Tuesday, July 18, 2006

தேசியம் - பெரியார் பேசுகிறார்.




தோழர்களே! கடவுள் மதம் ஜாதீயம் தேசாபிமானம் என்பவை எல்லாம் மக்களுக்கு இயற்கையாக, தானாக ஏற்பட்ட உணர்ச்சிகள் அல்ல. சகல துறைகளிலும் மேல்படியிலுள்ளவர்கள் தங்கள் நிலை நிரந்தரமாயிருக்க ஏற்ப்படுத்திக் கொண்டிருக்கும் கட்டுப்பாடான ஸ்தாபனங்களின் மூலம் பாமர மக்களுக்குள் புகுத்தப்பட்ட உணர்ச்சிகளேயாகும். இந்தப்படி புகுத்தப்பட வேண்டிய அவசியமும் காரணமும் என்னவென்று பார்த்தால், அவை முற்றும் பொருளாதார உள் எண்ணத்தையும், அந்நியர் உழைப்பாலேயே வாழவேண்டும் என்கின்ற உள் எண்ணத்தையும் கொண்ட பேராசையும், சோம்பேறி வாழ்க்கைப் பிரியமுமேயாகும்.

தேசியம் என்பதும் முற் கூறியவற்றைப் போன்று ஒரு போலி உணர்ச்சிதான். ஏனென்றால், தேசிய உணர்ச்சி என்பதானது இன்று உலகப் பொதுமக்கள் அதாவது உலகில் எங்கும் பெரும்பான்மையான மக்கள் பாமரராயும், தொழில் இன்றியும், தொழில் செய்தாலும் ஜீவனத்திற்க்கும் வாழ்விற்க்கும் போதிய வசதிகள் இன்றியும் கஷ்டப்படும் மக்கள் ஒன்று சேர்ந்து தங்களுடைய நிலைமைக்குப் பரிகாரம் தேடுவதைத் தடைப்படுத்தவும் ஆங்காங்குள்ள செல்வந்தர்களாலும் அதிகாரப்பிரியர்களாலும் சோம்பேறி வாழக்கைச் சுபாவிகளாலும் கற்பிக்கப்பட்ட சூழ்ச்சியாகும். தேசியம் என்பதும் மனிதனுக்கு ஒரு மயக்கமும் வெறியும் உண்டாக்கும் வார்த்தையாக ஆகிவிட்டது.

தேசம் என்றால் எது? உலகப்பரப்பு அய்ந்து கண்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு கண்டத்திற்கும் பல தேசங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தேசத்துக்கும் பல மாகாணங்கள் இருக்கின்றன ஒவ்வொரு மாகாணத்திற்கும் பல ஜில்லாக்களும், மற்றும் பல உட்பிரிவுகளும் இருக்கின்றன.தேசம் என்பவற்றில் சில கண்டத்தை விட பெரிதாகவும், பல மதங்களாகவும் பல பிறவிகளாகவும், பல மொழி, பல நாகரிகம், பல கலை ஆகவும் இருக்கின்றன. இவை தவிர ஒவ்வொரு கண்டத்திலும், தேசத்திலும், மாகாணத்திலும் பலமாதிரியான பிறவிகளும், பல ஜாதிகளும், பல பாஷைகளும், பல மதங்களும், பல உட்ப்பிரிவுகளும், பல பழக்கவழக்கங்களும் இருக்கின்றன. இவை அவரவர்களுக்கு தெய்வகட்டளை என்றும் மதக் கட்டளை என்றும் தேசியக் கொள்கை என்றும், தங்கள் வாழ்நாளில் எப்பொழுதும் மாற்ற முடியாதது என்றும் இவற்றில் எதையும் காப்பாற்ற உயிர்விட்டாவது முயற்சிக்கவேண்டுமென்றும் கருதிக் கொண்டிருப்பவையாகும்.

