட்சியான கூட்டணியால் போராட்டப்பாதையில் எந்த வழிகாட்டலையும் வேலைத்திட்டத்தையும் முன்வைக்க முடியவில்லை. தொடர்ச்சியான அரசியலும் செயற்பாடும் இருக்கவில்லை. கூட்டணியின் அரசியல் வெறுமையை உணர்ந்த இளைஞர்கள் மாற்றுக்களைத் தேட முயன்றனர்.

இந்த இளைஞர்கள் உண்மையில் பெருந்தொகையானவர்களாகவோ, பரந்த மக்கள் போராட்டத்தில் பங்கேற்கும் அவசியத்தை உணர்ந்தவர்களாகவோ இருக்கவில்லை. தமிழ் தேசியம் சார்ந்த அரசியல் எத்தகையது என்ற மதிப்பீடுகளோ, போராட்டம் குறித்த ஞானம் கொண்டவர்களாகவோ இருக்கவில்லை. எனினும் தொடர்ந்து கூட்டணியை நம்பிப் பிரயோசனம் இல்லையெனவும் த.இ.பேரவை என்பது இளைஞர்களை தமக்குள் கட்டி வைத்திருக்கக கூட்டணி ஏற்படுத்திய அமைப்பு என்று இவர்கள் கருதினர். எனவே த.இ.பேரவையிலிருந்து பிரிந்த இந்த இளைஞர்கள் தேர்தலில் நம்பிக்கை கொண்ட கூட்டணிக்கு மாறக உள்ளேயும் வெளியேயும் வெளியேயும் தேர்தல் இல்லை என்ற கோசத்துடன், ஈழவிடுதலை இயக்கத்தை ஆரம்பித்தனர். எவ்வழி நல்வழியோ அவ்வழியே எம்வழி என்று அறிவித்துக் கொண்டனர். இவர்கள் போராட்டம் என்றால் மக்களிடம் செல்வது அவர்களிடம் அரசியலை தொடக்குவது என்ற புரிதலுக்கு பதிலாக இவர்கள் இளைஞர்களைமட்டும் திரட்ட முயன்றனார். முத்துக்குமாரசுவாமி, வரதராசா, புஸ்பராசா, பாலகுமார், பிரான்சிஸ் (கி.பி. அரவிந்தன்) குமரன் மாஸ்டர், பத்மநாபா, சந்திரமோகன், தங்கமகேந்திரன் போன்றோர் இதில் முக்கியமாக இருந்தனர். இவர்கள் மூன்று பேர்களைக் கொண்ட முதன்மைக் குழுவையும் 5 பேர்களைக் கொண்ட பொதுக்குழுவையும் தெரிவு செய்து கொண்டதோடு, ஒவ்வொரு தேர்தல் தொகுதிக்கும் 3 பேர்களையும் நியமித்தனர். அமைப்பின் செயலாளராக சந்திரமோகனும் பொருளாராக தங்கமகேந்திரனும் இருந்தனர். தங்கமகேந்திரன் தவிர இவர்கட்கு யாழ் குடாநாட்டிற்கு வெளியே எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. த.இ.பே.போன்று இதுவும் யாழ் குடாநாட்டு இயக்கமாகவேயிருந்தது. 1975 இல் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் தொடங்கிய சில மாதங்களிலேயே துரையப்பா கொலை வழக்கில் முக்கியமானவர்கள் பிடிக்கப்பட்டு விட்டனர். இவர்கள் 'எரிமலை' என்ற பத்திரிகையை ஆரம்பித்து சில இதழ்கள் வெளியிட்டு ஓய்ந்தனர்.

1977 இல் கூட்டணி தேர்தலில் தமிழீழத்திற்கான சர்வசன வாக்கெடுப்பு 'தமிழீழத்திற்கான அங்கீகாரம்' என்று குரல் கொடுக்கத் தொடங்கியிருந்தது. உள்முரண்பாடுகளினால் திணறி பலவீனமடைந்திருந்த ஈழவிடுதலை இயக்கம் இப்போக்கினுள் இழுபடத் தொடங்கியது. கூட்டணி அமிர் ஆதரவாளரான புஸ்பராசா மற்றும் முத்துக்குமாரசுவாமி போன்றோர் கூட்டணியை இத்தேர்தலில் ஆதரிக்க வேண்டும் என்றனர். வரதராசா, குமரன் மாஸ்டர், பத்மநாபா, பாலகுமார் போன்றவர்கள் கூட்டணி, தேர்தல், இவைகட்கு அப்பால் தனிநாட்டு இலட்சியத்தை முதன்மைப்படுத்தி போராட வேணடும் என்றனர். ஏற்கனவே அரசியல் தத்துவார்த்த ஒன்றிணைப்போ, ஒழுங்கான இயக்கக்கட்டமைப்போ இல்லாதிருந்த இந்த அமைப்பு இத்தோடு உடைந்து சிதறியது. புஸ்பராசா, முத்துக்குமாரசுவாமி யைத் தவிர கிட்டதட்ட மற்றவர்கள் இயக்கத்தைவிட்டு வெளியேறிச் சென்றனர். புஸ்பராசா அமிர்தலிங்கத்திடம் மீண்டும் சரண் புகுந்தார். இயக்கதிலிருந்து வெளியேறியவர்கட்கு பத்மநாபா போன்றவர்கள் ஊடாக EROS இரத்தினசபாபதியின் தொடர்பும் தேசியம், சோசலிசம் என்பவை பற்றிய தொடக்க நிலைக் கருத்துக்களும் ஏற்பட்டு இருந்தனர். இவர்களில் பலர் பின்பு EROS,EPRLF இயக்கங்களாக மாறினர். புஸ்பராசா தனது நூலில் EROS இரத்தினசபாபதியை ஒவ்வாதவராக காணுவது இத் தொடர்புகளின் பின்புலத்தில் தான். இடதுசாரிப்போக்குள்ளவர்கள் மேலான வெறுப்பு புஸ்பராசவிடம் எல்லா இடமும் நிறைந்த நிற்கின்றது. கூட்டணி அமிர்தலிங்கம் மேலான நேசமோ சகல திசைகளிலும் முகம் காட்டுகின்றது. மீணடும் கூட்டணியில் சேர்ந்த புஸ்பராசாவிற்கு த.இ.பே இல் பதவி கிடைத்தது, கூட்டணி மேடைகள் கிடைத்தன.

புலோலி வங்கிக் கொள்ளையில் தனக்கு தொடர்பில்லை என்று புஸ்பராசா தனது நுhலில் எழுதியுள்ளார். இக் கொள்ளை இவர் சார்ந்த ஈழவிடுதலை இயக்கம் தான் நடாத்தியது. அப்போது புஸ்பராசா சிறையில் இருந்த போதும் இவரது குடும்பத்தினரும் இவரது இயக்கமும் இதில் பங்கு கொண்டிருந்தனர். புலோலி வங்கிக் கொள்ளையில் கற்றம் சாட்டப்பட்ட 12 பேர்களும் ஈழவிடுதலைஇயக்கத்தை சேர்ந்தவர்கள். தண்டனை விதிக்கப்பட்ட தங்கமகேந்திரன், ஜெயக்கொடி, நல்லையா, கோவை நந்தன் போன்றோரும் இதில் அடங்குவர். புஸ்பராசாவின் தாயார், தங்கை போன்றோரும் கைது செய்ய்ப்பட்டனர். கல்யாணி, தெய்வேந்திரராணி புஸ்பராணி போன்ற பெண்கள் கொள்ளைச் சந்தேகத்தின் பேரில் பொலிசாரால் கைததாகி சித்திரவதைக்கும் பலவகை அவமானங்கட்கும் உட்படுத்தப்பட்டனர். அப்போ யாழில் இயங்கிய 4ஆம் மாடியின் பிரிவான DCDB க்கு பொறுப்பாக பத்மநாதன் இருந்தார் இவரே புலோலி வங்கிக்கொள்ளையை கண்டு பிடித்தவர். இவருடன் விசாரணை சித்திரவதைகளில் ஈடுபட்ட சண்முகநாதன், கருணாநிதி போன்றர் சிஐடி பொலிசாரும் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

புலோலி வங்கிக் கொள்ளையில் கிட்டத்தட்ட எட்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளும் பணமும் கொள்ளையிடப்பட்டது. இந்த நகைகளின் ஒரு பகுதி புஸ்பராசா வீட்டில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டதாய் சொல்லப்படுகின்றது. புலோலி வங்கி ஒரு கூட்டுறவுக் கிராமிய வங்கியாகும். இதில் ஏழை விவசாயிகளே தம் நகைகளை அடைவுவைத்து இருந்தனர். இதில் கொள்ளையிடப்பட்ட நகைகள் பலரால் தாறுமாறாய் செலவு செய்யப்பட்டது. தம் சொந்த உல்லாசங்களுக்கு பயன்படுத்தப்பட்டதாய் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இக் கொள்ளையில் முக்கிய பங்கு வகித்த சந்திரமோகன் பின்பு அரசியலில் இருந்து ஒதுங்கி, ஒரு வியாபார நிலையத்தை தொடங்கினார். சந்திரமோகனின் தந்தையார் பொலிசில் செல்வாக்கு கொண்டு இருந்தமையால் முக்கிய குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்பட்டார். கொள்ளையை நடத்தியவர்கள் பொலிசார் கண்காணிக்க கூடிய கூட்டணிசார்ந்த நபர்களின் வீடுகளிலேயே சென்று ஒழிந்தமையால் இலகுவாகப் பிடிபட்டனர். கொள்ளைப்பணத்தில் வெளிப்படையாக கார், மோட்டார்சைக்கிள் என்பன வாங்கி ஓட்டப்பட்டமை இயக்கக் கட்டுக்கோப்பு, தலைமறைவாழ்வு சார்ந்த கவனமின்மை என்பன கொள்ளை பிடிபட முக்கிய காரணமாகும். மக்களில் நம்பிக்கையற்ற இந்தச் நபர்கள் சிவகுமாரன் வழியில் வங்கிகளை கொள்ளையிட்டு, ஆயதம் வாங்கி கொஞ்ச இளைஞர்களைத் திரட்டி போராட முடியும் என்று நம்பி தோல்வி கண்டனர். இங்கு புஸ்பராசா சொற்பமாக எழுதி பெருந்தொகை செய்திகளை மறைத்து விட்டார். மறைக்கப்பட்டவை, தவிர்க்கப்பட்டவை, திட்டமிட்டே இருளில் தள்ளப்ட்டவை என்பன எதிர்காலத்தில் கிண்டப்படும், கிளறப்படும் என்பதை மறந்து விட விரும்புகிறார்.

தமிழ் இளைஞர் பேரவையும் தமிழ் மாணவர் பேரவையும்

தமிழ் இளைஞர் பேரவை> தமிழ் மாணவர் பேரவை போன்றவை பற்றிய புஸ்பராசாவின் வரைவுகள் கூட்டணியினரின் வரலாற்று எழுதலுக்குட்பட்டதாகும். த.இ.பே. தோற்றத்தை தமிழ் மாணவர் பேரவையின் உருவாக்கத்தினூடுதான் காண வேண்டும். புஸ்பராசா இரண்டையும்; வெவ்வேறாகக் காட்ட முயல்கின்றார். தமிழர் மாணவர் பேரவை கூட்டணிக்கு வெளியே சுதந்திரமாய் பிறந்தது. சத்தியசீலன், சிவகுமாரன், அரியரட்ணம் போன்ற நடுத்தரவர்க்கம் சார்ந்த உத்தியோத்தரின் பிள்ளைகளே இதைத் தொடங்கினார்கள். இவர்கள் தரப்படுத்தலுக்கு எதிராக உதித்தெழுந்தாய் சொல்லப்பட்ட போதும் வெகுவிரைவாகக் கூட்டணியின் அரசியல் சுலோகங்களை தமதாக்கிக் கொண்டனர். இந்த மக்கள் அடிப்படையற்ற பொறுமை கெட்ட தீவிரவாத சக்திகள் துரோகிபட்டியல்களை முதன் முதலில் தயாரிக்கத் தொடங்கினர். ஒரு சில ஆயுதங்கள், வெடிகுண்டு நடவடிக்கைளில் இறங்கினர். இவர்களது ஆயுதக்கவர்ச்சி, துரோகி ஒழிப்பு முயற்சிகள் யாழ்ப்பாண நடுத்தர வர்க்கத்திற்கு வீரதீர காட்சியாக விளங்கியது. இளைஞர்களின் அரசியல் முயற்சிகள் வளருவதையும் தன்கட்டுகடங்காமல் போவதையும் கண்ட அமிர்தலிங்கம் சுதந்திரன் பத்திரிகையில் தமிழரசு வாலிப முன்னணி தொடங்கப்படுவதற்கான அழைப்பை வெளியிட்டார். தமிழரசுக் கட்சியில் முன்பே தமிழரசு வாலிப முன்னணி என்ற பத்து இருபது பேர்களைக் கொண்ட அமைப்பொன்று இருந்தது. இந்த அமைப்பு கட்சிக்கு கொடி கட்டும், மண்கிண்டி மேடைபோடும் அமைப்பாக இருந்தது.

தமிழரசு வாலிப முன்னணி தொடக்கம் பற்றி செய்தி சுதந்திரனில் வெளிவந்ததும் தமிழர் மாணவர் பேரவை ஒரு சுதந்திரமான அமைப்பு எனச் சொல்லி வந்த சத்தியசீலன், அமிர்தலிங்கத்தை ஓடோடிச் சென்று சந்தித்து நாம் உங்களுக்கு இடைஞ்சலாக இருக்க மாட்டோம் என்று உறுதி தந்தார். எனினும் ஆயுத சாகசம் செய்த இளைஞர்கட்கு வெளியே தமது கட்சிக்கு அடங்கக்கூடிய இளைஞர் அமைப்பை தொடங்குவதன் மூலம் தமிழ் மாணவர் பேரவையை வலுவிழக்கச் செய்ய அமிர்தலிங்கம் முயன்றார். அமிர்தலிங்கம் இக்காலத்தில் அடிக்கடி இளைஞர்களின் கட்டுப்பாடு பற்றி பேசியதுடன் தமது தலைமையை ஞாபகமூட்டும் பேச்சுக்களை நிகழ்த்தினார். தி.மு.கவிற்கு தமிழ்நாட்டில் ஒரு தமிழ் இளைஞர் பேரவை இருந்தது போலவே இங்கும் கூட்ணிக்கும் ஒரு தமிழர் இளைஞர் பேரவை தொடங்கப்பட்டது. தலைவராக தமிழரசு வாலிப முன்னணியைச் சேர்ந்த மாவை சேனாதிராசா போன்றவர்களுடன் கூட்டணி ஆதரவு இளைஞர்கள் அதில் நிரப்பட்டனர். 1974 இல் நடந்த கூட்டணியின் வட்டுக்கோட்டை மாநாட்டில் இந்த அமைப்பு கூட்டணியின் இளைஞர் அமைப்பாக உத்தியோகபூர்வமாக ஏற்கப்பட்டது. கனகமனோகரன், எஸ்.கே.மகேந்திரன், மதிமுகராசா, சிவமகராசா, காங்கேசன்துறை கணேசமூர்த்தி, திருமலை சிறீஸ்கந்தராசா, மண்டூர் மகேந்திரன், ரகுபதிபாலசிறீதரன், குணாளன், பீற்றர் பொன்கலன், புஸ்பராசா, சேயோன் மற்றும் கூட்டணி ஆதரவுச்சக்திகள் இளைஞர் பேராவையினுள் அணி கட்டப்பட்டனர். இளைஞர் பேரவை கூட்டணியின் செல்வாக்கு பலம் ஊடாக விரைவாக அறிமுகப்படுத்தப்பட்டபோதும் அது மிகவும் சிறுபகுதி இளைஞர்களையே உட்கொண்டு இருந்தது. தமிழ் மாணவர் பேரவையானது சிவகுமாரனின் மரணம், சத்தியசீலன் கைதுடன் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தது. தமிழ் இளைஞர் பேரவை கூட்டணியின் தொடர்பற்று சுதந்திரமாக இயங்கியது என புஸ்பராசா எழுவதுவது உண்மையல்ல. த.இ.பே கூட்டணியின் இளைஞர் அமைப்பு என்று அமிர்தலிங்கம் பல தடவைகள் திரும்பத் திரும்ப கூறியிருக்கின்றார். கூட்டணியிலிருந்து த.இ.பேரவையிலிருந்து உடைத்துக் கொண்டு போக முயற்சித்தமைக்காகவே சந்ததியார் காலத்து த.இ.பேரவை - கூட்டணி நபர்ளால் சகல திக்குகளிலிமிருந்து தூசிக்கப்பட்டார்.

த.இ.பே உண்மையில் கூட்டணியின் கட்டளைக்குட்பட்டே இயங்கியது. மாவை சேனாதிராசா, கனகமனோகரன், புஸ்பராசா, சிவமகராசா போன்றவர்கள் கூட்டணித்தலைமையின் விசுவாசிகளாக, அண்ணன் அமிர்தலிங்கத்திற்கு எதிர்வார்த்தை பேசாத அன்புத்தம்பியராக இருந்தனர். த.இ.பே அலுவலகம் யாழ் மெயின் வீதியில் உள்ள கூட்டணியின் கட்சி அலுவலகத்தின் ஒரு பகுதியிலேயே இயங்கியது, கூட்டங்களை நடாத்தியது. தனது கடிதத் தொடர்புகட்கு அது கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் விசேட அரசபணி இலவச தபாற் சேவைகளைப் பயன்படுத்தினர். எம்பிமாரின் பஸ், புகைவண்டிப் பாஸ்களையும் பாவித்தனர். புஸ்பராசாவின் வர்ணனை போல் ஒருபோதும் கூட்டடணியின் செல்வாக்குக்கு வெளியே சுயமாக இயங்கியது கிடையாது. த.இ.பேரவையில் இருந்து உடைந்து ஈழவிடுதலை இயக்கம் பிறந்த போது ஒரு குறுகிய காலம் மட்டும் தான் புஸ்பராசா த.இ.பேரவைக்கு வெளியே இருந்தார். பின்பு அவர் அதற்கே விரைவாகத் திரும்பி விட்டார். ஈழவிடுதலை இயக்க உருவாக்கத்தில் வரதராசா, சந்திரமோகன், முத்துக்குமாரசுவாமி போன்றவர்களையே முக்கியமாய் குறிப்பிட வேண்டும். இதில் புஸ்பராசாவின் பங்கு சிறியதும் ஊசலாட்டம் நிறைந்ததுமாகும். த.இ.பேரவையில் கூட புஸ்பராசா முக்கியமாக இருந்த காலம் மிகவும் சொற்ப காலகட்டமாகும்;. த.இ.பேரவையிலிருந்து கூட்டணியின் மிதவாதத்திற்கு எதிராக முதலில் கலவரம் செய்தவர் சந்ததியார்தான். 1975 இல் த.இ.பேரவையில் இணைந்த சந்ததியார் த.இ.பேரவையின் மூத்த முதியவர்களை எல்லாம் தாண்டி விரைவாக முன்னேறி வந்தார். அவர் புஸ்பராசா போன்றவர்களை மாதிரி அமிர்தலிங்கத்தின் ஆளுமைக்கும் முகத்திற்கும் அஞ்சிப் பணிந்தவரல்ல. முதல் முறையாக அரசியலை முற்போக்குத்திசையில் எதிரொலிக்க முனைந்தார். த.இ.பே தனிவழி செல்லும் கூட்டணியின் அரசியல் சர்வாதிகாரத்திலிருந்து விடுபடும் என்று அவர் அறிவித்தார். ஆங்கிலப் புலமை சட்டதரணிகள், எம்பிமார் என்ற தராதரம், மேடைப்பேச்சுத்திறன் கொண்ட கூட்டணிக்கு எதிராக முதலாளித்துவம், சோசலிசம் என்று சிந்திக்க கூடிய இளைஞர் அணியொன்றை உருவாக்கினார். யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குள் வளைய வந்து கொண்டிருந்த த.இ.பே வன்னிக்கும், மன்னாருக்கும், கிழக்குமாகாணத்திற்கும் சென்றது. வன்னிப்பிரதேசத்தில் பீற்றர் பொன்கலன் போன்ற கூட்டணி ஆதரவு த.இ.பே நபர்களின் தனிமைப்போக்கிலிருந்து விடுபட்டு வன்னி எங்கும் கூட்டங்களை நடத்தினார். வவுனியா, முல்லைத்தீவு, மாங்குளம், புளியங்குளம், கனகராயன்குளம், முள்ளியவளை, வவுனிக்குளம் என்ற சகல இடமும் த.இ.பே கிளைகள் நிறுவப்பட்டன. இரவில் பெற்றோல்மாக்ஸ் வெளிச்சத்தில் மரங்களின் கீழே கூடக் கூட்டங்கள் நடாத்தப்பட்டன.

தமிழர் விடுதலைக்கூட்டணி எம்பிமார்கள் தமது தொகுதிகளில் முடிந்தளவுக்கு சந்ததியார் காலத்தைய த.இ.பே அமைப்புக்கு இடைஞ்சல்களை ஏற்படுத்தினர். இளைஞர்களைப் பிளவு படுத்தினர். முல்லைத்தீவு எம்பி செல்லத்தம்பு தனது தொகுதியில் த.இ.பே கூட்டங்கள் எதுவும் வைக்க கூடாது என்று கட்டளையிட்டார். சந்ததியார் காலத்தில் கிழக்கில் த.இ.பே வளர்ந்தது. அமைப்பின் செயலாளராக முதன்முதலாக மட்டக்களப்பைச் சேர்ந்த வாசுதேவா தேர்ந்தெடுக்கப்பட்டார். 1978 டிசம்பரில் கிழக்கில் புயல் வீசிய போது சந்ததியார் தலைமையிலான த.இ.பே மட்டக்களப்பு சென்று நிவாரண வேலைகளில் ஈடுபட்டது. அப்பிராந்திய மக்களின் நன்மதிப்பைப் பெற்றது. வடக்கு கிழக்கு இளைஞர்கள் இணைந்து பணியாற்றினர். த.இ.பே தமிழ் பகுதி எங்கும் பகிரங்கப் பொதுக் கூட்டங்களை முதன் முதலாக தனியே நடத்தியது. யாழ் முற்றவெளியில் நடத்திய பொதுக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டனர். மட்டக்களப்பு, வவுனியா உட்பட பல இடங்களில் இத்தகைய பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. கூட்டணியும் அமிர்தலிங்கமும் வெளிப்படையாக விமர்சிக்கப்பட்டனர். கூட்டணியும், அமிர்தலிங்கமும் சந்தியார் அணியைத் தொலைக்க வழி தேடினர். அமிர்தலிஙகம் அடாத்தாக த.இ.பே. நிர்வாகத்துள் தலையிட்டு தானே கையெழுத்திட்டு த.இ.பே பொதுச்சபை உறுப்பினர்கட்கு பொதுச்சபை கூடவுள்ளதாய் அறிவித்தல் அனுப்பினார். உண்மையில் த.இ.பேரவை பொதுச்சபையைக் கூட்ட சந்ததியார் தலைமையிலான நிர்வாக அணிக்கு உரிமை இருந்தது ஆனால் அமிர்தலிஙகம் த.இ.பே கூட்டணியின் இளைஞர்அணி பிரிந்து போக உரிமையில்லை வேண்டுமானால் இவர்கள் போய் தனியான அமைப்பை உருவாக்கட்டும் என்று நியாயம் பேசினார்.

இதன் முன்பு கூட்டணியின் ஆட்கள் என்று கருதப்பட்ட மாவை சேனாதிராசா, எஸ்.கே. மகேந்திரன், வண்ணை ஆனந்தன், கனகமனோகரன் போன்றவர்களை சந்ததியார் அணி பெரும்பான்மையோரின் விருப்பபடி வெளியேற்றியிருந்தது. இவர்கள் த.இ.பேரவையில் இருந்தபடி உள்விவகாரங்களை அமிர்தலிங்கத்துக்கு உளவு சொல்லிவந்தனர். த.இ.பே அலுவலகமும் யாழ்ப்பாணாம் ஸ்ரான்லி வீதிக்கு மாற்றப்பட்டது. இக்கால கட்டத்தில் புஸ்பராசா த.இ.பே செயற்பாட்டிலோ எப்பதவியிலோ இருக்கவில்லை. இவர் ஒதுங்கியிருந்ததுடன் பெரும்பாலும் கூட்டணி மேடைகளிலேயே தோன்றுபவராக இருந்து வந்தார். அமிர்தலிங்கம் த.இ.பே உடைக்கும் நோக்குடன் சேனாதிராசா, கனகமனோகரன், எஸ்.கே மகேந்திரன், பீற்றர் பொன்கலன், ரகுபதிபாலசிறிதரன், திசைவீரசிங்கம் உட்பட பல கூட்டணி ஆதரவாளர்களை திரட்டி ஒரு போட்டி த.இ.பே தொடங்கப்பட்டது. கூட்டம் கூட்டப்பட்ட அன்று எல்லோருக்கும் விசேடமாக 'பிரியாணி' வழங்கப்பட்டது. புதிய அமைப்பின் தலைவராக மாவை சேனாதிராசாவும் இடைக்கால அமைப்பாளர்களாக எஸ்.கே மகேந்திரன், பீற்றர் பொன்கலன், ரகுபதி பாலசிறிதரன் போன்றோர் நியமிக்கப்பட்டனர். அதன் பின்பு தமிழர் விடுதலைக்கூட்டணி இளைஞர்களைத் திருப்திப்படுத்த அமைத்த கூட்டணியின் 9 பேர் கொண்ட போராட்டக் குழுவில் இரண்டு இடங்களில் த.இ.பே உறுப்பினர்கட்கு பதவி வழங்கப் பட்டது. இப்படியாகத்தான் தளபதி அமிர் கூட்டணிக்கு எதிரான முற்போக்கு திசையில் வளர்ந்த இளைஞர்களை சிதறடித்தார் என்ற போதிலும் கூட்டணியின் மிதவாதப்போக்குக்கு எதிரான தீவிரவாதம் இளைஞர்களில் இருந்து வளர்வதை தடுக்க முடியவில்லை. அமிர்தலிங்கம் முதல் மாவை சேனாதிராசா வரை சந்ததியாரை வெறுத்தமையுடன் தமது எதிரியாய் கருதியமையின் போக்கு இங்குதான் மூலம் கொண்டிருந்தது. இடதுசாரிகளின் செல்வாக்கிற்குப் சந்ததியார் பலியாகிவிட்டதாய் அமிர்தலிங்கம் குற்றம் சொன்னார். புஸ்பராசா அரசியல் ரீதியாக சந்ததியாருடன் எந்த வகையிலும் ஒப்பிடப்படக் கூடியவரல்ல. கடின உழைப்பிலும் அரசியல் நேர்மையிலும் சந்ததியார் வேறு எவரையும் விட உயர்வாக இருந்தார். வடக்கு, கிழக்கு இணைந்த அரசியல் போக்கொன்றை இளைஞர்கள் மத்தியில் ஊன்ற முயன்றார். வன்னி, மட்டக்களப்பு கிராமப் பகுதிகட்கும் அமைப்புக்களை பரவலாக்கினார். புஸ்பராசா போன்றவர்கள் இப்பகுதிகயுக்கு ஒரு போதும் சென்றதோ கண்டறிந்தோ கிடையாது. வன்னிப்பகுதிகளின் முக்கியமானவர்களில், சிறையிருந்தவர்களில் ஒருவரைக் கூட புஸ்பரசா குறிப்பிட்டது கிடையாது. பொன் பத்மநாதன், இராஜரட்ணம், தவராசா, பரமநாதன், இராஜராஜேஸ்வரன் போன்ற தமிழ் இளைஞர் பேரவையின் வன்னிப்பகுதியின் முக்கியமானவர்களையோ, முல்லைத்தீவு தமிழ் இளைஞர் பேரவைத் தலைவராக இருந்த பறங்கி இனத்தைச் சேர்ந்த டேவிட் எலோய் என்பவரையோ புஸ்பராசா அறியாதவராக இருந்தார் என்று கட்டாயமாக நம்ப முடியும். த.இ.பே இருந்து கொண்டே த.வி கூட்டணி தலைமைக்கும் அமிர்தலிங்கத்திற்கும் அமைப்புத் தகவல்களை கொடுத்து வந்ததாய் குற்றம் சாட்டப்பட்டே மாவை சேனாதிராசா, எஸ்.கே மகேந்திரன், கனகமனோகரன் போன்றவர்கள் த.இ.பே இல் இருந்து வெளியேற்றபட்டதை புஸ்பராச அறியாமல் இருந்தார் என்று நம்பமுயாது. கூட்டணி சார்பு ஆட்களைப் பாதுகாக்கும் பொருட்டே அமிர்தலிஙம் போல் புஸ்பராசாவும் சந்தியாரை தாக்குகின்றார். உண்மைப் பிரச்சனைகளைப் பேசாது ஒதுங்கி நின்றுவிடுகின்றார். இடதுசாரிப்போக்குள்ள சந்ததியாரை பிசாசாகக் காட்டுவதன் மூலம் கூட்டணி சார்பு நபர்களையும் தன்னையும பாதுகாத்துக் கொள்கிறார்.

அண்ணன் அமிர்தலிங்கம் சார்பான அன்புத் தம்பிமாரான புஸ்பராசா, சேயோன், நடேசானந்தம், இறைகுமாரன் உட்பட பலருக்கு C.O. (விவசாய உத்தியோகத்தர்) உத்தியோகம் கிடைத்தது. சத்தியசீலன், முத்துக்குமாரசுவாமி, திசைவீரசிங்கம் போன்றவர்கள் தமிழீழத்திற்காய் போராடிக் களைத்து அண்ணன் அமிரின் சிபாரிசுக் கடிதங்களுடன் ஐரோப்பிய அகதி வாழ்விற்கு தம்மை ஒப்படைந்தனர். ஆனால் சந்ததியார் தன் மண்ணை விட்டுப போகாது நேர்மையாய் அரசியல் செய்தமைக்காக தலையறுக்கட்ட மனிதராவர். தலைமையை விட்டு வெளியேறி எதையும் சாதிக்க முடியாது 'வடலி வளர்த்துக் கள்ளுக் குடிக்க முடியாது' என்று வாதிட்ட அமிர்தலிங்கத்தின் விசுவாசி கனகமனோகரனும் தமிழீழத்தை துறந்து வெளிநாட்டில் வாழ்கின்றார். த.இ.பேரவையில் இல்லாமல் இருந்து கொண்டே த.இ.பே சார்பில் அறிக்கை விட்டு சந்ததியார் காலத்து இளைஞர் பேரவையில் இருந்து வெளியேற்றபட்ட வண்ணை ஆனந்தனும் அமிர் அண்ணாவுக்காக சந்ததியாரை எதிர்த்தவர், பின்பு வெளிநாட்டு அகதி வாழ்வில் அமிர் அண்ணாவின் எதிரியாய் மாறுண்டு போனார்.

தமிழர் விடுதலைக்கூட்டணி

தமிழரசு, கூட்டணி மரபுப்படி புஸ்பராசா செல்வநாயகத்தை தந்தை செல்வநாயகம் என விழிப்பது அவர் இன்னமும் அக் கட்சிகளின் தனையனாக வாழ்ந்து கொண்டிருப்பதை இது புலப்படுத்துகின்றது. புஸ்பராசா தமிழ்தேசியம் சார்ந்த பல கதம்பவாதப்போக்குளில் சிக்கி உருக்குலைந்த அரசியலை பேசிக் கொண்டிருந்த போதும் அவர் அடிப்படையில் இப்போதும் கூட்டணியின் சிந்தனை முறைமைக்கு இணக்கமானவரே. இந்த வகையில் அவர் கடந்த காலத்தின் மனிதனாக கூட்டணியின் சுத்தமான யாழ்ப்பாண மனிதராக வாழையடி வாழையாக சீரும் சிறப்புமாய் வாழ்ந்து வருகின்றார். இலக்கிய சந்திப்பு மேடைகளில் அவர் பல வர்ணச் சிந்தனைகளை உடையவராக காலம், இடம், பொருள் ஏவலைப் பொறுத்த கட்டுடைப்புகளை ஆதரித்து கலகம் செய்பவராக தோன்றுவது அவரின் அரசியல் பலவீனத்தின் சந்தர்ப்பவாத வெளியீடுதான். நிலையற்ற அடிப்படையிலான புத்தியற்றவர்கள் சகல போக்குகளோடும் தாம் இணங்கிப்போவதாய் சுத்த சுதந்திர நடைமுயைகளை அனுட்டிப்பதாய் காண்பிக்க முயல்கின்றார்.

அடுத்து புஸ்பராசாவின் அரசியல் பாசறையான தமிழரசு - கூட்டணி கட்சிகளின் அரசியல் அருகதையென்ன? தமிழீழத் தந்தையாகிய செல்வநாயகம் காந்திய முறையிலான அறவழிப் போராட்டமே தமது அரசியலுக்கான வழியென்று நீண்ட காலமாய் உரைத்து வந்ததார். அவர் ஈழத்துக்காந்தி மூதறிஞர், தந்தை, தழிழீழ முதல்வர் என்று பல தொகைப் பட்டங்களைச் சூடிக் கொண்ட புகழ் விரும்பாத மனிதர். காந்தியைப் போன்று ஆச்சிரமங்கள், பாலியல் வாழ்வைத்துறப்பு, பந்தபாசம் அறுப்பு, உண்ணாநோன்பு, எளிய ஆடை மரக்கறி உணவு, இயற்கை வைத்தியம் தனக்கென்று பொருள் சேர்ககாமை போன்ற பண்புகள் பெற்று துறவி போய் வாழ்நதவரல்ல, செல்வநாயகம். நமது ஈழத்துக்காந்தியோ ஐரோப்பிய ஆடை புனைந்து வீட்டில் கூட ஆங்கிலம் பேசும் மனிதர். கொழும்பு, யாழ்ப்பாணத்தில் வீடுகள், சொத்துக்கள், பெருந்தோட்டங்கள் என்று வாழ்ந்த முதலாளி அவர். தனது தோட்டத்தில் உள்ள ஏழைத் தொழிலாளர்கட்கு நியாயமான கூலி தராத புண்ணியவான். தமிழனப் பெருமை பேசிய தந்தை ஒரு போதும் ஏழை மனிதர்களின் வறுமையை அது சார்ந்த வாழ்வுத் துயரத்தை பேசியறியாத மனிதர். இவர் மட்டுமல்ல தமிழரசு, தமிழீழம் கேட்ட பலருக்கு கொழும்பில் சொந்த வீடுகள் இருந்தன. இவர்கட்கு யாழ்ப்பாணத்தின் கொழுத்தும் வெய்யில், பனைமரக்கலாச்சாரம் ஒத்துக் கொள்வதில்லை என்பதால் இவர்கள் பெரும்பகுதி கொழும்பிலேயே வாழ்ந்தனர். திருச்செல்வம் சிவசிதம்பரம், ஈழவேந்தன், நாகநாதன் எனப்பலரை இதற்கு உதாரணமாக் குறிப்பிட முடியும்.

'அறவழிப் போராட்டத்தின் தந்தை' செல்வநாயகத்தின் காந்தியம் பற்றிய புரிதல் எத்தகையது? காந்தியின் குரு எனப்பட்ட டோல்ஸ்டோய் பற்றிக் கூட செல்வநாயகம் பேசியதில்லை. அரைநாள், ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்துடன் தான் அறவழிப் போராட்டத்தின் முதல்வராக அவர் ஆகிக் கொண்டார். காந்தியைக் கூட உண்மையாக அவதானித்தவராக, பின்பற்றியவராக செல்வநாயகத்தைக் கொள்ள முடியாது. அவர் அகிம்சைவாதி, அறவழிப்போராட்ட நம்பிக்கையாளர், காந்தியவாதி என்று அவரது கட்சி நபர்களால் தொடர்ந்து புனையப்பட்டு வந்தார். அவர் காந்தியைப்போல் கந்தை உடுத்தியவரோ, எளிமையாய் ராட்டையில் நூல் நூற்று சொத்து சுகம் சேர்க்காமல் வாழ்ந்தவரோ அல்ல. செல்வநாயகத்தின் அரசியல் இயலாமை கட்சியின் மிதவாதக் கோழைத்தனமே இங்கு அறவழிப்போராட்டம் என்ற சுலோகத்தை முன்வைக்க காரணமாயிற்று "தீமையானாலும் வன்முறையினால் எதிர்க்காதே" என்பது தான் காந்தியின் கொள்கையாகும். ஆனால் செல்வநாயகத்தை மேடையில் வைத்துக் கொண்டே அமிர்தலிங்கம் புறநானூற்றிலே முலையறுத்த தமிழிச்சியின் வீரம் புகழ்வார். ஆயுதப்போராட்டத்தின் மூலமேனும் தமிழீழ இலட்சியத்தை அடைவோம் என்று முழங்குவார். மங்கையற்கரசி அமிர்தலிங்கம் துவக்கு போரை "துவக்கு போதை என்று சொன்னவனை சிவக்குமாரை சிவக்குமாரை மறக்குமா நெஞ்சம்?" என்று ஆயதப்போராடட்டத்தை தேர்ந்து கொண்ட சிவகுமாரனை மேடைகள் தோறும் போற்றுவார், கலங்கிக் கண்ணீர் விடுவார்.
ஆக அறவழிப்போராட்டம் அகிம்சை பற்றி கூட்டணி பலவித கோளாறான தன்னைத்தானே மறுக்கும் கருத்துக்களைக் கொண்டிருந்தது. தமிழரசு, கூட்டணிக் கூட்டங்களில் கேள்வி கேட்கும் சாதாரண உரிமை கூட கிடையாது. கேள்வி கேட்பவர்கள் கூட்டத்தைக் குழப்ப முற்படுவர்களாக காட்டப்பட்டு அடித்து வெளியேற்றப் படுவது அடிக்கடி நடைபெறும் சம்பவமாகும். கேள்வி கேட்டமைக்காக இடதுசாரிகள் அடிக்கபட்டனர். ஆனால் தமிழரசு, கூட்டணி நபர்கள் ஏனைய கட்சிகளின் கூட்டங்களில் கேள்வி கேட்டு கூட்டம் குழப்பும் உரிமையை தம்மிடம் வைத்திருந்தனர். இத்தகைய போக்குகளை தந்தை செல்வநாயகம் கண்டித்ததாய் சரித்திரம் கிடையாது. தமது கட்சியினர் அடிதடிகளை துறந்து அகிம்சையைத் தழுவிக் கொள்ள வேண்டும் என்று அவர் போதித்ததில்லை. 'தீப்பொறி' என்ற பத்திரிகையை நடாத்திய அந்தனிசில் செல்வநாயகத்தை 'காற்சட்டைக்காந்தி' 'கோழிசூப் காந்தி' என்று நக்கல் விட்டு அப்போது தனது பத்திரிகையில் எழுதினார். செல்வநாயகம் நல்ல மனிதர் என்ற பெயர் அவர் முதலாளிய அமைப்பை அதன் அநீதிகளை எதிர்க்காத பண்புக்காகத் தரப்பட்டதாகும். அவர் சாதாரண மனிதர்களோடு உறவு வைத்துக் கொள்ளவாதவர். கட்சியில் எம்.பிமாராக சட்டம் படித்தவர்களையே தேர்ந்தடுப்பார். படித்தவர்கள் என்று சொல்லப்பட்ட உயர் வர்க்கத்தைச் சேர்ந்த ஆங்கிலம் பேசும் நபர்களையே கட்சியின் முக்கிய இடத்தில் வைத்திருந்தார். கட்சிக்காக உழைத்த அடிமட்ட தொண்டர்களை கல்வியறிவு குறைந்த கட்சி நபர்களையோ அவர் கட்சியின் முக்கிய இடத்தில் அமர்த்தியது கிடையாது புதுமைலோலன், ஈழவேந்தன் போன்றவர்கள் எம்.பி பதவிக்கு இலக்கு வைத்து பிரச்சனைப்பட்ட கதைகள் உள்ளன. சேல்வநாயகத்தை 'தந்தை, தந்தை' என்ற ஈழவேந்தன் செல்வநாயகத்துடன் முரண்பட்டுக் கொண்டு செல்வநாயகத்தை செவிடன் என்று பழித்து திரிந்த காலமொன்று இருந்தது. செல்வநாயகம் தன் உயர் வர்க்கம் சார்ந்த உணர்வுடன் சிந்தித்த மனிதர். சாதாரணமானவர்களை கட்சியின் முக்கிய இடங்கட்கு நெருங்கவிடாமல் பார்த்துக் கொண்டவர். மட்டக்களப்பு இராசதுரை சிறந்த மேடைப்பேச்சாளாராக இருந்த நிலையிலும், கட்சிக்கு போட்டியிட ஆள் இல்லாத நிலையிலுமே விதிவிலக்காக கட்சியுள் சேர்க்கப்பட்டு வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

மட்டக்களப்பு இராசதுரைக்கு ஆங்கிலம் தெரியாமையால் கட்சியுள் அடிக்கடி ஓரம் தள்ளப்பட்டார். பாராளுமன்றத்திலும் பொதுவாழ்விலும் இராசதுரையால் ஏனைய தமிழரசு கூட்டணி எம்.பிமார் போல் செயற்பட ஆங்கில மொழியறிவற்ற அவரது நிலை பெருந்தடையாக இருந்தது. மட்டக்களப்பில் இளைஞர்கள் கைது செய்யப்பட்டபோது அவர்களைப்பற்றி விசாரிக்க ஆங்கில மொழியறிவு இன்மையால் பொலிஸ் நிலையம் செல்வதை இராசதுரை தவிர்த்துக்கொண்டார். அமிர்தலிங்கம் போன்றவர்கள் இதனை மிகவும் சாதுர்யமாக இராசதுரைக்கு எதிராகப் பயன்படுத்தினர். செல்லத்தம்பு எம்.பி முதல் சிலரை கட்சியுள் Sir. என்று அழைக்குமளவு நிலையிலேயே இராசதுரை இருந்தார். படித்தவர் என்ற கோதாவில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆதரவாளர்களாக இருந்த மாட்டின், இராஜலிங்கம் போன்றவகள் கூடக் கட்சியினுள் உள்வாங்கப்பட்டு எம்பிகள் ஆக்கப்பட்டனர். சாதாரண கட்சியின் ஏழைத் தொண்டனுக்கு கட்சியில் எந்தச் செல்வாக்கும் இருக்கவில்லை. சட்டத்தரணிகளே கட்சியை ஆண்டனர். தமிழ் இளைஞர் பேரவையில் இருந்தவரும் அண்ணன் அமிர்தலிங்கம் தந்தை செலவ்நாயகம் போன்றவர்களை ஒன்று சேரப் போற்றியவருமான நெடுங்கேணியைச் சேர்ந்த பீற்றர் பொன் கலன் எம்.பி பதவி கேட்டு நிராகரிக்கபட்டார். தானும் ஒரு கோட்டுப் போட்டிருந்தால் தனக்கும் சீற் தந்திருப்பார்கள் என்று வெளிப்படையாகவே இவர் பேசித்திரிந்தார். சாதி காரணமாக கரிகாலன் கட்சியில் உயர முடியவில்லை, தேர்தலிலும் அவருக்கு வாய்ப்புக்கிட்டவில்லை.

தமிழரசு கூட்டணியின் அகிம்சையை எப்படி புரிந்து கொள்வது? இந்தச் சிந்தனை அடிப்படையில் ஒரு முதலாளிய கற்பனைவாதக் கருத்தியல்தான். காந்தியின் அகிம்சை இனத்தை கடந்ததாய் மதத்தை தாண்ட முயற்சிப்பதாய் கூறிக் கொண்டது. தன்னை மனிதம் தழுவியதாய் காட்டிக் கொண்டது. ஆனால் நமது ஈழத்துக் காந்தியின் அகிம்சையோ சிங்களவர் தமிழர் என்ற இனவாதத்துள் பிறந்தது. தமிழகர்களை மட்டுமே பிரதிநிதித்துவப் படுத்தியது. சாதாரண இலங்கை மக்களுக்காக தமிழரல்லாதவர்களுக்காக செல்வநாயகம் ஒருபோதும் பேசியது கிடையாது. மலையகத்தோட்டத் தொழிலாளர்களின் வாக்குரிமை குடியுரிமை பறிப்பின் போது கூட இன்று இவர்கட்கு நாளை எமக்கு என்று சொன்னாரே தவிர அவர்களை தமிழ்சாதியின் ஒரு பிரிவாய் கூட பார்க்க அவருக்கு சம்மதம் இருக்கவில்லை. எனவே செல்வநாயகத்தின் அகிம்சை தமிழ் தேசியத்துள் அதாவது யாழ்ப்பாண நடுத்தர வர்க்கத்துள் மட்டுமே குறுகிக் கிடந்த ஒன்று. மனிதம் என்ற கருத்தியல் செல்வநாயகம் அறியாத ஒன்று. அகிம்சை என்ற சிந்தனை அது கற்பனாவாதக் கருத்தியல் என்ற போதும் பரந்த மனிதம் தழுவிய போக்கு என்பது செல்வநாயகம் போன்ற பழைமைவாதிகட்கு எட்டாத விடயமாகும். செல்வநாயகத்தின் அகிம்சையானது சிங்கள வெறுப்பை அடிப்படையாகக் கொண்டது. அவரின் சொந்த பத்திரிகை சுதந்திரன் சிங்கள மக்கள் முழுப்பேரையும் இனவாதிகளாய் கண்டது. சிங்களமொழியை நண்டெழுத்து என்ற எழுதி திருப்தி கண்டது. 'சிறி'யை அழிப்போம் சிறையை நிறைப்போம்' என்றவர்கள் 'சிறி' என்பது தமிழ் எழுத்தல்ல என்று கூடப் புரிந்து கொள்ளவில்லை. எப்படிக் காந்தியின் சொந்தக் கோழைத்தனம் சமயவாதக் கற்பனையும் அகிம்சையை தேடித்தந்ததோ, பிரிட்டிஷ் ஆட்சியுடன் சமரசத்திற்கு சாதகமான அரசியலுக்கு இட்டுச் சென்றதோ அதையே செல்வநாயகமும் இலங்கையில் வேறு வடிவில் அரசியலாக்கினார். செல்வநாயகம் சிங்கள மக்களை எதிர்த்த மட்டத்திற்கு பிரிட்டிஷ்காரரை எதிர்த்தவரல்ல. எதிரியாய் கருதியவரல்ல. மாறாக, அவர் ஒரு பிரிட்டிஷ் விசுவாசி. மற்றப்பக்கத்தில் இலங்கை வரலாற்றிலேயே ஆகப் பெரிய இனவாதக் கட்சியான UNP யுடன் அவர் உறவாக இருந்தார். வலதுசாரியாக இருக்க செல்வநாயகம் ஒரு போதும் வெட்கப்படாதவர். தமிழ் உயர்வர்க்கத்தின் பெரிய மனிதர் அவர். செல்வநாயகத்திற்கு மூதறிஞர் என்ற பட்டம் கூட்டணியினால் சூட்டப்பட்டது. செல்வநாயகம் N.M பேரேரா, கெல்வின், பீற்றர் கெனமன், சண்முகதாசன் போன்றவர்களைப் போல் சிந்தனை விருத்தி கொண்டவரல்ல. ஒரு சிறந்த மேடைப்பேச்சை நிகழ்த்தக் கூட அவர் தகுதி போதாதவர். ஒரு சிறு நுhலைக்கூட எழுதி வெளியிடுமளவிற்கு சிந்தனை பரப்புடையவரல்ல. தமிழீழம் கேட்ட செல்வநாயகம் பாராளுமன்றத்தில் "தமிழ் மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்" என்று தனது அரசியல் கையறு நிலைமையை வெளியிட்டார்.

செல்வநாயகம் அரசியல் தொலை நோக்கோ தமது தமிழீழம் எத்தகைய சமூக, அரசியல் போக்குகளை கொண்டு வரும் என்று எதிர்வுகூறும் ஞானமோ அற்ற மனிதராகவே இருந்தார். யாவற்றையும் தன்னிச்சைப் போக்கிற்கு விட்டு அதற்கேற்ப செயலாற்ற முனைந்தார். தமிழ் மக்களின் பிரச்சனை என்பது அவரைப் பொறுத்து சட்டப்பிரச்சனை, அரசியலமைப்பு சார்ந்த பிரச்சனை. தமிழ் மக்களின் சமூக அரசியல் பொருளாதாரம் சார்ந்து அவர் சிந்திக்கத் தெரியாதவர். அவரது சட்டத்தரணி மூளையானது சட்டவியல் நோக்கில் மட்டுமே சிந்திக்கக் கடமைப்பட்டதாகும். அவரது கடைசிப் பத்தாண்டுகள் புலன்கள் கூர்மையாய் செய்றபட முடியாத நரம்பு சம்பந்தமான வியாதியால் பாதிக்கப்பட்ட மனிதராக இருந்தார். மிகவும் குறைந்த உடல் சார்ந்த அசைவியக்கம் உடையவராக இருந்தார். அடுத்தவர் உதவியின்றி நடக்கக் கூடச் சிரமப்படும் மனிதராக இருந்தார். தன்னைச் சூழ என்ன நடக்கிறது என்பதை பூரணமாய் உணரும் நிலையில் அவர் செயற்பட்டார் என்று சொல்ல முடியாது. எனவே கூட்டணி அவரை ஒரு கட்டத்திற்குப் பின்னர் வெறும் பொம்மையாக்கிப் பயன்படுத்த தொடங்கியது. தந்தை செல்வா கூறியதாய் சொல்லி பல தகவல்கள் தமிழ் மக்களுக்கு சொல்லப்பட்டது. அவர் மிகவும் மெல்லிய குரலில் பேசும் போது அதை அருகில் இருந்து கேட்டு அமிர்தலிங்கமோ, ஈழவேந்தனோ, ஆலாலசுந்தரமோ மீண்டும் உரத்துச் சொல்லும் பழக்கம் நிலவியது.