இவற்றின் பயனாய் மக்கள் ஒருவருக்கொருவர் வேற்றுமை உணர்ச்சி கொண்டிருப்பதை நன்றாய்ப் பார்க்கிறோம். அன்றியும் உலகத்தில் உள்ள தேசம் முழுவதிலும் உயர்ந்தஜாதி - தாழ்ந்த ஜாதி, ஏழை - பணக்காரன், கீழ்நிலை - மேல்நிலை, கஷ்டப்படுகிறவன் - கஷ்டப்படுத்துகிறவன், முதலிய கொடுமைகள் இருந்தும் வருகின்றன. இவற்றுள் என்ன கொள்கைமீது எப்படிப்பட்ட மக்கள் எவ்வளவு விஸ்தீரணத்தைப் பிரித்தக்கொண்டு தங்களுக்கெனத் தனித்த தேசம், தேசியம் என்று ஒன்றைச் சொல்லிக் கொள்வது என்பது எனக்குப் புரியவில்லை, நமது தேசம் என்ற விஸ்தீரணத்தையும் தன்மையையும் தனிப்படுத்திக் கொண்டு பேசினாலும், அதிலுள்ள தன்மைகள் என்னென்னவோ, அதுதான் மற்ற எந்தக் கண்டம் என்பதிலும் நாடு என்பதிலும் இருந்து வருகிறது. நாம் குறிப்பிடும் தேசத்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகின்றவர்களாகவும் தாழ்மைப் படுத்தப்பட்டவர்களாகவும் இருந்து வருகிறார்களோ அவ்வளவு நிலையில்தான் மற்ற தேசத்தார் என்கிற மக்களும் இருந்து வருகின்றார்கள். நம்முடைய தேசம் என்பதிலுள்ள எந்தவிதமான மக்களின் துயரம் நீக்கப் பாடுபடுகின்றோம் என்கிறோமோ, அவ்விதமான துயரம் கொண்ட மக்கள் அந்நிய தேசம் என்பதிலும் இருந்துதான் வருகிறார்கள். நம்முடைய தேசம் என்பதிலேயே எந்தவிதமான மக்கள் சோம்பேறிகளாகவும் சூழ்ச்சிக்காரர்களாகவும், செல்வவான்களாகவும், அரசாங்க ஆதிக்கக்காரர்களாகவும் குருமார்களாகவும் இருந்து பெரும்பான்மையான பொதுஜனங்களைப் பல சூழ்ச்சிகளால் அடக்கி ஆண்டு அடிமைகளாக்கிப் பட்டினிபோட்டு வதைத்து தாங்கள் பெருஞ்செல்வம் சேர்த்து சுகபோகம் அனுபவித்து வருகின்றார்களோ, அது போலதான் அந்நிய தேசமென்பதிலும் சிலர் இருந்து அந்நாட்டுப் பெரும்பான்மையான மக்களைக் கொடுமைப்படுத்தி வருகின்றார்கள். ஆனால், அப்படிப்பட்டவர்கள் நம் நாட்டில் ஒரு பிரிவார் பிறவியின் பேரால் இருக்கிறார்கள். இந்த நிலைமையில் என்ன கொள்கைகளைக் கொண்டு, எந்த இலட்சியத்தைக் கொண்டு உலகப்பரபில் ஒரு அளவை மாத்திரம் பிரித்துத் தேசாபிமானம் காட்டுவது என்று கேட்கின்றேன்.

துருக்கி தேசத்துக்கும் இந்திய தேசத்துக்கும் சண்டை வந்தால் இந்திய இஸ்லாமியர்களுக்குத் தேசாபிமானம் இந்தியாவுக்கா ? துருக்கிக்கா ? ஹைதராபாத்துக்கும் மைசூருக்கும் யுத்தம் தொடங்கினால், ஹைதராபாத் இந்தியர்கள் தேசாபிமானம் மைசூருக்கா? ஹைதராபாத்துக்கா? ஆகவே, 'தேசம்' 'தேசாபிமானம்' என்கின்ற வார்த்தைகளும் கடவுள், மதம் என்பது போன்ற ஒரு வகுப்பாருடைய சுயநலத்திற்க்கு ஏற்ற ஒரு சூழ்ச்சிவார்த்தை என்ற சொல்ல வேண்டி இருப்பதைத்தவிர வேறு ஒன்றும் சொல்லமுடியவில்லை. முடிவாகக் கூறும் பட்சத்தில் தேசாபிமானம் என்பது ஒவ்வொரு தேச முதலாளியும் ம ற்றத் தேச முதலாளிகளுடன் சண்டைபோட்டுத் தங்கள் தங்கள் முதலைப் பெருக்கிக்கொள்ள ஏழைமக்களை - பாமரர்களைப் பலிகொடுப்பதற்காகக் கற்ப்பித்துக் கொண்ட தந்திர வார்த்தையாகும்.