செல்வநாயகம் இடதுசாரிகளுடன் ஒருபோதும் உடன்பாட்டிற்குப் போனது கிடையாது. திரும்பத் திரும்ப UNP யுடன் தான் அரசியல் கொடுக்கல் வாங்கல் கொண்டாட்டங்கள் வைத்துக் கொண்டார். கிட்டத்தட்ட எல்லாத தேர்தல்களிலும் வடக்கு, கிழக்கிற்கு வெளியே உள்ள தமிழ் மக்களை UNP க்கு வாக்களிக்கும்படி சுதந்திரன் தூண்டுவது வழக்கம். தமிழரசுக்கட்சி UNP யுடன் சேர்ந்து திருச்செல்வத்தையும் அமைச்சராக்கியது. அவர் உள்ளுராட்சி அமைச்சாராக இருந்தபோது தமக்கு எதிரான யாழ் நகரசபையைக் கலைத்து பெரும் அட்டகாசம் பண்ணினார். இவர்கள் அரசுடன் இணைந்திருந்தபோது தான் பெளத்த போயா தினங்கள் விடுமுறையாக்கபட்டது. இக்காலத்தில் வெசாக்க தினமும் மேதினமும் ஒரு முறை தற்செயலாக ஒரே தினத்தில் வந்தபோது வெசாக் தினத்தின் முக்கியத்துத்தைப் பாதுகாக்க மேதின ஊர்வலங்கட்கு தடை விதிக்கப்பட்டது. இக்காலத்தில் தமிழரசு UNP இரண்டும் தமிழ் சிங்கள் வேற்றுமைகளைக் கடந்து ஒன்றாய் செயற்பட்டன. 1965 இல் டட்லி சேனநாயக்காவிற்கு தமிழரசுக்கட்சி பிரமாண்டமான வரவேற்பை யாழ்ப்பாணத்தில் கொடுத்தது. UNP தலைவர்களுக்கு சந்திதோறும் சிகரம் கட்டி அலங்கார வளைவுகளை வைத்து வரவேற்ற தமிழரசுக் காலத்தை செல்வநாயகம் வழி நடத்தியவர்.

செல்வநாயகம் காலத்து தமிரசுக்கட்சி தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல இலங்கையில் உள்ள ஏழைச்சிங்கள முஸ்லிம் மக்களுக்கும் செய்த துரோகங்கள் கொஞ்சமல்ல. இலவசக்கல்வியூட்டும் திட்டத்தை கொண்டு வந்து தனியார் பாடசாலைகளை அரசு பொறுப்பேற்ற போது தமிழரசுகட்சி அதை எதிர்த்தது. இலவசக்கல்வியை எதிர்த்தமை காசு கட்டிப்படிக்கும் உயர்வர்க்கம் சார்ந்த செயலாக இருந்தது. என்பதோடு பரந்த கல்வியூடாக பெருந்தொகையானவர்கள் படித்து முன்னேறி தம் தொழிலுக்கு போட்டியாளராகி விடுவர் என்று தமிழரசுக்கட்சி பிரதிநிதித்துவப்படுத்திய நடுத்தர வர்க்கம் அஞ்சியது. இதை மறைத்து தனியார் பாடசாலைகளை அரசு எடுத்தால் அதனூடாக சிங்களம் புகுந்து விடும், தமிழ் அழிந்துவிடும் என்று தமிழரசுக்கட்சி விளக்கம் தந்தது. ஆங்கிலக் கல்வியூடாக தமிழ் அழியாதா? என்ற கேள்விக்கு இவர்களிடம் பதிலில்லை. வடக்கு கிழக்கு நீதிமன்றங்களில் தமிழில் செயலாற்றம் சட்டம் கொண்டு வரப்பட்ட போது ஆங்கிலத்தில் பேசி, எழுதி, சிந்தித்து, வாதிட்டு வாழந்த கூட்டணி சட்டத்தரணிகளின் கட்சி அதைக் கடுமையாக எதிர்த்தது. ஆங்கிலத்தின் இடத்தை நீதிமன்றத்தில் தமிழுக்கு வழங்க மறுத்தது. பண்டாராநாயக்கா – செல்வநாயகம் ஒப்பந்தத்தில் செல்வநாயகம் தனிச்சிங்கள சட்டத்தை ஒத்துக் கொண்டே உடன்படிக்கைக்கு சென்றார்.

மேலும் புதிய நெற்காணி சட்டத்தின் மூலம் நிலத்தில் உழைக்கும்; விவசாயிகட்கு உதவும் சட்ட மூலம்கள் கொண்டு வரப்பட்ட போது அதை எதிர்த்து காணி உடமையாளர்கள் சார்பில் சிறு விவசாயிகள், குத்தகை விவசாயிகட்கு எதிராக தந்தையின் கட்சி செயலாற்றியது. 1961 இல் அந்நிய பெற்றோலிய கம்பனிகளை தேசியமயமாக்கும் சட்டம் தமிழரசுக் கட்சியினால் எதிர்க்கப்பட்டது. செல் போன்ற ஏகாதிபத்திய எண்ணை நிறுவனங்கட்கு இதன் மூலம் தனது மறைமுக ஆதரவைத் தந்தது. தொட்டதெற்கெல்லாம் அந்நிய தூதரங்கட்கு சென்று நீதி கேட்டு மனுக் கொடுக்கும் தமிழரசுக்கட்சி வேறெவ்வாறாகவும் ஒரு போதும் செயற்பட முடியாது. 1980 இல் இலங்கை முழுவதும் நடந்த தொழிற்சங்க போராட்டத்தில் யாழ்ப்பாணத்தில் தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மாணவர் அமைப்புக்கள் என்பன கலந்து கொண்ட போது கூட்டணியோ இது தென்னிலங்கை சிங்களவரின் பிரச்சனை என்று தன் தமிழ் இனவாதத்தின் கூட்டுக்குள் சுருங்கிக் கொண்டது. கைலாசபதிக்கு எதிராக UNP ஆதரவுடன் கூட்டணி தமது ஆளான வித்தியானந்தனை யாழ்பல்கலைக்கழக துணைவேந்தராக்கியது. கைலாசபதியையும், கலைப்பீடத்திற்கு பொறுப்பாய் இருந்த இந்திரபாலாவையும் கூட்டணி முடிந்த மட்டும் இழிவு படுத்தியது. தென்னிலங்கையில் பல ஆயிரம் தமிழ் மாணவர்கள் பல்கலைகழகங்களில் தங்கயிருந்து படித்துக் கொண்டிருந்தபோது யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் சில நூறு சிங்கள மாணவர்கள் தங்கி கல்வி கற்பதை எதிர்த்து கூட்டணி பிரச்சாரம் செய்தது. சுதந்திரன் சிங்கள மாணவர்கட்கு யாழ்ப்பாணத்தில் தங்க இடம் கொடுக்கக் கூடாது என்று இன வெறிப்பிரச்சாரத்தில் நின்றது.

காங்கேசன்துறை இடைத்தேர்தலில் செல்வநாயகத்தை எதிர்த்துப் போட்டியிட்ட வி.பொன்னம்பலத்தை ஆதரித்து அறிக்கை விட்ட யாழ்ப்பல்கலைக்கழக விரிவுரையாளர்கட்கு கொலைப்பயமுறுத்தல் கூட்டணியின் உற்பத்திகளால் விடப்பட்டது. பின்னர் வி.பொன்னம்பலத்தின் வீட்டுக்கும் குண்டு வீசப்பட்டது. தந்தை செல்வநாயகத்தின் இத்தகைய அகிம்சை அரசியல் வளர்ந்து M. சுப்பிரமணியம், கே.ஏ சுப்பிரமணியம் போன்ற இடது சாரிகளைக் கொல்ல முயற்சித்தது. பிற்காலத்திய தந்தையின் வழித்தோன்றல்கள் எஸ். விஜயானந்தன், சி.துரைசிங்கம் அண்ணாமலை போன்றவர்களைக் கொலை செய்தனர். தமிழரசுக் கட்சிக்கு இடதுசாரிகளுடன் பழைய பகைமைகளை இருந்தது என்பதுடன் தமிழீழம் கோரியவர்கட்கு எதிராக இடதுசாரிகள் மட்டுமே அரசியல் செய்ய முற்பட்டனர். சண்முகதாசன் தமிழர் கூட்டணியைச் சேர்ந்த ஈழவேந்தன், தருமலிஙகம் போன்றோருடன் பகிரங்கமான தமிழீழம் பற்றிய விவாதத்தை நடத்தினார்.
யாழ்பல்கலைக்கழகத்தில் 'குற்றவாளிக் கூண்டிலே தமிழீழப் பிரிவினைவாதிகள்' என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இதில் த.இ.பே சேர்ந்த சிவதாசனுக்கு எதிராக இடதுசாரிப்போக்கை எடுத்திருந்த புதுமை லோலன் வாதிட்டார். தமீழழம் சாத்தியமா? என்ற தலைப்பில் சி.கா செந்தில்வேல், ஈழவேந்தனுடன் விவாதம் நடத்தினார். இத்தகைய பகிரங்க விவாதங்களை கூட்டணி தடை செய்யத் தொடங்கியது. தமது நபர்களை கலந்துரையாடல்களில் கலந்து கொள்வதை நிறுத்தியது. இடதுசாரிகள் தேசிய இனப்பிரச்சனையில் போதிய கவனம் எடுகக்கவில்லை என்பது புஸ்பராசாவின் மட்டுமல்ல முழுத்தமிழ் தேசியவாதிகளினதும் தொடர்ச்சியான குற்றச்சாட்டு. இடதுசாரிகள் காரிய சாத்தியமான வழியில்தான் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வைத் தேடினார்கள் யாழ்ப்பாண நடுத்தர வர்க்க கொதிப்புகட்கு ஏற்ப அவர்கள் ஆயதமேந்திய கூத்துக்களை இடதுசாரிகள் ஏற்கவில்லை. 1978 இல் சீனச்சார்பு கொம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு ஏற்பட்டமைக்கான முக்கிய காரணம் தேசிய பிரச்சனை சம்பந்தமாக அவர்களுக்கிடையே ஏற்பட்ட முரண்பாடாகும். 1970 நடுப்பகுதியில் தமிழ் இளைஞர்கள் இடதுசாரி திசையில் சிந்திக்க தொடங்கிய போது நீங்கள் சீனச்சார்பு பொதுவுடைமைக் கட்சியால் திசை திருப்ப பட்டுவிட்டீர்கள் என்றும் பீக்கிங் கட்சி தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஊடுருவி விட்டது. என்று அமிர்தலிங்கம் கூறினார். 1984 இல் இடதுசாரிகளால் தொடக்கப்பட்ட மனித உரிமைகளுக்கான வெகுஜன அமைப்புத்தலைவர் T .இராஜசுந்தரம் ஆயுதாரிகளால் கடத்திக் கொல்லப்பட்டார். 1987 இல் இந்தியவிமானங்கள் இலங்கையில் ஊடுருவி உணவுப் பொதிகளை வீசிய போது இது இந்திய இராணுவத்தலையீட்டிற்கான தொடக்கம் என்று இடதுசாரிகள் மட்டுமே எதிர்ப்புத் தெரிவத்தனர். ஆனால் தமிழ் இயக்கங்கள் போட்டி போட்டுகொண்டு இந்தியத் தலையீட்டையும் இராணுவத்தலையீட்டையும் வரவேற்றன.

புஸ்பராசாவின் இடதுசாரி வெறுப்பு தமிழரசுக்கட்சிக் காலத்திய தொடக்கத்தைக் கொண்டது. 1970 இல் நடந்த தேர்தலில் வட்டுக்கோட்டை, உடுப்பிட்டி தொகுதிகளில் அமிர்தலிஙகம், சிவசிதரம்பரம் தோற்றமைக்கான காரணம் இடதுசாரிகளின் செல்வாக்குட்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் இவர்களை ஆதரிக்காமையே. வட்டுககோட்டையில் இடதுசாரி வேட்பாளர் அ.வைத்திலிங்கம் ஒருமுறை மிகவும் சொற்ப வாக்கு வித்தியாசத்திலேயே அமிர்தலிங்கத்திடம் தோல்வியடைந்தார். யாழ்ப்பாணத்தில் ஜி.ஜி. பொன்னம்பலத்தை எதிர்த்து த.கார்த்திகேயன், சமசமாஜக்கட்சி அ.விசுவானந்தன், காங்கேசன்துறையில் செல்வநாயகத்தை எதிர்த்து வி.பொன்னம்பலம், சமசமாஜக்கட்சி பி.நாகலிங்கம் போன்ற இடதுசாரிகள் போட்டியிட்டனர். சுன்னாகம், உடுப்பிட்டி, சங்கானை, காங்கேசன்துறை, வல்வெட்டித்துறை உட்பட பல பட்டின சபைகளை இடதுசாரிகள் கைப்பற்றியிருந்தனார். பொன்.கந்தையா, கார்த்திகேயன், சண்முகதாசன், அ.வைத்தியலிங்கம், தர்மகுலசிங்கம், R. தர்மரத்தினம், சீனிவாசகம் போன்ற வடபகுதியைச் சேர்ந்த இடதுசாரிகளைப் பற்றி புஸ்பராசா எதுவும் எழுதாமல்விட்டமை தற்செயல் விளைவல்ல. உலகத்தொழிலாளர் தினமான மேதினத்தில் கூட ஈழவேந்தன் போன்ற தீவிர தமிழின வெறியர்கள் எங்கள் தமிழ் மண்ணில் இராவணனார் பொன்மண்ணில் அங்குலமும் இனி நாங்கள் அயல் வெறியர் ஆள விடமாட்டோம் என்று இனவாதம் பேசினர். "தேர்தல் பாதை திருடர்பாதை, தேர்தலில் தமிழீழம் எடுக்க முடியாது" என்ற ஈழவேந்தன் இப்போ புலிகளின் பினாமி அமைப்பான தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியலில் எம்பியாகிவிட்டார்.

கூட்டணியின் அகிம்சையின் வெறுமையை புஸ்பராசா ஆராயவில்லை. செல்வநாயகம் முன்பாகவே மேடையில் காசி ஆனந்தன் புதிய அரசியலமைப்பை ஆதரித்த அரசு சார்பு துரையப்பா, அருளம்பலம், தியாகராசா ஆனந்தசங்கரி, சுப்பிரமணியம் போன்றோர் நோய் நொடி வந்து சாகக்கூடாது, இயற்கை மரணம் எய்தக் கூடாது என்று பேசினார். துரையப்பா சுடப்பட்ட போது கூட செல்வநாயகம் வன்முறையை எதிர்த்து அரசியல் படுகொலைகளை எதிர்த்து ஒரு வார்த்தை கூடப் பகிரங்கமாய்ப் பேசவில்லை. ஆயுத மேந்திய இளைஞர்களைக் கண்டிக்கவில்லை. அமிர்தலிங்கம் ஐயாயிரம் கட்டுப்பாடுள்ள இளைஞர்களைத் திரட்டினால் ஆயுதப்போராட்டத்தின் மூலம் தமிழீழ இலட்சியத்தை அடைய முடியும் என்று பேசத் தொடங்கினார். ஒரு முறை யாழ்ப்பாணத்தில் வின்சர் தியேட்டர் அருகே அமிர்தலிங்கம் மேல் நோட்டீசை எறிந்த தமிழ்க்காங்கிரசைச் சேர்ந்த இளைஞனை அமிர்தலிங்கம் தனது வாகனத்திலிருந்து இறங்கிப் போய் தானே கன்னத்தில் அறைந்தார். ஆனால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் அமிர்தலிங்கத்தின் பிடரியில் அடித்த ஒரு பொலிஸ்காரனுக்கு எமது தமிழர் தளபதி திருப்பி ஒரு அடி கூட அடிக்கவில்லை. எனவே கூட்டணியின் அகிம்சை, ஆயுதப் பேச்சுக்கள் யாவுமே சந்தர்ப்பவாத அரசியலின் வடிவமாகும். தம்மை விட இளைத்தவர்கட்கு எதிராக கூட்டணியின் வன்முறையும், பலமிக்கவர்கட்கு எதிராக அகிம்சையும் பேசப்பட்டது. காந்தி முதல் தமிழரசுக்கட்சி வரை அகிம்சை என்பது முரண்பாட்டுக்குவியலின் முதலாளிய கருத்துப் படையலாக இருந்தது. முசோலினி எத்தியோப்பியாவைக் கைப்பற்றிய போது "உங்களை கொன்று குவிக்க அனுமதியுங்கள்" என்று எத்தியோப்பிய மக்களை நோக்கி காந்தி வேண்டுகோள் விடுத்தமை, இத்தாலிய பாசிசத்திற்கு சாதகமாகவே இருந்தது. ஐரோப்பிய நாடுகளில் நாசிகளின் சித்திரவதைக் கூடங்களில் யூதர்கள் அழிந்து கொண்டிருந்தபோது, யூதர்கள் மேல் இன அழிப்பு நடந்து கொண்டிருந்தபோது யூதர்கள் சுயஅழிப்பு, சுயதியானம், ஆகியவை ஊடாக நாசிகளை மாற்ற முடியும் என்று மடத்தனமாய் நம்பியவர் காந்தி. ஜேர்மனி மேல் பிரிட்டன் யுத்தம் தொடங்கிய போது அதை ஆதரித்த காந்தி இந்தியாவில் பிரிட்டன் இராணுவத்திற்கு ஆள் திரட்ட உதவியதுடன் அவரது அகிம்சை ஒத்துப்போனது.

காந்தி நவீன தொழில் துறை சார்ந்த உற்பத்தி முறையை எதிர்த்தவர். அதுவே சகல கேடுகட்கும் காரணம் என்று நம்பியவர். எனவே விஞ்ஞானம் தொழிநுட்பம் இல்லாத இந்தியாவை 6,00,000 கிராம மக்களின் விவசாய சமூகத்தை நம்பியவர். பாலும், நெய்யும், சாணமும், தானியவகையும் நிரம்பிய பழங்கால இந்தியாவை அவர் கனவு கண்டார். காந்தியின் இத்தகைய கற்பனைகள் காந்தியத்துடன் சேர்ந்து இன்று தூர வீசப்பட்டு விட்டது. அவரது ராட்டை நூதனசாலைக்கு போய்விட இந்தியாவில் பிரமாண்டமான துணித் தொழிற்சாலைகள் எழத் தொடங்கிவிட்டன. விஞ்ஞானத்தை நிராகரித்த காந்தி கடிகாரத்தையும், ஒலி பெருக்கியையும், மூக்கு கண்ணாடியையும், கப்பல், ரெயில், கார் பயணங்களையும் நிராகரிக்க முடியவில்லை. தொழிநுட்பம் விஞ்ஞானரீதியிலான வளர்ச்சி, அதுசார்ந்த சமூக பொருளியல் முன்னேற்றம், இந்தியப்பழைமைவாத, இந்திய மதவாத விவசாயக் கருத்துக்கள் தடையாக இருந்தன. காந்தி இறந்த போது 'காந்தியார்' என்ற தலைப்பில் கொல்வின் ஆர்.டி சில்வா நிகழ்த்திய உரை இதை எதிர்வு கூறியது. இந்தியாவின் வறுமை, அறியாமை, அசுத்தம், மனிதக்கேடுகட்கு இந்திய விவசாய சமூக அமைப்பும் அதை நியாயப்படுத்தும் காந்தியுமே காரணங்களாகும்.

ஜோர்ஜ், வில்சன்

பெர்லினில் வாழ்ந்து பின்பு EPRLF இல் இணைந்து இலங்கை சென்று புலிகளால் கொல்லப்பட்ட ஜோர்ஜ் என அழைக்கப்படும் ஜோர்ஜ் தவராசா மற்றும் வில்சன் பற்றி புஸ்பராசா பல குறிப்புரைகள் தந்துள்ளார். இவர்கள் இருவரும் தனது தலைமையின் கீழ் செயற்பட்டவர்கள், ஜெர்மனியில் தன்னால் நிர்வகிக்கப்பட்டவர்கள் என்ற தோற்றத்தையே புஸ்பராசாவின் எழுத்து எம்மிடம் தோற்றுவிக்கின்றது. EPRLF ற்கு வானொலிநிலையம் நிறுவுவதற்காக வானொலிக்கருவிகள் வாங்க பணத்துடன் வந்து பெர்லினில் ஜோர்ஜை சந்தித்தமை, நிக்கரக்குவா புரட்சியின் 6வது வருடக்கொண்டாட்டத்திற்கு உமாகாந்தனுடன் ஜெர்மனியில் இருந்து வில்சனையும் அனுப்பி வைத்தமை என்று பல செயற்பாடுகளை தனதென்று உரிமை கோருகின்றார், புஸ்பராசா. பெர்லின் வந்து வானொலி நிலையம் நிறுவுவதற்கான வேலை சம்பந்தமாக ஜோர்ஜை சந்தித்தமை தவிர, மற்றையவை நம்பிக்கையான நேர்மையான தகவல்களல்ல. ஜோர்ஜ், வில்சன் பற்றியும் அவர்களது அரசியல் செயற்பாடுகள் பற்றியும் சாட்சியம் சொல்ல அவர்களோடு வாழ்ந்த பல தமிழ், ஜெர்மனிய தோழர்கள் இன்றும் உயிருடன் இருக்கின்றார்கள், இங்கு புஸ்பராசா தன்னை முதன்மைப்படுத்தும்போக்குகளை கண்டபாட்டிற்கு எழுதிவிட முடியாது. ஜோர்ஜ் 1981 முதல் பெர்லினில் தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் சமூக நடவடிக்கைகட்காக அறியப்பட்டவர். தமிழ் தேசியப்பிரச்சனை, அகதிகள்> சர்வதேசியம் என்று பலவகை செய்றபாடுகளைக் கொண்டிருந்தவர். ஜோர்ஜ்> வில்சன் இருவரும் பிற்காலத்திலேயே EPRLF இற்கு ஆதரவாய் செய்றபடத்தொடங்கினார்.