உதாரணமாக, இங்கிலாந்து தேச முதலாளிகள் அமெரிக்கா தேசமுதலாளிகளுடன் சண்டை போட்டு வெற்றி பெற்றுத் தங்கள் செல்வத்தை மேலும் மேலும் பெருக்கிக்கொள்ள வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டால் அல்லது அமெரிக்க முதலாளிகள் வேறு தந்திரத்தின் மூலம் இங்கிலாந்து தேச முதலாளிகளின் செல்வத்தை கொள்ளை கொள்ள முயற்சிப்பதாயிருந்தால், இங்கிலாந்து தேச முதலாளிகள் இங்கிலாந்து தேச ஏழை மக்களையும் பாமரமக்களையும் பார்த்து, "ஓ இங்கிலாந்து தேசிய வீரர்களே, தேசாபிமானிகளே, தேசத்துக்கு நெருக்கடி வந்துவிட்டது; இங்கிலாந்து மாதா உங்கள் கடமைகளைச் செய்ய அழைக்கிறாள்; ஓடி வாருங்கள்! ஓடி வாருங்கள்!" என்று கூப்பாடு போடுவார்கள்.கூலிகளை அமர்த்தியும் வயிற்றுப்பிழைப்புப் பத்திரிகைக்காரர்களுக்கு எலும்பு போட்டும் பிரச்சாரம் செய்விப்பார்கள். இது போலவே அமெரிக்க முதலாளியும் தன் தேசம் நெருக்கடியில் நிலையில் இருப்பதாகவும் அமெரிக்க மாதா அங்குள்ள பாமரர்களையும், வேலையில்லாமல் வயிற்றுக் கஞ்சிக்கு வகையில்லாமல் பட்டினி கிடக்கும் ஏழை மக்களையும் தங்கள் கடமையைச் செய்ய அழைப்பதாகவும் கூவிக்கொண்டு கூலிகொடுத்துப் பிரச்சாரம் செய்வார்கள். இரண்டு தேச ஏழைகளும் மற்றும் சாப்பாட்டிற்க்கு அறவே வேறு வழியில்லாத மக்களும் கிளர்ச்சியில் சேர்ந்தும் பட்டாளத்தில் சேர்ந்தும் துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு சண்டைக்குப் போய் ஒருவரையொருவர் சுட்டுக் கொன்று கொள்ளுவார்கள். சிறைப் பிடிப்பதன் மூலம் இரு தேசச் சிறைகளையும் நிரப்பி விடுவார்கள். கணக்குப் பார்த்தால், இரு கட்சிகளிலும் பல லட்சக்கணக்கான மக்கள் உயிர் விட்டிருப்பார்கள். பிறகு இருவரும் இராஜியாகப் போயோ யாராவது ஒருவர் ஜெயித்தோ இருப்பார்கள்.

ஜெயம் பெற்றவர்களுக்கு முதலோடு முதல் சேரும் அல்லது தங்கள் முதல் என்றும் குறையாத மாதிரியில் பத்திரமேற்பட்டிருக்கும். ஆனால் சுட்டுக் கொண்டு செத்தவர்களுக்குச் சுடுகாடும், அவர்கள் பெண்ஜாதிகளுக்குச் சிறு பிச்சையும் அல்லாமல் மற்ற ஏழை மக்களுக்கு என்ன பயன் என்பதை யோசிதததுப் பாருங்கள். அமெரிக்கா குடி அரசு நடாத்துவதற்க்கும் அந்நிய ஆட்சியைத் துரத்துவதற்க்கும் அமெரிக்க ஏழைமக்கள், தொழிலாளி மக்கள் எவ்வளவு பாடுபட்டிருப்பார்கள், எவ்வளவு உயிர்ப்பலி கொடுத்திருப்பார்கள் என்று அமெரிக்க விடுதலைச் சரித்திரத்தைப் புரட்டிப்பாருங்கள். இன்று அதன் பயனாக உலகில் அமெரிக்காவிலேயே அதிகமான செல்வவான்களும், வியாபாரிகளும், விவசாயப் பெருக்கும் இருந்து வருகின்றன. ஆனால் ஏழைகள் படும் கஷ்டமும் வேலையில்லாத பட்டினியும் தொழிலாளிகள் அனுபவிக்கும் கொடுமையும் அமெரிக்காவில் இன்றைய தினம் இருந்து வருவது வேறு எந்த நாட்டிற்க்கும் குறைந்ததல்ல.