ஜோர்ஜ் தொடர்பு கொண்டிராத எந்த அமைப்பும் பெர்லினில் இல்லை என்று கூடச் சொல்லாம். கியூபா, நிக்கரக்குவா நட்புறவு அமைப்புக்கள், லத்தீன் அமெரிக்க விடுதலை அமைப்புக்கள், பாலஸ்தீன, தென்ஆபிரிக்க அமைப்புக்கள், துருக்கிய இடதுசாரிகள் ஜெர்மனிய இடதுசாரிக்குழுக்கள், கிழக்கு ஜெர்மனியுடன் தொடர்புடைய SAW எனப்படும் இடதுசாரி அமைப்பு எனப்பல தொகை அமைப்புக்களோடு தொடர்பு கொண்டு இருந்தார். கியூபா நட்புறவுக்குழுவினால் வருடாவருடம் ஏற்பாடு செய்யப்பட்டு கியூபா செல்லும் தொண்டர் அணியில் ஜோர்ஜ் இணைந்து கியூபா சென்று மூன்று மாதங்கள் வரை அங்கு பண்ணைகள், தொழிற்சாலைகளில் உழைத்தார். பின்பு அவர் நிக்கரக்குவா சென்று இராணுவப்பயிற்சி பெற்று இலங்கைக்கு திரும்பி சென்றார். நிக்கரக்குவா செல்ல முன்பு அவர் பெர்லினில் ஸ்பானிய மொழியைக் கற்றார். இங்கு EPRLF க்கு சாண்டினிஸ்டு புரட்சியாளர்களுடன் ஏற்பட்ட உறவு ஜோர்ஜ், வில்சன் போன்ற பெர்லினில் இருந்து உழைத்த தோழர்களினூடாகவே பெறப்பட்டது. இதற்கு லண்டனில் இருந்த அல்லது பாரிசில் இருந்த EPRLF இனரோ காரணமாக இருக்கவில்லை என்பது கலப்படமற்ற உண்மையாகும். இங்கு நிக்கரக்குவா உறவுக்கு புஸ்பராசா உரிமை கோருவது, அவருக்கு உரிமையற்ற பகுதிகளில் பலவந்தமாய் நுழைவதாகும். புஸ்பராசா வானொலி நிலையம் அமைப்பதற்கான கருவிகளை எடுத்துச் சென்றது சம்பவத்தை மட்டும் குறிப்பிடுவது மட்டும் ஓரளவு சாத்தியமானதொன்று. எனினும் இந்தியாவில் EPRLF க்கான வானொலி நிலையம் ஆரம்பிக்கப்பட்ட போது அது சார்ந்த தொழிநுட்ப பணிகட்காக இரண்டு ஜெர்மனிய இடதுசாரித் தோழர்கள் இந்தியாவிற்கு ஜெர்மனியிலிருந்தே சென்றனர். முன்பு எல்சல்வடோர் புரட்சியாளர்களின் வானொலி நிலையம் அமைக்கபட்டபோது இந்த இரண்டு ஜெர்மனிய தோழர்களே அங்கும் சென்று வானொலி நிலையம் தொடங்க உதவியவர்களாவர். நிக்கரகுவாவிற்கு வில்சனை தான் அனுப்பி வைத்ததாய் சொல்லும் புஸ்பராசாவிற்கு பாரிஸ் நகரில் எந்த இடதுசாரி அமைப்புக்களுடனோ, நிக்கரக்குவா நட்புறவுக்குழுக்களுடனோ, சாண்டினிஸ்டு இடதுசாரி அரசுடனோ எந்தத் தொடர்பும் இருந்ததற்கான ஆதாரம் எதுவுமில்லை. புஸ்பராசா இடதுசாரிப்பக்கம் திரும்பியும் படுக்கக்கூட சம்மதிக்காத மனிதர். இன்னமும் அழுத்திச் சொல்லப்போனால் அந்த திசையில் எந்தப் புலமையுமே இல்லாத மனிதர்.

உண்மையில் மேற்கண்ட நடவடிக்கைகளில் புஸ்பராசாவுக்கு பங்கும் பதவியும் இல்லை. ஜோர்ஜ், வில்சன் போன்றவர்களின் அரசியல் உழைப்பை அவர்கள் அப்போது கொண்டிருந்த சர்வதேசிய உறவை அதனூடாக சம்பாதித்தவற்றை புஸ்பராசா நோகாமல் கொள்ளாமல் அபகரிக்க முயல்கிறார். பிறரின் பங்களிப்பை திருடிக் கொள்வதும் தனது சாதனையாய் காட்ட முயல்வதும் தமிழ் தேசியத்திலும் அது சார்ந்த வலது சாரி அரசியலுக்கும் பழக்கப்பட்ட புஸ்பராசவிற்கு சாத்தியமான ஒன்றாகி விடுகிறது. ஜோர்ஜ் அர்பணிப்புடன் நாளும் பொழுதும் செய்த அரசியல் முயற்சிகளுடன் புஸ்பராசாவை எச்சமயத்திலும் ஒப்பிட முடியாது. ஜோர்ஜ் போன்றவர்கள் ஜெர்மனியின் நகர்புற கொரில்லா அமைப்பான செம்படை ஆ.ஏ.எப் உடன் கூட தொடர்பு கொண்டிருந்தனர். இந்த செம்படை அமைப்பின் உறுப்பினரான பிரிக்கேட்டா என்ற பெண் போராளி சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் பாலஸ்தீன விடுதலை இயக்கங்களில் ஒன்றான PFLP யில் ஆயுதப்பயிற்சி பெற்றபோது அங்கு உமா மகேஸ்வரனை சந்தித்து இருந்தார். அவர் பயிற்சி முடிந்து பெர்லின் திரும்பிய பின்பு சர்வதேச அரசியல் தொடர்புகளில் நாட்டம் கொண்டிருந்த ஜோர்ஜ், கண்ணன் (பரமதாசன்) உட்பட பல தமிழ் இடதுசாரிப்போக்குக் கொண்டவர்களோடு தொடர்புகள் கொண்டு இருந்தார். இந்த விமர்சனத்தை எழுதுவதற்கு முன்பு பிரிக்கேட்டாவை சந்தித்து ஜோர்ஜ் பற்றிய கால பழைய நினைவுகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது அவர் ஜோர்ஜைப் பற்றி பின்வருமாறு குறிப்பட்டார். "தமிழர்களில் நான் பெர்லினில் முதன் முதலில் சந்தித்த சர்வதேசவாதி ஜோர்ஜ் தான், அவர் தீவிரமும் வேகமும் கொண்டவர்" என்று நினைவு கூர்ந்தார்.

ஜோர்ஜ் பெர்லினில் இயங்கிய BAZ எனப்படும் மூன்றாம் உலக நாடுகட்கான பயிற்சி மற்றும் நடவடிக்கைக்கான அமைப்புடன் முதலாவது தொடர்பு ஏற்படுத்திய தமிழராக இருந்தனர். 1982 இல் முதல் முதலில் பெர்லினில் ஜோர்ஜ் மற்றும் அவர் சார்ந்த தோழர்களும் ஏற்பாடு செய்த தமிழர்கள் முதல் முதலில் கலந்து கொண்ட மேதின ஊர்வலம் நடைபெற்றது. 1983 இல் பெர்லினில் சமஸ்டி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுக் கொண்டு இருந்த துருக்கிய அரசியல் கைதியான Cemel Altun விசாரணை நடந்த கட்டிடத்தின் 4 ஆம் மாடியில் இருந்து பாய்ந்து தற்கொலை செய்த கொண்ட நிகழ்ச்சியை அடுத்து அரசுக்கு எதிராக பல பத்தாயிரம் மக்கள் கலந்து கொண்ட ஊர்வலத்தில் பலநுhறு தமிழர்கள் பங்கெடுத்தனர். 1983 டீசம்பர் மாதம் 31 ஆம் திகதி பெர்லினில் உள்ள Ogustaplatz இல் உள்ள அகதிகளை திருப்பி அனுப்புவதற்கான தடுப்பு மூமில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழர்கள் உட்பட பல அகதிகள் எரிந்து மாண்டனர். இந்த சம்பவங்களின் பின்பு நடந்த பெரும் ஊhவலங்களில் பெருந்தொகையான தமிழர்கள் கலந்து கொண்டனர். இதில் ஜோர்ஜ்ஜின் உழைப்பு முக்கியமானது. அக்காலமானது பல பத்தாயிரம் இலங்கைத்தமிழர்கள் அகதிகளாக கிழக்கு பெர்லின் விமான நிலையம் ஊடாக மேற்கு ஐரோப்யிய நாடுகளுள் நுழைந்து கொண்டிருந்த சமயமாகும். இச்சமயத்தலேயே ஜோர்ஜ் மற்றம் தமிழ் இடதுசாரிகளில்போக்குடையவர்களுடன் தொடர்பு கொண்ட ஜேர்மனியத் தோழர்கள் அகதிகளின் நலன்கட்காய் போராடும் Asyl.e.v என்ற அமைப்பை 1984 தை மாதத்தில் தொடங்கினார். இந்த அமைப்பு பத்து வருடங்களிற்கும் மேலாக மருத்துவ, சட்ட, சமூக சேவைப்பகுதி, பொலிஸ், மொழிபெயர்ப்பு, ஜெர்மன் மொழிக்கல்வி போன்ற உதவிகளை இலவசமாக அகதிகட்கு வழங்கியது. பல ஆயிரக்கணக்கான தமிழர்களும் இந்த அமைப்பினூடு பலனடைந்தனர்.

1972 ஆண்டுகளில் பெர்லின் வந்து அரசியல் தஞ்சம் மற்றும் மாணவர்களாக வாழ்ந்த JVP யின் சிங்கள இளைஞர்களுடனும் ஜோர்ஜிற்கு தொடர்பு இருந்தது. பெர்லினில் முதன் முதலில் தமிழ் பள்ளி குழந்தைகட்காக ஜோர்ஜினாலும் அவர்களது தோழர்களாலும் தொடங்கப்பட்டது. பெருந்தொகையாய் புதிதாக வந்து கொண்டு இருந்த தமிழர்கள் மத்தியில் அரசியல் வேலைகள் செய்யப்பட்டது. புதிய அகதிகட்கு ஆரம்ப வாக்குமூலம் எழுதி தருவது, சட்டத்தரணி தேடித்தருவது, பொலிஸ் மற்றும் சமூக சேவைப்பகுதிக்கு அழைத்துச் செல்வது போன்ற நடவடிக்கை ஜோர்ஜினால் ஆரம்பத்தில் செயய்ப்பட்டது. பிரதிபலன் கருதாமல் அதற்காக அவர் நேர்மையாய் உழைத்தார். இன்று இருபது வருடம் கழிந்த பின்பும் ஜோர்ஜை நினைவு கூரும் அவரது சேவையை ஞாபகப்படுத்தும் தமிழர்கள் மட்டுமல்ல, ஜெர்மனியத் தோழர்களும் உள்ளனர். அது அவரது அன்றைய வாழ்நிலைக்கான சான்றாகும். பெர்லினில் நடைபெறும் எந்த சர்வதேச ஊர்வலத்திலும் அரசியல் நிகழ்விலும் அவரைக் காணமுடியும். தமிழர்கள் அதிகளவில் இத்தகைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட காலமாக அது இருந்தது. முதன் முதலில் EPRLF தலைமையில் இருந்து வந்து பெர்லினில் ஜோர்ஜை சந்தித்தவர்கள் ஜோர்ஜ் அதிகமான சர்வதேசிய உணர்வுகளை கொண்டவராகவும் தமது தேசிய விடுதலைக்கு பெருமளவு பொருத்தமற்றவராகவும் இருப்பதாய் கருதினர். அந்த மட்டத்திற்கு இடதூரிகளுடன் அவர் கரைந்து இருந்தார். மேற்கு ஜெர்மனியின் Stuttgard நகரில் இருந்து வெளியிடப்பட்ட ஜெர்மனியின் முதல் அரசியல் சஞ்சிகையான "எண்ணம்" இதழுடன் ஜோர்ஜிற்கு நெருக்கமான உறவு இருந்தது. அதன் முக்கிய தோழரான அழகலிங்கத்துடன் இணைந்து பல அரசியல் செயற்பாடுகளிலும் ஈடுபட்டவர்.

1984 செப்ரெம்பர் மாதம் பெர்லினில் EPRLF EROS பிரநிதிகள் ஜெர்மனிய தோழர்களுடன் இணைந்து Elam Solidaritat Komittee (ஈழம் நட்புறவுக்கழகம்) ஆரம்பிக்கப்பட்ட போது கடந்த காலத்தில் ஜோர்ஜ் உடன் இணைந்து பணிபுரிந்த பல ஜெர்மனியத் தோழர்கள் அதன் மூலமாக இருந்தனர். புஸ்பராசா பெர்லினில் ஜோஜ்ஜை சந்தித்தபோது அவர் பல விடுதலை அமைப்பை சேர்ந்தவர்களுடன் வாழ்ந்தவர் என்று புஸ்பராசா ஞாபகப்படுத்துகின்றார். ஜோர்ஜ் உடன் இடதுசாரிகள், அனார்கிஸ்ட்டுப் போக்குடையோரைக் கொண்ட ஆண், பெணகள் குழுவொன்று கொம்யூன் மாதிரியிலான கூட்டில் வாழ்ந்தனர். வீட்டுக்கடமைகள், உணவு தயாரிப்பு என்பன பங்கிடப்பட்டுச் செய்யப்பட்டது. ஜோர்ஜ் தாறுமாறாக ஒழுங்கற்ற உடை அணிபவராகவும், தமிழ் போக்குகளை கடந்தவராகவும் இருந்தார். பெர்லினில் இருந்த "புலிப்பிராணிகள்" அவரை மோசமாய் எதிர்த்தனர். வெறுப்பும் பொறாமையும் தமிழ் வெறியும் அரசியலுக்கு மாற்றாக அவர்களால் வைக்கப்பட்டது. தமது காற்சட்டைகளில் 'தமிழ் ஈழம்' என்று எழுதி திரிவதும் 'புலிகளை எதிர்ப்பவர்களை எல்லாம் வம்பில் பிறந்தவர்~ என்று மொழிவதுமே' அவர்களது அன்றைய உச்ச அரசியலாக இருந்தது.

பின்பு இலங்கையில் EPRLF காலத்தில் ஜோர்ஜ் செய்த அரசியலானது தயவு தாட்சண்யம் காட்டமுடியாதளவிலான விமர்சனத்திற்குரியதாகும். புலிகளின் அரசியல் இராணுவபயங்கரவாதம், ஜோர்ஜின் நடுத்தர வர்க்கத்தின் பொறுமையற்ற அரசியல், EPRLF இன் நடுத்தர வர்க்க அரசியல் சீரழிவுகள் சகலதும் இணைந்து ஜோர்ஜின் முற்போக்கு அரசியல் கனவுகளை சிதறடித்துவிட்டது. அவர் இலங்கை அரசியல் பரப்பில் தோல்வியடைந்ததுடன் புலிகளின் பயங்கரவாத்திற்குப் பலியாகிப் போனார். ஜோர்ஜின் அவசரப்புத்தி, மனித நல்வாழ்வு மேலான நடப்பு மீறிய வெறி, புலிகளை அழிக்க எந்த சக்தியுடனும் சேரலாம்> எந்த மனித அறத்தையும் அரசியலையும் மீறலாம் என்ற துணிவைத் தந்தது. இந்திய இராணுவம், தமிழ், சிங்கள, இனவாதம், முதலாளியப் பொருளாதார இயக்கம் என்ற பல்வகைப்போக்குகளின் முன்னே ஜோர்ஜ் நிர்ணயமாகத் தோற்றகடிக்கப்பட்டார். வில்சன் முதலில் சோவியத்யூனியனிலும் பின்பு கிழக்கு ஜெர்மனியிலும் கல்வி கற்றவர். பல வருடங்களாக மேற்கு ஜெர்மனியின் பெர்லினில் பல ஆயிரம் தமிழ் அகதிகட்கு மொழி பெயர்ப்பாளராக கடமை புரிந்தவர். இடதுசாரி அமைப்புக்களுடன் தீவிரமான உறவு கொண்டு இருந்தவர். இத்தகையவர்களையெல்லாம் தானே கட்டியவிட்டதாய் புஸ்பராசா புனைவதை, தான்மட்டுமே வருத்தப்பட்டுப் பாரம் சுமந்தவராக அபிநயிப்பதை சகிக்க எமக்கு திட சிந்தை வேண்டும். ஜோர்ஜ், வில்சன் போன்றவர்களது அரசியல் உழைப்பின் விளை பயன்கள் புஸ்பராசா போன்றவர்கட்கும் ஆங்கே பொசிந்தது என்பதே உண்மையாகும்.


பெர்லின்
07.01.2005

Monday, July 03, 2006

ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் - நூல் விமர்சனம் 2

தமிழரசன் பெர்லின்

சிவகுமாரன்


புஸ்பராசாவை விட தமிழீழப்போராட்டத்திற்கு மூத்தவரான சிவகுமாரனைக் கூட புஸ்பராசா தனது படையணியின் வீரராக, தனது ஆழுமையின் கீழ் அவரது எல்லைப்பரப்புள் செயற்பட்டவராக ஆக்கிவிடுகின்றார். சிவகுமாரனுடன் தன்னை சம்பந்தப்படுத்துவதன் மூலம் தன் முக்கியத்துவத்தை உயர்த்துவதும் தனது போராட்ட வரலாற்றை ஆரம்பகால ஆயுத எழுச்சியோடு சம்பந்தப்படுத்துவதும்தான் புஸ்பராசாவின் நோக்கம். சிவகுமாரன், சத்தியசீலன், பிரான்சிஸ், முத்துக்குமாரசுவாமி போன்றவர்களின் காலத்தில் புஸ்பராசா இன்னமும் அரங்கிற்கு வராத காலமாகும். மாவை சேனாதிராசா தான் முதன் முதலில் சத்தியசீலனை புஸ்பராசாவிற்கு அறிமுகம் செய்து வைத்ததுள்ளார். இருவரிடையேயும் அறிமுகத்துக்கப்பால் எதுவித அரசியல் உறவும் இருந்ததற்கான எந்தவித ஆதாரமும் இல்லை. அதேபோல சிவகுமாரனுடனும் புஸ்பராசாவுக்கு அறிமுகம் ஏற்பட்டு இருக்கக் கூடும் ஆனால் கூடிச் செயற்பட்டார்கள் நெருக்கமான அரசியல் ரீதியிலான உறவு இருந்தது என்பதற்கு அடையாளமாக எந்தச் செய்தியும் இல்லை. மலையகத்திற்கு சிவகுமாரனை தானே அனுப்பி வைத்தாயும், சிவகுமாரன் யாழ் ஆஸ்பத்திரியில் இருந்தபோது அவன் தப்பிச்செல்ல உதவியாக துப்பாக்கி எடுத்துச் சென்று கொடுக்க முனைந்ததாகவும், புஸ்பராசா இன்று எழுத்திலே தருவது அன்று சாத்தியமாயிருந்த ஒன்று என்று நம்பமுடியாதது. மலையகத்திற்கு சிவகுமாரன் சென்ற சம்பவம் அமிர்தலிங்கத்தின் தொடர்பினூடாகவே நடைபெற்றது என்று ஆனந்தகுமார் கூறுகின்றார். சிவகுமாரன் தொண்டமானையும் ஏனைய இலங்கைத் தொழிலாளர் சங்க ஆட்களையும் சந்தித்தமை அமிர்தலிங்கத்தின் தொடர்பினூடாக சாத்தியப்பட்டு இருக்கு என்று நாம் நிச்சயமாக நம்பலாம். மலையகத்திற்கு சிவகுமாரனை அனுப்பி வைக்குமளவிற்கு புஸ்பராவிற்கு அரசியல் பலமும் சிவகுமாரன் மேல் செல்வாக்கு இருந்தது என்பது தமிழ் ஈழப்போராட்டத்தின் ஆதி முதல் நபராக புஸ்பராசா தன்னை நிறுத்தச் சொல்லும் பொய்தான்.



சிவகுமாரனை தமிழ்தேசியவாதிகளின் பழைய மரபுப்படி புஸ்பராசவும் அவரது அரசியல் தகைமையை மீறி உயர்த்துகின்றார். சிவகுமாரனின் மரணம் நிகழ்ந்து 30 வருடத்தின் பின்பும், தமிழ் தேசியப் போராட்டத்தின் அனுபவ அறிவோடு அரசியல் சேமிப்போடு புஸ்பராசா தென்படவில்லை. அவர் இன்னமும் கூட்டணிக்கால ஆதி மனிதராகவே வாழ்கின்றார். சிவகுமாரன் யார்? தமிழ் தேசியவாதிகள் இதுவரை அறிமுகம் செய்த வழியில் நாம் சிவகுமாரனை விளங்கக் கொள்ள சம்மதிக்க முடியாது. சத்தியசீலன் போன்றவர்களால் அரசியல் ரீதியாகத் தூண்டபபட்டு,; ஆயுதம் தாங்கிய முயற்சிகட்கு சிவகுமாரன் ஊக்குவிக்கப்பட்டபோதும் அவர் தன்னிச்சையாய்தான் பெரும்பாலும் செய்றபட்டவர். அவர் அங்கம் வகித்த மாணவர் பேரவை என்பது தரப்படுத்தலுக்கு எதிராக எழுந்து அடுத்த கட்டத்திற்கு நகர முடியாமல் கூட்டணி அரசியலில் போய் கரை ஒதுங்கியது. அமைப்பு வடிவமற்ற சில தனிநபர்களின் ஒன்றிணைக்கப்பட்டாத செயற்பாடுகளின் வடிவமாக மாணவர் பேரவை இருந்தது. அவர்கட்கு எந்த அரசியல் முதிர்ச்சியோ செயற்பாட்டுத்திட்டமோ எதுவும் இருக்கவில்லை. இவர்கள் கூட்டணி உருவாக்கிய தமிழன்-சிங்களவன், தியாகி-துரோகி அரசியலைச் சுற்றியே மொய்த்துக் கொண்டிருந்தனர். இவர்கள் சில சமயம் கூட்டணியுடன் முரண்பட்டதாய் தோற்றம் எற்பட்டபோதும், அது கூட்டணியின் மிதவாத பாராளுமன்ற அரசியலுடன் இவர்களது தீவிரவாத ஆயதப்புத்தி மோதிக் கொண்டபோது எழுந்ததாகும். மேடை பேச்சுக்கப்பால் எதையும் செய்ய கூட்டணி தகுதியற்றது என்ற கருத்தை கொண்டிருந்தவர்களின் தொடக்கமாய் சிவகுமாரன் இருந்தார். ஏதாவது செய்ய வேண்டும், செயலாற்றவேண்டும் என்று சிவகுமாரன் துடித்தானே தவிர எப்படி தொடங்குவது? எங்கிருந்து தொடங்குவது? என்ற அரசியல் சிந்தனையெதுவும் அவர் கொண்டிருக்கவில்லை. போராட்டத்தில் மக்கள் கலந்து கொள்ளல் அரசியல் போராட்டம் என்ற எண்ணக்கருக்கூட அவனிடம் உதயமாகவில்லை. சிவகுமாரனுடன் கூட இருந்த சத்தியசீலன் பல்கலைகக்கழக கல்வி பெற்றவராக இருந்த போதும்கூட சாதாரண அரசியல் புரிதல் கூட அற்ற தமிழ் பரப்பின் சிறில்மத்ய+வாக இருந்தார்.


சத்தியசீலன் அன்றே போதுமான சோசலிச விரோதியாக இருந்தார். தமிழ் மக்களின் போராட்டத்தில் இடதுசாரிக்கட்கு சம்பந்தம் எதுவும் இருக்க முடியாது என்று சிவகுமாரனின் ஆயுத வழிகாட்டியான சத்தியசீலன் அன்றே பிடிவாதமாக இருந்தவர். இன்று 30 வருடம் கழிந்த நிலையிலும் தமிழ் தேசிய எழுச்சி புலிப்பாசிசமாக ஏகாதிபத்திய சார்பு அரசியலாக மாறிய பின்பும் லண்டனிலுள்ள சத்தியசீலன் சோசலிசத்திற்கும் தமிழர் பிரச்சனைக்கும் எதுவித சம்பந்தமுமில்லை நாம் ஒருபோதும் சோசலிசத்தை ஏற்றுக்கொண்டதுமில்லை என்று வாதிடுமளவிற்கு வரலாற்றின் கழிவுக்குரிய நபராக மாறிவிட்டார். வெளிநாடுகளில் பல பத்து இன மக்களோடு வாழ்ந்து கொண்டு பல்லினக்கலாச்சார வாழ்வுள் கூடியிருந்து கொண்டு தமிழ் சாதிக்காக மட்டும் வீரிட்டுக் கதறும் நபராக சத்தியசீலன் உள்ளார். 'சிங்களவரும் தமிழர்களும் கலச்சாரத்தில் ஒன்றுபட்ட மக்கள்' என்று சோமவீரசந்திரசிறி கூறியதுதான் அவருடைய காருக்கு தாம் குண்டு வைத்தமையின் காரணம் என்று இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கும் சத்தியசீலன் அரசியல் ரீதியில் புஸ்பராசாவிடம் இருந்து அதிக தூரத்திலில்லை.


கூட்டணி சுட்டிக் காட்டியவர்களைத்தான் சிவகுமாரன் துரோகிப் பட்டியலில் உள்ளடக்கினார். சாதாரண முதலாளிய ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் கூட இல்லாத தமிழ் பரப்பில் மாற்று கூட்டணி மற்றும் சிவகுமாரனின் துரோகி ஒழிப்பு என்பன மாற்றுக் கருத்துக்கான உரிமையை, எதிர்க்கருத்து நிலவும் சுதந்திரத்தைக்கூட இல்லாதொழித்தது. தமிழ் தேசியத்தை மறுத்தவர்கட்கு எதிராகத் தொடங்கி பிற்காலத்தில் இடதுசாரிகளையும் அழிப்பதற்கு சென்றது. சிவகுமாரன் ஒரு யாழ் நடுத்தர வர்க்கத்தின் பிறவி. பெருங்கோபம், பொறுமையின்மையும் மாற்றுக் கருத்துக்களை துச்சகமாக மதிப்பதையும்; குணமாய்க் கொண்டவன். அரசியல் கருத்துக்களின் வலிமையால் எதிர்கருத்துக்கள் எதிரிட வேண்டும் என்ற சாதாரண ஜனநாயக அரசியலின் தொடக்கத்தைக் கூடத் தரிசனம் செய்யாதவன். ஆயுத நடவடிக்கைகள், குண்டெறிவது, சுடுவது போன்றன மக்களின் கவனத்தை ஈர்ப்பதை அவன் கண்டான். அது சார்ந்த பரபரப்புக்களை அவன் விரும்பினான். அவன் மக்களைக் கடந்த ஆயுதமேந்திய கதாநாயகர்களைப் படைக்க விரும்பி தோல்வியடைந்தான். சிவகுமாரனின் நடவடிக்கைகள் மத்தியதர வர்க்கத்தின் ஒரு பகுதிக்கு விறுவிறுப்பு தந்தபோதம் சாதாரண மக்களுக்கு இது நல்ல சகுனமாக படவில்லை. சிவகுமாரன் மக்களை சார்ந்து சிந்தித்தவனல்ல. பெரும் பகுதி மக்களை அரசியலுக்கு ஆட்படுத்தாமல் ஆயுத நடவடிக்கைகளால் எதையும் சாதிக்க முடியாது என்பதே சிவகுமாரனின் தோல்வி போதித்த பாடமாகும். மக்களின் பங்களிப்பற்ற நிலையில் பரந்த மக்களின் சக்தியை சிவகுமாரன் போன்ற ஒரு சில ஆயுதமேந்திய துணிச்சல் வாதிகள் தமது தீவிரவாத நிலைமையினால் சமப்படுத்தி விட முயன்றனர். தீவிரவாதம் என்பது நடப்பை அதீததமாய் மதிப்பிடுவதாகும.; தம் அகவிருப்புகட்குகேற்ப புரிந்து கொள்வதாகும். எனவே இவர்கள் தனிமைப்படுகின்றனர். யதார்த்தநிலை வேகமாய் செயற்படவில்லை என்று இத்தகையோர் எரிச்சலடைகின்றனர். மக்கள் அநியாயத்திற்கு எதிராக எழுச்சி கொள்ளவில்லை என்றும் அவர்கட்கு எருமை மாட்டுத் தோல் வாய்த்திருப்பதாயும் நம்பத் தொடங்குகின்றனர்.


சிவகுமாரனின் உச்ச அரசியலறிவு என்பது 'தமிழர்கட்கு நாடு வேண்டும்' என்பதற்கு அப்பால் செல்லவில்லை. மலையகத் தோட்டத்தொழிலாளர்களைப் பற்றி குறிப்பிடும்போது "அவர்கள் பாவம்" என்று பரிதாபத்தை வெளியிட்டான். இந்த அரசியல் பக்குவம் தமிழ் தேசியவாதம் கோரிய அடிப்படை அரசியலுக்குக் கூட போதாததாக இருந்தது. சிவகுமாரனின் அதீதமான ஆயுத மோகம் தனிநபர் சார்ந்த மனவெழுச்சி விரைவில் சோர்விற்கும், மனஉழைச்சலுக்கும், விரக்திக்கும் இட்டுச் சென்றது. சிவகுமாரனிடம் அவசரப்படும் குணமும் பொங்கி வெடிக்கும் போக்கும் இருந்ததாய் சத்தியசீலன் இப்போது ஒப்புக்கொள்கிறார். சிவகுமாரனது தனிநபர் வீரதீர முயற்சிகள் துரையப்பா, சந்திரசேகர் போன்ற அரச இயந்திரத்தின் தனிநபர்களை சரீர ரீதியில் அழிக்க முயன்றன. ஆனால் அரசு இயந்திரம் விட்டு வைக்கப்பட்டது. அது அசைக்கப்படவில்லை. இத்தகைய உதிரியான தனிமனித பயங்கரவாத நடவடிக்கைகள் அரசாங்கம் தமிழ்மக்களை உரிய நேரத்திற்கு முன்பே போர்த்தயாரிப்பிற்கு முன்பாகவே அழிக்கவல்ல அரச ஆயுத நடவடிக்கைகட்கு தூண்டிவிட்டது. ஓருமுறை சிவகுமாரன் தேசியக்கொடியை அறுத்து எறிந்துவிட்டு "யாரும் கேட்டால் சிவகுமாரன் தான் செய்தான் என்று சொல்லுங்கள் நான் வீட்டிலேதான் இருப்பேன்" என்கிறான். மற்றொருமுறை நல்லூர் கந்தசாமி கோவிலில் பெண்களிடம் சேட்டைவிட்டதாகப் பொலிசாருடன் அடிதடிக்கு போகிறான் "உங்கள் நாட்டில் இந்த விளையாட்டை வைத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லும் போது சாகச தன்மையும்; சாதாரண சிங்கள தமிழ் உணர்வுகளுள் அவன் செயற்படுகிறான். ஒரு முறை குடியரசுதினத்தில் பஸ் எரித்தவர்களைப்பற்றி பொலிசுக்குச் சாட்சி சொன்னவர்களைப் பிடித்த சிவகுமாரன், "காதை வெட்டலாமா? கையை வெட்டலாமா?" என்று சுற்றி நின்றவர்களை கேட்ட சம்பவம், பிற்கால அரசியலற்ற ஆயுத இயக்கங்களின் குணத்திற்கு முன்னறிவித்தலாகி விட்டது. சிவகுமாரன் உயிருடன் இருந்திருந்தால் அவன் பிரபாகரனாகவோ உமாமகேஸ்வரானாகவோ, சிறி சபாரத்தினமாகவோ மாறியிருப்பார் என்பதற்கான நிரூபணங்கள் அவனின் நடத்தையில் தென்படுகின்றன. பலர் தமிழ் தேசியவாதத்தின் நிழலில் சிவகுமாரனைப் பரிசோதித்ததால் அவனை பெரும் சமூகக்கலக்காராய் காணும் தவறை செய்தனர். சிவகுமாரன் தகுதி மீறி புகழப்பட்ட பாராட்டப்பட்ட ஒருவன். ஆவன் ஆயுதமேந்திய கூட்டணி நபர் என்பதற்கப்பால் அவனிடம் வேறேதுவும் இல்லை. தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனைக்கு சாதாரண சிங்கள மக்களின் ஆதரவை வென்றெடுக்க முடியாமல் தடுத்த சக்திகளில் சத்தியசீலன், சிவகுமாரன் போன்றவர்கள் அடக்கம்.


துரையப்பாவின் காருக்கு தானும் சிவகுமாரனும் குண்டு வைத்தமையின் காரணம் துரையப்பா ஒரு சிங்களக்கட்சியின் கிளையை யாழ்பாணத்தில் திறந்து வைத்தமைதான் என்று சத்தியசீலன் இன்று கூடக் கூறுகின்றார். அந்த மட்டத்திற்கு இவர்கள் இருவரும் கூட்டணி அரசியலில் ஆழப்பதிந்து இருந்தனர், அவர்களின் கருத்தில் ஊறியிருந்தனர். ஆனால் கூட்டணி இவர்களைப் பயன்படுத்திக் கொண்டது. "ASP சந்திரசேகராவை சுட்டால் கொழும்பு தமிழர்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படுமா?" என்று சிவகுமாரன் அவரைச் சுட முன்பு கூட்டணியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பொட்டர் நடராசா எனப்படும் செனட்டர் நடராசாவிடம் கேட்டபோது, "அப்படி எதுவும் நடவாது" என்று பொட்டர் நடராசா சிவகுமாரனுக்கு ஊக்கமளித்தார். துரையப்பா, ASP சந்திரசேகராவைச் சுட சிவகுமாரன் போன்றவர்கள் முயற்சி செய்கிறார்கள் என்று அமிர்தலிங்கத்திற்கு நன்கு தெரியும் அதன் அரசியல் விளைவுகள் எத்தகையதாக இருக்கும் அதற்கு எதிராக குறைபட்சம் தமிழ் மக்களை எப்படி தயாரிக்க வேண்டும் என்று கூட கூட்டணிக்கு எந்த அரசியல் ஞானமும் இருக்கவில்லை. அவர்கள் அரசியல் நிகழ்வுகளை ஆயுதப்போக்கின் வளர்ச்சியை தன்னிச்சைப் போக்கில் செல்லவிட்டு வாளாவிருந்தனர். இளைஞர்களின் அரசியலற்ற ஆயுத நிகழ்வுகட்கு ஆதரவு தந்த பொட்டர் நடராசா பிற்காலத்தில் தமிழ் ஆயுத இளைஞர்களாலேயே கொல்லப்பட்டார். இவர்கள் தமது சொந்த தமிழ் வலதுசாரி அரசியலுக்கு தாமே கொடுத்த விலை கொடுத்தனர். உதவியமைச்சர் சோமவீர சந்திரசிறிக்கு குண்டு வைத்த வழக்கில் சிவகுமாரனுக்காக வாதாட எந்தக் கூட்டணி சட்டத்தரணியும் கிடைக்கவில்லை. சட்டத்தரணிகளின் கட்சியான கூட்டணியால் கைவிடப்பட்ட நிலையில் சி.சுந்தரலிங்கமே சிவகுமாருக்காக வாதாடினார். சிவகுமாருக்காக நீதிமன்றத்தில் வாதிட்டவர்களிலொருவரும் சட்டக் கல்லூரி விரவுரையாளருமான, சட்டத்தரணி இராஜராஜேஸ்வரன் கூட்டணி சிவகுமாரனைக் கைவிட்ட கதையை மேடைகளில் சொல்வது வழக்கம். இவைகளைக் கூட்டணி ஒரு போதும் மறுத்தது கிடையாது. பொட்டர் நடராசாவை சிவகுமாரனுக்காக வாதாடும்படி கேட்டபோது அவர் ஏதோ சாட்டுச் சொல்லி மறுத்து விட்டார். அப்போது இளைஞர்கள் "உங்களுக்கும் குண்டு வரும்" என்று அவரையும் வெருட்டினார்கள்.


கூட்டணியுடன் முரண்படாதவனாகத்தான் புஸ்பராசா சிவகுமாரனைக் காட்டுகிறார். கூட்டணியின் சமரசவாத அரசியலுடன் இளைஞர்களின் தீவிரவாதம் தொடர்ந்து மோதியே வந்தது. கூட்டணியின் மிதவாத அரசியலை இவர்கள் தகர்க்கத் தொடங்கியிருந்தனர். சிவகுமாரனின் மரணசடங்கில் அமிர்தலிங்கம் போன்ற கூட்டணித் தலைவர்களுடன் இளைஞர்கள் கடும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர். சிவகுமாரனின் சிலை திறப்பு விழாவில் கூட்டணி தலைவர்கட்கு பதிலாக இளைஞர்களே தலைமை தாங்கினர். அமிர்தலிங்கம், கதிரவேற்பிள்ளை, திருநாவுக்கரசு, V.N நவரத்தினம் போன்றோர் தலைமறைவாக இருந்த இளைஞர்கட்கு பண உதவி செய்தனர் என்பது உண்மையாக இருந்த போதிலும் அது தலைமறைவாக இருந்த இளைஞர்கட்கு போதுமான தொகையாக இருக்கவில்லை. கூட்டணி சட்டத்தரணிகள் யாழ் நீதிமன்றத்திற்கு வழக்காட வரும் போது ஐம்பது, இருபத்தைந்து என்று இளைஞர்கட்கு பணம் கொடுப்பது வழக்கம. அதை பெற பொலிஸ் கண்காணிப்புக்கு மத்தியிலும் கூட்டணி அலுவலகத்திற்கு சில இளைஞர்கள் வருவது வழக்கமாக இருந்தது. கூட்டணி அலுவலகத்திற்கு தலைமறைவாக இருந்த இளைஞர்கள் வந்து செல்வது பொலிசாருக்கு தெரிந்திருந்தபடியால் பல கூட்டணித்தலைவர்கள் தமக்கு ஆபத்து வரும் என்று அஞ்சினார்கள். தம் உதவிகள் வெளியே தெரியாதிருக்க விரும்பினர். சத்தியசீலன் கைதான போது, எம்.பி தர்மலிங்கம் தனது அரசியல் செல்வாக்கு மூலம் கொழும்பு நாலாம் மாடியில் சத்தியசீலன் எவ்வாறான வாக்குமூலம் கொடுத்து வருகின்றார் என்பதனைத் தொடர்ச்சியாக அறிந்து வந்தார்.


பொலிஸ் தேடுதல், உதவியற்றநிலை, உணவு, பணம் இவைகளைப் பெறுவதற்கான போராட்டம் இந்த நிலைகளிலேயே கோப்பாய் வங்கியைக் கொள்ளையிடவும் அதன் பின்பு இந்தியா செல்லவும் சிவகுமாரன் திட்டமிட்டான். தலைமறைவு இளைஞர்களுக்கு பணம் இருக்கவில்லை. கூட்டணி, தமிழரசுக்கட்சி ஆதரவாளர்களிடம் இவர்கள் ஒழிந்து வாழவும் உதவி பெறவும் திரும்பத் திரும்பச் சென்றனர். பொதுவாகவே கூட்டணி தொடர்பானவர்கள் எளிதாகவே பொலிசாரின் பார்வையில் இருந்தனர். இளைஞர்களுக்கு மக்களுடனான தொடர்புகள் இருக்கவில்லை. கூட்டணியினரின் அற்ப உதவிகள் அவர்களை பாதுகாக்கவும் முடியவில்லை. மக்களோடு மக்களாய் கரைந்து தம்மைப் பாதுகாக்கும் வாய்ப்புகளிருக்கின்றதா என்பதனைச் சிந்தித்துப்பார்க்கும் நிலையிலும் அவர்கள் இருக்கவில்லை. கூட்டணியினரின் அற்ப உதவிகள் அவாகளை பாதுகாக்க முடியவில்லை. சிவகுமாரனின் இந்த வங்கிக் கொள்ளை முயற்சி அவர்கள் தப்பி பிழைக்கும் கடைசி முயற்சியாக இருந்தது. சிவகுமாரனுடன் உரும்பிராய் மகேந்திரன், ஜீவராசா, பிரான்சிஸ் ஆகியோர் கோப்பாய் கிராமிய வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டனர். இவர்கட்கு சரியாக கார் ஓட்டத் தெரியாமையினால் வாடகைக்காரைப் பிடித்துக் கொண்டு சென்றனர். சிவகுமாரன் கார் சாரதி தப்பி ஓடிவிடாமல் இருப்பதற்காக அவனோடு வங்கிக்கு வெளியே கத்தியுடன் காவல் நிற்க மற்றவர்கள் வங்கியுள் நுழைந்தனர். இவர்களின் துப்பாக்கியைக் கண்ட வங்கிக்காசாளரான பெண் மயங்கி விழுந்துவிட்டார். எனவே இவர்களால் பணம் எடுக்க முடியவில்லை இவர்கள் பயமுறுத்தும் நோக்கில் வைத்த துப்பாக்கி வெடிச்சத்தம் கேட்டு சனங்கள் கூடிவிட்டார்கள். எனவே இவர்களைக் காப்பாற்ற சிவகுமாரன் வங்கியுனுள் ஓட கார்சாரதி திறப்பை எறிந்துவிட்டுத் தப்பி ஓடி விட்டார். கொள்ளைக்காரர்கள் என்று நினைத்து சத்தம் போட்ட வங்கி ஊழியர்கட்கு தாம் விடுதலைக்காகப் போராடுபவர்கள் என்று விளக்கமளிப்பதற்கு சிவகுமாரன் அதிக நேரத்தை எடுத்துக் கொண்டான்.


சனங்கள் கூடத் தொடங்கி விட்டனர். சிவகுமாரனும் கூட்டாளிகளும் காரை தள்ளி ஸ்டாட் பண்ண முயன்றனர், ஆனால் முடியவில்லை. எனவே திசைக்கொருவராய் தப்பியோடும்படி சொல்லி விட்டு சிவகுமாரன் தானும் தப்பி ஓடினான். ஆனால் மக்கள் இவர்களை கள்ளர் என்று நினைத்து சத்தமிட்டபடி தொடர்ந்து துரத்திச் சென்றனர். சிவகுமாரன் புகையிலை வெட்டப்பட்ட தோட்டத்தினுடாக ஓடும் போது காலில் காயம்பட்ட நிலையில் ஒழிக்க முயன்ற போது சனங்களால் காட்டித் தரப்பட்டான.; பொலிசில் பிடிபடும் நிலையில் சயனைட்டை விழுங்கினான். ஜீவராசா, உரும்பிராய் மகேந்திரன் இருவரும் பொதுமக்களால் கலைத்துப் பிடிக்கப்பட்டு கட்டி வைக்கப்பட்டு பொலிசில் ஒப்படைக்கப்பட்டனர். மக்களால் இவர்கள் காட்டித்தரப்படும் நிலை இருந்ததென்றால் அவர்கள் எவ்வளவு அறியப்படாதவர்களான அரசியலைக் கொண்டிருந்திருக்க வேண்டும் இவர்களது கருத்தியல் மக்கள் மத்தியில் அறிமுகம் செய்யபட்டு இருக்குமெனில் இவர்கள் மக்களால் பாதுகாக்கப்பட்டு இருப்பர். இதனைப் போராட்டத்தின் தொடக்கம் என்று எவரும் நியாயம் பேச முடியாது. அரசியலுக்கு முந்தி ஆயுதமெடுத்தமையின் விளைவாக இது இருந்தது. இத்தனை அனுபவத்திற்குப் பின்னரும் புஸ்பராசா சிவகுமரானும் அவனது கூட்டாளிகளும் தோல்வியடைந்தமைக்கு காரணம் பிரான்சிஸ் போன்ற அவனது நண்பர்களே என்று பழி போட முயல்கிறார். மக்களின் பங்களிப்பின்றி எதுவும் சாத்தியமில்லை என்பதே இச்சம்பவத்தின் போதனையாகும். சயனைட்டை விழுங்கி யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சிவகுமாரன் முதலில் சுய நினைவுடனேயே இருந்துள்ளார். தான் தப்பமாட்டேன் என்று கருதி அங்கு கொடுத்துள்ள மருத்துவ சிகிச்கைகளையும் மறுத்துள்ளான். பின்பு ஒரு வைத்தியர் அவனுக்கு "நீ மருந்து குடித்தால் தப்புவாய்" என்ற நம்பிக்கையூட்டியே பின்பு சிகிச்சையை ஏற்றுக் கொண்டான். தொடர்ந்து தனது தாயுடன் உரையாடிக் கொண்டே இருந்துள்ளான். தன் கைவிரல்கள் கறுத்து வருவதை அவதானித்து தனது தாயிற்கு சொல்லியுள்ளான். அதன் பின்பே நினைவு மாறாட்டமாய் புலம்பத் தொடங்கியதுடன், தன் நண்பர்களின் பெயர்களையும் சொல்லி அழைத்துள்ளான், சம்பந்தமில்லாமல் எல்லாம் பேசத் தொடங்கியுள்ளான் இச் செய்திகளை சிவகுமாரின் தாயாரே பலருக்குச் சொல்லியுள்ளார். பொலிஸ் காவலில் ஆஸ்பத்திரியில் சிவகுமாரன் வைக்கப்பட்டிருந்தமையால் அவனைப் பார்க்கச் சென்றவர்களின் தொகை மிகவும் சொற்பம். ஆனால் தீரங்கொண்ட புஸ்பராசாவோ துணிந்து யாழ் வைத்தியசாலைக் சென்றதாயும், கூடவே சிவகுமாரன் தப்பி செல்ல உதவும் பொருட்டு துப்பாக்கியை எடுத்துச் சென்றதாயும் எழுதியுள்ளார். புஸ்பராசா சொல்வதை நாம் ஏற்றுக் கொள்வதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை. புஸ்பராசா உண்மையில் வைத்தியசாலை சென்றிருந்தால் எந்த சந்தர்ப்பத்தில் சிவகுமாரனைக் கண்டார்? நினைவுதப்பாத போதா? அல்லது சுய நினைவு போய் கண்டபடி புலம்பத் தொடங்கியபோதா? "துரோகி வெளியே வந்து சுடுவேன்" என்று சொன்னது தன்னைக் காட்டிக் கொடுத்தவர்களையா? கூடச் சென்ற கூட்டாளிகளையா? கூடச் சென்ற தனது நண்பர்களையே என்று புஸ்பராசா நம்ப விரும்புவதுடன் அதை பிரான்சிஸ் போன்றவாகளுக்கு எதிராகவும் திருப்பி விட முயல்கிறார். ஆனால் எமது விசாரிப்புக்கள் புஸ்பராசாவின் எழுத்து முழு உண்மை என்பதற்கு எந்த ஆதரவான தகவல்களையும் தரவில்லை. அன்று சிவகுமாரனின் நெருங்கிய நண்பர்களாக உரும்பிராய் மகேந்திரன, ஆனந்தகுமார், பிரான்சிஸ், உரும்பிராய் சோட் பாலா ஆகியோரே இருந்தனர், புஸ்பராசா அல்ல என்பது சந்தேகத்திற்கு இடமற்ற உண்மையாகும்.


சிவகுமார் உட்பட ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர்கட்கு இடதுசாரிகள் ஆயுத ரீதியில் உதவினார்கள் என்று புஸ்பராசா எழுதுவது எந்த நிரூபணமுமற்றது. கூட்டணி போலவே தீவிரவாத தமிழ் ஆயுதமேந்திகளும் இடதுசாரிகளை தம் எதிரிகளாகவும், தமிழினத்துரோகிகளாகவுமே கண்டனர். காங்கேசன்துறை, மல்லாகம், யாழ்ப்பாணம், உரும்பிராய் போன்ற இடதுசாரிகள் செல்வாக்குப் பிரதேசங்களில் தனிநாடு கேட்கபவர்களுக்கு கடும் எதிர்ப்பு இடதுசாரிகளிடம் இருந்து வெளிப்பட்டது. சிவகுமாரனின் மக்களுடன் ஒட்டாத தனிநபர் சார்ந்த ஆயதத் துணிச்சலை ஆரம்ப முதலே இடதுசாரிகள் எதிர்த்தனர். சத்தியசீலன், சிவகுமாரன் போன்றோருடன் அவர்களது அரசியல் பற்றி அவர்கள் மிகவும் கடுமையான விமர்சனங்களை அவர்கள் வைத்தனர். இங்கு இடதுசாரிகள், சிவகுமாரன் உட்பட தமிழ் இளைஞர்கட்கு ஆயுதம் கொடுத்து உதவினர் என்ற புஸ்பராசாவின் எடுகோள் எந்த அடிப்படையும் அற்றது இடதுசாரிகளின் சாதி எதிர்ப்பு போராட்டங்களில் மேல்சாதி அடக்குமுறைக்கு எதிராக சிறுசிறு ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபட்ட போதும் அது எல்லைக்குட்பட்ட இலக்குகளுக்கு மட்டுமே கொண்டிருந்தது. சிவகுமாரனின் ஆயத நடவடிக்கைகளை தன் சொந்த முயற்சியினாலும் மற்றவர்களின் உதவியினாலுமே நடத்தினான். சத்தியசீலன் போன்றவர்கள் தமது ஆயுத முயற்சிகளுக்காக தாம் ஒருபோதும் இடதுசாரிகளின் உதவிகளைப் பெற்றதில்லை என்று மறுக்கின்றனர். யாழ்ப்பாணப்பகுதியிலும் சாதாரண கிராமங்களிலும் வெடிதயாரிப்பவர்கள், ஊர்சண்டியர்கள் போன்றவர்கள் வெடிகுண்டுகள் தயாரிப்பது நடைமுறையில் இருந்தது. இவர்கள் சண்டைகளில் கைக்குண்டுகளைப் பாவித்தனர். அந்தக் காலத்தில் யாழ்பாணத்திலோ வல்வெட்டித்துறை, உரும்பிராயிலோ 500 ரூபாவிற்கு ஒரு கைத்துப்பாக்கி வாங்குவது கடினமான செயலாக இருக்கவில்லை. உள்ளுர் வெடி மருந்துகளோடு இந்தியாவிலிருந்தும் இவை கடத்தி வரப்பட்டன. இத்தகைய வாய்ப்புக்கள் இருக்கும்போது இடதுசாரிகள் உதவினர் என்பது பொருத்தமற்றதாகும்.