அது போலவே இந்தியத் தேசியத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பல ஏழைப் பாமர மக்களை தூண்டிவிட்டு அடிபடச் செய்து சிறையை நிரப்பி உரிமையும் பதவியும் அதிகாரமும் பெற்ற முதலாளிகள் பணத்தையும் சோம்பேறி வாழ்க்கைப் பிறவிகள் உத்தியோகங்களையும் பெற்றுத் தங்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பெருக்கிக் கொண்டதைத் தவிர இந்த இந்தியத் தேசியத்தால் ஏழை மக்கள், பாமரமக்கள் அடைந்த - அடையப்போகும் நன்மை என்னவென்பதைப் பாருங்கள்.

தோழர்களே ! அமெரிக்கத் தேசாபிமானத்தின் தன்மையும் அதன் பயனையும் சிந்தித்துப் பாருங்கள். அமெரிக்க அந்நியப் பயனையும் சிந்தித்துப்பாருங்கள். அமெரிக்கா அந்நிய ஆட்சியை ஒழித்தாலும், ஓர் அரசனையே விரட்டிவிட்டுக் "குடிகளின் ஆட்சி" ஏற்படுத்திக் கொண்டதாலும், ஏழைமக்களுக்கு என்ன பயன் ஏற்ப்பட்டது என்பதை மற்றொருதரம் யோசித்துப் பாருங்கள்.

இந்த இலங்கையில் இருந்துகொண்டு இந்தியத் தேசாபிமானம் பேசும் தேசிய வீரர்களைப்பற்றிச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். அவர்கள் ஏறக்குறைய அத்தனை பேரும் 100 -க்கு 90-பேர் இந்தியா முதலிய தேசத்தில் இருந்து வந்து இலங்கை தேசத்தைச் சுரண்டிக்கொண்டு போக இருக்கிறவர்களும் அவர்களுக்கு உதவியாளர்களாய் - அடிமைகளுமாய் இருப்பவர்களுமாவர்.

இலேவாதேவிக்காரர்கள் பெரிதும் மாதம் 100-க்கு 12-வரை வட்டிவாங்கி ஏழைமக்களையும் இலங்கை வாசிகளையும் பாப்பாராக்கிக் கொள்ளை கொண்டுபோக வந்தவர்களும், விவசாயக்காரர் பெரிதும் இலங்கைப் பூமிகளை ஏராளாமாய்க் கைப்பற்றி விவசாயம் செய்து கூலிகள் வயிற்றில் அடித்துப் பொருள் சேர்த்துக் கொள்ளை கொண்டுபோக வந்தவர்களும், வியாபாரிகள் கொள்ளை லாபம் அடித்து இலங்கைச் செல்வத்தைக் கொள்ளை கொண்டுபோக வந்தவர்களும், உத்தியோகஸ்தர்கள் இலங்கை ஆட்சியில் வந்து புகுந்து இலங்கையர்களின் அனுபவத்தில் மண்ணைப் போட்டுப் பணம் சுரண்டிக்கொண்டிருக்கும் படித்த கூட்டத்தாரும் ஆணவம்பிடித்த வன்னெஞ்சப் பார்ப்பானார்களுமாகக் கூடிக்கொண்டு இந்தியத் தேசாபிமானக் கூப்பாடு போடுகின்றார்கள்.

வெள்ளைக்காரனான அந்நியன் 100-க்கு வருஷம் 6-வட்டிக்கு கொடுத்தால், கருப்பனான அந்நியன் 100-க்கு மாதம் 6-வட்டிக்கு கொடுக்கிறான். வெள்ளையன் பணக்காரர்களிடம் வட்டி வாங்கினால், கருப்பன் ஏழைகளிடம்-கூலிகளிடம் வட்டிவாங்கிக் கொடுமைப்படுத்துகிறான்.

இந்தப்படி மக்களைச் சந்தித்துக் கொள்ளை அடிபவர்களே (வெள்ளையரிலும், கருப்பர்களிலும்) எங்கும் கடவுளபிமானம், மதாபிமானம், தேச அபிமானம் பேசுகிறார்கள்.