சிவகுமாரனின் சிலை உரும்பிராயில் திறக்கப்பட்ட போது உரும்பிராயின் முக்கிய இடங்களில் இடதுசாரிகளால் எதிர்ப்பு சுலோகங்கள் எழுதப்பட்டிருந்தது என்பதையும் நாம் ஒப்பிட்டு பார்க்க முடியும. சிவகுமாரன் சாதியால் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் வேலை செய்தார் என்று கூறப்படுகிறது. அவனின் சாதி எதிர்ப்பு என்பது உயர் வேளாள சாதியினர் கோவில்களில் நடத்திய ஒரு சில சமபந்திப்போசனங்களாகும். இவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் கோவில்களில் வீடுகளில் சென்று சாப்பிட்டதில்லை. இதையொட்டி ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த இடதுசாரி போராளிகளில் ஒருவர் பின்வருமாறு சொன்னார் "நாங்கள் உங்களிடம் வருவதல்ல, நீங்கள் எங்களிடம் வந்து சாப்பிட்டு எங்கள் கோவில்களில் சமபந்தி போசனம் செய்வதே சாதியொழிப்பாகும்" சிவகுமாரனின் சாதி எதிர்ப்புபோராட்டம் கூட்டணியின் வகைப்பட்டதே. அதனை மாதிரியாய் கொண்டதே. இதைவிட நூறு மடங்கு உத்வேகத்துடனும், நேர்மையுடனும் இடதுசாரிகள் சாதியொழிப்பு போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். உரும்பிராய் பகுதியிலேயே 1967 களிலே இத்தகைய போராட்டங்கள் நடைபெற்றன. மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோயில் நுழைவுப் போராட்டத்தை இடதுசாரிகள் நடத்தியபோது, இடதுசாரி அணியைச் சேர்ந்த செல்லக்கிளி என்னும் பெண் மேல்சாதி வெறியர்கட்கு குண்டு எறிந்ததாய் கைது செய்யப்பட்டார். இப்படி ஒரு தொகை இடதுசாரிகளின் போராட்டம் ஆணவப்படுத்தப்படாமல் உள்ளது.


ASP சந்திரசேகரா மீது சிவகுமாரனின் கொலை முயற்சியையும் புஸ்பராசா குறித்துள்ளார். இக்கொலை முயற்சியில் சிவகுமாரனுடன் ஆனந்தகுமார், நடேசானந்தம் அளவெட்டி முல்லை, பிரான்சிஸ் போன்றவர்கள் பங்கெடுத்துள்ளனர். ஆனந்தகுமார் குண்டு எறிந்த போது அது வெடிக்கவில்லை. சிவகுமாரன் ஆறு தடவைகள் ASP சந்திசேகராவை சுட்டபோதும் குண்டுகள் வெடிக்கவில்லை. ஆனந்தகுமாரின் வெடிகுண்டு தயாரிக்கப்பட்டு ஒரு வாளியில் வைக்கப்பட்ட போது அடியில் நீர் சிறிது இருந்ததால் ஈரமாகிக் குண்டு வெடிக்கவில்லை. சிவகுமார் சுட்ட பழைய 3.8 றிவோல்வர் குண்டுகள் திரும்ப இவர்களால் நிரப்பட்டவை. இது இரண்டு மூன்று நாட்களாகிவிட்டமையால் இளகிவிட்டது. அதுவும் வெடிக்கவில்லை. எறிந்த குண்டு வெடிக்கவில்லை, துப்பாக்கி குண்டுகளும் வெடியைத் தீர்க்கவில்லை என்பதைக் கண்ட கூடவந்தவர்கள் ஓடத் தொடங்கினர். ASP சந்திரசேகராவிடம் ரிவோல்வர் இருந்ததால் அவர் இவர்களை திருப்பி சுடக்கூடும் என்று அவர்கள் பயந்தனர். ஆனால் சிவகுமாரன் ASP சந்திரசேகராவை ஜீப்பில் இருந்து இழுத்து கத்தியால் குத்த எண்ணினான், ஆனால் கத்தியை வைத்திருந்த பிரான்சிஸ் கத்தியுடன் ஓடியமையால் கோபமடைந்த சிவகுமாரன் பிரான்சிசை தாக்க முயன்றான் என்று தெரிகிறது. இதனை ஆனந்தகுமாரும் உறுதிப் படுத்துகின்றார்.


தமிழாராய்ச்சி மாநாட்டில் ஜனார்த்தனத்திற்கு சிவகுமாரன் பாதுகாப்புக் கொடுத்ததாய் புஸ்பராசா எழுதியுள்ளார். ஜனார்த்தனத்திற்கு கூட்டணி உயர்மட்ட பெரிய மனிதர்கள் பாதுகாப்புக் கொடுத்தனர். சிவகுமாரன் அவருடன் கூடத் திரிந்தார். தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு பாதுகாப்பாக கூட்டணி இளைஞர்கள் சில ஏற்பாடுகள் செய்திருந்தனர். தடிகள், சைக்கிள் செயின் உட்பட பல தயாரிக்கபட்டன என்பது உண்மை. இதனைக் கனடா தாயகம் இதழும் எழுதியதுள்ளது. ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த எதற்கும் துணிந்த துரையப்பாவின் ஆட்கள் மாநாட்டை குழப்புமளவிற்கு பலமுள்ளவர்களாக இருந்தனர். எனவே அப்படி எதுவும் குழப்பப்பட்டாமல் அதனைச் சமாளிக்க கூட்டணி இளைஞர்கள் சில ஒழுங்குகள் செய்தனர் என்பது உண்மையாகும். இவைகளை எழுதிய கனடா தாயகம் இதழை, சிறிலங்கா அரசுக்கு சார்பானவர்கள் என்று குற்றம் சொல்லும் புஸ்பராசா, அதில் கட்டுரை எழுதிய ஜீவாவை ஒத்தவர்கள் மின்சாரக் கம்பங்களில் தண்டிக்கப்பட்டதை காட்டி வெளிப்படையாகவே ஜீவாவை எச்சரிக்கின்றார். புஸ்பராசா கருத்துச் சுதந்திரத்திற்கு தரும் மரியாதை புலிகளை மிஞ்சக் கூடியதாகும், முழுப்புகலிடத்திற்கும் வழிகாட்டக் கூடியதாகும்!!!


தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு கைலாசபதி, இந்திரபாலா போன்றவர்கள் அழைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டதைப்பற்றிக் கவலைப்படாத சிவகுமாரன், வித்துவான் வேலனுக்கு தவறுதலாக அழைப்பு அனுப்பப்படாததால் அவர் "நான் தமிழால் வாழ்ந்தவன், தமிழனாய் வாழ்ந்தவன்" எனக்கு அழைப்பு இல்லை என்று சத்தம் போட்டபோது அவர் காலில் வீழ்ந்து தமிழாராய்ச்சி மாநாட்டை சத்தம் போட்டுக் குழப்பிவிடாதீர்கள் என்று கெஞ்சிக் கேட்டான். சிவகுமாரன் சயனைட் கலாச்சாரத்தின் தந்தை, அதைத் தொடக்கி வைத்தவன். இது பிற்காலத்தில் புலிகளால் பிரபாகரனின் கண்டுபிடிப்பாய் மக்கள் மயப்படுத்தப்பட்டது. ஒரு தற்கொலைச்சமூகம் தமிழ் மக்கள் மத்தியில் உருவாகியது. இவைபற்றி புஸ்பராசா எதுவித அபிப்பிராயமும் வெளியிடவில்லை. சிவகுமாரன் தொடக்கிவைத்த தற்கொலை அரசியல், தமிழ் மக்கள் மத்தியில் தோற்றுவித்த சமூக விளைவுகளைப்hற்றி அவர் பேசவில்லை. இதையிட்டு அவர் அனுஷ்டிக்கும் மௌனம், புலிகளின் தற்கொலை அரசியலை ஏற்கத் தெரிவிக்கும் சம்மதமே. சகல போராட்டங்களிலும் துணிவு, வீரம், மரணம், தியாகம் என்பன மதிக்கப்படும் பண்புகளாக இருந்த போதிலும் உண்மையான புரட்சியாளர்கள் மரணத்தைப் போற்றுவதில்லை, தற்கொலையைக் கொண்டாடுவதில்லை. புரட்சியாளர்கள் எதிரிகளின் கருத்தியல்களை மட்டுமல்ல, அவர்களின் உடல், உள ரீதியிலான சித்திரவதைகளையும் எதிர்கொள்ளத்தக்கதாயே பயிற்றுவிக்கப்படுகின்றனர். எதிரியின் உடல் வதைக்குப் பயந்து தற்கொலை செய்வது கொள்வது வீரத்தையல்ல, கோழைத்தனத்தையே காட்டுகிறது. உளவியல் ரீதியில் பலமற்ற, போக்கிடமற்ற மனிதர்களே தற்கொலையைத் தீர்வாக நாடுகின்றனர் என்பது நாம் நடைமுறையில் காணும் உண்மையாகும். யுத்தகாலம் என்பது சித்திரவதை, உடற்காயம், மரணம், சிறை, பட்டினி, உளவியல் துன்பங்கள் என்பவற்றையே தினசரி வாழ்வின் நிகழ்வாக கொண்டிருக்கும். இவைகளை எதிரிட தொடர்ந்து உயிர் வாழ்ந்து இலட்சியத்தையடைய போராளிகள் பயிற்றப்பட்டிருக்க வேண்டுமே தவிர, சயனைட் குப்பிகளை விழுங்கி தற்கொலை செய்துகொள்வது ஒரு போராட்டத்தின் அரசியல் இராணுவ தேர்வாக இருக்க முடியாது. கடும் உடற்துன்பங்களை சகித்து மனவுறுதியோடு புரட்சிக்காக வாழ்வதே தொடர்ந்துதும் போரிடுவதே புரட்சிகயாளர்களை உண்மையான அர்ப்பணிப்பாகும்.


சோசலிச உலகின் மிகச் சிறந்த இராணுவ தளகர்த்தரும், ஐந்து மில்லியன் செம்படை வீரர்களை வழி நடத்தியவருமான ரொட்ஸ்கி முதல், மாவோ, சேகுவரா ஈறாக எவரும் எதிரிகளின் உடல்வதைக்கு பயந்து புரட்சியாளர்கட்கு தற்கொலையைச் சிபார்சு செய்ததில்லை. சமூகவிடுதலை என்பது கடின உழைப்பு, போதாமை நிறைந்த வாழ்வு, நிரந்தர துன்பம, மரணத்தின் மத்தியிலான வாழ்வு என்பவைகளால் சூழப்படட்ட போதும், அது வாழ்வதற்கான போராட்டமே. உழைப்பாளர்கட்கும் ஏழைகட்கும் கடினமான வாழ்வை எதிர்நோக்கும், சித்திரவதைகளை தாங்கும் மனவுறுதி அதிகமாகும் ஆனால் சிவகுமாரன் போன்ற நடுத்தர வர்க்க சொகுசுகளில் இருந்து போராட்டங்கட்கு வந்தவர்கட்கு சித்திரவதைகளை தாங்கும் மன உறுதியில்லை. சித்திரவதைகளை விட மரணமடைவதே, இந்த உலக வாழ்வை முடித்துக் கொள்வதே மேலானது என்று கருதுகின்றனர். கடுமையான வாழ்விற்கும், சிறைக்கும, சித்திரவதை துன்பங்கட்கும் ஆட்படுவதற்கும் படுவதை விட இவர்கள் மரணத்தை தாமே தேர்ந்து கொள்கின்றனர். போராட்ட காலத்தில் சமூகம் தனது சராசரி மனிதப் பண்புகளைக் கூட இழந்து முழு மிருகமாகிவிடும. ஆயுதப்படைகள் கிளர்ச்சி செய்வோரை உச்சககட்ட உடல்வதைகட்கு உட்படுத்துவார்கள். இங்கு போராடுபவர்கள் எல்லோரும் பிடிபட்டால் தற்கொலை என்பதே தீர்வு என்றதால் வாழ்வதற்கு எவரும் மிஞ்சமாட்டார்கள. சரீர ரீதியிலான துன்பத்திற்கு அஞ்சி பெறுமதி மிக்க மனித வாழ்வை அழித்துக் கொள்பவர்கள் புரட்சியாளர்களின் வரிசைக்குரியவர்களல்ல. கடுமையான வாழ்விற்கு தயாரற்ற மேல் வர்க்கங்களைச் சேர்ந்தவர்கள் சுயஅழிப்பு மூலம் யதார்த்தத்திலிருந்து தப்பிக்க முயல்கின்றனர் ஆனால் முழுச்சமூகமுமே இத்தகைய கொடுமையான வாழ்வு முன்பு விடப்பட்டடிருப்பதை இவர்கள் மறந்து தம்மை மட்டுமே காண்கிறார்கள்.


புலிகள் சிவகுமாரனின் முன்னுதாரணத்தை தீவிரமாய் பற்றிக் கொண்டனர். "சயனைட்டுத்தான் எமது இயக்கத்தின் உயிராகும். எமது இயக்கத்தின் வேகமான வளர்ச்சிக்கு காரணம் சயனைட்தான. நாங்கள் எமது இலட்சியத்திற்கு எம்மை எம்மை ஒப்படைத்திருக்கிறோம் என்பதன் அடையாளச் சின்னம் அது" என்று புலிகள் எழுதினார்கள். " இந்த சயனைட் குப்பி எங்கள் கழுத்தில் இருக்கும் வரை எந்த சக்திக்கும் நாங்கள் அஞ்ச மாட்டோம்" என்று குறிப்பிடும் கிட்டு எதிரிகளின் சித்திரவதைக்கு அஞ்சியே சயனைட்டை தேர்ந்தெடுப்பதைக் காணவில்லை, தன்னிடம் சிக்கிய மாற்று இயக்க போராளிகளை விதம் விதமாய் சித்திரவதை செய்து மகிழ்ந்து, வதைத்தே கொன்ற கிட்டு போன்றவர்கள் தமது சொந்த உடல் மீதான சித்தரவதையில் இருந்து தப்பிக்க சயனைட்டைக் காவித்திரிந்தனர். மாத்தையா, விக்டர் போன்றவர்கள் தம்மிடம் அகப்பட்ட சிங்கள, முஸ்லீம் ஏழைகளுக்கு, ஆடு, மாடு வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தியவர்களுக்கு சயனைட் தீத்தி மகிழ்ந்த ககைகள் தனியாகவுள்ளன. சிவகுமாரனின் தற்செயலான தவறான முன்னுதாரணம் இப்படி பல திக்கில் விளைவுகளை ஏற்படுத்தியது.



சிறைவாழ்வு



கொடுமையும், அவலமும் நிறைந்த சிறைவாழ்வு பற்றி புஸ்பராசா கூறும் தகவல்கள் ஒரு அரசியல்கைதி என்ற அளவில் போதுமான மட்டத்திற்கு அவ்வாழ்வை கிரகித்துக் கொண்டவையாயில்லை. அங்கு பெற்ற அநுபவங்கள் மிக மிக மேலோட்டமாகவும் உணர்வற்றும் தன்னைப் பற்றிய தகவல்களால் நிரம்பியதாகவும் அது குறுகிச் சிறுத்து விட்டது. புஸ்பராசாவின் எழுத்தோடு ஒப்பிடுகையில் சிறைக்கே சென்றிராத சோபா சக்தி எழுதிய "ம்" கதை ஓரளவு இன்னமும் சிற்பபாக சிறை வாழ்வையும், வெலிக்கடைப் படுகொலைகளையும், புலி இயக்க வன்முறைகளையும் பதிவு செய்துள்ளது. தான் வாழ்ந்த வாழ்வை அனுபவித்ததை, கண்ணால் கண்டதை எழுத்தில் படைக்கும் அளவிற்கு ஆற்றல் புஸ்பராசாவிடம் தேவையான அளவிற்கு செயற்படவில்லை என்று நாம் சொல்ல முடியும். அந்தவகையில் புஸ்பராசா ஒரு மோசமான விவரணையாளராக மாறிவிடுகின்றார். எதிர்வரும் இரண்டு பத்துவருடங்கட்கு ஈழப்போராட்டம் பற்றிய நூல்கள் மதிப்பீடுகள் பெருமளவு வெளிவரும் காலமாக இருக்கும். இங்கு புஸ்பராசாவின் எழுத்துக்கள் சகல திசைகளிலும் திரும்ப திரும்ப விமர்சனத்திற்கும், ஆய்விற்கும் வருவதை தடுக்க முடியாது. இது சார்ந்த வரலாற்றுணர்வு அவரிடம் செயற்படவில்லை, போதிய கவனத்துடன் இவை எழுதப்படவில்லை, இதற்கு புஸ்பராசாவின் வலதுசாரித் தமிழ் அரசியல் மதிப்பீடுகளும் கட்டாயமாகத் தடையாக இருந்தன. அவர்காலத்தில் அவருடன் சிறையிலிருந்த, அரசியல் நண்பர்கள், முக்கிய அரசியல்கைதிகள், ஜே.வி.பி யினர், தனிப்பட்ட நட்பு பேணியோர் என்று அவர் விபரிக்க ஏராளமான தேவையிருந்தது. சிறைவாழ்வில் தமது இலட்சியம் தொடர்பான எத்தகைய உறுதியை புஸ்பராசா கொண்டு இருந்தார் என்பது கூட வாசிப்பவர்களுக்கு தட்டுப்பட்டிராது, ஆனால் தான்மாத்திரம் அனுபவித்த சித்திரவதைகளை, பொலிஸ் இராணுவ துன்புறுத்தல்களை ஓரளவு எழுத்தில் கொண்டு வருவதில் வெற்றி பெற்றுள்ளார்.


ஏனைய தமிழ் இளைஞர்கள்கள் மேல் நடாத்தப்பட்ட பொலிஸ் வன்முறைகள் பற்றி அவர் ஆரம்ப நிலைத் தகவல்களைக் கூடத்தரவில்லை. தன்னோடு தொடர்புடையவர்கள் பற்றி மட்டுமே சில செய்திகள் பேசப்படுகின்றது. அக்காலத்தில் பஸ்தியாம்பிள்ளையின் சித்திரவதைகள் எங்கும் பீதியூட்டுபவையாக இருந்தன. பஸ்தியாம்பிள்ளை புஸ்பராசாவை மட்டுமல்ல கிட்டதட்ட சகல தமிழ் இளைஞர்களையும் அடித்து நொருக்கியவர். செட்டியை மலம் போகுமளவிற்கு தாக்கியவர். தூசணத்தை அடுக்கு மொழியில் பேசும் பஸ்தியாம்பிள்ளை அமிர்தலிங்கம், மங்கையற்கரசி அமிர்தலிங்கம் இருவரையும் இளைஞர்களோடு சம்பந்தப்படுத்தி பாலியல் பழிப்புச் சொற்களுடன் விசாரணை செய்வார். மிகமோசமான சித்தரவதைக்குப் பின்னர் இளைஞர்கட்கு சிகரெட், சாப்பாடு, பிரியாணி, கள்ளுக் கூட வாங்கிக் கொடுப்பதுண்டு. ஒருமுறை அமிர்தலிங்கம் நீதிமன்றத்தில் பஸ்தியாம்பிள்ளையைச் சந்தித்போது "நீர்தான் பஸ்தியாம்பிள்ளையா? உம்மைத்தான் சந்திக்க வேண்டும் என்றிருந்தேன். தமிழ் இளைஞர்களின் தாய்மார் விடும் கண்ணீர் உம்மைச் சும்மா விடாது விரைவில் உம்முடைய காக்கிச்சட்டையைக் கழற்றுவேன்" என்றார். அமிரத்லிங்கம் தன்னை பயமுறுத்தியதாக பஸ்தியாம்பிள்ளை தனது அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்திருந்தார். பஸ்தியாம்பிள்ளை பற்றிப் பாராளுமன்றத்திலும் கூட்டணி எம்.பி மார்கள் பேசினார்கள்.


சிறையிலிருந்த தமிழ் இளைஞர்கள் மோசமான அரசியலுணர்வு கொண்டவர்களாகவும் வெறும் தமிழ் வெறியால் உந்தபட்டவர்களாகவும் இருந்தனர். அரசியல் கிளாச்சியாளர்களுக்கு உரிய பக்குவத்தை உண்மையில் அவர்கள் அடைந்திருக்கவில்லை. எதிர்காலமின்மை, விரக்தி, முரண்பாடுகள் இவைகளால் ஒருவரோடு ஒருவர் தொடர்ந்து பிணக்குகளை கொண்டிருந்தனர். அரசியில் ரீதியான வாதாட்டங்கள், வாசிப்பு என்பன ஒரு சிலரைத்தவிர வேறு எவரிடமும் இருக்கவில்லை. ஆனந்தகுமார் - குட்டிமணி, வண்ணை ஆனந்தனின் அடிதடிகளை புஸ்பராசா அவர்கள் எழுதியுள்ளார். காசிஆனந்தன், வண்ணை ஆனந்தன் சேனாதிராசா உட்பட பலர் தத்தமக்கென்று குழுக்களை உருவாக்கிக் கொண்டிருந்தனர். இடதுசாரிப்போக்குடைய சந்ததியார், வரதராஜாப்பெருமாள் போன்றவர்கள் புறமொதுக்கப்பட்டனர். ஆயுதப் போராட்டத்துடன் தொடர்புடையவர்கள் என்று கைது செய்யப்பட்ட சத்தியசீலன் போன்ற நபர்களுடன் காசிஆனந்தன், வண்ணை ஆனந்தன் போன்றவர்கள் சிறையில் கூட தொடர்புகளை எச்சரிக்கையோடு வைத்துக் கொண்டனர். சத்தியசீலன், காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தனும் ஒன்றாய் சிறைவைத்த போது மூன்று நாட்களாக சத்தியசீலனுடன் காசிஆனந்தனும் வண்ணை ஆனந்தனும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அப்போது சிறையிலிருந்த ஜே.வி.பி யினரே உடனே வந்து சத்தியசீலனுடன் பேசினர். சத்தியசீலன் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் எனவும் தாம் மேடைப்பேச்சுக்காகவே கைதாகியுள்ளதாயும் சிறையிலிருந்த ஜே.வி.பி யினருக்கு காசி ஆனந்தனும் வண்ணை ஆனந்தனும் சொல்லியிருந்தனர். காசி ஆனந்தனும் வண்ணை ஆனந்தனும் ஆயுதப்போராட்டம் பற்றிப் பேசி இளைஞர்களை தூண்டி விடுபவர்களாகவும் இருந்தவர்களாவர். விசாரணைகளின் போது ஆங்கிலம் தெரிந்திருந்த காரணத்தால் இவர்கள் அடிகளிலிருந்து தப்பிக் கொண்டனர். ஆங்கிலம் பேசிப் படித்தவர்களாக பொலிஸ் விசாரணைகளில் தம்மைக் காட்டிச் சலுகைகளைப் பெற்றுக் கொண்டனர். சிறைகளில் அதிகாரிகளுடன் பேசுவது, தமிழ் இளைஞர்களின் சிறைத் தேவைகளுக்காக ஆங்கிலத்தில் விண்ணப்பங்கள் எழுதுவது என்று சிறையிலும் தமது மேல் நிலையைத் தக்க வைத்துக் கொண்டனர். சாதாரணமாக ஏனைய தமிழ் இளைஞர்கட்கு ஆங்கிலம் தெரியாத காரணத்தால், மோசமாக அடிக்கப்பட்டதோடு பலவித அவமானங்கட்கும் உள்ளாயினர்.


சிறையில் சாதி பார்க்கப்பட்டதாய் சில இளைஞர்கள் குறை சொன்னதை புஸ்பராசா எழுதியுள்ளபோதிலும் அதை ஒரு பொருட்டாய் அவர் எடுத்துக் கொள்ளவில்லை. சாதி வெளிப்படையாக பெரும்பாலும் காட்டப்படாவிட்டாலும் சாதுர்யமாக சாதி பார்க்கப்பட்டது. அரசியல் உணர்வுகள் ஒழுங்கு படுத்தபடாத இவர்களிடம் சாதி மற்றும் பிரதேசவாத உணர்வுகள், ஊர்ப் பெருமைகளும் குடிகொண்டே இருந்தன. வரதராஜப்பெருமாள் இந்திய வம்சாவழித்தொடர்புடைய ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அவர் மீது மறைமுகமான புறக்கணிப்பு இருந்தது. சாதி குறைந்தவர்கள் கணக்கெடாமல் விடப்பட்டனர். சில சமயங்களில் சேர்ந்து சாப்பிடுவது தவிர்க்கப்பட்டது. பொருளாதார பலம் இல்லாத குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் தாய், தந்தையர் குடும்பத்தினரும் சிறையில் வந்து இளைஞர்களைப் பார்வையிடவோ, பணம், உணவு வகைகள் அனுப்பவும் முடியாதிருந்தனர். இத்தகைய குடும்பத்தை சேர்ந்த இளைஞர்கள் சிறையில் இளக்காரமாய் எதிர்நோக்கப்பட்டனர்.


போட்டியும், பொறாமையும், கசப்பும் சிறையில் சாதாரணமாக இருந்தது. சிகரெட், பீடி, பாண் துண்டுகளுக்காகக்கூட சச்சரவுகள் நடந்தன. உணவுவகைளை பதுக்கி வைத்து சாப்பிடுவது நிலவியது. அரசியல் பண்பாடு வளர்ந்திராத நிலையில் தனிமனித விருப்புக்களும் சுயநலமும் முதன்மையிடத்தை வகித்தன. முதலாளிய தனிமனிதவாதமே பிரதான பண்பாக இருந்தது. எனினும்; ஜே.வி.பி இளைஞர்களின் தொடர்பு தமிழ் இளைஞர்களிடையே மாற்றங்களை ஏற்படுத்தியது. இடதுசாரிப்போக்கின் அறிமுகமும் ஆயுத ரீதியில் அரசாங்கத்தை அசைக்க முடியும் என்ற நம்பிக்கையும் அவர்களிடம் தென்படத் தொடங்கியது. சிறை ஊழியர்கள் சங்க தொழிற்சங்கமான LSSP இன் தலைவராக இருந்த K.V.D சில்வா போன்ற இடதுசாரிகள் தமிழ் அரசியல் கைதிகட்கும் ஜேவிபி அரசியல்வாதிகட்கும் இடையே அரசியல் பேசப்படுவதை ஊக்கவித்தனர். இரு பிரிவினரையும் பேச ஏற்பாடு செய்தனர். ஜேவிபி சிங்கள் மத்தியதர வர்க்கம், வேலையற்ற இளைஞர்கள், மாணவர்களின் அமைப்பாக இருந்த போதும் தமிழ் அரசியல்வாதிகளோடு ஒப்பிடுகையில் அரசியல் ரீதியில் பலமாக இருந்தது. காசிஆனந்தன், மாவை சேனாதிராசா, வண்ணை ஆனந்தன், சத்தியசீலன் போன்றவர்கள் வெறும் தமிழ் தீவிரவாதத்தால் கண்ணவிந்துபோன அரசியல் வெறுமையாளர்களாகவேயிருந்தனர். ஜே.வி.பியிற்கு முதலாளியம், இந்தியவிரிவாதிக்கம் என்ற சீர்திருத்தவாத மாவோயிசப்பரப்பிலாவது அரசியல் தெரிவு ஒன்று இருந்தது.


சிறையில் காசிஆனந்தன், சத்தியசீலன், வண்ணை ஆனந்தன் போன்றவர்கள் ஜே.வி.பி உடன் கூட இருந்த போதும் கடைசி மட்டும் தமிழ் தேசிய வாத சின்னத்தனங்களை தாண்டிச் சிந்திக்காதவர்களாகவே இருந்தனர். சத்தியசீலன் போன்ற நபர்கள் அமிர்தலிங்கம் போன்றவர்களை விட மோசமான தீவிரவாத தமிழ் தேசிய வாதத்ததுள் கிடந்து உழன்றனர். வண்ணை ஆனந்தன் மேடைகளில் ஜே.வி.பி பற்றி பேசியதுண்டு. S.T பண்டாரநாயக்க தனக்கு மாக்கியவல்லியின் பிரித்தாளும் தந்திரம் பற்றிய நூலை அறிமுகப்படுத்தியதாய் பெருமையடித்துக் கொண்டதற்கு அப்பால் எதுவும் நடைபெறவில்லை. சிவகுமாரன் பற்றியும் அவர் தற்கொலை செய்து கொண்டதை பற்றியும் சிறையில் இருந்த போது அறிந்து கொண்ட ஜே.வி.பி யின் தலைவரான ரோகண விஜயவீர நாம் "எழுபத்தையாயிரம் பேரைச் சேர்த்து அரசைப் புரட்ட முடியாமல் போய்விட்டது, நீங்கள நாலுபேர் சேர்ந்து அரசைப் புரட்ட முயற்சிக்கின்றீர்களா?" என்று தமிழ் இளைஞர்களைக் கேட்டதாய் சொல்லப்படுகின்றது. சிறையில் இருந்தவர்கள் கருத்தியல் ரீதியில் ஒன்றிணைக்கும் பலமோ தலைமைப் பண்போ தமிழ் அரசியல் கைதிகளிடம் இருக்கவில்லை. இளைஞர்களின் தலைவர்களாக தம்மை பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்ட காசிஆனந்தன் இன்று புலிப்பாசித்திற்கு துதிபாடும் நபராகவுள்ளார். மாவை சேனாதிராசா பாராளுமன்ற கதிரைக்காக தீவிரமாய் போரிடும் தமிழ் சந்தர்ப்பவாத அரசியலில் உலாவுகின்றார். ஜேர்மனியில் அரசியல் தஞ்சம் பெற்றிருந்து அண்மையில் மரணமடைந்த வண்ணை ஆனந்தன், ஜேர்மனியில் அரசியல் தஞ்சம் கோரிய எந்த அகதிகட்கும் உதவ மறுத்தார். தான் மட்டுமே உண்மையில் பாதிக்கப்பட்டவன் என்றும் மற்றவர்கட்காக சாட்சியம் சொல்லவோ, இலங்கையில் அறிந்ததாய் சொல்லவோ மாட்டேன் என்று மறுத்தார். மேடை தோறும் வண்ணை ஆனந்தனை "விடுதலை வீரன்" என்று அறிமுகம் செய்த மங்கையற்கரசி அமிர்தலிங்கத்தையும், அமிர்தலிங்கத்தையும் ஜேர்மனியில் அரசியலுக்கப்பால் வசைபாடித் திரிந்தார். தமிழ் தேசியத்துள் முளைவிட்டவர்களின் அரசியல் இவ்வாறாகத்தான் முடிவுற்றது. மக்கள் பரப்பிலிருந்து தொலைந்தே போனார்கள்.




சந்ததியார்




சவுக்குத்தோப்பு புதைகுழிப் புகழ் பூண்ட உமாமகேஸ்வரன் மட்டும் சந்ததியாரை வெறுக்கவில்லை. தமிழ்தேசியவாதிகளில் கூட்டணி முதல் சகல இயக்கங்களும் சந்ததியாரைத் தலையெடுக்கவிடாமல் செய்ய முடிந்த சகலதையும் செய்தன. அமிர்தலிங்கம், மாவை சேனாதிராசா வரிசை முதல் புஸ்பராசா ஈறாக சந்ததியார் மேல் வெறுப்பை உமிழ்ந்தமை தனிப்பட்ட கோபதாங்களாலல்ல. மாறாகத் தமது தீவிரமான தமிழ் வலதுசாரி அரசியல் கருத்தோட்டத்திலாகும். தமிழ் தேசிய விடுதலைக்கு வந்த இடதுசாரிகள் மற்றும் தமிழ் தேசிய விடுதலைப் போராட்ட நெருக்கடியூடாக பட்டுப்பழுத்து இடதுசாரித் திசைக்கு வந்தவர்கள் சகலரும் தமிழ் வலதுசாரிகளினால் கடுமையாய் எதிர்க்கப்பட்டனர், கொன்றொழிக்கப்பட்டனர். இந்த இடது சாரிப் போக்காளர்கள் பலவிதமான தத்துவார்த்த நிலைகளைக் கொண்டிருந்தபோதும், தீவிர இடதுசாரிப்போக்கு மற்றும் சீர்திருத்தவாதக் கன்னைகளை பிரதிநிதிப்படுத்தியபோதும் அவை வளர்ச்சிக்கு அருகே தான் இருந்தன. சந்ததியார், விசுவானந்ததேவன், சுந்தரம் போன்றவர்கள் தீவிரமான மாவோ வாதப்போக்குடையவர்களாக இருந்தபோதும், தமிழ் தேசியத்துள் இடதுசாரி உணர்வைப் பிரதிபலித்தனர். போராட்டத்தை அகலப்படுத்தவும், சிங்கள மக்கள் பற்றிய வர்க்க சிந்தனையையும் உள்வாங்கிக் கொண்டவர்களாக முன்னேற முயன்றனர். இப்போக்குகள் அமிர்தலிங்கம், உமாமகேஸ்வரன் முதல் பிரபாகரன் ஈறாக உள்ள தீவிரவாத தமிழ் தேசியவாதிகட்கு இட்டு இடைஞ்சலாக இருந்தன. சந்ததியார் கொலை ஏதோ உமா மகேஸ்வரனின் கட்டளைப்படி சங்கிலியால் (கந்தசாமி) செய்யப்பட்ட தனிப்பட்ட சம்பவமல்ல. இக்கொலையில் இந்திய உளவுத்துறை, அமிர்தலிங்கம் உட்பட பல இடதுசாரி எதிர்ப்புச் சக்திகள் பின்புலமாய் செயற்பட்டனர். சந்ததியார் கொல்லப்பட்ட பின்பு ஒரு சந்தர்ப்பத்தில் உமாமகேஸ்வரன், சந்ததியார் மாவோயிசப்போக்குடையவராக இருந்தமையால் இந்திய அரசின் நிர்ப்பந்தத்தாலே கொல்ல வேண்டி வந்தயாய் நியாயம் சொல்ல முற்பட்டதையும் நாம் ஞாபகத்தில் கொள்ள முடியும்.


PLOT இலிருந்த வெளிப்பட்ட மக்கள் போராட்டம் என்ற கருத்து சந்ததியாருடையது தான். EROS EPRLF போன்ற இயக்கங்கள் உத்தேச ஈழத்தில் மலையக மக்களையும் இணைப்பதன் மூலம் மலையகத்தமிழ் மக்களின் பிரச்சனைக்கு இனரீதியாக முடிவைத்தர முயன்றனர். ஆனால் மலையக மக்கள் தொழிற்சங்க ரீதியில் தொழிலாளர் வர்க்கத்துள் அணிவகுப்புச் செய்யப்பட்ட மக்களாக இருந்தனர். தமிழ், தமிழினம் சார்ந்த உணர்வுகள் அவர்களிடம் செயற்படவில்லை என்பதுடன் சொத்து எதுவுமற்ற உழைப்பாளர்களாக அவர்கள் இருந்தனர். இங்கு சந்ததியார் மலையக மக்களின் விடிவு சிங்கள மக்களுடன் இணைந்த ஒரு சோசலிசப்புரட்சியுடன் தொடர்புடையது என்று சரியாகவே கருதினார். EROS போன்ற இயக்கங்களின் கருத்தியல் தோல்வியடைந்ததை இன்று நடப்புக்கள் காட்டி விட்டன. தமிழ் விடுதலை இயக்கங்கள் திடீரென பெரும் தொகை ஆட்களை உள்விழுங்கி இந்திய இராணுவப் பயிற்சிகளில் ஊதிப்பெருத்த போது இடதுசாரிகளின் கருத்துக்களைக் கொண்டிருந்தவர்களால் அவற்றை எதிர்கொள்ள முடியவில்லை. தீவிர இராணுவவாதப்போக்குள் முன்பு, தேசியவாதம் முன்பு இவர்கள் எதிர் நிற்க முடியாது போயிற்று. தேசிய விடுதலைப்போரில் வர்க்கக்குணம் இடதுசாரிகளை ஆயுத ரீதியில் வேட்டையாடுவதில், கொன்றொழிப்பதில் தன்னை வெளிப்படுத்தியது. இடதுசாரிகள் இயக்கங்களில் இருந்து வந்த பலர் தம்மையறியாமலே தீவிர தமிழ் தேசிய வலதுசாரிகளின் குரலில் அரசியல் பேசத் தொடங்கினர். இந்தச் சூழலில் அரசியலுக்காக போரிட்ட சொற்பமான மனிதர்களில் சந்ததியாரும் ஒருவராவர். இந்தியஅரசு, கூட்டணி, இலங்கையரசு தமிழ்தேசியம் சம்பந்தமாக அவர் சரியான மதிப்பீடுகளை கொண்டிருந்தார் எனினும் ஏகாதிபத்தியம் அது சார்ந்த சர்வதேச மூலதன இயக்கம் இவைகளோடு இந்தியா, இலங்கை போன்ற நாடுகட்குள்ள உறவு பற்றி சிந்தித்து இருந்தார் என்பதற்கு தெளிவான ஆதாரங்கள் இல்லை.


சிறையில் இருந்த போது JVP யினருடன் தொடர்பு கொண்டிருந்த சொற்பமான தமிழ் இளைஞர்களில் சந்தியாரும் ஒருவராவர். தமிழ் தேசியவாதியாக, அமிர்தலிங்கம் அனுதாபியாக சிறைக்கு சென்ற அவர் இடதுசாரிப்போக்கில் சிந்திப்பவராக சிறையை விட்டு வெளியே வந்தார். சிறையில் JVP யின் சுனந்ததேசப்பிரிய உட்பட பலருடன் அவருக்கு அரசியல் தொடர்பு இருந்தது. PLOT இன் பெரும்பாலான சிங்கள இடதுசாரிகளுடனான தொடர்புகளுக்கு சந்ததியார் காரணமாக இருந்தவர் என்பதில் சந்தேகமில்லை. வடக்கில் பாலா தம்புவின் தொழிற்சங்கமான CMU பண்டத்தரிப்பு ப.நோ.கூ சங்கத்ததில் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடாத்தியபோது அந்தப் போராட்த்தில் சந்ததியார் ஈடுபாடு காட்டிய சம்பவத்தை அன்று CMU வில் அங்கம் வகித்த பரராசசிங்கம் குறிப்பிடுகின்றார். 1981இல் சண்முகலிங்கம் என்ற இடதுசாரி நண்பருடன் கொழும்பில் சண்முகதாசனை சந்தித்து சந்ததியார் உரையாட முயற்சித்ததாயும் "JR ஒர் இனக்கலவரத்தை தொடங்க முயற்சிக்கிறார் நீங்கள் சகல இடதுசாரிகளையும் அதற்கு எதிராக அணிதிரட்ட வேண்டும், உங்களின் கீழ் நாம் பணிபுரியத்தயார்" என்று சந்ததியார் சொன்ன போது சண்முகதாசன் " நாற்பது வருட கால மார்க்சிய அறிவும் தலைமையும் கொண்ட எனக்கு புத்தி சொல்ல நீ யார்? வெளியால போ" என்றார். சண்முகதாசன் நேர்மையான மனிதராக இருந்த போதும் தீவிரமான ஸ்டாலி
னிசவாதி, குருட்டுத்தனமான மாவோவாதி, விமர்சனங்கட்கு பழக்கமற்ற ஒருதலையான பார்வை கொண்டவர். மாவோ, ஸ்டாலின் போன்றவர்களை தவறு விடாதவர்கள், அவர்கள் மேல் விமர்சனம் என்பது அவரது ஸ்டாலினியச் சிந்தனை ஒழுங்கு கண்டறியாத ஒன்றாகும்.


PLOT இயக்கத்துள் சந்ததியாருக்கு பலத்த முரண்பாடுகள் ஏற்பட்டு இருந்த சமயம் உமாமகேஸ்வரனுக்கும் அமிர்தலிங்கத்திற்கும் நெருக்கமான உறவு ஏற்பட்டு இருந்தது. சந்ததியாரை இயக்கத்திற்குள் இருந்து வெளியேற்றினால்தான் மற்றைய இயக்கங்களோடு நாங்கள் சேர முடியும் என்று அமிர்தலிங்கம் உமா மகேஸ்வரனுக்கு புத்தி சொன்னார். NLFT இன் விசுவானந்ததேவனுடன் சந்ததியாருக்கு தொடர்பிருந்தது. விசுவானந்ததேவனும் சண்முகதாசன் அணியிலிருந்து வந்தவராவர். இவர்கள் இருவரும் இணைந்து வங்காள தேசத்தை சேர்ந்த அபுதாகிர் (Abu Taher) என்ற சோசலிஸ்ட் நீதிமன்றத்தில் நிகழ்த்திய உரையை "வங்கம் தந்த பாடம்" என்ற நூல் வடிவில் வெளியிட்டனர். இந்திய உளவு நிறுவனமான "கியூ" பிரிவு சந்திரகாசனின் கூட்டாளிகளான DGP மோகனதாஸ் DIG இராஜசேகரநாயர் ஆகியவர்களின் தமிழ்போராளிகளுடான தொடர்பு பற்றியும் இதில் அவர்கள் எழுதியிருந்தனர். பிற்காலத்தில் மோகனதாஸ் போன்றவர்களின் CIA தொடர்பு வெளிவந்தது. இலங்கையரசுடன் உள்ள இரகசியத் தொடர்பும் பத்திரிகைச் செய்தியானது. இந்திய இராணுவப்பயிற்சி தமிழ்தேசிய இயக்கங்களை எப்படி நாசமறுத்தன என்ற படிப்பினைக்கு இன்று நாம் விட்ப்பட்டுள்ளோம். சகல தமிழ் இயக்கங்களும் அமிர்தலிங்கம், சந்திரகாசன் போன்றவர்களும் இந்தியாவின் பின்னால் அன்று அலைந்தனர் பயிற்சிக்கும் ஆயுதத்திற்குமாய் ஒருவரோடு ஒருவர் அடிபபட்டனர். இரத்தினசபாபதி, சந்ததியார் விசுவானந்ததேவன் போன்ற ஒரு சிலரே இந்தியஆயுதம், இராணுவப்பயிற்சியை எதிர்த்தவர்கள். அது சார்ந்த அரசியல் எதிர்வு கூறல் அவர்களிடம் இருந்தது.


சந்ததியார் கொல்லப்பட்டு சில மாதங்களுக்குள் விசுவானந்ததேவனும் புலிகளால் கொலை செய்யப்பட்டார். அவர் பண்ணைக்கடல் ஊடாக நெடுந்தீவு சென்று அங்கிருந்து இந்தியா செல்ல முயன்ற போது பண்ணை நெடுந்தீவு கடலில் வைத்து புலிகளால் கொலை செய்யப்பட்டார். இந்திய உளவுத்துறை வட்டாரங்களில் சந்ததியாரும் விசுவானந்ததேவனும் தீவிர கொம்யூனிஸ்டுக்களாக கணிக்கப்பட்டு இருந்தனர். இடதுபோக்குடையவர்களை அழிப்பதில் கூட்டணி, புலி, PLOT இந்திய அரசு சகல சக்திகளும் ஒன்றாகவே சிந்தித்தன. ஒரே மாதிரியாகவே செயற்பட்டன. PLOT இல் இருந்து விலகிய சந்ததியார் தீப்பொறி குழுவை நிறுவியதுடன் விசுவானந்ததேவனுடன் இணைந்து செயற்பட்டதுடன் ஒரு இடது அணியை உருவாக்க முனைந்தார். விரைவாக இவர்கள் இருவரும் அழிக்கப்பட்டமையின் காரணம் இதுதான். அமிர்தலிங்கத்தின் பங்கு சந்ததியார், சுந்தரம் போன்றவர்களின் கொலையில் குறிப்பிடத்தக்கதாகும். புலிகள் சுந்தரத்தை கொலை செய்த காலத்தில் அமிர்தலிங்கம் தமது வெளிநாட்டுக்கட்சி நபர்கட்கும், ஆதரவாளர்கட்கும் பிரபாகரனை ஆதரிக்கும்படி கடிதம் எழுதியதுடன் தனது வெளிநாட்டுப் பயணத்திலும் புலிகளை ஆதரிக்கும்படி வேண்டினார். N M பெரேரா, கொல்வினிடம் தான் பாடம் படித்த கதை அமிர்தலிங்கம் மேடைகளில் கூறிய போதும் அது அவரது இடதுசாரி எதிர்ப்புக்கு தடையாக இருந்ததில்லை. பொன்.கந்தையா, கார்திகேயன் போன்றவர்கட்கு எதிராக அமிர்தலிங்கம் கக்கிய தமிழ் வலதுசாரி துவேசம் கொஞ்சநஞ்சமல்ல. 1980களின் தொடக்கததில் பெர்லின் நகரில் நடந்த கலந்துரையாடலில் வைகுந்தவாசன் தான் அமிர்தலிங்கத்தை "நீங்கள் கூட்டணி இவ்வளவு பெரிய கட்சி, கட்சிக்கு சொந்தமாக ஒரு பத்திரிகை இல்லை நாம் பல்ககைக்கழகத்தில் படிக்கும் காலத்திலேயே 'பீப்பிள் வொயிஸ்' என்ற பத்திரிகை நடத்தினோம்" என்று கேட்ட போது அமிர்தலிங்கம் உடனே " ஓம் ஓம் அது எனக்கு தெரியும், ஒரு கம்யூனிஸ்ட் பத்திரிகை" என்று நக்கல்விட்டதாய் சொன்னார். அமிர்தலிங்கம் இடதுசாரி எதிர்ப்பால் மட்டும் நிரம்பியவரல்ல. சந்ததியார், சுந்தரம் போன்றவர்களின் இரத்தக்கறை படிந்தவர்தான். அமிர்தலிங்கத்தின் மூர்க்கத்தனமும், தமிழ் வலதுசாரிப் பிற்போக்கு பிடிவாதமும், இலட்சியப்பற்றாய் விட்டுக்கொடாதவராய் அவரது ஆதரவாளர்களால் வர்ணிக்கப்படுவதுண்டு. ஒரு முறை பாராளுமன்ற விவாத்தில் சிறில் மத்தியூ அமிர்தலிங்கத்தை பார்த்து பின்வருமாறு சொன்னார் " புலிமேல் சவாரி செய்பவர்கள் ஒரு நாள் புலியின் வயிற்றுக்குள்ளேதான் போவார்கள் " அமிர்தலிங்கம் புலியின் வயிற்றுக்குள்ளே போன போது அவரை " தானைத்தலைவர்" , "தளபதி" என்று புகழ்ந்தவர்கள் எவரும் அவருக்காக உயிர்தியாகம் செய்யவோ, புலிகளைப் பழிதீர்க்கவோ முயலவில்லை. புஸ்பராசா உட்பட, அவரது அனுதாபிகள் வெறும் இரங்கல் உரையுடன் அமைதியடைந்தனர். அமிர்தலிங்கத்தைக் கொன்ற பிரபாகரனை மென்மையாக சத்தமின்றிக் கண்டிப்பதோடு நின்றுவிடுகிறார்கள்.. ஆனால் அமிர்தலிங்கத்தின் கூட்டுச்சதியால் கொல்லப்பட்ட சந்ததியார் போன்றவர்களை மட்டும் இன்றுவரை திட்டிக் கொண்டிருக்கிறார்கள். அமிர்தலிங்கம் அடிக்கடி சொல்லும் " வளர்த்த கடா மார்பில் பாய்கிறது" என்ற மொழிபடி அவர் ஊட்டி வளர்த்த தமிழ் குறுந்தேசியவாதப் பிரதிநிதிகளான புலிகளே அவரைக் கொன்றார்கள்.


அமிர்தலிங்கத்தை விட சந்ததியார் நேர்மையான மனிதர், வறுமையான குடும்பத்தில் இருந்து வந்தவர். இயக்க வாழ்விலும் சரி தனிப்பட்ட வாழ்விலும் கடுமையான உழைப்பாளி. மாணவப்பருவத்தில் தந்தையாருடன் பென்ரருடன் நின்று தோட்டத்தில் வேலை செய்வார். பிற்காலத்தில் அவர் எளிமை, சிக்கனம், கணக்கு வைத்தல், இலட்சிப்பற்று இவைகட்கு அறியப்பட்டவராக இருந்தார். ஒரு முறை சந்ததியாரை தேடிவந்த பஸ்தியாம்பிள்ளை அவரது வீட்டுக்கொடியில் காயந்து கொண்டிருந்த அவரது சஸ்பென்;ரரை தடியால் குத்தி எடுத்துச் சென்றார். பின்பு அவரை கைது செய்து விசாரித்த போது (துரையாப்பா கொலைவழக்கு) " ஒரு ஒழுங்கான பென்டருக்கு வழியில்லை ஆனால் துவக்கு வாங்க நீ சங்கிலி தூக்கி கொடுக்கிறாயோ" என்று கேட்டு அடித்தான். சந்ததியாரின் அரசியல் நண்பரொருவர் மற்றொரு சம்பவத்தை சொன்னார். ஓருமுறை சந்ததியாரின் ஊரான சுழிபுரத்தில் அங்குள்ள பெரிய சண்டியன் ஒருவர் சனத்தோடு கொழுவுப்பட்டுக் கொண்டு நின்றதைக் கண்ட சந்ததியார் அந்தச் சண்டியனிடம் சொன்னாராம் " நீ சண்டியன் என்று பெயரெடுத்தனி ஒரு பேயன்ர கையாலை அடிவாங்கிச் செத்தவன் என்று பெயரெடுக்கப் போறாய்" .பேசாமற் போ.