ஆகவே, இவ்விஷயங்களை அதாவது கடவுள், மதம், தேசம் என்கின்ற விஷயங்களை இனி அறவே மறந்துவிடுங்கள். அவை ஒரு நாளும் க ஷ்டப்படும் மக்களுக்குப் பயனளிக்கா. மற்றபடி அவை உலகில் ஏழை, பணக்காரன் என்று இரண்டு வகுப்புகள் இருக்கவும் ஏழைகளை தொழிலாளிகளைப் பணக்காரரும் சோம்பேறிகளும் வஞ்சித்து நிரந்தரமாய் வாழவும்தான் பயன்படும்.

தோழர்களே! முடிவாக ஒன்று கூறுகிறேன். சரீரத்தினால் நெற்றி வியர்வை சொட்ட கஷ்டப்படும் மக்களைப் பாருங்கள். அவர்களுக்கு கல்வி, மனிதத்தன்மை மானம் இல்லாமல், செத்திருப்பதையும் பாருங்கள். வேலையில்லாமல் திண்டாடும் மக்களையும் அவர்களது பெண்டு பிள்ளைகளின் பட்டினியையும், கொடுமையையும் பாருங்கள். வீடுவாசல் இல்லாமல் மூட்டை முடிச்சுகளைத் தலையில் சுமந்து கொண்டு கஞ்சிக்கு ஊர் ஊராய்த் திரியும் கூலி மக்களைப் பாருங்கள். இவ்வித மக்கள் உலகில் எங்கெங்கு யார் யாரால் கஷ்டப்படுத்தப் படுகிறார்கள் என்பதையும் பாருங்கள் உயர்ந்தவன் - தாழ்ந்தவன், பார்ப்பான் - பறையன், முதலாளி - தொழிலாளி, குரு - சிஸ்யன், மகாத்மா - சாதாரண ஆத்மா, அரசன் - குடிகள், அதிகாரி - பிரஜை என்பவை முதலாகிய பாகுபாடுகளை இடித்துத் தள்ளித் தரைமட்டமாக்குங்கள்.அதன்மீது தேசம், மதம், ஜாதி என்கின்ற பாகுபாடு இல்லாததாகிய மனித சமூகம் சமஉரிமை -சமநிலை என்கிற கட்டடத்தைக் கட்டுங்கள். இதைச் செய்ய நீங்கள் உலகத்திலுள்ள கஷ்டப்படும் எல்லா மக்களுடனும் ஜாதி, மதம், தேசம் என்கிற வித்தியாசம் இல்லாமல் பிரிவினைக்கு ஆளாகாமல் ஒன்று சேருங்கள். அப்போது நீங்கள் கண்டிப்பாய் வெற்றி அடைவீர்கள்.

(1932 ஒக்ரோபர் பயணத்தில் இலங்கையில் தந்தை பெரியார் ஆற்றிய உரை.)

5 comments:

Anonymous said...

//உயர்ந்தவன் - தாழ்ந்தவன், பார்ப்பான் - பறையன், முதலாளி - தொழிலாளி, குரு - சிஸ்யன், மகாத்மா - சாதாரண ஆத்மா, அரசன் - குடிகள், அதிகாரி - பிரஜை என்பவை முதலாகிய பாகுபாடுகளை இடித்துத் தள்ளித் தரைமட்டமாக்குங்கள்.அதன்மீது தேசம், மதம், ஜாதி என்கின்ற பாகுபாடு இல்லாததாகிய மனித சமூகம் சமஉரிமை -சமநிலை என்கிற கட்டடத்தைக் கட்டுங்கள். இதைச் செய்ய நீங்கள் உலகத்திலுள்ள கஷ்டப்படும் எல்லா மக்களுடனும் ஜாதி, மதம், தேசம் என்கிற வித்தியாசம் இல்லாமல் பிரிவினைக்கு ஆளாகாமல் ஒன்று சேருங்கள். அப்போது நீங்கள் கண்டிப்பாய் வெற்றி அடைவீர்கள்//

Anonymous said...

hi hi hi hi......

what about Periyar's Tamilisme ?
The old man who was always speeking and writing in Tamil and was always eating "rice and curry".
India or Srilanka is not the world. Enlarge your minds. Look at the world as a battle field of nations. Now the major question is that of survival as a nation.
Out of a frame of nation, you are nothing.

Periyar would have changed the idea, if alive in these days.

stop to be stupids.

Anonymous said...

'Monsieur' Theevan,
You are damaged by Periar.
It's good. go ahed

Anonymous said...

what about Periyar's Tamilisme ?
what you mean by islandman?

Anonymous said...

islandman?

Islandman meanby Theevaan.

Theevaan. THEEVAAN.