சிறையில் அரசியல் பேசுபவர்களில் முக்கியமானவராக சந்ததியார் இருந்தார். இடதுசாரி அரசியல் வழியில் சிந்திக்க இங்குதான் இவர் பயிற்றப்பட்டார். சிறையில் உள்ள இளைஞர்கட்கு வெளியில் இருந்து உறவுகள், தாய், தந்தையர்கள், நண்பர்கள் உணவு அனுப்பும்போது அதை எல்லோருக்கும் பங்கிட்டுக் கொடுக்கும் பொறுப்பை அவர் ஏற்பார். சோற்றுப்பார்சல்கள் வரும்போது அதனை ஒன்றாய் கலந்து குழைத்துக் கொடுப்பார். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் குழைத்துக் கொடுத்தால் " இப்ப எனக்கு பசியில்லை" என்று சாப்பிடாமல் தவிர்க்கும் தமிழீழ இளைஞர்களும் சிறையில் இருந்தனர். ஒருமுறை சந்ததியாரின் சுழிபுரத்தை சேர்ந்த ஒடுக்கப்பட்ட சாதிப்பிரிவுக்குரிய மதுரநாயகம் என்பவர் சோறு குழைத்துக் கொடுத்த போது " பசியில்லை என்று" சாப்பிடாமல் தவிர்த்தவர்கள் உண்டு. இதையடுத்து சந்ததியார் எப்போதும் சாப்பாடு வெளியே இருந்து வந்தாலும் அதைக் குழைத்துக் கொடுக்கும் பொறுப்பை மதுரநாயகத்திடமே கொடுத்தார். சிறைக்குள் தமக்கு அனுப்பப்படும் முட்டைமா, அரசிமா, பலகாரங்கள் என்பவற்றை பல இளைஞர்கள ஒழித்து வைப்பார்கள் அல்லது கொஞ்சத்தை மற்றவர்கட்கு காட்டிவிட்டு மிகுதியை பதுக்கி விடுவார்கள். இரவுசாமங்களில் அல்லது ஒழித்து தனியே சாப்பிடுவார்கள். இப்படியான சூழ்நிலையில் தான் சந்ததியாரின் அரசியல் வளர்ந்தது. கூட்டு வாழ்விற்கும், தோழமைக்கும் அவர் பயிற்றப்பட்டார். எமக்குத் தெரியாத அரசியல் சந்ததியாருக்கு தெரியும் என்று அவரோடு சிறையிருந்த ஆனந்தகுமார் குறிப்பிடுகிறார்.


மற்றெல்லோரையும் விட போராட்டத்தில் தானே அதிகம் பாரம் சுமந்து துன்பப்பட்டவராய் பாவனை காட்டும் புஸ்பராசா, 1981 இல் கீரிமலைக்கு தமது திணைக்களத்திற்கு ஆதரவு தேடி வந்த சந்ததியாரை தான் வெளியேற்றியதை பெரும் விலாசமாக எழுதியுள்ளார். அமிர்தலிங்கத்தின் சீடரால், தமிழரசுத்தந்தையின் மைந்தரால் இதைவிட வேறு எப்படி நடந்து கொள்ள முடியும்? இங்கு சந்ததியாரை பகைவராகவே காட்டுகின்றார். அவரைப்பற்றி எதிரியைக் குறித்து எழுவது போலவே எழுதுகின்றார். புஸ்பராசாவைப் பொறுத்து கூட்டணிக்கு எதிராக சிந்திப்பது அமிர்தலிங்கத்திற்கு மாறாக கருத்துக் கொண்டிருப்பது மாபெரும் குற்றமாகும். தனக்கும் சந்ததியாருக்குமான முரண்பாடு அரசியல் சார்ந்தது என்பதை கடைசி வரை அவர் சொல்லவில்லை. சந்ததியாரை அதிகம் பேசுபவராக கொச்சையாகக் காட்டுவதன் மூலம் அரசியல் உள்ளடக்கத்தை, கருத்துக்களை தந்திரமாய்த் தவிர்த்து விடுகிறார். சந்ததியார் பேச்சாற்றல், வாதிடும்திறன் கொண்டவர். அது புஸ்பராசாவின் கூட்டணி மேடைப் பேச்சுக்களைப் போன்ற தேசியவாதத்தின் பழந்திரட்டல்களல்ல. ஐயம்கொள்வது, ஆராய்வது, தன் கருத்திற்காக கலகம் புரிவது, இடதுசாரிகளின் பண்பாகும். ஆனால் புஸ்பராசா போன்றவர்கள் அமிர்தலிங்கங்ளில், பிரபாகரன்களில் கூட தம்மை கரைத்துக் கொள்ளக் கூடியளவிற்கு தனித்துவமான சிந்தனைவளமோ, சுய இயல்போ இல்லாதவர்கள.


சந்ததியார் கொலை செய்யப்படுவற்கு சில நாட்களுக்கு முன்பு தன் அரசியல் நண்பரொருவருடன் விவாதித்தபோது, சந்ததியார் தனது உயிர் பாதுகாப்புக் குறித்த கவலையீனமாக இருப்பதாக அந்த நண்பர் எச்சரித்தார். அப்போது சந்ததியார் "நான் உயிருடன் இருந்தாலும் PLOT அழியும், என்னை அவர்கள் கொன்றாலும் PLOT அழியும்" என்று அந்த நண்பருக்கு பதில் சொன்னார். காந்தியம் அமைப்பினை ஆரம்பிப்பதற்கு முன்பாக KC நித்தியானந்தா போன்ற TRRO வைத் தொடக்கிய இடதுசாரித் தொழிற்சங்கவாதிகளுடனும் சந்ததியாருக்கு தொடர்பு இருந்தது. பின்பு காந்தீயம் ஆரம்பித்த போது டேவிட், டொக்டர் ராஜசுந்தரம், டொக்டர் நந்தினி போன்றவர்களுடன் இணைந்து காந்தீயத்தில் அவர் உழைத்தார். கூட்டுப் பண்ணைகளில் வேலை செய்யத் தொங்கினார். த.இ.பே சேர்ந்த இளைஞர்களையும், பெண்களையும் இவர் அகதிகள் மத்தியிலான வேலைகளில் ஈடுபடுத்தியதுடன் தானும் இணைந்து வேலை செய்தவர். தமிழ் மகளிர் பேரவையைச் சேர்ந்த கனகராணி, கருணாதேவி போன்றவர்கள் இவற்றில் நீண்ட காலமாக பணி புரிந்தனர். பாலமோட்டை, நெடுங்கேணிக்கு அண்மையில் உள்ள நாவலர்பண்ணை கென்பாம், மணியர்குளம், கல்லாறு, கணேசபுரம, கூழாங்குளம் அகிய இடங்களில் காந்தியத்தின் புனர்வாழ்வுத்திட்டங்கள் இயங்கின.


சந்தியார் மலையகத்தமிழ் அகதிகளுடன் சேர்ந்து காடுகளை வெட்டினார். அகதிகளின் குழந்தைகட்கு பாடம் நடத்தினார். பல மைல் தூரம் பொதிகளைச் சுமந்தபடி நடந்தார். எளிமையும், மனதாபிமானமும் இரக்கமும் கட்டுப்பாடும் கொண்டவராக இருந்தார். புஸ்பராசா போன்றவர்கள் இத்தகைய வாழ்க்கையை ஒருபோதும் அனுபவித்திராதவர்கள. அமிர்தலிங்கம் காந்தியத்தில் இருந்து சந்ததியாரை வெளியேற்ற வேண்டும் என்று அந்த அமைப்புக்கு நெருக்கடிகள் கொடுத்தார். காந்தியம் அமைப்புக்கு வந்த உதவிகளை துசு இன் உதவியுடன் அமிர்தலிங்கம் தடுத்து தாமதிக்க வைத்த சம்பவங்களும் நடைபெற்றன. காந்தியத்திற்கு வந்த 'திரிபோசா' மாவைக்கூட அமிர்தலிங்கம் தடுத்தார் என்று சொல்லப்படுகின்றது. யாழ்குடாநாட்டிற்குள் ஆனையிறவுக்கு அப்பால் சுற்றிச் சுழன்ற புஸ்பராசாவிற்கு இவைகளோடு ஒட்டுறவில்லை. அவர் ஒட்டுமொத்தமாய் 'யாழ்ப்பாணியத்தின் புதல்வர்'




இறைகுமாரன் - உமைகுமாரன் கொலை



இறைகுமாரன் - உமைகுமாரன் கொலைக்கு சந்ததியாரே காரணம் குற்றச்சாட்டை புஸ்பராசா எழுதியுள்ளார். அதுசார்ந்த உண்மைகள் ஆதாரங்கள் குறித்தான கவலை எதுவும் அவரிடம் இல்லை. சந்ததியார் மீதான கூட்டணிக்காலத்துக் கோபங்கள், தமிழர் இளைஞர் பேரவை காலத்தைய பகைமைகளை புஸ்பராசா தீர்த்துக் கொள்கிறார். இறைகுமாரன்- உமைகுமாரன் கொலைக்கு காரணம் சுந்தரம் என அழைக்கப்படும் சிவசண்முகமூர்த்தியின் கொலைபற்றிக் கவலையீனமாக புஸ்பராசா எழுதாமல் விடவில்லை. அதைக் குறிப்பிட்டால் இறைகுமாரன் - உமைகுமாரன் கொலையானது சில அடிப்படை நியாயங்களை பெற்றுவிடும் என்று புஸ்பராசா அஞ்சியிருக்கிறார். புஸ்பராசாவின் எழுத்தை வாசிப்பவர்கட்கு சுந்தரத்தின் ஞாபகமும் கூடவே வரும். என்று புஸ்பராசாவிற்கு தென்படவில்லையா? சுந்தரம் கொலையில் அமிர்தலிங்கத்தின் பெயரும் அடிபட்டது அல்லது சம்பந்தப்பட்டதை புஸ்பராசா அரங்கம் ஏற விட விரும்பிவில்லை. இங்கு நாம் புஸ்பராசா தணிக்கைக்குட்படுத்திய சுந்தரத்திலிருந்தே இறைகுமாரன் - உமைகுமாரன் கொலையின் நபர்களைத் தேட வேண்டும்.


சுந்தரம் மிகச்சிறந்த இராணுவத்திறன் கொண்டவர் என்பது மட்டுமல்ல முதன் முதலில் தமிழ் தேசிய விடுதலைக்கு இடதுசாரிப் பாரம்பரியத்திலிருந்து வந்தவர்களில் ஒருவருமாகும். சுந்தரம் இந்தியாவில் பயின்ற காலத்தியே இந்திய நக்சலைட்டுக்குழுக்களுடன் தொடர்பு கொண்டவராக இருந்தார். சோசலிச இலட்சியத்தை நோக்கி வளரும் திசையில் இருந்தார். இவர் அமிர்தலிங்கத்தின் தொகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் சந்ததியாரின் நண்பராகவும் இருந்தார். சுந்தரம் த.இ.பே தொடர்புள்ளவராக இல்லாத போதும் காந்தியத்தின் அகதிகள் குடியேற்றத்துடன் தொடர்புள்ளவராகவும் சந்ததியாரின் அரசியல் கருத்துக்களை பங்கிட்டுக் கொண்டவராகவும் இருந்தபடியால், இவரும் சந்ததியாரைப்போலவே அமிர்தலிங்கத்தால் வெறுக்கபட்டவராகவும் இருந்தார். இருவரையும் கொம்யூனிசத்தை பரப்பும் ஆபத்தான நபர்களாக அமிர்தலிங்கத்தால் எங்கும் அபாய அறிவிப்புச் செய்யப்பட்டு இருந்தனர். இச்சமயத்திலேயே புலிகள் அமைப்புக்குள் குழுக்கள் தோன்றி சுந்தரம் போன்றவர்கள் புதிய இயக்கமொன்றினை அமைக்க முயன்று வந்தனர். அப்போது அண்ணன் அமிர்தலிங்கம், தம்பி பிரபாகரனும் அன்னியோன்யமாக இருந்த காலம்@ மங்கயற்கரசி அமிர்தலிங்கம் பிரபாகரனுக்கும் முட்டை பொரித்ததுக் கொடுத்து உபசரித்த காலம். சுந்தரம் கொல்லப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக தளபதி அமிர்தலிங்கம் அவர்களினால் கூட்டப்பட்ட கூட்டமொன்றில் மாவை சேனாதிராசா, இறைகுமாரன் ஆகியோருடன் ஒரு செய்திப்படி புஸ்பராசாவும் கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தில் "சுந்தரத்தைத் தம்பி பார்த்து கொள்வான் நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம்" என்று அமிர்தலிங்கம் கூறினார். இறைகுமாரன் பல வருடங்கள் த.இ.பே இலிருந்த காலத்தில், சந்தியாருடன் இணைந்து அமிர்தலிங்கத்தை கடுமையாய் விமர்சித்தவர். பின்பு அமிருடன் இணைந்து உத்தியோகமும் பெற்றுக் கொண்டதுடன் பிரபாகரனின் தீவிர ஆதரவாளராகவும் மாறினார்.


சுந்தரம் 'புதிய பாதை' என்ற பத்திரிகையை நடாத்தி வந்தார். வவுனியா பிரதேசத்தில் சுந்தரம் தலைமறைவு இயக்கத்திற்கு காலூன்ற முயன்று வந்தார். கூட்டணி வவுனியா நகர மண்டபத்தில் தனது பொதுசபைக் கூட்டத்தை கூடிய போது சுந்தரமும் ஏனைய இளைஞர்களும் அதன் முன்பாக கடுமையான எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் ஒருபகுதி இளைஞர்கள் உண்ணாவிரதமும் அதன் முன்பு இருந்தனர். சுந்தரம் அரசியல் ரீதியில் முன்னேறி வந்ததுடன் இலங்கை அரசபடைகட்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளையும் திறம்பட நடத்தியிருந்தார் இச்சமயத்திலேயே சுந்தரம் கொல்லப்பட்டார். சுந்தரம் அணியில் இருந்து கொண்டே வி;.பொன்னம்பலத்தின் மகனான மாவலி சுந்தரம் பற்றி புலிகளின் ஆதரவு நபரான இறைகுமாரனுக்கு தகவல்களை வழங்கி வந்துள்ளார். இன்னோர் இயக்கத்தில் தனது உளவுகளை அனுப்பி உளவறியும் தொழிலை புலிகள் அன்றே தொடங்கி விட்டனர். சுந்தரம் கொல்லப்பட்ட தினம் காங்கேசன்துறையில் இருந்து சுந்தரத்தைத் தொடர்ந்து வந்த உமைகுமாரனின் நெருங்கிய கூட்டாளியான புராந்தகன் கொக்குவில் புகையிரநிலையத்தில் இறங்கிய போது உமைகுமாரன் தனது மோட்டார் சைக்கிளில் அவரை ஏற்றிச் சென்றுள்ளார். பின்பு அதே உமைகுமாரனின் மோட்டார் சைக்கிளில் வந்த சாள்ஸ் அன்ரனி, சித்திரா அச்சகத்தடியில் வைத்துச் சுந்தரத்தை சுட்டான் என்றே கூறப்படுகின்றது. இறைகுமாரன், உமைகுமாரன் போன்றோர் சுந்தரம் கொலையினை எப்போதுமே நியாயப்படுத்தி வந்தார்கள். இருவரும் அமிர்தலிங்கம்; பிரபாகரன் இருவருக்கும் மிகவும் நெருக்கமானவர்களாக அப்போது இருந்தார்கள். சந்ததியாரும் இந்தியாவில் ஒரு முறை பிரபாகரனால் கடத்தப்பட்டு மொட்டையடிக்கப்பட்டு கொல்லப்படும் வேளையில் தப்பினார். அமிர்தலிங்கம் பிரபாகரன் கூட்டுச் சதியால் தான் சுந்தரத்தின் கொலை நிகழ்ந்தது.


1982 மே மாதத்தில் இறைகுமாரன் உமைகுமாரன் இருவரும் அளவெட்டியில் கொலை செய்யப்பட்டார்கள். PLOT ஐச் சேர்ந்த பெரிய மெண்டிஸ் என அழைக்கப்படும் பாலமோட்டை சிவம் தலைமையில் சென்ற பாபுஜி, கந்தசாமி (சங்கிலி), மூர்த்தி, மன்னா (அற்புதம்), மீரான் வாத்தி (சத்தியதாசன்), செந்தில் ஆகியோரைக் கொண்ட குழுவே இக்கொலையைச் செய்தது. இறைகுமாரனையோ உமைகுமாரனையோ கொல்லும் நோக்கம் அவர்களுக்கு இருக்கவில்லை என்றும், ஆட்களை விசாரித்து சுந்தரம் கொலை தொடர்பாகத் தகவல் பெறுவதே நோக்கமாக இருந்தது எனவும் உமைகுமாரன் எதிர்ப்புக் காட்டி திருப்பி தாக்கியதாலேயே கொல்ல வேண்டி வந்ததாயும,; கொன்றவர்கள் பிற்காலத்தில் விளக்கம் சொல்லியுள்ளார்கள். இது பொதுவாக ஏற்கக்கூடியவாதமல்ல ஏனெனில் சுந்தரத்தின் தீவிர அபிமானியான பெரிய மெண்டிஸ் சுந்தரத்தின் உடல் எரிக்கப்பட்ட சாம்பலை எடுத்து வைத்திருந்தாகவும், மற்றொரு சுந்தரத்தின் நெருக்கமானவரான செந்தில் மிஞ்சிய எலும்பு ஒன்றை தனது கழுத்தில் கட்டியிருந்ததாயும், சுந்தரத்தின் கொலைக்கு காரணமானவர்களைப் பழிவாங்காமல் விடுவதில்லை என்று அவர்கள் சபதம் ப+ண்டிருந்ததாகவும் தெரிகிறது. பின்பு இவர்களே இறைகுமாரன் உமைகுமாரனை அளவெட்டி "பினாக்கைவெளி" யில் சுட்டுக் கொன்றனர்.


இக்கொலைகளில் சந்தியாருக்கு உண்மையில் எதுவித தொடர்பும் இருக்கவில்லை. அவருக்கு தெரியாமலே இது நடைபெற்றது. இதற்கு பல தொகை ஆதாரங்கள் உண்டு பழைய இடதுசாரியும், சிறிது காலம் PLOT அமைப்பிலிருந்தவரான சண்முகலிங்கம் இக்கொலைகளோடு சந்ததியாருக்கு எந்தவித சம்பந்தமும் இருக்கவில்லை, இது நடந்த பின்பே இவருக்கு தெரியும், இறைகுமாரனின் கொலைக்காக அவர் மிகவும் வருத்தமடைந்;தார் என்று இன்று நினைவு கூர்கின்றார். PLOT இல் உட்கொலைகள் அவர் நடைபெற்ற போது தப்பி வந்தவரான ரஜீன்குமார் இது பற்றிக் கூறுகையில், ஒரு முறை PLOT முகாம் ஒன்றில் இந்தியாவில் சந்ததியாருடன் நடந்த கலந்துரையாடலில் இறைகுமாரன், உமைகுமாரன் கொலை பற்றி சந்ததியாரிடம் கேள்வி கேட்கப்பட்டபோது " இது இயக்கத்திற்கு தெரியாமலே நடந்தது. இக்கொலைகட்கு காரணமானவர்கள் இயக்கப் பதவிகள் பறிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர்" என்று கூறியதுடன் கூட்டத்தில் இருந்த பெரியமென்டிஸைச் சுட்டிக்காட்டி " இவர்தான் இதில் சம்பந்தப்பட்டவர், அவரிடம் நீங்கள் இதுபற்றிக் கேட்கலாம்" என்று சொன்னதையும் ஞாபகப்படுத்துகின்றார். இறைகுமாரன், உமைகுமாரன் கொலை பற்றிய பிரச்சனையை கூட்டத்தில் எழுப்பியமைக்காக ரஜீன்குமார் மீது ஆத்திரமடைந்த பெரிய மென்டிஸ் "உன்னை இலங்கைக்கு போகும்போது பார்த்துக் கொள்கிறேன்" என்று ரஜீன்குமாரை எச்சரித்துள்ளார். ' புதியதோர் உலகம்' நூலில் அளவெட்டி உமைகுமாரன் - இறைகுமாரன் பற்றிய செய்தியும் வருகிறது. அந்தக் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் " நாம் பெரியய்யாவின் ஆட்கள்......... இறை, உமைகுமாரனுக்கு நடந்தது தெரியும்தானே" என்று PLOT இன் அரசியல் துறையோடு சம்பந்தப்பட்டவர்களை பயமுறுத்தியமை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இறைகுமாரன் - உமைகுமாரன் கொலையில் பங்கேற்ற கந்தசாமி (சங்கிலி) சந்ததியார் கொலையிலும் பங்கெடுத்தவர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


ஆனால் அமிர்தலிங்கத்தின் நேசரும், தேசியதலைவரைப் பராட்ட பின்னிற் காதவரும், வலதுசாரி தமிழ் தேசியவாதியுமான புஸ்பராசா " சந்ததியார் ஆபத்தான பேர்வழி எல்லோரையும் குழப்பி விட்டு வேடிக்கை பார்ப்பவர், கொலை செய்ய உத்தரவிடுவதில் உமாமகேஸ்வரனுக்கு ஒன்றும் குறையாதவர்" என்று எழுதுகின்றார். சந்ததியார் இழைத்த தவறுகள் அரசியல் தவறுகளே தவிர, அவர் கொலைகளோடு சம்பந்தமுடையவர் என்று உமாமகேசுவரானால் கூட குற்றம் சாட்டப்பட்டதில்லை. " ஆட்களை குழப்பிக் கொண்டு திரிபவர்" என்று அமிர்தலிங்கம் சந்ததியாருக்கு முன்பு தந்த ஆசியுரை புஸ்பராசாவும் அதே வார்த்தைகளை வெளியிடுகின்றார். வலதுசாரிகள் அரசியல் ஆழங்களில் இறங்க முடியாதபோது, தம் சொந்த அரசியல் இருப்பு பற்றி சந்தேகங்களால் பீடிக்கப்படும்போது, இடதுசாரிகட்கு பதிலளிக்க முடியாதபோது இப்படித்தான் சத்தமிடுகிறார்கள். அரசியல் நியாயம் பேசுபவர்களை குழப்புபவர்களாக, கலகம் செய்பவர்களாக காண்பிக்கின்றனர். சந்ததியார் கொலை பற்றி புஸ்பராசா பேசாமல் விடுவது அதில் அமிர், உமா கூட்டணி செயற்பட்டதையிட்டு மௌனிப்பதும் இறைகுமாரன், உமைகுமாரன் கொலை பற்றி பெரும் இரைச்சலில் சந்ததியார் கொலையை மூழ்கடித்துவிட முயல்கிறார். இறைகுமாரனும் சந்ததியாரும் த.இ.பே இல் நீண்டகாலம் ஒன்றாகப் பணிபுரிந்தவர்கள். இறைகுமாரன் இடதுசாரி அரசியலை தொடமுயன்றவர். தொழிலாளர் பாதை போன்ற இடதுசாரிக்கு குழுக்களுடன் ஒரு காலத்தில் அரசியல் உறவு கொண்டிருந்தவர். ஆனால் சூழவுள்ள தமிழ் தேசியவாதப் போக்குள்ளே அவர் நின்று பிடிக்க முடியாமல் பிரபாகரன் போன்ற பாசிஸ்டுகளின் பின்பு இழுபட்டார். காந்தீயம் தமிழ் பகுதிகளில் 'பாரதி விழாவை' நிகழ்த்திய போது யாழ்ப்பாணம் பகுதியில் அதை ஒழுங்கு செய்யும் பொறுப்பை பல எதிர்ப்புகட்கு மத்தியில் சந்ததியார் இறைகுமாரனுக்கு வழங்கினார். இறைகுமாரனின் கடைசிக்கால அரசியல் ஈழவேந்தன், கோவை மகேசன் போன்ற தமிழ் தேசிய வாதத்தின் இறுதி நிலைக் கழிசடைகளோடு உறவு பூணும் வரை சென்றது.

தொடரும்...